காலத்தின் மாற்றத்தில்
கற்றது கை அளவு!
கல்லாதது உலகளவு!
தாய்பாலின் சுவையின் மழையில்
பசும்பாலின் சுவையின் பிழையில்
விசும்பும் மழலை தேடும் சுவடு!
அன்னம் இட்ட அன்னையின் சுவையில்
கன்னம் இட்ட பிள்ளையின் நினைவில்
குசும்பும் குறும்பும் ஓடும் சுவடு!
செப்பில் செய்யும் சமையல் கூட
உப்பும் உரைப்பும் சுவையில் நாட
பசப்பும் பவுசில் பாடும் சுவடு!
மண்பாண்டம் வைத்து சமைத்த நினைவில்
திண்பண்டம் வைத்து சுவைத்த கனவில்
பசியும் ருசியும் மறந்த சுவடு!
ஒற்றையாய் நின்று ஒய்யாரமாய் வென்று
ஓங்காரமாய் சமைத்த காலம் அன்று
சுற்றம் உற்றம் ரசித்த சுவடு!
கட்டாயமாய் நின்று கால்கடுக்க தீயாய் வெந்து
நிர்சிந்தையாய் சமைத்த கோலம் நொந்து
அரக்கப் பறக்க ஓடிய சுவடு!
ஆசையாய் சேயாய் சுவைத்த காலம் ஒன்று – அது
பருவ காலம்!
ஆசையாய் தாயாய் சமைத்த காலம் ஒன்று – அது
வசந்த காலம்!
பேராசையால் தீயாய் சுவைத்த காலம் அன்று – அது
இளமைக் காலத்தின் சுவடுகள்!
நிராசையால் நோயாய் வதைத்த காலம் இன்று – இது
முதுமைக் காலத்தின் சுவடுகள்!
மீண்டும் வாரா சுவைத்த சுவடுகளே!
எந்தக் காலம் ஆனாலும்
எந்தச் கோலம் போனாலும்
மாறாத நாவின் சுவை அரும்பே…
உன் சுவடுகள் எல்லாம் அடிக்கரும்பே!
அன்புடன்,
செல்வி சிவானந்தம் @ மித்ர வருணா
காலங்களின் வசந்தத்தை சமையல் சுவையோடு ஒப்பிட்டு அழகான வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை எழுதி இருப்பது பிராமாதம்…வாழ்த்துக்கள் மா..
இளமை முதுமை என பெண்ணின் அனைத்து வசந்தகாலத்தையும் சமையலில் கொண்டு வந்த சிறப்பான படைப்பு சிஸ்