Loading

“அம்மா… ஸ்டாப் வந்திடுச்சு. சீக்கிரம் இறங்குங்க. எல்லாரும் இறங்கிட்டாங்க. நீங்க மட்டும் தான் இருக்கீங்க.” என்ற குரலில் சட்டென விழிப்புத் தட்டி எழுந்தமர்ந்தாள் அபூர்வா.

ரயில் ஜன்னல் ஊடாக தலையை நீட்டிப் பார்த்தவளின் முகத்தை வருடிச் சென்றது தென்றல்.

அதனைக் கண் மூடி சில நொடிகள் ரசித்த அபூர்வா தன் கைப்பை மற்றும் சூட் கேஸுடன் கீழே இறங்கினாள்.

மேனியை வருடிச் செல்லும் தென்றலும், பச்சைப் பசேலென கண்ணைக் கவரும் சூழலும் அபூர்வாவுக்கு வந்த முதல் நாளே புத்துயிர்ப்பை அளித்தது.

பாவையவளின் உடலை வருடிச் சென்ற தென்றலுக்கு மாறாக அவளின் வாழ்விலோ புயல் வீசிக் கொண்டிருந்தது.

காற்றில் ஆடிக் கொண்டிருந்த விரித்து விட்ட கூந்தல், உயர் தர சேலை, ஒப்பனைகள் ஏதுமற்ற முகம், பளிச்சென்ற நிறம், சாதாரண உயரம், லேசாக பூசிய உடல்வாகு என இருந்த பெண்ணவளை அவளைக் கடந்து சென்றவர்கள் ஒரு நொடியேனும் திரும்பிப் பார்த்து விட்டே சென்றனர்.

பார்க்க வசதியான இடத்தைச் சேர்ந்தவள் போல் இருந்தவளிடம் வழிய வந்து உதவிக் கரம் நீட்டிய டாக்சி ட்ரைவர், “மேடம்.. எங்க போகணும் சொல்லுங்க. நான் கொண்டு போய் விடுறேன். இங்க எனக்கு எல்லாரையுமே தெரியும். அந்தப் பெட்டிய குடுங்க முதல்ல.” என்றவன் அபூர்வாவிடம் இருந்து பெட்டியைப் பறிக்காத குறையாக வாங்கி வண்டியில் ஏத்தினான்.

வசதியான இடத்துப் பெண்ணிடம் சற்று அதிகம் காசு பார்க்கலாம் என எண்ணிய வண்டி ஓட்டுனர் அறியவில்லை பெண்ணவள் அனைத்தும் இருந்தும் அநாதையாக்கப்பட்டவள் என்று.

முதல் பார்வையிலேயே ஒட்டுனரின் நோக்கத்தை உணர்ந்து கொண்ட அபூர்வாவின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

அதனை அழகாக முகத்தில் காட்டாது மறைத்தவள், “பண்ணையார் வீட்டுக்குப் போகணும்.” என்று விட்டு வண்டியில் ஏறிக் கொண்டாள்.

“ஓ… பண்ணையார் வீட்டுக்கு வந்து இருக்கீங்களா? உங்கள பார்த்தா சீமையில இருந்து வந்து இருக்கீங்க போல. பண்ணையார் வீட்டுக்குப் போகணும்னு சொல்றீங்க. அப்போ பெரிய இடம் தான் போல. ஆமா என்ன விஷயமா நம்ம ஊருக்கு வந்து இருக்கீங்க? உங்களுக்கு இந்த ஊருல எங்கப் போகணும்னாலும் என் கிட்ட சொல்லுங்க. நான் கூட்டிட்டுப் போறேன்.” எனத் தன் பாட்டுக்கு கேல்வி கேட்டுக் கொண்டும் பேசிக் கொண்டும் வந்தான் ஓட்டுனர்.

அவன் பேசிய எதுவுமே அபூர்வாவின் செவிகளை அடையவில்லை.

அவள் கவனம் முழுவதும் ஜன்னல் வழியே தெரிந்த இயற்கை காட்சிகளில் பதிந்து இருந்தது.

பதில் வராததால் திரும்பிப் பார்த்த ஓட்டுனரோ அபூர்வா வெளியே வெறித்துக் கொண்டிருப்பதைக் கண்டு தோளைக் குலுக்கிக்கொண்டு முன்னால் திரும்பி பாதையில் கவனம் செலுத்தினான்.

சற்று நேரத்தில் பண்ணையார் வீடும் வந்து விட, தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கிய அபூர்வாவை வாசலிலே வந்து நின்று வரவேற்றார் பண்ணையார் பெரியசாமி.

