Loading

(பாகம் 1 இறுதி )

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்

பிறிதோர் பக்கம் மனம் சாயா

பிரியம் காப்பேன்

 

செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்

நெற்றி பொட்டில் முத்தம் பதித்து

நித்தம் எழுவேன்

 

கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்

ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

 

கண்ணே கனியே

உன்னை கை விடமாட்டேன்

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே

 

மாலை சூடிய காலை

கதிரின் மேலே

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே

 

அர்த்த ஜாம திருடன் போல

அதிர்ந்து பேசேன்

காமம் தீரும் பொழுதிலும்

எந்தன் காதல் தீரேன்

 

மாத மலர்ச்சி மறையும் வயதில்

மார்பு கொடுப்பேன்

நோய் மடியோடு நீ வீழ்ந்தால்

தாய் மடியாவேன்

 

சுவாசம் போல அருகில் இருந்து

சுகப்பட வைப்பேன்

உந்தன் உறவை எந்தன் உறவாய்

நெஞ்சில் சுமப்பேன்

 

உன் கனவுகள் நிஜமாக

என்னையே தருவேன்

உன் வாழ்வு மண்ணில் நீள

என் உயிர் தருவேன்

 

கண்ணே கனியே

உன்னை கை விடமாட்டேன்

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே

மாலை சூடிய காலை

கதிரின் மேலே

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே…

 

என்ற பாடல் மணமக்களின் எண்ணத்தை பறைசாற்றுவது போல மண்டபம் எங்கும் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தது.

 

மண்டப வாயிலில் அந்த சிலையின் அருகே

 

எழில்

 

வெட்ஸ்

 

யாழினி

 

என்ற பெயர் பலகை இதய வடிவில்

சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

 

இரு அழகான பெண்கள் (கொஞ்சம் மேக்கப் சகிதம்) பன்னீர் , சந்தன , குங்கும தட்டுக்களுடன் நின்றனர். அந்த பெண்களையும் “ஹா, நைஸ்…கேர்ள்ஸ்….” என்று இரசித்தபடி நின்ற இளைஞர்கள் அவர்களுக்கு துணையாக நிற்கிறேன் என்று கடலை போட்டுக்கொண்டிருந்தனர்.

 

அவர்களின் அருகே நம் கொக்கிகுமார் ச்சே ச்சே பாலகுமார் , பட்டு வேட்டி, சேலையுடன் வந்த உறவினர்களை வரவேற்றபடி இருந்தார்.

 

இந்த கல்யாணத்திலாவது தன் மகனுக்கு ஒரு நல்ல பெண் அமையாதா என்றும் , தன் பெண்ணுக்கு நல்ல துணைவன் அமையாதா என்றும் சில பெற்றோர்கள் மண்டபமெங்கும் வலைவீசி தேடியபடி இருந்தனர்.

 

இன்னொரு பக்கம் மாப்பிள்ளையின் நண்பர்களும் பெண்ணின் நண்பிகளும் நிறைந்திருக்க அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

 

தான் உடுத்தி வந்த நகை,உடை யோடு வேறு யார் வந்திருக்கிறார்கள் என்றும் அடுத்தவன் குடும்ப கதையை, தான் எழுதிய கதை போல உறவுகளோடு சலசலத்தபடி இருக்கும் கூட்டமும் அங்கே தவறாது ஆஜராகியிருந்தது.

 

இது என்ன பிரமாதம்! இதை விட ஸ்பெஷல் அயிட்டம் ஒன்னு இருக்கு😁

 

‘எவன் வீட்ல என்ன நடந்தாலும் பரவால்ல, நமக்கு சோறு தான் முக்கியம்’ என்ற கொள்கையோடு வந்திருக்கும் நம்மவர்களும் அங்கே வந்த வண்ணம் இருந்தனர்.

 

பாலகுமார்,” அடடே! வாங்க வாங்க , நர்மதா, பிரஷாதி. எங்க நீங்க வராம போய்டுவீங்களோனு பயந்திட்டு இருந்தேன்”

 

பிரஷாதி ,”அது எப்பிடி அங்கிள் வராம இருப்போம்”

 

நர்மதா,” அதுவும் இல்லாம இது நம்ம வீட்டு கல்யாணம் அங்கிள்.”

 

பாலகுமார்,” சந்தோஷம் மா. உள்ள போங்க” என்று மற்றவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.

 

 

சிவப்பு மற்றும் வெள்ளை தீம் எடுக்கப்பட்டதால் மண்டபமும்

அதே நிறத்திலான ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 

மேடையில் தங்க நிறத்தில் நான்கு தூண்களும் அவற்றை இணைத்த ஒரு வளையமும் கொண்ட மணப்பபந்தலில் ரோஜாக்கள் கோர்க்கப்பட்ட தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. அதன் நடுவே வலப்பக்கம் ராஜாவும் இடப்பக்கம் ராணியும் அமைந்த உருவப்படம் செதுக்கப்பட்ட இருக்கை மணமக்களுக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதன் முன்னால் ஓமக்குண்டமும் அது சார்ந்த பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது.

 

புரோகிதர் நல்ல நேரத்தைப் பார்த்து சடங்குகளை ஆரம்பித்தார்.

 

” மாப்பிள்ளைய அழைச்சின்டு வாங்கோ” என்று அவர் சொல்லி முடிக்க

 

எழில் பட்டு வேட்டி சட்டையில் சால்வையும் தலைப்பாகையும் அணிந்து அவனுக்கே உரிய கம்பீர நடையில் நடந்து வந்து ராஜாவின் பக்கம் அமர்ந்தான். ரொலெக்ஸ் வாட்ச் அவனது வலது கையை அலங்கரித்திருக்க

அவனது இடது கை டிரிம் செய்யப்பட்ட மீசையை முறுக்கிவிட்டது.

