Loading

அத்தியாயத்தின் இரண்டாம் பாதியில் கண்ணை மூடிக்கொள்ளவும்😌😌

அத்தியாயம் 41

நேற்று மாலை தன் அண்ணன் அழைத்து சந்தனாவை அவனின் மூத்த மகன் சஞ்சுவிற்கு பெண் கேட்டிருக்க, அவனுடன் சண்டையிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள் நிர்மலா.

அதைத் தொடர்ந்து அவள் அவினாஷிடம் புகாரளிக்க, ‘தங்கையின் விருப்பத்தில் பாதகமொன்றுமில்லையே?’ என எதிர்க்கேள்வி கேட்டான் அவன். சில மணிநேரம் மகனுடன் பேசி போராடிவிட்டு, அவன் மசியமாட்டானென தெரிந்த பின் இன்று காலை மகளை அழைத்தாள் நிர்மலா.

“மாமா சொன்ன விஷயம் உனக்கு தெரியுமா சனா?”

“சஞ்சத்தானைக் கட்டிக்க எனக்கு டபுள் ஓகேன்னு நான் சொன்னதுக்கப்புறம் தான் மாமா கேட்டாங்கம்மா!” என அம்மாவின் தலையில் கனத்தக் கூடைப்பந்தைத் தூக்கிப் போட்டாள் மகள்.

“யாரைக் கேட்டு நீ அப்டி சொன்ன?”

“எனக்கு பிடிச்சது நான் சொன்னேன்மா! கட்டி வைக்கறதும் முடியாதுன்றதும் உன் விருப்பம்! லாஸ்ட் வரை நான் இப்டியே இருந்துக்குவேன்.”

“சொல்றதைக் கேட்கவே கூடாதுன்ற முடிவுல இருக்கியாடீ?”

“நான் கேட்கற எதையும் ஏன்மா எப்பவும் நீ சொல்ல மாட்டேங்கற?” என எதிர்க்கேள்வி கேட்டது அந்த ஈராயிரத்து குழவி!

“ப்ளீஸ் சனா‌… அம்மா சொல்றதைப் புரிஞ்சுக்கோடா… பொண்ணு கொடுத்து பொண்ணெடுக்கறதுலாம் சரி வராது. நாளைக்கு ஏதாவது மனஸ்தாபம்ன்னா உன் அண்ணன் லைஃபும் தான் பிரச்சினையாகும்.”

“அண்ணா அந்தக் குடும்பத்துல பொண்ணெடுக்கறதுக்கு முன்னாடியே நான் சஞ்சுவைத் தான் விரும்பறேன்னு உனக்கு தெரியாதாம்மா?”

“குதர்க்கமா பேசாதே! நீ பைத்தியம் மாதிரி உங்கத்தைப் பேச்சுக்கு ஆடிட்டு இப்போ வீண்பிடிவாதம் பிடிக்கற!”

“நீ கூட தான் அர்ஜூனை கட்டிக்கோன்னு சொல்லி வீண்பிடிவாதம் பிடிக்கற! நீ அர்ஜூன் பேச்சை எடுக்காம இருந்திருந்தா அத்தையும் சஞ்சுவைப் பத்தி பேசாம இருந்திருப்பாங்க! நானும் நீங்க ரெண்டு பேரும் பேசறதைக் கேட்காம இருந்திருப்பேன்.”

“சரி! உனக்கு பிடிக்கலன்னா நீ அர்ஜூனைக் கட்டிக்க வேணாம். அம்மா உனக்கு வேற நல்ல மாப்பிள்ளையா பார்க்கறேன்.”

“நீ இப்டி சொல்றதே எனக்கு பிடிக்கலம்மா! அர்ஜூன் என் பேபி! மோர்ஓவர் வேற மாப்பிள்ளை? சஞ்சுத்தானைக் கண்ணு முன்னாடி வச்சிக்கிட்டு இன்னொருத்தனை எப்டிம்மா? அப்புறம் ரொம்ப அசிங்கமா ஃபீல் பண்ணுவேனேம்மா?” என்ற மகளை என்ன சொல்லி மாற்றுவதென்று நிர்மலாவிற்கு தெரியவில்லை.

அடுத்த நம்பிக்கையான அர்ஜூனிடம் போய் நின்றாள்.

அர்ஜூனுக்கு அத்தையை பார்க்கவே பாவமாக இருந்தது. இரக்கத்துடன் கேட்டான். “அத்தை, எங்க ரெண்டு பேரையும் இன் அண்ட் அவுட் உங்களைத் தவிர வேற யாருக்கு புரியும் சொல்லுங்க?”

“உனக்கும் அத்தை மனசு புரியும்தானே அஜூ கண்ணா!”

“ஆனா ஒண்ணா வளர்ந்ததாலேயோ என்னவோ எனக்கு அவக்கிட்ட அப்டி எந்த ஃபீலிங்ஸூம் வரல அத்தை.”

“அர்ஜூன்!”

கண்கள் கலங்கும் அத்தையை சமாதானம் செய்ய தெரியாமல் விழித்தான். அவனுக்குத்தான் உணர்ச்சிகரம் ஒத்து வராதே! மென்மையாக மன்னிப்பை வேண்டினான். “மாப் கீஜியே அத்தை!”

“விளையாடாதே அர்ஜூன். மாப் வேணாம். அத்தை கர்ச்சீப் வச்சிருக்கேன்.” என்று கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக்கொள்ள,

குபீரென கிளம்பிய சிரிப்பை அடக்கிக் கொண்டு, “சனாவுக்கு சஞ்சுவைத் தான் பிடிச்சிருக்குது அத்தை. அண்ணனை விரும்பற பொண்ணைத் தம்பியைக் கட்டிக்க சொன்னா நல்லா இருக்குமா?” எனக் கேட்க, பரிதாபமாக விழித்தாள் நிர்மலா.

      *********

திருமணம் என்றதும் சந்தனா வீட்டில் மட்டுமல்லாது, அக்னிஸ்வரூபன் வீட்டிலும் சிறு எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பு என்பதை விட அது அபிராமியின் நிபந்தனையாக இருந்தது.

அனுவிடம், ‘உன் பையனுக்கு வேண்டுமானால் நீதான் போய் பேசவேண்டும்.’ என்றவன் அதன்பின் அதைப் பற்றி ஏதும் கேட்காமல் இருந்துவிட, பொறுத்து பொறுத்து பார்த்த அனுதான் மீண்டும் அவன் முன்னால் போய் நின்றாள்.

“நான் அம்மா, பாட்டி கிட்ட பேசிட்டேன். ஆனா மரியாதைக்கு நீயும் போய் கேட்கணும் இல்ல?”

அவளைச் சந்தேகமாகப் பார்த்தவன் கேட்டான். “என்ன சொன்னாங்க?”

“அவங்களுக்கு சனாவை ரொம்ப பிடிச்சிருக்குதாம்.”

“சரி!” என்றவன், அன்றிரவு நிரஞ்சனாவுடன் அளவளாவப் போனபோது, குழைவு நெளிவின்றி தன் கம்பீரம் குறையாமல் எப்போதும் போல் இறுக்கத்துடனே, “கல்யாணம் பண்ணி வைக்கற ஐடியா இருந்தா சந்தனாவைக் கன்ஸிடர் பண்ணுங்க டாட்!” என குனிந்து தொட்டியிலிருந்த வண்ண மீன்களுக்கு உணவிட்டபடியே சொல்ல,

இந்த தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிரஞ்சனாவிற்கு சொத்தென்றாகிப் போனது. “எவ்ளோ ரெமான்டிக்கான விஷயத்தை எப்டி ரோபோட்டிக்கா சப்புன்னு சொல்றான் பாருங்க!” எனக் காய்ந்தாள்.

“அது வெட்கம்டீ!” என்ற அப்பாவிற்கு நிமிர்ந்து அதே ‘ரோபோட்டிக்’ பார்வையைத் தந்துவிட்டு பாட்டியைக் காண,

“அவளைக் கட்டிக்கணும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்குது.” என்று ஆரம்பித்தார் அவர்.

அதாகப்பட்டது, அக்னி சந்தனாவைத் திருமணம் செய்ய அவர் சம்மதிக்க வேண்டுமென்றால், அவள் அர்ஜூனுடன் பழகுவதை முற்றிலும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரின் நிபந்தனை!

அதனைக் கேட்ட நிரஞ்சனாவும் பிரபஞ்சனும் அப்பட்டமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

“அப்பப்போ ஓல்டி’ங்கறதை நிரூபிக்கறீங்கம்மா!”

“என்னடா நீ! வெளி வாசல்ல வச்சு அந்தப் பையன் தலைமுடியை பிடிச்சு ஆட்டிட்டு இருக்கா! அவனும் பொம்பளைப் பிள்ளைன்னு தள்ளி இருக்காம வாடி போடிங்கறதும், அவ கையைப் பிடிச்சு இழுக்கறதும்…”

“பாட்டி!!”

அக்னி என்றுமே இப்படி ஒரு அழுத்த த்வனியில் பாட்டியை அழைத்து அவர்கள் யாரும் பார்த்ததில்லை. ஏதும் ரசாபாசம் ஆகிவிடுமோவென நிரஞ்சனா பயந்தாள்.

“நான் கூட தான் நம்ம பாவனாவை ‘டி’ சொல்றேன். காதைத் திருகுறேன்; கையைப் பிடிச்சு இழுக்கறேன். நாளைக்கு அவ புருஷன் வந்து என்னை அவக்கிட்ட பேசாதேன்னு சொன்னா நான் என்ன பண்ணனும் பாட்டி?”

“நீயும் அவனும் ஒண்ணா?”

“அப்போ நீங்க என்னையும் அர்ஜூனையும் ஒண்ணா நினைக்கலயா? என்ன மாம்?” என்று நிரஞ்சனாவிடம் திரும்ப,

அவள் விழிகளில் கலவரம் கூடியது. இவர்களிடம் அதிகம் ஒட்டாமல் சதா மௌன போர்வைக்குள் புகுந்துகொள்ளும் அக்னியை வளர்த்திருந்தவளை, அர்ஜூனின் துடிப்பும் குறும்பும் ஈர்த்ததாலேயே ஆசையாசையாக அவனிடம் தன்னை ‘அம்மா’ என்று அழைக்கக் கேட்டவள் இவள்! இப்போது அக்னியை இப்படியோர் கேள்வி கேட்டு தன் முகம் பார்க்க செய்த மாமியாரின் மேல் கோபம் வந்தது.

பிரபஞ்சனுக்குமே பேச்சு போகும் திசையை எண்ணி பதற்றம்தான்.

“அக்னி, பாட்டி அப்டி சொல்லலடா? உன்னை மாதிரி இல்லாம அர்ஜூனுக்கு விளையாட்டுத்தனம் அதிகம்ன்னு சொல்றாங்க.”

அபிராமி பேரனின் காதை வலிக்கத் திருகி, “நீ என்ன என்கிட்டயே டிவிஸ்ட் பண்றியாடா? இதெல்லாம் உன் பிஸினஸ்ல கைக்கு உள்ள கார்ட்’ஐ திணிச்சு வைக்கறவன் கிட்ட வச்சுக்கோ!” என்றார் மிரட்டலாக!

பின்னர் அக்னி சற்று நிதானித்து சாந்தமான குரலில், “அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாவே படிச்சு, ஒண்ணாவே வளர்ந்தவங்க பாட்டி! அர்ஜூனுக்கு அவளை அரை வயசுல இருந்து தெரியும். இப்போ போய் நான் பேசாத, பழகாதன்னு சொன்னா…” என்று நிறுத்தியவன், “ப்ச்! நானே அவளை நம்பலன்னா எப்டி பாட்டி?” எனச் சலிப்பாகக் கேட்டான்.

“அவங்களை நம்பலன்னு யார் சொன்னா? நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி ரெண்டு பேரும் அப்டி அடிச்சிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?”

“நம்ம முன்னாடி அடிச்சிக்கிட்டாங்கன்னா நம்மள வெளியாளுங்களா நினைக்கலன்னு அர்த்தம். பார்த்தீங்க தானே பிரகதி கல்யாணத்துல ரெண்டு பேரும் எவ்ளோ பொறுப்பா நடந்துக்கிட்டாங்க?”

ஆமாம் என்பதைப் போல் அவர் ‘உம்’மென்ற முகத்துடன் இருக்க,

“அத்தை, அவன்தான் இவ்ளோ சொல்றானே… இப்போ இருக்க ஜெனரேஷன்ல இதெல்லாம் சகஜம். அதுவும் சனா புத்திசாலி பொண்ணு. புரிஞ்சு நடந்துக்குவா!” என்றாள் நிரஞ்சனா.

“அந்த புத்திசாலி என் பேரன் தாலியை வாங்கிட்டு வரட்டும்! நானே நாலு தட்டு தட்டி வைக்கறேன்!”

நிரஞ்சனா தலையைக் குனிந்து டீபாயிலிருந்த பூச்சாடியில் இல்லாத தூசியைத் தட்டியபடி முணுமுணுப்பாக சொன்னாள். “அவ என்னை மாதிரி வாயை மூடிக்கிட்டு போற பொண்ணு இல்ல. நீங்க நாலு தட்டினா அவ எட்டா திருப்பி கொடுப்பா!”

“என்ன? என்ன சொல்ற?”

“ஒண்ணுமில்ல. நல்ல பொண்ணுன்னு சொன்னேன்.”

“பாருடா பிரபு! நல்ல பொண்ணாம்! புத்திசாலியாம்! இப்போவே மருமகளோட கூட்டு சேர்ந்துக்கிட்டு என்னை ஓரமா உட்கார வைக்கப் பார்க்கறா உன் பொண்டாட்டி! அந்த ரௌடிக்கு வேற ஏற்கனவே வால் ஜாஸ்தி!” என்று பிரபஞ்சனிடம் குறை படிக்க,

‘எல்லாத்துக்கும் என் தலையையே உருட்டுங்கடா!’ என்பதாக அவன் விழிக்க,

கலகத்தை உண்டு செய்து காரியம் சாதித்துக்கொண்ட கள்ளப்பையன் குறுநகையுடன் சத்தமின்றி இடத்தைக் காலி செய்தான்.

சரி, அத்துடன் முடிந்தது என்று அவன் மூச்சு விடும்போது, “உங்களைக் கட்டிக்கணும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்குது அத்தான். இல்லயில்ல ரெண்டு!” என்றாள் சந்தனா.

இருவரும் அவனின் நிறுவனத்தின் அலுவலக அறையில் இருந்தனர். காதல் வந்த பின்னர் தினமும் ஏதேனும் சாக்கிட்டு பொது இடங்களில் அரைமணி நேரமாவது சந்தித்துக் கொள்வதை வழக்கமாக்கியிருக்க, இன்று அந்த கொடுப்பினை அவன் அலுவலகத்திற்கு வாய்த்திருந்தது.

“ஏழு மலை, ஏழு கடல் தாண்டி போய் என்னத்தையோ எடுப்பானுங்களாம். அது என்னன்னு கேட்டு பேசாம நானும் போயிடலாமான்னு பார்க்கறேன்.”

அவள் பிணுக்குடன் அவனின் புஜத்தில் குத்தி, “என்ன கண்டிஷன்னு கேளுங்க!” என்றாள்.

“சொல்லும்!”

“கல்யாணத்துக்கு அப்புறம் நான் என்னை‌ ‘சந்தனா சஞ்சய்’ன்னு தான் அட்ரஸ் பண்ணுவேன்!”

“என் பாக்கியம் மகாராணி!”

“அப்புறம் என் பசங்களுக்கும் சஞ்சய் இனிஷியல்தான் வைப்பேன். சோ, ஸ்ட்ரிக்ட்லி நீங்க கெஸட்ல அந்த பேரையும் ஆட் பண்ணனும்.”

“ஓ மை கேர்ள்! அதுக்குள்ள பசங்க இனிஷியல் வரைக்கும் யோசிச்சிட்டியா? என்கிட்ட வேலைக்கு சேர்ந்துக்கறியாடீ? வெளியே மட்டுமில்லாம உள்ளேயும்…” என்று ஒரு மார்க்கமாகப் பார்க்க,

மிரட்டலாகக் கேட்டாள் அவள். “என்ன?”

“அது… ப்ரெய்ன்… என்கிட்ட பிஸினஸ் கன்ஸல்டன்ட்டா சேர்ந்துக்கிட்டா உன் மூளைல இருக்க மூலைமுடுக்கெல்லாம் கூட எனக்கு யூஸ் ஆகும் தெரியுமா?”

“ஓ! வேலையும் மூளையுமா?”

மீசைக்குள் மடித்து வைத்த மந்திரச் சிரிப்புடன், “ஏன் நீ என்ன நினைச்ச?” எனக் கேட்டதில், அவன் முகம் பார்க்க மறுத்தது பெண்மை.

       *******

சஞ்சுவின் சகதர்மிணியாய் மாலையும் கழுத்துமாக நிற்கும் பேத்தியைக் கண்ட கலியபெருமாளின் மனம் அமுதகலசமாக நிரம்பியிருந்தது.

அன்று, ‘இவன் உன் கழுத்துல தாலி போடும்போது வர்றேன் சந்தனம்!’ என்றவர், சொன்னதைப் போலவே அவர்களின் திருமணத்தின் போதுதான், தான் இருந்த இல்லத்திலிருந்து வெளியுலகைக் காண வந்திருந்தார்.

அவர் உள்ளே நுழைகையில் Agniswaroop alias Sanjay weds Sandhanamari என்று பூக்களால் அலங்கரித்திருந்த பெயர் பலகையைப் பார்த்துக்கொண்டு நிற்க, அழைப்பிதழ் தந்தபோது சொன்னதை அப்பா மறந்திருக்கக்கூடும் என்றெண்ணி பாஸ்கரன் மீண்டுமொரு முறை சொன்னான். “அது பிரபு ஃபேமிலி வச்ச பேரு!”

“ஹ்ம்ம்!” எனத் தலையசைத்தவர், அவனுடன் உள்ளே வர,

பட்டு, வேட்டி சட்டையில் கம்பீரமாக யாருடனோ பேசியபடி வந்த அர்ஜூன் இவரைப் பார்த்துவிட்டு நின்றான். “ஹாய் தாத்தா!”

அவனை மேலிருந்து கீழாக பார்த்தவர் நெருங்கி அவன் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டதுடன், “அர்ஜூன்!” என்றழைத்து அவனுக்கு அதிர்ச்சியளித்தார்.

‘சென்ட்டி ஸீன்ஸ்’ல் சிரிப்பேன்.’ என்றவனுக்கு தாத்தா தன் முகம் பார்த்துத் தன் பெயர் சொல்லி அழைத்ததில் கண்ணீர் துளிர்த்துவிட்டது. இத்தனை வருடங்களாக அவருக்கு அவன் ‘அஜய்’ ஆகத்தான் அறிமுகம். அவர் மனதில்தான் அர்ஜூன் வளரவே இல்லையே?

குரல் கரகரக்கக் கேட்டான். “தாத்தா என்னை அடையாளம் தெரியுதா?”

“ம்ம்! என் பக்கத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கியா அர்ஜூன்?”

தன் பெயரைச் சொல்லும்போது எத்துணை ஆதூரத்துடன் ஒலிக்கிறது தாத்தாவின் குரல்!

கையைப் பிடித்தவாறே அவரை ஓரிடத்தில் அமர வைத்து தானும் அவரருகே அமர்ந்துகொண்டான். “நான்தான் அர்ஜூன்னு எப்போ தாத்தா புரிஞ்சது?”

சஞ்சு – சனாவிற்கு திருமணம் நிச்சயம் செய்ய வீட்டிற்கு மூத்தவரான கலியபெருமாளிடம் கேட்க அனு, பாஸ்கரன், நிர்மலா மூவரும் சென்றிருந்தனர்.

நிர்மலாவிற்கு சந்தனாவை சஞ்சய்க்கு கொடுக்க கிஞ்சித்தும் விருப்பமில்லை. அவினாஷ், சந்தனா, அர்ஜூன் என அனைவரும் கைவிட்டு விட்ட நிலையில், அர்ஜூன் பெயரைச் சொன்னால் அப்பா மனம் மாறி, தனக்கு சாதகமாகப் பேசுவார் என்ற நப்பாசையில் தான் அவரைக் காண வந்தாள்.

பாஸ்கரன் விடயத்தைச் சொன்னதும், “பரம சந்தோஷம்டா பாஸு!” என்றவரின் கண்களில் புதிய தேஜஸ்!

“அப்பா! அந்தப் பையனுக்கு போய் நம்ம சனாவைக் கொடுக்கச் சொல்றீங்க? எம்பொண்ணு சுத்தமானவப்பா!”

அனுவின் முகம் ஆங்காரமாக மாறியது. பாஸ்கரன் அமைதியாக இருக்கும்படி அவள் விரல்களை நெறித்துக்கொண்டிருந்ததால், நிர்மலாவின் முகம் தப்பித்தது.

“அவன் நம்ம எல்லாரைவிடவும் பரிசுத்தமானவன் நிர்மா. மனசால என்னை விட ரொம்பப் பெரியவன்!” என்றவரின் விழிகள் சூன்யத்தில் இருந்தது.

தான் வந்த நோக்கத்திற்கு அப்பாவின் சிந்தையை நகர்த்தினாள். “நான் சனாவை நம்ம அர்ஜூனுக்கு கொடுக்கத் தான் ஆசைப்படறேன்ப்பா!” எனவும், பட்டென்று விழிகள் உயிர்க்க அவளைத் திரும்பி பார்த்தார்.

“அர்ஜூனுக்கா?”

பாஸ்கரன் அர்ஜூனின் தற்போதைய புகைப்படத்தைக் காட்டினான். “உங்க பேரன் வளர்ந்துட்டான்ப்பா!”