“வாம்மா கண்ணு. பயணம் எல்லாம் வசதியா இருந்துச்சா?” எனக் கேட்ட பெரியசாமியிடம் ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் அபூர்வா.

அப்போது தான் அங்கு நின்றிருந்த ஓட்டுனரைக் கண்டு கொண்ட பெரியசாமி, “அட நம்ம குமாரு. எப்படி இருக்க? பொண்ணுக்கு உடம்பு சரி இல்லன்னு சொல்லிட்டு இருந்தியே. இப்போ எப்படி இருக்கா? ஏதாவது  காசு தேவைன்னா சொல்லு.”  என்கவும், “ஐயோ இல்லைங்க ஐயா. இப்ப பொண்ணு நல்லா இருக்கா. நீங்க ஹாஸ்பிட்டல் செலவுக்கு தந்த காசே இன்னும் மிச்சம் இருக்கு. ஆமா மேடம் யாரு? சீமைல இருந்து வந்து இருக்காங்க போல.” என்றான் குமரன்.

“நம்ம பாப்பாவோட ஸ்னேகிதி. கொஞ்ச நாளைக்கு நம்ம ஊருல தங்கிட்டு அப்படியே ஊர சுத்தி பார்த்துட்டு போக வந்திருக்கா.” என்றார் பெரியசாமி.

“ஓ அப்படிங்களா ஐயா? அப்போ எங்கயாவது போகணும்னா  என் கிட்ட சொல்லுங்க. நான் கூட்டிப் போறேன். சரிங்க ஐயா அப்போ நான் வரேன். சவாரி இருக்கு.” என்று விட்டு கிளம்பினான்.

“நான் ஒருத்தன். வீட்டுக்கு வந்த புள்ளைய வாசல்லயே நிற்க வெச்சிருக்கேன். உள்ள வாம்மா. கோமதி… புள்ளைக்கு குடிக்க மோர் கொண்டு வா.” எனப் பெரியசாமி உள்ளே குரல் கொடுக்கவும் சற்று நேரத்தில் கையில் மோர் கிண்ணத்துடன் வந்தார் அவரது தர்மபத்தினி கோமதி.

“வாம்மா அபூர்வா. இப்போ தான் கமலி கால் பண்ணி நீ வந்துட்டியான்னு விசாரிச்சா. ரொம்ப நாளா உன்ன இங்க வந்து தங்கிட்டுப் போக சொல்லி கூப்பிட்டுட்டு இருக்கோம். இப்போ தான் உனக்கு நேரம் வந்திருக்கு.” என உரிமையாய் கடிந்து கொண்டார் அவர்.

“அது வந்து ம்மா…” என அபூர்வா என்ன கூறுவது எனத் தெரியாமல் தடுமாற, “அடி கூறு கெட்டவளே. புள்ளையே இப்போ தான் முதல் தடவை நம்ம வீட்டுக்கு வந்திருக்கா. நீ என்னடான்னா வந்ததுமே தொன தொனன்னு பேசிட்டு இருக்க. ரொம்ப நேரம் பிரயாணம் செஞ்சது புள்ளைக்கு களைப்பா இருக்கும். முதல்ல அவ குளிச்சிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும். நீ கூட்டிட்டுப் போய் ரூம காட்டு.” என கோமதியுடன் அபூர்வாவை அனுப்பி வைத்தார் பெரியசாமி.

கோமதி காட்டிய அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்ட அபூர்வா அதிலேயே சாய்ந்து இமைகளை மூடிக் கொண்டாள்.

அடுத்து என்ன என நினைக்கும் போதே அவளிடமிருந்து பெரு மூச்சு தான் வெளி வந்தது.

சில நாட்கள் முன்பு வரை இந்த உலகத்தில் அதிக சந்தோஷத்தைக் கொண்டவள் யார் எனக் கேட்டால் கண்களை மூடிக் கொண்டு தன்னைக் கை காட்டுவாள்.

ஆனால் இன்றோ சொந்தங்களாலேயே வஞ்சிக்கப்பட்டு யாருமற்ற அநாதை போல் இங்கு நிற்கிறாள்.

அனைத்தையும் இழந்து நடுத் தெருவில் நின்றவளுக்கு உறுதுணையாக் இருந்தது கமலியின் நட்பு மாத்திரம் தான்.

அவள் தான் அபூர்வாவின் மனமாற்றத்துக்காக அவளை வலுக்கட்டாயமாக தன் ஊருக்கு அனுப்பி வைத்தாள்.

