ஸ்ரீ தியாகராஜப் பெருமான் வாசம் செய்யும் திருவாரூரில் உள்ள விஜய புரத்தில், செல்வம் தெருவில் துரைசாமி செட்டியாரின் வீடு உள்ளது.
துரைசாமி செட்டியாரை பற்றி சில வரிகள். 1904ஆம் ஆண்டு பக்கிரிசாமி செட்டியார், கண்ணாம்பாள் தம்பதியருக்கு மூன்றாவது ஆக பிறந்தவர்.
ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர் .தனது பதினோராவது வயதில் தந்தைக்கு உதவியாக குடும்ப வியாபாரமான எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டார்.
மாட்டை பூட்டி ஓட்டும் செக்கு வைத்திருந்தார்கள் .அதில் எண்ணெய் எடுத்து வியாபாரம் செய்து வந்தார்கள்.
துரைசாமி தலையெடுத்த பிறகு தஞ்சை ஜில்லாவிலேயே முதன் முதலாக 26.8.1949 ஸ்ரீவிவேகானந்தா எண்ணை ஆலையை நிறுவி முதல்தர எண்ணை உற்பத்தியாளர் என்ற பெருமையும் பெற்றவர் .
மகாத்மா காந்தியடிகள் 1919 இல் தென்னிந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தின் குறிக்கோளாக ஒவ்வொரு ஊரிலும் கதர் அணிவதையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வந்தார்.
அந்தப் பிரச்சார சுற்றுப்பயணம் திருவாரூர் கொடிக்கால்பாளையம்,
தைக்கால் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மகாத்மாவை சந்திக்கும் வாய்ப்பு துரைசாமி செட்டியாருக்கு கிடைத்தது.
அன்று முதல் தன்னை காங்கிரஸ் தொண்டனாக அர்ப்பணித்துக் கொண்டார். திருவாரூர் வருகை தந்த போது காந்திஜி விஜயபுரம் ரிவர்வியூ பங்களாவில் தங்கினார். அப்பொழுது மகாத்மாவிற்கு ஆட்டுப் பால் கொடுக்கும் பிரிவில் துரைசாமியும், சிதம்பரம் தியாகி கோவிந்தசாமி படையாட்சி அவர்களும் இருந்தார்கள்.
காந்தியடிகளுக்கு ஆட்டுப் பால் கொடுக்கும்போது மகாத்மாவை தொட்டு வணங்கும் மாபெரும் பாக்கியம் பெற்றார். அன்று முதல் நூல் நூற்கவும் அதைக்கொண்டு நெய்த கதர் ஆடை அணியும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார். பனியனும் கதரில் தான் அணிவார்.
காதி போர்டு ஆதரவில் கதர் வஸ்திராலயத்தை நடத்திவந்தார்.
திருச்செங்கோடு ஆசிரமத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி அவர்கள் தங்கியிருந்தார்கள். ஒருவாரம் அவரோடு தங்கி இருந்து அவரின் ஆசியைப் பெற்றார்.
தனது 23 ஆவது வயதில் இருந்து காங்கிரஸ் தொண்டனாகவும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் பணியாற்றத் துவங்கினார்.
1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நகர சபை உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து முப்பது ஆண்டுகாலம் கவுன்சிலராக இருந்து வந்தார். அவரின் முயற்சியினால் திருவாரூர் நகருக்கு இரண்டு பள்ளிக்கூடங்களும் ஒரு ஆஸ்பத்திரியும் கட்டப்பட்டது.
1952இல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ஜவஹர்லால் நேரு திருவாரூர் வந்தார் .ஒரு பக்கம் லால்பகதூர் சாஸ்திரியும் இன்னொரு பக்கம் கர்மவீரர் காமராஜர் அமர்ந்திருக்க,நடுவில் ரோஜாக் குவியலாய் நேரு அமர்ந்திருந்தார். அவர்களை வரவேற்கும் பாக்கியத்தைப் பெற்றார் துரைசாமி.
இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பொழுது திருவாரூருக்கு சுற்றுப்பயணம் வந்தார். அவருக்கு திருவாரூரில் உள்ள பேபி டாக்கிஸில் மிகச் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது .அதில் துரைசாமி வாழ்த்துப் பத்திரம் வாசித்துக் கொடுத்தார்.
