Loading

 உடையாதே என் உயிர்க்குமிழியே 

அத்தியாயம் – 2 

   அறையிலிருந்து அனைவரும் வெளியே இருக்க, உதிரனும் ருத்ரனும் மட்டும் தனியே அமர்ந்திருந்தனர். உதிரனின் முகம் சோர்ந்திருந்தது. கிட்டத்தட்ட இந்தத் திருமணம் தற்பொழுது நடந்தே ஆகவேண்டுமா என்ன… ஆனால் நடக்க வேண்டும். அவன் நிறுத்தினால் ருத்ரனும் திருமணத்தை நிறுத்தி விடுவான். அதறக்காகவே இன்று இதை நடத்த வேண்டும்‌. 

    தலைக்குக் கையைக் கொடுத்துக் குனிந்திருந்தவனைப் பார்க்க, ருத்ரனுக்கு ஒருமாதிரியாக இருந்தது. 

      ” உதிரா… ” 

அவ்வளவுதான் அவனின் தோள்சாய்ந்து அழுதே விட்டான் உதிரன். ஆண்மகனென்றால் அழக்கூடாதா… யார் சொன்னது. அவர்களுக்கும் வலி , துக்கம் , சோகங்கள் இருக்குமே… ருத்ரனும் உதிரனின் முதுகை ஆதரவாய் வருடிவிட்டு , ” இதுவும் கடந்து போகும்டா… இதுக்கே பயந்தா எப்படிடா… எத்தனையோ பிரச்சனையைச் சாதாரணமாத் தாண்டி வந்துட்டோம். இப்ப அவ மயக்கம் போட்டுட்டா.‌‌.. அவ்வளவு தானே,  அதுக்கென்ன…   இனிதான் பெரிய பிரச்சனையே இருக்கு. உனக்கு ஆதரவா நான் எப்பயும் இருப்பேன். 

    உனக்கு நான் சொல்றது ஒண்ணுதான். நம்ம சாஹி எதனால் இப்படி ஆனாள் னு ஒருமுறை யோசித்துப்பாரு. அந்தப் பிரச்சனைக்கு முன்னாடி இதுலாம் தூசுக்குச் சமானம். பொண்ணுனா இவ்வளவுதான் னு ஒரு வட்டத்துக்குள்ள குறுக்குன இந்த சமுதாயம் முன்னாடி, எத்தனை பெரிய காரியம் நடத்தி காட்டியிருக்குறா… சரி பண்ணிடலாம் டா… மனசை தளரவிடாத… ” என்று மென்மையாய்ப் பேசிமுடித்தான். 

உதிரனின் மனக்கண்ணில் பழையன வந்துபோக ஆழமாய் ஒருமுறை பெருமூச்சுவிட்டு தன்னை நிதானித்தான். 

    ” உண்மை தான்… சரி வா மச்சான். உன் தங்கச்சி மொத்த அலங்காரத்தையும் அலங்கோலம் ஆக்கிட்டா… ரிட்டெர்ன் பண்ண ஏற்பாடு பண்ணுவோம் ” என்று உதட்டை மடித்து நமட்டுச் சிரிப்போடு சொல்ல, ” ங்ஙே… இனி நோ அலங்காரம் ” என்று மூக்கிலிருந்து காற்றை அடித்துவிட்டான். 

 ” ஏன் மச்சான் காசு நஹி ஆகிடுச்சா ” 

 ” அடேய் பஃபல்லோ இதோட மூணாவது முறை டா … ஒன்ஸ் பண்ணவே அந்த பியூட்டி பார்லரம்மா ₹. 50,000 புடுங்கிடுச்சு. மூணுமுறையா ₹.1,50,000 தீந்துடுச்சு . இதுல எனக்கு பொண்டாட்டியா ஒரு பக்கிய கட்டி வைக்க போறியே அவளுக்கு மட்டுமே தனியா ₹.1,00,000 காலி… என்னைய விட்டுரு… “

   ” ஹஹஹ இதுக்குத் தானே ஆசைப்பட்டாய் கருங்குரங்கு குமாரனே… ஒழுங்கா மேக் அப் போடாம என் பொண்டாட்டிய ஃப்ரெஷ்ஷா கூட்டிட்டு வரச்சொன்னேனா… நீதானே கேக்காம என் தங்கச்சி என் உரிமை னு சீன் போட்ட ” 
   ” அய்யோ ராசா விட்டிரு… தப்பு தான்…  முழுதும் என் தப்பு தான். கொஞ்சம் கருணை காட்டுடா ” என்று பொய்யாய்க் கதற, ” சரி நாயா பேயா அழுவுற…  பாவம் பாத்து விடுறேன் ” என்று உதிரனும் விளையாட்டாய் நடித்தான்.

  ” எனக்கு ஒரு சந்தேகம் மச்சி… நம்ம அகரன் சார் நம்ம கிட்ட எதயாவது மறைக்கிறாரா என்ன… ஏன்னா இண்ணைக்கு நாம தூக்குனது இரண்டுமே வெத்து பீசுங்க… ஏற்கனவே நம்ம கையால சாவடி வாங்கிட்டானுங்க… ஆனா சாஹி அவனைப் பார்த்துட்டு தான் மயங்கி விழுந்தாள்னு ஆரா கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணுறா… ஆனா அகரன் சார் ஆராவை விரட்டுறதுல மட்டுமே குறியா இருக்குறாரு… எதோ தப்பா இருக்குற மாதிரி எனக்கு ஃபீல் ஆகுதுடா ” என்று இத்தனை நேரமும் இருந்த விளையாட்டுத்தனம் மறைந்து காரியத்தில் கண்ணாகக் கேட்டான் உதிரன்.

   ” எனக்கும் அப்படிதான் தோணிச்சு. இப்ப கல்யாண நேரத்தில் இதை தோண்ட வேண்டாமேனு தான் எதும் பேசல… அப்புறம் மச்சிசி… அகரன் எனக்கு தான் சார். உனக்கு மச்ச்சான் ” என்று மச்சானில் அழுத்திச் சொல்ல, உதிரனோ “நோ நோ நோ… மனுஷன் எண்ணைக்கும் நமக்கு சாராவே இருக்கட்டும். ஒரே ஒரு நாளு வாங்குன அடில என் கடவாப்பல்லு காக்காக்குத் துணைக்கு போய்ட்டு. அதுவும் எதனால மச்சான் னு கூப்டதால… இதுக்கு மேல தாங்காது… மீ குட்டி பாய்டா ” என்று மூக்குச் சிந்த,  ருத்ரனோ இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவை என்பதுபோல சிரித்திருந்தான்.

   அடுத்த சிலநொடிகளில் ருத்ரனின் தந்தை அறையில் நுழைந்தவர், ருத்ரனை அறைந்தார். அவனோ ‘ என்னங்கடா நடக்குது இங்க… நானு கல்யாண மாப்பிள்ளைடா ‘ என்று மைண்ட் வாய்சில் பேச, ” நாரப்பயலே… கல்யாண நாள் அதுவுமா என்னைய நார நாரயா பேச வைக்காத… கொன்னிடுவேன்.  அடுத்த அஞ்சு நிமிடத்துல மேடை ல இருக்கணும் ” என்றவர் அறையை விட்டு வெளியே சென்றிருந்தார். இங்கு ருத்ரனுக்கோ ஏன் அடித்தார், எதற்கு அடித்தார் என்று எதுவும் தெரியாமல், ‘ நான் எதுக்குடா சரிப்பட்டு வரமாட்டேன் ‘ என்று கேட்கும் வடிவேலு போல மாறியிருந்தான். 

   ” டேய் ருத்து…  உன் சட்டையை பாருடா…  ஒருத்தனை துவைச்சு எடுத்துட்டு வந்தியே சட்டைய மாத்தினியா… அப்ப உன்னைய அடிக்காம அப்பா கொஞ்சுவாரா ” என்று உதிரன் கேட்க,  அதன் பின்னரே ருத்ரன் தன் சட்டையில் உள்ள இரத்தக்கரையை உணர்ந்திருந்தான்.

    அத்தையைப் பார்க்கச் சென்ற ருத்ரனின் சட்டையில் எப்படி இரத்தம் வந்தது?… குழப்பமாக உள்ளது அல்லவா… காவலர்களின் வீட்டுத் திருமணத்தில் பொதுவாகவே பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.  இங்கு சாஹியைச் சுற்றி பல மர்மங்கள் உள்ளமையாலும் ஆரத்யா மண்டபத்தில் ஒளிந்திருப்பதாலும் அவர்கள் எப்படி வெளியே வந்து பார்க்க என்று யோசிக்கும்போது அவர்களின் அத்தை கூறிய வழி தான் இது. எது…  அவர்களின் அத்தை தன் கையைத் தன்னைத்தானே கீறிவிட்டு ஒப்பாரி வைப்பதும் அதன்வழியே இவர்கள் இருவரும் வருவதும்… பார்வைக்குக் குழந்தைத்தனமாக இருப்பினும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு இதுவும் ஒருவழியே…

    பின்னர் ருத்ரன் உடைமாற்றிவர, இருவரும் சமத்தாய் மணமேடையில் வந்து அமர்ந்துகொண்டனர். எத்தனை கோட்டுகளிலும் பிராண்டட் சட்டைகளிலும் இல்லாத சிறப்பு தமிழ் கலாச்சார பட்டு வேட்டிக்கு உண்டு. பட்டு வேட்டி கட்டி மீசையை முறுக்கி விட்டபடி இருவரும் வர,  அனைவரின் கண்களும் அவர்களிலே நிலைத்திருந்தது. இறுக்கமான முகத்தினில் தவழும் புன்சிரிப்பும் நெற்றியில் வைக்கப்பட்ட கீற்றுச் சந்தனமும் காற்றில் அசைந்தாடும் கேசமும் மென்மேலும் அழகைக் கூட்டின என்றால் சற்றும் ஐயமில்லை. 

    அடுத்தது மணமகளை அழைத்து வரும்படி கூற, ருத்ரனோ விழி அகலாது தாரிகாவையே பார்த்துக் கொண்டிருக்க,  உதிரனோ யாருக்கு வந்த விருந்தோ என்பதுபோல விறைப்பாக அமரந்திருந்தான்.

    ருத்ரன் வாயைப் பிழந்துகொண்டு ஆவெனப் பார்க்க,  அருகில் நின்றிருந்த குழந்தை,  அவள் உண்ணும் வாழைப்பழத்தில் தான் பங்கு கேட்கிறான் என்ற நினைப்பில் வாழைப்பழம் மொத்தத்தையும் தோலோடு வைக்க, மண்டபமே சிரிப்பால் நிறைந்தது. ருத்ரனின் பெற்றோர் அவனை முறைக்க , அவனோ அந்தக் குழந்தையைப் பாவமாகப் பார்த்து வைத்தான்.

     இவர்களின் செயலைப் பார்த்திருந்த ஐயர் , ” உங்க பொஞ்சாதி உங்களுக்குத்தான்… யாரும் தூக்கீண்டு போவ மாட்டா… சத்த நேரம் ஒழுங்கா இருங்கோணா… ” என்று சிறுமுறைப்புடன் சொல்ல , பெண்கள் இருவரும் , ‘ இனியாவது கொஞ்சம் நிம்மதி கிடைத்தால் சரி ‘ என்பதுபோல் அமர்ந்திருந்தனர். கட்டிமேளம் கட்டிமேளம் என்று சற்று நேரத்தில் ஐயர் கூறவே , கண்களில் தன்னவளை நிரப்பியபடியே இருவரும் பெண்களுக்குத் தாலியினைக் கட்டி தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டனர்.  மற்றைய சடங்குகளினை நல்லமுறையில் முடித்து வீட்டுக்கு அழைத்து வரத் தயாராகியிருந்தனர்.

     வண்டிகள் கிளம்பும்போது ஆரத்யா இளம்காவலர் ஒருவரின் பாதுகாப்பில் வந்து நிற்க, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஆராவின் பெற்றோர் இடம்கருதி அவளை அடிக்கவர, உதிரன் தடுத்து நிறுத்தினான். ( அடிக்கலனா நடிப்புனு கண்டுபிடிச்சிடுவாங்கல… )

    ” ஆராவ யாரும் எதும் சொல்ல கூடாது… திருமணத்துல விருப்பம் இல்லாதபோது கட்டிவச்சா அதோட பெயர் கட்டாய கல்யாணம். IPC section 356 படி கட்டாய கல்யாணம் என்பது சட்டப்படி குற்றம் ” என்று விறைப்பாக கூறினான் உதிரன். 

  அவன் பேசி முடிக்க  , எதிரில் நின்ற ருத்ரன் ,  ” டேய் உதிரா … செக்ஷன் 356 பிரசிடென்டோட ஆட்சியைப் பற்றியதுடா… 366 தான் கட்டாய கல்யாணத்திற்கு எதிரான சட்டம் ” என்று வெகுசிரத்தையாக சொல்ல, தாரிகா கடுப்பில் அவனது கையைக் கிள்ளி வைத்தாள் . அதில் என்னவென அவளிடம் வினவ,  ” ஒரு ஃப்ளோ ல உதிரன் மாமா பேசுறாரு…  அதன் கெடுக்காம ஒழுங்கா நில்லுங்க… ” என்றவள் நடக்கும் கூத்தை பார்க்கலானாள் .

     ” என்ன இருந்தாலும்… ” என்று சாஹியின் தாய் தொடங்க,  ” என்ன ம்மா… அவளும் மனுஷி தான்… அவளுக்கும் விருப்பு வெறுப்பு இருக்கும் ” என்றவன்,  ஆராவிடம் திரும்பி ” எப்பொழுதும் போல நீ இருக்கலாம்… எங்க கூடவே வா ” என்று அழைத்துக்  வண்டியில் ஏற்றினான். பின்னர் அனைவரும் வண்டியில் ஏற வீட்டை நோக்கி வண்டி நகர்ந்தது. 

     வீட்டிற்கு  வந்ததும் முதலில் உதிரனின் தாயும் ருத்ரனின் அத்தையும் இறங்கி சென்று ஆரத்தி கரைத்து வர, ஆராவை வைத்து இரு தம்பதியருக்கும் ஆரத்தி சுற்றப்பட்டது.  வீட்டிற்குள் நுழைய போனவர்களைத் தடுத்து தட்டில் காசு வைக்கச் சொல்லி சண்டையிட, அவளது அவளுக்காக பணமும் கொடுத்து உள்ளே நுழைந்து கொண்டனர்.

    வீட்டின் பூஜையறையில் நிறுத்தி சாமி கும்பிட்டு விளக்கேற்றி பின்னர் பால் மற்றும் பழம் கொடுத்தல் என்று வரிசையாக நடந்தேறியது.  சில விஷயங்கள் செய்கையில் தாரிகா ஆர்வத்தோடு செய்ய, சாஹித்யா பயந்து பயந்து செய்தாலும் மனதில் ஏதோ பட்டாம்பூச்சி பறப்பது போலவும் இன்னும் கொஞ்ச நேரம் செய்ய விட்டால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தோடும் செய்தாள். கொஞ்ச நேரத்தில் பெணகள் இருவரையும் ஒரு அறையிலும் ஆண்கள் இருவரையும் வேறு அறையிலும் இருக்க வைத்தனர். 

      வழக்கம்போல உறவினர்கள் புடைசூழ இரவுநேரம் மணமக்களின் விருப்பங்களுக்குச் செவிசாய்க்காது சாந்திமுகூர்த்தம் ஏற்பாடுகள் நடத்த, சாஹித்யாவின் கரங்கள் மட்டுமன்றி உடலும் நடுங்க ஆரம்பித்தது. வந்திருந்த உறவினர்கள் பெண்ணவளின் நாணம்,  வெட்கம் என்று பெயரிட, அவளோ எதையும் பிரித்தறிய இயலாமல் குழம்பிப்போனாள். பிறந்த வீட்டுச் சொந்தங்கள் ஏதுமின்றி புதுமுகங்கள் காட்சியளிக்க, எதிலும் தயங்கியே இருந்தாள்.

     உறவினர் புடைசூழ தாரிகாவும் சாஹித்யாவும் அவர்கள் கணவன்மார்கள் அறைக்குள் வந்துசேர்ந்தனர்.  அறைக்குள் மெல்ல தன் பூப்பாதங்களால் நடைபயிற்சி செய்து எட்டிப் பார்க்க,  அங்கு ஒருவன் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. 

    அறையில் சுற்றி சுற்றி பார்க்க உதிரன் இருப்பதற்கான அடையாளம் இல்லாமல் போனது. பால்கனக வழியே வரும் ஊசி துளைக்கும் தென்றல் காற்றும் அமாவாசைக்கு மறுநாள் தோன்றிய புதுப்பிறப்பு போன்ற நிலவு ஒளியும் அவளை ஈர்க்க, பால்கனி பக்கம் சென்று அதை ரசித்திருந்தாள். 

¤¤¤¤

   இங்கு ருத்ரனின் அறையில் தாரிகா நுழைய , பின்னிருந்து அணைத்துக் கொண்டான். முதலில் பதறியவள், பின்னர் சுதாகரித்து கொண்டாள். 

   ” ருத்ரா…  ப்ச் விலகு… அடச்சை விலகுடா ” தாரிகாஶ்ரீ .

    ” ஏன்டி… என்ன ஆச்சு… ” ருத்ரன்

   ” இங்க  வா…  வந்து உக்காரு ” என்று அவள் கூற, வந்து அமர்ந்து கொண்டான்.

   ” ஹம்ம்…  இப்ப சொல்லு… ” ருத்ரன் .

   ” கோச்சுக்காத… எனக்கு சாஹித்யா அண்ணிய பற்றி பெருசா எதுவும் தெரியாது.  ஆனா ஆரா அண்ணி கொஞ்சம் சொன்னது வைத்து இப்ப எதோ பிரச்சனை ல இருக்குறதா தெரிஞ்சுகிட்டேன்… ” தாரிகா

   நெற்றியில் புருவமுடிச்சு விழ,  ” ஆமா..  அதுக்கென்ன ” என்று அவசரமாகக் கேட்டான் ருத்ரன்.  எங்கே சாஹியிடம் அதிகமாக விளையாடி தங்கையாய் பாவிப்பதை தாரிகா தவறாகப் புரிந்து கொள்வாளோ என்ற பயமே ருத்ரனிடம் மேலோங்கி இருந்தது. 

    ” இல்ல… உதிரன் அண்ணனுக்கு அந்த பிரச்சனையை முடிக்காம நிம்மதி இருக்காது. இந்த நிலைல நாம இப்படி தாம்பத்திய உறவு ல ஈடுபடுறது சரியா வருமா  … என்ன தான் இருந்தாலும் மனுஷங்க… அதோடு ஆரத்யாவும் இங்க இருக்காங்க… நம்மளோட உறவு அவளைத் தப்பான மைண்ட் செட் உருவாக்க கூடாது… இத கொஞ்ச நாள் தள்ளி போடுவோமா… ” என்று தயக்கமாகக் கேட்டு வைத்தாள்.

   அவள் பேசி முடிக்க,  அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ருத்ரன். ருத்ரனுக்கும் இந்த எண்ணம் தான்… தன் நண்பன் வாழ்வை தொடங்காமல் தான் மட்டும் வாழ்வது முறையாகாது என்ற எண்ணத்தில் தான் ருத்ரன் இருந்தான்.  ஆனால் அவன் மனையாளோ அதைத்தாண்டி ஆரத்யா வரை யோசிக்கிறாள்… ஒரே வீட்டில் பிறந்து தமக்கை தங்கையாய் வளர்ந்து அண்ணன் தம்பியை மணந்து கொள்ளும்போதே சில இடங்களில் ஒன்றுக்கு ஒன்று பொருந்தாமல் வந்த உடனே பிரச்சனை செய்கின்றனர். ஆனால் வந்த அந்நாளே அவனது குடும்பம் இல்லை இல்லை தன் குடும்பமாய் ஏற்று யாவருக்காகவும் யோசிக்கிறாள்…

      ” எ.. என்ன நான் தப்பா எதும் சொல்லிட்டேனா… “

     ” இல்ல இதத்தான் நானும் சொல்ல வந்தேன். நீயே சொல்லிட்ட…  சரி நீ இங்க படு.. நான் போய் தலகாணி போர்வையோட பால்கனி ல இல்ல மொட்டமாடி ல படுத்துக்குறேன் “

    ” ஏன் ஏன் ஏன்… இங்கேயே படுங்க… ஒரே ரூமுல கூட கட்டுப்பாடா இருக்க முடியும் “

    ” ஆஹான்… எதுக்குமா… இப்படி தான் சரத் குமாரும் தேவயாணியும் சொன்னாங்க… கடைசி ல கட்டுப்பாட்ட உடைக்கலயா… “

   தாரிகா புரியாமல் ‘பே’வென்று பார்க்க,  ” அட நீ சூரியவம்சம் படம் பாக்கலயா… அதுல தான்… ” என்று அவன் மேற்கொண்டு பேசவர , அவனது வாயைக் கையால் மூடியவள்,  ” எப்பா சாமி எங்கேயோ போய் படுங்க… வாய தொறந்தா மூடவே மாட்டிங்க  போல ” என்றவள் அவனை விரட்டியும் விட்டாள். 
 
****

மறந்ததாய் மாறட்டுமென
மறைக்கப்படுபவை
மந்தகாசமாக மறுரூபமெட்டால்
மங்கையவளின் மனமெனும் மந்தி
என்ன செய்யுமோ
மாற்றம் ஒன்றே மாறாதது 💕 •••

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. உதிரனும், ருத்ரனும் போலீஸூ, தாரிகாவுக்கு தான் எவ்ளோ நல்ல மனசு…

      1. Author

        😍😍😍 .

        ரொம்ப நன்றி சகி 🤗🤩