ஆனால் கமலி அறியவில்லை நிஜமாகவே அபூர்வாவின் வாழ்வில் புதிய அத்தியாயம் இங்கு தான் தொடங்கப் போகிறது என்று.

அதே நேரம் அபூர்வா மீண்டும் இங்கிருந்து திரும்பிச் செல்லும் போது இப்போது இருப்பதை விட மொத்தமாக உடைந்து போய் நடைபிணமாகவும் மாறிடுவாள் என்றும் எதிர்ப்பார்த்து இருக்க மாட்டாள்.

பூங்காவனம்… பெயரைப் போலவே பூக்கள் பூத்துக் குலுங்க, பச்சைப் பசேலென, இயற்கை அழகோடு, பாரம்பரியம் மாறாத அழகிய கிராமம்.

அபூர்வா இங்கு வந்து இரண்டு நாட்கள் கடந்து இருந்தது.

இந்த இரண்டு நாட்களிலும் அவள் பெரிதாக அறையை விட்டு வெளியே வரவில்லை.

அவளின் மனநிலையைப் பற்றி ஏற்கனவே கமலி கூறி இருந்ததால் பெரியசாமியும் கோமதியும் கூட அபூர்வாவைத் தொந்தரவு செய்யாது அவளை அவள் பாட்டில் விட்டனர்.

இன்று அபூர்வாவே வந்து ஊரைச் சுற்றிப் பார்க்கச் செல்லக் கேட்கவும் உடனே குமாரை வரவழைத்த பண்ணையார் அபூர்வாவை அவனுடன் அனுப்பி வைத்தார்.

வண்டியில் ஏறியதில் இருந்தே குமார் வாய்க்கு சற்றும் ஓய்வின்றி தன் ஊர்ப் பெருமையைப் பேச, அவை அபூர்வாவின் செவிகளை அடைந்ததா என்பது அவளுக்கே வெளிச்சம்.

பேச்சுவாக்கில் குமார், “எங்க ஊர்ல ஒரு பிரசித்தமான கோயில் இருக்கு. அதைப் பார்க்கவே நிறைய வெளிநாட்டுக்காரங்க எல்லாம் வருவாங்க. அந்தக் கோயில்ல நிறைய மர்மங்கள் இருக்குறதா சொல்றாங்க. அங்க குடி இருக்குற அம்மன் கூட ரொம்ப சக்தி வாய்ந்தவங்களாம். அது மட்டும் இல்லாம அங்க ஒரு சாபம் பெற்ற ஆத்மா  விமோச்சனம் தேடி அலைஞ்சிட்டு இருக்குறதாவும் சொல்றாங்க. ஆனா இன்னைக்கு வரைக்கும் யாருமே அந்த ஆத்மாவைப் பார்த்ததும் இல்ல. அதே நேரம் அதை உணர்ந்ததும் இல்ல. அதனால அது கட்டுக் கதையா இருக்கலாம்னும் சொல்றாங்க. எல்லாம் அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். அந்தக் கோயிலோட பெயர் பிடாரி அம்மன் கோயில். அங்க குடி இருக்குற அம்மன் பெயர் பிடாரி அம்மன். பல நூற்றாண்டுகளா இந்த ஊருக்கு காவல் தெய்வமா இருக்காங்க. கஷ்டம்னு போறவங்களோட துன்பத்தை எல்லாம் தீர்த்து வெச்சி அருள் புரிவாங்களாம்.” என்றான்.

இவ்வளவு நேரமும் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அபூர்வா பிடாரி அம்மன் கோயிலின் பெயரைக் கேட்டதும் சட்டென அவன் ஓட்டுனரின் பக்கம் திரும்பி, “இப்போ அந்தக் கோயிலுக்கு போகலாமா?” எனக் கேட்டாள்  ஆர்வமாக.

“தாராளமா போகலாம் மேடம். எங்க ஊர் பிடாரி அம்மன் லேசிப்பட்டவங்க இல்ல. உங்களுக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் அதைத் தீர்த்து வெச்சி உங்க மனச குளிர்விப்பாங்க.” எனக் குமார் கூறவும் அபூர்வாவின் முகத்தில் முதல் முறை லேசாகப் புன்னகை எட்டிப் பார்த்தது.

அபூர்வா ஒரு சாதாரண கோயிலை எதிப்பார்த்து வந்திருக்க, ஆனால் பிடாரி அம்மன் கோயிலோ அவளது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது.

ஒரு பெரிய மலையைக் குடைந்து அழகிய வேலைப்பாடுகளுடன் அவ்வளவு நுணுக்கமாகக் கட்டப்பட்டு இருந்தது.

அக் கோயிலில் காலடி எடுத்து வைத்ததில் இருந்தே அபூர்வாவுக்கு அவளது மனதில் இருந்த பாரங்கள் நீங்கிய உணர்வு தான்.

நுழைவாயிலைத் தாண்டி அபூர்வா சன்னிதானத்தில் காலடி எடுத்து வைத்த மறு நொடியே, கோவில் மணி தன்னால் வேகமாக, பெரும் சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது.

போதாக்குறைக்கு காற்று வேறு பலமாக வீச, அபூர்வா அவசரமாக கண்களை மூடிக்கொண்டு காதுகளைப் பொத்தினாள்.

சில நொடிகள் கழித்து அவ் இடமே நிசப்தம் அடைந்தது.

மெதுவாக இமைகளைப் பிரித்தவளின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அவள் கண் முன்னே நிர்மலமான முகத்துடன் விழி மூடி, கரங்கள் குவித்து பிடாரி அம்மனை வணங்கிக் கொண்டிருந்தான் ஆனழகன் அவன்.

அபூர்வா இமைகளைக் கூட அசைக்காது ஒரு வித மோன நிலையில் விழியகற்றாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது இமைகள் மூட மறந்தன. இதயம் துடிக்க மறந்தது.

இந்த நொடி வரை பார்த்ததும் காதல் வரும் என்று கூறினால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்திருப்பாள்.

வெறும் தோற்றத்தை வைத்து ஒரு ஆணிடம் மயங்கும் அளவுக்கு பருவ வயதுப் பெண்ணும் அல்ல அவள்.

அதனை எல்லாம் தாண்டி பல வருடங்கள் கடந்து விட்டிருந்தது.

இன்னும் சில மாதங்களில் அபூர்வாவிற்கு இருபத்தி ஏழு வயதாகி விடும்.

இந்நாள் வரை யார் மீதும் அவளுக்கு ஈர்ப்போ, காதலோ வந்ததில்லை.

ஆனால் இந்த நொடி அவளுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் அவளுக்கே புதிது.

பார்த்த நொடியே அபூர்வாவின் இதயத்தைக் கொள்ளை கொண்டு விட்டான்.

நீண்ட, நெடிய வேண்டுதலை முடித்துக் கொண்டு இமைகளைப் பிரித்தவனும் தன்னையே விழியகற்றாது நோக்கிக் கொண்டிருந்த அபூர்வாவின் விழிகளை ஆழ்ந்து நோக்கினான்.

அவனின் கண்களுக்கு காந்த சக்தி உள்ளதோ என்னவோ? அபூர்வாவால் இன்னுமே தன் பார்வையை அகற்ற முடியவில்லை.

தன்னையும் மீறி அவள் பாதங்கள் அவ் ஆடவனை நோக்கி நகர்ந்தன.

“வணக்கம்…” என வசீகரிக்கும் புன்னகையுடன் அவ் ஆடவன் கரம் குவிக்கவும் தான் தன்னிலை அடைந்த அபூர்வாவுக்கு தான் செய்ய இருந்த காரியத்தை எண்ணி திடுக்கிட்டாள்.

அவசரமாக இரண்டு அடி எடுத்து வைத்து பின்னால் நகர்ந்தவள் அப்போது தான் அவ் ஆடவனின் தோற்றத்தைக் கவனித்தாள்.

இந்தக் காலத்து ஆண்கள் அணியும் உடை அல்லாது சற்று வித்தியாசமான உடையில் இருந்தான் அவன்.

தோற்றம் கூட வித்தியாசம் தான். இருந்தும் அது அவனைப் பேரழகனாகக் காட்டியது.

அவ் ஆடவனின் தோற்றத்தை மேலிருந்து கீழாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்த அபூர்வா அப்போது தான் அவன் இன்னுமே தன்னைப் பார்த்து கரம் குவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து அவசரமாக பதில் வணக்கம் வைத்தாள்.

“அடியேனின் நாமம் ராகவ். தம் நாமம் என்னவோ?” என ராகவ் தூய தமிழில் கேட்கவும், “ஆஹ்…” என முழித்தாள் அபூர்வா.

அபூர்வா முழிக்கவும் தான் ராகவ்விற்கு தான் பேசிய விதம் உரைத்தது.

“மன்னிக்க வேண்டும். மன்னிக்க வேண்டும்.” என அவசரமாக மன்னிப்பு கேட்ட ராகவ் சில நொடிகள் கண்களை மூடிக் கொண்டு என்னவோ செய்தான்.

அபூர்வா அவனையே குழப்பமாக நோக்கிக் கொண்டிருக்க, கண்களைத் திறந்த ராகவ் குரலை செருமிக்கொண்டு, “என் பெயர் ராகவ். உங்க பெயரைக் கேட்டேன்.” என்றான் புன்னகையுடன்.

அதன் பின் தான் குழப்பம் நீங்கிய அபூர்வா, “ஓ… ப்ரேங்க் பண்ணீங்களா?” எனக் கேட்டுச் சிரித்தாள்.

ஏதோ பல வருடங்கள் பழகியது போல இயல்பாகவே ராகவ்விடம் பேச்சுக் கொடுத்தாள் அபூர்வா.

ராகவ் உடன் பேசும் போது அவனிடம் ஏதோ ஒரு இனம் புரிய முடியாத ஆழ்ந்த பிணைப்பை உணர்ந்தாள் அவள்.

ஆழ் மனதில் இருந்த கவலைகள் எதுவும் இந்த நொடி அவளின் நினைவில் இல்லை.

“அ…ஆ… ஆமா… ஆமா… ப்…ப்…ப்ரேங்க் தான்.” என்றான் ராகவ் சமாளிப்பாக.

“ம்ம்ம்… என் பெயர் அபூர்வா. நீங்க இந்த ஊரா?” எனக் கேட்டவாறு கோயிலை சுற்றிப் பார்த்தாள்.

“இ..இல்ல. நானும் இந்த ஊருக்கு புதுசு தான்.” என ராகவ் கூறவும் சட்டென் அவனைத் திரும்பி சந்தேகமாகப் பார்த்த அபூர்வா, “நான் இந்த ஊருக்கு புதுசுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள்.

ஒரே ஒரு நொடி மாட்டிக் கொண்டது போல் தடுமாறிய ராகவ் அவசரமாக முக பாவனையை மாற்றிக் கொண்டு, “அ…அது வந்து… ஆங்… நீங்க இந்த ஊரா இருந்து இருந்தா நான் இந்த ஊரா இல்லையான்னு தெரிஞ்சு இருப்பீங்களே. அ..அதை வெச்சி தான் சொன்னேன்.” என்றான் சமாளிப்பாக.

“ஓ…” எனத் தலையசைத்த அபூர்வாவின் கவனம் வேறு பக்கம் திரும்பவும் தான் ராகவ்வால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

கோயிலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த அபூர்வாவின் கவனம் இப்போது பிடாரி அம்மனின் மீது பதிய, அவள் கண்கள் ஆச்சரியத்தில் விழுந்தன.

பார்த்ததுமே மனமெல்லாம் பரவசம் அடையச் செய்யும் ஒரு தோற்றம்.

டாக்சி ஓட்டுனர் கூறியது போலவே எல்லாத் துன்பங்களையும் மறக்கடிக்கச் செய்யும் முகம்.

அபூர்வா பிடாரி அம்மனின் அழகை பரவசத்துடனும் அதிசயத்துடனும் பார்த்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் வந்து நின்ற ராகவ்வும் அம்மனின் மீது பார்வையைப் பதித்தபடி, “இது ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன்.  பிடாரம் அப்படின்னா ஆட்டி வைத்தல்னு பொருள். துஷ்டர்கள ஆட்டுவிச்சு ஓடச் செய்பவள்னு தான் இந்த அம்மனுக்கு இந்தப் பெயர் வந்தது. தன்னை நாடி வரும் பக்தர்களோட துன்பத்த தெரிஞ்சி அதைப் போக்குபவள் அப்படின்னு பொருள் வரும். இது போல பிடாரி அம்மனைப் பத்தி நிறைய வரலாறுகள் இருக்கு. பிடாரி அம்மனை சாதாரண மக்கள் எல்லாராலயும் பார்க்க முடியாது. நிஜமான பக்தியோட வேண்டுறவங்க கண்ணுக்கு தான் அந்தத் தாய் காட்சி தருவாங்க.” என பிடாரி அம்மனைப் பற்றி அபூர்வாவிடம் விளக்கினான்.

ராகவ் பிடாரி அம்மனைப் பற்றி பேசும் போது அவன் குரலில் அவ்வளவு பக்தி, முகத்தில் அவ்வளவு பரவசம்.

அபூர்வா அதனை ஆச்சரியமாக நோக்கியவாறு, “உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” எனக் கேட்டாள் ஆவலாக.

அபூர்வாவின் கேள்வியில் ராகவ்வின் முகத்தில் ஒரு மர்மமான புன்னகை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்