Loading

           அந்த வார இறுதியில் சனிக்கிழமையே கவினும், சிந்துவும் கிளம்பி சென்னை வந்திருக்க, சித்து மட்டும் ஞாயிறன்று காலையில் வருவதாக இருந்தது. ஆகாஷூக்கு அன்று விடுமுறை என்பதால் அவன் கவினையும் அழைத்துக் கொண்டு இசையின் வீட்டுக்கு வந்துவிட்டான்.

ஒரு பத்து மணியளவில் ஆதித்யாவும் அங்கே வந்தான். கதவை திறந்த மகிழ் அவன் யாரென்று தெரியாமல் பார்க்க, அகல்யாவை தேடி வந்திருப்பதாக கூறவும் உள்ளே விட, யாரென்று கேட்டதற்கு, அவள் கணவன் என கூற வந்தவன், அகல்யா முறைத்ததில் அவளது நண்பன் என்றே கூறினான்.

ஹாலில் யாரும் இல்லாமல் இருக்க “காலேஜ் ஃப்ரண்டாடி, சரி பேசிட்டு இருங்க. டீ எடுத்துட்டு வரேன்” என மகிழும் உள்ளே சென்று விட்டாள். சில நிமிடங்கள் அமைதியில் கழிய, அகல்யாவே ஆரம்பித்தாள். “இப்ப எதுக்காக என்னைத் தேடி இங்க வந்து இருக்கீங்க. அப்படி என்ன அவசியம் இருக்கு” என்றாள்.

ஆதித்யா, “என்னை மன்னிச்சிடு அகல். நான் பண்ணது எல்லாமே தப்புதான். யார் யார் மேலையோ இருந்த கோபத்தை உன்கிட்ட காட்டியிருக்க கூடாது” எனும்போதே அவனை தடுத்தாள்.

“இப்ப பழசை பத்தி பேசவோ, இல்ல உங்க விளக்கத்தை கேட்கவோ நான் தயாரா இல்ல. வேற ஏதாவது விசயம் இருந்தா மட்டும் சொல்லுங்க” என அகல் கூறவும், “சரி பேசல. வேலையை எதுக்கு விட்ட” என்றான் ஆதி. அதற்கு அகல், “வேலைக்கு வர்றதும், இல்ல விடறதும் என்னோட இஷ்டம். அதான் டீம் லீடர் உங்களுக்கு மெயில் பண்ணீட்டேன்ல” என்றாள் கோபமாக.

“ஆனா நான் அதை அக்சப்ட் பண்ணல. உனக்கு ஒரு வாரம் லீவ்தான் அப்ளை பண்ணியிருக்கேன். மன்டேல இருந்து வேலைக்கு வரனும்.” என அவன் அழுத்தமாக கூற, “நீங்க வான்னு சொன்னா வர்றதுக்கும், போன்னு சொன்னா போறதுக்குக்கும் நான் என்ன உங்க பொ…” என்றவள் சட்டென வாயை மூடிக் கொண்டு எழுந்து விட்டாள்.

அதில் ஆதித்யாவின் முகம் புன்னகையில் விரிய, அவனும் எழுந்து, “நீ சொன்னாலும், இல்லனாலும் அதுதான் உண்மை பேபி. எஸ் எப்பவும் நீதான் என் பொண்டாட்டி” என்றான் அவளது கன்னத்தை கொஞ்சி. அவனை  அதிர்ந்து பார்த்தாள் அகல்.

அவளோடு சேர்ந்து வீட்டில் இருந்த மற்றவர்களும் கூட அதை பார்த்து குழம்பிதான் நின்றனர். இசை, “அகல் அக்காக்கு கல்யாணம் ஆகிடுச்சா. இது என்ன புதுக்கதையா இருக்கு” என மெதுவாக கூற, “நானே சொல்லனும்னு நினைச்சேன். அன்னைக்கு டிராப் பண்ண போனப்பவே இவர் வந்து பேச வந்தாரு.

அப்பவே நான் அகலோட ஹஸ்பண்ட்டுன்னு சொன்னாரு” என்றான் ஆகாஷூம். மகிழோ முன்னே சென்று கேட்டே விட்டாள் அகலிடம் என்ன விவரமென்று. அவள் அமைதியாக இருக்க, “நான் சொல்றேன் சிஸ்டர். ஆமா எங்களுக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு.” என்ற ஆதித்யா நடந்ததை பகிர்ந்தான்.

தஞ்சைக்கு வளம் சேர்க்கும் நகரங்களின் ஒன்றான பட்டுக்கோட்டைதான் இருவருக்கும் சொந்த ஊர். ஆனால் திருமணம் முடிவாகும் வரை இருவரும் பக்கத்து ஊர்க்காரர்கள் என்பது தெரியாது இருவருக்கும். அகலின் தந்தைக்கு சென்னையில் பணி என்பதால் பள்ளிப்படிப்பையே அகல் சென்னையில்தான் படித்தாள்.

