581 views

காதல் 14

 

 

அன்றைய நாளை மருத்துவமனையிலேயே கழித்தவர்கள், அடுத்த நாள் மருத்துவர் வந்து ரஞ்சுவின் நிலையை சோதித்துப் பார்த்ததும் கிளம்பினர்.

 

கிளம்பும்போதே ரஞ்சு மலரிடம், “ஆன்ட்டி, நான் எங்க வீட்டுக்கே போறேன்.” என்று கூற, மலரோ, “அங்க போய் தனியா என்ன பண்ணுவ ரஞ்சு?” என்று கேட்டதும், விரக்தியாக சிரித்தவள், “இனிமே நான் அதை பழகத்தானே வேணும். ஆன்ட்டி.” என்றாள் ரஞ்சு.

 

மலரின் மனமோ அவளின் விரக்தி பேச்சில் துடித்தது. ‘இன்னும் என்னென்ன கஷ்டங்களை நீ அனுபவிக்கணுமோ!’ என்று ஊமையாய் அழுதது.

 

“இன்னொரு தடவை இப்படி பேசுனா என்ன பண்ணுவேன்னு தெரியாது ரஞ்சு. விட்டுட்டு போனவங்களை நினைச்சு நீ எதுக்கு வருத்தப்பட்டுட்டு இருக்க? ஏன் நாங்க எல்லாம் இல்லயா உன்கூட? அப்படி என்ன தனிமையை நீ பழகிக்கப்போற?” என்று தர்ஷுவும் சஞ்சுவும் மாறி மாறி அவளை அதட்ட ஆரம்பிக்க, ரஞ்சுவே, “போதும் போதும், இனி அப்படி சொல்ல மாட்டேன்.” என்று கூறும்வரையில் அவளை விடவில்லை.

 

“ஆனா, இப்போ அந்த வீட்டுக்கு போகணும்னு தோணுது.” என்று பாவமாக கூற, ஒரு பெருமூச்சுடன் மற்றவர்கள் சம்மதித்தனர்.

 

ரஞ்சுவை சஞ்சுவுடன் அனுப்பிவிட்டு சிறிது பின்தங்கினாள் தர்ஷு. மலரின் முகம் தெளிவடையாமல் இருப்பதைக் கண்டவள், ரஞ்சு தனியாக இருப்பதை நினைத்து வருந்துகிறார் என்று நினைத்துக் கொண்டு, “அத்த, ஃபீல் பண்ணாதீங்க. அவளை தனியா விட மாட்டோம். அவளுக்கு ஏனோ அங்க இருக்கணும்னு இருக்கு. அவளையும் ‘இதை பண்ணாத, அதை பண்ணாத’ன்னு சொல்லி ஸ்ட்ரெஸ் பண்ண வேணாம். நானும் சஞ்சுவும் அங்க அவ கூட துணைக்கு இருக்கோம்.” என்று கூறி தேற்றினாள்.

 

மலரின் வருத்தத்திற்கான காரணத்தை அறியாமல் தர்ஷு அவரை சமாதானப்படுத்த வேண்டி இதை சொல்லியிருந்தாலும், அவள் கூறிய, ‘தனியா விட மாட்டோம்’ என்ற வாக்கியம் அவரின் மன சஞ்ஜலத்திற்கு மருந்தாக அமைந்தது என்று கூறினால் அது மிகையாகாது.

 

மருமகளின் கைகளைப் பற்றிக் கொண்டவர், “மூணு பேரும் எப்பவும் ஒற்றுமையா இருக்கணும்.” என்று எப்போதும் கூறுவதைக் கூற, “இதை நீங்க சொல்லணுமா அத்த?” என்று தர்ஷுவும் அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 

“ரஞ்சு, இப்போ நீ அந்த வீட்டுக்கு போனா ஒழுங்கா ரெஸ்ட் எடுக்க மாட்ட. சோ இன்னைக்கு ஒருநாள் எங்க கூட வா.” என்று தர்ஷு அழைக்க, “இல்ல தர்ஷு, நா… நான் அங்கயே போறேன். நீங்களும் என்கூட வாங்களேன்.” என்று முதலில் மறுத்தவள் அவர்களையும் தன்னுடன் வர அழைத்தாள்.

