Loading

கோயம்பேடு பேருந்து நிலையம் எப்பவும்போலக் கூட்டமாக இருந்தது. உண்ட மயக்கத்தில் அப்படி அப்படியே உறங்கிக் கொண்டிருந்தார்கள் வழிப்போக்கர்கள். மார்த்தாண்டம் நோக்கிச் செல்லும் அரசு விரைவுப்பேருந்து, ஆறாவது நடைமேடையில் இருந்து கிளம்பத் தயாரானது. சன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தார் அந்த மீசைக்காரர். வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். 

முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டே அவர் அருகே வந்து அமர்ந்தான் மதி. அவன் கண்கள் சிவந்து இருந்தன. வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். எதையோ இழந்தவன் போல் சோகமாக இருந்தான்.

நடத்துநர் விசில் ஊத, போக்குவரத்துப் புகையில் புகுந்து வண்டி மெல்லக் கிளம்பியது.

“தம்பி! தம்பி! உங்களைத்தான். எந்த ஊரு போறீங்க?”

“ஆ..மார்த்தாண்டம்”

“ஏன் சோகமா இருக்கீங்க? எதுவும் பிரச்சனையா?” 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க இப்டி டிஸ்டப் பண்றதுதான் பிடிக்கல.”

“ஸாரி தம்பி”

வண்டி விழுப்புரம் தாண்டி வந்து கொண்டிருந்தது. மீசைக்காரர் தன் பையிலிருந்து பிஸ்கட்டை எடுத்துத் தின்று கொண்டிருந்தார். ‘சப் சப்’ என்று சவைக்கும் சத்தம் அவனுக்குப் பிடிக்கவில்லை. கோபத்தில் அவரைத் திட்டச்சென்றான். அவர் சிரித்துக்கொண்டே கையிலிருந்த பிஸ்கட்டை அவனிடம் நீட்டினார். அவர் கண்களைப் பார்த்ததும் சற்று மனம் மாறினான். ஒரு பிஸ்கட் மட்டும் எடுக்க நினைத்தான். கையில் இரண்டு பிஸ்கட்டுகள் மாட்டின. 

“என்ன தம்பி லவ் மேட்டரா?” 

“ஆமாண்ணே காலேஜ்ல மூணு வருசமா சின்சியரா லவ் பண்ணோம். இப்போ என்ன விட்டுட்டு வேற ஒரு பையன் கூடப் போய்ட்டா” என்று அழத் தொடங்கினான்.

 

“சரிப்பா ஃபீல் பண்ணாத. எல்லாம் சரியாகிடும்” 

“இந்தப் பொண்ணுங்களே இப்படித்தாண்ணே; நம்பவே கூடாது. நம்புனா மோசம்தான்” 

“இல்லப்பா எல்லாப் பொண்ணுங்களையும் அப்படிச் சொல்லக் கூடாது.. பொண்ணுங்களை ஏமாத்துற பசங்களும் இருக்கத்தாம்பா செய்றாங்க.”

“அப்போ ஏமாத்துறத சரின்னு சொல்றீங்களா?” 

“அப்படி இல்லப்பா. ஏமாத்துறது தப்புத்தான். ஆனா அப்படிப் பட்டவங்களும் இருப்பாங்கன்னு சொல்றேன்.”

“அம்மா மாதிரின்னு சொன்னா. இப்போ எங்க அம்மா மாதிரியே என்னை விட்டுட்டுப் போயிட்டா. அவள எப்படி மறக்குறதுன்னே தெரியல? சில நேரத்துல தற்கொலை பண்ணிக்களாம்ன்னு தோணுது” என்று பிஸ்கட்டைச் சவைத்தபடியே அழுதான்.

“அப்படிலாம் சொல்லாதீங்க தம்பி. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகும்” 

கொஞ்ச நேரம் இருவரும் மௌனமாக இருந்தனர். வண்டி கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து மதுரைப்பக்கம் ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றது. மதி சாப்பிட மனமில்லாமல் கீழே இறங்கி அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தான். பின்பு நிலவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மேகம் நிலவை மறைத்தது. உடனே, அவன் கண்கள் நட்சத்திரங்களைப் பார்க்கத் தொடங்கின. 