திருவாரூர் வர்த்தக சபை வரலாற்றிலேயே துரைசாமி செட்டியார் தான் தொடர்ந்து 30 ஆண்டுகள் வர்த்தக சங்க தலைவராக இருந்து மிகச் சிறப்பான முறையில் செயலாற்றி வந்தார்.
1980-ஆம் ஆண்டு ஆர். வெங்கட்ராமன் பாதுகாப்பு மந்திரியாக இருந்தபோது நாகூர் வந்த ஆர். வி.யை
துரைசாமி செட்டியார் சந்தித்தார்.
கோலாலம்பூர் வர்த்தக சங்கத்தில் இருந்து 1962 ஆம் ஆண்டு துரைசாமி செட்டியாருக்கு அழைப்பு விடுத்து இருந்தார்கள். அழைப்பை ஏற்று ஏழு வர்த்தகர்களுடன் மலேசியா சென்றார் .கோலாலம்பூர் வர்த்தக சங்கத்தால் நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் இரண்டு நாடுகளின் நட்பையும் வணிகமுறை மேம்பாடு குறித்தும் பேசினார். பினாங்கில் டத்தோ ரெங்கசாமி பிள்ளை ஆதரவில் 4 நாட்களும், ஈபோவில் தொழிலதிபர் வி. கே. கல்யாணசுந்தரம் செட்டியாரின் விருந்து உபசரிப்பிலும் கலந்து கொண்டார்.
1914இல் ஸ்ரீலட்சுமி நாராயண கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது 1977 முதல் 1988 வரை துரைசாமி செட்டியார் தலைவராக இருந்த காலத்தில் வங்கியின் வளர்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாறாக வெளி உலகத்தில் சிறந்த மனிதராக செயலாற்றி வந்த தருணத்தில் கிருபானந்தவாரியாரின் அறிமுகம் கிட்டியது.
திருவாரூருக்கு கிருபானந்தவாரியார் எப்போது வந்தாலும் பண்ணை வீட்டில்தான் தங்குவார்.
அவ்வாறு தங்கியிருந்த சமயத்தில் அவரை போய் பார்த்து வந்தார் துரைசாமி செட்டியார்.
திருவாரூரை சுற்றி அவரது நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதில் தவறாமல் கலந்து கொண்டார்.
அவருடைய சொற்பொழிவு இவரை மிகவும் கவர்ந்தது கிருபானந்த வாரியாரை வீட்டிற்கு அழைத்து சிறப்பாக கவனித்து அனுப்புவார்கள்.
காலப்போக்கில் இருவருக்கும் இடையில் ஒரு நெருக்கமான நட்பு உருவாயிற்று. பிறகு திருவாரூர் எப்போது வந்தாலும் இவர் வீட்டிலேயே வந்து தங்க ஆரம்பித்தார் கிருபானந்தவாரியார்.
அவருடன் ஏழெட்டு நபர்களும் வந்து தங்குவார்கள் வாத்தியம் வாசிப்பவர்கள் 6 பேர் அவரைப் பார்த்துக் கொள்ள இரண்டு பேர் என எட்டு பேர் இருப்பார்கள்.
அவர் கூப்பிட்ட குரலுக்கு அவரது தேவையை பூர்த்தி செய்வதுதான் அந்த இரண்டு பேரின் வேலை.
கிருபானந்த வாரியார் வரும்போது ஒவ்வொருமுறையும் வீடு திருவிழாக்கோலம் பூண்டு நிற்கும் மாவிலைத் தோரணம் என்ன ,மாக்கோலம் என்ன, என்று வீடு ஜெகஜோதியாக இருக்கும் .
அவர் எத்தனை நாட்கள் தங்கினாலும் ஊருக்கு போகும் வரை ஐயர் வைத்துதான் சமையல் நடக்கும் .கிருபானந்த வாரியார் தங்கியிருப்பதை அறிந்து மக்கள் சாரை சாரையாக வந்து பார்த்த வண்ணமாக இருப்பார்கள். அவரை பார்த்து ஆசி பெறுவது அவ்வளவு ஆனந்தம்.
அவரும் சிரித்த முகத்துடன் விபூதி வழங்கிக் கொண்டே இருப்பார். முருகா என்ற சொல்லை எப்பொழுதும் அவர் வாய் உச்சரித்துக் கொண்டே இருக்கும்.