 

அங்கிருந்த மூவருக்கும் அவளின் தயக்கமோ, மெல்லிய பிடிவாதமோ கருத்தில் பதியவில்லை போலும். ஏன், ரஞ்சுவிற்கே அவள் செய்ய நினைத்த காரியம் சரியா தவறா, இதனால் புதிதாக பிரச்சனைகள் வருமா என்பது சரிவர தெரியவில்லை. இருந்தாலும், மனதில் உறுத்திக் கொண்டிருப்பதை முழுதாக களைந்து விட்டால் சற்று நிம்மதியாக இருக்கும் என்றும் அவளிற்கு தோன்றியது.

 

இந்த குழப்பங்களினுடே அவளின் வீட்டிற்கு வந்தனர். ரஞ்சுவை வீட்டில் விட்டவர்கள், “ஒன் ஹவர்ல ஃப்ரெஷ்ஷாகிட்டு வந்துடுறோம்.” என்றுவிட்டு சென்றனர்.

 

தான் செய்ய நினைக்கும் காரியத்திற்கு தனிமையும் அவசியம் என்பதால், எதுவும் கூறாமல் தலையசைத்து அனுப்பி வைத்தாள் ரஞ்சு.

 

*****

 

சஞ்சுவைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்த கோகுலை, சஞ்சயும் சஞ்சீவும் வெகு நேரமாக அழைத்தும் பயனில்லாததால், ‘கனவிலேயே டூயட் ஆடி தொலையட்டும்’ என்று விட்டுவிட்டனர் இருவரும்.

 

ஆனால், அந்த பெருந்தன்மை கோகுலின் அலைபேசிக்கு இல்லை போலும், அது அவனின் சிந்தை கலைக்க இருபதாவது முறையாக கூப்பாடு போட்டது.

 

மருந்தின் வீரியத்தால் உறக்கம் வர சொக்கியிருந்த சஞ்சீவை அலைபேசி சத்தம் தூங்க விடாமல் செய்ய, ‘கோகுல் கோகுல்’ என்று கத்திப் பார்த்தவன், வெறுத்துப் போய் தன்னருகில் இருந்த தலையணையை அவனை நோக்கி எரிந்திருந்தான்.

 

கனவு கலைந்த எரிச்சலில், திரும்பிப் பார்த்த கோகுல், அப்போது தான் இவர்களின் சத்தம் கேட்டு உள்ளே வந்து தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருந்த சஞ்ஜயைக் கண்டு திட்ட திறந்த வாயை மூடிக் கொண்டான்.

 

இருபத்தியோராவது முறையாக ‘காட் தி மேன் வித் தி பிளான் ரைட் ஹியர்’ பாடல் ஒலிக்க, “டேய் அதை அட்டெண்ட் பண்ணி தொலையேன்டா.” என்று கத்தினான் சஞ்சீவ்.

 

‘இவன் எதுக்கு இப்போ கத்துறான்?’ என்று நினைத்தவாறே அலைபேசியின் புறம் பார்வையைத் திருப்ப, அவனின் தாய் தான் அழைத்திருந்தார்.

 

‘ஆஹா, என்ன மம்மி கரெக்ட் டைம்ல கால் பண்றாங்க? ஒருவேளை இவங்க ஏதாவது போட்டுக் கொடுத்துருப்பாங்களோ!’ என்று எண்ணியவாறே அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தான்.

 

“டேய் கோகுல், எத்தனை தடவை டா கால் பண்றது? கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா உனக்கு?” என்று ஆரம்பித்து இந்திய தாய்மார்கள் திட்டுவதை அட்சரம் பிசகாமல், அவரின் கொஞ்சும் தமிழில் திட்டி முடித்தார் ஹெலன். அவரின் தமிழுக்கு உபயம் கோகுலின் தந்தை அமர்நாத் தான்.

