Loading

காதல் 17

 

 

அந்த நாளின் பகல் முழுவதையும் ஒருவித பரபரப்புடனே கழித்த ரஞ்சு, மாலையில் மற்ற நாட்களைக் காட்டிலும் வேகமாக கல்லூரியில் இருந்து கிளம்பினாள். அவளின் வேகத்தை கண்டும் காணாதவாறு இருந்த தர்ஷுவும் சஞ்சுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

இருவரிடமும் விடைபெற வேண்டி வந்த ரஞ்சுவிடம், “ஆமா, மேடம் எங்க இவ்ளோ சீக்கிரமா கிளம்பிட்டீங்க?” என்று சஞ்சு வினவ, “அதான் நேத்து சொன்னேன்ல, அங்க… அவரோட… போறேன்…ன்னு…” என்று முதலில் வேகமாக ஆரம்பித்தவள், திக்கித் திணறி முடித்தாள்.

 

“ஆஹான், ஓய் உன்னை தனியா எல்லாம் அனுப்ப முடியாது. அட்லீஸ்ட் உன் ஆளுக்கிட்டயாவது உன்னை பத்திரமா ஒப்படைக்கணும்ல.” என்று கண்ணடித்துக் கூறினாள் சஞ்சு.

 

“ச்சே, அதெல்லாம் வேணாம்.” என்று ரஞ்சு முடிப்பதற்குள், “ஓஹ், தனியா உன் ஆளை மீட் பண்றளவுக்கு போயிட்டியா?” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.

 

“அச்சோ, அப்படியெல்லாம் இல்ல…” என்று ரஞ்சு சிணுங்க, சஞ்சு மேலும் ஏதோ கூற வருவதற்குள், தர்ஷு அவளை இடைமறித்து, “போதும் போதும், கிளம்பலாம் லேட்டாச்சு. ரஞ்சு, சஞ்சய் கிட்ட எங்க வரணும்னு கேளு. நாங்க உன்னை அங்க ட்ராப் பண்ணிட்டு போயிடுறோம்.” என்றாள்.

 

அப்போது தான் சஞ்சயின் அலைபேசி எண் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தாள் ரஞ்சு. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே அலைபேசியை உயிர்ப்பிக்க, அதில் ஏற்கனவே சஞ்சய் அவளை வீட்டிற்கு வருமாறு செய்தி அனுப்பியிருந்தான்.

 

அதனை தோழிகளிடம் கூற, அதற்கும் சஞ்சு அவளை கேலி செய்ய, தர்ஷு தான் இருவரையும் அடக்கி சஞ்சயின் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

 

இவர்கள் வீட்டினுள் நுழைய, வரவேற்பறையில் தீவிர ஆலோசனையில் இருந்தனர் சஞ்சய் மற்றும் கோகுல். இருவரும் இவர்களின் வரவை கண்டுகொள்ளவில்லை.

 

ரஞ்சுவிற்கு தான், அவர்களை தொந்தரவு செய்கிறோமோ என்று தோன்றியது. அதே நினைவில் அவள் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அதே கணத்தில் அவளை உள்ளே வருமாறு அழைத்தான் சஞ்சய்.

 

“என்ன ப்ரோ ரஞ்சுக்கு மட்டும் தான் ஸ்பெஷல் இன்விடேஷனா? எங்களையெல்லாம் உள்ள இன்வைட் பண்ண மாட்டீங்களா?” என்றவாறே உள்ளே நுழைந்தாள் சஞ்சு.

 

‘அட நம்ம சஞ்சுக்குட்டி.’ என்று உள்ளே நுழைந்தவளை ஆர்வமாக பார்க்க ஆரம்பித்திருந்தான் கோகுல். ஆனால் அவளோ அங்கொருவன் இருப்பதைக் கண்டுகொள்ளவே இல்லை.

 

“அட என் பெர்மிஷன் கேட்டு தான் உள்ள நுழைவீங்களா நீங்க?” என்று அவள் ஏற்கனவே வந்திருந்ததை காட்டி புருவம் சுருங்க சஞ்சய் கிண்டல் செய்ய, அவனின் இந்த புதிய அவதாரத்தைக் கண்ட ரஞ்சு தான் கண்களை விரித்து அவனைப் பார்த்தாள்.

 

அடுத்த சில நிமிடங்கள், அங்கு சஞ்சய் – சஞ்சு – தர்ஷு மூவரும் பேச, மற்ற இருவரும் பார்வையாளர்களாக மாறிப் போயினர்.

 

“ஆமா, என் இன்னொரு ப்ரோ எங்க?” என்று சஞ்சு வினவ, “அவன் ஹோட்டல்ல ஏதோ பிராப்ளம். அதான் என்னன்னு பார்த்துட்டு வர போயிருக்கான்.” என்றான் சஞ்சய்.

 

“அதுக்குள்ள சரியாகிடுச்சா?” என்று கேள்வி கேட்டவள் தர்ஷு.

 

“ஹ்ம்ம், ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னா, கேட்காம போயிட்டான்.” என்று பெருமூச்சு விட்டவாறே சஞ்சய் கூறினான்.

 

கேள்வி கேட்டவளும் பதில் சொன்னவனும் எதார்த்தமாக இருக்க, சஞ்சு தான் மனதிற்குள், ‘இவளுக்கு என்ன புது அக்கறை?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

கோகுல் இவ்வளவு நேரம் தன்னவளை நேரில் பார்த்து, கனவில் டூயட் ஆடிக் கொண்டிருக்க, அவனைக் கலைத்தான் சஞ்சய்.

 

“கோகுல்… கோகுல்…” என்று இரு முறை அழைத்த பின்பே சுயத்திற்கு திரும்பியவன் கேள்வியாக சஞ்சயை நோக்க, அவனோ கோகுலை கிளப்புவதிலேயே குறியாக இருந்தான்.

 

“நீ போய் டேவிட் கிட்ட நான் சொன்னதெல்லாம் ஒரு முறை டிஸ்கஸ் பண்ணு. அடுத்த அப்டேட் சீக்கிரமா எனக்கு வேணும்.” என்றான் சஞ்சய்.

 

‘க்கும் இவரு மட்டும் அந்த பொண்ணோட அவுட்டிங் போவாராம். நான் மட்டும் கஞ்சி போட்ட விறைப்பா மாதிரி சுத்துற அந்த டேவிட் கூட போகணுமாம்.’ என்று அலுத்துக் கொண்டே, சஞ்சுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, செல்ல மனமே இல்லாமல் சென்றான்.

 

“ஓகே ப்ரோ, நாங்களும் கிளம்புறோம். எங்க ரஞ்சுவை பத்திரமா பார்த்துக்கோங்க.” என்று சஞ்சு எதார்த்தமாக கூற, அது சம்பந்தப்பட்ட இருவருக்கும் மட்டும் வேறு கோணத்தில் புரிந்தது போலும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி இருக்க, அவர்களை கலைத்தது தர்ஷு தான்.

 

“நாங்களும் கூட வந்துருப்போம். ஆனா, ரஞ்சு ஏனோ இதை தனியா ஃபேஸ் பண்ணனும்னு நினைக்குறான்னு எங்களுக்கும் புரிஞ்சுது.” என்று தோழியை புரிந்து கொண்டவளாக பேசிய தர்ஷு, இருவருக்கும் பொதுவாக ஒரு ‘டேக் கேர்’ரை சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, சஞ்சுவும் ஒரு தலையசைவுடன் கிளம்பினாள்.

 

சஞ்சய் மற்றும் ரஞ்சனாவின் பயணம் துவங்கியது. ரஞ்சுவின் பிறப்பின் ரகசியத்தை அறிந்துகொள்ள மேற்கொள்ளும் இந்த பயணம் தொடருமா இல்லை முடியுமா என்பது அவர்களின் கைகளில் தான்!

 

*****

 

தன் ஹோட்டல் அறையில் கணக்குவழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ். அவன் வராத நாட்களில் சிலபல குளறுபடிகள் ஏற்பட்டிருக்க, தன் உதவியாளனை திட்டிக் கொண்டிருந்தான்.

 

பத்து நிமிடங்களாக தொடர்ந்த திட்டும் படலம் அவனிற்கு சோர்வை தந்திருக்க, தன் உதவியாளனை வெளியே அனுப்பிவிட்டு, நாற்காலியில் சாய்ந்து சற்று கண்ணசந்தான்.

 

அப்போது வேகமாக கதவை திறந்து உள்ளே வந்த அந்த உதவியாளன், “சார்… சார்… இவங்களை உங்களுக்கு தெரியும்னு சொல்லி, அப்பாயின்ட்மெண்ட் கூட இல்லாம உங்களை பார்க்க…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்திருந்தாள் அவள்.

 

இப்போது யாரென்ற எரிச்சலில் கண்களை திறந்தவன், அவளைக் கண்டதும், “ஹே ரஞ்சு, என்ன திடீர்னு?” என்று எழுந்து கொள்ள, அவனிற்கு தெரிந்தவள் தான் என்ற நிம்மதியுடன் அங்கிருந்து சென்றான் உதவியாளன்.

 

அவளோ எதுவும் பேசாமல் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, சஞ்சீவ் தான் பேசியபடி அவளருகே வந்திருந்தான்.

 

தன் பேச்சுக்கு எதிர்வினையாற்றாமல் இருந்தவளைக் கண்டவன், அவள் முகத்திற்கு முன் கையை அசைத்து, “என்ன ரஞ்சு, இப்படி பார்க்குற?” என்று வினவ, “நான் உன்னை இப்படி பார்க்க கூடாதா ஜீவ்?” என்ற அவளின் மறுமொழியில் திகைத்து தான் போனான் சஞ்சீவ்.

 

“ஷ்ரேயா?” என்று ஆச்சரிய அதிர்ச்சியில் அவன் கேள்வியும் சுருங்கியிருந்தது.

 

“பரவாலையே கண்டுபிடிச்சுட்ட. நான் கூட ரொம்ப நேரம் எடுக்குமோன்னு நினைச்சேன்.” என்று உதட்டை வளைத்து, அத்தனை நேரமிருந்த உடல்மொழியை மாற்றியபடி ஷ்ரேயா பேச, அவளை காணக்கூட விரும்பாதவனாக வேறுபக்கம் தலையை திருப்பியவன், “எதுக்கு இங்க வந்த?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வினவினான்.

 

“க்கும், உன் மேனர்ஸ் எங்க ஜீவ்? இப்படி தான் வந்தவங்களை நிக்க வச்சுட்டே கேள்வி கேட்பியா?” என்று சாவகாசமாக வினவியபடி அங்கிருந்த நாற்காலியில் அவள் அமர, அவளின் செய்கைகளை எல்லாம் கோபத்துடனே பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.

 

“ஹான், என்ன கேட்ட? நான் எதுக்கு வந்தேன்னு தான கேட்ட. எல்லாம் உனக்கு தெரியாத விஷயத்தை சொல்லி எச்சரிக்க தான் வந்தேன் ஜீவ். ஹ்ம்ம், எனக்கு தெரியும் நீ பழசை மறந்து இப்போ தான் மூவ்-ஆன் ஆக ட்ரை பண்ற. அதுக்கே உனக்கு இவ்ளோ நாள் ஆகியிருக்கு.” என்று வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றினாள் ஷ்ரேயா.

 

“ப்ச், உன் போலி அனுதாபம் எல்லாம் எனக்கு வேண்டாம். இதை தான் சொல்ல வந்தேனா, நீ தாராளமா கிளம்பலாம்.” என்று சஞ்சீவ் கூற, “அட என் ஜீவுக்கு இருந்த பொறுமை எல்லாம் எங்க போச்சு?” என்று நக்கலாக வினவினாள் ஷ்ரேயா.