துரைசாமி செட்டியாருக்கு 4 மகன்களும் 3 மகள்களும் உண்டு. பேரன் ,பேத்திகள், கொள்ளு பேரன் ,பேத்திகள் என பெரிய குடும்பம்.
அவர்கள் வீடு கல்யாண வீடு போல் எப்பொழுதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும் மூன்று வேளையும் விதவிதமாக சமைப்பார்கள். காலையும் மாலையும் குறைந்தது இரண்டு விதமான பதார்த்தங்கள் இருக்கும். மதியம் வடை பாயாசத்துடன் சாப்பாடு, மாலை டிபனுக்கு ஸ்வீட், காரம் ஏதாவது இருக்கும் .
கிருபானந்த வாரியார் உடன் வந்து இருப்பதற்கு மட்டுமல்ல,அவரைப் பார்க்க வீட்டிற்கு வரும் அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் என்பதில் கவனமாகவும் அக்கறையுடனும் இருப்பார் துரைசாமி செட்டியார்.
கிருபானந்த வாரியார் வந்து தங்கிவிட்டு செல்லும்வரை சைவ சாப்பாடு தான் . 3 வேளையும் விதவிதமாக சமைத்தாலும் கிருபானந்தவாரியார் அளவோடு தான் சாப்பிடுவார் அதுவும் இரவில் கோதுமை கஞ்சி மட்டும்தான் அருந்துவார்.
வெளியூர் செல்லும் பொழுது கையில் பிளாஸ்கில் மிளகு சுக்கு பால் எடுத்துக் கொண்டு செல்வார். உள்ளுரில் கச்சேரி நடைபெறும் போது சுடசுட அவருக்கு மிளகு சுக்கு பால் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று கொடுப்பார்கள்.
காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு நெற்றி நிறைய விபூதி பட்டை போட்டு, குங்கும பொட்டு வைத்து உடல் முழுவதும் விபூதி பட்டை போட்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலையும் ஸ்படிக மாலையும் அணிந்திருப்பார்.
சட்டை அணிய மாட்டார் இடுப்பில் பட்டு வேஷ்டியும் துண்டும் அணிந்திருப்பார். கையில் சிவப்பு கலர் காசி துண்டு வைத்திருப்பார். வேர்க்கும் போது துடைத்துக் கொள்வதற்காக எப்பொழுதும் வைத்திருப்பார்.
கழுத்தில் அணிந்திருக்கும் ருத்ராட்ச மாலையில் ஒரு தங்கத்தாலான டாலர் திறந்து மூடும் வகையில்
அமைந்திருக்கும்.
அதற்குள் ஒரு ஸ்படிக லிங்கம் வைத்திருப்பார். அந்த மாலை எப்பொழுதும் அவர் கழுத்திலேயே இருக்கும்.
கிருபானந்த வாரியார் பூஜை செய்யும் அழகே தனிதான். அவர் வரும்போது அவருடன் இரண்டு அடி உயரத்தில் இரண்டு அடி அகலத்தில் ஒரு வெள்ளியிலான பெட்டி வரும்.
அதில் முக்கால் அடி உயரத்தில் தங்ககவசத்துடன் ஸ்ரீ வள்ளி-தெய்வானை சமேத முருகன் சிலை இருக்கும். முருகன் கையில் வேலும், மயிலும் தங்கத்தில் இருக்கும்.
பெட்டியின் கதவு இரண்டின் உட்புறம் சிறு அறை போல் இருக்கும். அதனுள்ளே ஒரு புறம் பிள்ளையாரும்.
மற்றொரு கதவில் ஸ்ரீ அம்பாளும், லிங்கமும் வைத்திருப்பார்.
அவர் கீழே அமர்வது கஷ்டம் என்பதால் கல்யாண கூட த்தில் சாமி படங்கள் வரிசையாக மாட்டி இருக்கும் அதன் முன்பு இரண்டு பெஞ்சுகள் போட்டு மேடை போல் ஏற்பாடு செய்து வைத்திருப்பார் துரைசாமி செட்டியார்.
அதில் அமர்ந்து தான் பூஜை செய்வார். தினமும் பூஜை செய்வார். அதை பார்ப்பதற்கென்றே தினமும் நிறைய பேர் வருவார்கள்.
அதில் மிகவும் முக்கியமானவர்கள் பொன் குமரேசன், மைதீன் கோவிந்தராஜ் ,ஆ.எம். பி.ராஜகோபால், சுப்பையா பிள்ளை, பி .ஆர். எம். குணசேகரி , நடேசன் வாத்தியார் அக்ரஹாரத்தில் உள்ள பெரியவர்கள் என்று நிறைய பேர் வருவார்கள்.
பூஜை செய்யும்போது அமர்வதற்கு என்று ஒரு மான் தோலை வாங்கி வைத்திருந்தார் துரைசாமி செட்டியார். கவர்மெண்ட் பர்மிஷன் உடன் வேதாரண்யத்தில் பதப்படுத்திய மான் தோலை வாங்கி வைத்திருந்தார். அந்த மான் தோலின் காலில் சுடப்பட்ட ஒட்டை இருக்கும்.
அந்த மான் தோலை விரித்து அதில் அமர்ந்த படி கிருபானந்த வாரியார் பூஜை செய்வார். இரும்பு லாக்கர் பெட்டி போல அவர் வைத்திருக்கும் பெட்டி இருக்கும். அதை சாவி போட்டு திறந்து ஒவ்வொரு சாமியாக எடுத்து அபிஷேகம் செய்வதற்கு என்று உள்ள பீடத்தில் வைப்பார்.
அபிஷேகம் செய்வதற்கு என்றே தனியாக சின்னச்சின்னதாய் வெள்ளிக் கிண்ணம் வைத்திருப்பார். அவருடன் வந்தவர்கள் அந்தக் கிண்ணத்தில் அபிஷேக சாமான்களை ரெடியாக கரைத்து வைப்பார்கள்.
பூஜைக்கு தேவையான சாமான்களை முதல்நாளே ரெடியாக வாங்கி வைத்துவிடுவார்கள்.
அபிஷேகத்துக்கு தேவையான தண்ணீர் வெள்ளி குடத்திலும், பூஜை சாமான்கள் வெள்ளி தட்டிலும்,
அர்ச்சனை சாமான்கள் வெள்ளிக் காவேரித் தூக்கிலும் வைப்பார்கள். இவையெல்லாம் துரைசாமி செட்டியாரின் மூன்றாவது மருமகள் திலகவதி உடையது..
துரைசாமி செட்டியாரும்,அவர் மனைவி செல்லம்மாளும் மூன்றாவது மகன் சரவணனுடன் இருந்தார்கள்.
மற்ற மகனும் ,மருமகளும் அந்தத் தெருவிலேயே பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தார்கள். தீபாவளி, பொங்கல், நல்லது, கெட்டது அனைத்திற்கும் ஒன்றுகூடி கொண்டாடுவது துரைசாமி செட்டியார் வீட்டில் தான். பூஜை நேரத்தில் அவருடைய மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் , கொள்ளு ,பேரன் பேத்திகள் வரை வந்துவிடுவார்கள்.
வீடே கலகலப்பாகவும் , குழந்தைகளின் சத்தத்துடன் நிறைந்திருக்கும். கிருபானந்த வாரியாருக்கு குழந்தைகள் என்றால் மிகுந்த விருப்பம்.
அவர்களை தன்னருகே அழைத்து சுற்றி அமர வைத்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருப்பார்.
அபிஷேகம் செய்யும்போது கூடம் முழுவதும் மக்களால் நிரம்பி விடும். முருகனின் நாமங்களை சொல்லியபடி கூடி இருப்பவர்களையும் திரும்பச் சொல்லும் படி, கூறிய படி தேன், பால் ,தயிர், திரவிய பொடி ,பன்னீர் ,சந்தனம், எலுமிச்சம்பழம், நார்த்தம்பழம், இளநீர், பஞ்சாமிர்தம் எல்லா பழங்களையும் கொண்டு பஞ்சாமிர்தம் தயார் செய்வார்கள், விபூதி வரை அபிஷேகம் செய்வார்.
