Loading

தேசம் 8

ஒரு நாள் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினி கிடந்தவள் தன்னையும் அறியாமல் தூங்க துவங்கினாள். அவள் எதிரில் அமர்ந்திருந்தவன் எப்போதோ வெளியில் சென்று விட்டான். வழக்கம்போல் போகும்போது பூட்டிவிட்டு சென்றுவிட வெளியிலும் செல்ல முடியாத நிலை பிரார்த்தனாவிற்கு. 

தந்தையை தொடர்பு கொள்ள, மகள் மீது கோபம் கொள்ளவில்லை. சரவணனை அழைத்து பசிக்கிறது என வாய்விட்டு கேட்க, “கிளீன் பண்ணி வச்ச குப்பை அங்கதான் இருக்கும்.” என்று வைத்து விட்டான்.

அவன் மீது இருந்த காதல் நடந்தவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வைத்தது. ஆனால் இந்த வார்த்தை சட்டென்று கோபத்தை துளிர்விக்க, “குப்பையை தின்ன வேண்டியது அவசியம் எனக்கு இல்லை. உன்னால சோறு போட முடியாதுன்னு சொல்லு. இன்னொரு தடவை இந்த மாதிரி பேசுனன்னு வை நல்லா திட்டி விட்டுடுவேன்.” என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கோபத்தில் அமர்ந்திருந்தவள் தான் உறங்கி விட்டாள்.

வேலையாக இருந்தவன் பார்க்கவில்லை. நள்ளிரவைத் தாண்டி மணி மூன்று இருக்கும் போது அதைப் படித்தேன். படித்ததும் சிரிப்பு தான் வந்தது அந்த கள்வனுக்கு. அவை ஆனந்த சிரிப்பு இல்லை முன்பொரு காலத்தில் இதே வார்த்தையை கேட்டு உடைந்து போன உள்ளத்தை நினைத்து வந்த கோப சிரிப்பு. 

தூக்கம் கலையாதவாறு கதவைத் திறந்தவன் அவள் தூங்கும் அழகை கொடூரமாக ரசித்தான். தன்னவன் மாறுபாடற்ற இரசனையை அறியாது குறுக்கி வைத்திருந்த கை கால்களை சற்று தளர்த்தி படுத்தாள். மெல்ல பக்கத்தில் அமர்ந்தவன் எதையோ திறந்து விட, 

“ஆஆ…ம்மாமா…ஆஆஆ.” துடி துடித்து எழுந்தவள் கை கால்களை எல்லாம் தடவி கூச்சலிட்டாள். 

“ஹா…ஹா….!” என்ற சிரிப்பு சத்தத்தை அறியாது மேலே விழுந்த எலியை தேட, அது எப்போதோ அங்கிருந்து ஓடி விட்டது. 

இன்னும் அவளிடம் கூச்சல் அடங்கவில்லை. மேலே ஏதோ ஊர்ந்ததை உணர்ந்து முதலில் தட்டி விட்டவள் பின் விழி திறந்து தன் மேல் ஓடிய இரண்டு எலிகளைக் கண்டு அலறியது தான் இன்னும் அந்த அலறல் சத்தம் அடங்கவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்தவனுக்கு அந்த பய சத்தம் பேரானந்தத்தை கொடுத்தது. 

இன்னும் எலி இருப்பதாக கை கால்களை எல்லாம் உதறிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் உடம்பெல்லாம் அருவருப்பாக இருக்க எழுந்து நின்று உதறினாள். அவனோ சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். 

வெகு நொடிகளுக்குப் பிறகு அந்த சத்தத்தை உள்வாங்கியவள் மூக்கு விடைக்க முறைக்க, “நல்லா இருக்கா” என்றான் சிரிப்புக்கு இடையே. 

இவை அவன் வேலை என்று கண்டு கொண்டவள் எதையும் யோசிக்காமல் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைக்க, ஐவிரல் பதிந்த கன்னத்தைப் பிடித்தவாறு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் சரவணப் பொய்கை. 

