Loading

 

“டேய் கௌதம் இன்னு என்னடா பண்ணிட்டிருக்க? நீ ரெடியாகி கிளம்புறத்துக்குள்ள அந்த பொண்ணு காஃபி ஷாப் வந்துடுவா போல” என்று அம்பிகை அறை வாசலைப் பார்த்து புலம்பிக்கொண்டிருக்க

அறையில் கௌதமோ கோழி கிறுக்கல் கையெழுத்தில் ‘சைன், கொஸ்,டேன்’ சமன்பாடுகள் தீர்க்கப்பட்டிருந்த ஒரு பழைய காகிதத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய் நீ நைன்டிஸ் கிட் னு ஞாபகம் இருக்கா? இதுக்கு மேல பொண்ணு அமையிறது கஷ்டம் டா. அப்றம் உனக்கு பொண்ணு இல்ல பொண்ணு மாதிரி இருக்க பொம்மைய தான் டா கட்டி வைக்கனும்”

கௌதம் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியே வந்தான்.

“அம்மா!!!! நீ என்னை ரொம்ப டேமேஜ் பண்ற. வர வர நீ சரியே இல்ல மாதாஜி!!!”

அம்பிகை சாவகாசமாக இருக்கையில் இருந்து திரும்பி ” நானா டா சரி இல்ல? நீ தான் இன்னு அந்த பிழை விட்ட மேத்ஸ் பேப்பர்ல என்ன இருக்குனே தெரில, அதையும் தினமும் பாத்துட்டிருக்க”

“அம்மா!!! என் பீலிங்ஸ்லாம் உனக்கு புரியாது” என்று கைகளை பேண்ட் பாக்கெட்டில் புதைத்து தலையை இடப்பக்கமாக கோபமாக திருப்பி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.

“ஆமாடா எனக்கு புரியாது தான். இப்போ இருந்து அலட்டாம கிளம்பு”

“மா….இப்பிடி எங்கையாவது நடக்குமா? சொல்லு. பொண்ண பாக்க நாம குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போய் அங்க காபி தண்ணி குடிச்சு. பொண்ண பாத்து….பேசி….இப்பிடி எவ்ளோ இருக்கு?”

“எந்த காலத்தில டா இருக்க?”

“இப்ப என்ன உனக்கு? காபி தண்ணி தானே வேணும், நீ போறதே காபி ஷாப் தானே. போ…போயி அங்க நல்லா குடி. வேணும்னா ரெண்டு பேரும் ஜோடி போட்டு ஸ்ரோ போட்டு குடிங்க”

கௌதம் அம்பிகையைப் பார்த்து இடப்புருவத்தை தூக்கி,” உன்ன மாதிரி ஒரு நல்ல அம்மா கிடைச்சா….குடும்பம் விளங்கிடும்”

“சரிதான் போ…டா…உன்ன இன்னும் பொத்தி பொத்தி வளக்குறேன்னு உங்கப்பா திட்றாரு. எனக்கு தேவையாடா இதெல்லாம். இப்போ நீ கிளம்பல…. அப்பாக்கு ஃபோன் போட்டுருவேன் பாத்துக்க. “

“போறேன் போய் தொலையிறேன்.” என்று சலித்தவாறே வாசலுக்கு செல்ல

“டேய் எப்பிடியாவது இந்த பொண்ணயாவது கரெக்ட் பண்ணிடு டா” என்று வாசலைப் பார்த்து கத்த

“ரொம்ப கஷ்டம்” என தலையில் அடித்து விட்டு கருநீல நீள்கை சட்டையை கை முட்டி வரை மடித்து விட்டு பைக்கை எடுத்தான்.

காஃபி ஷாப்பில்…

“எங்க இருக்காங்க? ஒரு வேளை போய்ட்டாங்களோ. ஒரு ஃபோனை போட்டு பாப்போம்.”

“ஹெலோ, ஏங்க வந்துட்டிங்களா? சாரி லேட் ஆகிடுச்சு. டிராஃபிக் ல மாட்டிட்டேன்”

“ஹான்..வரேன்”என்று செயற்கை நீரூற்றுக்கு அருகில் இருந்த மேசைக்கு அருகில் சென்றாள். அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த கௌதமை தட்டி “ஹாய்!” என்று கை கொடுக்க அவனோ இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து அவளையே பார்த்திருந்தான்.

அவளோ அவனின் முகத்துக்கு நேரே கையை அசைத்து “ஹெலோ” என்றாள்.

அப்போது தான் நனவுலகிற்கு திரும்பிய கௌதம் “ஹெ..ஹெலோ ” என்றான். ஆனால் காற்று தான் வந்தது.

அவளும் சிரித்து விட்டு “நான் இங்க இருக்கலாமா?” என்று எதிர் இருக்கையை காட்டினாள். அவனும் தலையசைக்க இருக்கையில் அமர்ந்தாள்.

கௌதம் அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையை உணர்ந்தாளோ என்னவோ ஒரு நிமிடம் குனிந்து கைவிரல்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

பின் நிமிர்ந்து,” நா…அஷ்வதி. லெக்சரர் ஆ வர்க் பண்றேன். அம்மா இல்ல. அப்பா மட்டும் தான். இப்போ ரிடையர்ட் போலிஸ் ஆபிசர். நானு , அப்பா அப்றம் எங்க வீடு. இது தான் என் உலகம்.”

“அப்றம் சொல்லுங்க உங்கள பத்தி”என்றவுடன் அவனின் மொத்த

ஆர்வமும் வடிந்து போனது. தன்னை அவளுக்கு தெரியவில்லை என்பதே அவனுக்கு ஒரு வலியை கொடுத்தது.

மீண்டும் உறைந்து போனான்.

“ஏங்க, நீங்க அடிக்கடி கனவுக்கு போய்டுறீங்க”

அவன் குரலை சரிப்படுத்திக்கொண்டு ,

” சாரி ஏதோ யோசனைல இருந்துட்டேன். என்னை பத்தி எதுவுமே தெரியாதா?”என்று அவளையே ஆர்வமாக பார்த்தான்.

அவள் தயக்கமாக ‘இல்லை’ என்று தலையசைத்து “அப்பா செலெக்ஷன் எப்பவுமே தப்பாது. அதோட உங்கள நேர்ல பார்த்து தெரிஞ்சிக்கனும் னு எதுவுமே கேட்கல”

“ஓ…”என்றவன் தன்னை திடப்படுத்தி விட்டு

“என் பேரு கௌதம். ஆர்கிடெக்ட் டா இருக்கேன்”என்று அவன் தொடங்கும் போதே

“ஹே!!! உங்க பேரு கௌதமா?”

ஆமாமென தலையசைத்தான்.

“வாவ்!!! உங்க முழு பேரே கௌதம் தானா?”

இல்லை என்று சொல்ல வந்தவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு “ஆமாம்” என்று அவளையே ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

“ஹோ… “

“ஏன் கேட்டிங்க?” எனும் போதே சுட சுட கேப்பச்சீனோ காஃபி இருவருக்கும் வைக்கப்பட்டது.

“இல்ல…என் ஸ்கூல் பிரெண்ட் ஞாபகம் வந்தான். அவன் பேரும் கௌதம் தான். கௌதம் பிரபாகர்.” என்றவுடன் அவன் கள்ளமாக புன்னகைத்தான். அவன் மனதில் வாடிப்போன மலர்கள், மலர ஆரம்பித்தன.

“ஓ…ரொம்ப குளோசா?”என்றவன் காஃபியை எடுத்து ஒரு மிடறு குடித்தவாறே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆமா..ரொம்ப…”

“எனக்கு கிடைச்ச பிரெண்ட்ஸ்லயே ரொம்ப பேவரிட்டும் அவன் தான்”

“ஒரு இரகசியம் சொல்லட்டா”

சம்மதமாக தலையசைத்தான்.

“அவனுக்கே தெரியாம அவனை சைட் அடிச்சிருக்கேன்.”

‘அது தான் எனக்கு தெரியுமே’என்று மனதில் நினைத்து விட்டு வெளியில் சிரித்தான்.

“இன்டரஸ்டிங்….” என்றவனுக்கு ஐஸ் கட்டி மழையில் நனைந்தது போன்றொரு பிரம்மை.

“ரொம்ப நல்ல பையன். மெலிவா இருப்பான். அதிகம் பேச மாட்டான். ஆனா, புட் போல் னா அவனுக்கு உசுரு. ஸ்கூலுக்கு வந்த முதல் நாளே அவனை ஒரு மேட்ச் ல தான் பாத்தேன். சும்மா அப்பிடி விளையாடுவான். ஆனா கடவுள் செட்டிங்க பாருங்க..வந்ததுமே என்னை அவன் பக்கத்தில தான் போட்டாங்க”

“சும்மாவே அமைதி. இதுல நான் வந்ததும் வாயே தொறக்க மாட்டான். அவன்லாம் பொண்ணை பார்த்தா மண்ணை பாக்குற பரம்பரைங்க. சரியான வேஸ்ட் ஃபலோ”

‘அடிப்பாவி! என்னை மாதிரி நல்ல பையன் இருக்க முடியாதுனு சொல்லுவியேடி….’

“ஏன் ங்க?”

“பின்ன என்னங்க, நான் என்ன அவனை கடிச்சா சாப்பிட போறேன். “

“சரி தான். பாவம்… அவனுக்கு என்ன பிரச்சினையோ” என்று பெருமூச்சு விட்டான்.

“ஆமாங்க. அவனுக்கொரு பிரச்சினை தான். அவன் குடும்ப கஷ்டம் அவன அப்பிடி ஆக்கிடுச்சு. அவ்ளோ சொந்தம் இருந்தும் வறுமை. அவங்க முன்னாடி எல்லாம் நல்லா வாழ்ந்து காட்டனும் னு வெறித்தனமா படிப்பான். யாரையும் பெருசா நம்ப கூடாது, பொறுப்பா இருக்கனும் னு அவனுக்குள்ளேயே ஒரு வட்டத்தை போட்டுட்டான். புட்போல் விளையாடும் போது மட்டும் தான் அவன் இயல்பாவே இருப்பான். “

“அவனுக்கு அவ்ளோ பேன்ஸ் இருக்காங்க. ஆனா எவ்ளோ பாராட்டுனாலும் அதை ஒரு சின்ன சைமைலோட கடந்து போவான். ஆக்சுவலி எனக்கு ரொம்ப பிடிச்சதே அதான்.”

‘தேங்க்யூ! ‘

“ஒரு தடவை அவன எனக்கு ‘சைன் கொஸ் டேன்’ சொல்லி தர சொன்னாங்க. அப்போ தான் என் கிட்ட பேசவே ஆரம்பிச்சான். “

“கிடைச்ச சான்ஸ விடுவேனா நானு… அப்பிடியே நானும் பேச ஆரம்பிச்சேன். ஆனா பயபுள்ள எக்ஸாம் வச்சே சாவடிப்பான். படிப்ப தவிர வேற எதுவும் பேச மாட்டான். நானா வேற ஏதாவது பேச வந்தா அவன் பேசறதை கட் பண்ண பார்ப்பான். ஆனா நான் தான் ‘பிளீஸ் பேசுங்க. இப்பிடி அமைதியாவே இருந்தா எனக்கு பைத்தியமே புடிச்சிடும். நீங்க பேசாட்டியும் பரவால்ல நான் பேசுறையாது கேளுங்க. என்னால பேசாம லாம் இருக்க முடியாதுங்க’ அப்பிடின்னு கெஞ்சி கேட்டதும் தான் கொஞ்சம் ஒழுங்காவே பேசுனான்.

கௌதம் முடியாமல் சத்தமாக சிரித்து விட்டான்.

“சிரிக்காதிங்க…”

“சாரி சாரி சொல்லுங்க”

“என்கிட்ட நிறைய ஷேர் பண்ணுவான். என்மேல ரொம்ப அக்கறையாவும் இருப்பான். அப்றம்…இப்பிடி பேசி பேசியே அவனை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டபோ தான் அவன் பிரச்சினையும் புரிஞ்சுது. அவனுக்கு ஹெல்ப் பண்ணனும் னு தோனுச்சு. “

“ஏதாவது பண்ணி அவனை மத்தவுங்களோடவும் பேச வச்சேன். எங்க பிரெண்ட்ஸ் செட் ட கொஞ்சம் பெருசாக்கினேன். அவனோட எல்லா மேச் கும் நாங்க எல்லாருமே போய் சப்போர்ட் பண்ணுவோம். டூர் கு எல்லாம் வராம இருந்தவன வலுக்கட்டாயமா வரவச்சோம். அவனும் அவன் கூட்டை விட்டு வெளிய வர ஆரம்பிச்சான். அவன் சேட்டை எல்லாம் பண்ணுவான்னு எங்களுக்கும் அப்போ தான் தெரியும். “

“ஒரு தடவை அவன் விட்ட பேப்பர் ராக்கெட் கோரிடோர் வழியா போன மேத்ஸ் டீச்சர் கொண்டையிலேயே சொருகிடுச்சு. ஹப்பா…அதை எடுக்க எவ்ளோ பாடு பட்டோம் தெரியுமா? , டவுட் கிளியர் பண்ணனும்னு போய், அவங்களுக்கே தெரியாம அதை எடுத்தோம். இப்போ நினைச்சாலும் புல்லரிக்கும்”

அவன் புன்னகை அழகாக விரிந்தது, பழைய நினைவுகளில்…

“எல்லாம் நல்ல படியா போய்ட்டிருக்கும் போது அப்பாக்கு டிரான்ஸ்பர். வேற ஊருக்கு போய்ட்டேன். போகும் போது அவன் திருத்தி குடுத்த எக்ஸாம் பேப்பர்ல

“யூ ஆர் மை ஃபர்ஸ்ட் கிரஷ். ஐ லைக் யூ சோ மச்” னு எழுதி குடுத்துட்டு வந்தேன். “

“நீங்க பாக்குற பார்வை புரியுது. எனக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி தான். அதான் அவன் பேப்பர்லயே எழுதி குடுத்துட்டு வந்துட்டேன். அது தான் அவனை நான் கடைசியா பாத்தது” என்று பெருமூச்சு விட்டாள்.

“சரி விடுங்க. நான் இப்பிடி தான் லொட லொட னு இருப்பேன். நீங்க பேசுங்க”

“சரி….அவன மாதிரி ஒரு பையன் உங்களுக்கு பரபோஸ் பண்ணா….ஏத்துபிங்களா?”

“அவன மாதிரி பையன் எனக்கு ரொம்ப பிடிக்கும். சில வேளை நான் ஏத்துப்பேனா இருக்கும்” என்று காஃபியை அருந்த தொடங்கினாள்.

“அப்போ….அவனே….உங்களுக்கு பாத்த மாப்பிள்ளையா இருந்தா?”என்றவுடன் குடித்துக் கொண்டிருந்த காஃபியை அப்படியே அவன் முகத்தில் துப்பி விட்டாள்.

“குரங்கு! இப்பிடியாடி துப்புவ?”என்று முகத்தை துடைத்தான்.

அவளோ கண்கள் கலங்கிய நிலையில் “பிரபா????” என்று தன் முகத்திலும் சிந்திய காஃபியை துடைக்க கூட இல்லாமல் அவனையே கேள்வியாகப் பார்த்தாள்.

டிரிம் செய்யப்பட்ட மீசை, தாடியுடன் பெரிய பிரேம் உள்ள பேஷன் கண்ணாடி அணிந்திருந்து அவனுக்கே உரிய கம்பீரமான தோற்றத்தில் அமர்ந்திருந்தவனை இமைக்காது பார்த்தாள்.

அவனும் ஆமாமென தலையசைக்க, அவள் முகம் அழகாக மலர்ந்தது.

அவனும், தூக்கி போடப்பட்ட போனிடெய்லில் அவளுக்கே உரிய எளிமையான தோற்றத்திலும் அழகாக இருந்தவளை இரசித்தான்.

பின் ஸ்டான்டில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து அவள் முகத்தை துடைத்துக் கொண்டே “உன்ன பாக்கும் வரைக்கும் எனக்கு பார்த்த பொண்ணு நீதான்னு எனக்கு தெரியாது.

ஆனா உன்னை நான் மறந்ததே கிடையாது. என்னை விட்டு போன நாள் ல இருந்து இன்னைவரைக்கும் உன்னை நினைக்காத நாளும் கிடையாது.

நான் படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு வந்த பிறகும் உன்ன தேடிட்டு தான் இருந்தேன்.

என்னை எனக்கே திருப்பி குடுத்தவளை எப்பிடி நான் மறப்பேன்.

நீ பண்ற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ என்னை சைட் அடிச்சது கூட. ஆனா சொன்னதில்ல. உன்ன கான்டெக்ட் பண்ண ட்ரை பண்ணேன். ஆனா முடியல. கடைசியா ஸ்கூல் கெட் டு கெதர் ல கூட பாக்கனும் னு ஆசை பட்டேன் . ஆனா நீ வரலை. “

“அம்மா பொண்ணு பாக்கும் போதும் அந்த பொண்ணு கிட்ட உன் கேரெக்டர் ஏதாவது இருக்கானு பார்ப்பேன். ஆனா ஏன் னு யோசிச்சது இல்ல.

உன் கூட இன்னு நிறைய ஷேர் பண்ணனும். உன்னோட பழகனும், உனக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணனும். இப்பிடி நிறைய ஆசை இருக்கு.

இது லவ் ஆ என்ன னு எல்லாம் தெரியாது. ஆனா இந்த ஃபீல் புடிச்சிருக்கு.”

“இப்போ, இந்த செகண்ட் உன்ன லவ் பண்ணனும் னு தோனுது. கிடைச்ச சான்ஸ மிஸ் பண்ண தோனல. சொல்லு லவ் பண்லாமா?”

அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. அவன் மனதை அறிந்தவள் இன்பமாக அதிர்ந்தாள்.

அவனையே பார்த்திருந்தவள்,” நமக்கு கல்யாணம் பேசிட்டு இருக்காங்க. உனக்கு ஞாபகம் இருக்கா?”

“அதெல்லாம் இருக்கு. கல்யாணம் வரைக்கும் லவ் பண்ணுவோம். கல்யாணத்துக்கு பிறகும் லவ் பண்ணுவோம்”

“நான் லொட லொட னு பேசிட்டே இருப்பேன்”

“பரவால்ல, ஏற்கனவே பழகுனது தானே. ரொம்ப முடியலனா காதுல பஞ்சு வச்சுக்குறேன்”

அவன் கையை வலிக்கும் படி அடித்துவிட்டு, ” நான் வேலைக்குப் போறதை நிறுத்த மாட்டேன். “

“கண்டிப்பா போ. உன்னோட அடையாளத்தை அழிய விட மாட்டேன்”

“பசங்க பிரெண்ட்ஸ் எனக்கு நிறைய பேர் இருக்காங்க”

“நான் சந்தேகப்பட மாட்டேன்”

“வீட்டு வேலை எல்லாம் ஷேர் பண்ணனும்”

“அதுல எனக்கு பிரச்சினை இல்ல”

‘என்ன இவன் இப்பிடி இறங்கிட்டான்’

“ஹான்…எனக்கு பெருசா சமைக்க தெரியாது.”

“பரவால்ல சொல்லி தாரேன். வேலை ஷேர் பண்ணும் போது உனக்கும் தெரியுனும்ல சோ…தெரிஞ்சுக்கோ” என்று தோளைக் குலுக்கி விட்டு ஒய்யாரமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

‘எப்பிடி போட்டாலும் சிக்சர் அடிக்கிறானே’

“வாரவாரம் எனக்கு ஐஸ்கிரீம், சிப்ஸ் இப்பிடி நிறைய வாங்கி தரனும்”

அவன் சற்று எழும்பி அவள் தலையில் கொட்டி விட்டு “லூசு…இது கூட வாங்கி தர மாட்டேனா? ஆனா வாரவாரம் இல்லை. டூ வீக்ஸ் கு ஒரு தடவை தான். ஹெல்த் ரொம்ப முக்கியம்”

“உன்ன கல்யாணத்துக்கு பிறகும் வாடா போடா னு தான் கூப்பிடுவேன்”

“தாராளமா. ஆனா சொந்தக்காரங்க நிறைய பேர் இருக்கும் போது மட்டும் வேணாம். எனக்கு ஒரே ஷையாகிடும்”

“கோவம் வந்தா அடிப்பேன்”

“நான் தப்பு பண்ணா கண்டிப்பா ஏத்துக்குவேன். ஆனா ரூம் உள்ள வச்சு அடி மா….” என்றான் சற்று பணிந்தான்.

“அப்பிடின்ற????? சரி….ஒகே”என்றாள் வேறெங்கோ பார்த்து

எல்லாம் புரிந்தாலும் தெரியாதது போல் “என்ன ஒகே?” என்றான்.

“எல்லாத்துக்கும் தான்”

“எல்லாத்துக்கும் னா?”

“போ….டா…சோடா புட்டி! ” என்று விட்டு வெட்கத்துடன் அவள் ஓட, இவனும் அவசரமாக பில்லிற்கு பணத்தை செலுத்தி விட்டு, “ஹே….நில்லு டி” என்று அவனும் பின்னே ஓடினான்.

முற்றும்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  17 Comments

  1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  2. சூப்பர் சிஸ்..நினைவுகளை பகிர்ந்தது,அவங்களோட க்ரஷ்,லவ் எல்லாம் அற்புதம்..கௌதம் சொன்ன உன் அடையாளத்தை அழியவிடமாட்டேன் செம்ம…பொருத்தமான தலைப்பு..

  3. மிக நேர்த்தியான படைப்பு. நயத்துடன் ஈர்க்கும் எழுத்து. கதை நகர்வை கூற வார்த்தைகளே இல்லை. மனதிற்கு நெருக்கமாக மாறி விட்டனர் கதை மாந்தர்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  4. Gayu R

   Naan intha site kku puthusu.. so ippo thaan intha kathai padichen.. super a irukku.. oru chinna kathailaiye neenga flashback solli current situation explain panni.. supera iruku unga writing.. vaazhthukkal