Loading

காதல் 13

 

சற்று நேரம் பேசிவிட்டு விடைபெற்றனர் சஞ்சயும் கோகுலும். செல்லும்போது ரஞ்சுவிடம் தலையசைத்து விடைபெற்றான் சஞ்சய். இதைக் கண்ட சஞ்சுவும் தர்ஷுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

இத்தனை நேரமும் ஒன்றும் புரியாமல் குழம்பி நின்ற ஜீவன் கோகுல் தான்.

‘இந்த பொண்ணு சஞ்சீவுக்கே எப்படி பிரெண்டானான்னு குழப்பத்துல இருக்கேன். இதுல, எப்பவும் காலுல சக்கரத்தை கட்டிவிட்ட மாதிரி ஓடிட்டே இருக்க பாஸ், இந்த பொண்ணுக்காக இவ்ளோ நேரம் இங்க வெயிட் பண்ணிட்டு இருந்துருக்காரு. என்னமோ நடக்குது! ஹ்ம்ம், கண்டுபிடிக்குறேன்.’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க, அவனின் முகத்தை எதேச்சையாக பார்த்த சஞ்சு, ‘இவன் ஃபேஸே சரியில்லயே. எப்போ பார்த்தாலும் ட்ரீம்ஸுக்கு போயிடுறது.’ என்று நினைத்தாள்.

சஞ்சய் தான் அவன் தோள் தொட்டு நிகழ்விற்கு கொண்டு வந்தான். கோகுலும் ‘நல்ல பிள்ளை’ போல அனைவரிடமும் விடைபெற்று இறுதியாக சஞ்சுவை நோக்க, அவளோ அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.

‘இன்டர்நேஷனல் பியூட்டிஸ் எல்லாரும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. இந்த லோக்கல் பியூட்டிக்கு இருக்க ஏத்தத்தை பாரேன்!’ என்று வழக்கம் போல மனதிற்குள் கூறிக்கொண்டு அவளிடம் விடைபெறாமல் வெளியே சென்றான்.

இருவரும் அங்கிருந்து சென்றதும், மலரும் ஓய்வெடுப்பதாகக் கூறி சற்று தள்ளியிருந்த மேஜையில் படுத்துவிட்டார்.

“என்ன மேடம் கண்ணுலேயே படம் காட்டுறீங்க?” என்று சஞ்சு ஆரம்பிக்க, “அதான, அவரு தலையசைக்குறதும் பதிலுக்கு இவ தலையசைக்குறதும் பார்த்தா, நாம வரதுக்கு முன்னாடி வேறெதோ நடந்துருக்கும் போலயே.” என்றாள் தர்ஷு.

இருவரும் பழையதைப் பற்றி பேசி ரஞ்சுவின் மனதைக் கஷ்டப்படுத்த விரும்பாமல், அவளையும் கடந்து போனவற்றை நினைக்க விடாமல் இருக்கவே இந்த பேச்சை ஆரம்பித்தனர். ரஞ்சுவிற்கும் தோழிகளின் முயற்சி புரிந்ததால், சிரிப்புடனே அதை மறுத்து சமாளித்துக் கொண்டிருந்தாள்.

“அப்படியெல்லாம் எதுவுமில்ல. ஜஸ்ட் ஒரு கர்டஸிக்கு அவரு தலையசைச்சாரு. நானும் பதிலுக்கு தலையசைச்சேன்.” என்று ரஞ்சு கூற, “ஆமா, இவரை தான நீ சிடுமூஞ்சி, முறைச்சுட்டே இருக்காருன்னு சொன்ன. பார்த்தா அப்படி தெரியலயே. இல்ல சஞ்சு?” என்று சஞ்சுவையும் கேலி செய்தாள் தர்ஷு.

“க்கும், அதான் தங்கச்சி ஆக்கிட்டிங்களே! அது எப்படி நான் அழகா இருக்கான்னு சொல்றவங்க எல்லாம் என்னை தங்கச்சின்னு கூப்பிட்டு மனசை கஷ்டப்படுத்துறாங்க.” என்று சஞ்சு கூற, “சஞ்சு, நாம தேடி போறவங்களை விட நம்மளை தேடி வரவங்களை லவ் பண்ணா தான் வாழ்க்கை நல்லா இருக்குமாம்.” என்று ரஞ்சு சிரிப்புடன் கூறினாள்.

“ஹ்ம்ம், அவன் எப்போ வரது. நான் எப்போ லவ் பண்றது?” என்று சஞ்சு பெருமூச்சு விடும்போதே, “எக்ஸ்க்யூஸ் மீ” என்ற குரல் வாயிலருகே கேட்டது.

“எவன் அவன்?” என்று சஞ்சு திரும்பிப் பார்க்க, அங்கு கோகுல் கையில் சஞ்சுவின் அலைபேசியுடன் நின்றிருந்தான்.

*****

மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த நொடி…

“ச்சே, மனசுல ஃபிளைட் ஓட்டுறேன்னு நினைப்பு! இவன் வந்த ஸ்பீடுக்கு இன்னும் கொஞ்ச நேரம் கார்ல இருந்துருந்தேனா ஒவ்வொரு பார்ட்டும் தனியா கழண்டுருக்கும் போல. இதே மாதிரி இன்னொரு தடவை ஓட்டட்டும், ஓவர் ஸ்பீட்னு மம்மிட்ட கம்ப்ளைன் பண்ணி உள்ள தள்ள சொல்றேன்.” என்று தர்ஷுவிடம் பொரிந்து கொண்டிருந்தாள் சஞ்சு.

“முதல பாதையை விட்டு நீங்க தள்ளி நில்லுங்க.” என்ற குரல் கேட்க, பின்னாடி திரும்பாமலேயே அது கோகுல் தான் என்று கண்டுகொண்டாள் சஞ்சு.

தன்னைப் பற்றி குறை கூறியதால் உண்டான எரிச்சல் அவன் குரலில் அப்பட்டமாக தெரிந்தது. அவனிற்கு குறையாத எரிச்சலுடன் திரும்பினாள் சஞ்சு.

“ஹலோ, இவ்ளோ ஸ்பீடா போனா சொல்லத் தான் செய்வாங்க. நீங்க மட்டும்னா எப்படியோ போங்கன்னு விட்டுடுவேன். எங்க உயிரும்ல இதுல சம்பந்தப்பட்டிருக்கு.” என்றாள் சஞ்சு கோபமாக.

“உங்க பிரெண்ட சீக்கிரம் பார்க்கணும்னு கூட்டிட்டு வந்தது என் தப்பு தான். அதுவும் என் பிரெண்டு கேட்குறானேன்னு மறுக்க முடியாம கூட்டிட்டு வந்தேன்.” என்று கூறி ஏதோ முணுமுணுத்துவிட்டு முன்னே செல்ல முயன்றான்.

வண்டி நிறுத்துமிடம் என்பதால், குறுகலான பாதையாக இருக்க, கோகுல் முன்னே செல்ல வேண்டும் என்றால் சஞ்சு தள்ளி நிற்க வேண்டும். அவளும் அவன் செல்வதற்கு வழி விட வேண்டி இடப்புறம் நகர, கோகுலும் இடப்புறம் நகர்ந்தான். சஞ்சு மீண்டும் வலப்புறம் நகர, கோகுலும் நகர்ந்தான்.

‘இதுங்க என்ன பார்க்கிங்ல சடுகுடு ஆடிட்டு இருக்குதுங்க?’ என்று நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள் தர்ஷு.

மூன்றாம் முறை அதே நிகழ்வு ‘ரிப்பிட் மோட்’டில் நடக்க, அவன் முன் கையை நீட்டி நிறுத்த சொல்லிவிட்டு, ஒரு பக்கம் நகர்ந்து மறு பக்கம் அவன் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தாள். அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டு சென்றான். மிகவும் குறுகலான பாதை என்பதால், செல்லும்போது இருவரும் இடித்துக் கொள்ள, அதில் இருவரின் கைகளிலிருந்து அலைபேசிகளும் கீழே விழுந்தன.

“ப்ச்…” என்ற சலிப்புடன் அவனை முறைத்துக் கொண்டே கைக்கு அகப்பட்ட அலைபேசியை எடுக்க, அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே அலைபேசியை எடுத்து அதைப் பார்க்காமலயே பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரும்பிச் சென்றான்.

முதலில் அவளின் பேச்சு எரிச்சலைக் கொடுத்திருந்தாலும், அதன்பிறகு நடந்த ‘விளையாட்டு’ அவனின் மனநிலையை மாற்றித் தான் இருந்தது. ஒரு புன்னகையுடன் சென்றான். அந்த புன்னகையை கவனிக்காத சஞ்சுவோ அவனின் முதுகை நோக்கி முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

“போதும் நீ அவருக்கு சூனியம் வச்சது. வா போலாம்.” என்று தர்ஷு தான் அவளை இழுத்துக் கொண்டாள்.

இருவருமே தங்களின் அலைபேசி மாறியதை அப்போது உணரவில்லை

*****

சற்று நேரம் முன்பு… சஞ்சு தன்னை கண்டுகொள்ளதாதை எண்ணிக் கொண்டே வெளியே சென்றான் கோகுல். சஞ்சய் முன்னே சென்று விட, ஏதோ யோசனையில் பின்தங்கியவனை அழைத்த செவிலி, “சார் உங்க போன் அடிக்குது.” என்றுவிட்டு கடந்து சென்றார்.

‘என் போன்னா?’ என்று யோசித்தவாறே அலைபேசியை எடுத்தவனிற்கு அப்போது தான் அது மாறிப் போனது தெரிந்தது.

‘க்கும், சும்மாவே வெட்டுற மாதிரி பார்ப்பா. இதுல அவ மொபைல் வேற என்கிட்ட இருக்கு. என்ன சொல்லப் போறாளோ?’ என்று பயந்துக் கொண்டே மீண்டும் ரஞ்சுவின் அறைக்குச் சென்றான்.

*****

இருவரும் அலைபேசி மாறிய கதையை சிந்தித்துக் கொண்டிருக்க, அதற்குள் நடந்ததை ரஞ்சுவிடம் கூறினாள் தர்ஷு.

எதுவும் பேசாமல் அலைபேசியை அவளிடம் நீட்டினான் கோகுல்.

‘இவன் என்ன கரெக்ட் டைம்ல என்ட்ரி கொடுத்துருக்கான்? நான் சொன்னதை கேட்டுருப்பானோ? மூஞ்சியை பார்த்தா கேட்காத மாதிரி தான் இருக்கு.’ என்று சிந்தித்துக் கொண்டே தன்னுடையதை வாங்கிக் கொண்டு அவனுடையதைக் கொடுத்தாள்.

அவனும் அதை வாங்கிக் கொண்டு தலையசைத்து விடைபெற, யோசனையில் இருந்ததால் தன்னிச்சையாக அவனை நோக்கி தலையசைத்திருந்தாள் சஞ்சு.

உதட்டோரம் சிறு சிரிப்புடன் வெளியேறினான் கோகுல். “மாம் உங்க மருமகளை கண்டுபிடிச்சுட்டேன்னு நினைக்குறேன்.” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றவனை அங்கிருந்தவர்கள் வித்தியாசமாக நோக்கினர்.

*****

மருத்துவமனையிலிருந்து வெளியே தன் வாகனத்தை நோக்கிச் சென்ற சஞ்சயை தடுத்தது ஒரு குரல்.

“என்ன பாஸ் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? பாதுகாப்பு கொடுக்க வேண்டியவங்களுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுத்தாச்சா?” என்று நக்கலாக கேட்டபடி அவன் முன்பு வந்தாள் ஷ்ரேயா.

அவளைக் கண்டதும் முகமும் உடலும் இறுக நின்றிருந்தான் சஞ்சய். ஏனோ அவளின் முகத்தைக் காண்பதற்கு கூட பிடிக்கவில்லை சஞ்சய்க்கு.

அதை உணர்ந்து கொண்டவளோ, “என்ன பாஸ், என் முகம் பார்க்க சலிச்சுடுச்சோ! அப்படி இருக்க முடியாதே. ஏன்னா உங்க புது ஆளுக்கும் என் முகம் தானாமே? ஐ மீன் என்னையே ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கா.” என்று அவள் கிண்டலாக கூற, “உன்னை மாதிரி வெளியுருவத்துல வேணா இருக்கலாம். ஆனா, நிச்சயம் உன்னை மாதிரி சுயநலக்காரி இல்ல!” என்றான் சஞ்சய் வெறுப்பாக.

“த்சு, எமோஷன் பத்தலையே! இன்னும் எமோஷன் வேணும்னா என்ன பண்ணலாம்?” என்று நாடியில் விரல் வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தவள், “என் லுக்-அ-லைக்குக்கு பெருசா ஒரு ஆக்சிடென்ட் பண்ணா இன்னும் கொஞ்சம் எமோஷன் கிடைக்குமோ.” என்று கூற, கோபத்தில் நரம்புகள் புடைத்தாலும் அதை அடக்கியவனாக, “அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவளுக்காக நான் கவலைப்படுவேன்னு வீணா கற்பனை பண்ணிக்காத.” என்றான் சஞ்சய்.

“வாய் பொய் சொன்னாலும் கண்ணு பொய் சொல்லாதாமே! அப்படியா சஞ்சு?” என்று வேண்டுமென்றே அந்த ‘சஞ்சு’வை அழுத்திக் கூறியவளைக் கண்டு பல்லைக் கடித்துக்கொண்டு, “கால் மீ சஞ்சய்.” என்றான்.

“ஓகே ஓகே, மிஸ்டர். சஞ்சய்… நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே? சரி நானே சொல்றேன். அவளைப் பத்தி நான் பேசும்போது உன் கண்ணுல தெரிஞ்ச ஸ்பார்க்… ப்பா, நான் லவ் சொல்லும்போது உன் கண்ணுல தெரிஞ்ச அதே ஸ்பார்க்! ச்சு, மறக்க முடியுமா அந்த மொமெண்ட்டை? தி கிரேட் எஸ்.ஜே எனக்கு மண்டியிட்டு ப்ரொபோஸ் பண்ண தருணம்!” என்று சஞ்சய் மறக்க நினைப்பதை வேண்டுமென்றே கிளறினாள்.

அவளின் கணைகள் ஒவ்வொன்றும், அதன் இலக்கை அடைந்து தாக்கத் தான் செய்தன. ஆனால், இத்தனை வருட பழக்கம், அவனின் உணர்வுகளை வெளிக்காட்ட விடாமல் உள்ளுக்குள்ளேயே கட்டிப்போட வைத்தது.

“தாட்ஸ் வென் ஐ பிக்கேம் அ லூசர். திரும்பவும் அதே தவறை நான் செய்வேன்னு நீ எப்படி எதிர்பார்க்குற?” என்று சஞ்சய் வினவ, “இந்த காதல் இருக்குல காதல், அது யாரு மேல எப்போ வரும்னு தெரியாது. சட்டுன்னு வந்துடுமாம். அண்ட் உன்னையும் உன் தம்பியையும் எனக்கு நல்லாவே தெரியும். ‘அன்பு’ன்னு சொன்னா போதும், உன் தம்பி நாய் குட்டி மாதிரி பின்னாடியே வந்துடுவான். யூ நோ, இப்பவும் எனக்கு சான்ஸ் இருக்கு!” என்று கண்ணடித்துக் கூறினாள்.

அதில் அடக்கி வைத்த பொறுமையெல்லாம் நொடியில் பறக்க, அவள் கழுத்தை அழுத்திப் பிடித்து, “ஜஸ்ட் ஷட் அப்! இன்னொரு தடவை என்ன சார்ந்தவங்களை பத்தி ஏதாவது பேசுன, இங்கயே கொன்னுட்டு போயிட்டு இருப்பேன்.” என்றான் சஞ்சய்.

அப்போதும் திமிர் குறையாதவளாக, “என்…என்னை கொல்…ல்லனும்னு நீ நினைச்சுருந்தா நீ… இவ்ளோ நேரம்… என்கிட்ட பே..பேசிட்டு இருந்துருக்க மாட்…ட…” என்று திக்கித் திணறி கூற அவனும் அவள் கூறியதிலிருந்த உண்மையை உணர்ந்து சற்று அதிர்ந்து தான் போனான்.

எனினும் அதை வெளிக்காட்டதவாறு, “நான் உன்னை சும்மா விட்டதுக்கு நீயா ஒரு காரணத்த நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல. எங்க குடும்பத்தையே அழிச்ச உனக்கு அவ்ளோ ஈஸியான தண்டனையெல்லாம் தர மாட்டேன். லண்டன்ல மைக்கேல்னு பெரிய கன்ஸ்ட்ரஷன் கம்பெனி வச்சுருக்காரு. அவரை தெரியுமா உனக்கு? ச்சு, யாருக்கிட்ட போய் தெரியுமான்னு கேட்குறேன் பாரேன்! உன் பிசினஸை அவருக்கிட்ட இருந்து தான ஆரம்பிச்ச? அப்பறம் ராபர்ட், வில்சன்… ஹ்ம்ம், இன்னும் கலெக்ட் பண்ணிட்டே இருக்கேன். ஆனா, சும்மா சொல்லக்கூடாது, நீ ஏமாத்துன எல்லாருமே பெரிய ஆளுங்க தான். உன்னை வெளிப்படையா தேடுனா, அவங்க டிக்னிட்டி குறைஞ்சுடுமோன்னு இவ்ளோ நாள் பயந்துட்டு இருந்தாங்களாம். அதுல உன்னை பாராட்டியே ஆகணும். பட் நோ மோர் கேம்ஸ்! இவ்ளோ நாள் நீ விளையாடினதை நாங்க பார்த்தோம். இப்போ நான் ஆடப்போற விளையாட்டை நீ பாரு.” என்று நக்கலாக கூறினான்.

சஞ்சய் கூறியதைக் கேட்டவுடன் ஷ்ரேயாவின் முகம் இருண்டு போக, சற்று நேரத்திலேயே அதிலிருந்து வெளிவந்தவள், “இதுக்காகவே உன்னை அலற வைக்கணும். என்னை இவ்ளோ நாள் ஓடவிட்ட அத்தனை பேரையும் சும்மா விட மாட்டேன். இப்போ தான் உன்னோட வீக் பாயிண்ட், சாரி சாரி வீக் பாயின்ட்ஸ் என்னன்னு தெரிஞ்சுடுச்சே!” என்று வஞ்சத்துடன் கூறினாள்.

அதைப் பற்றி சற்றும் கவலைக்கொள்ளாமல், “என்ன ஆதரவுக்கு ஆள் இருக்குன்னு தைரியத்துல பேசுறியா? அந்த புது ஆள் யாருன்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சுடும். அப்பறம் ரெண்டு பேரையும் சேர்த்தே நல்லா கவனிக்கிறேன்.” என்றான் சஞ்சய்.

அதைக் கேட்டு சிரித்தவள், “நீ உன்னோட எதிரியை நேர்ல பார்க்கும்போது உன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு பார்க்க ரொம்ப ஆவலா காத்திருக்கேன்!” என்று கோணல் சிரிப்பு சிரிக்க, சஞ்சயின் மனமோ அப்படி அதிரும் அளவிற்கு யாராக இருக்கும் என்று தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது.

“எனிவேஸ் பெஸ்ட் ஆஃப் லக் மிஸ்டர். சஞ்சய். சீக்கிரமா என் காலுல விழ வாழ்த்துக்கள். போறதுக்கு முன்னாடி ஒரு டவுட்… சப்போஸ் உன் தம்பியா காதலியான்னு ஒரு சூழ்நிலை வந்தா நீ யாரை காப்பாத்துவ? யோசிச்சு வை நெக்ஸ்ட் மீட் பண்றப்போ ஆன்ஸர் சொல்லு. பை…” என்று அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

அவள் சென்றதும் தன் மகிழுந்திற்குள் அமர்ந்தவன், இருக்கையில் தலை சாய்த்துக் கொண்டான். என்ன தான் அவளிடம் பேசி அனுப்பி விட்டாலும், அவள் கிளறிய விஷயங்கள் அவன் மறைத்து வைக்க முயன்ற காயங்களில் மீண்டும் கத்தியை வைத்து திருகியதைப் போல் வலித்தது.

எந்தவொரு மனிதனும் அவன் அடைந்த தோல்வியை மறக்க மாட்டான். அதுவும், பெரிய பெரிய வியாபாரங்களை எல்லாம் வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பவன் சிறு பெண்ணிடம் தோற்று போனதை எளிதில் மறக்க முடியுமா?

சஞ்சயும் அவன் தோற்று போன பக்கங்களைத் தான் திருப்பிக் கொண்டிருந்தான்.

எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ, கோகுல் வந்து கதவைத் தட்டியதும் தான் நிகழ்விற்கு வந்தான்.

“என்னாச்சு பாஸ்?” என்று கோகுல் வினவ, “நத்திங், நீ வந்த கார்ல வந்துடு.” என்று கூறிவிட்டு சென்று விட்டான் சஞ்சய்.

‘நல்லா தான இருந்தாரு, எந்த காத்து கருப்பு அடிச்சுதுன்னு தெரியலையே!’ என்று புலம்பியபடி அவனைப் பின்தொடர்ந்தான் கோகுல்.

*****

சஞ்சய் அங்கிருந்து கிளம்பி நேராக சஞ்சீவ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்தான்.

அவனைக் கண்டதும் சஞ்சீவ், “ஜெய், ரஞ்சுக்கு என்னாச்சு?” என்று வினவினான்.

“பேரண்ட்ஸ்… ஐ மீன் இத்தனை வருஷமா பேரண்ட்ஸ்னு நினைச்சுட்டு இருந்தவங்க விட்டுட்டு போனதுல கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ட்டா இருந்துருக்கா. இப்போ பரவால.” என்றான்.

“தேவையில்லாம நான் வேற இந்த பிரெச்சனைல இழுத்து விட்டுட்டேன்ல.” என்று சஞ்சீவ் கூற, அதற்கு சஞ்சயிடமிருந்து எந்த பதிலும் வராத காரணத்தினால் அவனைப் பார்த்த சஞ்சீவ், அவன் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் ஏதோ உணர்ந்தவனாக, அதை உறுதிப்படுத்திக் கொள்ள அவனிடமே வினவினான்.

“ஷ்ரேயாவை பார்த்தேன்.” என்று சஞ்சய் கூறியதைக் கேட்டதும் சஞ்சீவ் எதுவும் பேசாமல் தனக்குள் இறுகிப் போனான்.

சில நொடிகள் கழித்தே வாய் திறந்தான் சஞ்சீவ். “எங்க பார்த்த?” என்ற கேள்விக்கு, அவனிடம் சொல்ல வேண்டியவற்றை மட்டும் சொல்லி, ரஞ்சுவின் பாதுகாப்பைப் பற்றியும் கூறினான் சஞ்சய்.

இவர்கள் இருவரும் பேசுவதைக் கவனித்த கோகுல் முதலில் எதுவும் புரியாமல் முழிக்க, பின் அவர்களின் பேச்சைக் கூர்ந்து கவனித்ததில், ஷ்ரேயா என்ற பெண் தான் இவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமானவள் என்பதைப் புரிந்து கொண்டான். மேலும், அவளால் ரஞ்சுவிற்கும் ஆபத்து என்பதையும் இருவரின் பேசிலிருந்தும் புரிந்து கொண்டான்.

‘ஓஹ், இதுக்கு தான் பாஸ் அந்த லோகேஷை அந்த பொண்ணுக்கு பாடி-கார்ட்டா இருக்க சொன்னாரா?’ என்று அவனே ஒரு முடிவுக்கு வந்தான்.

கோகுலின் நினைவு ரஞ்சுவிடமிருந்து சஞ்சுவிடம் தாவியது. ‘இந்த லோகேஷ் பையன் நம்மள விட கொஞ்சம்.. கொஞ்சமே கொஞ்சம் பெர்சனாலிட்டில முன்ன இருக்கானே. சஞ்சு குட்டி ட்ராக் மாறி அங்குட்டு போயிடுமோ? எதுக்கும் ஒரு கண்ணை அந்த லோகு பையன் மேல வைக்கணும்.’ என்று நினைத்துக் கொண்டான்.

கோகுல் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பதைக் கண்ட மற்ற இருவரும், தங்களின் பிரச்சனையைப் பற்றித் தான் எண்ணிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து அவனை அழைக்க, அவனோ அவனின் ‘சஞ்சு குட்டி’யுடன் டூயட் ஆடிக் கொண்டிருந்தான்.

“டேய் கோகி.” என்று சஞ்சீவ் சத்தமாக அழைக்க, அப்போது தான் நிகழ்விற்கு வந்தான் கோகுல்.

“என்னாச்சு?” என்று ‘நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம்’ போல் முழிக்க, “என்னத்த டா இவ்ளோ நேரமா யோசிச்ச?” என்றான் சஞ்சீவ்.

“அது… அது வந்து…” என்று கோகுல் திக்க, “டேய் என்னடா பண்ணிட்டு இருக்க? தயவு செஞ்சு இது தான் வெட்கம்னு மட்டும் சொல்லிடாத.” என்று சஞ்சீவ் கூறினான்.

“ப்ச், போ டா, நான் எங்க மம்மிக்கு ஏத்த மருமகளை பார்த்துட்டேன் டா.” என்று மீண்டும் அந்த அரிய வகை ‘வெட்கத்துடன்’ கூறினான்.

சஞ்சீவ் யோசனையாக, “அந்த மூணு பேர்ல யாரு டா?” என்று வினவ, சஞ்சய் கூட கோகுலை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அது வந்து மச்சான், உன் தங்கச்சி தான் டா!” என்று கோகுல் இளித்துக் கொண்டே கூறியதும் தான் இரு சஞ்சுக்களும் சீராக மூச்சு விட்டனர்!

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்