“பைத்தியமாடா நீ! மண்டையில இருந்ததெல்லாம் உருகி ஊத்திருச்சா எங்கயாது. பைத்தியக்காரன் கூட உன்ன மாதிரி ஒரு வேலையை செய்ய மாட்டான். என்ன நினைச்சு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க. நானும் போனா போகுதுன்னு எல்லாத்தையும் பொறுத்து போயிட்டு இருக்கேன். விட்டா ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க. திருப்பி அடிக்க முடியாமையோ பேச முடியாமையோ நான் இல்ல. நடக்குதுன்னு எதுவும் புரியாம குழம்பி போய் இருக்கேன்.” 

இதுதான் பிரார்த்தனா. சாமிநாதனின் மகளுக்கு சற்றென்று கோபம் வரும் குணம். அவை பாசத்திற்கு முன்னால் மட்டும் தான் காணாமல் போகும். தன்னுடைய பலவீனம் இது என்று அறிந்ததிலிருந்து அதிகம் யாருடனும் நெருங்க மாட்டாள். அவள் வாழ்வில் ஏற்பட்ட துயரம் அந்த அனுபவத்தை கொடுத்தது. 

உயிராக பழகியவர் தன்னை விட்டு விலகினால், விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன மாதிரியான வலியை உண்டாக்கும் என்பதை காலம் உணர்த்திவிட்டது. அதிலிருந்து நட்பு வட்டாரத்தைக் கூட தள்ளி வைத்திருந்தாள். அதையெல்லாம் தகர்த்தெறிந்து வெகு வருடங்களுக்குப் பிறகு அவள் மனதை நெருங்கியது கட்டியவன் மட்டுமே. 

ஏன் இவனிடம் மட்டும் இவ்வளவு காதல் என்ற கேள்விக்கு, ‘நானும் ஒரு காலத்துல இப்படி தனிமையில தவிச்சு இருக்கேன். அதோட வலி மரணத்தை விட கொடுமையானது.’ என தனக்குத்தானே பதில் அளித்துக் கொண்டாள்.

அந்த பதில் கருணையாகவும் காலப்போக்கில் காதலாகவும் மாறியது. அவளின் அன்பை பெற வேண்டி நடத்திய நாடகத்தில் அவனே கோமாளி ஆகிவிட்டதை உணராது, “ஈஈஈஈஈ” என சிரித்து வைக்க,

“சைக்கோவா சரவணா நீ… என்ன பிரச்சனைன்னு வாயைத் திறந்து சொன்னா தான தெரியும். என்னை மனசார காதலிச்சிட்டு இப்படி கஷ்டப்படுத்த எப்படி மனசு வருது. இவ்ளோ பண்ணியும் உன்னை இந்த நிமிஷம் வரைக்கும் வெறுக்க முடியல. நீ பண்றதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு மனசு சொல்லுது. அது என்னன்னு தெரிஞ்சு சரிப்படுத்தி உன் கூட நல்லபடியா வாழனும்னு கனவு கண்டுட்டு இருக்கேன்.” என கோபத்தை குறைத்துக் கொண்டு பேசும்பொழுதும் கூட,

“ஈஈஈஈஈ” பல்லை காட்டினான். 

அவன் செயலைக் கண்டு எரிச்சலுற்றவள் முகத்தை திருப்பிக் கொள்ள, மெல்ல அவள் முகத்திற்கு பின்னால் தன் முகத்தை வைத்தவன்,

“ஈஈஈஈஈ” என்றான். 

பயந்து பின்னால் நகர்ந்தவள் இவன் என்று அறிந்து பெருமூச்சு விட, “இன்னொரு தடவை அடிக்கிறியா…ஈஈஈஈஈ” என ஏகத்தாளமாக சிரித்தான். 

“அடிக்கிறியா”

“அடிக்கிறியா” என கேட்டு பித்து பிடித்தவன் போல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அவள் கைகளைப் பிடித்து தன் கன்னத்தில் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டான். 

பல போராட்டங்களுக்குப் பிறகு தன் கைகளை விடுவித்துக் கொண்டவள், “இதுக்கு மேலயும் உன் கூட இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும். நான் எங்க வீட்டுக்கு கிளம்புறேன் என்னைக்கு நீ நீயா இருக்கியோ அன்னைக்கு தேடி வா.” என வீட்டை விட்டு வெளியேற, தடுக்கவில்லை சரவணப் பொய்கை.

இவன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சற்று விடிந்தே விட்டது. அங்கு வசிக்கும் மக்கள் விடியற்காலை நேரத்தில் சண்டையிட்டுக் கொண்டு தண்ணீர் பிடிக்க நின்றிருக்க, இதுவும் அவன் திட்டம் என்று அறியாது தாயகம் நோக்கி புறப்பட்டாள்.

பால்கனி வழியாக மனைவியின் நடையை பொறுமையாக ரசித்தவன் மாமனாரை அழைத்தான். அவரோ இந்நேரத்தில் வந்த அழைப்பில் பயந்து விசாரிக்க பதில் கொடுத்தான் அழுகை மூலம். ஏற்கனவே பயந்திருந்தவர் மருமகனின் அழுகையில் இன்னும் பயந்து ஆர்ப்பரிக்க,

“நேத்து வீட்டுக்கு வந்ததும் ஷாப்பிங் போகணும்னு வெளிய போனவ இப்பதான் வீட்டுக்கு வந்தா மாமா. எங்க போனன்னு கேட்டதுக்கு என் லவ்வரை பார்க்க போனேன்னு சொன்னா. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுமா இனிமே இந்த பழக்கம் வேண்டாம்னு சொன்னதுக்கு என் கன்னத்துல அடிச்சுட்டு, அப்படிதான்டா போவேன் அதை சொல்ற உரிமை உனக்கு இல்லைன்னு கத்தினா.” என இடைவெளி விட்டான்.

“என்ன திமிரு மாப்பிள்ளை அவளுக்கு. போன கொடுங்க நல்லா கேட்கிறேன்.”

“அவ இங்க இல்ல மாமா.”

“இல்லையா?”

“மாமாவோட உடல்நிலையை மனசுல வைச்சாது ஒழுங்கா இருமான்னு கால பிடிச்சு கெஞ்சினேன். அப்படி தான் நடப்பேன்னு திமிரா பேசினா மாமா. எனக்கு கொஞ்சம் கோபம் வந்ததுனால திட்டி விட்டுட்டேன். அதுக்கு கோச்சுக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கா மாமா. எப்படியாது என் பொண்டாட்டிய சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைங்க. அவ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை. தயவு செஞ்சு என் தனாவை என் கூட சேர்த்து வைங்க மாமா.” 

நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பை ஓரம் கட்டி நடிப்புக்கே நடிப்பு சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்து நடந்ததை அப்படியே பிரார்த்தனாவிற்கு எதிராக திருப்பி விட்டான். 

“இங்க தான வரா…வரட்டும் கழுதைய கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுறேன்.”

“அதெல்லாம் பண்ணாதீங்க மாமா நல்லபடியா பேசி என் கூட வாழ அனுப்பி வைங்க.” என்றவனிடம் மகளை விட்டுக் கொடுத்தவர் அவளுக்காக காத்திருந்தார்.

வரும் வழியெல்லாம் அழுது கொண்டே வந்தவள் தன் வீட்டில் கால் வைத்ததும் கேட்கக் கூடாது அத்தனை வார்த்தைகளையும் கேட்டாள். ஒரு தந்தையாக மகளைப் பேச கூடாத பேச்சுகளை பேசிவிட்டார். உடலெல்லாம் கூசி அழுது திரும்ப, நின்றிருந்தான் சரவணப் பொய்கை.

