Loading

கை சேராது என தெரிந்தும்
சேர்ந்தால் எப்படி இருக்கும்
என ஏங்க செய்யும்?
இந்த காதல் முறிவு!

தூது 1 :

“பாப்கார்ன்… பாப்கார்ன்..”

“கடல கடல வேர்கடல மேடம்… சார்! சூடான வேர்கடல இருக்கு சார்…” என கூவும் வியாபாரிகளின் குரலும்,

“மா! சரியான நேரத்துக்கு வந்துட்டேன் மா.. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கூட தான் இருக்காங்க மா”

“மச்சி! ட்ரைன் கிளம்புற டைம் ஆகிடிச்சிடா மிஸ் பண்ணாம சரியா வந்து ஏறிடுவியா?” என்ற பயணிகளின் கலவையான குரல்களும் தொடர்ந்து கொண்டிருக்க அந்த ரயில்நிலையம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது.

அங்கு கிளம்புவதற்கு தயாராய் நின்றிருந்த ரயிலின் ஒரு பெட்டியில், “டேய் ஜீவா! என்னடா இது?”
என ஒலித்தது ஜீவாவின் நண்பன் அஜயின் குரல்.

அவன் எதை கேட்கிறான் என்பதைபோல் நிமிர்ந்த ஜீவா, நண்பனின் பார்வை தன் கையில் இருப்பதில் பதிந்திருப்பதை கண்டான்.

ஒரு பெருமூச்சுடன், “இது எனக்கு அவ கொடுத்தது டா! முதல்முதல்ல எனக்காகனு அவ கொடுத்த மோதிரம்” என்றவனின் குரலில் வெளிபட்டதெல்லாம் காதலையையும் தாண்டிய வலி மட்டுமே.

“அது தெரியும் மச்சான்! ஆனா உங்களுக்கு பிரேக்கப் ஆனப்போ அவ கொடுத்த எல்லாத்தையும் திரும்ப கொடுத்திட்டேனு சொன்னியே?” என கேட்டபடி அவன் அருகே அமர்ந்தான்.

அஜயின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தவனை பார்த்தபடியே அங்கு வந்தான் அவர்களின் மற்றொரு நண்பன் மதனன்.

“என்னடா! அவன் கேக்கிற கேள்விக்கு அமைதியா இருக்க? சொல்ல வேண்டியது தான, அன்னிக்கு அவ முன்னாடி அவள்-லாம் எனக்கு ஒன்னுமே இல்லனு காட்டுறதுக்காக தான் அவ வாங்கி கொடுத்ததெல்லாம் தூக்கி வீசுனேன். அடுத்து அவ போனப்றம் போய் எல்லாத்தையும் பொறுக்கிட்டு வந்துட்டேனு”

நக்கலாய் சொல்லியவனை ஜீவா உணர்வில்லாமல் பார்க்க அஜய் தான்,

“டேய் என்னடா இப்படி பேசுற?” என கடிந்துக் கொண்டான்.

“வேற எப்படி டா பேச சொல்ற? இவன்தான் முதல்ல பிரியுறதுனு முடிவெடுத்தான். அப்றம் என்ன இதுக்கு இப்போ இப்படி சீன் போட்டுட்டு இருக்கான்”

“டேய் மச்சி! உனக்கு காதல் பிடிக்காதுனு தெரியும், ஆனா அதுக்காக அவன் அவனோட காதலுக்காக ஃபீல் கூட பண்ணகூடாதுனு நீ சொல்றதுலாம் ரொம்ப அதிகம் டா” என ஜீவாவுக்காய் பேசினான் அஜய்.

அவனை ஒருமாதிரி பார்த்து, “எது இவன் பண்ணது காதலா? காலேஜ்ல இருக்க போற மூணு வருஷத்தை ஓட்டுறதுக்கு முதல் வருஷத்துலயே ஒருத்தரை பிடிக்கவேண்டியது அடுத்த மூணு வருஷம் நல்லா பேசி பழகிட்டு காலேஜ் முடிய போற நேரத்துல கழட்டிவிட்ற வேண்டியது”

மதனன் குறையா கோபத்துடன் பொறிய, அவன் பேச்சை காதிலே வாங்காமல் தன் கையிலிருந்த மோதிரத்தில் மட்டுமே பார்வையை பதித்திருந்தான் ஜீவா.

அதில் கடுப்பான மதனன் மீண்டும் ஏதோ சொல்ல வர, அவர்கள் அமர்ந்திருந்த அந்த ரயில் பெட்டியில் ஆட்கள் ஏற தொடங்கினர்.

