Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 26

அமுதன் அதி ரூபன் ஓர் திருநங்கை என்று கூறியதில் அதிர்ந்த கௌரி , மயங்கி விழ , அவளை தண்ணீர் தெளித்து எழுப்பிய அமுதன் , மீண்டும் பிளாஷ் பாக்கை தொடர்ந்தான்.

ஸ்ரீஜன் நித்யா யாரிடம் பேசினாள் என்று தெரிந்துக்கொள்ளும் ஆவலில் அவ்வுருவத்தை நெருங்க , அங்கே அதி ரூபனிருந்த கோலத்தை கண்டு அதிர்ந்த ஸ்ரீஜன் இரண்டடி பின்னே சென்று , தன் கையிலிருந்த டார்ச் லைட்டை வைத்து அவ்வுருவத்தின் முகத்தில் அடிக்க , அங்கோ அதி ரூபனது கைகளும் , கால்களும் சேது படத்தில் வருவது போல் ஓர் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருக்க , அவனது முகமெங்கும் யாரோ ஒருவரின் கைரேகை பதியும் அளவிற்கு காயம் ஏற்பட்டிருக்க , ஓர் கிழிந்த தாவணி மட்டும் மேலே கிடக்க , அவன் அருகில் உடைந்த கண்ணாடி வளையல்கள் சிதறி கிடந்தது. இதை சற்றும் எதிர் பார்க்காத ஸ்ரீஜன் , அதிரூபனை நெருங்கி அவனை தொட போக , அவனோ ” என்னை விட்டுருங்கோ … நேக்கு எதுவும் தெரியாது … நேக்கு பொண்ணா இருக்கறச்ச தான் பிடிக்குறது … நீர் என்ன அடிச்சு உதைச்சாலும் , நா மாறமாட்டேன் … ” என்று அவன் பிதற்ற , அப்போது தான் ஸ்ரீஜனுக்கு அவன் திருநங்கை என்பது புரிய வர , அதிரூபனை எழுப்பி அவனிடம் நம்பிக்கை வார்த்தை பேச , முதலில் ஸ்ரீஜனை நம்ப மறுத்த அதிரூபன் , பின் அவனது சி.பி.ஐ அடையாள அட்டையை பார்த்த பின் அவனை நம்பி , தன் குடும்பத்தின் கருப்பு பக்கத்தை விவரிக்க துவங்கினான்.

அத்வேய்த ராம சேஷாத்ரிக்கு அதிரூபன் , அனந்தரூபன் என்று இரட்டை பிள்ளைகள். இதில் அதிரூபன் படிப்பில் படு கெட்டி , ஆனால் அனந்தரூபனோ அவனுக்கு நேர் எதிர். அனந்தரூபன் சிறுவயது முதலே படிப்பில் நாட்டமில்லாமல் , அவனது பரம்பரை தொழிலான நாத்திகத்தில் இறங்கிவிட்டான். 

அத்வேய்த ராமனுக்கு அனந்தரூபனின் இச்செயல் பிடிக்காமல் எக்கேடோ கேட்டு போ என்று தண்ணி தெளித்து விட்டவர், அவரது முழு கவனத்தையும் அதிரூபன் மேல் செலுத்த துவங்கினார். அத்வேய்த ராமனுக்கு அதிரூபனை நன்றாக படிக்க வைத்து , தனது பயோஸ்பெக் பார்மசிட்டிகல் நிறுவனத்தை அவன் கையில் ஒப்படைக்க விரும்பினார். அதிரூபனும் அவரது ஆசையின்படி நன்றாக படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுவிட்டான். எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டிருக்க அப்போது தான் அதிரூபன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தானே ஒரு பெண்ணாய் உருவகபடுத்திக்கொள்ள துவங்கினான். அவனது இச்செயலில் அதிர்ந்த அவனது பெற்றோர் அவனை ஒரு மருத்துவரிடம் காண்பிக்க , அதிரூபனை சோதித்த மருத்துவர் , அவன்  ” கிளைன்பெல்டர் நோய்த்தொகை”யால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் , பிறப்பால் அவன் ஒரு ஆண்பிள்ளையாய் இருந்தாலும் , கூடுதலான எக்சு குறுமவகங்கள் அமைய பெற்றதால் பெண்களுக்கு உரிய சில பழக்கவழக்கங்கள்  கொண்டிருப்பதாகவும் , மேலும்  இது பெற்றோரிடம் இருந்து மரபாகக் கையளிக்கப்படுவதில்லை என்று விளக்கமளித்தவர். அவனை அவன் போக்கிற்கு வளர்க்க வேண்டும்.  இறைவனின் படைப்பில் பல வேறுபாடுகள் அதில் ஒன்று தான் திருநங்கைகளும் , ஆதலால் திருநங்கை என்று அவனை ஒதுக்காமல் , அவனை அரவணைத்து வளர்க்குமாறு அறிவுறுத்தினார்.