“என்ன மாமா இப்படி பேசிட்டீங்க”

“சும்மா இருங்க மாப்பிள்ளை நீங்கதான் அவளுக்கு ஓவரா இடம் கொடுக்கறீங்க.” என்றவர் மகளை பார்த்து,

“அன்னைக்கு சொன்னது தான் மாப்பிள்ளையோட மனைவியா மட்டும் தான் இந்த வீட்ல உனக்கு இடம். மத்தபடி எங்களுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒழுங்கா அவரோட வாழ்றதா இருந்தா வாழு. இல்லனா எவன் கூடயாது போய் கெட்டு சீரழிந்து போ.” என்றார்.

“போதும் மாமா என் மனைவியை திட்டாதீங்க” என்ற கணவனை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முறைக்க, மாமனார் பார்க்காது கண்ணடித்தான். 

எதுவும் பேசாது பிரார்த்தனா அங்கிருந்து நடையை கட்ட, “கொஞ்ச நாளைக்கு அவ கையில போன் இருக்க வேணாம்னு நினைக்கிறேன் மாமா. அவ கிட்ட பேசணும்னு தோணுச்சுன்னா எனக்கு போன் பண்ணுங்க.” என்றிட,

“எப்போ உங்க கூட நல்லா வாழுறான்னு நீங்க சொல்றீங்களோ அன்னைக்கு தான் அவ கிட்ட பேசுவேன்.” என மகளுக்கு பெரிய குழியை தோண்டினார். 

நல்லவன் போல் விடைபெற்றவன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருக்கும் கட்டியவள் பின்னால் நடந்து கொண்டு விசில் அடித்தான். மனம் நொந்து போனவள் எதுவும் பேசாது நடக்க,

“இனிமே இந்த மாதிரி அம்மா வீட்டுக்கு போறன்னு ஓடி வராம ஒழுங்கா அந்த சிறையில இருக்க கத்துக்க. இல்லன்னா இப்போ காதலனை பார்க்க போனான்னு மட்டும் தான் சொன்னேன். அடுத்த தடவை அவன் கூட ஓடி போயிட்டான்னு ஊருக்கே சொல்லி உன் அப்பா அம்மாவ மேல அனுப்பி வச்சிடுவேன். ஏற்கனவே மண்டபத்தை விட்டு ஓடி போயி ஊருக்கே ஓட்டக்காரின்னு நிரூபிச்சிருக்க பார்த்துக்க.” என வாய் கூசாமல் பேசியவன் கையில் இருந்த போனையும் பறித்து உடைத்து விட, பெற்றவர்களே நம்பவில்லையே என்று ஆதங்கத்தில் அவனோடு சிறைக்கு சென்றாள் சீதை.

தீண்டாத ராவணன் தன் கோட்டையில் சிறை வைத்த திருப்தியில் அடுத்த கட்ட திட்டத்தை நோக்கி செல்ல, கைதியான காரணம் புரியாமல் காதல் துயரம் கொண்டாள் பிரார்த்தனா. 

சிறையில் இருந்து மீட்டெடுக்க ராமன் வருவானா? ராவணன் ராமன் ஆவானா? விடை சாமிநாதன் வீட்டில் ஒளிந்திருக்கிறது. 

***

தேசம் 9

காலையிலிருந்து தன்னுடைய கைபேசியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் சரவணப் பொய்கை. அவன் எதிர்பார்த்த அழைப்பு தான் இன்னும் வரவில்லை. என்ன நடக்கிறது என்று புரியாமல் மதியம் வரை காத்துக் கொண்டிருந்தவன் தன்னுடைய ஆட்களை அழைத்து,

“இன்னுமா வேலையை முடிக்கல?” விசாரித்தான்.

“காலைல இருந்து உங்க மாமனார் பின்னாடி சுத்திட்டு இருக்கோம் எதையெதையோ பார்க்குறாரு எங்களை பார்க்க மாட்டேங்குறாரு.”

“இதை சொல்லவாடா என்கிட்ட காசு வாங்கின?”

“சார், வயசுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க”

“காச வாங்கிட்டு எவனோ ஒருத்தனுக்கு அப்பா அம்மாவா நடிச்ச உங்களுக்கு எதுக்குடா மரியாதை. யாருக்கு என்ன மரியாதை கொடுக்கணும்னு எனக்கு தெரியும். சொன்ன வேலைய இன்னைக்குள்ள முடிக்கணும். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியுமில்ல?”

‘இந்த எமகாதகன் கையில தெரியாம சிக்கிட்டோமே. கொல்ல கூட தயங்காத மனுச ஜென்மம் இவன். இதோட இவன் இருக்க திசை பக்கமே போகக்கூடாது.’ உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார் எதிர்ப்புறத்தில் இருந்து பேசியவர். 

“மனசுக்குள்ள என்னை எவ்ளோ கேவலமா நினைச்சாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை. நான் சொன்ன வேலையை இன்னைக்குள்ள முடிக்கணும். இல்லனா உன்ன பத்தி நினைக்க உன்னோட சேர்ந்து உன் குடும்பமும் இருக்காது.” அதிரடியாக மிரட்டியவன் கைபேசியை நிறுத்தினான்.

சாமிநாதனுக்கு தான் இந்த முறை வலை விரித்து இருக்கிறான் அவரது மருமகன். போலி பெற்றோர்களாக நடிக்க வந்தவர்களிடம், “என் மாமனார் கண்ணுல எதர்ச்சையா விழனும். அவர பார்த்ததும் அலறி அடிச்சு பிடிக்கிற தூரத்துக்கு ஓடணும்.” என பணம் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறான்.

அவன் மீது சந்தேகம் வரவே இந்த ஏற்பாடு. போலி பெற்றோர்களை விசாரிக்க வேண்டும் அவர்கள் சொல்லும் பதிலில் தன்னை தொடர்பு கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்று தெரியாமல் மகள் வாழ்க்கையை நினைத்து கதற வேண்டும் என்பதே இவன் திட்டம். ஆனால் விதி இந்நிமிடம் வரை சாமிநாதன் கண்ணில் அவர்களை விழ விடவில்லை.

***

சிறை வைக்கப்பட்ட வீட்டில் உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் பிரார்த்தனா. இரண்டு நாட்களாக இரவு பதினோரு மணிக்கு மேல் வருபவன் அவள் கண் முன்னே இரவு உணவை உண்டு விட்டு இறக்கம் பார்க்காமல் உறங்கவும் செய்கிறான். 

திருமணமாகி ஆகிவிட்டது பத்து நாட்கள். கட்டியவனோடு தனியாக வசித்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இந்த நான்கு நாட்களும் அவள் படாத துயரம் இல்லை இவ்வீட்டில். காற்றுக்காக கூட ஜன்னலை திறக்க முடியவில்லை. தண்ணீரைத் தவிர அவள் கண்ணில் படும் படி ஒரு பொருளும் இல்லை. 

இத்தனை துயரங்களை அவன் கொடுத்த பொழுதும் கேள்வி கேட்காத பிரார்த்தனா நோட்டமிட்டு கொண்டிருக்கிறாள். அவள் கண்ணில் விழுபவன் யார் என்ற நோட்டம் தான் அது. முதன் முதலாக தன் மருத்துவமனைக்கு வந்தவன் இவள் முகம் பார்க்க தயங்கிக் கொண்டு தலை குனிந்திருக்க,

“இங்க பாருங்க மிஸ்டர் சரவணப் பொய்கை… உங்க பிரச்சனை என்னன்னு சொன்னா தான் என்னால தீர்வு சொல்ல முடியும். எதுவா இருந்தாலும் உங்க தோழியா நினைச்சு மனச விட்டு பேசுங்க.” ஆதரவு வார்த்தைகளை அளித்தாள்.

அப்பொழுதும் அவள் முகம் பார்க்காதவன் கண்ணீர் சிந்த துவங்க, “இட்ஸ் ஓகே, நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருங்க.” நேரம் கொடுத்தாள். 

“எனக்கு தற்கொலை பண்ணிக்கணும். ஆனா, அது பண்ண ரொம்ப பயமா இருக்கு உங்களால முடிஞ்சா தற்கொலை பண்ணிக்க என்னை ஊக்கப்படுத்த முடியுமா.” என்றவன் வார்த்தை பயத்தை கொடுத்தாலும் ஒரு மருத்துவராக,

“உங்களுக்கு என்ன தேவையோ அதுக்கான ஊக்கத்தை என்னால கொடுக்க முடியும். ஆனா முழு காரணத்தையும் சொன்னா மட்டும்.” என வார்த்தையை பிடுங்கினாள்.

“பிறக்கும்போதே அம்மா அப்பா யாருன்னு தெரியாது. யாரோ ஒருத்தவங்க தயவால வளர்ந்தேன். ஒரு வயசுக்கு மேல அந்த தயவையும் தராதவங்க உன் வாழ்க்கையை நீயே பார்த்துக்கோன்னு அனுப்பி விட்டுட்டாங்க. கடல்ல இருந்த மீன் கரைக்கு வந்த மாதிரி உலகம் புரியாம துடித்து தத்தளிச்சேன். 

உன் துடிப்பெல்லாம் போதும் நான் இருக்கேன்னு ஒருத்தி வந்தா. கவலையை மறந்து அவளே உலகம்னு மாறிப் போனேன். கடைசில என்கிட்ட ஒன்னும் இல்லன்னு அவ மாறிப்போயிட்டா. இதுக்கு மேல என்னால வாழ முடியாது.” என்று முகத்தை மூடிக்கொண்டு வெகு நேரம் அழுதான். 

அன்று ஆரம்பித்தது தான் பிரார்த்தனா வாழ்வில் கெட்ட காலம். ஐந்தறிவு ஜீவன் போல் அவள் வார்த்தைக்கு தலையாட்டி அவளை நம்ப வைத்தான். ஒரு வார காலத்திற்குப் பின் மருத்துவ சந்திப்பு இருக்க, முதலில் அந்த ஒரு வாரத்திற்காக காத்துக் கொண்டிருந்தவன் அதன் பின் முடியவில்லை என தினமும் வர ஆரம்பித்தான். 

கண்ணீரும் பாவமும் மட்டும் தான் அவன் விழியில் இருக்கும். பல நாட்கள் பசிக்கிறது என்று அவள் மனதை கரைப்பான். வள்ளி கொடுத்த உணவில் பாதி காலம் நகர,

“உங்க கையால ஒரு தடவை சமைச்சு தரீங்களா. அவ எனக்காக அடிக்கடி செஞ்சு எடுத்துட்டு வருவா.” என அவள் மனதை பாதி ஆக்கிரமித்தான். 

சில மாதங்களுக்குப் பின் வெளியில் சந்திக்கும் அளவிற்கு உறவு வளர்ந்தது. குழந்தை பொம்மையை கைகாட்டி வேண்டும் என்பது போல் அவளிடம் எதையாவது கை காட்டுவான். ஒன்றும் அறியாதவன் போல் தான் திருமணத்திற்கு முன்பு வரை இருந்திருக்கிறான். தன் தொழில், குடும்பம், சுயமரியாதை அனைத்தையும் மறந்து குழந்தையைப் பெற்றெடுத்த தாய் போல் அவனை அரவணைப்பதே பிரார்த்தனா வேலையானது.

இதில் எந்த சரவணப் பொய்கை உண்மையானவன் என்ற தேடுதலில் நான்கு நாட்களை தொலைத்தவள் பசி கொடுமையால் தன்னிலை இழந்து உறங்கி விட்டாள். இந்த நான்கு நாட்களில் பகலில் மட்டுமே அவள் தூக்கம். கண்ணை மூடினால் கட்டியவன் ஒரு பக்கமும், கடத்தியவன் ஒரு பக்கமும் இம்சை செய்வார்கள். 

அதிலும் கடத்தியவனின் அந்த இரு விழி மறையாத தழும்பாக அவள் மனதில் நின்று விட்டது. கடைசியாக தன் வீட்டில் கொல்ல பார்த்தவன் அதன்பின் ஏன் வரவில்லை என்ற கேள்வியும், எதற்காக இரண்டு முறை தன்னை நெருங்கினான் என்ற யோசனையும் கணவன் மீதான எண்ணத்தை முழுதாக செயல்படுத்த விடவில்லை. என்ன குழப்பம் இருப்பினும் அந்த கண் தன்னை நெருக்கமாக பார்ப்பது போன்ற உணர்வு மாறவில்லை பிரார்த்தனாவை விட்டு.

***

பசி எடுத்த கழுகிற்கு வரப் பிரசாதமாக வந்தது எதிர்பார்த்த அமிர்தம். சாமிநாதன் தொடர்ந்து மருமகனை அழைத்துக் கொண்டிருக்கிறார். முதல்முறை வந்த அவரின் அழைப்பை கண்டு குதுகளித்தவன் தன் மேஜையில் கைபேசியை வைத்துவிட்டு எத்தனை முறை அழைக்கிறார் என கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். அவரது அழைப்பு நாற்பது முறைக்கும் மேலாக சென்று விட்டது.

அவன் ஏற்பாடு செய்த போலி பெற்றோர்கள் சாமிநாதன் கண்ணில் விழுந்து விட்டார்கள் ஒரு வழியாக. பார்த்ததும் தன் சம்மந்திகள் என்பதை கண்டு கொண்டவர் நலம் விசாரிக்க அருகில் நெருங்க, பேயை பார்த்தது போல் அரண்டு ஓட ஆரம்பித்தார்கள். அத்தனையும் நாடகம் என்பதை அறியாதவர் மருமகனுக்காக அவர்களை பிடிக்க முயன்றார். தானாக சிக்குவதை காட்டிக் கொள்ளாமல் சாமிநாதனிடம் சரண் அடைந்தவர்கள்,

“எங்களை மன்னிச்சிடுங்க சார் வேணும்னு நாங்க எதுவும் பண்ணல. உங்க மருமகன் தான் பணம் கொடுத்து இப்படி பண்ற வச்சாரு. நாங்க குடும்ப கஷ்டத்துக்காக இந்த மாதிரி பொழப்ப நடத்திக்கிட்டு இருக்கோம். தயவு செஞ்சு மன்னிச்சு எங்களை விட்டுடுங்க சார்.” என்றவர்கள் வார்த்தை தலைக்கு மேல் அமர்ந்து கொண்டு நாட்டியம் ஆடியது. 

ஒரு பத்து நிமிடத்திற்கு ஒன்றும் புரியவில்லை அவருக்கு. அப்படியே நகராத கல் சிலை போல் மாறிவிட, இதுதான் சமயம் என்று ஓடிவிட்டார்கள் வந்து வேலையை முடித்தவர்கள். அப்போது மருமகனை அழைக்க ஆரம்பித்தவர் தான் வீடு வந்து நிறுத்தவில்லை. 

கணவன் நிலை கண்டு திடுக்கிட்ட வள்ளி விசாரிக்க, நடந்ததை குழப்பத்தோடு கூறினார். கேட்டவருக்கும் அந்த குழப்பம் வந்துவிட தன் எண்ணில் இருந்தும் அழைத்தார். இருவரின் அழைப்பில் அங்கு ஒருவன் குற்றால சாரலில் நனைந்த சுகத்தை அனுபவிக்க, 

“வீடு வரைக்கும் பார்த்துட்டு வரலாம் வாங்க.” அழைத்து சென்றார் வள்ளி. இல்லாத வீடே அவர்களை வரவேற்றது. பக்கத்தில் விசாரிக்க, “பத்து நாளா இந்த பக்கமே வரலங்க.” என்றார்கள். 

வள்ளிக்கு எதுவோ தவறென விளங்க, “போலீஸ் ஸ்டேஷன்க்கு வேணா போவோமா” என்றார்.

“எதுக்குமா அதெல்லாம்? மாப்பிள்ளை மேல நம்பிக்கை இருக்கு. போன் வர வரைக்கும் காத்திருக்கலாம்.” 

பேசிக் கொண்டு இருவரும் அங்கிருந்து வெளியேற, தெரு முனையில் அவர்கள் வருகைக்காக காத்திருந்தான் மருமகன். மருமகன் மர்ம நாடகத்தை அறியாது பாவமாக அவனையும் கடக்க, 

“போடா…கொலைகார… இன்னைக்கு ராத்திரி இருக்கு உனக்கு.” உக்கிரமாக மனதில் நினைத்தான். 

அவன் உக்கிரம் நள்ளிரவு நேரம் கதையை தட்டியது. உறங்கிக் கொண்டிருந்த முதிய தம்பதிகள் பதறி முழித்து கதையை திறக்க, நான்கு அடியாட்கள் அவர்களை தள்ளி விட்டு உள்ளே நுழைந்தார்கள்.

“யாருடா நீங்க?” 

“தெரிஞ்சி என்ன பண்ண போற பெருசு…ஓரமா நில்லு வந்த வேலைய முடிச்சிட்டு உன்னையும் தூக்கி வெளிய அடிச்சிட்டு கிளம்பிடுறோம்.” 

“என்னடா பேசுறீங்க…யார் வீட்டுக்கு வந்து யார தூக்கி போடுறன்னு பேசிட்டு இருக்கீங்க. மரியாதையா வெளிய போய்டுங்க இல்லன்னா போலீஸ்க்கு போன் பண்ணிடுவேன்.” என்றதும் அங்கிருந்த அடியாட்களில் ஒருவன் சாமிநாதனை தள்ளி விட்டு,

“போன் போடு…எங்க வீட்ல இருந்துட்டு எங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்தா உன்ன தான் தூக்கி உள்ள உக்கார வைப்பாங்க. அவங்க வந்து உன்னை மிதிக்கிறதுக்குள்ள உன் பொண்டாட்டிய கூப்பிட்டுட்டு வெளிய போயிட்டினா உயிரு மிஞ்சும்.” என்றான்.

“என்னங்கடா உளறிட்டு இருக்கீங்க இது என்னோட வீடு.” 

“அது எங்க கிட்ட கடன் வாங்காத வரைக்கும்.”

“என்னங்க, இவனுங்க ஏதோ பிரச்சனை பண்ணுறதுக்குனே வந்திருக்காங்க. நான் முதல்ல போலீஸ்க்கு போன் பண்றேன்.” என வள்ளி கைபேசியை எடுக்க போக,

“இந்தக் கிழவியை பிடிச்சு கட்டி வைங்கடா.” என மற்றொரு அடியாள் வள்ளியை பிடித்து தன்னுடன் வந்தவர்களிடம் தள்ளிவிட்டான்.

மனைவியை காப்பாற்ற சென்ற சாமிநாதனையும் பிடித்து கட்டி வைத்தவர்கள் சத்தம் போடாதபடி செய்துவிட்டு அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் நடுவிதிக்கு தூ

க்கி அடிக்க ஆரம்பித்தார்கள். 

சாமிநாதனும் வள்ளியும் சத்தம் போட முடியாத நிலையில் கதறி அழ, தன் கைபேசியில் இதையெல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் இவர்களின் அன்பு மருமகன் சரவணப் பொய்கை.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்