1,535 views

காதல் 1

 

 

அதிகாலை ஐந்தரை மணிக்கு அவள் வைத்த அலாரம் அதன் கடமையை சரியாக செய்ய, குளிருக்கு முகம் துவங்கி உடல் முழுவதையும் போர்வைக்குள் அடக்கி படுத்திருந்தவள், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவாறே துயில் கலைந்தாள்.

 

அவள் ரஞ்சனா… ஐந்தரை அடிக்கும் சற்று குறைவான உயரமும்  சராசரி பெண்ணின் எடையும் கொண்ட சந்தன நிற மேனியவள். தூக்கம் கலைந்து எழுந்திருந்தாலும், சோபையான அழகுடன் இருந்தவள், எழுந்ததும் தன் முதல் வேலையாக இரு கைகளையும் நன்றாக தேய்த்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். இது அவளின் அன்னை சொல்லித் தந்த பழக்கம். அதை இன்று வரை பின்பற்றி வருகிறாள்.

 

அதன்பின்பு, வேகவேகமாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவள், ட்ராக் பாண்ட் – டி-ஷிர்ட்டுடன் குளிருக்கு இதமாக ஜெர்கின்னையும் அணிந்து கொண்டு, காலை நேர ஜாக்கிங்கிற்கு தயாரானாள்.

 

அதே அறையில் இருந்த மற்ற இருவரையும் திரும்பிப் பார்த்தவள், இருவரில் ஒருவர் கூட இவளின் சத்தத்திற்கு விழிக்காததால், அறையைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கினாள்.

 

முதலில் சற்று மெதுவாக நடந்தவள், போகப் போக வேகமெடுத்து ஓடினாள். எதிரில் தென்பட்டவர்களிடம் ஒரு சினேக புன்னகை சிந்தியவாறே சென்று கொண்டிருந்தாள்.

 

அந்த அதிகாலை நேரம், எந்தவித இரைச்சலும் இல்லாமல், அமைதியாக இருந்தது. அதை ரசித்துக் கொண்டே சென்றாள்.

 

அப்போது, பக்கத்து தெரு அண்ணாச்சியின் மளிகைக் கடையை, அந்த கடையில் வேலை செய்பவன் திறக்க, அவனைத் திட்டிக் கொண்டே வேலை வாங்கிக் கொண்டிருந்தார் அந்த அண்ணாச்சி. அவனும் அவரைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டே அவரிட்ட வேலையை செய்தான். அதைக் கண்டவளிற்கு எப்போதும் போல் புன்னகை விரிந்தது.

 

சற்று தள்ளி, வீதியை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர் எப்போதும் போல், வேலையில் ஒரு கண்ணை வைத்திருந்தாலும், அங்கு நடந்து செல்வோரிடமும் ஒரு கண்ணை வைத்திருந்தார். ரஞ்சனா அவரைக் கடக்கும் போது மெல்லிய புன்னகையை அவருக்கு பரிசளிக்க, அவரும் அதை புன்னகையோடு ஏற்றார்.

 

இப்படி நாள்தோறும் அவள் காணும் காட்சிகளையே கண்டாலும், எப்போதும் இல்லாத வகையில் இன்று சிலர் புதிதாக அவளின் பார்வை வட்டத்தில் விழுந்தனர். அவர்கள் அனைவரும் கல்லூரியில் கால் வைத்திருக்கும் ‘டீனேஜ் கேர்ள்ஸ்’ என்பது அவர்களின் நடவடிக்கைகளிலேயே தெரிந்தது.

 

ரஞ்சனா மட்டுமில்லை, அங்கு வழக்கமாக வந்து செல்லும் பலரும் அவர்களை பார்த்துக் கொண்டே கடந்து செல்ல, அவர்களோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் யாருக்காகவோ காத்திருக்கின்றனர் என்பது புரிந்தது ரஞ்சனாவிற்கு.

 

அவர்களைக் கடக்கும் போது, அவளின் செவியைத் தீண்டிய, “ஹே நல்லா தெரியுமா டி, அவன் இந்த வழியா தான் ஜாக்கிங் போவானா?” என்ற செய்தியில், அவர்களின் காத்திருப்பு எதற்கென்று புரிந்ததால், இருபக்கமும் தலையையாட்டி மீண்டும் ஒரு புன்னகையுடன் கடந்து  சென்றாள்.

 

அவளும் அவர்களைப் போலவே, நான்கு வருடங்களுக்கு முன்பு நின்றிருந்தவள் தானே! ஒரே ஒரு வித்தியாசம், அவளின் தோழிக்கு துணையாக வந்திருந்தாள், இல்லை இல்லை இழுத்து வரப்பட்டிருந்தாள்.

 

அவற்றையெல்லாம் நினைத்தவாறே அவள் எப்போதும் செல்லும் பூங்காவிற்கு வந்திருந்தாள். அவ்வளவு நேர ஓட்டத்தின் காரணமாக அவளிற்கு மூச்சு வாங்க, அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

 

அப்போது அவளருகே யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவள், அங்கு அமர்ந்திருந்த ராதாவை கண்டு, “ஹாய் ராதா ஆன்ட்டி!” என்றாள்.

 

“ஹே ரஞ்சு, என்ன நீ மட்டும் வந்திருக்க? எங்க உன்கூட வர அந்த தர்ஷுவைக் காணோம்.” என்று ஆர்ப்பாட்டமாக வினவினார் ராதா.

 

“அவளுக்கு  உடம்புக்கு முடியல ஆன்ட்டி. அதான் ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கா.” என்றாள் ரஞ்சனா.

 

“ஓஹ், நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லு மா. இப்போலாம் கண்டதை சாப்பிட்டு உடம்பு கெடுத்துக்குறீங்க. நாங்களாம் அந்த காலத்துல…” என்று அவர் ஆரம்பிக்க, ரஞ்சனாவை காப்பதற்கென்றே அங்கு வந்தார் அந்த ராதையின் கிருஷ்ணன்.

 

“ஹாய் ரஞ்சும்மா, ரொம்ப நாளாச்சு பார்த்து.” என்று ராதாவின் அருகே அவரை இடித்துக் கொண்டு அமர்ந்தார்.

 

அவரை முறைத்த ராதாவின் பார்வையிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கை உணர்ந்தவள், இது எப்போதும் நடக்கும் நிகழ்வென்பதால் சிரித்துக் கொண்டே, “ஹாய் அங்கிள், நீங்க தான் ரெண்டு நாள் வேலைன்னு ஊருக்கு போய்டீங்க.” என்றாள்.

 

“ஆமா ஆமா, ஊருக்கு போய் உங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன்.” என்று ரஞ்சனாவிடம் கண்ணடித்துக் கூறினார்.

 

இது ராதாவின் உடைமையுணர்வை தூண்டி விட்டு சமரசம்  செய்வதற்காக கிருஷ்ணா நடத்தும் நாடகம் என்று ரஞ்சனாவிற்கு நன்றாக தெரியும். அவளும் சிரிப்புடன் அவர்களின் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“அப்பறம் என் ஸ்வீட்டி எப்படி இருக்கா?” என்று அவர் கேட்க, அவ்வளவு நேரம் பொறுமையை பிடித்துக் கொண்டிருந்த ராதாவை விட்டு அவரின் பொறுமை பறந்து போனது.

 

“லேட்டாச்சு நான் வீட்டுக்கு போறேன், ரஞ்சு.” என்றவர் கிருஷ்ணாவை முறைத்துக் கொண்டே நடந்தார்.

 

அவர் சென்றதும், “அங்கிள், இன்னைக்கு வீட்டுல உங்களுக்கு பெரிய்ய்ய சர்ப்ரைஸ் காத்திட்டு இருக்கு போல.” என்று ரஞ்சனா கிண்டலாக கூற, “ஹாஹா அந்த சர்ப்ரைஸ்ஸை வாலாண்டியரா வாங்கிகுற ஆள் நானா தான் இருக்கும். ஹ்ம்ம், அவ திட்டிட்டே இருந்தா கூட பரவாயில்லை. ஆனா என்கூட பேசாமயிருந்தா, அன்னைக்கு நாளே நல்லா இருக்காது.” என்று உணர்ந்து கூற, அவர்களின் அன்யோனிய வாழ்வை என்றும் போல் இன்றும் ரசித்தாள் ரஞ்சனா.

 

“சரி ரஞ்சும்மா, நானும் கிளம்புறேன். இல்லைன்னா உங்க ஆன்ட்டி கிட்ட இதுக்கும் எக்ஸ்ட்ராவா திட்டு வாங்க வேண்டியதிருக்கும்.” என்றவாறே அவரின் வீட்டை நோக்கி சென்றார்.

 

ராதா – கிருஷ்ணா தம்பதியரை ரஞ்சனாவிற்கு கடந்த நான்கு வருடங்களாக பழக்கம். இதோ இதே பூங்காவில் தான் முதல் முறை அவர்களை சந்தித்தாள். கள்ளம் கபடமில்லாத அவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு இன்று வரை அவர்களுடன் நட்புடன் இருக்கிறாள்.

 

அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் அவளை ஈர்த்தது, அவர்களின் காதல் தான். திருமணமாகி இருபது வருடங்கள் கழிந்தும், ஒருவரின் மேல் மற்றவருக்கு கொஞ்சம் கூட காதல் குறையாமல் இருப்பதைக் கண்டு பல சமயங்களில் வியந்திருக்கிறாள். அவர்களுக்கு குழந்தை இல்லையென்றாலும், இன்று வரை ஒருவருக்கு மற்றவர் துணை என்று வாழ்ந்து வருபவர்களைக் கண்டு அவர்களின் மேல் ரஞ்சனாவிற்கு தனி ‘க்ரேஸ்’ என்று கூட சொல்லலாம்.

 

இப்படியெல்லாம் தன் வாழ்விலும், காதலை கொட்டிக் கொடுக்க ஒருவன் வருவானா என்று அடிக்கடி அவளின் மனதில் தோன்றும். படிப்பை காரணமாக்கி, அலைபாயும் மனதை ஒரு தட்டு தட்டி, அதை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவாள். ஆனால், அதற்கெல்லாம் அடங்காத அவளின் மனதோ, கற்பனையில் ஒருவனை உருவாக்கி அவனுடன் டூயட் ஆடிக் கொண்டிருந்தது.

 

இன்றும் ராதா – கிருஷ்ணாவின் காதலை கண்டு ஒரு பெருமூச்சுடன் எதேச்சையாக வாசலை நோக்க, அங்கு வந்து கொண்டிருந்தான் அவன்.

 

ஆறடி உயரம், ஆப்பிள் சருமம், அதை கரடுமுரடாக காட்டும் அடர்ந்த தாடி, சிரிக்கும் கண்கள், கூர் மூக்கு, தாடிக்குள் மறைந்திருக்கும் உதடு என்று அவனை அவளறியாமலேயே அளவெடுத்துக் கொண்டிருந்தன அவளின் கண்கள்.

 

‘ஹ்ம்ம், அந்த தாடி மட்டுமில்லைன்னா, நல்லா அமுல் பேபி மாதிரி இருந்துருப்பான்.’ என்று அவளின் மனம் கூவ, அப்போது தான் சுயநினைவிற்கு வந்தவள், ‘ச்சே, என்னது இது! யாரோ ஒருத்தனை இப்படி பார்த்துட்டு இருக்கேன். இதுல ‘அமுல் பேபி’ன்னு கமெண்ட் வேற!’ என்று அவளையே திட்டிக் கொண்டவள், மீண்டும் அவன் வரும் திசையை நோக்க, அங்கு அவனின் பின்னே அந்த ‘டீனேஜ் கேர்ள்ஸ்’ குழு வந்து கொண்டிருந்தது.

 

‘ஓஹ், இவனுக்கு தான் வெயிட் பண்ணாங்களா?’ என்று நினைத்தவளை கலைத்தது அலைபேசியின் அலார சத்தம்.

 

மணியை பார்த்தவள், நேரமாகி விட்டதை உணர்ந்து, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு ஓடினாள்.

 

*****

 

சிட்னி, ஆஸ்திரேலியா…

 

வானுயர கட்டிடங்களை தன்னகத்தே கொண்டு நகரின் மையப்பகுதியிலுள்ள இந்த மத்திய வர்த்தக மாவட்டம் என்னும் இடம் தான் சிட்னி நகரின் வர்த்தக நாடியாகும்.

 

அதில் ஒரு கட்டிடத்தில் நுழைந்தது அந்த அதிநவீன மெர்சிடிஸ் பென்ஸ் கார். அதிலிருந்து இறங்கினான் அவன். பிசினஸ் உலகில் எஸ்.ஜே என்று அழைக்கப்படும் சஞ்சய்… சஞ்சய் பிரசாத், ‘கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸின்’ தற்போதைய உரிமையாளன்.

 

‘கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ ஆஸ்திரேலியாவில் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளிலும் தன் தடத்தை பதித்துள்ளது. கே.பி என்னும் பெயரின் கீழ் பல தொழில்கள் உள்ளன. அவையனைத்தையும் ஒற்றை ஆளாக நிர்வகிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால் அந்த சாதனையை தன் இருபத்தியேழாவது வயதிலேயே நிகழ்த்திக் காட்டியிருக்கிறான் எஸ்.ஜே.

 

தொழில் உலகில் கொடி கட்டிப் பறக்கும் எஸ்.ஜே ஆணழகன் தான். அவனின் உருவம் பார்த்தவுடன் அனைவரையும் ஈர்த்து விடும் தான். ஆனால் அவனின் கடினமான முகமோ, ஒருவரையும் அருகில் வரக்கூட அனுமதிக்காது. அந்த அளவிற்கு கற்பாறை போன்று இறுகியிருக்கும் அவனின் முகம். இறுகிப்போன அவன் இலகுவது யாரிடத்திலோ!

 

அதுவரை சற்று இலகுவாக இருந்த அவ்விடம், அவனின் வரவில், கண்ணசைக்கும் நேரத்தில் மந்திரம் போட்டது போல் சுறுசுறுப்பாக இயங்க, அதைக் கவனித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், கம்பீரமாக நடந்து சென்றான் எஸ்.ஜே.

 

அவன் வந்ததை அறிந்ததும், அவ்விடத்திற்கு ஓடி வந்தான் அவனின் பி.ஏ கோகுல். கோகுலை பார்த்தவனின் விழிகளில் இருந்த கோபத்தைக் கண்டுகொண்டவன் போல, அவனே வாக்குமூலத்தை கொடுக்க தயாராக, அவனை கையசைவில் தடுத்த எஸ்.ஜே, “டோன்ட் வேஸ்ட் மை டைம் இன் யுவர் லேம் எஸ்க்யூசஸ். இன்னொரு தடவை இப்படி லேட்டா வந்தா, யூ வில் பி ஃபயர்ட்!” என்று பற்களைக் கடித்தவாறே கூறியவன், அதிர்ச்சியாக நின்றிருந்த கோகுலை கடந்து சென்றான்.

 

“அரை செகண்ட் லேட்டா வந்ததுக்கே ஃபயர்ட்டா! இனி வாட்ச்சை நானோ செகண்ட்டுக்கு தான் செட் பண்ணனும் போல.” என்று எப்போதும் போல தன் தலையெழுத்தை சபித்துக் கொண்டு புலம்பியவனை, தோளில் தட்டிய ஒருத்தி, “சார் கான்ஃபெரன்ஸ் ரூம் போய் ஒரு நிமிஷம் ஆச்சு.” என்று ஆங்கிலத்தில் கூற, கோகுல் பதறிக் கொண்டு ஓடினான்.

 

‘டிக் டிக்’ என்ற கடிகார சத்தம் மட்டுமே அங்கு கேட்க, அந்த அறையில் குழுமியிருந்த அனைவரும், ‘என்ன நடக்கப் போகிறதோ’ என்ற பீதியிலேயே அமர்ந்திருந்தனர்.

 

அவர்களை மேலும் சற்று நேரம் பீதியில் ஆழ்த்திய பின்பே, அறையின் கதவை திறந்து அவர்கள் வந்தனர். ஆஸ்திரேலியாவில் பாரம்பரியமாக கட்டுமானத் துறையில் பெயர்பெற்ற ‘ஜோன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின்’ நிர்வாக இயக்குநர் ஹென்றி ஜோன்ஸுடன் அவரின் மகன் நிக்கோலஸ் ஜோன்ஸ் மற்றும் அவரின் உதவியாளர்கள் இருவர் வந்திருந்தனர்.

 

சிட்னியில் பிரம்மாண்டமாக கட்டவிருக்கும் ‘ஸ்கைஸ்க்ரேப்பர்’ எனப்படும் வானுயர்ந்த கட்டிடத்தை, கே.பி கன்ஸ்ட்ரக்ஷன்ஸுடன் இணைந்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்காக தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டது.

 

என்னதான் பாரம்பரியமான நிறுவனமாக இருந்தாலும், ஜோன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின் தற்போதைய நிலை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அவர்களின் நிலையை உயர்த்திக் கொள்ள இதுவொரு அரிய வாய்ப்பு என்பதால் ஜோன்ஸ் நிறுவனத்தினர் மிகவும் மகிழ்ச்சியாகவே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

உள்ளே நுழைந்ததும், ஹென்றி ஜோன்ஸ் ஆர்ப்பாட்டமாக எஸ்.ஜேயுடன் கைகுலுக்கியவர், “உங்க கூட பார்ட்னெர்ஷிப் வச்சுக்க எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கு எஸ்.ஜே.” என்று ஆங்கிலத்தில் கூறினார்.

 

“வெல், ஆனா எனக்கு உங்க கூட பார்ட்னெர்ஷிப் வச்சுக்க விருப்பமில்ல மிஸ்டர். ஜோன்ஸ்.” என்று முகத்தில் எதையும் காட்டாமல் சாதாரணமாக கூறினான் எஸ்.ஜே.

 

“வாட்! ஆர் யூ கிட்டிங்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் ஜோன்ஸ்.

 

உதட்டை கேலியாக வளைத்தவன், “பிசினஸ்ல நான் எப்பவும் காமெடியோ காம்ப்ரோமைஸோ பண்றதில்ல மிஸ்டர். ஜோன்ஸ். அதான் நான் இந்த இடத்துல இருக்கேன்.” என்று எஸ்.ஜே கூறியதும், நிக்கோலஸ் கோபமாக, “மைண்ட் யுவர் வர்ட்ஸ் எஸ்.ஜே.” என்றான்.

 

இப்போது எஸ்.ஜேயின் கண்கள் நிக்கோலஸை நோக்க, அவன் ஏதோ சொல்ல வந்த நேரம், மகனை தடுத்த ஜோன்ஸ், “இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப.” என்றவாறே அவ்வறையை விட்டு வெளியே சென்றார்.

 

அதையும் இதழ் வளைந்த கேலிச் சிரிப்புடன் பார்த்தவனின் உள்ளமோ உலைக்கலானாக கொதித்தது. வேகவேகமாக அந்த கட்டிடத்தின் மேல்மாடியை அடைந்தவன், தனக்கென பிரேத்யேகமாக உருவாக்கியிருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

 

அங்கு சுவரில் மாட்டியிருந்த சட்டமிட்ட புகைப்படத்தை நோக்கியவன், “வொய் டிட் யூ லீவ் மீ அல்லோன்?” என்று கத்தினான்.

 

*****

 

தன் ஜாக்கிங்கை முடித்துவிட்டு வந்தவள், சாவியை கொண்டு கதவை திறக்க, அந்த சத்தத்தில் தான் சஞ்சிதா உருண்டு பிரண்டு படுத்தாள். இதில், “ரஞ்சு, மெதுவா.” என்று கண்டனம் வேறு.

 

குளியலறையில் சத்தம் கேட்க, தர்ஷினி குளித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து தன் கட்டிலில் காலை நீட்டிப் படுத்தாள்.

 

தன் கையிலிருந்த அலைபேசியில், முதல் நாள் சேமித்து வைத்த ஆடியோ பதிவை செவிப்பேசி வாயிலாக கேட்க துவங்கினாள் ரஞ்சனா.

 

இதுவும் அவளின் பழக்கங்களில் ஒன்று தான். பள்ளியில் படிக்கும்போதெல்லாம் டைரியில் எழுதி வைத்தவள், இப்போது எழுதுவதற்கு நேரமில்லாததால் இப்படி ஆடியோவாக பதிவு செய்து கொள்வாள். ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், அந்த வாரத்தின் பதிவுகளை கேட்டு, சிலவற்றை மட்டும் சேமித்துவிட்டு  மீதியை அழித்து விடுவாள்.

 

“ஹே ஸ்வீட்டி, எப்பவும் போல ஒன்பது மணிக்கு நான் ஆஜராகிட்டேன். ஹ்ம்ம், இன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா, வழக்கம் போல சஞ்சு சைட்டடிக்க, தர்ஷு அவளை அடிக்கன்னு ஜாலியா போச்சு. அப்பறம் இன்னைக்கு லைட்டா மழை தூறுச்சு. சோ சூடா ஏதாவது சாப்பிடலாம்னு வழக்கமா போற டீக்கடைக்கு போகலாம்னு பிளான் பண்ணோம். ஆனா இந்த சஞ்சு தான், எப்பவும் இங்க தான சாப்பிடுறோம், வேற எங்கயாவது போலாம்னு எங்க ரெண்டு பேரையும் இழுத்துட்டு ரோடு ரோடா சுத்தி கடைசில ஒரு பன்னு கூட வாங்கி தரல. சோ சேட்! அப்பறம்… ஹ்ம்ம், இன்னைக்கும் அம்மா அப்பாக்கு ட்ரை பண்ணேன். நாட் ரீச்சபில்னு வருது. அவங்க பிஸி செட்யூல் எனக்கு புரியுது. ஆனாலும் இப்போயெல்லாம் அவங்க என்னை விட்டு ரொம்ப தள்ளியிருக்க மாதிரி ஒரு ஃபீலிங்! முன்னாடியெல்லாம் சுபி தான் என்னை அவாய்ட் பண்ணுவா. இப்போ என் குடும்பமே என்னை ஒதுக்குறாங்களோன்னு தோணுது. எனக்கு மட்டும் ஏன் இப்படி தோணுது? சரி விடு இந்த டைம் லீவுக்கு போறப்போ பார்த்துக்கலாம்.. சரி ஸ்வீட்டி ரொம்ப நேரம் உன்கூட பேசிட்டு இருந்தா சஞ்சு திட்டுவா… சோ பை நாளைக்கு பார்க்கலாம்.” என்று அந்த பதிவு முடிந்திருந்தது.

 

அப்பதிவை கேட்டவளிற்கு நினைவு முழுவதும் அவளின் குடும்பத்தை சுற்றியே இருந்தது. ரஞ்சனாவின் பெற்றோர், விஸ்வநாதன் – கமலா. இருவருமே மருத்துவத்துறையில் வேலை செய்கின்றனர். அவளிற்கு ஒரு தங்கை, பெயர் சுபத்ரா. அவளின் சொந்த ஊரிலேயே முதலாம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

 

தாய் தந்தை இருவரும் உயிர் காக்கும் துறையில் வேலை செய்வதால், அவர்களால் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாது. அந்த சிறு வயதிலும் பெற்றோரின் சூழல் புரிந்து நடந்து கொள்வாள் ரஞ்சனா.

 

ஆனால், அவளை விட இளையவளான சுபத்ராவோ பெற்றோரை தொல்லை செய்ய, அவர்களும் வேலையினால் ஏற்பட்ட அழுத்தத்தில், ரஞ்சனாவை போல் இருக்க சொல்லி திட்டி விடுவர்.

 

அதுவே சிறு வயதிலிருந்தே ரஞ்சனாவின் மீது சுபத்ராவிற்கு பொறாமையுணர்வை தூண்டியது. அவள் ரஞ்சனாவுடன் விளையாடவோ பேசவோ மாட்டாள்.

 

அப்போதிலிருந்தே ரஞ்சுவிற்கு துணையாகிப் போயினர் தர்ஷு என்கிற தர்ஷினி மற்றும் சஞ்சு என்கிற சஞ்சிதா. மூவருமே பிளே ஸ்கூலிலிருந்து இப்போது வரை ஒன்றாகவே சுற்றித் திரியும் ‘த்ரீ ரோசஸ்’. மூவரின் வீடும் அருகருகே இருந்ததால், விடுமுறையும் மூவருக்கும் ஒன்றாகவே கழியும்.

 

சஞ்சிதாவின் தாய் வசுந்தரா, அவர்களின் ஏரியா இன்ஸ்பெக்டராக இருக்கிறார். வசுந்தராவின் கணவர் அவரை விட்டு பிரிந்து விட, வேறு திருமணம் செய்து கொள்ள சொல்லி அவரின் குடும்பத்தினர் வற்புறுத்தினாலும், சஞ்சுவிற்காகவே அதை மறுத்து இன்று வரை தனியாகவே அவளை வளர்த்து வரும் இரும்பு பெண்மணி. வசுந்தராவின் மேல் ரஞ்சு மற்றும் தர்ஷுவிற்கு தனி மரியாதை உண்டு. ஆனால் சஞ்சுவோ, வசுந்தராவின் பணியை காரணம் காட்டி தன்னுடன் நேரம் செலவளிப்பதில்லை என்று அவ்வப்போது புகார் வாசிப்பாள்.

 

தர்ஷினியின் பெற்றோர், அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே இறந்து விட, அவளின் அத்தை மலர்விழி அவளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். ஏதோ காரணங்களால், அவரின் திருமணம் தடைபட, அண்ணன் மகளுக்காக அதன்பின் திருமணத்தை மறுத்து விட்டார்.  வீட்டில் அவரின் தாயின் துணையுடன் நர்சரி பள்ளியை ஆரம்பிக்க, அங்கு தான் நம் ‘த்ரீ ரோசஸ்’ஸின் நட்பு மலர்ந்தது.

 

இவர்களின் விடுமுறை நாட்கள் எல்லாம் தர்ஷுவின் வீட்டில் தான் கழியும். தர்ஷுவின் பாட்டிக்கு இவர்கள் அங்கு செல்வது பிடிக்காது. அவர்களை ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பார். ஆனால் மலர்விழியோ அதற்கு நேர்மாறாக அன்பை பொழிவார். அவருக்கு மூன்று பிள்ளைகளும் சமம் தான்.

 

இப்படி அழகாக ஆரம்பித்த அவர்களின் சிறுவயது நட்பு இப்போது கல்லூரியில் முதுநிலை கல்வி வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

ரஞ்சனா அவர்களின் கடந்த கால வாழ்க்கையை நினைத்துக் கொண்டிருக்க, அவளின் நினைவுகளை கலைத்த தர்ஷு, “ஹே ரஞ்சு, எவ்ளோ நேரம் கூப்பிடுறது? டைம்மாச்சு சீக்கிரம் குளி. நான் மேடமை எழுப்புறேன்.” என்று சுகமாக தூங்கிக் கொண்டிருந்த சஞ்சுவின் போர்வையை உருவினாள்.

 

“தர்ஷு, உனக்கு தான் ஃபீவரா இருந்துச்சுல. இப்போ எதுக்கு குளிச்ச?” என்று ரஞ்சு வினவவும், “இந்த சின்சியர் சிகாமணி அதுக்கு ஏதாவது காரணம் சொல்லுவா. ஹாவ்வ்வ்!” என்று தூங்கி எழுந்த போதும் தர்ஷுவைக் கிண்டல் செய்து கொண்டே எழுந்தாள் சஞ்சு.

 

அதன்பின் இருவரும் சண்டைபோட, ரஞ்சு குளித்து முடித்து வெளியே வந்துவிட்டாள். “அடச்சே நிப்பாட்டுங்க ரெண்டு பேரும். சஞ்சு போய் சீக்கிரம் குளிச்சுட்டு வா. அப்போ தான் மெஸ்ல சாப்பாடு இருக்கும்.” என்று சஞ்சுவை விரட்டினாள் ரஞ்சு.

 

“அந்த காஞ்சு போன தோசைக்காகவா சீக்கிரம் குளிக்க சொல்ற? உனக்கெல்லாம் மனச்சாட்சியே இல்லையா?” என்று சஞ்சு ஆரம்பிக்க, “நீ எதுக்கு அடிபோடுறன்னு தெரியுது. ஏற்கனவே லேட்டாச்சு. இதுல வெளிய போய் சாப்பிடனும்னா இன்னும் லேட்டாகிடும். சோ இன்னைக்கு மார்னிங் மெஸ்ல தான் சாப்பிட போறோம்.” என்று தர்ஷு அவளை அறிந்தவளாக கூறினாள்.

 

அதைக் கேட்ட சஞ்சு உதட்டைப் பிதுக்க, “சரி சரி நைட் நம்ம வெளிய சாப்பிடலாம்.” என்று அவளை அப்போதைக்கு சமாதானப்படுத்தினாள் ரஞ்சு.

 

“ஹே சூப்பர். இங்க மெய்ன் ரோட்டுல புதுசா ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுருக்காங்களாம். அங்க போலாம்.” என்று திட்டம் தீட்டியவாறே குளியலறைக்குள் புகுந்தாள் சஞ்சு.

 

அதைக் கேட்ட மற்ற இருவரும் சிரிக்க, விதியும் இவர்களுடனே சிரித்தது. இதுவரை எவ்வித தடங்கலுமின்றி நேர்கோட்டில் பயணித்துக் கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கைப் பாதையில் இனி வரும் தடங்கல்களை இவர்கள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றனர் என்பதை இவர்களுடனே பயணித்து தெரிந்து கொள்வோம்.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
20
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்