Loading

மண்டபத்தில் இருந்து தன் காரை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பிய ரிஷப் லாவண்யா வளர்ந்த ஆசிரமத்தை அடைந்தான்.

 

ஆசிரமத்துக்கு முன் காரை நிறுத்தியவனின் மனம் உலைக்களமாய் கொதித்தது.

 

ரிஷப்பிற்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வரவே வெகுநேரம் எடுத்தது.

 

ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்டு காரை விட்டு இறங்கிய ரிஷப் உள்ளே செல்ல முயல, வாசலிலேயே அவனைத் தடுத்து நிறுத்தினார் வாட்ச்மேன்.

 

“சாரி சார். இந்த நேரத்துல விசிட்டர்ஸுக்கு அனுமதி இல்ல.” என வாட்ச்மேன் கூறவும் தான் தன் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான் ரிஷப்.

 

நன்றாக நேரம் சென்று விட்டதை உணர்ந்தவன் வாட்ச்மேனிடம், “நான் லாவண்யாவைப் பார்க்கணும். ரிஷப் வந்திருக்கேன்னு சொல்லுங்க.” என்றான் ரிஷப் இறுகிய முகத்துடன்.

 

உள்ளே சென்ற வாட்ச்மேன் சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து கேட்டைத் திறந்து விட, ஒரு சிறு தலையசைப்புடன் ஆசிரமத்தின் உள்ளே சென்றான் ரிஷப்.

 

வரவேற்பறையில் ஏற்கனவே ரிஷப்பின் வருகையை எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்த ஆசிரமத்தின் பொறுப்பாளரின் முகத்தில் வேதனையில் சாயல். 

 

ரிஷப் அதனைக் கண்டும் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, “தம்பி நான்… இன்னைக்கு…” என ஏதோ கூற வந்த ஆசிரமத்தின் பொறுப்பாளரிடம், “லாவண்யாவைப் பார்க்கணும் நான்.” எனக் கூறி அவரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ரிஷப்.

 

ரிஷப்பின் குரலில் இருந்த கடினத்தன்மையையும் மீறி அவன் குரல் கரகரத்து ஒலிக்க, எதுவும் கூறாது ஒரு அறைப் பக்கம் கை காட்டினார் ஆசிரமப் பொறுப்பாளர்.

 

அவர் காட்டிய திசையில் நடந்த ரிஷப் திடீரென என்ன நினைத்தானோ, அறையினுள் நுழையாது அறை வாயிலை மறைத்திருந்த திரைச்சீலையின் மறுபக்கம் நின்று, “லாவண்யா…” என்று அழைக்க, மறுமுனையில் எந்தப் பதில் இல்லை.

 

லாவண்யாவின் பெயரைக் கூறி அழைக்கும் போது இவ்வளவு நேரமும் ரிஷப்பின் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து, குரலில் இருந்த கடினம் மறைந்து அப் பெயருக்கே வலிக்காதவாறு மென்மையாக ஒலித்தது.

 

அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஆசிரமப் பொறுப்பாளருக்கே இவர்களின் காதலை எண்ணிக் கண்கள் கண்ணீரால் நிரம்பின. 

 

ஆனால் விதியின் விளையாட்டு வேறாக இருந்ததே.

 

லாவண்யாவிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவும் மீண்டும் ஒருமுறை, “லாவண்யா…” என ரிஷப் அழைக்க, இப்போதும் அதே அமைதி.

 

கரைபுரண்டு ஓடக் காத்திருக்கும் கண்ணீரை கடினப்பட்டு அடக்கிய ரிஷப், “இதுக்கு தானே நீ ஆசைப்பட்ட. இப்போ உனக்கு சந்தோஷமா?” எனக் கேட்டான்.