 

அதில் தன் பொறுமையை முற்றிலும் இழந்தவனாக, ஏதோ முணுமுணுத்தவாறே அங்கிருந்து வெளியேற முயன்ற சஞ்சீவை தடுத்த ஷ்ரேயா, “ஓகே ஓகே கூல். நான் எதுக்கு வந்தேனா, இதுக்கு தான்.” என்று அவனிடம் சில புகைப்படங்களை கொடுத்தாள்.

 

அது முன்தினம் ரஞ்சுவை சஞ்சய் காப்பாற்றும்போது எடுத்தவைகள் தான். அந்த சூழ்நிலையை அறியாதவர்கள் பார்த்தால், இருவரும் கட்டிக்கொண்டு இருப்பது போல தான் தோன்றும்.

 

சஞ்சய் நடந்ததை சஞ்சீவிடம் சொல்லாதது இங்கு ஷ்ரேயாவிற்கு வசதியாகிவிட, அவள் தன் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தாள்.

 

“ஹ்ம்ம், அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன ராசியோ தெரியல, எப்பவும் ஒரே பொண்ணு மேல தான் பார்வை போகுது.” என்று சலிப்புடன் ஷ்ரேயா கூற, அத்தனை நேரம் அந்த புகைப்படம் உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சியில் இருந்தவன், சட்டென்று அவளை முறைத்தான்.

 

“ஷட்டப் ஷ்ரேயா!” என்று அவன் கத்த, “ஷ்ரேயாவா? ம்ம்ம், என்னை அவ்ளோ சீக்கிரம் மறந்துட்டியா ஜீவ்?” என்று விரக்தியாக பேசியபடி அவள் திரும்ப, சட்டென்று அவள் கழுத்தை தன் ஒரு கையில் பற்றி இறுக்கியவன், “வாரேவா உன் நடிப்பு திறமையை திரும்ப என்கிட்ட காட்டுற பார்த்தியா? உனக்கு இருக்க தைரியம் யாருக்கும் இருக்காது ஷ்ரேயா. சோ, இந்த ஃபோட்டோவை நான் பார்த்தா, இதுக்காக ஜெய் கூட சண்டை போடுவேன், அதுல நீ குளிர் காயலாம்னு எதிர்பார்த்துட்டு இருக்க அப்படி தான? ஆனா, எப்பவும் நீ நினைச்சது மட்டுமே நடக்காது.” என்று காட்டமாக கூறினான்.

 

அதுவரை அவனை தடுக்க போராடியவளை பிடித்த வேகத்தில் விட, அவள் தொய்ந்து கீழே விழுந்தாள்.

 

சில நொடிகள் தடைபட்ட மூச்சுக்காற்று இப்போது தாராளகமாக கிடைக்க, அதை நன்கு சுவாசித்து தன்னை சமன்படுத்திக் கொண்டவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

“இப்பவும் உன்னை பார்க்கும்போது பழைய ஜீவா தான் எனக்கு தெரியுது. அம்மாவை இழந்து தனிமைல வாடியிருந்த என் ஜீவ்!” என்றவள் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் பேச துவங்கினாள்.

 

“இப்போ நான் சொல்றதை நீ நிச்சயமா நம்பமாட்டன்னு எனக்கு நல்லாவே தெரியும். எனக்கு உன்மேல எப்பவுமே தனி பாசம் இருக்கு ஜீவ்.” என்றவளை நோக்கி கேலியாக இதழ் வளைத்தான் சஞ்சீவ்.

 

அவளோ அவன் பார்வையை கண்டுகொள்ளாமல், “நீ உன் லைஃப்ல மூவ்-ஆன் ஆகுறதை கேள்விப்பட்டதும் முதல்ல சந்தோஷப்பட்டவ நான் தான். எஸ், உன்னை பத்தின அப்டேட்ஸ் எனக்கு வந்துட்டே இருக்கும் ஜீவ். நீ இந்தியா வந்தது எதுக்காகன்னு கூட எனக்கு தெரியும். உன் ரஞ்சுக்காக தான?” என்று இடைவெளி விட்டவள், அவன் முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கண்டு திருப்தியுற்றவளாக தொடர்ந்தாள்.