 

“ஷ், மாம்…” என்று கோகுல் ஆரம்பிக்க, “அம்மான்னு கூப்பிடுன்னு எத்தனை தடவை சொல்றது?” என்று அதற்கும் எகிறினார் ஹெலன்.

 

“இதுக்கெல்லாம் காரணம் மிஸ்டர். அமர்நாத் தான? ஆஸ்திரேலியா வந்ததும் இருக்கு அவருக்கு!” என்றவன், “ம்மா, என் பொறுப்பு பத்தி உனக்கு தான் சரியா தெரியல.” என்று அவன் மனதை திறக்க ஆரம்பிக்க, “என்ன ஏதாவது பொண்ண பார்த்துட்டு உளறிட்டு இருக்கியா?” என்று வினவினார்.

 

தன்னைப் புகழ்வார் என்றெண்ணிய கோகுல் அப்போது தான் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டிருந்தான். அதன் காரணமாக அண்ணனும் தம்பியும் ஹெலனின் பேச்சைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

 

“எதே உளருறேனா? ம்மா, நீ தான சொன்ன, உனக்கு இந்திய மருமக தான் வேணும்னு. உன் சந்தோஷத்துக்காக என் பின்னாடி சுத்தி சுத்தி வந்த லிசா, லிண்டாவை கூட வேணாம்னு ஒதுக்கி, உனக்காக இந்தியாக்கு வந்து பொண்ணு பார்த்துருக்கேன். நீ என்னடானா அசால்ட்டா உளருறேன்னு சொல்லிட்ட.” என்றான் கோகுல்.

 

“ஆமா, சொன்னேன் தான். ஆனா, உனக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைப்பேன்னு நான் எங்க சொன்னேன்? முதல சஞ்சய், சஞ்சீவுக்கு முடிச்சுட்டு தான் உனக்கு. உன்னை யாரு அவசரப்பட்டு பொண்ணு பார்க்க சொன்னா? இதுல பொறுப்பு பருப்புன்னு…” என்று எதுகை மோனையாக தமிழில் கலக்கினார் ஹெலன்.

 

“என்னாது? இவங்களுக்கு முடிச்சுட்டு தான் எனக்கா! அப்போ கடைசி வரைக்கும் சிங்கிள் தான்!” என்று வாய் விட்டு புலம்பியவனைக் கண்டவர்கள் புறத்தில் மட்டுமில்லாது அகத்திலிருந்து சிரித்தனர்.

 

சுயநலம் மிகுந்த இந்த உலகத்தில், நெருங்கிய வட்டத்திலிருந்தவர்களின் புதல்வர்களை, அவர்களின் காலத்திற்குப் பின், வேற்றளாக பார்க்காமல், அவர்களின் நலனில் அக்கறை கொள்பவர்கள் மிகச் சிலரே. அம்மிகச்சிலரில் ஹெலனும் ஒருவர்.

 

சஞ்சய் மற்றும் சஞ்சீவை தன் மகனிற்கு இணையாக தான் நடத்துவார் ஹெலன். வாரம் ஒருமுறை இருவரும் ஹெலனைப் பார்க்க வரவேண்டும் என்பது அவரின் கண்டிப்பான வேண்டுகோள். அதற்கிணங்க இந்தியா வரும்வரையிலும் கூட சஞ்சய் அவருக்காக நேரம் ஒதுக்கி அவரைப் பார்த்துவிட்டு தான் வருவான்.

 

சஞ்சீவ் ஆஸ்திரேலியாவை விட்டு சொல்லாமல் சென்றதில் அவருக்கு இப்போதும் வருத்தமே. கோகுல் அவனைக் கண்டுபிடித்து விட்டதைக் கூறியிருக்க, அப்போதைக்கு அவனைப் பற்றி வினவியதோடு விட்டு விட்டாலும், அவரால் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அதற்காகவே இந்த அழைப்பு. அதை நன்கறிந்திருந்த கோகுலும், அவருக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான்.

 

இவர்களின் பேச்சைக் கேட்டு சிரித்த சஞ்சீவின் குரல் செவியை அடைந்தாலும் வீம்பாக அவனைப் பற்றிக் கேட்காமல் இருக்கும் ஹெலனை இன்னும் வெறுப்பேற்ற எண்ணி, “சரி சரி, போதும் என்னை கிண்டல் பண்ணது, கால் கட் பண்ணுங்க.” என்று சலித்துக் கொள்வதைப் போல கோகுல் பேச, ஹெலனனோ, “இப்போ எதுக்கு அவசரமா கால் கட் பண்ணனும்னு சொல்ற?” என்றார்.

 

“ஹான், என் பாஸ் எனக்கு முக்கியமான வேலை கொடுத்துருக்காரு. அதை பார்க்கணும். சும்மா சும்மா கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்று சஞ்சீவிடம் கண்ணடித்துக் கொண்டே கூறினான்.

 

அப்போது அவனிடமிருந்து அலைபேசியைப் பிடுங்கிய சஞ்சய், “அதெல்லாம் ஒரு வேலையும் இல்லாம வெட்டியா தான் இருக்கான் ஆன்ட்டி. வேலை பார்க்க சொன்னா, அவன் லவர் கூட டூயட் ஆடிட்டு இருக்கான்.” என்றான்.

 

அவனின் இந்த மாற்றத்தில் திகைத்தது சஞ்ஜீவ், கோகுல் மட்டுமல்ல, எதிர்முனையிலிருந்த ஹெலனும் தான்.

 

என்ன தான் சிறு வயதில் இதே போல சில குறும்புகள் செய்திருந்தாலும், தந்தையின் கண்டிப்பினால் அவனின் குறும்புகள் எல்லாம் பள்ளி செல்ல துவங்கியபோதே குறைந்திருந்தது. கல்லூரியில் அடியெடுத்து வைத்ததும் எதிர்கால வாழ்வை நோக்கி தீவிரமாக உழைத்தவன், நிகழ்காலத்தை விட்டுவிட்டான்.

 

தொழிலில் நுழைந்த சில வருடங்களில் மீண்டும் அவன் வாழ்வில் வசந்தத்தின் சாயலை மட்டும் காண்பித்தது விதி. அதன் பின் சில பல காரணங்களால், எப்போதும் இல்லாத வகையில் இறுகித் தான் போனான்.

 

சஞ்சயின் இந்த பரிணாமங்களில், முதல் சொன்னவை சஞ்சீவ் மற்றும் கோகுல் பிறந்த சில வருடங்களில் நடந்ததால், அவற்றை இருவரும் கண்டதில்லை. அடுத்தடுத்த பரிணாமங்களிலும் அவன் இவ்வளவு இலகுவாக இருந்து அவர்கள் பார்த்ததில்லை. இருவரின் மீதும் சஞ்சய்க்கு பாசம் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிவிட மாட்டான்.

 

‘பாஸா இப்படி!’ என்று வாய் பிளக்காத குறையாக பார்த்துக் கொண்டிருந்த கோகுல், சஞ்சீவை நோக்கி கண்களால் சைகை செய்ய, சஞ்சீவோ உதட்டைப் பிதுக்கினான்.

 

இவர்களின் மௌன உரையாடல்கள் முடிவதற்கும் சஞ்சய் ஹெலனிடம் பேசிவிட்டு அலைபேசியை கோகுலிடம் நீட்டுவதற்கும் சரியாக இருந்தது.

 

இன்னமும் அதிர்விலிருந்து வெளிவராத கோகுலோ, சஞ்ஜயைப் பார்த்துக் கொண்டே அலைபேசியை வாங்கி காதில் வைத்தான். அலைபேசியை உரியவனிடம் சேர்த்ததும் வேலை முடிந்து விட்டதைப் போல சஞ்சய் வெளியே சென்று விட்டான்.

 

“டேய் கோகுல், நம்ம சஞ்ஜயா இது?” என்று மறுபுறத்தில் ஹெலன் வினவ, கோகுலோ “ம்ம்ம்” என்று முணுமுணுத்தான்.