“மச்சி! ஆட்கள் வர ஆரம்பிச்சிட்டாங்கடா.. அப்றம் பேசிக்கலாம், நீ வந்து அமைதியா சீட்ல உட்காரு. மாஸ்டர் வேற இன்னும் வரலை என்ன ஏதுனு விசாரி, ட்ரைன் கிளம்பபோகுதுனு நினைக்கிறேன் ” என மதனனை திசைதிருப்பினான் அஜய்.

அஜய், ஜீவா, மதனன் மூவரும் நண்பர்கள். இளங்கலை, முதுகலை என கல்லூரி காலங்களில் ஒன்றாகவே பயணித்தவர்கள். படிப்பை முடித்த மூவரில் மதனன் தமிழ்நாட்டில் தான் வேலை பார்ப்பேன் என அடம்செய்து அங்கு செல்கிறான் என்றால் மற்ற இருவரும் அவனுக்காய் அவனுடன் செல்ல தயாராகி வந்துள்ளனர்.

மதனனுக்கு தமிழ்நாடு செல்வதற்கு மிக முக்கிய காரணம் இருந்தபோதிலும் மற்ற இருவரும் செல்வதற்கு காரணம் அவன் மட்டும் தான். இதோ தங்களின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க மூவரும் சென்னை செல்லும் ரயிலில் அமர்ந்திருந்தனர்.

இப்படி ஒருவருக்காய் மற்றவர் பார்க்கும் இந்த மூவரின் குழுவில் ஒவ்வொருவரும் ஒரு ரகம். மென்மையும், நேசமும் ஜீவாவின் அடையாளம் என்றால் முரட்டுதனமும், சட்சட் என்ற கோபமும் மதனனின் அடையாளம். இவர்கள் இருவரின் இந்த இருதுருவ குணங்களை ஈடு செய்வது போல் தேவையான இடங்களில் கோபமும், பெரும்பாலும் பொறுமையும், சகிப்புதன்மையும் என கலந்தது அஜயின் குணம்.

அஜய் ‘மாஸ்டர்’ என்பவருக்கு அழைப்பு விடுக்குமாறு மதனனிடம் சொல்ல, தனது கைப்பேசியில் அவருக்கு அழைத்தவன் அவர் அதை ஏற்காததில்,
“ப்ச்! போன் எடுக்க மாட்றாருடா. ட்ரைன் கிளம்புற அனொன்ஸ்மென்ட்டு வேற வருது பாரு” என படபடத்தான்.

அதற்குள் ஜீவாவின் எண்ணிற்கு அவர்கள் மாஸ்டரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“டேய்! மாஸ்டர் எனக்கு கூப்புட்றாரு டா” என்ற ஜீவாவின் குரலில் மதனனின் படபடப்பு நீங்கி முகத்தில் யோசனை படர்ந்தது.

அதை கவனிக்காமல் அழைப்பை ஏற்ற ஜீவா, “ஹலோ! மாஸ்டர் எங்க இருக்கீங்க? ட்ரைன் கிளம்பபோகுது அனொன்ஸ்மென்ட் வந்திடுச்சு” என்றான்

மறுபக்கம் என்ன சொல்லபட்டதோ “ஓ! ஓகே மாஸ்டர்.. சரி மாஸ்டர்.. நாங்க பார்த்துக்குறோம்” என்ற பதில் மட்டும் இப்புறம் இவன் சொல்லிகொண்டிருந்தான்.

முழுதாய் ஒரு நிமிடம் தொடர்ந்த அழைப்பை முடித்து அலைப்பேசியை சட்டை பையில் போட்ட ஜீவா, “மாஸ்டருக்கு காலேஜ் மேனேஜ்மென்ட்ல இருந்து முக்கியமான அழைப்பு வந்திடுச்சாம் மச்சி! அதனால் அவரால் இன்னிக்கு வரமுடியாதுனு சொன்னாரு”
என அவன் முடிப்பதற்கு முன்பே,

“நினைச்சேன் இந்த மனஷன் இப்படிதான் செய்வாருனு. அவருக்கு நம்ப சென்னை போறதுல விருப்பமே இல்ல” எரிச்சல் அப்பட்டமாய் வெளிபட்டது மதனனின் பேச்சில்.

“ப்ச்! மச்சி மாஸ்டர் அப்படிலாம் இல்லடா. நம்ப மேனேஜ்மென்ட் பத்தி உனக்கே தெரியும் தான, அவர் ரிலிவ் ஆகுற கடைசி நிமிஷம் வரைக்கும் ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டீஸ் சொல்லிட்டிருந்தானுங்க. அதுமட்டுமில்லாம எங்களையே” என்ற அஜயின் சமாதானத்தில் குறுகிட்டு,

“டேய்! லூசாடா நீ… நேத்தே எல்லா ஃபார்மாலிட்டியும் முடிஞ்சிடுச்சினு அவர்தான சொன்னாரு. திரும்ப இப்ப எங்க இருந்து என்ன ஃபார்மாலிட்டி திடிருனு முளைச்சிடிச்சாம் ” கடுகடுத்தான் மதனன்.

“மதனா! இப்போ எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்? அவர் இந்த ட்ரைன்ல தான் வரலனு சொன்னார் அடுத்த ட்ரைன்லயோ இல்லை நாளைக்கோ எப்போ டிக்கெட் கிடைக்குதோ வரேனு தான் சொல்லி இருக்காரு டா” என ஜீவா தான் அவனை சமாளித்தான்.

“ஓ! அவரே சொன்னார்?அப்போ சரிதான்” என மதனன் ஆசுவாசம் கொள்வதற்கும் ரயில் கிளம்புவதற்கும் சரியாய் இருந்தது.

“அப்றம் என்னடா? அதான் உனக்கே தெரியும்ல நம்ப மாஸ்டர் ஒன்னு சொன்னா அதை கண்டிப்பா செய்வாருனு. வா! வந்து உட்காரு” என்றவனின் பேச்சிற்கு தலையசைத்தபடி அவன் அருகே அமர்ந்தான் மதனன்.

மும்பையிலிருந்து சென்னை செல்லும் அந்த சென்னை எக்ஸ்ப்ரெஸ் “தடதட” என்று சத்தமிட்டபடி விரைந்தோட அவர்கள் இருந்த கம்பார்ட்மெண்டில் இவர்கள் மூவரை தவிர வேறு யாரும் இன்னும் ஏறி இருக்கவில்லை.

மூவரில் அஜய் ஒருபுறம் அலைப்பேசியில் தனது வீட்டினருக்கு அழைத்து ரயில் கிளம்பியதை சொல்லிக் கொண்டிருந்தான். மறுபுறம் மதனன் தனது அலைப்பேசியில் யாருக்கோ அழைப்பு விடுக்க அது ஏற்கபடாததில் கடுப்பும், சிரிப்பும் சரிசமமாய் உள்ளுக்குள் உருவெடுத்ததில் அவனையும் மீறி புன்னகைத்திருந்தான்.

இந்த இருவரின் செயல்களையும் கண்டுகொள்ளாத ஜீவாவோ தனது கைகளில் இருந்த மோதிரத்தை அரிய பொக்கிஷம் போல் விழி சிமிட்டாமல் பார்த்திருந்தான்.

அவன் விழிகள் அந்த மோதிரத்தில் படிந்திருந்த போதும் அவனின் நினைவுகளோ அதன் உரிமையாளரிடமே தஞ்சமடைந்திருந்தது.

வீட்டினருடன் பேசிமுடித்த அஜய் தன் நண்பனின் நிலையை கண்டு பெருமூச்சுடன் அவனின் அருகில் வந்தமர்ந்தான்.

“டேய் ஜீவா! என்னடா? நீதான ரொம்ப தெளிவா உங்க உறவை முடிச்சிகனும்ன்ற முடிவை எடுத்த. அப்றம் ஏன் இன்னும் இப்படியே இருக்க?” அவனின் தோள் தட்டி வினவினான்.

“ப்ச்! ஆமாடா நான்தான் பிரியனும்னு முடிவு பண்ணேன், ஆனாலும் அவ இல்லாத என் நாட்களை யோசிச்சாலே வலிக்குதே! மூணு வருஷம்டா முழுசா மூணு வருஷம் காலையில கண்ணை திறக்குறதுல இருந்து ராத்திரி கண்ணை மூடுற வரைக்கும் அவ நினைப்பு மட்டும் தான்டா மச்சான் எனக்குள்ள.

இனி அவ எனக்கு இல்லைனும் போது அவளோட நினைப்பை மட்டும் வச்சிட்டு நான் எப்படி டா இருப்பேன். என்னை கூட விடு மச்சி, அவ எப்படி மச்சி இருப்பா? இந்த உறவோட முறிவை அவளால ஏத்துக்கவே முடியலை மச்சி. அவ வாயாலே நம்ப பிரிஞ்சிடலாம்னு அவளை நான்தான் சொல்லவச்சேன், ஆனா அதை சொல்றதுக்குள்ள அவ பாதி செத்துட்டா டா “

வலியின் உறைவிடம் அவன் தான் என்பதைபோல் கதறிய ஜீவாவை தோளோடு அணைத்தபடி அஜய் சமாதானம் செய்ய, இவர்களின் பேச்சு சத்தத்தில் இப்புறம் திரும்பியிருந்த மதனனோ,

“ம்க்கும்! நல்லா இருந்த பொண்ணு வாழ்க்கையை காதல்னு சொல்லி மூணு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டு கடைசில கலட்டியும் விட்டுட்டான். இப்போ அழுது சீன் போட்டா ஆச்சா! உன்னை சொல்லி என்ன புரோஜனம் உன் பேச்சை கேட்டு இஷ்டம் இல்லைனாலும் அவளே பிரிஞ்சிடலாம்னு சொன்னா பாரு உன்னோட அந்த முட்டாள் காதலி அவளை சொல்லனும்”

“டேய் அவ பாவம்டா” ஜீவா தன் காதலிக்காய் பரிந்துவர,

“நானும் அததான் சொல்றேன் அந்த பொண்ணு பாவம்னு. உனக்கெல்லாம் காதல்னா அவ்வளவு சுலுவா போச்சாடா? நீ பாட்டுக்கு இந்த உறவை முறிச்சிக்கலாம்னு முடிவெடுத்து அதை அந்த புள்ள வாயாலையும் சொல்ல வச்சிட்டு இப்போ வந்து அழுது புலம்புற” என கண்டித்தான்.

“மச்சி! இவன் நிலமையும் நமக்கு தெரியும் தானேடா.. அவசரபட்டு காதலிச்சிட்டான் என்ன பண்ண சொல்ற? அதான் அந்த பொண்ணும் இவன் சொன்னமாதிரி பிரேக்கப்க்கு ஓகே சொல்லிட்டு போயிடிச்சுல விடு”

அஜய் நண்பனை மேலும் துயரத்தில் ஆழ்த்த வேண்டாம் என அப்பேச்சை முடிக்க பார்க்க, அவனின் அந்த பேச்சே மதனனை உசுப்பிவிட்டது.

“அதான்.. அதான்… அந்த புள்ளை அசால்டா விட்டுபோயிடுச்சி அதான் இங்க பிரச்சனையே. நான்லாம் அந்த இடத்தில இருந்தா நல்லா வச்சி செஞ்சிருப்பேன்”

இம்முறை ஜீவாவே, “சும்மா இரு மதனா! நானே ஏற்கனவே குற்றவுணர்வுல இருக்கேன். ஆக்சுவலி அவ தைரியமா பேசகூடியவ தான்டா, ஆனா இங்க பாரு இந்த விஷயத்துல பையன் நானே இப்படி தவிக்குறப்போ அவளுக்கும் எங்களோட இந்த உறவோட முறிவு கஷ்டமா இருக்கும்ல அதான் அவ அமைதியா போய்ட்டா . அவ இந்த காதல், ப்ரேக்கப் போல விஷயத்துலலாம் அந்த காலத்து பொண்ணுங்க மாதிரி ரொம்ப அமைதி” என்றான்.

அதில் பொங்கி எழுந்த மதனன், “ப்ரேக்கப்ல என்னடா அந்த காலத்து பொண்ணு இந்த காலத்து பொண்ணு . சும்மாவே பொண்ணுங்களை கணிக்க முடியாது இதுல காரணத்தை வச்சிலாம் இவர் கணிக்கிறாரு பாரேன்” என்றான் நக்கலாய்.

“மதனா! அவன் எதோ அந்த பொண்ணு நியாபகத்துல சொல்றான். அதுவுமில்லாம பொதுவாவே அந்த காலத்துல பிரேக்கப்னா பொண்ணுங்க வீட்ல சொந்தம் இல்லனா சாதி தான் காரணமாக இருக்கும். அதுக்கு பொண்ணுங்க பக்கம் அழுகை தான பதிலா வரும் அதை வச்சி பேசுறான்டா” என அஜய் நண்பனுக்கு சார்ந்து வந்தான்.

“ம்ஹூம்! நீங்க பார்த்த, கேட்ட பொண்ணுங்க அப்படினு வேணா சொல்லுங்க. பிரியபோறோம்னு சொன்னவுடனே

‘அச்சோ! என் காதல் போச்சே’னு கண்ணை கசக்காம,

‘சரிதான் போடா’னு விட்டுதள்ளாம,

‘நீ இல்லனா நான் இல்லனு’ அழுது கெஞ்சாம,

ஒருதடவை கூட பார்க்காத ஒருத்தனை உசுருக்கு உசுரா காதலிச்சும் அவனை பிரியவேண்டிய நேரம்வந்தப்போ கொஞ்சம்கூட பதட்டபடாம கெத்தா ‘என் நினைப்பு இல்லனா நீ உயிரோடவே இருக்கவேணாம்’னு சொன்ன பொண்ணை நான் பார்த்திருக்கேன்”

என சிலாகித்து சொன்ன மதனனை அஜயும், ஜீவாவும் வாய் பிளந்து பார்த்தனர்.

பின் என்ன? காதலை பற்றி பேசும் அதுவும் ஒரு பெண்ணை சிலாகித்து பேசும் இந்த மதனன் அவர்களுக்கு புதிதாகிற்றே.

பெண்கள், காதல் போன்ற பேச்சை எடுத்தாலே காத தூரம் ஓடுபவன் ஆகிற்றே அவர்கள் அறிந்த மதனன். அப்படிபட்டவனை இப்படி பேச வைத்த பெண்ணின் கதையை கேட்டே ஆக வேண்டும் என அந்த நண்பர்களுக்கு தோன்றியதில் வியப்பில்லை தானே.

“மச்சி! யார் டா அது? உனக்கு தெரிஞ்சவங்களா? பேர் என்ன டா?” அஜய் ஆர்வமாய் கேட்க,

அவனின் ஆர்வமோ, அவனின் அருகே இருந்த ஜீவாவின் கேள்வி பார்வையோ எதுவும் மதனனுக்கு பெரியதாய் தோன்றவில்லை. அவனின் நினைவெல்லாம் அந்த பெண்ணிடம் தான்.

அதனால் நண்பனின் கேள்விக்கு அவனின் இதழ்கள் தானே அப்பெண்ணின் பெயரை ரசனையுடன் உச்சரித்தது,

“மோகனசுந்தரரூபாவதி” என்று.

அவன் அப்பெயரை உச்சரித்த நேரம் அவனின் அலைப்பேசி “காதோரம் அடி ஆலோலம்…
நான் தாங்க மாரோடு வா விடுது தேனே வா…”
என சத்தமிட்டு அவனை அழைத்தது.

இசையிலே அழைப்பது யாரென அறிந்தவனின் இதழ்களில் புன்னகை பூக்க பேசிக்கொண்டிருந்ததை விடுத்து அழைப்பை ஏற்றவன், “செல்லகுட்டி!” என்று கொஞ்சியவாறு சற்று தள்ளி சென்றான்.

“யாரடா இவன் கொஞ்சுறான்? நானும் அஞ்சு வருஷமா பார்க்குறேன் இப்படிதான் அடிகடி போன்ல யார்கூடவோ பேசுறான் ஆனா யாருனு நம்ப கேட்டா மட்டும் பதிலே வராது. ஏன்டா நம்ப இவனோட ப்ரெண்ட்ஸ் தானடா இப்போ இவ்வளவு தூரம் போறது கூட அவனை தனியா விட மனசில்லாம தான”

ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த ஜீவா, தங்களுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில் மதனனின் இந்த செயலில் கோபம் வர தன் இயல்பையும் மீறி படபடத்தான்.

இந்த ஐந்து வருடங்களில் தங்கள் மூவருள் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்னும் அவனின் எண்ணத்தில் அவ்வப்பொழுது துரும்பாய் உருத்துவது மதனனின் இந்த நடவடிக்கைகள் தான்.

அந்த ஆற்றாமையில் அஜயிடம் புலம்பியவன் பேசிமுடித்து வந்த மதனனை முறைத்து பார்த்தான்.
அவனை முறைப்பில் என்னவென்று அஜயை பார்க்க அவன் கைப்பேசியை ஜாடை காட்டினான்.

விஷயம் புரிந்த மதனன் இப்பொழுதும் எதுவும் சொல்லாமல் மௌனம் காக்க, “அதான! உன் வாயில இருந்து ஒரு வார்த்தை இதை பத்தி வந்துடாதே!”
என அஜயும் கோவம் கொண்டான்.

இருவரையும் பார்த்து பெருமூச்சு விட்ட மதனன், “அடேய்ங்களா! இப்போ என்ன நான் யார் கூட அடிகடி போன் பேசுறேனு உங்களுக்கு தெரியனும் அதான? வெயிட் பண்ணுங்கடா சீக்கிரமே அது யாருனு நான் நேர்லயே உங்களுக்கு காட்றேன். ஆனா ஒன்னு அவங்களை பார்த்துட்டு நீங்க என்னை மொத்தாம இருந்தா சரி”

-என முன்னதை சத்தமாகவும், பின்னதை தனக்குள்ளும் சொல்லி அவர்களை சமாதானம் செய்தான்.

– தூது தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0
  • Select

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment