Loading

காதல் 19

 

 

கோகுல் சஞ்சயிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், சஞ்சு வீட்டினுள் இருந்து அழுது கொண்டே ஓடி வருவது தெரிந்தது. சில நிமிடங்கள் முன்னிருந்த துறுதுறுப்பு இல்லாமல் ஓய்ந்து போன நிலையில், கலங்கிய விழிகளுடன் வந்தவளை பார்த்தவனின் மனமும் கலங்கிப்போக, அலைபேசியில் மறுமுனையில் இருக்கும் சஞ்சயை மறந்து தான் போனான்.

 

உடனே, சஞ்சு முன் சென்று நின்று அவளை தற்காலிகமாக தடுத்தவனிடம், சஞ்சு தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்க, ‘யாருக்கு என்ன?’ என்று தான் அவன் முதலில் கேட்க  நினைத்தது.

 

ஆயினும் தன்னவளின் பரிதவிப்பு அந்த கேள்வியை கேட்க விடாமல் வாயை கட்டிப்போட, தலையோ அவளின் கேள்விக்கு தன்னால் அசைந்து பதிலளித்தது.

 

அவளை முன்னிருக்கையில் அமர சொல்லியவனிற்கு அப்போது தான் சஞ்சயின் நினைவு வந்தது.

 

சஞ்சயோ, “கோகுல், நீ ஹாஸ்பிடல் போ. நானும் வரேன்.” என்று சுருங்க கூறிவிட, கோகுல் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வாகனத்தில் ஏறி கிளம்பும் சமயத்தில், தர்ஷுவும் மலர்விழியும் வந்து ஏறிக் கொண்டனர்.

 

“சாரி அண்ணா. பிளீஸ், கொஞ்சம் சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறீங்களா?” என்று தர்ஷு வினவ, கோகுலும் சூழ்நிலையை புரிந்து கொண்டவனாக வேகமாக வாகனத்தை செலுத்தினான்.

 

முன் போலல்லாது அந்த வாகனத்தில் இறுக்கமான சூழ்நிலையே நிலவ, கோகுலிற்கு தான் மனம் அடித்துக் கொண்டது.

 

ஓரக்கண்ணில் சஞ்சுவை பார்த்தவன் அழுதழுது சிவந்த முகம் கண்ணில் பட, ‘வெக்கத்தால சிவக்க வைக்கணும்னு நினைச்சேன். இப்படி அழுகையில சிவக்கும்னு நினைக்கலையே’ என்று வருந்தினான்.

 

காரணம் அறியாததால் அவன் பதட்டம் இன்னும் அதிகரித்தது.

 

பின்னே இருப்பவர்களை கண்ணாடியில் பார்க்க, அவர்களும் கேள்வியை எதிர்கொள்பவர்கள் போலில்லை. ஒரு பெருமூச்சுடன் வாகனத்தை அவர்கள் கூறிய மருத்துவமனை முன்பு நிறுத்தினான்.

 

முன்னர் வீட்டில் இறக்கி விட்டபோது தர்ஷு எப்படி ஒரு அவசர நன்றியுடன் இறங்கி ஓடினாளோ, இப்போது சஞ்சுவும் அவசரமாக உள்ளே ஓடினாள், அந்த நன்றியை கூட பகிராமல்.

 

அதிலேயே சஞ்சுவின் அன்னை தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை கோகுல் அறிந்து கொண்டான். அவன் தான் சஞ்சுவை பார்த்த அன்றே அவளைப் பற்றி அடி முதல் நுனி வரை அறிந்து கொண்டானே. சஞ்சயும் தோழிகளை பற்றி விசாரிக்க சொல்லியதால், அது அவனிற்கு எளிதாகவே இருந்தது.

 

இருப்பினும், அதை உறுதிபடுத்திக் கொள்ள தர்ஷுவிடம் கேட்டான்.

 

“அண்ணா, நாங்க மலர் அத்தைக்கு பிபி பிராப்ளம்னு நினைச்சு தான் வந்தோம். ஆனா, வசுந்தரா ஆன்ட்டிக்கு தான் உடம்புக்கு முடியலன்னு ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காங்கன்னு இங்க வந்து தான் தெரிஞ்சுது. அதான் சஞ்சு கொஞ்சம் அப்செட் ஆகிட்டா. அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு இன்னும் எங்களுக்கும் தெரியாது.” என்று தர்ஷு கூற கூற, அவளின் மனக்கண்ணில் சற்று முன் நடந்த காட்சிகள் விரிந்தன.

 

******

 

தர்ஷு கோகுலிடம் நன்றியை கூறிவிட்டு உள்ளே வர, அங்கு ராசாத்தியின் கால்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார் மலர்விழி.

 

“அத்த, என்னாச்சு உங்களுக்கு? இப்போ எப்படி இருக்கு? மயங்கி விழுந்துட்டீங்கன்னு பாட்டி சொன்னாங்க.” என்று தர்ஷு அவசரமாக கேள்விகளை அடுக்கினாள்.

 

“ஷ், தர்ஷு ரிலாக்ஸாகு முதல்ல. எனக்கு ஒன்னும் இல்ல. லேசா பிபி கூடிடுச்சு அவ்ளோ தான்.” என்று மலர்விழி கூற, அதற்கு மேல் கேட்க பொறுமை இல்லாதவளாக, “அப்போ எதுக்கு பாட்டி உடனே கிளம்பி வர சொன்னாங்க?” என்று பதட்டம் தணியாதவளாக கேட்டாள்.

 

“அது… நம்ம சஞ்சு அம்மாக்கு…” என்று மலர்விழி இழுக்கும் அதே சமயம் உள்ளே நுழைந்த சஞ்சு அதை கேட்டுவிட்டாள்.

 

“ஆன்ட்டி, அம்மாக்கு என்ன?” என்ற சஞ்சுவிற்கு இப்போது பதட்டம் தொற்றிக் கொண்டது.

 

“ஷ் சஞ்சும்மா, எதுக்கு டென்ஷனாகுற? உங்க அம்மாவை பத்தி தான் உனக்கு தெரியுமே… வேலைன்னு வந்துட்டா உடம்பை பார்த்துக்க மாட்டாங்க. இப்பவும் ஏதோ கேஸ் விசாரிக்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டாங்க போல. அதான் ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரிப்ஸ் ஏத்திட்டு இருக்காங்கடா.” என்று மலர்விழி பொறுமையாக கூற, சஞ்சுவிற்கு பதட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது.

 

“ஆன்ட்டி, அம்மா இதுக்கு முன்னாடி இப்படி மயங்கி விழுந்ததே இல்லையே. எனக்கு ஏதோ பயமா இருக்கு.” என்று சஞ்சு அழ, “சஞ்சும்மா, அம்மாக்கு எதுவும் ஆகாது. நம்ம இப்போவே போய் அம்மாவை பார்க்கலாம்.” என்று மலர்விழி கூற, “ம்ம்ம், வாங்க இப்போவே போலாம். வெளிய… வெளிய கோகுல் இருக்காரு… நம்ம அவங்க கார்லயே போலாம். நான் போய் அவரை வெயிட் பண்ண சொல்றேன். நீங்க சீக்கிரம் வாங்க.” என்று கத்தியபடி அவர்கள் சொல்ல வருவதை கூட கேட்காமல் வெளியே ஓடினாள்.

 

“சஞ்சு, அவருக்கு வேற வேலை இருக்கும்.” என்று தர்ஷு சொல்லிக் கொண்டிருக்க, சஞ்சு அங்கு இருந்தால் தானே!

 

சஞ்சுவை பின்தொடர முயன்ற மலர்விழியை தடுத்த தர்ஷு, “அத்த, உண்மைலேயே ஆன்ட்டிக்கு ஒன்னும் இல்லயா? ஒன்னும் இல்லாததுக்கு எல்லாம் எங்களை இப்படி கூப்பிட மாட்டிங்களே.” என்று சந்தேகமாக வினவினாள்.

 

தான் சொல்லாமலேயே புரிந்து கொண்ட மருமகளை வருத்தமாக பார்த்த மலர்விழி, “எங்களுக்கு சரியா தெரியல தர்ஷும்மா. அங்க ஹாஸ்பிடல்ல இதுவரை சரியான விளக்கம் தரல. நம்ம ஃபேமிலி டாக்டரும் இவ்ளோ தான் எங்ககிட்ட சொன்னாங்க. ஆனா, அவங்க ஏதோ மறைக்குறாங்கன்னு எனக்கு தோணுது. இன்னைக்கு போய் தான் கேட்கணும்.” என்றார்.

 

இதையெல்லாம் கோகுலிடம் கூறி முடித்தாள் தர்ஷு.

 

“சரி வாங்க, அவங்களுக்கு என்னாச்சுன்னு பார்க்கலாம்.” என்று கோகுல் கூற, “அண்ணா, உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்க பார்த்துட்டு உங்களுக்கு சொல்றோமே.” என்று தர்ஷு தயங்க, “இந்நேரம் உங்களை எப்படி தனியா விட்டுட்டு போக? அதுபோக, பாஸும் இங்க தான் உங்க பிரெண்டை கூட்டிட்டு வராரு.” என்று கூறிவிட்டு முன்னே நடக்க, மற்ற இருவரும் அவனை பின்தொடர்ந்தனர்.

 

*****

 

வாகனம் தன் விடுதி நோக்கி செல்லாததை உணர்ந்த ரஞ்சு சஞ்சய் புறம் திரும்பி பார்க்க, சஞ்சயோ அவளை சற்று இயல்பாக்க, “ஒருவழியா கழுத்து இந்த பக்கம் திரும்பிடுச்சு போல.” என்றான்.

 

அதில் லேசாக சிரித்த ரஞ்சு, “இது பிஜி போற வழி இல்லையே. ரூட் மாறி வந்துட்டீங்களா?” என்று வினவ, “இல்ல ரஞ்சு, உன்னை கடத்திட்டு போறேன்.” என்று கடினமான குரலில் கூறினான் சஞ்சய்.

 

அவன் கூற்றில் ஒருநொடி புருவம் சுருங்க யோசித்தவள், “ப்ச், உண்மையை சொல்லுங்க ஜெய்.” என்று இயல்பாக அவன் பெயரை சுருக்கியிருந்தாள் ரஞ்சு.

 

அந்த பெயரைக் கேட்டதும், அவன் கைகளில் மகிழுந்து சிறிது ஆட்டம் காண, “என்னாச்சு?” என்று பதறினாள் ரஞ்சு.

 

பின் அவளே, “உங்களை ஜெய்னு கூப்பிட்டதாலயா? உங்களுக்கு பிடிக்கலைன்னா அப்படி கூப்பிடல.” என்று ரஞ்சு கூற, “ச்சேச்சே, அப்படியெல்லாம் இல்ல. ஜெய்னு சஞ்சு தான் கூப்பிடுவான்.” என்று கூறியவன் இப்போது தெளிவாகி இருந்தான்.

 

அவன் மனமோ, ‘அவன் மட்டும் தான் அப்படி கூப்பிடுவானா?’ என்று கேட்க, அதை ஒதுக்கிவிட்டு சாலையில் கவனத்தை செலுத்தினான்.

 

“ம்ம்ம், ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் போல. என்கிட்ட உங்களை பத்தி சொன்னப்போ உங்க மேல எவ்ளோ அன்பு வச்சுருக்காருன்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது. சில நேரம், பொஸஸிவ்னெஸ் கூட! ஹ்ம்ம், சோ க்யூட்!” என்று ரஞ்சு சிறுசிரிப்புடன் கூற, சஞ்சயும் சிறு வெட்கத்துடனும், அதை மறைக்க லேசான சிரிப்புடனும் அதை கேட்டிருந்தான்.

 

“ஆனா, ஏன் சஞ்சுவை தனியா இருக்க விட்டீங்க? பாவமா தெரியலையா உங்களுக்கு? உங்க தம்பியை விட, உங்க பிசினஸ் தான் முக்கியமா போச்சா?” என்று அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினாள் ரஞ்சு.

 

சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு, எப்போது இப்படி அனலடிக்கும் உரையாடலாக மாற ஆரம்பித்தது என்று இருவருமே உணரவில்லை.

 

ரஞ்சுவின் பேச்சு சஞ்சய்க்கு கோபத்தை தரவில்லை. மாறாக அதை ரசிக்கவே செய்தது அவன் மனம்.

 

“பிசினஸையும் பார்க்கணுமே.” என்று சஞ்சய் மெதுவாக கூற, “அதை தான் முன்னாடி கேட்டேன், உங்களுக்கு தம்பியை விட பிசினஸ் தான் முக்கியமா?” என்று வினவினாள் ரஞ்சு.

 

மற்ற யாராவது இப்படி கேட்டிருந்தால் பதில் சொல்வானா என்றே தெரியாது. ஆனால், இப்போது  ரஞ்சுவிடம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

 

இத்தனை நாட்களாக அவனை கேள்வி கேட்பவர் யாரும் இல்லையே. அவன் யாரையும் தன்னருகே விடவில்லை என்று கூற வேண்டுமோ!

 

“சரி, அப்போ தப்பு பண்ணிட்டேன். இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற?” என்று கிட்டத்தட்ட சரணடையும் நிலையில் இருந்தான் சஞ்சய்.

 

அப்போது தான், தான் செய்து கொண்டிருப்பதையே உணர்ந்தாள் ரஞ்சு.

 

‘ச்சு, என்ன பண்ணிட்டு இருக்கேன் நான்?’ என்று சுதாரித்தவள், “இப்போயாவது சொல்லுங்க, எங்க போறோம்?” என்று பேச்சை மாற்றினாள்.

 

சஞ்சய்க்கு அப்போது தான் அவளிடம் செய்தியையே கூறவில்லை என்று புரிந்தது.

 

உடனே, வாகனத்தை ஓரத்தில் நிறுத்தியவன், “சனா, கோகுல் எனக்கு கால் பண்ணான். அங்க ஏதோ பிரச்சனை போல. சஞ்சு அழுததை அந்த போன் கால்ல கேட்டேன்.” என்று சஞ்சய் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறைந்த பதட்டம் கூடியது ரஞ்சுவிற்கு.

 

“என்ன சொல்றீங்க ஜெய்? சஞ்சு எதுக்கு அழுதா? நான் இப்போ ஊருக்கு போகணும்.” என்று வரிசையாக கடகடவென்று கூற, “ஈஸி சனா, நம்ம இப்போ உன் ஊருக்கு தான் போறோம். அங்க என்ன சிஷுவேஷன், எதுக்கு சஞ்சு அழுதான்னு எல்லாம் இன்னும் தெரியல. சோ, டென்ஷனாகாம பொறுமையா இரு.” என்றான் சஞ்சய்.

 

“எப்படி பொறுமையா இருக்க ஜெய்?” என்று அவள் ஏதோ கூற வர, “பொறுமையா தான் இருக்கணும் சனா. அங்க உன் பிரெண்டுக்கு நீதான ஆறுதல் சொல்லணும். இல்ல, நீயே இப்படி பதறிட்டு இருக்க போறன்னு சொன்னா, உன்னை அங்க கூட்டிட்டு போறதே வேஸ்ட். இப்படியே உன் பிஜிக்கு காரை திருப்பிடுவேன்.” என்று மிரட்டலாக சஞ்சய் கூற, ரஞ்சுவும் அவனின் மிரட்டலிற்கு அடங்கியவளாக அமைதியாக இருந்தாள்.

 

வெளியில் அப்படி காட்டிக் கொண்டாலும், அவள் மனமோ அலைகடலாக பொங்கிக் கொண்டு தான் இருந்தது. அதை சஞ்சயும் அறியத்தான் செய்தான். ஆனால், எங்கு அதைப் பற்றி வினவினால், மீண்டும் பதற ஆரம்பித்து விடுவாளோ என்று எண்ணியே அவளின் அலைப்புறுதலை மௌனமாக பார்த்தபடியே வாகனத்தை இயக்கினான்.

 

*****

 

கோகுல், தர்ஷு, மலர்விழி மூவரும் வசுந்தரா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை விசாரித்து செல்ல, சஞ்சு அங்கிருந்த பெண் காவலரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

தர்ஷுவை பார்த்ததும், “தர்ஷு, புஷ்பா அக்கா (பெண் காவலர்) கிட்ட கேட்டேன். அம்மா ரெஸ்ட் இல்லாம வேலை செஞ்சுட்டே இருந்ததால மயக்கம் வந்துடுச்சாம். அதான் ட்ரிப்ஸ் ஏத்தியிருக்காங்களாம்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வசுந்தராவை பார்க்க சஞ்சுவை அறைக்குள் அழைத்தனர்.

 

கட்டிலில் படுத்திருந்த வசுந்தராவை கண்டு, “ம்மா..” என்று அருகில் சென்ற சஞ்சுவை தடுத்த அவர்களின் குடும்ப மருத்துவரோ, “சஞ்சு, அம்மா இன்னும் மயக்கத்துல தான் இருக்காங்க. அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம பார்க்கணும்.” என்று கூற, அவளும் தலையசைத்தவாறே வசுந்தராவின் அருகே அவரின் கரம் பற்றியபடி அமர்ந்து கொண்டாள்.

 

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மலர்விழியையும் தர்ஷுவையும் கண்ணசைவினால் வெளியே அழைத்தார். அவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கோகுலும் அவர்களை பின்தொடர்ந்தான்.

 

அந்த மருத்துவருக்கு மலர்விழியையும் தர்ஷுவையும் நன்கு தெரியும். ஆனால், அந்த புதியவனை கண்டு சற்று தயங்க, அதை புரிந்து கொண்ட கோகுலும், “நானும் அவங்க வெல்விஷர்ல ஒருத்தர் தான் டாக்டர். சோ, நீங்க தாராளமா சொல்லலாம். என்கிட்ட சொல்ற விஷயம் என்னை மீறி வேற யாருக்கிட்டயும் போகாது.” என்று கூறினான்.

 

தர்ஷுவும் மலர்விழியும் மறுக்காத காரணத்தினாலும், அவர்களின் சூழ்நிலையை முன்னரே கணித்து அவர்களுக்கு ஆண் துணை தேவைப்படலாம் என்பதாலும் மருத்துவர் கோகுலிடமும் அதை பகிர்ந்தார்.

 

“நான் இப்போ சொல்லப்போறது உங்களுக்கு அதிர்ச்சியா தான் இருக்கும். ஆனா, இத்தனை நாள் இதை மறைச்சதுக்கு காரணம் வசுந்தரா தான்.” என்ற பீடிகையுடன் மருத்துவர் ஆரம்பிக்க, மற்ற மூவருக்கும் என்னவென்று பதட்டம் தொற்றிக் கொண்டது.

 

“வசுந்தராக்கு பிரெஸ்ட் கான்சர். அதுவும் லாஸ்ட் ஸ்டேஜ்.” என்று அவர் கூற மற்ற மூவருக்குமே அது அதிர்ச்சி தான்.

 

அதிலிருந்து மீண்ட தர்ஷு, “நோ நோ, இது எப்படி சாத்தியம்? ஆன்ட்டி நல்லா தான இருந்தாங்க. என்னால நம்ப முடியல.” என்று கூற, “ரிலாக்ஸ் தர்ஷு, என்னால உன் நிலைமையை புரிஞ்சுக்க முடியுது. ஃபர்ஸ்ட் டைம் டையக்னைஸ் பண்ணப்போ என்னாலேயே நம்ப முடியல தான்.” என்றார் மருத்துவர்.

 

“டாக்டர், ஆன்ட்டிக்கு டிரீட்மெண்ட் கொடுக்கலாம் தான. ஷி வில் சர்வைவ் ரைட்?” என்று எதிர்பார்ப்புடன் தர்ஷு வினவ, “எனக்கும் அப்படி சொல்ல ஆசையா தான் இருக்கு தர்ஷு. ஆனா, என்னால இப்போ உனக்கு ஃபால்ஸ் ஹோப்ஸ் கொடுக்க முடியாது. இன்ஃபேக்ட் ஷீ இஸ் கவுண்டிங் ஹெர் டேஸ்.” என்றார்.

 

அவரின் கூற்றில் தர்ஷு கலங்கி போய் என்ன கேட்பதென்று தெரியாமல் நிற்க, கோகுல் தான் அடுத்த கேள்வியை கேட்டான்.

 

“டாக்டர், இவ்ளோ சீக்கிரமா… எப்படி?” என்று எப்படி கேட்பதென்று தெரியாமல் கோகுல் விழிக்க, “ஒரு வருஷத்துக்கு முன்னாடியே டையக்னைஸ் பண்ணியாச்சு மிஸ்டர். அப்போவே அவங்க கண்டிஷன் மோசமா தான் இருந்துச்சு. ஆனா, ஷீ இஸ் வெரி பிரேவ். இல்லன்னா, இவ்ளோ நாள் கேன்சரோட போராடியிருக்க மாட்டாங்க.” என்றார்.

 

“ஒரு வருஷத்துக்கு முன்னாடியேவா? எங்ககிட்ட ஏன் சொல்லல?” என்று தர்ஷு புலம்ப, “நானும் இதையே பலமுறை அவங்ககிட்ட சொல்லிட்டேன் தர்ஷு. ஆனா, அவங்க சொல்லக்கூடாதன்னு என்கிட்டயும் சொல்லிட்டாங்க.” என்றவர், அன்று வசுந்தராவிற்கும் தனக்கும் நடந்த உரையாடலை அவர்களிடம் பகிர ஆரம்பித்தார்.

 

“டாக்டர், இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா, என் பொண்ணு எல்லாத்தையும் விட்டுட்டு என்னை பார்க்க வந்துடுவா. இது அவ ஜாலியா என்ஜாய் பண்ற வயசு டாக்டர். அது மட்டுமில்லாம, அவ வாழ்க்கையோட அடித்தளமே இந்த நாட்கள் தான். அதை எல்லாம் இழந்து, எனக்கு அவ தினம் தினம் சேவை செய்யுறதுல எனக்கு விருப்பம் இல்லை.”

 

“வசுந்தரா, சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, இது நீங்க அவளோட கழிக்கிற இறுதி நாட்களா கூட இருக்கலாம். ஒருவேளை, தப்பா ஏதாவது நடந்தா… அவளுக்கு உங்க கூட இருந்த மெமரிஸாவது இருக்கும்ல.”

 

“இப்படி ஒரு நோயாளியா என்னோட மெமரிஸ் அவளுக்கு வேண்டாம் டாக்டர். அவளுக்கு எப்பவும் நான் ‘ஹிட்லர் மம்மி’யாவே இருக்க ஆசைப்படுறேன். சோ, என்னோட கடைசி நாள் இது தான்னு தெரியுற வரை இந்த விஷயம் அவளுக்கு தெரிய வேண்டாம் டாக்டர்.”

 

“வசுந்தரா, அப்படி சடனா சொன்னா, அவளுக்கு எப்படி இருக்கும்? அவ எப்படி அதை ஹேண்டில் பண்ணுவா?”

 

“அவளை அவ பிரெண்ட்ஸ் பார்த்துக்குவாங்க டாக்டர். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு!”

 

அதைக் கேட்ட மூவருக்கும் நெஞ்சையடைத்த உணர்வு தான். கூடுதலாக, தர்ஷுவிற்கு அவர் தங்களின் மீது நம்பிக்கையை எண்ணி சற்று கர்வமாகவும் இருந்தது தங்களின் நட்பை எண்ணி!

 

“கடவுளே, இந்த பிள்ளைங்க மேல உனக்கு என்ன இவ்ளோ கோபம்? முதல்ல ரஞ்சு, இப்போ சஞ்சுவா?” என்று மலர்விழி புலம்ப ஆரம்பித்து விட்டார்.

 

“அத்த, நம்மளே இப்படி உடைஞ்சு போகக்கூடாது. சஞ்சுவுக்கு நம்ம தான் தைரியம் சொல்லணும்.” என்று தர்ஷு தான் அவரை தேற்றினாள்.

 

மேலும் மருத்துவரிடம், “டாக்டர், ஆன்ட்டிக்கு நார்மலா உடம்பு முடியலைன்னு சொன்னதுக்கே சஞ்சு ரொம்ப பதறிட்டா. இதுல, அவங்களுக்கு கேன்சர்னு எப்படி சொல்றது?” என்று தர்ஷு வினவ, அவரோ ஒரு பெருமூச்சுடன், “அதை வசுந்தராவே பார்த்துப்பாங்க தர்ஷு. அதுவரை அவளுக்கு தெரிய வேண்டாம்.” என்றவர், “நீங்க போய் பாருங்க. நான் திரும்ப ரவுண்ட்ஸ் வரப்போ பார்க்குறேன்.” என்று அவர்களிடமிருந்து விடைபெற்றார்.

 

தெரிந்து கொண்ட விஷயம் மனதை கனத்து போகச் செய்ய, மூவருமே அமைதியாகவே வசுந்தரா இருந்த அறைக்கு வந்தனர். அங்கிருந்த பெண் காவலரோ அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

 

அறைக்குள் நுழைந்தவர்கள் கண்டது, வசுந்தராவின் கட்டிலில் தலை வைத்து அவரின் கரத்தினை பிடித்துக் கொண்டு படுத்திருந்த சஞ்சுவை தான்.

 

அவளின் நிலை கண்ட கோகுல், ‘இந்த விஷயம் தெரிஞ்சா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு தெரியல சஞ்சும்மா. ஆனா, திரும்ப உன்னை பழையபடி நான் மாத்துவேன்.’ என்று அப்போதே மனதிற்குள் சபதம் எடுத்தான்.

 

காதல் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்