மருத்துவரிடம் அவர் கூறியதெற்கெல்லாம் ஆமாம் சாமி போட்ட அத்வேய்த ராமர் , வீட்டிற்கு வந்த மறுநொடி அவரது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார். வீட்டிற்கு வந்த மறுநொடி , அனந்தரூபனை அழைத்து , இனிமேல் அதிரூபனுக்கு பதிலாய் அவன் தான் அதிரூபனின் பெயரில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு போட்டவர். அதிரூபன் ஒர் திருநங்கை என்று தெரியவந்தால் எங்கே தனது குடும்ப மானம் காற்றில் பறந்துவிடுமோ என்று பயந்தவர் அதிரூபனை வீட்டிலேயே அடைத்து வைத்து தினம் தினம் அவனை பையனாய் மாறுமாரு சித்திரவதை செய்ய துவங்கினார்.

தன் மகன் தன் கண்முன்னே இத்தனை கொடுமைகளை அனுபவிப்பதை தடுக்கயிலாத தன் கையாலாகாத தனத்தை எண்ணி நித்தம் நித்தம் அழுது கரைந்த அதிரூபனின் அன்னை உடல்நலன் குன்றி இறந்துவிட , அதிரூபனின் நிலமை நாளுக்கு நாள் மோசமாக துவங்கியது. 

அப்போது தான் ஒரு நாள் தன் அண்ணன் வீட்டிற்கு வந்த வெங்கட ராமன் அதிரூபனின் நிலையை கண்டு அதிர்ந்தவர், தன் அண்ணனிடமிருந்து அதிரூபனை காக்கும் பொருட்டு ஒரு யோசனை கூறினார்.

அவர் யோசனையின் படி , அதிரூபனுக்கு வீட்டிற்குள்ளே ஒரு ஹோம் டூயூடர் ஏற்பாடு செய்து அவனுக்கு பாடம் எடுக்க துவங்க , அதிரூபனின் கவனமும் கொஞ்ச கொஞ்சமாக படிப்பில் திரும்ப துவங்கியது. அதே நேரம் அதிரூபனின் பெயரில் பள்ளி சென்றுக்கொண்டிருந்த அனந்தரூபனால் அவன் போல் படிக்க இயலாமல் போக , அதன் விளைவாய் பனிரெண்டாம் பொது தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் போனது.

இதை அறிந்த அத்வேய்த ராமர் , அவனை போட்டு அடி வெளுத்தவர் , இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தார். அவரின் முடிவின் படி , பரிட்சை நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அதிரூபனின் பெயரில் அனந்தரூபன் பள்ளிக்கு செல்ல , பரிட்சை எழுதுவதற்கு மட்டும் அதிரூபன் பள்ளிக்கு செல்ல துவங்கினான்.

அனந்தரூபன் கொஞ்சம் கொஞ்சமாக தனது அடையாளத்திலிருந்து வெளியில் வந்தவன் , அதிரூபனின் அடையாளத்தை தனதாக்கி கொண்டான். 

நாட்கள் வருடங்களாய் உருண்டோட … 

அனந்தரூபன் பள்ளி படிப்பு முடித்து கல்லூரி படிப்பை துவங்கவிருக்க , அவனது தந்தையின் விருப்பப்படி பயோடெக்னாலஜி இன்ஜினியரிங் படிக்க துவங்க , இங்கே வீட்டிலேயே அதிரூபனுக்கு பாடமெடுக்க ஒரு பேராசிரியரை நியமிக்க , ஆனால் அப்பேராசிரியர் இது ஒன்றும் மனப்பாடம் செய்து படிக்கும் படிப்பில்லை என்றவர் , இதற்கு நிச்சயம் ஒரு ஆய்வு கூடம் தேவை என்று மிகவும் கண்டிப்புடன் கூறி விட , பின் வேறு வழியில்லாமல் , அத்வேய்த ராமர் அவன் படிப்பிற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கி அவருக்கு தெரிந்த சுற்றி ஆள் அரவம் இல்லாத , ஓர்  மாளிகை போன்ற வீட்டில் ஆய்வுக்கூடம் அமைத்து தர, அப்பேராசிரியரின் உதவியுடன் அதிரூபன் பையோடெக்னாலஜியின் அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டான். அதுமட்டுமல்லாது அப்பேராசிரியர் மீநுண் தொழில்நுட்பம் என்னும் நானோ தொழில்நுட்பதிலும் சிறந்து விளங்கியவர் , அதிரூபனின் எதையும் வேகமாக கற்றுக்கொள்ளும் திறனில் கவர்ந்திழுக்கப்பட்ட அப்பேராசிரியர் , கணினி மீநுண் தொழில்நுட்பத்தையும் அவனுக்கு கற்றுக்கொடுக்க துவங்கினார்.

  அதுமட்டுமல்லாது அப்பேராசிரியர் மீநுண் தொழில்நுட்பம் என்னும் நானோ தொழில்நுட்பதிலும் சிறந்து விளங்கியவர் , அதிரூபனின் எதையும் வேகமாக கற்றுக்கொள்ளும் திறனில் கவர்ந்திழுக்கப்பட்ட அப்பேராசிரியர் , கணினி மீநுண் தொழில்நுட்பத்தையும் அவனுக்கு கற்றுக்கொடுக்க துவங்கினார். 

 பள்ளியில் நடந்தது போலவே , கல்லூரியிலும் மற்ற நாட்களில் அனந்தரூபன் அதிரூபனாய் கல்லூரி செல்ல , பரிட்சை சமயங்களில் மட்டும் அதிரூபன் கல்லூரி சென்று யாரிடமும் பேசாமல் நேராக தேர்வு எழுதி வந்தான். இதுவே தொடர்கதையாய் நான்கு வருடங்களும் தொடர , அனந்தரூபன் அதிரூபனின் அடையாளத்தில் பட்டம் பெற்றான். அவன் பட்டம் பெற்ற அடுத்த நாளே பியோஸ்பேக் பார்மசிட்டிக்கல்ஸின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்றுக்கொண்டு , அப்பாவின் காசில் வாழ்க்கையை தன் இஷ்டம் போல் வாழ துவங்கினான்.

இதுவரை எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டிருக்க , முதல் முறையாக அப்பேராசிரியர் தன் சுயரூபத்தை காட்ட துவங்கினார். அதிரூபனின் தந்தையை சந்தித்து , அதிரூபனை தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள போவதாய் கூற , அவனின் தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்பேராசிரியரும் முதலில் கெஞ்சி பார்க்க , ஆனால் அவனது தந்தை மறுத்துக்கொண்டே போக , இறுதியில் அப்பேராசிரியர் அதிரூபனை தன்னுடன் அனுப்பியே ஆகவேண்டும் , இல்லையெனில் அனந்தரூபன் அதிரூபனாய் வலம் வந்துக்கொண்டிருப்பதை வெளியில் சொல்லிவிடுவேன் என்று மிரட்ட , அத்வேய்த ராமரோ , உயிரே போனாலும் அதிரூபனை அவருடன் அனுப்ப முடியாது , வேண்டுமானால் அனந்தரூபனை கூட்டிக்கொள்ளுங்கள் என்று கூற , முதலில் மறுத்த அப்பேராசிரியர் , இறுதியில் அத்வேய்த ராமர் கூறியதை ஏற்றுக்கொண்டவர் சில பல நிபந்தனைகளை விதிக்க துவங்கினார்.

அந்நிபந்தனையின் படி , முதலில் அதிரூபனின் பெயரில் ஒரு கோச்சிங் இன்ஸ்டிடியூட் துவங்கபட்டு , அதில் அனந்தரூபன் அதிரூபனாய் நடித்து நிர்வாக இயக்குனராக பொருப்பேற்றான். அதே நேரம் , அதிரூபனை அனந்தரூபனாய் சித்தரித்து , அவன் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாய் போலி ஆதாரங்கள் தயார் செய்து, உயிரோடு இருக்கும்  அவனுக்கு இறப்பு சான்றிதழ் வாங்கப்பட்டது. அதனூடே அதிரூபன் மீண்டும் வீட்டுசிறையில் முற்று முழுதாய் அடைக்க பட்டான். 

அடுத்த வேலையாய் ரூபன் இன்ஸ்டிடியூட்டில் அனாதை இல்லங்களில் நன்றாக படிக்கும் அனாதை குழந்தைகளுக்கு இலவசமாக போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதாய் விளம்பரம் செய்து , பல மாநிலங்களில் இருந்தும் அனாதை குழந்தைகள் சேர்க்கபட்டனர். இதனூடே அப்பேராசிரியர் தன் ஆராய்ச்சியை துவங்கிய புதிதில் , அதிரூபனை அவனது வீட்டில் சந்தித்து , தனது ஆராய்ச்சியை அவனுக்கு விளக்கி அதன் நன்மை தீமைகளை எடுத்துரைத்து , இவ்வாராய்ச்சியில் அவனுடைய பங்கு மிகவும் அவசியம் என்று வேண்டியவர் , வீட்டிலேயே அவனுக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து குடுத்து , அவனது தந்தையின் அனுமதியுடன் அவனுடனே அவர்களது வீட்டில் தங்கி அவனையும் தன் ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக்கொண்டார். அத்வேய்த ராமரும் அவன் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தால் போதுமென்று இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதிரூபனின் துணையோடு அவரது முதற்கட்ட ஆராய்ச்சியை தொடங்கியவர் அதில் வெற்றியும் கண்டார். அதற்கு பின் அதிரூபனை தவிர்க்க துவங்கியவர் , அனந்தரூபனை தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை அவர்கள் இன்ஸ்டிடியூட்டில் படித்துக்கொண்டிருந்த அனாதை குழந்தைகள் மேல் சோதித்து பார்க்க துவங்கினார். 

முதலில் விளையாட்டாய் துவங்கியது பின் விபரீதமாய் மாறதுவங்கியது… அதன் விளைவு , சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து மாணவர்களையும் ஒரு ஆய்வுகூடத்தில் தங்கவைக்கும்படி ஆனது. அத்வேய்தராமர் முதலில்  அதிரூபனுக்காய் ஏற்படுத்திக்கொடுத்த ஆய்வுக்கூடத்திலேயே ஆராய்ச்சியை தொடரும்படி கூற , அதை மறுத்த அப்பேராசிரியர் , தனக்கு புதிதாய் ஒரு  ஆய்வுக்கூடம் வேண்டும் என்று வாதம் செய்ய , இறுதியில் எங்கே அவரால் தன் குடும்ப ரகசியங்கள் வெளியில் கசிந்து விடுமோ என்று பயந்து , அவர் கேட்டது போலவே யாருக்கும் தெரியாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு ஆய்வுகூடம் அமைத்து குடுக்க , அப்பேராசிரியரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு ஆய்வுகூடத்தில் கால்பதித்தார்.

இதையாவும் கேட்டுக்கொண்டிருந்த கௌரியின் கண்களிலிருந்து ரூபியையும் , பிற குழந்தைகளையும் நினைத்து கண்ணீர்வழிய , முகமே தெரியாத அப்பேராசிரியரின் மீது கட்டுக்கடங்கா கோபம் எழுந்தது. பாவம் அவள் அறியவில்லை அப்பேராசிரியர் யாரென்று தெரிந்துக்கொள்ளும் போது அவளது நிலை தலைகீழாய் மாறப்போகிறதென்று ….

யார் இந்த பேராசிரியர் ? அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி என்ன ? 

ரகசியம் வெளிச்சத்தை நெருங்கிவிட்டது , ஆனால் அதை வெளிக்கொணர இறைவன் அமுதனின் உயிர்த்தோழனான கதிரின் தந்தை சிவபிரகாசம் என்னும் வில்லனை துணைக்கு அழைத்துக்கொண்டார் ….

வில்லனால் வில்லனுக்கே வில்லங்கம் காத்திருந்தது ….

தொடரும் ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு ….

( கதைய ஆரம்பத்துலயிருந்து படிச்சவங்களுக்கு அந்த ப்ரோபஸ்ஸர் யாருன்னு தெரிஞ்சிருக்கும். பாப்போம் யாரு சரியா கெஸ் பன்றிங்கன்னு … )

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கௌரி,வந்தி அப்பாவா டா😒😒😒😒அது.