இத்தனை வருடங்களாக எப்படியெப்படியெல்லாமோ சொன்ன விடயம்தான்! அப்போதெல்லாம் சொல்வதைக் காதிலேயே வாங்கமாட்டார். குழந்தை, குழந்தை என்று ஏங்கிக் கிடப்பார். ஆனால் இப்போது சந்தனாவை அர்ஜூனுக்கு கொடுக்க வேண்டுமென்றதும், ‘குழந்தைப் பையனுக்கு கல்யாணமா?’ என்று கேட்ட புலன்கள் விழித்துக்கொண்டன.

பாஸ்கரன் காட்டிய புகைப்படத்தைப் பார்த்து, “அஜய்!” என்று சொல்ல, அவருடைய பேரனின் திருகுதாளத்தை பாஸ்கரன் எடுத்துரைத்தான்.

“எனக்கு சஞ்சு, அர்ஜூன் ரெண்டு பசங்க மட்டும்தான்ப்பா! எப்பவும் அவன் பேரையே சொல்லிட்டிருக்க உங்களை ஃப்ரெண்ட் ஆக்கிக்கணும்ன்னு தான் அர்ஜூனோட தம்பி அஜய்ன்னு சொல்லி உங்கக்கிட்ட பழகினான்.”

முதலில் விழித்தவர், பின் கடகடவென சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த சிரிப்பை எதிரிலிருந்த மூவரும் பேரதிசயத்தைப் போல் பார்த்திருந்தனர். சிரிப்பினாலோ அழுகையினாலோ தெரியவில்லை, அவர் கண்களில் நீர் சுரந்திருந்தது.

அனுவிடம் திரும்பினார். “உன்னை உன் பிள்ளை வளர்றதைப் பார்க்க விடாம தடுத்த எனக்கு, என் பேரனோட வளர்ச்சியை உணர்ந்து அனுபவிக்கக் கொடுத்து வைக்கல பாரேன்.”

“அப்பா! போனது போகட்டும். இனி அதை நினைச்சு ஆகப் போறதென்ன?”

“சரிதான்! அர்ஜூனைப் பார்க்கணும்டா! என் கூட காட்டழகிய சிங்கர் கோயிலுக்கு வருவானா அவன்?” எனப் பரபரத்தார்.

அர்ஜூன் என்றதும் அவரும் குழந்தையாகிவிடுகிறார். பாஸ்கரன் மீண்டும் அப்பாவின் சித்தம் கலங்குகிறதோ என்று கலக்கமாக பார்க்க,

“வருவான் மாமா. இருங்க இப்போவே கூப்பிடறேன்.” என்ற அனு அலைப்பேசியை எடுக்க,

“இல்லை இல்லை. இப்போ வேணாம். சஞ்சு கல்யாணத்துல அவனைப் பார்த்துக்கறேன்.” என்றவரின் வதனத்தில் இன்னும் புன்னகையும் கண்ணீரும் காயவில்லை. பேரனின் நினைவில் லயித்திருந்தார்.

“அப்பா! மறுபடியும் அதையே சொல்றீங்களே? அந்தப் பையன்…” -நிர்மா.

“அவனும் என் பேரன்தான் நிர்மா.” எனவும்,

அடிவயிற்றிலிருந்து புறப்பட்ட கேவலுடன் அனு அவரின் காலில் விழுந்துவிட்டாள். “தாங்க்ஸ் மாமா! தாங்க்யூ தாங்க்யூ! என் மனசே லேசாகிடுச்சு மாமா. ஐ’ம் ஸோ கிரேட்ஃபுல் ஃபார் தட்!”

இதற்காக, இந்த அங்கீகாரத்திற்காக அல்லவா அன்று அவருடன் அத்தனைக்கு போராடினாள்! அது இன்று நிறைவேறிவிட்டதில் வாழ்க்கையின் பரிபூரண நாளொன்றில் தான் நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது.

அவர் முகமும் விகசித்துக் கிடந்தது. மகளிடம் சொன்னார். “அவன் சந்தனத்துக்குரியவன் நிர்மா! அவனுக்கே கொடுத்துடு!”

பின்னர் பிரபஞ்சனும் தன் மகனுக்கென்று நிர்மலாவிடம் பெண் கேட்க,

தன் மக்களுக்கே தன் விருப்பம் ஏற்புடையதாக இல்லையென்ற ஏமாற்றம், சம்பந்தக்காரரின் கோரிக்கை என அனைத்தையும் தாண்டி, தன் மகளுக்கு தன்னைப் போல ஒற்றையாக நிற்கும் நிலை வந்துவிட வேண்டாமென்ற சராசரி தாயின் பரிதவிப்பில் சந்தனாவை சஞ்சுவிற்கு கொடுக்க ஒப்புக்கொண்டாள் நிர்மலா.

தன் இளைய பேரனை அடையாளம் கண்டுகொண்டதை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்த பெரியவர், இன்னும் அவன் கையைத் தன் கைப்பிடிக்குள்ளேயே வைத்திருந்தார். அவரின் பிரியமான பேரனல்லவா அவன்!

“தாத்தா சந்தோஷமா இருக்கேன் அர்ஜூன்.”

“எனக்கும் ரொம்ப சந்தோஷம் தாத்தா. உனக்கு என்னை அடையாளம் தெரியுதே! அண்ட் ஐ’ம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி தாத்தா… அஜய்ன்னு சொல்லி உன்கிட்ட விளையாடிட்டேன்.”

“நீ என் கூட விளையாடணும்ன்னு தாண்டா நானும் ஆசைப்பட்டேன்.” என்றவர், சஞ்சு சந்தனாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்ததைக் கண் நிறைய கண்டு, மனம் நிறைய வாழ்த்தினார்.

அவர் காலில் விழ வந்த தம்பதியரை, பணிந்து தடுத்து நிறுத்தி சொன்னார். “நான்தான் இன்னும் நாலு பிறவியெடுத்து உன் காலைக் கழுவணும்டா சஞ்சு. சந்தனம், சஞ்சு விரலை எப்பவும் விடக்கூடாது என்ன?”

“விடமாட்டேன் தாத்தா!” என்ற பேத்தியின் உத்தரவாதத்தைக் கேட்ட பின்னர், அங்கிருந்து உத்தரவு பெற்றுக்கொண்டார்.

காலையில் சாப்பிட மறுத்தவர், தம்பதியரைக் கண் நிறைய கண்ட பின்னர், மனநிறைவுடன் வயிறார சாப்பிட்டுவிட்டு வெளியேறினார். யார் சொல்லியும் நிற்கவில்லை. பாஸ்கரன் தகுந்த ஆட்களுடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தான்.

      ***********

சென்னையின் வெம்மையில் ஊறிய இரவு இத்தனை அழகானதாக இருக்குமா என்று ஜன்னல் நிலவிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அவன். சிறிது நேரத்தில் மஞ்சளும் பச்சையுமான கிரேப் டிசைனர் புடவை அணிந்த நிலவு தன்னறைக்கு வர கண்டவன், ஜன்னல் நிலவைப் புறக்கணித்துவிட்டு ஏசியைப் போட்டுக்கொண்டு, புடவை நிலவைக் கையில் பிடிக்க இரு கரங்கள் விரித்தான். தெற்றுப் பல் அழகில் விரிந்த இதழ்களுடன், அவன் கரங்களுக்குள் அழகாய்ப் பொருந்திக்கொண்டது அவனின் நிலவு. அவன் அந்த ஏகாந்தத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.

“என்னாச்சு?” -அவள்.

“கனவு மாதிரி இருக்குது.”

“எது?”

“எல்லாமே! அம்மாவை இந்த ஜென்மத்துல திரும்ப பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை.”

அவள் அமைதியாக இருந்தாள். முதன்முதலாக அவளிடம் அவனின் ஆழ்மனதைத் திறக்கிறான்.

“பார்த்தாலும் என்னால அவங்களோட மிங்கிளாக முடியாதேன்ற ஏக்கம்! பட் இட் ஹேப்பண்ட்! பிரகதி மூலமா எனக்கு வாழ்க்கைல இப்டியொரு ஆஃபர் வரும்ன்னு நினைக்கவேயில்லை.”

“எங்க அனு அத்தையோட தவப் பலன் அது! போனவன் இனி எங்கே வரப் போறான்னு விட்டுடாம, சதா உங்கப் பேரையே சொல்லிட்டிருப்பாங்க.”

“ம்ம்! இல்லைன்னா பிரகதி அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையை விட்டுட்டு அவினாஷைக் கைக் காட்டிருப்பாளா?”

“அவி கூட இப்டி அந்தர் பல்டி அடிப்பான்னு நான் நினைக்கவேயில்லை. இல்லைன்னாலும் அவியும் அர்ஜூனும் உங்களைக் கண்டுபிடிச்சிருப்பாங்கதான்!”

“ஹாஹா… சொன்னான். அப்புறமும் கூட எப்டி உண்மையைச் சொல்றதுன்னு முழிச்சிட்டு இருந்தேன். எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.”

“ம்ம்!”

“நம்மளோட இந்த வாழ்க்கைல நான் உன்கிட்ட கேட்கறது ஒண்ணே ஒண்ணுதாண்டீ மாரியாத்தா!”

“ம்ம்?”

“எப்பவும் அம்மாவை எப்டி நினைக்கறியோ அப்டித்தான் அம்மாவையும் நினைக்கணும்.”

இத்தனை நாட்கள் பழக்கத்தில் அவன் யாரிடமும் ஒருபோதும் அம்மாக்களின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லி பேசுவதில்லை‌. பேசும்போதே அவன் வார்த்தைகளின் தளம்பலில் எந்த அம்மாவைச் சொல்கிறானென்று எதிரிலுள்ளவர்களுக்கு புரிந்து போகும்படி தான் பேசுகிறான். இப்போதும் அவனுடைய மனையாளுக்கும் அது புரிந்தது.

“இனி நீங்க உங்க வேலையை மட்டும் பார்த்தா போதும். என் மாமியார்ஸை எப்டி ஹேண்டில் பண்றதுன்னு எனக்குத் தெரியும்.”

“என் வேலையைப் பார்க்கவா?” என காது மடலில் கிச்சுகிச்சு காட்ட,

“சும்மா இருங்க!” என அவன் விரல் வளைத்தவள் சொன்னாள். “ரஞ்சி அத்தைக்கு தான் தாங்க்ஸ் சொல்லணும் அக்னி. ரியலி ஷி’ஸ் கிரேட்! அவங்க மட்டும் வளர்த்த உரிமைன்னு சொல்லி அனு அத்தையைத் தள்ளி வச்சிருந்தா, இது எதுவுமே சாத்தியமாகி இருக்காது.  மோர்ஓவர் உங்களைப் பார்த்ததுக்கப்புறமும் தள்ளி இருக்க வேண்டிய நிலைமை வந்திருந்தா நிச்சயமா இப்போ அனு அத்தை நம்மளோட….”

“வேணாம் சொல்லாதே!” என்று தன் பிடியை இறுக்கினான்.

அவன் முதுகின் மேல் இருந்த கரம்கொண்டு தடவிக்கொடுத்து அவனை ஆசுவாசப்படுத்தினாள். கன்னம் அழுந்த சாய்ந்திருந்த அவனின் இடது நெஞ்சில் முத்தம் பதித்தாள்.

அதில் புன்னகைத்தவன் அவள் தாடையைப் பற்றி நிமிர்த்தி உச்சந்தலையில் முத்தமிட்டான். “அம்மா மட்டுமா? மேடம் கூட தான் என்னை அலைக்கழிச்சீங்க!”

“நான் என்ன பண்ணேன்?”

“அவினாஷ் தங்கையா இருந்தியே?”

“அதுக்கு?”

“ம்ம்… எங்கேயிருந்து சொல்லட்டும்? அம்மாவைப் பார்க்கறதுக்கு முன்னாடி உன்னைத்தான் பார்த்தேன். அப்போவே பிடிச்சது. ஆனா நீ அந்த ஐஸ்கிரீம் கடைக்காரன் பேரைச் சொன்னதும், அவன்தான் உன் லவர்ன்னு நினைச்சிட்டு மை பேட் லக்’ன்னு போயிட்டேன்.”

“ஹஹ்ஹஹ… அதான் எப்போ அருண்னு சொன்னாலும் டென்ஷன் ஆகறீங்களா? ஹய்யோ…”

“எரிச்சலைக் கிளப்பாதே!” என சிரிக்கும் அவளின் உதட்டை நிமிண்டியவன், “அப்புறம் பார்த்தா நீ அவினாஷ் தங்கச்சியா வந்து நிற்கற! தள்ளிட்டு போகவும் முடியல; தள்ளி இருக்கவும் முடியல. அதுவும் ஒவ்வொரு நாள் பக்கத்துல பார்க்கும்போதும்…” என்று அப்போது செய்ய நினைத்ததையெல்லாம் இப்போது செய்து தீர்த்துக்கொள்ள நினைக்க,

“நிஜமாவா? நம்பவே முடியல. விறைப்பாவே நின்னுக்கிட்டு இருந்தீங்க?” என,

அவன் காதில் எதுவும் விழவில்லை. “அச்சோ அக்னி! பேசிட்டிருக்கும் போது என்ன இது?” என அவனைத் தள்ளிவிட்டாள்.

“அக்னியா?” ஆட்சேபக் குரலெழுப்பினான்.

அவள் அப்படித்தான்! ஒவ்வொரு நேரமும் நினைத்த பெயரைச் சொல்லி அழைப்பாள். அனுவிடம் சஞ்சுத்தான் என்பாள். நிரஞ்சனாவிடம் ஸ்வரூப் என்பாள். இருவரும் இருந்தால் பொதுவாக அத்தான் என்பாள். அவனிடம் கண்டிப்புடன் அல்லது முக்கிய பேச்சுக்களின் போது ‘அக்னி’ வருவான். சற்றே இலகுவான நேரங்களில் ‘ஸ்வரூப்’ எட்டிப் பார்ப்பான்.

ஆனால் அவனுக்கு அவளின் ‘சஞ்சுத்தான்’ஐக் கேட்டாக வேண்டுமே! அதை அவள் உள்ளம் குழைந்திருக்கும் காதல் ஆலாபனை நேரங்களில் மட்டுமே கேட்க முடியும். இதோ இப்போதும் அவ்வழைப்பினைக் கேட்டு விடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கிவிட்டான்.

அவள் இருபத்தேழு வருடங்களாக தடை செய்யப்பட்டது என்று தடுப்பணைகள் செய்து வைத்திருந்த இடங்களையெல்லாம், அதிரடியாக ஆக்ரமித்துக் கொண்டு, அங்கே அடாவடியாக செய்யக் கூடாதவைகளுக்கெல்லாம் செயல்முறை பார்க்க முயல, அவள் முதலில் ஒப்புதல் அளிக்க மறுத்து, அவனின் ‘ப்ளீஸ்’களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு, பின்னர் இசைவு பத்திரம் எழுதி கொடுத்தாள்.

மோக மைதானத்தில் 

நிசி நிழலில் -ஓர்

புனித ஊழல்!

நின்றுகொண்டு கதைத்திருந்தவர்கள் எப்போது கட்டில் வந்து சேர்ந்தார்களோ? அந்தத் தலையணையைக் கேட்போமா? இந்தத் தரைத் தொட்டிருக்கும் உடைகளைக் கேட்போமா? ஆனால் தலைச்சுற்றி போயிருக்கும் அவைகளின் நிலையை இயம்பவே இன்னுமோர் புத்தகம் வேண்டுமே!

ஏற்றி வைத்திருந்த வாசனை மெழுகுவர்த்திகளெல்லாம் இருவரின் வெட்கமற்ற வேதியியலின் வெப்பம் தாளாமல் அணைந்து போயிருக்க, ஏசி காற்றில் ஏறியிருந்த குளிருக்கு வியர்த்தது.

அவன் மூச்சுக்களிலெல்லாம் இவள் மூர்ச்சையாகி கொண்டிருக்க, இவள் முணுமுணுப்புகளெல்லாம் அவனை முடியாத சுழலுக்குள் தள்ளியது. குழைந்திருந்தச் சந்தனத்தை அள்ளிப் பூசி தன்னைக் குளிர்வித்துக் கொண்ட அக்னி, கடைசியில் பூவையை மட்டுமல்லாது, கட்டிலில் அலங்கரித்திருந்த பூவிதழ்களையும் ‘சஞ்சுத்தான்’ என ஜெபிக்கச் செய்திருந்தது.

நேரம் இத்துணை வேகமாகப் பின்னிரவைக் கடக்க வேண்டுமா என அவன் நிந்தித்துக் கொண்டிருக்கும்போது, சிறிய ஆசுவாசத்தின் பின்னர் அவள் கேட்டாள். “நீங்க எப்போ அத்தான் என்னைப் பார்த்தீங்க? அப்போவே லவ்? நிஜமா என்னால நம்பவே முடியல!”

சிரித்துக்கொண்டான். “மேபீ ஒரு வன் இயர் முன்னாடி!”

“இஸிட்? எங்கே?”

சொன்னான். முதன்முதலாக கார்மேகத்தை ரசித்தபடி நின்றவளை, இவன் காருக்குள் இருந்து ரசித்ததைச் சொன்னான்.

‘சிறு வயதில் அவள் தந்த முத்த பந்தத்தின் ஈரம் காயாததால்தான் அன்று தன் மனம் அவள் பின்னே ஓடியதோ!’ என்று இப்போது தோன்றியது.

“ஆமாவா? அப்போவே நானும் உங்களைப் பார்த்திருந்தா எனக்கு அடையாளம் தெரிஞ்சிருக்கும். நானே வந்து பேசிருப்பேன். ஏன்னா நான் உங்களை அஞ்சு வருஷம் முன்னாடியே பார்த்திருக்கேன் தெரியுமா?”

துள்ளி புரண்டவனின் கண்கள் பளபளத்தன. “ஏனு?!”

“ம்ம்! சில சமயம் காலேஜ்ல பிரகதியைப் பிக்கப் பண்ணிக்க வருவீங்கதானே? அப்போ பார்த்திருக்கேன். அதனாலதான் உங்க கண்ணு அவ்ளோ ஃபெமிலியரா தெரிஞ்சப்போ கூட, உங்க தம்பி யாரும் எங்க காலேஜ்ல படிச்சவங்களோன்னு நினைச்சேன்.”

“சொல்லவேயில்ல!” இவனுக்கு ஏனோ அவள் சொல்லாமல் விட்டது பெருங்குற்றம் போல் தெரிந்தது. எத்தனையோ நாட்கள் அவளை மனதிற்குள் பூட்டி வைத்து தவித்துக் கிடந்ததெல்லாம் நினைவிற்கு வந்தது.

நகர்ந்து மீண்டும் அவனை நேராக படுக்கச் செய்து அவன் மார்பில் தலை வைத்துக்கொண்டாள். “உங்க லவ் எனக்கு தெரியுமா என்ன? அப்போ அது பெரிய விஷயமா தோணல. இப்போ நீங்க முன்னாடியே பார்த்திருக்கேன்னு சொல்லவும் எனக்கும் சொல்லத் தோணுச்சு.”

“போடி!”

“கோவிச்சுக்காதே சஞ்சுத்தான். அப்போவே எங்க காலேஜ்ல நிறைய கேர்ள்ஸோட க்ரஷ் லிஸ்ட்ல இருப்ப தெரியுமா?” என்று குழைந்தாள்.

“உனக்கு?” நிரம்ப எதிர்பார்ப்புடன் கேட்டான்.

“எனக்கு நீங்க ஒரு டீமோட லீடர் மாதிரி தெரிவீங்க. ஃபர்ஸ்ட் டைம் உங்க வீட்டுல பார்த்தப்போவும் அப்டித்தான் தோணுச்சு. மத்தபடி உங்களையே (சஞ்சு) நினைச்சிட்டிருந்ததால உங்களை நான் கன்சிடர் பண்ணல. ஸாரி சஞ்சுத்தான்!” என்று நேர்மையாக அவள் மனதினைச் சொல்ல, சுணங்கிப் போனது அவன் முகம்.

அதனை மீண்டும் விரிய செய்வதற்காக எக்கி அவன் இதழோடு இதழ் சேர்ந்தாள். மிச்சமெல்லாம் அவன் மீசையின் மிழற்றல்கள்!

இப்படியாக ஒவ்வொரு நாளும் இவனின் உறக்கமில்லா இரவுகளை இனிமையாக்கும்  உபகாரியாகிப் போனாள் அவள்.

என் இரவை எாித்து 

குழைத்து குழைத்து…

கண் மை பூசாதே…

இசைக்கும்🎵🦋🎶…

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. அய்யோ தெரியாம கண்ணை திறந்து படிச்சுட்டேனே 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

  2. பிரபஞ்சன் அக்னிய correct ta catch செஞ்சுட்டாரு. அது வெட்கம் மா 🤭 சஞ்சுவின் ரோபோடிக் ஸ்வரூப் அக்னி.

    “நம்ப முன்ன அடிச்சிக்கிட்டா நம்பள வெளி ஆளாக நினைக்கலைனு அர்த்தம்”.

    “கலகத்தை உண்டு செய்து காரியம் சாதித்துக்கொண்ட கள்ளப்பையன் குறுநகையுடன் சத்தமின்றி இடத்தை காலி செய்தான்” 💫 pretty catchy

    அர்ஜுன் தாத்தாவிடம் உணர்வுகரம் நீட்டியது அருமை.

    “வார்த்தைகளின் தளம்பலில் எந்த அம்மா என்று அறிந்து கொள்ளும்படி இருக்கும் அவன் பேச்சுக்கள்”. Wowww 😍🌻

    “மெழுகுவர்த்திகள் வெட்கமற்ற வேதியியலின் வெப்பம் தாங்காமல் அணைந்தன”

    Second part ஐம்புலன்களையும் திறக்க வைக்குதே 🙈 wt to do!
    We r n 🫢🤭🫣😯😦😧😮😶‍🌫️ mode ur honour 🙃😝

    1. Author

      விரிவான, அழகான கருத்திற்கு மிக்க நன்றி சிஸ் 🌈🫧 ஹாஹா… எமோஜிலயே ஒரு எபிசோட் எழுதின மாதிரி இருக்குது🫣🫣