 

“ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. நல்லா பேசி விளையாடிட்டு இருந்த பிள்ள, இறுகி போயிட்டானேன்னு நானும் உங்க அப்பாவும் வருத்தப்படுவோம். இப்போ அவன் இப்படி பேசுறதை பார்க்கும்போது எப்படி இருக்கு தெரியுமா? ஹ்ம்ம், இதை பார்க்குறதுக்கு அவன் அம்மாக்கு கொடுத்து வைக்கல.”

 

ஹெலன் உணர்ச்சி வேகத்தில் பேசிக் கொண்டிருக்க, கோகுல் அதையெல்லாம் கேட்டால் தானே! அவனோ மனதிற்குள் ஆயிரமாவது முறையாக, ‘நம்ம பாஸா இது!’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனை, “யாரு டா அந்த பொண்ணு?” என்ற ஹெலனின் கேள்வி நிகழ்விற்கு அழைத்து வந்தது.

 

கோகுலின் மனதில் சட்டென்று ரஞ்சுவின் பிம்பம் வந்து போனது. மருத்துவமனையில் அவளிற்காக காத்திருந்த சஞ்சய், இருவரின் கண் பேசும் பாஷைகள் என்று ஒவ்வொன்றாக வலம் வர, ஹெலனின் சொற்கள் அவன் கபாலத்தின் உள்ளே செல்லவில்லை.

 

கோகுலை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவ், அவன் உறைந்த நிலையை உணர்ந்தவனாக, அவனிடமிருந்து அலைபேசியை வாங்கி, “ஹெலன் ஆன்ட்டி, உங்க பையன் ஃப்ரீஸ் ஸ்டேட்டுக்கு போயிட்டான்.” என்றான்.

 

சட்டென்று சஞ்சீவ் குரலைக் கேட்டதும், ஹெலனிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவரின் அமைதியை உணர்ந்த சஞ்சீவ், “ஆன்ட்டி, உங்க எல்லாருக்கிட்டேயும் சொல்லாம அங்கயிருந்து வந்தது தப்பு தான். ஆனா, அப்போயிருந்த சிஷுவேஷன்ல என்ன முடிவெடுக்கணும்னே தெரியாம தான் இருந்தேன். ஏனோ அங்கயிருந்து தூரமா போயிட்டா நல்லா இருக்கும்னு தோணுனதும் கிளம்பிட்டேன்.” என்றான்.

 

“நீ கிளம்புனதுக்கு நான் எதுவுமே சொல்லல. சொல்லவும் மாட்டேன். மைண்ட் சேஞ்சுக்கு வேற இடம் போறேன்னு சொல்லிட்டு போயிருந்தா, நாங்க உன்னை தடுக்கவா போறோம்?” என்று முறுக்கிக் கொண்டவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் என்றாகி விட்டது சஞ்சீவிற்கு.

 

அதன்பின் பொதுவான நலவிசாரிப்புகள் நடந்தேற, சஞ்சீவின் மருத்துவமனை வாசத்தை அவரிடமிருந்து மறைத்து விட்டான்.

 

“எப்போ ஆஸ்திரேலியா வருவ சஞ்சீவ்?” என்று ஹெலன் கேட்டதற்கு, “இங்க முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கு ஆன்ட்டி. முடிச்சுட்டு சீக்கிரமா வந்துடுறேன்.” என்றான்.

 

*****

 

அறையை விட்டு வெளியே வந்த சஞ்சய்க்கே தன்னை நினைத்து அதிர்ச்சியாக தான் இருந்தது. ஏனோ இரண்டு நாட்களாகவே அவனின் மனநிலையில் மாற்றம் இருந்தது உண்மை தான். அதற்காக அவனால் இவ்வளவு இலகுவாக கோகுலை கேலி பேச முடியும் என்று அவன் நினைக்கவே இல்லை.

 

அதுவும், ஹெலனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, கோகுலின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த பின்னரே தான் செய்து கொண்டிருக்கும் காரியம் கருத்தில் பட, பேச்சை முடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.

 

‘எனக்கு என்னாச்சு? ஏன் நான் திடீர்னு இப்படி பிஹேவ் பண்றேன்?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொள்ள, அவனின் மனமோ, ‘இது தான் முதல் முறைங்கிற மாதிரி என்கிட்ட கேட்குற?’ என்று கூறி, அவனின் கடந்த கால பக்கங்களிலிருந்து ஒன்றை உருவி அவனிற்கு படமாக் காட்டியது.

 

“சஞ்சு, ஏன் இப்படி எமோஷனலாகுறீங்க?” என்று மங்கையவள் வினவ, ஒரு பெருமூச்சுடன், “ஹ்ம்ம், உனக்கு தெரியாது ரேயா. எங்க அம்மா கிட்ட மட்டும் தான் இவ்ளோ ஃப்ரீயா பேசுவேன். சஞ்சுகிட்ட கூட இந்தவளவு ஃப்ரீயா பேசுனது இல்ல. அப்பாவை பத்தி தான் உனக்கே தெரியுமே. அவரால தான், என்னோட சின்ன வயசு சந்தோஷமெல்லாம் இழந்தேன். இப்போ உன்னால நான் பழையபடி மாறுன மாதிரி இருக்கு. ஐ ஃபீல் லைவ்லி அண்ட் கம்ஃபர்ட்டபில் வித் யூ.” என்றான் ஆடவன்.

 

அதற்கு லேசான புன்னகையை பரிசாக அளித்தவள், “ஐ வில் பி வித் யூ ஆல்வேய்ஸ் சஞ்சு.” என்றாள்.

 

பழைய நினைவுகளில் மூழ்கியவனின் மனமோ, ‘என்னை ஏமாத்திட்டு அவளோ சாதாரணமா உன்னால தப்பிக்க முடியும்னு நினைச்சுறாத ஷ்ரேயா.’ என்று பொங்கியது.

 

இதில், இப்போது எதற்கு அன்று தோன்றிய அதே உணர்வுகள் இன்றும் தோன்ற வேண்டும் என்று அவன் மனம் கூற வந்ததை அறியாமல் போனது அவன் தவறோ!

 

அவளைப் பற்றி நினைத்ததும் அவள் பேசியதும் நினைவிற்கு வர, ‘நான் ஷாக்காகுற அளவுக்கு யாரு?’ என்று சிந்தனை செய்து கொண்டிருந்தவன், ஏதோ தோன்ற லோகேஷிற்கு அழைத்தான்.

 

*****

 

தன் வீட்டிற்கு வந்தவளின் மனம் ரணமாக வலித்தது. கடந்து சென்றதை நினைத்து வருந்தி பயனில்லை என்பதால் மாடியில் தன்னறைக்குச் சென்றாள். அலுப்பு தீர குளித்துவிட்டு வந்தவள் வயிற்றுப் பசியைக் கூட போக்க எண்ணாமல் நேராக சென்றது அந்த ஸ்டோர் ரூமிற்கு தான்.

 

வீட்டை விட்டு செல்லும்போது விஸ்வநாதன் கூறியது இன்னமும் அவள் காதுகளில் ஒலித்தது. அங்கிருந்த முக்காலியை எடுத்து போட்டு மேலே ஏறியவள், பரண் மேலிருந்த அட்டைப்பெட்டியை எடுக்க முயன்றாள். உயரமாக இருந்ததால் அவளால் அதை சுலபமாக எடுக்க முடியவில்லை. கைகளை வைத்து தட்டி தடவி ஒரு வழியாக அந்த பெட்டியை ஓரத்திற்கு கொண்டு வந்து விட்டாள். இவ்வளவையும் செய்தவள், அங்கிருந்த இன்னொரு பெட்டியைக் கவனிக்காமல் போனது தான் விதி செய்த சதியோ!

 

அந்த பெட்டியை மெதுவாக கீழே இறக்கி வைத்தவள், அதை பிரித்தாள். பல வருடங்களாக மேலே அடைத்து வைக்கப்பட்டதால் தூசி படர்ந்திருந்ததை அகற்றிவிட்டு, ஒருவித எதிர்பார்ப்புடன் உள்ளே இருந்தவற்றை பார்க்க ஆரம்பித்தாள்.