மீசைக்காரர், கொண்டுவந்த சப்பாத்தியை எடுத்துச் சாப்பிட்டார். குருமா கெட்டுப்போனது போல் இருந்தது. மூக்குக்கு அருகில் கொண்டுசென்று முகம் சுளித்தார். எப்படியோ சீனி வைத்து ரெண்டு சப்பாத்தியைச் சாப்பிட்டு விட்டார். ஜன்னலுக்கு வெளியே கையை நீட்டித் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு கைகழுவினார். உணவு இடைவேளை முடிந்து எல்லோரும் ஏறினார்கள். வண்டி புறப்பட்டது. இப்போது மதியே தானாகப் பேச்சைத் தொடங்கினான்.

“ஆமா நீங்க எந்த ஊருண்ணே? சென்னையில என்ன வேலை பண்றீங்க?”

“நமக்குத் திருநெல்வேலிதாம்பா. 

ஶ்ரீபெரும்புதூர்ல ஒரு வெல்டிங் பட்டறை வச்சிப் பொழப்ப நடத்திட்டு இருக்கேன். முப்பது வயசுல வேலை தேடிச் சென்னைக்கு வந்தேன். ஒரு வெல்டிங் பட்டறையில பத்து வருஷம் கஷ்டப்பட்டு, இன்னிக்கு நான் தனியா ஒரு பட்டறை வச்சி இருக்கேன்.”

“சூப்பர்ண்ணே. இப்போ என்ன விசயமா ஊருக்குப் போறீங்க?”

“தாசில்தார் ஆபிஸ்ல போய், கையெழுத்து போட்டு அனுமதி வாங்கணும். அதுக்காகத்தான் போறேன்.”

” எதுக்குண்ணே?”

” என் அப்பா போர்ல இறந்துட்டாரு. அம்மா, சொந்தக்காரங்க எல்லாரும் அகதிகள் முகாம்லதான் இருக்காங்க. நாங்க வெளிய படிக்கவோ வேலைக்கோ போனாலும் தாலுகா ஆபிஸ்ல போய் ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை அனுமதி வாங்கணும்.”

“ஸாரிண்ணே. நீங்க இலங்கைத் தமிழரா?” 

“ஆமாப்பா. நாங்க அகதிகள் கூட இல்ல. நாங்க எல்லாம் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள். வெளியூர் போக அவ்ளோ சீக்கிரமா அனுமதி தரமாட்டாங்க. இலங்கையில போய்ப் பொணமா வாழ்றதுக்கு இங்கேயே வாழ்ந்து பொணமாகிடலாம்பா.” 

“என்னிக்குண்ணே இதுலாம் மாறும்?”

“கோர்ட்ல கேஸ் போய்ட்டு இருக்குப்பா. தீர்ப்பு நல்லதாவே வரும்னு நம்புறோம். இனி வர்ற தலைமுறையாச்சும் குடியுரிமை கெடச்சி சந்தோசமா இருக்கணும்ன்னு நினைக்கிறோம். இப்போ அம்மாவைக் கூட்டிகிட்டுச் சென்னையிலேயே இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். கிடைக்கிற லாபத்துல இருந்து எங்க சொந்தங்களுக்கு உதவலாம்ன்னு இருக்கேன்.”

மதி எதுவுமே பேசவில்லை. 

வண்டி, திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் நின்றது. பயணிகள் இறங்கினார்கள். இவன் அவருக்கு வழி விட்டான். அவர் எழுந்து ஒரு காலை உந்தி உந்தி, மெல்ல மெல்ல நடந்தார். அவருக்குச் செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருப்பதையே அப்போதுதான் கவனித்தான்.  படியிலிருந்து அவர் இறங்க உதவினான். பைகளை எடுத்துக் கொடுத்தான். வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

வண்டி புறப்பட்டது. அவரது பெயரைக் கேட்க மறந்துவிட்டதை நினைத்து வருத்தப்பட்டான். அவர் இருந்த சீட் காலியாக இருந்தது. இப்போது மதி, அவரது இடத்தில் இருந்து பார்த்தான். வாழ்க்கை கொஞ்சம் புரிவதுபோல இருந்தது!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்