Loading

அத்தியாயம் 1

அந்த இரவு நேர மழை நாளில், பெரும் சத்தத்துடன் அந்த பேருந்து உருள, அதில் பயந்து போய் எழுந்தமர்ந்தாள் அவள். சட்டென்று தன் கட்டிலின் அருகிலிருந்த சொடுக்கியின் மூலம் அந்த அறையின் விளக்கை உயிர்ப்பித்தவளின் கண்கள் வெளிச்சம் வந்தவுடன் முதலில் கண்டது எதிரிலிருந்த கண்ணாடியைத் தான்.

 

பயந்ததற்கான அடையாளமாக நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்பியிருந்ததை, அக்கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பத்தில் கண்டாள். இருப்பினும் அதைத் துடைப்பதற்கு அவசரம் காட்டவில்லை அவள்.

 

மெதுவாக, மிக மெதுவாக தன் முகத்தை அளவிட்டவளின் பார்வை, முடி மறைத்தும் மறைக்காமலும் இருந்த அந்த காயத்தில் படிந்தது. அது அவள் கனவில் கண்ட விபத்தை மீண்டும் நினைவு படுத்த, கண்களை மூடி தன்னைத் தானே சமன் செய்ய முயன்றாள்.

 

இது கடந்த ஒரு வருடமாக அவளிற்கு நடந்து கொண்டிருப்பது தான். முதலில், இதை நினைத்து நினைத்து தூக்கமே தூரப்போகும் அளவிற்கு வருந்தியவள், காலப்போக்கில் ‘இதுவும் கடந்து போகும்’ என்று வாழத் துவங்கியிருக்கிறாள்.

 

சில நொடிகளில் கண்களைத் திறந்து கடிகாரத்தைப் பார்க்க, அதுவோ மணி ஐந்தரை என்று காட்டியது. வேகமாக எழுந்து தன் காலைக்கடன்களை முடித்தவள், ஜெர்கினுடன் வெளியே சென்றாள்.

 

அவள் இருப்பது பெரிய அடுக்குமாடி குடியிருப்பில். தினமும் காலை நேரத்தில், அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றியுள்ள இடத்தில் மற்றவர்களைப் போல அவளும் ஓடுவாள். அதுவே அவளின் அரை மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும்.

இன்றும், அதுபோல தன் ஓட்டத்திற்காக செல்ல, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் படிகளில் நின்று பேசிக் கொண்டிருந்த நடுத்தர வயதுடைய பெண்களில் ஒருவர் அவளை அழைத்தார்.

 

“திவ்யா…” என்று அவர் அழைக்க, அவர்களை எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்று பார்க்காததைப் போல நடக்க ஆரம்பித்தவளிற்கு, அவர் அழைத்தபின்பும், அப்படி செல்ல மனம் வரவில்லை.

 

மெல்ல அவர்களை நோக்கி நடை போட்டாள், உதட்டில் ஒட்ட வைத்த சிரிப்புடன்!

 

“என்ன மா ஜாக்கிங்கா?” என்று அவர் வினவினாலும், மற்றவர்களின் பார்வை அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்ததை அவளும் அறிந்து தான் இருந்தாள்.

 

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கேட்ட கேள்விக்கு மட்டும் விடை கூறியவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

 

“இந்த பொண்ணுக்கு ரொம்ப திமிரு போலயே. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு ஓடிடுச்சு.  கூட ரெண்டு வார்த்தை பேசுனா, குறைஞ்சா போயிடும்!” என்று ஒருவர் பேச, திவ்யாவை அழைத்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளரின் மனைவி, “அந்த பொண்ணு ரொம்ப அமைதி. அதான் யாருக்கிட்டயும் பேச மாட்டிங்குது. உங்ககிட்ட ரெண்டு வார்த்தை கூட பேசுனா, அது மட்டும் தான் பேசுவீங்களா. அதை வச்சு அந்த பொண்ணோட குடும்பம், பிரெண்ட்ஸ்னு கேட்டு வாங்கிட மாட்டீங்க? அதுக்கு பயந்துட்டு தான் அந்த பொண்ணு வேகமா போயிருக்கும். என்னென்னே தெரியாம, இப்படி பேசிட்டு இருக்குறதை விட்டுட்டு ஆக வேண்டிய வேலையைப் பாருங்க.” என்று அவருக்கு பதிலளித்தார்.

 

இவையெல்லாம் படிகளில் மெதுவாக நடந்து கொண்டிருந்த திவ்யாவிற்கும் கேட்டது. மற்றவர்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே தன் ஓட்டத்தை ஆரம்பித்தாள்.

 

அவள் சிந்தனையில் மூழ்கியிருந்ததால், எதிரில் தன் முகத்தை ஜாக்கெட் ஹூடினால் மறைத்தவாறு வந்தவனைக் கவனிக்காமல் அவன் மீது மோதி விட்டாள்.

 

அதே சமயம், அவளின் அலைபேசியும் ஒலிக்க, அவனின் ஹுடைத் தாண்டி முகத்தைப் பார்க்காமலேயே, அவசரமாக ஒரு ‘சாரி’யை பகிர்ந்து கொண்டு, அங்கிருந்து விலகினாள்.

 

பெண்ணவளின் செயலை சற்று திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன், தன்னை மறந்து அங்கேயே நின்று விட்டான். இதுவரையில், அவனைப் பார்த்ததும் இதுபோல் விலகிச் செல்லாதவர்களையே கடந்து வந்திருந்ததால் உண்டான அதிர்ச்சியாக இருக்குமோ!

 

இரண்டொரு நொடிகளில் சுயத்தை அடைந்தவன், அவனின் வழக்கமான மேனரிசமான தலையைக் கோத கைகளை எடுத்துச் செல்லும்போது தான், அவன் தலையில் இருக்கும் ஹூட் நினைவுக்கு வந்தது.

 

“ஷிட், இதை எப்படி மறந்தேன்? யாராவது பார்க்குறதுக்குள்ள வீட்டுக்கு போகணும்.” என்று முணுமுணுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். செல்லும் முன், அவள் சென்ற வழியில், அவனின் கண்கள் அவன் அனுமதியின்றி வலம் வந்ததை அவன் உணரவில்லையோ!

 

*****

 

அலைபேசியில் ஒளிர்ந்த பெயரைக் கண்டதும், முன்னிருந்த சிந்தனை மங்கி, சற்று மலர்ச்சியுடன் அதை உயிர்ப்பித்தாள் திவ்யா.

 

அழைப்பை ஏற்றவளை ‘ஹலோ’ கூட சொல்ல விடாமல், மற்ற புறத்திலிருந்து சரமாரியாக கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன.

 

“ஹலோ, திவி, எப்படி இருக்க? ஏன் கால் அட்டெண்ட் பண்ண இவ்ளோ நேரமாச்சு? எல்லாமே ஓகே தான? நானும், அம்மாக்கு முடியலைன்னு ஊருக்கு வந்துட்டேன். நான் இல்லாம கஷ்டமா இருக்கா என்ன? நான் இவ்ளோ கேள்வி கேட்குறேன், நீ அமைதியாவே இருக்க?” என்று இடைவெளி என்று ஒன்றை இடையில் விடாமலேயே பேசிக் கொண்டிருந்தவளை, இடைவெட்ட முடியாமல் தடுமாறிய திவ்யாவிற்கு, அவளின் கடைசி கேள்வி சிறிது எரிச்சலை ஏற்படுத்திருந்தது.

 

அதே எரிச்சலுடன், “நீ என்னைப் பேச விட்டா தான, உன் கேள்விகளுக்கான பதிலை சொல்ல முடியும்!” என்று ஆரம்பித்தவள், தான் இடைவெளி விட்டால், மீண்டும் பேச ஆரம்பித்து விடுவாளோ என்று எண்ணியவள் தானே தொடர்ந்தாள்.

 

“நான் நல்லா இருக்கேன் ஷர்மி. இங்க எல்லாமே ஓகே தான். நீ இல்லாம, கஷ்டமா இல்ல. சோ என்னைப் பத்தி கவலைப்படாம, அம்மாவை பார்த்துக்கோ.” என்று அவளின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலைக் கூறினாள் திவ்யா.

 

“ம்ம்ம்…” என்று மறுமுனையிலிருந்து பதில் வர, “ஹே ஷர்மி, கோபமா இருக்கியா என்ன?” என்று திவ்யா கேட்டதற்கும் பதிலில்லை.

 

“சாரி ஷர்மி. இங்க இருக்க ஆன்ட்டிஸ் என் கேரக்டரை பத்தி பேசுனதுல டிஸ்டர்ப்பாகி கோபம் வந்துடுச்சு. அதான் உன்மேல காட்டிட்டேன்னு நினைக்குறேன். சாரி அகேயின்.” என்று இறுதியில் திவ்யா தான் இறங்கி வர வேண்டியதாயிற்று.

 

ஒருவழியாக சமாதானமான ஷர்மி, “அவரு ஊருக்கு வந்தாச்சாமே?” என்று வினவ, அந்த ‘அவர்’ யாரென்று ஷர்மியின் குரல் மாற்றத்திலேயே உணர்ந்த திவ்யாவிற்குள் உணர்ச்சி பிரவாகங்கள் ஊற்றெடுக்க, சட்டென்று அமைதியானாள்.

 

இது இப்போதல்ல. எப்போது அவனின் பெயரைக் கேட்டாலும் அவளுள் நிகழும் மாற்றம் தான். ஒருபுறம் மனதிற்குள் அடக்கி வைத்திருக்கும் கோபம் கனலாக எரிக்கக் காத்திருக்க, மறுபுறம் அதற்கு எதிராக, அவன் பெயரைக் கேட்டாலே உள்ளுக்குள் உருகி வழியும் உணர்வை அவள் உணர்ந்திருக்கிறாள். இப்போதும் அதைத் தான் உணர்கிறாள்!

 

இப்போது, “ம்ம்ம்…” என்று முடித்துக் கொள்வது திவ்யாவின் முறையாகிற்று.

 

ஆனால், திவ்யாவின் இந்த உணர்வு போராட்டங்களை உணர்ந்தாளா இல்லையா என்று பிரித்தறியா வண்ணம், ஷர்மி எப்போதும் பகிரும் அறிவுரைகளை மீண்டும் பகிர ஆரம்பித்தாள்.

 

“கேர்ஃபுல்லா இரு திவி. நீ எதுக்குள்ள இறங்கியிருக்கன்னு உனக்கு புரியுதா இல்லையான்னு எனக்கு தெரியல. ஆனா, நீ இப்போ செஞ்சுட்டு இருக்க காரியம் அவ்ளோ ஈஸி இல்ல. அவருக்கு மட்டும் தெரிஞ்சதுன்னா, அப்பறம் நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு. ப்ச் நானாவது உன் பக்கத்துல இருந்துருக்கணும்.” என்று மீண்டும் புலம்பத் துவங்கினாள்.

 

“நான் கேர்ஃபுல்லா தான் இருப்பேன் ஷர்மி. என்னை நினைச்சு கவலைப்படாத!” என்று அவளை சமாதானப்படுத்தினாள் திவ்யா.

 

பல சமாதானங்களுக்கு பின்னர் தான் ஷர்மி அந்த அழைப்பைத் துண்டித்தாள். அலைபேசியை தன் காதிலிருந்து எடுத்த திவ்யா, பெருமூச்சு ஒன்றை விட்டு மணியைப் பார்க்க, அது ஆறரை என்று காட்டியது.

 

“உஃப், இன்னைக்கு ஜாக்கிங் அவ்ளோ தான்.” என்று முணுமுணுத்தவாறே தன் வீட்டை நோக்கி திரும்பினாள்.

 

*****

 

குளித்து அழகான பேபி பிங்க் நிறத்திலான சேலையில் கிளம்பியவள், அவசர அவசரமாக தன் காலை உணவை, வழக்கம் போல தொலைகாட்சியில் பார்வை பதித்தபடி உண்டு கொண்டிருந்தாள். அப்போது தான் அந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.

 

ஆஸ்திரேலியாவில் நடந்த ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்று கைப்பற்றிய இந்திய அணி, தொடர்ந்து நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தி 2-1 என்று கைப்பற்றியது. மேலும், ட்வென்ட்டி ட்வென்ட்டி போட்டியில் 1-1 என்று சமன்படுத்தி ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றிகரமான தொடராக இதை பதிவு செய்துவிட்டு, இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்திருக்கிறது துஷ்யந்த் தலைமையிலான இந்திய அணி.

 

விமான நிலையத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை மக்கள் உற்சாகமாக வரவேற்பதை படம்பிடித்து காட்டிக் கொண்டிருந்தனர் அந்த செய்தியில்.

 

அதைக் கண்டவளின் முகத்துடன் சேர்ந்து மனமும் இறுகிப் போக, அவளின் மனதை மேலும் கஷ்டப்படுத்தவென்றே தொலைக்காட்சியில் பிரசன்னமானான் துஷ்யந்த்.

 

தன் வெறித்தனமான பேட்டிங்கினாலும், மின்னல் வேக ஃபீல்டிங்கினாலும் கிரிக்கெட் உலகில் அதிவிரைவாக பிரபலமானவன் தான் இந்த துஷ்யந்த். வேகத்துடன் அவனின் விவேகமும் சேர, அவனைத் தேடி வந்தது தலைமைப் பதவி. இந்திய அணியை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர்களில் மிக முக்கிய பங்கு துஷ்யந்த்துடையது தான்.

 

அவனின் அபரிமிதமான வளர்ச்சி சிலரின் கண்களை உறுத்த, அதுவே அவ்வபோது அவனைப் பற்றிய கிசுகிசுக்கள் வெளிவருவதற்கு காரணமாகின. தென்னிந்தியா முதல் வடஇந்தியா வரை அநேக நடிகைகளுடன் அவனை சம்பந்தப்படுத்தி வரும் செய்திகள் தான் தொலைக்காட்சி நிறுவனங்களின் டி.ஆர்.பியை ஏற்றிவிட்டுக் கொண்டிருக்கிறது.

 

ஆனால், துஷ்யந்த்தோ இவை போன்ற செய்திகளுக்கு சிறு துரும்பைக் கூட அசைக்க மாட்டான். இதோ சில நாட்களுக்கு முன்னர், இதே தொலைக்காட்சி  நிறுவனம் அவனைப் பேட்டி எடுக்கும்போது, அவனுடன் சமீபத்திய விளம்பரத்தில் நடித்த வடஇந்திய நடிகையுடன் அவனை இணைத்து கேள்வி கேட்டபோது கூட, “நோ பெர்சனல் க்வெஸ்ட்டின்ஸ்!” என்றானே தவிர, அதை மறுத்தோ ஆதரித்தோ பேசவில்லை.

 

இவற்றை எல்லாம் மிகச் சாதாரணமென்று கடந்து விடுகிறானா, இல்லை அவனின்  குணமே அது தானா என்று வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக இருப்பவன் தான் துஷ்யந்த்.

 

தொலைக்காட்சியில் இன்னமும் அவனின் பேட்டி ஒளிபரப்பாகி கொண்டிருக்க, காலையிலேயே அதைப் பார்த்து பதற வேண்டாம் என்று நினைத்தவளாக, தொலைக்காட்சியை அணைத்து விட்டு வேலைக்கு கிளம்பினாள் திவ்யா.

 

*****

 

காலை ஓட்டத்தை முடித்துவிட்டு வந்தவன் தன் தலையின் மேலிருந்த ஹுடினை எடுத்துவிட்டு அந்த நீள்சாய்விருக்கையில் தளர்வாக அமர்ந்தான். இரண்டொரு நொடிகள் தான் கண்களை மூடியிருப்பான்… அது பொறுக்காத அவனின் அலைபேசி ஒலியெழுப்பி அதன் இருப்பைக் காட்டியது.

 

ஒரு பெருமூச்சுடன் அலைபேசியை பார்த்தவனின் இதழ்கள் சோர்வையும் மீறி விரிந்தன.

 

சட்டென்று உண்டான உற்சாகத்துடன் அலைபேசியை உயிர்ப்பித்தவன், அதை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு மீண்டும் சாய்நிலைக்கு சென்று விட்டான், இம்முறை புன்னகையுடன்.

 

“டேய், நீயெல்லாம் ஒரு பிரெண்ட்டா? நீ ஊருக்கு வந்தது கூட என்கிட்ட சொல்லல. காலைல எவனோ போன் பண்ணி என்கிட்ட கேக்குறான். இதுல, உன் வேலையெல்லாம் என் தலைல கட்டிட்டு நீ ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்க.” என்று மறுபுறத்திலிருந்து வந்த குரல் மிகவும் பாசமாக வினவ, அதற்கு மறுமொழி எதுவும் அளிக்காமல் கண்களை மூடியபடியே அமர்ந்திருந்தான், அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகித்தவனாக!

 

“டேய் மச்சான், லைன்ல இருக்கியா? ஹலோ…” என்று மேலும் பல ‘ஹலோ’க்களை சிதறவிட்டு, “நெட்ஒர்க் ப்ராப்ளமா இருக்குமோ!” என்று முணுமுணுத்தபடியே அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

இது தான் நடக்கும் என்று அறிந்ததனாலோ, அலைபேசியை எடுத்து அதனிடத்தில் வைத்துவிட்டு மீண்டும் சாய்ந்து கொண்டான்.

 

அடுத்த பத்து நிமிடங்களில் அந்த வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்க, அப்போதும் அவன் கண்களைத் திறக்க வில்லை.

 

“நினைச்சேன், இப்படி தான் படுத்திருப்பன்னு. மனுஷனாடா நீயெல்லாம்? ஏன் டா காலங்கார்த்தால இப்படி என்னை புலம்ப விடுற?” என்று புலம்பியவாறு  அவனருகே அமர்ந்தான், அவனின் ஆருயிர் நண்பன், அபராஜித்.

 

அதற்கும் எதுவும் பேசாமல், மேஜையில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீட்ட, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!” என்று சலித்துக் கொண்டான் அபராஜித்.

 

“அபி, வீட்டுக்கு வந்ததும் தண்ணி கொடுக்குறது தான நம்ம பண்பாடு.” என்று கேலி தொனிக்க அவன் வினவ, “அடேய் பேசுனா ரெஸ்பாண்ட் பண்றதும் கூட நம்ம பண்பாடு தான்.” என்றவன், “முதல்ல இப்படி ‘அபி’ன்னு ஏலம் போடுறதை நிறுத்து டா. எனக்கே சில சமயம் பொண்ணோன்னு ஃபீலாகிடுது!” என்றான் அபராஜித்.

 

மேலும், “போனை எடுத்தாலே ‘அபி’ ‘அபி’ன்னு தான் கேக்குது!” என்று முணுமுணுத்தவனைக் கண்டவன், ‘ஆஹான்’ என்பது போல பார்க்க, அதில் சுதாரித்த அபராஜித், மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, பேச்சை வேறு புறம் திருப்பினான்.

 

அதன்பின்னர், நண்பர்கள் இருவரும் தங்களின் பணியைக் குறித்த ஆலோசித்து சில பல முடிவுகளை எடுத்தனர்.

 

“அப்பறம் உங்க மாமா உனக்கு செக்ரெட்டரியா ஒரு பொண்ணை செலக்ட் பண்ணியிருக்காரு டா. சும்மா சொல்லக்கூடாது, செம பிரில்லியண்ட் அந்த பொண்ணு.  எந்த தகவல் கேட்டாலும் உடனே சொல்லிடுறான்னா பார்த்துக்கோ. ஆஃபிஸ் போனதும் நீயே தெரிஞ்சுப்ப.” என்று அபராஜித் கூற, அவனோ “ஓஹ்..” என்றானே தவிர அபராஜித் கூறியதைக் கவனித்தானா என்று தெரியவில்லை.

 

அவன் தான் பெண் என்று கேட்டவுடன் காலையில் தன்னை இடித்த பெண்ணைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டானே!

 

“நீ இன்னைக்கே ஆஃபிஸ் வருவன்னு உங்க மாமா சொன்னாரு. ஏன் டா  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வர வேண்டியது தான?” என்று அபராஜித் வினவ, “இல்ல டா, ரொம்ப நாளாச்சு ஆஃபிஸ் வந்து. மாமாவும் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிட்டு இருக்காரு. சோ அவரையும் ஃப்ரீயா விடணும்.” என்றான்.

 

“சரி, நான் **** ப்ரான்ச் போய் பார்த்துட்டு ஹெட் ஆஃபிஸ் வரேன்.” என்று கிளம்பினான் அபராஜித்.

 

*****

 

அந்த அலுவலகமே பரபரப்பாக இருந்தது. எப்போதும் காலையில் சிறிது சுறுசுறுப்பாக இருந்தாலும், புதிதான இந்த பரபரப்பிற்கு காரணம், நீண்ட நாட்கள் கழித்து அந்த நிறுவனத்தின் முதலாளி அங்கு வருவதே ஆகும்.

 

அனைவரும் அவரவர்களின் இடத்தில் அமர்ந்து வேலையில் ஒரு பார்வை, வாயிலில் ஒரு பார்வை என்று காத்திருக்க, அவர்களின் காத்திருப்புக்கு பலனாக உள்ளே நுழைந்தான் அவன்.

 

ஆண்களை பெரும்பாலானவர்கள் வர்ணிக்கும் அதே அளவில், கண்களில் ரேபான் கிளாஸுடனும் கைகளில் அவனின் அலைபேசியை சுற்றியபடியும் வேகநடையில் வந்து கொண்டிருந்தவனை பார்த்தவர்கள் எழுந்து நிற்க, ஒரு தலையசைப்பில் அவர்களைக் கடந்து அறைக்குள் சென்றான்.

 

அங்கிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. அனைவரும் ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது உள்ளே நுழைந்தார் செந்தில்நாதன், அவனின் மாமா.

 

அவரைப் பார்த்ததும் தான் நிகழ்விற்கு வந்தவர்கள், வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

 

அவர்களின் திகைத்த தோற்றத்திலேயே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்த செந்தில்நாதன், இதழோர புன்னகையுடன் தன் மருமகனின் அறைக்குள் நுழைந்தார்.

 

அங்கு அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, அவனின் தோற்றத்தை கண்களால் வருடிக் கொண்டிருந்தார் அவனின் மாமா. தன் தங்கை இறப்பிற்கு பின்னர், அவனை வளர்த்தவர் அவராகிற்றே!

 

அழைப்பைத் துண்டித்துவிட்டு, “என்ன மாமா, இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்று அவன் வினவ, “என் மருமகனை நான் பார்க்க உரிமையில்லையா?” என்று கிண்டலாகவே வினவினார் செந்தில்நாதன்.

 

அவர் இலகுவாக பேசி சிரிப்பது இவனிடம் மட்டுமே!

 

“அத்தை, மிஷ்டி எல்லாரும் நல்லா இருக்காங்களா, மாமா?” என்று அவன் வினவ, “அவங்களுக்கு என்ன, நல்லா ஊர் சுத்திட்டு இருப்பாங்க!” என்று சலித்துக் கொண்டார் அவர்.

 

பின்பு, சிறிது நேரம் வேலையைப் பற்றி பேசினர். அப்போது, “உனக்கு செக்ரெட்டரியை நான் செலக்ட் பண்ணியிருக்கேன்னே அது உனக்கு பிரச்சனை இல்லையே?” என்று செந்தில்நாதன் வினவ, “ச்சே, அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல மாமா. ஆமா, காலைல அபியும் என்னோட புது செக்ரெட்டரி பத்தி அவ்ளோ சொன்னான். இப்போ நீங்களும் சொல்றீங்களே தவிர, யாருன்னு கண்ணுல காட்ட மாட்டிங்குறீங்களே?” என்று கேலியாகவே வினவினான் அவன்.

 

“இதோ கூப்பிடுறேன்.” என்றவர், யாருக்கோ அழைத்து அறைக்குள் வருமாறு கூறினார்.

 

இராண்டாம் நொடியில் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளைக் கண்டு சற்று திகைத்து தான் போனான் அந்த நிறுவனத்தின் முதலாளியான துஷ்யந்த்.

 

“இவங்க தான் உன்னோட புது செக்ரெட்டரி, திவ்யான்ஷி.” என்று துஷ்யந்த்திடம் அவளை அறிமுகப்படுத்தி வைத்தார் செந்தில்நாதன்.

காதலி வருவாள்…

 

ஹாய் பிரெண்ட்ஸ்…😍😍😍 நீங்க கொடுத்த சப்போர்ட் தான் அடுத்த நாளே இந்த எபி வர காரணம்… (ஏற்கனவே கைவசம் இருந்ததும் ஒரு காரணம்…😝😝😝) ஆனா, இதே மாதிரி டெயிலி எதிர்பார்த்தா அதுக்கு நான் பொறுப்பில்ல…😊😊😊 படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க…😍😍😍

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Archana

      பல ரூபங்களை கைவசமா வெச்சிருக்க துஷ்யந்த்😝😝 மார்க் விழுந்த ஹீரோயின் அடுத்து என்னன்னு யோசிக்க வெக்குது😁😁😁