 

உள்ளே சில புகைப்படங்கள் இருந்தன. விஸ்வநாதனின் சிறு வயது புகைப்படங்கள், கமலத்தின் சிறு வயது புகைப்படங்கள் எல்லாம் இருந்தன. அவற்றுள் ஒரு புகைப்படம் மட்டும் சட்டமிடப்பட்டிருந்தது. அதில் சிறு வயது கமலமும், அவர் அருகில் மற்றொரு பெண்ணும் நின்றிருந்தனர். அதன் கீழே, ‘வித் லவ் இவாஞ்சேலின்’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.

 

ரஞ்சுவோ வெகுவாக குழம்பிப் போனாள். விஸ்வநாதன் கூறியதை வைத்துப் பார்த்தால், இந்த இவாஞ்சலின் தான் தன்னுடைய அன்னையாக இருக்குமோ என்று தோன்றியது ரஞ்சுவிற்கு. ஏனெனில், அந்த அட்டைப்பெட்டிக்குள் இருந்த மற்ற புகைப்படங்கள் எல்லாம், விஸ்வநாதனோ கமலமோ தனியே இருக்குமாறு இருந்தது.

 

அவளை யோசிக்க விடாதவாறு, வெளியே அழைப்பு மணி ஒலியெழுப்பி தோழிகள் வந்ததைக் கூற, அவசரமாக அந்த புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, தன்னறையில் மறைத்து வைத்தாள்.

 

மற்ற இருவரிடமும் அதை மறைக்கும் எண்ணம் இல்லையென்றாலும், தான் செய்யப்போவது சரியான செயலா என்று தெரியாத காரணத்தினால், தற்காலிகமாக அதை மறைத்து வைக்கலாம் என்ற முடிவிற்கு வந்தாள்.

 

“ஹோய், என்ன பண்ணிட்டு இருந்த இவ்ளோ நேரம்?” என்று ரஞ்சு கதவை திறந்ததும் சஞ்சு வினவ, “இப்போ தான் குளிச்சுட்டு வந்தேன்.” என்றாள்.

 

“சரி வா வா, எனக்கு ரொம்ப பசிக்குது. என் ஹிட்லர் மம்மி வரதுக்குள்ள நூடுல்ஸ் செஞ்சு சாப்பிட்டுடலாம். இல்லனா நூடுல்ஸ் உடம்புக்கு கெடுதல்னு லெக்க்ஷர் எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. நம்மளுக்கு எது தெரியுமோ அதை தான செஞ்சு சாப்பிட முடியும்.” என்று பேசிக் கொண்டே இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள் சஞ்சு.

 

இதை எதிர் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ், “ப்பா, என்ன பொண்ணு டா! வாயை தொறந்தா மூடவே மாட்டிங்குது. ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு மாதிரி போல.” என்று நினைக்கும்போதே சஞ்சயிடமிருந்து அழைப்பு வந்தது.

 

“எப்பா, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மூக்கு வேர்த்தா மாதிரி கூப்பிட்டுடுறாரே!” என்று முணுமுணுத்துக் கொண்டே அழைப்பை ஏற்றான்.

 

“சார், மேமோட பிரெண்ட்ஸ் வந்துருக்காங்க. வேற சந்தேகப்படுற மாதிரி யாரும் வரல சார்.” என்று சஞ்சய் கேட்கும் முன்பே நிலவரத்தைக் கூறிவிட்டான்.

 

“ஓகே, கேர்ஃபுல்லா இருங்க.” என்று அழைப்பை துண்டித்து விட்டான் சஞ்சய்.

 

*****

 

“ஷ்ரேயா, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சுருக்கு? நீ அவளை பார்க்க போனதே தப்பு. இதுல அந்த சஞ்சய் முன்னாடி வேற போயிருக்க. என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? எவ்ளோ ரிஸ்க் எடுத்து இதுல இறங்கிருக்கோம்னு தெரியும்ல. ஸீ, அவனுக்கு உண்மை தெரிஞ்சா என்னை காப்பத்திக்க என்ன வேணும்னாலும் செய்வேன்.” என்று கோபத்தில் கத்தினான் ரிஷி.

 

அதையெல்லாம் கேட்டுக் கொள்ளாதவள் போல, அலச்சியத்துடன் அமர்ந்திருந்தவளைக் கண்டு உள்ளுக்குள் தகித்தது ரிஷிக்கு.

 

“ஷ்..ரே…யா… உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.”

 

“ப்ச், எதுக்கு இப்படி கிட்ட வந்து கத்திட்டு இருக்க ரிஷி? தெரியுது நீ என்கிட்ட தான் பேசிட்டு இருக்கன்னு. தனியா பேச நீயென்ன லூசா?” என்று நக்கலாக வினவ, ‘இந்த ஆப்பரேஷன் முடியட்டும் உனக்கு இருக்கு!’ என்று மனதிற்குள் கருவியவன், அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

 

“எதை எப்போ பண்ணனும்னு உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும் ரிஷி. ஐ’ம் யுவர் சீனியர் இன் திஸ். அண்ட் சஞ்சயை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவனை சாதாரணமா அழிக்கக் கூடாது. அவனை சுத்தி இருக்குறவங்க ஒவ்வொருத்தரும் அவன் கண்ணு முன்னாடி இறக்கணும். அதை பார்த்து பார்த்து அவன் துடிக்கணும்.” என்று கூற, ரிஷியே அவளின் வன்மத்தில் சிறிது ஆடித்தான் போனான்.

 

“அதுக்கு சஞ்சீவை டார்கெட்டாக்குனா பத்தாதா? எதுக்கு அந்த பொண்ணு? அண்ட் சஞ்சய்க்கு ஒன்னும் அந்த பொண்ணு மேல இன்ட்ரெஸ்ட் இருக்க மாதிரி தெரியலையே.” என்று தன் சந்தேகத்தை ரிஷி வினவ, கோணலாக சிரித்த ஷ்ரேயா, “இன்ட்ரெஸ்ட் இல்லனா என்ன, உருவாக்குவோம். இன்னைக்கு அதுக்கான முதல் படியை எடுத்து வச்சாச்சு. இனி, அவன் அவளை உருகி உருகி காதலிக்கிற அந்த நேரத்துல அவளை தூக்கணும். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.” என்று திட்டம் தீட்டினாள் ஷ்ரேயா.

 

“என்னவோ, சஞ்சீவ்ங்கிற ஈஸியான ரூட்டை விட்டுட்டு, தலையை சுத்தி மூக்கை தொடுற மாதிரி இருக்கு.” என்று முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து சென்றான் ரிஷி.

 

என்னதான் ரிஷியை சமாளித்து விட்டாலும், அவளின் மனதிற்கு தெரியுமல்லவா இந்த திட்டத்தின் காரணம் என்னவென்று.

 

“என்னை விடுங்க சஞ்சு.” என்று பெண்ணவள் சிணுங்க, அவளை தன் ஆக்டொபஸ் கரங்களால் வளைத்தபடி, “என்கிட்ட இருந்து தப்பிச்சு போக பார்க்குறியா ஷ்ரேயூ?” என்றான் அவன்.

 

க்கும், தப்பிச்சு போக விட்டுட்டாலும்!” என்று சிலுப்ப, “இன்னும் கொஞ்ச வருஷம் தான், அப்பறம் நீயே நினைச்சாலும், விலக முடியாத மாதிரி உன்னை லாக் பண்ணிடுவேன்.” என்று கண்கள் முழுக்க கனவுகளோடு கூறினான் அவன்.

 

அவளின் நினைவுகளை தடை செய்தது ரிஷியின் வருகை.

 

“கேட்க மறந்துட்டேன், நீ என்னை பத்தி அவன்கிட்ட ஏதாவது சொன்னீயா?” என்றான் பதட்டத்துடன்.

 

“ஹ்ம்ம், க்ளூ கொடுத்துருக்கேன். கண்டுபிடிக்குறானான்னு பார்ப்போம்.” என்றவளின் முகம் சற்று முன்னிருந்த இளக்கத்தை தொலைத்திருந்தது.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்