 

அவன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவனேயே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க எழிலின் முகமே சற்று வெட்கப் புன்னகையை தத்தெடுத்திருந்தது.

இன்று அவனது நாள் என்பதினாலோ என்னவோ எப்போதும் இருப்பதை விட வெட்கமும் கூட்டு சேர பேரழகனாத் தெரிந்தான்.

 

அவன் வந்ததும் மணமகனுக்கான சடங்குகள் ஆரம்பமானது.

 

சிறிது நேரத்தில் மணப்பெண்ணிற்காக அழைப்பு விடுக்கப்பட எழிலின் மனதோ சந்தோஷம் கலந்த மெல்லிய படபடப்பை கொண்டிருந்தது.

 

மெல்ல நிமிர்ந்து அவள் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்தான்.

 

அவன் எதிர்ப்பார்ப்பை வீணாக்காது மிதமான ஒப்பனையில் அரக்கு நிற கூறைப் பட்டு உடுத்தி , இடுப்பில் ஒட்டியாணம், காதில் அரக்கு ஜிமிக்கி , அரக்குடன் முத்து கலந்த நெற்றிச்சுட்டியோடு மூக்குத்தியும் அவளக்கு இன்னும் அழகைக் கூட்ட தரையையே அளந்தபடி தோழிகளோடு நடந்து வந்தாள்… யாழினி.

 

தன்னவனைக் காணும் ஆவல் பொஙகி எழ நிமிர்ந்து அவனைப் பார்க்க அவனோ இவளை மட்டுமே பார்த்திருந்தான். அவனைப் பார்க்கும் போது அவனை முதன் முதலில் வேட்டி சட்டையில் பார்த்த நினைவு எழுந்தது. மீண்டும் அதே நாளுக்கு சென்றது போன்ற உணர்வு அவளுள்.

 

அத்தோடு அவள் காதல் கைகூடும் சந்தோஷமும் அவள் முகத்தை மின்னச் செய்தது.

 

அவன் தொடர் பார்வையில் வெட்கம் குடிகொண்டாலும் யாரும் கவனிக்காத போது தில்லாக அவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு குனிந்து கொண்டாள்.

 

இப்போது வெட்கத்தை தத்தெடுப்பது மன்னவன் முறையாகியது. ஆனாலும் அவன் வெட்கத்தை இரசித்தாள்.

 

அவனோ இடதுகையால் மெதுவாக தலையைக் கோதிக்கொண்டு சிரித்தான்.

 

அவன் பார்வை அவளை விட்டு விலகவில்லை. கூடவே அவளது பத்து வருடக் காதலும் ஞாபகம் வர, அவன் மனதில் தன்னவளை நினைத்து கர்வம் குடிகொண்டது.

 

யாழினியும் அவனின் அருகில் வந்து ராணியின் இருக்கையில் அமர மற்றையை சடங்குகள் ஆரம்பமானது.

 

எல்லோரும் எதிர்ப்பார்த்த தருணம்…

 

இருவரையும் இணைப்பிரியா பந்தத்தில் இணைத்து வைக்க மங்கள நாண் எல்லோராலும் ஆசிர்வதிக்கப்பட்டு புரோகிதரிடம் வர, அவர் அதனை எடுத்து எழிலிடம் கொடுத்தார்.

 

“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா

கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”

என்று புரோகிதர் சொல்லும் போதே கெட்டிமேளம் முழங்க மாங்கல்யத்தை யாழினியின் கழுத்தருகே கொண்டு சென்று அவள் கண்களை காதலுடன் பார்த்து மூன்று முடிச்சையும் அவனே போட அவளின் கண்களோ ஆனந்தத்தில் கலங்கி விட்டன.

 

‘இவள் என்னவள்’ என்பதை உலகிற்கு பறைசாற்ற

எழில், அவள் நெற்றி வகுட்டில் திலகமிட்டு “ஐ லவ்யூ அம்மு ” என்று சொல்லியவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டு நிமிர இருவரின் நண்பர்களும் “ஹே!!!” என்று கூச்சலிட்டபடி அந்த மேடையையே ஆர்ப்பரித்தனர்.

 

அதிலும் அபியோ “மச்சான்!! நீயும் ஒரு குடும்பஸ்தன் ஆகிட்ட டா” என்று கூச்சலிட எழில் வெட்கத்தில் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

 

இப்போது தான் பெற்றோர் முகத்தில் நிறைவான புன்னகை குடி கொண்டிருந்தது.

தமிழ்ச்செல்வனோ அழுதே விட்டார். யாழினியின் அத்தை தான் அவரை சமாதானப் படுத்த வேண்டியதாகியது.

 

 

அம்மி மிதித்தல் சடங்கின் போது

எழில், யாழினியின் காலைப் பற்றி அம்மியில் வைத்து மெட்டியை அணிவித்து விட்டு அவள் அடிப் பாதத்தை தன் விரலால் மெலிதாக உரச அவளோ கூச்சத்தில் சற்று நெளிந்து பின் அவனை செல்லமாக முறைத்தாள்.

 

அவன் இப்போது அவளைப் பார்த்து கண்ணடிக்க அவளோ அழகாக புன்னகைத்தாள்.

 

இந்தக் காட்சியும் தவறாமல் புகைப்படக்காரர்களால் அழகான படைப்பாகியது.

 

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்