Loading

 யிர் து(இ)ணை டீசர் -1

 

சடசடவென கொட்டித் தீர்க்கும் மழைத்துளியை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் அவன். ஏனோ மனது எப்படி துக்கத்தில் மூழ்கி இருக்கிறதோ, அதேபோல் வெளியே அடித்து வெளுக்கும் மழையில் மூழ்கியிருந்தது அவன் முன்பு இருக்கும் குளம். 

 ஒரு நிமிடம், ஒரே நிமிடம் தன் முன்னே நீரால் மூழ்கியிருக்கும் குளத்திற்குள் விழுந்து விடலாமா என்று கூட எண்ணினான். ஆனால் அப்படி தான் குளத்தில் விழுந்து இறந்துவிட்டால் அந்த பழியும் தேவையில்லாமல் தவறே செய்யாத நபரின் மீதல்லவா சுமத்தப்படும் என்று நினைத்தே, அதை செய்யாமல் குளத்தை மட்டும் வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.‌

 

 எவ்வளவு நேரம் மழையை வெறித்தவாறு அமர்ந்திருந்தானோ அவனுக்கே தெரியவில்லை. பெரும் ஆட்டமே ஆடி வெகு நேரத்திற்கு பிறகு தானாகவே தன் ஆட்டத்தை நிறுத்திருந்தது மழை.

 

மழை நின்ற பின்பும் அவனது அந்த நிலையில் மாற்றம் இல்லை. குளத்தில் சலனமே இல்லாமல் நிறைந்திருந்த நீரை இப்போதும் வெறித்திருந்தான்.

தன் தோள் பட்டையில் ஒரு கரம் விழவும் சட்டென்று தன் முக பாவனைகளை மாற்றியவன், இதழ்கடையோரம் தவழவிட்ட புன்னகையோடு பின்புறம் திரும்பி,“சொல்லு மச்சி என்ன அதிசயமா இந்த நேரத்துல இங்க வந்துருக்குற?” என்று கேட்டான்.

 

“என்னது அதிசயமாவா, டேய் என்னடா ஆச்சு உனக்கு. நான் இங்க வந்து ரொம்ப நேரம் ஆகுது. நீ கொட்டுற மழைய பாத்துக்கிட்டு இருந்த, நானும் உன்னைப் போலவே அந்த மழைய பார்த்துக்கிட்டு இருந்தேன். சரி சொல்லு என்ன முடிவு பண்ணிருக்குற?”

 

“இதென்னடா வம்பா இருக்கு நான் முடிவு பண்ண என்னடா இருக்குது. அப்படி பெருசா எதுவும் நடக்கலையே?”

 

“வேணாம் மச்சான் நீ யார் கிட்ட வேணாலும் உன்னோட மனசை மறைக்கலாம், உனக்குள்ளே இருக்க வேதனையை மறைக்கலாம், ஆனா எங்கிட்ட இருந்து உன்னாலே எதையும் மறைக்க முடியாது. மரியாதையா உண்மையை சொல்லு வேற ஏதாவது பிளான் பண்ணி இருக்கியா?”

 

“டேய் சுமன் நீ என்னடா சின்ன பிள்ளை கணக்கா லூசு மாதிரி உளறிட்டு இருக்குற. நான் என்ன முடிவு பண்ண போறேன்,‌ இல்ல தெரியாம தான் கேட்குறேன் இதுல நான் முடிவு பண்ணுறதுக்கு என்ன இருக்குது?”

 

“டேய் இப்ப நீ பேசறது தான் எனக்கு சின்ன புள்ள பேசுற மாதிரி தெரியுது. இன்னைக்கு உன்னோட ஆளுக்கு கல்யாணம் ஆனா நீயோ சலனமே இல்லாம அமைதியா உட்கார்ந்துருக்குற. ஒண்ணு எந்த பிரச்சினை வந்தாலும் சரின்னு நெனச்சு நேரா போயி கல்யாணத்தை நிறுத்துன்னு சொன்னா வேணாங்குற. சரி விடு அப்பா அம்மாகிட்டயாவது விஷயத்தை சொல்லலாம் வாடான்னாலும் வர முடியாதுங்குற. இதை எதையும் பண்ணாம இப்படியே மணிக்கணக்கா மழையை பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருந்தா எல்லாமே சரியா போயிடுமா”

 