தூபக்கால், மணி, விளக்கு, சாமிக்கு பின்புறம் வைக்கும் திருவாச்சி ,சூடம் ஏற்றும் தட்டு எல்லாம் வெள்ளியில் வைத்திருப்பார். சின்ன சின்னதாக பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
அபிஷேகம் முடிந்தவுடன் எல்லா சாமிகளையும் பட்டுத் துணியால் துடைத்து , பெட்டியின் உள்ளே அழகாக அடுக்கி அவற்றிற்கு தங்கக் கவசத்தை போடுவார்.தங்க ஆபரணங்களை சாற்றுவார்.பலவிதமான வாசனை மலர்களை கொண்டு அலங்காரம் செய்வார். தனது கழுத்தில் அணிந்திருக்கும் டாலரிலிருந்து லிங்கத்தை எடுத்து வைத்து அதற்கும் அபிஷேகம் செய்து பூஜையில் வைத்து தீபம் ,தூபம், சூடம் காட்டிய பிறகு அந்த லிங்கத்தை எடுத்து மறுபடியும் தனது கழுத்தில் இருக்கும் டாலரில் வைத்துக் கொள்வார்.
பூஜைக்கு வந்திருந்தவர்கள் அனைவருடைய முகத்திலும் ஆனந்த பரவசம் நிரம்பி வழிவதைக் காணலாம்.பூஜை முடிந்த பிறகு தான் சாப்பிடுவார். அவருடன் வந்தவர்களை மாடியில் தங்க வைத்திருப்பார்கள்.
தான் படுத்திருக்கும் கட்டிலை கிருபானந்த வாரியாருக்கு கொடுத்துவிட்டு உள்ளே சென்று படுத்து கொள்ளுவார் துரைசாமி செட்டியார்.கிருபானந்த வாரியார் வருகிறார் என்றால் காவி கலரில் மெத்தை உரை ஒன்று தைத்து வைத்திருப்பார்.
அதை போட்டு படுக்க வைப்பார். அவர் சென்ற பிறகு அந்த உரையைத் துவைத்து பெட்டியில் வைக்கப்பட்டால், அடுத்து அவருடைய வரவுக்காக காத்திருக்கும்….
கிருபானந்த வாரியார் திருவாரூரை சுற்றி எங்கு நிகழ்ச்சிக்கு சென்றாலும், காரில்தான் போவார்,வருவார். அவருடைய வீடு சென்னையில் உள்ளது. அங்கிருந்து திருவாரூர் வருவதற்கு மட்டும் ரயிலில் வருவார். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கார் வைத்துதான் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.
ஆடிப்பூரத்திற்கு எல்லையம்மன் கோவிலில் பத்து நாட்கள் அவருடைய கச்சேரி நடைபெறும்.
அதைப்போல் பழனியாண்டவர் கோவிலில் பூசத்திற்கு நடைபெறும்.
ஸ்ரீலெட்சுமி நாராயணர் கோவிலில் ராதா கல்யாண வைபோகத்தின் போது அவருடைய நிகழ்ச்சி நடைபெறும்.
எங்கு கச்சேரி நடந்தாலும் அங்கு வந்திருக்கும் குழந்தைகளை மேடைக்கு அருகே அழைத்து அமர வைத்துக் கொள்வார்.
கச்சேரியில் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது நடுநடுவே கதை சம்பந்தப்பட்ட சிறுசிறு கேள்விகளை அந்த குழந்தைகளை நோக்கி கேட்பார். சரியான பதில் அளிக்கும் குழந்தைகளுக்கு புத்தகம்,பேனா,பென்சில் என்று சின்ன சின்ன பரிசுகளை கொடுத்து சந்தோஷப்படுத்துவார்.
இரண்டு மணி நேர நிகழ்ச்சி என்றால் அதில் ஒரு மணி நேரம் சாமியை பற்றிய கதையாக சொல்வார் . ஒரு மணி நேரம் பொதுவான விஷயங்களைப் பற்றி அழகாக விளக்கமாக எடுத்துரைப்பார்.
அவருடைய நிகழ்ச்சி என்றால் கூட்டம் நிரம்பி வழியும், நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்.கதை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே நடுநடுவே இன்று செட்டியார் வீட்டில் கோதுமை அல்வாவும் ,தயிர் வடையும் டிபனாக சாப்பிட்டேன் என்பார்.
மற்றொரு நாளில் இன்று செட்டியார் வீட்டில் அன்னாசிப்பழம் மோர் குழம்பு, ஆப்பிள் பஜ்ஜி ,விளாம்பழ
ரசம் வைத்தார்கள் என்று கூறுவார்.
கிருபானந்த வாரியார் நிகழ்ச்சிக்குச் செல்லும் போது அவர் கூடவே காரில் துரைசாமி செட்டியாரும் சென்று வருவார்.
வாரியாரின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் செட்டியாரும் கலந்து கொள்வார்.
துரைசாமி வீட்டில் நடைபெறும் உபசரனைகளைப் பற்றி கச்சேரியில் இடையிடையே வாரியார் கூறுவார். அதைக் கேட்கும் துரைசாமி செட்டியாரின் பேரன் ,பேத்திகளுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.
துரைசாமி செட்டியார்
பார்ப்பதற்கு வாரியார் போலவே இருப்பார். சிவந்த நிறம், கதர் ஆடை தான் உடுத்தி இருப்பார்.கதர் துண்டு தான் பயன்படுத்துவார்.கதரில் தான் பனியன் தைத்து அணிந்திருந்திருப்பார்.நெற்றியில் விபூதிப்பட்டை, சந்தன, குங்குமத்துடன், கழுத்தில் உத்திராட்ச மாலையுடன் அவரைப் பார்க்கும்போது கனகம்பீரமாக இருக்கும் .
அவரை தெரிந்தவர்கள் அவரை சிவப்பு தம்பி என்று தான் அழைப்பார்கள். வாரியாருக்கும், அவருக்கும் இடையேயான நட்பு ஒன்றல்ல, இரண்டல்ல 30 வருட நட்பு.
செட்டியாரின் அறுபதாம் கல்யாணத்திற்கு வாரியார் வந்து கச்சேரி நடத்தியுள்ளார். அப்போதெல்லாம் நின்றுகொண்டே தான் பேசுவார். கச்சேரி முடியும் வரை நின்று கொண்டுதான் இருப்பார்….
செட்டியாரின் 60ஆம் கல்யாணம் திருவிழா போல் நான்கு நாட்கள் நடந்ததாக கூறுவார்கள் அப்போதுதான்
காசி,ரிஷிகேஷ் வரை ஆன்மீக யாத்திரை சென்று வந்தார்கள் துரைசாமியும் அவரது மனைவி செல்லம்மாளும்….
கொடுப்பதற்கு மூட்டையாக வங்காள மஞ்சளும், சமைப்பதற்கு மூட்டைகணக்கில் முந்திரி வாங்கியதாகவும் சொல்வார்கள். அவ்வளவு விமர்சையாக அறுபதாம் கல்யாணம் நடந்தது.
கல்யாணத்தில் கலந்து கொண்ட கிருபானந்தவாரியார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அந்தப் பொன்னாடையை பொக்கிஷம் போல் பாதுகாத்து வந்தார் துரைசாமி செட்டியார்.
வெளியூரிலிருந்து வந்து வாரியாரை கார் வைத்து அழைத்து செல்வார்கள். யார் அழைத்தாலும் அவர்கள் வீட்டிற்கு பெட்டியுடன் சென்று பூஜை செய்வார். அவரை சாப்பிட வைத்து காரில் திரும்பக் கொண்டு வந்து
செட்டியார் வீட்டில் விட்டுச் செல்வார்கள்.
ஐயர் சமைக்கும் போது அவருக்கு கூடமாட இருந்து சமைப்பது செட்டியாரின் மருமகள் திலகவதியும் பேத்திகள் மூவரும் தான்.
பேத்திகள் வீட்டிற்குள் வரக்கூடாதா நாட்களில் அவர்களுடைய பெரியப்பா வீட்டில் போய் தங்கிக்கொண்டு
பள்ளிக்கூடம் செல்வார்கள். வீட்டை கோவிலைப் போன்று அவ்வளவு தூய்மையாக வைத்துக் கொள்வார்கள்.
துரைசாமி செட்டியாரின் 80வது கல்யாணம் அதாவது முத்து விழா என்றும் கூறுவார்கள். அந்த முத்து விழா நடைபெற்றது அவருடைய இல்லத்தில். அவருடைய வீடு போலவே பக்கத்தில் இருந்த வீடும் அப்படியே இருக்கும் .நிலைவாசல் தனித்தனியாக இருந்தாலும், இரண்டு வீட்டிற்கும் நடுவில் ஒரு சுவர் தான் அதில் ஒரு அலமாரி இருக்கும். அதை எடுத்து விட்டால் இரண்டு வீடும் ஒரு வீடு போல ஆகிவிடும். வீட்டில் விசேஷங்கள் நடத்தும் போது அந்த அலமாரியை எடுத்து விடுவார்கள். திண்ணையில் எந்த தடுப்பும் இன்றி இரண்டு வீட்டிற்கும் ஒரே திண்ணையாக இருக்கும்.
சொந்தத்தில் திருமண மண்டபம் இருந்தாலும் வீட்டில் வைத்து செய்வதையே கௌரவமாக கருதினார்கள்.
அந்த காலகட்டத்தில் முத்து விழா காண்பது என்பது மிகவும் அரிதான ஒன்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தது ஒருபங்கு என்றால், அழைப்பு இல்லாமலே, கேள்விப்பட்டு வந்த கூட்டம் இரண்டு பங்கு. கூட்டம் கூட்டமாக வந்து துரைசாமி செட்டியார் அவருடைய மனைவி செல்லம்மாளிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு சென்றார்கள். ….
அந்த முத்து விழாவில் கலந்து கொண்ட திருமுக .கிருபானந்த வாரியார் அளித்த
வாழ்த்துப்பா இதோ
———————————————————–
மன்னும் விஜயபுரம் வாழும் துரைசாமி
என்னும் தர்மகுண ஏந்தலார்-
உன்னும்
சதாபிஷே கங்கொண்டு சாந்தியுடன் வாழ்க
சிதானந்த மாகச் சிறந்து.
ஆருர் விஜயபுர அண்ணல் துரைசாமி
சீருர் சதாபிஷே கச்செம்மல்-
தாரூரும்
கந்தன் கருணையினால்
காசினியில் தேசுடனே
சந்ததமும் வாழ்க தழைத்து.
—–‐———————————————- முத்து விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துப்பா கொடுத்து சிறப்பித்தார் கிருபானந்தவாரியார்.
ஆயிரம் பிறை கண்டவர் துரைசாமி செட்டியார் அதை சின்ன விழாவாக மகள்கள், மகன்கள் , மருமகள் ,பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகள் சேர்ந்து கேக் வெட்டி சிறப்பாக
கொண்டாடினார்கள்.
துரைசாமி செட்டியார் 90ஆவது வயதை பூர்த்தி செய்த பொழுது ,அவரது மனைவி செல்லம்மாளும் இருந்தார்கள்.
இருவரும் சேர்ந்து இருப்பது என்பது மிகவும் அபூர்வம். எளிதில் காணக் கிடைக்காத காட்சி என்பதால் விழாவாக கொண்டாடி சிறப்பித்தார்கள் அவர்களுடைய மக்கள்.
90 வயதை அடைந்த உடன் கனகாபிஷேகம் செய்து பார்க்க ஆசைப்பட்டார்கள் அவருடைய வழித்தோன்றல்கள். பெற்றோருக்கு கனகாபிஷேகம் செய்து பார்க்கும் கொடுப்பினை அனைவருக்கும் கிடைத்து விடாது அல்லவா, அதனால் அவருடைய இல்லத்திலேயே அதை சிறப்பாக நடத்தினார்கள்….
தங்கம் வெள்ளியினாலான பூக்களை கொண்டு அவர்களுக்கு அபிஷேகம் செய்தார்கள்…..
மாலையும் ,சால்வையும் குவிந்தன வந்தவர்களுக்கு விபூதி பூசி மாளவில்லை….
வீடு கொள்ளாத மக்கள் கூட்டம் தெரு முழுவதும் மக்களால் நிரம்பி வழிந்தது. கேள்விப்பட்ட அனைவரும் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்தார்கள் அன்று முழுவதும் மக்கள் கூட்டத்தால் அந்த தெருவே நிரம்பிக் கிடந்தது…..
இந்த விழாவிற்கு கிருபானந்தவாரியாரால் வர முடியாமல் போனது. போனில் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு நிச்சயம் ஒரு நாள் உங்களை வந்து பார்ப்பேன் என்று கூறினார்.
சொல்லியபடியே சில மாதங்கள் கழித்து வந்து பார்த்து விட்டுச் சென்றார். அதுவே அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடைசியாக பார்த்துக் கொண்டது .
கிருபானந்த வாரியார் தனது ஆன்மீக சொற்பொழிவால் அனைவரையும் கட்டிப்போடுவதில் வல்லவர்.
துரை சாமி செட்டியாரும் அவரது குடும்பமும் கிருபானந்தவாரியாரின் அன்பில் கட்டுண்டு கிடந்தது.
கிருபானந்த வாரியார் வீட்டிற்கு வரும் போது துரைசாமி செட்டியாரின் மனைவி செல்லம்மாள் வயோதிகம் காரணமாக சிரமப்பட்டு நடந்து வெளியே வந்து அவரை வரவேற்பார்.
அதேபோல் கிருபானந்தவாரியார் ஊருக்குச் செல்லும் பொழுது உள்ளே சென்று செல்லம்மாளிடம் ஊருக்கு போய் வருகிறேன் என்று கூறி விட்டு தான் கிளம்புவார்.
பெண்களை மதிப்பாக நடத்தும் கொள்கை உடையவர்.
உலகமே அறிந்த கிருபானந்தவாரியாரும், ஊரறிந்த துரைசாமி செட்டியாரும் இருவரும் இரண்டு சகாப்தங்கள் நட்பினால் ஒன்றிணைந்து கடைசி வரை நட்போடு வாழ்ந்து மறைந்தார்கள்.
தோற்றத்தால் ஒரே மாதிரியாக இருப்பார்கள் இருவரும், இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் யார் வாரியார் என்ற சந்தேகம் வரும் என்று கூறுவார்கள் பார்ப்பவர்கள். அப்படி ஒரு உருவ ஒற்றுமை இருவருக்கும்.
அவர்களுடைய மறைவிலும் ஒரு ஒற்றுமை உண்டு. முதலில் கிருபானந்த வாரியாரும் , ஆறு மாத இடைவெளியில் துரைசாமி செட்டியாரும் இந்த உலகத்தை விட்டு மறைந்ததுமிகச் சிறந்த ஒரு நட்பை காட்டுகிறது.
உலகத் தலைவர்களை சந்தித்தவர் துரைசாமி செட்டியார் மகாத்மா காந்திஜி, ஜவகர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி, கர்மவீரர் காமராஜர், ராஜீவ்காந்தி அனைவரையும் சந்தித்த பெருமை அவருக்கு உண்டு.
காங்கிரஸ் கட்சியின் மீது இருந்த ஈடுபாடும், நேரு குடும்பத்தின் மீது கொண்டிருந்த பக்தியும், கிருபானந்தவாரியாரின் மீது வைத்திருந்த நட்பும் சொல்லி மாளாது .
மூன்று தலைமுறைகளை கண்ட துரைசாமி செட்டியாரின் வாழ்க்கையை அப்போது வாழ்ந்த பெரியவர்கள்
நன்கு அறிவர் அவரின் பெருமைகள், அவரின் சொல்லாற்றல், ஆன்மீகத்தில் அவருக்குள்ள ஆழ்ந்த ஈடுபாடு, அரசியலில் நேர்மை ,ஏழை ,செல்வந்தர் என்று பிரித்துப் பார்க்காத பண்பாளர்.
அவர் ஒரு சரித்திரம் என்பதைவிட ஒரு சகாப்தம் என்று சொன்னால் மிகையாகாது.
இன்றும் அவர்கள் இருவருடைய நட்பையும் என்னைப்போன்ற பலர் நினைத்துப் பார்த்துக் கொண்டதோடு நிற்காமல், நினைவலைகளை உங்களிடமும் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .
***** வணக்கம்*****
கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
உண்மை சம்பவங்களின் தொகுப்பு அருமையாய் இருந்தது சிஸ்..துரைசாமி ஐயாவுக்கு அரசியல் வகையிலும் செல்வாக்கு இருந்திருக்கு.. ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய கிருபானந்தவாரியரிடமும் நெருங்கிய நட்பு இருந்திருக்கு..பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தை கண் முன்னாடி கொண்டு வந்தது அருமை சிஸ்