 

“அவ முகமும் என்னை மாதிரி இருக்க… உஃப் அதை விடு, அது உன் சாய்ஸ். ஆனா, இப்பவும் உன் ஆசைக்கு குறுக்க நிக்குறது உன் அண்ணா தான் ஜீவ். எனக்கு தெரியும் இன்னொரு ஏமாற்றத்தை உன்னால தாங்கிக்க முடியாது. இப்போயாவது ஸ்டாண்ட் ஃபார் யூ ஜீவ்.” என்று அவள் பேச, சஞ்சீவோ அமைதியாகவே இருந்தான்.

 

அப்போதும் விடாதவளாக, “உன் அண்ணன் தான் எல்லாமேன்னு நீ மட்டும் தான் நினைக்குற ஜீவ். அப்படி ‘என் தம்பி தான் முக்கியம்’னு உன் அண்ணன் நினைச்சுருந்தா, உனக்கு ரஞ்சு மேல காதல் இருக்குன்னு தெரிஞ்சும், இப்படி அவ பின்னாடி சுத்துவாறா?” என்று பேச, அவளை பேசவிட்டது போதும் என்று எண்ணியவனாக, “எல்லாம் ஓதியாச்சுன்னா நீ போலாம்.” என்றான் சஞ்சீவ்.

 

“ஜீவ்…” என்று அவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, “கெட் அவுட்.” என்று கூறியவன், தன் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

 

ஷ்ரேயாவோ மேஜை மீதிருந்த புகைப்படங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

 

*****

 

“ஷ்ரேயா, போன காரியம் என்னாச்சு? அந்த சஞ்சீவ் நீ சொன்னதை நம்பிட்டானா?” என்று ரிஷி கேட்க, இதழை வளைத்து சிரித்த ஷ்ரேயாவோ, “அவன் என்னை நம்ப மாட்டான்னு எனக்கு முன்னாடியே தெரியும் ரிஷி. இவனுங்களை பிரிக்குறது அவ்ளோ ஈஸி இல்ல. இப்போ சும்மா கல்லை மட்டும் எரிஞ்சுருக்கேன். அது தெளிவா இருக்க குட்டையை குழப்ப கொஞ்ச நேரமாகும்.” என்றாள்.

 

“ஹ்ம்ம், ஈஸியா இருக்க வழியை விட்டுட்டு இப்படி அந்த சஞ்சீவ் பின்னாடி சுத்துறது எனக்கென்னவோ சரியா படல.” என்று ரிஷி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, “அவ்ளோ சுலபமா வெற்றி கிடைச்சுட்டா, அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு ரிஷி? ரெண்டு பேரையும் எதிரெதிரா மோத விட்டு வேடிக்கை பார்க்குறதுல தான் சுகமே இருக்கு.” என்று ஆழ்ந்து அனுபவித்து சொன்னாள் ஷ்ரேயா.

 

“க்கும், எனக்கு தடையா இருக்க அந்த ரெண்டு பேரு அழிஞ்சா போதும்.” என்றபடி வெளியேறினான் ரிஷி.

 

செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரேயா. அவள் மனதில் ஓடிக் கொண்டிருப்பது என்னவோ?

 

*****

 

வாகனத்தில் ஏறியதிலிருந்து அமைதியாக வரும் ரஞ்சுவைக் கண்ட சஞ்சய், “ஏதாவது பிராப்ளமா?” என்று வினவ, அவளோ தன் சிந்தனையிலிருந்து கலைந்தவளாக, “இல்ல, எனக்கே இப்போ இந்த பயணம் அவசியம் தானான்னு தோணுது. நேத்து நீங்க கேட்ட கேள்வியை புரிஞ்சுக்க கூடிய நிலைல இல்ல. ஆனா, இப்போ இது கொஞ்சம் வியர்ட்டா இருக்கு. அவங்க வேற வாழ்க்கை அமைச்சுருந்தா, இப்போ நான் போறதால அவங்க வாழ்க்கைல ஏதாவது பிரச்சனையாக கூட வாய்ப்பிருக்குல. இதையெல்லாம் யோசிக்காம அவசரப்பட்டு முடிவெடுத்துட்டேனோன்னு தோணுது.” என்று கூறியவளை ஒருநொடி ஆச்சரியமாக தான் பார்த்தான் சஞ்சய்.

 

தனிமையில் வாடும்போதும் கூட தன்னை விட்டுச் சென்றவர்களின் நலனை பற்றி யோசிக்கிறாளே என்ற ஆச்சரியம் அவனிற்கு.

 

“ரொம்ப யோசிக்காத ரஞ்சு. எல்லாருக்கும் எப்பவும் நல்லவளா இருக்க முடியாது.” என்றவன், அலைபேசி ஒலிக்க அதை ஏற்றான்.

 

சஞ்சய் கூறியவற்றை கேட்ட ரஞ்சுவும் ஒரு பெருமூச்சுடன் ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினாள். அப்போது அவளின் அலைபேசியும் ஒலித்தது.

 

சஞ்சய்க்கு கோகுல் அழைத்திருக்க, ரஞ்சுக்கு சஞ்சு அழைத்திருந்தாள்.

 

“பாஸ், டேவிட் ஒரு லீட் பிடிச்சுருக்காரு. ராஜசேகர் ரீசண்ட்டா ***** ஊருக்கு போயிருக்காரு. அவரு போன அட்ரஸும் நமக்கு கிடைச்சுருக்கு.” என்று கோகுல் கூற, சஞ்சயோ, ‘இது ரஞ்சு ஊராச்சே.’ என்று மனதிற்குள் நினைத்தான்.

 

அதே சமயம் ரஞ்சுவிடம் பேசிய சஞ்சுவோ, “ரஞ்சு, நம்ம மலர் ஆன்ட்டிக்கு உடம்பு முடியலைன்னு பாட்டி தர்ஷுக்கு கால் பண்ணாங்க. பிபி அதிகமாகி தலைசுத்திடுச்சாம்.” என்று கூற, “அச்சோ, இப்போ எப்படி இருக்காங்க சஞ்சு? ஹாஸ்பிடல் போனாங்களா?” என்று ரஞ்சு பதறினாள்.

 

“ம்ம்ம் போயிட்டு வந்து தான் கால் பண்ணியிருக்காங்க. தர்ஷு கொஞ்சம் பயப்படுறா. சோ, நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போய் பார்த்துட்டு வரோம். அதுவரை நீ இங்க தனியா இருந்துப்பியா?” என்று சஞ்சு தயக்கத்துடனே வினவினாள்.

 

சில நொடிகள் யோசித்த ரஞ்சுவும் தர்ஷுவின் நிலை உணர்ந்து, அவளை தனியே அனுப்ப விரும்பாமல், “அது நான் பார்த்துக்குறேன் சஞ்சு. நீங்க பத்திரமா போயிட்டு வாங்க. அப்பப்போ எங்க இருக்கீங்கன்னு அப்டேட் பண்ணுங்க.” என்று ரஞ்சு பதட்டமாக பேச, கோகுலை அந்த ஊருக்கு சென்று விசாரிக்க சொல்லியபடி அவளை பார்த்தான் சஞ்சய்.

 

அவளின் பதட்டம் உணர்ந்து என்னவென்று விசாரிக்க, அவளும் சஞ்சு கூறியவற்றை கூறினாள்.

 

சிறிது யோசித்த சஞ்சய், “ரஞ்சு அவங்க ரெண்டு பேரும் இப்போ தனியா போக வேண்டாம். கோகுல் அந்த ஊருக்கு தான் ஒரு வேலையா போறான். அவனோட போகட்டும்.” என்று கூற, ரஞ்சுவுக்கும் அது சரியென்றே தோன்றியது.

 

அவர்களின் உரையாடல் அலைபேசியின் மறுமுனையிலிருந்த இருசாராருக்கும் கேட்டிருக்க, ஒருவன் சந்தோஷத்தில் குதிக்க, மற்றவளோ ‘யாருக்கு வந்த விருந்தோ!’ என்று அமைதியாகவே இருந்தாள்.

 

ஒருவழியாக இரு அலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளித்திருக்க, அவர்கள் செல்ல வேண்டிய இடமும் வந்திருந்தது.

 

சஞ்சய் கூறியவற்றை மீண்டும் மனக்கண்ணில் கொண்டு வந்த ரஞ்சு, ஒரு பெருமூச்சுடன் வாகனத்திலிருந்து இறங்கி அந்த வீட்டின் கதவை தட்டினாள். கதவு திறக்கும் வரை அவள் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருக்க, அவளை காப்பாற்றவே அந்த கதவு திறக்கப்பட்டது.

 

அதே சமயம், சஞ்சயும் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்திவிட்டு அங்கு வந்திருக்க, உள்ளே இருந்து, “யாரு நீங்க? என்ன வேணும்?” என்ற குரல் கேட்டது.

 

ரஞ்சு ஒருமுறை சஞ்சயை பார்த்துவிட்டு, “நான்… என் பேரு ரஞ்சனா. இங்க இவா… க்கும், இவாஞ்சலின் அவங்களை பார்க்கணும்.” என்று தயங்கியபடி ரஞ்சு கூற, எதிரிலிருந்தவளோ ஆராய்ச்சி பார்வையுடன், “அவங்க என் அம்மா தான். நீங்க எதுக்கு அவங்களை பார்க்கணும்?” என்று கேட்டாள்.

 

அவள் கூறியதைக் கேட்ட ரஞ்சுவோ, எப்படி உணர்ந்தாள் என்று அவள் மட்டுமே அறிவாள். உரிமையாக ‘அம்மா’ என்று சொன்னதாகட்டும், தன்னை யாரென்று கேட்டதாகட்டும், இரண்டுமே அவளை சுட்டது. அந்த கேள்விக்கு அத்தனை எளிதில் பதில் சொல்லிவிட முடியுமா?

 

அவள் தயங்கி நின்றிருப்பதை பார்த்த சஞ்சயோ, “ஹலோ மிஸ், உங்க அம்மாவை நாங்க பார்க்கணும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “ரோஸி, யாருக்கிட்ட பேசிட்டு இருக்க?” என்று கேட்டபடி நாற்பத்தியைந்து வயதைக் கடந்த பெண்மனி அங்கு வந்தார்.

 

அவரைக் கண்ட ரஞ்சுவுக்கு வாய் பேச மறக்க, கண்கள் மட்டும் அதன் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தது.

 

“அம்மா, இவங்க உங்களை தான் பார்க்கணுமாம்.” என்று கூறிவிட்டு அந்த ரோஸி உள்ளே சென்றுவிட, “யாரு நீங்க?” என்று வினவினார் இவாஞ்சலின்.

 

ரஞ்சு எதுவும் கூறாமல் இருப்பதை கண்ட சஞ்சய், அவளை உசுப்ப, அதில் தன் எண்ணங்களிலிருந்து வெளிவந்த ரஞ்சுவோ, “நீங்க இவாஞ்சலின் தான?” என்று அதற்கான விடை தெரிந்தும் கேட்க, அவரோ இப்போது பார்வையை கூர்மையாக்கியபடி அதே பதிலை கூறினார்.

 

“நான் ரஞ்சனா.” என்று அவள் அறிமுகப்படுத்தும்போதே, நினைவு வந்தவராக, “ஹே, நீ கமலா பொண்ணு தான? வா வா உள்ள வா.” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்.

 

‘கமலா பொண்ணு’ என்ற பதம் மீண்டும் ரஞ்சுவின் மனதை வருத்தியது.

 

‘இப்போ கூட உங்க பொண்ணுன்னு சொல்ல வாய் வரல.’ என்று நினைத்தபடி அவள் உள்ளே செல்ல, சஞ்சயும் அவளைப் பின்தொடர்ந்தான்.

 

இருவரையும் உள்ளே அழைத்து வந்த இவாஞ்சலின், “கமலா எப்படி இருக்கா? உனக்கு ஒரு தங்கச்சியும் இருக்கால, அவ எப்படி இருக்கா? அவ பிறந்தப்போ பேசுனது, அதுக்கப்பறம் டச் விட்டு போச்சு.” என்று உற்சாகமாக பேச, ரஞ்சுவோ அவரையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

‘எப்படி இவங்களால இப்படி சாதாரணமா பேச முடியது?’ என்று விரக்தியாக நினைத்த ரஞ்சு, அங்கிருந்த ரோஸியை ஒரு பார்வை பார்த்தவள், ‘ஒருவேளை அவளுக்கு தெரியக்கூடாதுன்னு மறைக்குறாங்களா, இல்லை எனக்கு தெரியாதுன்னு மறைக்குறாங்களா.’ என்றும் யோசித்தாள்.

 

இவாஞ்சலின் தன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்தவள், “நாங்களும் கூட இப்போ டச்ல இல்ல.” என்று ரஞ்சு கூறியதைக் கேட்டு அவர் அதிர்ந்து தான் போனார்.

 

“என்னமா சொல்ற? டச்ல இல்லயா? நீ அவளோட இல்லயா?” என்று இவாஞ்சலின் வினவ, “ஹ்ம்ம் சொந்த அம்மாவுக்கே என்மேல அக்கறை இல்ல. வளர்த்த அம்மா கிட்ட அதை எதிர்பார்க்க முடியுமா?” என்று ரஞ்சு வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல பேசினாள்.

 

அந்த பதிலில் ஒருநொடி திகைத்த இவாஞ்சலின், “உனக்கு தெரியுமா?” என்று வினவ, பதில் இல்லாமல் பார்வை மட்டுமே ரஞ்சுவிடத்தில்.

 

அதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ரோஸி, ரஞ்சுவின் பார்வை தன் அன்னையை குற்றம்சாட்டுவதை கண்டு வெகுண்டு, “உங்க பிரச்சனைக்கு என் அம்மாவை எதுக்கு பார்க்க வந்துருக்கீங்க?” என்று சுள்ளென்று வினவினாள்.

 

“இந்த பிரச்சனை யாரால ஏற்பட்டுச்சோ அவங்க கிட்ட தான சொல்யூஷன் தேடி வர முடியும்?” என்று ரஞ்சுவின் பேச்சு மற்ற இருவருக்கும் புதிராக இருக்க, ரோஸியை கண்டிக்க முயன்ற இவாஞ்சலின் கூட புருவம் சுருக்கி ரஞ்சுவை பார்த்தார்.

 

“என்ன சொல்ல வர ரஞ்சனா?” என்று இவாஞ்சலின் வினவ, “நேராவே கேட்குறேன். கைவிடனும்னு நினைச்சா எதுக்கு என்னை பெத்தீங்க?” என்று ரஞ்சு வினவ, அந்த நொடி அந்த அறையே மௌனத்தில் மூழ்கியது.

 

ரோஸியின் மௌனம் அதிர்ச்சியில் என்றால், இவாஞ்சலினின் மௌனம் குழப்பத்தினால்.

 

“என்ன சொல்ற ரஞ்சனா? நான் உன்னை பெத்தேனா?” என்று இவாஞ்சலின் சற்று கடினமான குரலில் வினவ, இப்போது அதிர்ச்சியும் குழப்பமும் அடைவது ரஞ்சுவின் முறையானது.

 

காதல் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்