 

அவனின் கேள்விக்கு அமைதியே பதிலாகக் கிடைக்க, “நா…நான்… நான் இப்போ உன்னோட ரிஷப் இல்லைல. உன்னால இதைத் தாங்கிக்க முடியுதா?” என ரிஷப் கேட்கும் போதே அவனின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

 

“அது சரி. நான் இப்படி சூழ்நிலைக் கைதியா நிற்க காரணமே நீ தானே. உனக்கு சந்தோஷமா தான் இருக்கும்.‌ அதான் நீ நினைச்சது நடந்திடுச்சுல்ல.” என்றான் ரிஷப்.

 

முன் போலவே மௌனமே அவனுக்கு பதிலாகக் கிடைக்க, “இனிமே நான் உன்னோட ரிஷப் இல்ல. யாரோ ஒருத்தியோட புருஷன். அந்த அடையாளத்தோட இந்த உலகம் இனிமே என்னைப் பார்க்கும். அதை நினைக்கும் போதே நெஞ்செல்லாம் எரியுது டி. ஏன் டி எனக்கு இப்படி ஒரு தண்டனை?” எனக் கேட்ட ரிஷப்பின் கண்களில் கண்ணீர்.

 

அதற்கு மேல் தாங்க முடியாது ஆசிரமப் பொறுப்பாளர் அங்கிருந்து அகன்று விட, நீண்ட பெருமூச்சை இழுத்து விட்ட ரிஷப், “உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நான் வேற ஒருத்தி கழுத்துல தாலி வேணா கட்டி இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அது வெறும் மஞ்சள் கயிறு. ஆனா யார் என்ன சொன்னாலும், இந்த உலகமே எதிர்த்தாலும் எனக்கு உன் மேல இருக்குற உரிமைய நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அதே போல உனக்கு மட்டும் சொந்தமான என்னோட இதயத்துல வேற யாருக்குமே இடம் கிடையாது. அதை நீ நினைச்சா கூட மாத்த முடியாது.” என அழுத்தமாகக் கூறியவன் லாவண்யாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அங்கிருந்து கிளம்பினான்.

 

_______________________________________________

 

இங்கோ மண்டபத்திலிருந்து கிளம்பி எங்கோ சென்று விட்டு நேரம் சென்ற பின் தன் பிறந்த வீட்டை அடைந்தாள் ஷனாயா.

 

ஏதோ ஆழந்த சிந்தனையில் கேட்டைத் திறந்து கொண்ட உள்ளே சென்ற ஷனாயா வாசல் திண்ணையில் கணவன் சகிதம் கையில் குழந்தையுடன் அமர்ந்திருந்த அவளின் உயிர்த்தோழி வினிதாவையும் பூட்டியிருந்த வீட்டையும் குழப்பமாக ஏறிட்டாள்.

 

தோழியைக் கண்டு கொண்ட வினிதாவிற்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

 

வேகமாக ஷனாயாவை நெருங்கிய வினிதா, “சனா… வந்துட்டியா? சொல்லாம கொள்ளாம எங்க போய்ட்ட நீ? உன் மொபைல் கூட வர்க் ஆகல. எனக்கு ரொம்ப பயமா இருந்தது.” என்றாள்.

 

வினிதாவின் கேள்வியைப் புறக்கணித்த ஷனாயாவோ, “இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ணுற? எல்லாரும் எங்க? வீடு ஏன் பூட்டி இருக்கு?” எனக் கேட்கவும் வினிதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

அதிர்ச்சி மாறாமல் திரும்பி அவளின் கணவனை ஏறிட, கண்களை மூடித் திறந்து தான் பார்த்துக் கொள்வதாக சைகை காட்டிய வினிதாவின் கணவன் கணேஷ், “சிஸ்டர்… எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுல இருக்காங்க. நீங்க வந்ததும் அங்கிள் உங்கள கையோட கூட்டிட்டு அங்க வர சொன்னாங்க. உங்க திங்ஸ் எல்லாம் முன்னாடியே அங்க கூட்டிட்டு போய்ட்டாங்க.” என்கவும் கோபத்தில் ஏதோ கூற வாய் திறந்த ஷனாயாவின் கரத்தை அழுத்தமாகப் பற்றிய வினிதா, “சனா… ப்ளீஸ் கோவப்படாதே. கோவப்பட்டன்னு எதுவும் ஆகப் போறதில்ல. விரும்பியோ விரும்பாமலோ நீ இந்த புது வாழ்க்கைக்குள்ள கால் எடுத்து வெச்சிட்ட. அதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும். எதுவா இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ அங்க உனக்காக எல்லாரும் வெய்ட் பண்ணுறாங்க. உனக்காக இல்லன்னாலும் உன் பேரன்ட்ஸ் மரியாதைக்காகவாவது கிளம்பி வா.” என்றாள் ஷனாயா எதனைக் கூறினால் மறுக்க மாட்டாள் என்று நன்கு அறிந்தவளாய்.

 

வினிதா அவ்வாறு கூறவும் முகத்தில் விரக்திப் புன்னகையை ஓட விட்ட ஷனாயா, “இது ஒன்ன சொல்லியே எல்லாரும் என்னை ஆஃப் பண்ணுறீங்கல்ல. என்னை மொத்தமாவே என் வீட்டுல இருந்து விலக்க பார்க்குறாங்கல்ல அவங்க. முன்ன பின்ன பழக்கம் இல்லாத ஒருத்தன் கூட காலம் பூரா வாழணும்ல நான்.” என்கவும் வினிதாவிடம் பதில் இல்லை.

 

ஷனாயாவின் மனநிலை வினிதாவிற்கு தெளிவாகப் புரிந்தது. இருந்தும் அவளால் எதுவும் செய்ய முடியாத இடத்தில் இருந்தாள் வினிதா. ஷனாயாவை அவ்வாறே விட்டால் அவளின் வாழ்வு நிச்சயம் கேள்விக்குறியாகும் என்பதை அறிந்திருந்த வினிதாவிற்கு ஷனாயாவின் இவ் வாழ்வாவது சிறக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

 

பின்பு மூவருமே கணேஷின் காரில் ரிஷப்பின் ஃப்ளேட்டை அடைந்தனர்.

 

இருவரின் திருமணத்துக்கு முன்பே ரிஷப் தன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக ஒரு குடியிருப்பில் தான் தங்கி இருந்தான்.

 

திருமணத்தின் பின்னும் அவன் அங்கு தான் இருப்பதாக தன் பெற்றோரிடம் தெளிவாகக் கூறி விட, அவன் இந்தளவுக்கு சம்மதித்ததே பெரிய விடயம் என்பதால் மோகனும் மேகலாவும் அமைதியாக இருந்தனர்.

 

ஷனாயா வினிதாவுடன் ரிஷப்பின் வீட்டினுள் நுழையும் போதே சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷப் தான் பார்வையில் பட்டாள்.

 

அரவம் கேட்டு தலையைத் திருப்பிப் பார்த்த ரிஷப் ஷனாயாவைக் கண்டு விழிகளாலேயே சுட்டெரிக்க, பதிலுக்கு கனல் பார்வை பார்த்தாள் ஷனாயா.

 

இருவரின் விழிப் போரினைத் தடை செய்தது ஷனாயாவின் தாய் மகேஷ்வரியின் வருகை.

 

“சனா… எங்க டி போய்ட்ட? எவ்வளவு நேரம் ஆச்சு நீ போய். சம்பந்திங்க ரொம்ப நேரமா உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. உன் அப்பா வேற உன்ன காணோம்னு சிடுசிடுன்னு இருந்தார். சீக்கிரம் வந்து விளக்கேத்து.” எனப் பரபரத்தார் மகேஷ்வரி.

 

“விடுங்க அண்ணி. எதுக்கு நல்ல நாள் அதுவுமா புள்ளய திட்டிக்கிட்டு? ரிஷப்பும் இப்போ கொஞ்சம் முன்னாடி தானே வந்தான். விடுங்க. நீ வாம்மா. வந்து விளக்கேத்து.” என்ற மேகலா ஷனாயாவை அழைத்துக் கொண்டு பூஜையறைக்குச் செல்ல, அனைவருமே அங்கு சென்றனர்.

 

திருமணம் முடிந்ததுமே திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கிளம்பியிருக்க, வினிதாவுடன் சேர்த்து இருவரின் வீட்டினர் மட்டுமே எஞ்சியிருந்தது ஷனாயாவிற்கு நிம்மதியாக இருந்தது.

 

ரிஷப்போ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல தொலைக்காட்சியில் கண்ணாக இருந்தான்.

 

அவனின் நடவடிக்கையில் கடுப்பான மோகன் தான் ஏதாவது கூறி வாய்த்தாக்கம் வராமல் இருக்க, பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.

 

முகத்தில் ஒருவித இறுக்கத்துடன் விளக்கேற்றி முடித்த ஷனாயா மேகலாவிடம் திரும்பி, “என் ரூம் எங்க?” எனக் கேட்டாள் ஒரு உறவு முறையும் இன்றி.

 

அதனைக் கேட்டு மகேஷ்வரியின் பீபி எகிற, நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, “வாங்க அண்ணி. நான் கூட்டிட்டு போறேன்.” என அவசரமாக இடையிட்டாள் ரிஷப்பின் தங்கை வேணி.

 

தற்போது தான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.

 

வேணி அழைத்து வந்த அறைக்குள் நுழைந்த ஷனாயாவின் அதன் தோற்றமே அது யாரின் அறை என எடுத்துக் கூறியது.

 

ஷனாயா வேணியிடம் ஏதோ கூற முயல, அவள் என்ன கேட்கப் போகிறாள் என்பதை உணர்ந்த வேணி, “அ…அம்மா கூப்பிடுறாங்க போல அண்ணி. நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் அப்புறம் வரேன்.” என்றவள் ஷனாயாவின் பதிலை எதிர்ப்பார்க்காது சட்டென வெளியேறினாள்.

 

தான் இருக்கும் மனநிலைக்கும் உடல் அசதிக்கும் ஒரு குளியலைப் போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய ஷனாயா அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த அவளின் சூட்கேஸில் இருந்து உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

குளித்து முடித்து உடை மாற்றி வெளியே வந்த ஷனாயா அங்கு நின்றிருந்த வேணியைக் கேள்வியாக ஏறிட, “அம்மா உங்கள சாப்பிட கூப்பிட்டாங்க அண்ணி. மண்டபத்துல கூட நீங்க சரியா சாப்பிடல.” என வேணி கூறவும் தான் தன் பசியையே உணர்ந்தாள் ஷனாயா.

 

அதனால் வீம்பு பிடிக்காது வேணியுடன் வெளியே செல்ல, அங்கு உணவு மேசையில் அனைவரும் ஏற்கனவே அமர்ந்து ஷனாயாவிற்காக காத்திருந்தனர்.

 

ரிஷப் மட்டும் அவ்விடத்தில் இல்லாதிருக்க, ஷனாயாவிற்கு அதுவே போதுமாக இருந்தது.

 

மூன்று இருக்கைகளே எஞ்சியிருக்க, வேணியோ முதல் ஆளாக சென்று ஓரத்து இருக்கையில் அமர்ந்து கொள்ள, ஷனாயா வேறு வழியின்றி வேணிக்கு அடுத்ததாக அமர்ந்தாள்.

 

மேகலா பரிமாறிய உணவை எடுத்து வாயில் வைத்த ஷனாயாவிற்கு, “ரிஷப்… வந்து எல்லார் கூடவும் உட்கார்ந்து சாப்பிடு” என்ற மோகனின் அழுத்தமான குரலில் புரையேறியது.

 

“ப்ச் அண்ணி… பார்த்து…” என வேணி அவசரமாக ஷனாயாவிற்கு தண்ணீரை அருந்தக் கொடுக்க, அதனை வாங்கிப் பருகிய ஷனாயாவின் பார்வை அவர்களைக் கடந்து செல்ல முயன்ற ரிஷப்பின் மீது படிந்தது.

 

தந்தையின் அழைப்பைப் புறக்கணித்து விட்டு நகர முயன்ற ரிஷப், “உன்ன தான் ரிஷப் சொல்றேன். வந்து உட்காரு.” என்ற மோகனின் கடுமையான குரலில் தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு உணவு மேசைக்கு வந்தான் ரிஷப்.

 

ஷனாயாவிற்கு அடுத்து இருந்த இருக்கை மட்டுமே எஞ்சியிருக்க, மோகனின் அழுத்தமான பார்வையில் வேறு வழியின்றி அவ் இருக்கையில் அமர்ந்தான் ரிஷப்.

 

ஷனாயாவோ ரிஷப்பின் அருகாமை முள் மேல் அமர்ந்திருப்பது போன்ற உணர்வைக் கொடுக்க, தட்டில் இருந்து தலையை உயர்த்தவில்லை.

 

ரிஷப்பிற்கு தன் அருகில் அமர்ந்திருந்த ஷனாயாவைக் காணும் போது கொலைவெறியே வந்தது.

 

தன்னவள் இருக்க வேண்டிய இடத்தில் தன் மனைவியாக வேறொருத்தி அமர்ந்திருக்கிறாள் என்ன எண்ணமே அவனுக்கு சரியாக உண்ண விடவில்லை.

 

அவசரமாக உணவை விழுங்கிக்கொண்டு எழுந்து கொள்ள, அதே நேரம் இருவரும் எதிர்ப்பாராது ஷனாயாவும் வேகமாக உணவை முடித்துக்கொண்டு எழுந்தாள்.

 

இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க, மீண்டும் அங்கே அரங்கேறியது ஒரு கனல் பார்வை யுத்தம்.

 

வேணி வேறு நிலைமை புரியாது, “வாவ்… செம்ம வேவ்லெங்த்…” என்க, புதுமணத் தம்பதிகளின் பார்வை மேலும் அனலைக் கக்கியது.

 

தனராஜ் தொண்டையைச் செறுமவும் தன்னிலை அடைந்த ஷனாயா சட்டென வேறு புறம் திரும்பி அங்கிருந்து அகன்றாள்.

 

அனைவரும் இரவுணவை முடித்ததும் வினிதா தன் கணவன் மற்றும் குழந்தையுடன் கிளம்பி விட, சற்று நேரத்தில் தனராஜும் மகேஷ்வரியும் கூட கிளம்பத் தயாராகினர்.

 

“சம்பந்தி… ரெண்டு நாள் இருந்துட்டு போகலாமே.” என்றார் மோகன்.

 

ஷனாயாவும் இவ்வளவு நேரமும் முகத்தில் இருந்த இறுக்கம் தளர, தன் பெற்றோரைக் கெஞ்சலாக நோக்கினாள்.

 

அவளுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.

 

“இல்ல சம்பந்தி. அது சரி வராது. இன்னொரு நாள் பார்க்கலாம். ரெண்டு நாள்ல மறுவீட்டுக்கு கூட்டிட்டு போக வேற வரணும். நாங்க கிளம்புறோம்.” என்றார் தனராஜ்.

 

கலங்கிய கண்களுடன் ஒரு ஓரமாகக் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்த ஷனாயாவை நெருங்கிய மகேஷ்வரி அவளின் கரத்தை எடுத்து தன் கரத்துக்குள் வைத்துக் கொண்டவர், “சனா… எனக்கு தெரியும் நீ எங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப கோவமா இருக்கன்னு. இந்தக் கல்யாணம் கட்டாயத்துல தான் நடந்தது. எங்களுக்கும் வேற வழி இருக்கலம்மா.‌‌ நீ அப்படி கஷ்டப்படுறத பெத்தவங்களா எப்படி சனா நாங்க வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்? உன் நல்லதுக்காக தான் நாங்க இந்தக் கல்யாணத்த நடத்தி வெச்சோம்னு சீக்கிரமே நீ புரிஞ்சிப்ப. பழையதெல்லாம் தூக்கிப் போட்டு உனக்கான வாழ்க்கைய பாரு. இனிமே இது தான் உன்னோட உலகம். அதுக்காக அப்பாவும் அம்மாவும் உன்ன கை விட்டுட்டதா நினைச்சிடாதே. நாங்க ரெண்டு பேரும் உன் மேல வெச்சிருக்குற பாசம் என்னைக்கும் அப்படியே தான் இருக்கும். இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னுமில்ல. நீ நல்ல பக்குவமான பொண்ணு. புரிஞ்சி நடந்துப்பன்னு நம்புறேன். உன் புகுந்த வீட்டுக்காரங்க தங்கமானவங்க. மாப்பிள்ளை மனசுக் கோணாம நடந்துக்க. நாங்க வரோம்.” என்றவரின் கண்கள் கலங்க, எதுவும் கூறாது தாயை கட்டி அணைத்து மௌனமாகக் கண்ணீர் வடித்தாள் ஷனாயா.

 

பின்னிருந்து ஷனாயாவின் தோள் தொட்ட தனராஜைத் திரும்பிப் பார்த்த ஷனாயா முதல் தடவையாக முகம் களையிழந்து கண்கள் கலங்க நின்றிருந்தவரைப் பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.

 

தன் பெற்றோர் மீது என்ன தான் அளவுக்கதிகமாக கோபம் இருந்தாலும் அவர்களை விட்டு பிரிவது கடினமாக இருந்தது ஷனாயாவிற்கு.

 

ஷனாயாவின் தலையை வருடி விட்ட தனராஜ், “சந்தோஷமா இருடா கண்ணா…” என்றார்.

 

பின் இருவரும் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியேற, ரிஷப்போ கைப்பேசியில் கண்ணாக இருந்தான்.

 

ஒரு நீண்ட பெருமூச்சுடன் ரிஷப்பின் தோளைத் தட்டிக் கொடுத்த தனராஜ், “பார்த்துக்கோங்க மாப்பிள்ளை.” என்கவும் ரிஷப்பின் தலை தன்னால் ஆடியது.

 

தனராஜும் மகேஷ்வரியும் கிளம்பியதும் ஷனாயா அறைக்குள் நுழைந்துகொள்ள, ஹாலில் அமர்ந்திருந்த பெற்றோரிடம் வந்த ரிஷப், “நீங்க எப்போ கிளம்புறதா இருக்கீங்க?” எனக் கேட்டான் இறுகிய குரலில்.

 

ரிஷப்பின் கேள்வியில் இருந்த ஒதுக்கத்தில் மேகலாவின் கண்கள் சட்டெனக் கலங்கி விட, “நாங்க கொஞ்சம் நாளைக்கு இங்க தான் இருக்க போறோம்.” என்றவாறு சோஃபாவில் வாகாக சாய்ந்து கொண்டார்.

 

அதனைக் கேட்டு அதிர்ந்த ரிஷப், “அ..அது எப்படி சரி வரும்? இங்க ரெண்டு ரூம் தான் இருக்கு. எல்லாருக்கும் பத்தாது.” என்கவும், “அதுக்கென்ன? உன் ரூம்ல நீயும் மருமகப் பொண்ணும் தூங்குங்க. மத்த ரூம நாங்க எடுத்துக்குறோம்.” என்றார் மோகன்.

 

“வேணி என்ன செய்வா? படிக்கிற பொண்ணு அவ. அவளுக்கு கம்ஃபர்டபிளா இருக்காது.” என்றான் ரிஷப் அவசரமாக.

 

அவனுக்கு அவர்களை எவ்வாறாவது அங்கிருந்து அனுப்புவது மட்டுமே எண்ணமாக இருந்தது.

 

ரிஷப்பினால் ஷனாயாவுடன் ஒரே அறையில் தங்குவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

 

ஆனால் தனையனுக்கு குறையாத தந்தையாக, “வேணிக்கு என்ன? அவ என்ன டெய்லியுமா இங்க இருக்க போறா? அவளுக்கு லீவ் இல்ல. சோ நாளைக்கே ஹாஸ்டல் கிளம்பிடுவா.” என்ற மோகன் அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல எழுந்தவர், “மேகலா… எனக்கு ரொம்ப அலைச்சலா இருக்கு. நான் போய் தூங்குறேன். நீ வந்து அந்த தைலத்த கொஞ்சம் தேச்சி விடு.” என்று மனைவியையும் கையோடு அழைத்துச் சென்றார்.

 

இல்லாவிட்டால் பாவம் அவர் மட்டும் ரிஷப்பிடம் மாட்டிக்கொண்டு முழித்திருப்பாரே.

 

அவர்கள் சென்றதும் கோபத்தில் தரையைக் காலால் உதைத்த ரிஷப் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து கோபமாக வெளியேறினான்.

 

இங்கு அறைக்குள் நுழைந்து கொண்ட ஷனாயாவோ பால்கனியில் சுவரோடு சாய்ந்து அமர்ந்தவாறு கைப்பேசியில் இருந்த அஷ்வினின் புகைப்படத்தையே விழி அகற்றாமல் நோக்கினாள்.

 

விழிகள் கண்ணீரை சிந்தத் தயாராக, “எல்லாமே முடிஞ்சிடுச்சுல்ல அஷ்வின். இனிமே உங்களுக்கு நான் யாரோல்ல. நாம ரெண்டு பேரும் சேர்ந்து கட்டின கனவுக் கோட்டை மொத்தமா சரிஞ்சு விழுந்து மண்ணோட மண் ஆகிடுச்சு. இதுக்கு நீங்க என் லைஃப்ல வராமலே இருந்திருக்கலாம்ல.” என்ற ஷனாயாவின் குரல் கமறியது.

 

விழிநீர் வழிய, கைப்பேசியை நெஞ்சுடன் அணைத்துக் கொண்ட ஷனாயாவின் செவிகளில், ‘ஷனு… ஷனு… ஐ லவ் யூ ஷனு…’ என்ற அஷ்வினின் குரலே ஒலித்தது.

 

நள்ளிரவைக் கடந்து வீடு வந்த ரிஷப்பிற்கு அன்றைய நாள் களைப்பில் உடல் அசதியாக இருந்தது.

 

ஷனாயா இருக்கும் அறைக்கு செல்லவே அவனுக்கு மனம் இல்லை.

 

இருந்தும் அலைச்சல் காரணமாக வேறு வழியின்றி தன் அறைக்குள் நுழைய, அங்கோ அவன் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக அறையில் யாரும் இருக்கவில்லை. 

 

குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்த ரிஷப் பால்கனி கதவு திறந்திருப்பதைக் கண்டு தோளைக் குலுக்கிக் கொண்டு மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

குளியலறையை ஷனாயா பயன்படுத்தியதற்கு சான்றாக குளியலறை முழுவதும் பெண்கள் பயன்படுத்தும் சவர்க்காரம், ஷாம்புவினா வாசம் வர, ரிஷப்பின் உள்ளம் எரிமலையாய் தகித்தது.

 

அவசரமாக ஒரு குளியலைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தவன் அப்போதும் அறைக்குள் ஷனாயா இல்லாதிருப்பதைக் கண்டு குழப்பமாக திறந்திருந்த பால்கனி கதவின் வழியே மெதுவாக எட்டிப் பார்க்க, உடலைக் குறுக்கி குளிரில் நடுங்க, சுவரோரமாய் சாய்ந்து உறங்கிப் போயிருந்த ஷனாயாவைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

 

ஷனாயாவின் மீதிருந்த கோபத்தையும் வெறுப்பையும் தாண்டி ரிஷப்பின் நல்லுள்ளம் விழித்துக் கொள்ள, வேகமாக ஷனாயாவை நெருங்கி அவளை எழுப்ப கரத்தைக் கொண்டு சென்ற ரிஷப்பின் மனசாட்சி விழித்துக் கொண்டது.

 

சட்டென தீச்சுட்டார் போல் விலகி இரண்டடி பின்னால் நகர்ந்தவன் சில நொடிகள் ஷனாயாவின் முகத்தையே வெறித்தான்.

 

‘எல்லாத்துக்கும் காரணம் நீ தான் டி. நீ மட்டும் என் பேச்சைக் கேட்டிருந்தா இன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் இந்த நிலைமை வந்து இருக்காது. உன்ன என் ஆயுசுக்கும் மன்னிக்கவும் மாட்டேன். உன்ன என் மனைவியா ஏத்துக்கவும் மாட்டேன்.’ என மனதோடு கூறிய ரிஷப் வந்த வழியே அறைக்குள் திரும்பிச் சென்றான்.

 

அவசரமாக தலையணை ஒன்றையும் போர்வையையும் எடுத்துக் கொண்ட ரிஷப் அறையை விட்டு வெளியேற முயன்றவன் ஒரு நொடி தயங்கி நின்றான்.

 

என்ன நினைத்தானோ மீண்டும் அறைக்குள் நுழைந்து கப்போர்டிலிரிந்து ஒரு கனத்த போர்வையை எடுத்தவன் பால்கனிக்குச் சென்று சத்தம் எழுப்பாது ஷனாயாவை தலை முதல் கால் வரை போர்த்தி விட்டு அதற்கு மேல் அங்கிருக்க மனமின்றி வேகமாக அறையை விட்டு வெளியேறினான் ரிஷப்.

 

உறக்கத்திலேயே ரிஷப் போர்த்தி விட்ட போர்வையை இறுக்கிப் பிடித்த ஷனாயாவின் இதழ்கள், “அஷ்வின்… ஐ மிஸ் யூ…” என முணுமுணுப்பாக உச்சரித்தன.

 

வெளியே ஹால் சோஃபாவில் தலையணையைப் போட்டு உறங்க முற்பட்ட ரிஷப்பிற்கு தன் வீட்டிலேயே யாரோ போல் சோஃபாவில் உறங்குவது கடுப்பாக இருந்தது.

 

“இன்னைக்கு வந்தவ அதுக்குள்ள என் ரூம பிடிச்சிட்டா. சரின்னா அவ தானே வெளிய தூங்கி இருக்கணும். நான் எதுகக்உ வெளிய வந்தேன்?” எனத் தன்னையே கேட்டுக் கொண்ட ரிஷப் தன் அறைக்கு செல்ல எழுந்தவன் மீண்டும் சட்டென அமர்ந்து கொண்டான்.

 

“நோ ரிஷப்… அவ கிட்ட இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் விலகியே இரு. கொஞ்சம் நாள் தானே. அம்மாவும் அப்பாவும் கிளம்பினதுக்கு அப்புறம் ஒரு பிரச்சினையும் இருக்காது. அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.” எனத் தனக்கே கூறிக் கொண்ட ரிஷப் சோஃபாவில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள, சில நொடிகளிலேயே நித்ரா தேவி வந்து அவனை ஆட்கொண்டாள்.

 

விழி மூடிக் கிடந்தவனின் மனக் கண்ணில் ரிஷப்பும் லாவண்யாவும் கடற்கரையில் ஒருவரையொருவர் துரத்திப் பிடித்து சந்தோஷமாக சுற்றியது வந்து போக, மூடி இருந்த இமைகளைத் தாண்டி கண்ணீர் கசிந்தது.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்