“இப்படி உட்காந்துருந்தா எல்லாமே சரியாகும்னு நான் சொல்லவே இல்லையே. நடக்குறது நடக்கட்டும்டா நாமளா போய் எதையும் செய்ய வேண்டாம். ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான்னா, நடக்குறது நடக்கட்டும். என்னைப் பொறுத்த வரைக்கும் நான் எப்படின்னு உனக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் அதை என் வாயால சொல்லணும் இல்லையா, தானா வர்றதை வேணாம்னு சொல்லுற பழக்கம் எனக்கு கிடையாது. அதே மாதிரி என்னை விட்டு போற பொருள் எதுவாக இருந்தாலும் சரி ஏன் போகுதுன்னு அதை நெனச்சு நான் கவலைப்பட மாட்டேன். அது பொருளா இருந்தாலும் சரி மனுஷங்களா இருந்தாலும் சரி போனா போகட்டும்னு விட்டுடுவேன். மழை பெய்யவும் தான் இப்படி குளத்துக்கு பக்கத்துல இருக்க மரத்துக்கு கீழ நிற்க வேண்டியதா போச்சு வேற எதுவும் இல்லை நீயா எதையாவது நெனச்சுக்காத சரியா. அதான் மழை விட்டுடுச்சுல்ல வா வீட்டுக்கு போலாம்” என்று அசால்டாக சொல்லிவிட்டு நடந்த அவனையே விழிகள் கலங்க பார்த்திருந்த சுமன், ”நீ யார்கிட்ட வேணும்னாலும் உன்னோட மனசை மறைக்கலாம் மச்சான் ஆனா என்கிட்ட இருந்து உன்னால எதையும் மறைக்க முடியாது. சும்மா இல்ல இருபத்தி எட்டு வருஷ நட்பு, பிறந்ததுலருந்தே ஒண்ணா இருக்கோம், அப்புறம் எப்படி என்கிட்ட இருந்து உன்னாலே இதையெல்லாம் மறைக்க முடியும்” என்றவனாய் தானும் அவனைப் பின்பற்றி சென்றான் சுமன்.

 

பாதி தொலைவு கூட அவர்கள் சென்றிருக்க மாட்டார்கள் அரக்கப் பறக்க ஓடி வந்து அவர்கள் முன்னே நின்றான் மற்றொருவன். அதைப் பார்த்த சுமன், “டேய் கவின் எதுக்கு இப்படி மூச்சு வாங்க ஓடி வர்ற?” என்று கேட்க,

 

“மச்சான் இங்கதான் இருக்கீங்களாடா, உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான விஷயம் கொண்டு வந்து இருக்கேன் தெரியுமா” என்றதும் புருவம் சுருக்கிய சுமன், “என்ன சந்தோசமான விஷயம்?” என்று கேட்டான்.

 

“வேற என்னடா எல்லாம் நாம ஆவலா எதிர்பார்த்தது தான். அந்த சந்தோஷமான விஷயம் என்னன்னா சுவாசனாவோட கல்யாணம்‌ நின்னு போச்சாம். நான் கடையில இருந்தேன், சுகந்த் இப்பதான் வந்து இதை சொல்லிட்டு ஓடுறான்” என்றான் முகம் விகசிக்க, புன்னகையுடன்.

 

 சுமன் முகத்திலும், கவினின் முகத்திலும் சந்தோஷம் நிறைந்தது. ஆனால் இன்னொருவனின் முகமோ வேதனையைப் பிரதிபலித்தது. எதையோ நினைத்தவனாய் அவன் அங்கிருந்து நகர முயன்ற வேளையில் அவனைத் தடுத்து நிறுத்திய சுமன்,

“எங்க போற மச்சான்?” என்று கேட்க,

 

“என்னடா கேள்வி இது. ஒரு பொண்ணுக்கு நடக்கயிருந்த கல்யாணம் மணமேடை வரை வந்து நின்னு போச்சுன்னா எவ்வளவு பிரச்சனை வரும்னு எனக்கும் தெரியும்டா அதான் என்ன ஏதுன்னு போய் பார்த்துட்டு வரலாம்னு போறேன்” 

 

“நீ அங்க போறது தெரிஞ்சா உங்க அப்பா உங்கிட்ட சண்டைக்கு நிற்பார் தேவையா உனக்கு.‌” 

 

“அவரைக் கேட்டா காதலிச்சேன்?” 

 

“இல்ல தான். ஆனா அவருக்காக தானே உங்காதலை உயிரோட புதைச்ச,‌ அப்புறம் என்ன, பேசாம மூடிக்கிட்டு எங்க கூட வா, எதாவது பண்ணுன அடிச்சு பல்லை பேத்துருவேன்” என்று சுமன் கோபத்தில் கொந்தளித்தான்.

 

“ஆமா மச்சான் நீ அங்க போறது நல்லதில்லை, எனக்கு என்னமோ தப்பா தோணுது?” என்று கவினும் தன் பங்கிற்கு சொன்னான்.

 

“டேய் நீங்களும் இப்படி பேசுனா எப்படிடா?” 

 

“நாங்க அப்படி தான் பேசுவோம். பேசாம எங்களோட கிளம்பி வாடா, அவளுக்கு கல்யாணம் நடந்தாலும் சரி, கருமாதி நடந்தாலும் சரி எது நடக்கணுமோ நடந்துட்டு போகட்டும். அது நமக்கு தேவையில்லாதது” என்று சொல்லி சுமன் அழைக்க, 

 

“இல்ல நான் அங்க போய் என்னன்னு பார்த்துட்டு வர்றேன் நீங்க போங்க” என்று சொல்லி விட்டு இரண்டடி எடுத்து வைத்த அவன் தன் எதிரே மாலையும் கழுத்துமாக, மணப்பெண் அலங்காரத்தில் தேவதை போல் ஓடி வந்து மூச்சிறைக்க நின்றவளைக் கண்டு விட்டு சட்டென்று தானும் நின்றான்.

 

அவன் எதிரில் சர்வ அலங்காரங்களுடன் பொன்னகை பூட்டப்பட்டு, புன்னகையின்றி ஆளை அடித்து சாய்த்திடும் அழகுடன் நின்றிருந்த அவளின் விழிகள் ஏனோ கனலை அள்ளி கண்ணில் கொட்டி கொண்டது போல் சிவந்து இருந்தது. 

 

அவளது கோபக்கனலைத் தாள முடியாமல் தலை குனிந்தவன் மறுபுறம் திரும்பி நடக்க முயல்கையில் பொற்பாவையவளின் இதழ் பிரிந்து வார்த்தைகளைக் கொட்டியது. “தீரா நின்னு எனக்கு ஒரு பதிலை சொல்லிட்டு போ?” என்றவளது குரல் சிறிதும் பிசிறின்றி தெளிவாக வெளிப்பட்டது.

 

தன்னிடம் வினா ஒன்றினை முன் வைத்தவளுக்கு பதில் சொல்ல விரும்பாமல், பதிலுரைக்க துணிவின்றி, நிற்காது அவன் அங்கிருந்து நகர்ந்து வேளையில் சுமனின் சட்டைப்பையில் இருந்த அலைபேசி அழைத்தது. அழைப்பை ஏற்று இரு நிமிடங்கள் பேசியவன் முடிவில்,

“மச்சான் உங்க அப்பா உன்னை வரச் சொல்றாருடா” என்றதும் தன் நண்பனை திரும்பி பார்த்தவனின் முகம் சிந்தனையைத் தாங்கி இருந்தது.

 

“எங்க வர சொன்னாரு வீட்டுக்கா இல்லை கடைக்கா?” 

 

“ம்ஹூம் அங்க வர சொல்லல, நீ போக வேண்டிய இடம் இதுதான்” என்ற சுமன் அப்பெண்ணை ஒரு பார்வை பார்த்து விட்டு அவனது காதில் விஷியத்தை சொன்னான். 

 

தான் செல்லவேண்டிய இடம் இது தானென சுமன் சொன்ன மறுகணம் அதிர்வுடன் தன் நண்பனின் முகத்தைப் பார்த்தவன், மறு நிமிடம் தன் பின்னே நின்றிருந்தவளை திரும்பி கோபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு நடைபோட்டான்.

 

 செல்லும் அவனையே விழிகளில் கோபக் கனலை ஏந்தியவாறும், இதழில் குறுநகையைத் தவழ விட்டவாறும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள். அவளது இடையில் ஒய்யாரமாக வீற்றிருந்த கூர்முனைக் கத்தியை அவளது வளைக்கரம் ஒருமுறை தீண்டி மீண்டது..

 

               – உயிர் து(இ)ணை வரும்… 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கத்தியா 😨😨😨 எதுக்கு குத்த வெச்சிருக்காளா என்ன🤔🤔🤔🤔டீசர் நல்லா இருக்கு படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳.