
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 15
அழுவதை என்று கண்டான் அவன். அவள் அழுதே பார்த்ததில்லையே! பிறந்ததிலிருந்து அவளை அழவிடாமல் பார்த்துக் கொண்டவனாச்சே! அவன் கிடைக்க மாட்டானெனத் தினமும் அவள் அழுது கரைந்தது அவனுக்குத் தெரியாதல்லவா! இன்று அவள் அழுவதைக் காண மனதில் சக்தி இல்லாமல் கைகளை நீட்டி அவளை இழுத்துக் கட்டிக்கொண்டான்.
“அழாத. என்னால நீ அழறத பார்க்க முடியல. இனி நீ அழவே கூடாது” என அவள் முகத்தை நிமிர்த்திக் கண்ணீரைத் துடைத்தான். கனவில் நடந்தது போலத் தான் நடந்தது நேரிலும். அவள் கன்னதிலிருந்து கைகளை எடுக்க மனமில்லை அவனுக்கு.
அவன் மனமோ அவளை மொத்தமாக எடுத்துக்கொள் எனக் கூப்பாடுப்போட, அனைவரின் மேலும் இருந்த கோபம் அவனை அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற அனுமதிக்கவில்லை. ஆனாலும் கைகளால் அவளது கன்னத்தைத் தடவிய படியே இருக்க, அவளோ கண்களில் ஏக்கத்தோடு அவனையே காதலாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்தப் பார்வை, இரவு, தனிமை, புதுமஞ்சல் தாலியென அவன் உணர்வுகளைத் தூண்ட ஆயிரம் காரணங்கள் இருந்த போதிலும், அத்தனையையும் அவன் கோபம் வென்றது. நொடி நேரத்தில் அவளிடமிருந்து விலகி நின்றான்.
“நான் உன்னை எனக்கே எனக்கா எடுத்துக்கும்போது என் மனசுல கோபமோ, வன்மமோ இருக்க கூடாது, காதல் மட்டும் தான் இருக்கனும். ஆனா இப்போ என் மனசுல உன் மேல இருந்த அந்தப் பழைய காதல் இருக்கானு கேட்டா தெரியலன்னு தான் சொல்வேன். ஏன்னா காதலவிட கோபம் தான் அதிகமா இருக்கு.
இப்போ நான் உன்னை எடுத்துக்கிட்டா அது காதலா இருக்காது, வெறும் காமம் மட்டும் தான் இருக்கும். கண்டிப்பா அது உன்னைக் காயப்படுத்தும். எனக்குக் காமமா உன்னை எடுக்க வேண்டாம்னு தோனுது” என அவளை விட்டு விலக,
“சித்தத்து” என அவன் கையைப் பிடித்து இழுத்து அவனை மீண்டும் கட்டி அணைத்தாள்.
“வேணாம் ரொம்ப காயப்படுவ. விடு” என அவளை உதறி தள்ளிவிட்டு, தலையணையுடன் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அறையைவிட்டு வெளியேறினான்.
அவன் உதறிச் சென்றதில் தடுமாறி விழுந்தவள் கட்டில் முனையில் பலமாக மோத, அது அவள் தலையில் காயத்தை உண்டுபண்ணியது. தலையைப் பிடித்தபடியே எழுந்து பார்க்க அவ்விடம் நன்றாகச் சிவந்துவிட்டது. கொஞ்ச நேரத்தில் பணியாரம் போல வீக்கீயும் விட்டது.
இங்குத் தைலம் கூட எங்கு இருக்கின்றது தெரியாமல், அருகிலுள்ள அலமாரியில் உள்ள தேங்காய் எண்ணையை பூசிக்கொண்டு, தலைவலியுடன் கூடவே அவன் கொடுத்த மனவலியையும் சுமந்து கொண்டு உறங்கினாள்.
காலையில் கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்த சித்தார்த்தை அவன் அம்மா அடுப்படியில் எதோ உருட்டும் சத்தம் தான் எழுப்பிவிட்டது. இளங்கோவோ அங்கிருந்த ஒரு நார்காழியில் அமர்ந்து அவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மேலும் கோபம் இருந்ததால், எதுவும் பேசாமல் எழுந்து தன் அறைக்குச் செல்ல, மது குளித்து விட்டு டவலைச் சுத்திக்கொண்டு வெளியே வந்தாள். அவளை அந்தக் கோலத்தில் எதிர்பாராதவன் திரும்பி நின்று கொண்டான். அதில் அவளின் நெற்றி காயத்தையும் அவன் பார்க்கவில்லை.
“அறிவு இருக்கா? இப்படியா வந்து நிப்ப? டோர்லாக் பண்ண தெரியாது?”
“ஹான். லாக் பண்ணி எனக்குப் பழக்கம் இல்ல. ஏன்னா என் ரூம்ல லாக் இருக்காது. அதுக்கு காரணம் யார் தெரியுமா?” என்றாள்.
முன்னாள் அவள் கல்லூரியில் சேர்ந்த புதிதில் ஒரு நாள் கதவை மூடிக்கொண்டு தூங்கும்போது, சர்க்கரை அளவு சீராக இல்லாமல் மயக்கம் வந்து அறைக்குள்ளேயே மயங்கிவிட, கதவின் தாளை உடைத்து காப்பாற்றினான் சித்து. அன்று முதல் இன்று வரை அவளறைக்கு தாள் இல்லை, தானாகக் கதவை மூடும் கருவி(hydraulic door closer) மட்டுமே தாழ்ப்பாள் வசதி இல்லை.
“அதோட என் வீட்டுல யார் என் ரூம்க்கு வந்தாலும் கதவ தட்டிட்டு தான் வருவாங்க. ஒருத்தர் மட்டும் தான் விதிவிலக்கு. அவர் யாருனு கதவ தட்டாம வரவருக்கு தெரியும்” என நக்கலாகக் கூறினாள்.
“இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. நைட் வரும்போது ஒரு கட்டப்பை கொண்டு வந்தேன்ல அதுல உனக்கு டிரஸ் இருக்கு. அதுல ஒன்னை எடுத்துப் போட்டுட்டு வெளிய வா” என அவளைத் திரும்பிப் பார்க்காமலே கூறினான்.
“ம்ம். சரி” என்றவள், அவளைப் பார்க்காமலே திரும்பி வெளியேறப் போனவனைப் பார்த்து “நான் டவல் கட்டி இருக்கும் போதே பார்க்காம போற புருஷன் தான் நான் அதுகூட இல்லாம இருந்தபோது பார்த்தார்” என நக்கலாகக் கூறி அவனைச் சீண்டினாள் பெண்.
“கொன்றுவேன்டி உன்னை..” என அவளை நோக்கித் திரும்பியவன் அவள் நெற்றிக் காயத்தைப் பார்த்துவிட்டான்.
“என்னடி காயம்?” என அவளருகில் வந்து நெற்றியை தொட்டு பார்க்க, வலியில் “ஸ்ஸ்ஸ்” என்றாள்.
“நேத்து நீ தான தள்ளிவிட்டுட்டு போன. இப்போ வந்து என்ன விசாரனை வேண்டியிருக்கு” எனச் சிணுங்க,
“நான் எப்போ உன்னைத் தள்ளிவிட்டேன்? பொய் சொல்லாத”
“கடைசியா போகும்போது உதறிவிட்டு போனீயே அப்போ”
“அப்பவே சொல்றதுக்கு என்ன? வாயில கொழுக்கட்டையா இருக்கு..” எனக்கூறியவன் அலமாரியில் உள்ள மருந்தை எடுத்துப் பூசினான்.
அவளோ ‘அவ்ளோதான் சித்தத்து உன் கோபம். ஒரு நாள் தாண்டாது. எனக்கு ஒன்னுனா உன்னால பார்க்கமுடியாதுனு எனக்குத் தெரியாதா. சோ சுவீட்’ என மனதில் கொஞ்சிக்கொண்டு மோகபார்வை பார்க்க, அவள் பார்வை வித்தியாசத்தைக் கண்டு கொண்டவன், அவளை முழுதாகப் பார்த்துவிட்டு,
“மயக்கப் பார்க்குறியாடி?” என்றான் கடுப்பாக,
“க்கூம் இனிமே தான் மயக்கனுமா? நீ ஏற்கனவே மயங்கி இருக்கனுல நான் நினைச்சேன்.. இல்லையா? அப்போ மயக்கவா மச்சான்?” என்றாள் மயக்கும் பார்வை பார்த்துக்கொண்டே. இன்னும் ஒரு நிமிஷம் அவள் கண்ணை அவன் பார்த்திருந்தாலும் இன்று அவன் பிரம்மச்சரியம் முடிஞ்சிருக்கும். தலையை உலுக்கிவிட்டு,
“உன்கிட்ட மனுஷன் பேசுவானா.. ஒழுங்கா கிளம்பி வெளிய வாடி. நான் குளிக்கனும்” எனக்கூறி வெளியேறி மீண்டும் படுக்கையில் வீழ்ந்தான். அவன் நினைப்பு முழுவதும் இப்போ அவள் தூண்டிவிட்ட பழைய நினைப்பில்.
அன்றொரு நாள் மாலைநேரம் காலேஜ்ஜிலிருந்து அவளை வீட்டிற்கு அழைத்துவந்து விட்டவன், வரும்போது அவள் கேட்ட சிக்கன்ரோலை வாங்கச் சென்றான். வீட்டில் அன்று யாருமே இல்லை. ஒரு துக்கம் விசாரிக்க வெளியூர் சென்றிருந்தனர் பெரியவர்கள்.
“சித்தத்து கதவ வெளியே கூடி பூட்டிட்டு போ. நான் குளிக்கப் போறேன்”
“சரி. நீ உள்ள போ. நான் வாங்கிட்டு வாரேன்” எனக் கதவைப் பூட்டிவிட்டு சென்றான். பின் வீடு திரும்பியவன் அவள் குளிக்கசென்றதை மறந்துவிட்டு எப்போதும் போல அவளறைத் திறக்க, அவளோ துண்டை மட்டும் சுத்திக்கொண்டு அலமாரியில் இரவு உடையைத் தேடிக்கொண்டிருக்க, கதவு படாரெனத் திறந்த அதிர்வில் திரும்பும்போது துண்டும் பயந்து கீழே விழுந்துவிட்டது.
சிக்கன் ரோல் வாங்கிட்டு வந்தவன் கண்களுக்கு ஒரு தலைவாழை விருந்தை இலவசமாகக் காட்டிவிட்டாள் அவனின் தாரா. ஒரு நிமிடம் தலைகால் புரியாமல் அதிர்ச்சியாகி அவன் நிற்க, அவளோ பதறிப் பெட்டிலிருந்த போர்வையை எடுத்து முழுதாகப் போர்த்திக்கொண்டாள்.
அதற்குப் பிறகே “சாரி.. சாரி” என அறையை விட்டு வெளியேறினான். அதற்குப் பிறகு இரு நாட்கள் ஒருவரை ஒருவர் தலைநிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல் சுற்றிக்கொண்டிருந்தனர். இன்று அதைச் சொல்லி அவனைச் சீண்டிவிட்டு, அவன் தாபத்தையும் தூண்டிவிட்டாள் அவனின் அருமை பொண்டாட்டி.
அதை நினைத்தபடியே படுத்திருந்தவன் அவனறையை பார்க்க, கதவு தாளிடாமல் இருந்தால் காற்று அடித்தால் திறந்து கூடத்திலிருந்து அவர்களது அறையைப் பார்க்க வாய்ப்பிருந்தது. என்னதான் கோபம் இருந்தாலும், அவளுக்காக, அவளது தனிமைக்காக அன்றே தன் அறைக்குத் தானாகக் கதவை மூடும் கருவியைப் (hydraulic door) பொருத்திவிட்டான். ஆனந்தி தான் முனங்கலும், பொறுமலுமாக சுற்றினார்.
*****
“என்னங்க.. மதும்மா என்ன பண்றாளோ தெரியல. நம்ம ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வரலாமா?” என ஈகைச்செல்வி அன்பழகனிடம் கேட்க,
“எனக்கும் அதான் மனசுல ஓடிட்டே இருக்கு. மச்சான் போன் பண்றேன் அப்புறம் வாங்கனு சொன்னார், அதான் யோசனையா இருக்கு”
“அப்போ அவருக்குப் போன் போடுங்களேன்.. என்ன பண்றாங்கனு கேளுங்க. காலையில இருந்து மதுக்கு போன் போட்டேன் ஸ்விட்ச் ஆப்னு வருது”
“போடாமலா இருப்பேன் அவர் போனே எடுக்கல ஈகை”
“அப்போ போய்ட்டே வந்திடலாங்க” எனக்கூறினார்.
அங்கிருந்த வைரம் பாட்டியோ “நானும் வரேன் நேத்து அந்த ஆட்டம் ஆடிட்டா நான் பெத்த மகராசி.. நானும் வரேன் அவள இரண்டுல ஒன்னு பார்த்திடலாம்” எனக்கூற, அங்கு வந்த அகிலாவோ,
“பாட்டி.. ஆனந்தி பெரியம்மா ரொம்ப பேசுவாங்க. மாமாவ எல்லாம் அங்க கூட்டிட்டு போக வேண்டாம். வேணும்ணா நீங்க, நான் அத்தை மூணுபேரும் போய் என்ன பண்றாங்கனு பார்த்துட்டு வரலாம்” எனக்கூற,
“அதுவும் சரி தான். நீ கிளம்பி வா. நம்ம போய்ட்டு வரலாம்” என அவரும் கிளம்ப அறைக்குச் சென்றார். அகிலாவும் அவளறைக்கு சென்று பரபரவெனக் கிளம்ப,
“காலையில எங்கடி இவ்ளோ அவசரமா கிளம்புற?” என அஸ்வந்த் கேட்க,
“ஹ்ம்ம். சித்தார்த் அண்ணன் வீட்டுக்கு. மது என்ன பண்றானு பார்த்துட்டு வரலாம்னு கிளம்புறேண்டா”
“அத்தை ஆடுமேடி. அதுவும் உன்னைப் பார்த்தா உக்கிரமா ஆடும்” எனக்கூற முறைத்தவள்,
“அத்தை மாமாவ கூட்டுட்டு போறேனு நிக்கிறாங்க. உங்கத்த வாயில தான் வண்ண வண்ணமா வருமே.. மாமாவால தாங்க முடியாதுங்க. அதான் நானும், பாட்டியும் அவங்க கூட கிளம்புறோம்”
“இல்லடி அம்மாவும், பாட்டியும் கூட வேணாம். அத்தை மரியாதை இல்லாம பேசும். நம்ம இரண்டு பேரும் போய்ட்டு வரலாம். நம்மள பேசாத பேச்சா. நம்ம தாங்கிப்போம் ஆனா பெரியவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க”
“சரி. அவ டிரெஸ் எல்லாம் காலையில பேக் பண்ணி வச்சிட்டேன். அத குடுக்குற மாதிரி போய்ட்டு வந்துருவோம்”
“சரி. கீழ போய் அம்மாட்ட சொல்லிட்டு ரெடியா இரு. நான் கிளம்பி வாரேன்”
“சீக்கிரம் வாடா”
“ஹ்ம்ம். வரேன் முதல்ல நீ ரெடியாகு” எனக் குளியறையில் புகுந்தான்.
கீழே வந்தவள் ஈகையிடம் “அத்தை நீங்க யாரும் வரவேணாம் உங்க புள்ள என் கூட வரேனு சொன்னார். நாங்க போய் என்னனு பார்த்துட்டு வரோம்”
வைரம் பாட்டி “அகிலா! என் மவ எப்படி பேசுவானு எனக்குத் தெரியும்த்தா.. நாங்க யாருமில்லாம நீங்க மட்டும் தனியா போனா கூடம்முட்டு ஆடுவா. நானும் வரேன்த்தா”
ஈகை “நானும் வரேன். மதும்மா எப்படி இருக்கானு என் கண்ணால பார்த்தா தான் என் மனசு அமைதியா இருக்கும்”
“பாட்டி அத்த.. பெரியம்மா ரொம்ப பேசுவாங்க. நாங்கனா சின்னபுள்ளைக தான பொறுத்துப்போம், உங்கள பேசினா பிரச்சனையாகிடும் அத்தை.. அதான் வேணாம்னு சொல்றோம். நான் மதுவ பார்த்துக்க மாட்டேனா? நாங்க போய்ட்டு வரோம்த்த”
ஈகை “எனக்கு அவள பார்க்கனும் போல இருக்கே”
“நிலைமை எப்படி இருக்குனு பார்த்துட்டு, மறுவீட்டுக்கும் அழைச்சுட்டும் வரோம் அத்தை. அப்போ பார்க்கலாம்” எனக்கூறிக் கொண்டிருக்கும் போதே அஸ்வந்த் வந்துவிட்டான்.
“அம்மா! நாங்க முதல்ல போறோம் அப்புறமா வந்து உங்களைக் கூட்டிட்டு போறேன்ம்மா. அந்த முரடேன் வேற கோபத்துல இருக்கான்”
“சித்தார்த் என்னை ஒன்னும் பேசமாட்டான். நானும் வரேண்டா”
“அதான் மண்டபத்துல எல்லாரும் அத்தனை கெஞ்சியும் விட்டுட்டு போனானே. அவன் வீட்டு வாசல்ல பிச்சைகாரங்க மாதிரி நின்னோம் உள்ள இருந்துக்கிட்டே வெளிய வரல. கோபத்துல என்னை எதுவும் பேசினா கூட நண்பனு மறந்துடுவேன்ம்மா. உன்னையும், அப்பாவையும் பேசிட்டா என்னால தாங்க முடியாது. புரிஞ்சுக்கோங்க. என் தங்கச்சிய நான் பார்த்துக்க மாட்டேனா. நான் போய்ட்டு வரேன்” என ஒருவாறு அனைவரையும் சமாளித்து, மதுவின் பெட்டியைத் தூக்கிக்கொண்டு அஸ்வந்தும், அகிலாவும் மதுவை பார்க்கச் சித்தார்த் வீட்டுக்குக் கிளம்பினர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
16
+1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 14
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 16
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ என்ன பஞ்சாயத்து நடக்க போகுதோ … என்னைக்கு உன்னோட கோபம் போகும்னு தெரியலையே சித்து …
சீக்கிரம் போயிடும்.. திரும்ப கோபப்படுத்தாம இருக்கனும்.
மிக்க நன்றி😍
என்ன நடக்க போகுதோ… யார் யார் எப்படிலாம் பேசி வைக்க போறாங்களோ? சித்தார்த் ரொம்ப கஷ்டப்பட்டு கோபத்தை பிடிச்சு வைக்ககறாப்ல..சீக்கிரம் அதுவும் கரைஞ்சு போகட்டும்✨
கதைகளம் சூடுபிடிக்கட்டும்
மிக்க நன்றி😍😍
அவள் அழுவதை பார்க்க மனம் இல்லாமல் அள்ளி அணைத்துக்கொள்கின்றான்.
கோவம் இல்லாமல் காதலாய் மட்டுமே அவளுடன் கூடல் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றான்.
காய படுத்த மனதில்லாமல் விலகவும் இயலாமல் தவிக்கின்றான் பாவம்.
“என் அறைக்கு தாப்பாள் கிடையாது, தட்டாம ஒரு ஆள் தான் உள்ள வருவாரு” 🤣🤣
படுத்தி எடுக்கின்றாளே அவனை.
அவள் மீது மகன் காட்டும் அக்கறையை பார்த்து புகைய ஆரம்பித்து விட்டது ஆனந்திக்கு.
அகிலா வேறு வீட்டிற்கு வர கிளம்புகிறார்களே என்ன நடக்க இருக்கிறதோ! பார்ப்போம்.
மிக்க நன்றி😍😍