அப்போதுதான் மகிழ் அவளுக்கு தோழியானது. அதற்கு பிறகு கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் பெற்றவர்கள் சொந்த ஊருக்கே செல்ல, அகலுக்கு கேம்பஸில் பணி கிடைத்து சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலையில் சேர்ந்தாள்.

ஒருவருடம் பணி செய்தபிறகு, வேறு கம்பெனிக்கு மாறியவள் விடுமுறையில் பட்டுக்கோட்டைக்கு செல்ல, அப்போதுதான் திருமணம் பேசுவதாக கூறினர். அகலும் பெரியவர்களின் விருப்பதிற்கே விட்டுவிட, பெண் பார்க்க வந்தனர் ஆதித்யா வீட்டினர்.

தாங்கள் பார்த்து போனால் போதும். பையனுக்கு பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது என அவர்கள் கூறியதை இவர்களும் நம்பி விட்டனர். ஆதிக்கு தந்தை இல்லை தாய் மட்டுமே. ஆனால் திருமண நாள் வரை ஆதித்யா ஒரு ஃபோன் அழைப்பு கூட விடுக்காமல் இருந்தது ஏதோ உறுத்தலாக இருக்க,

அதை தாயிடம் பகிர்ந்த போது அவரோ, “ஒருவேளை மாப்பிள்ளைக்கு கூச்சு சுபாவமா கூட இருக்கலாம். நீ எதையாவது யோசிக்காதம்மா. விசாரிச்ச வரை அவரு நல்ல குணம்னு தான் சொல்றாங்க” என்று முடித்துவிட்டார்.

அகல்யாவும் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் மற்றவர்களிடம் தனது சஞ்சலங்களை பகிராமலே திருமணத்திற்கும் தயாரானாள். திடீரென முடிவாகி விட்டதால் மகிழுக்கு கூட அவள் தகவல் சொல்ல முடியவில்லை. மகிழும் அப்போதுதான் வேலையில் சேர்ந்திருந்ததால் அகலிடம் பேசுவதற்கு கூட நேரமில்லாமல் போனது.

திருமண நாளும் வந்தது. ஆதித்யாவை நேரில் பார்த்ததும் அவளுக்கிருந்த சஞ்சலங்கள் கூட சற்று விலகி, புதிதாக நாணம் கூட பிறக்க, மகிழ்வாகவே திருமண சடங்குகளை செய்தாள். ஆதித்யாவும் கூட இறுக்கமாக இருந்தாலும் பிடிக்காமல் இருப்பது போல தோன்றவில்லை அவளுக்கு. இவளை பார்க்கும்போது அவ்வபோது புன்னகைக்க கூட செய்தான்.

ஆனால் அன்றைய இரவின் தனிமையில் அந்த இறுக்கத்திற்கான விடை கிடைக்க, அது அகல்யாவின் மனதை கூறு போட்டு சென்றது. அகல்யா அறைக்குள் நுழைந்தும், அவளுக்காக காத்திருந்தது போல அவளை வரவேற்றான் ஆதித்யா.

அதுவரையில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அதற்கு பிறகு அவன், “லுக். உன் பேரு. ஆங். அகல்யா. இதோ பாரு அகல்யா. எனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பம் இல்ல. எங்க அம்மாவோட கட்டாயத்துலதான் பண்ணிக்கிட்டேன். அதனால என்கிட்ட பேசற வேலையெல்லாம் வைச்சுக்க வேண்டாம்.

நான் ஏற்கனவே ஒருத்தியை லவ் பண்ணேன். ஆனா எங்க நேரமோ என்னவோ நாங்க சேர முடியல. அதுக்காக அவளை என்னால மறக்கலாம் முடியாது. நீ இந்த வீட்ல உன் இஷ்டப்படி இருக்கலாம். ஆனா என்ன டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. அப்பறம் இன்னைக்கு ஒருநாள் மட்டும் கீழ படுத்துக்கோ.

நாளைக்கு பெட் வந்திடும். ஓகேவா” என அவனாக பேசி முடித்தவன் படுக்கையில் சென்று படுத்துவிட, அகல்யாவோ விக்கித்து நின்றாள். அவன் விளையாடுகிறானோ என கூட நினைத்தவளுக்கு அவன் கூறியதை நம்பத்தான் மனமில்லை.

சில நிமிடங்கள் அப்படியே நிற்க, அவனோ அதற்குள் உறங்கியே விட்டான். அதற்கு பின்னும் காத்திருப்பது முட்டாள்தனமாக பட, பாயை விரித்து படுத்தாள் அகல்யாவும். ஆனால் தூக்கம்தான் வந்தபாடில்லை. ஏதேதோ யோசித்தபடியே நேரத்தை கடத்தியவள் விடிகிற வேளையில்தான் உறங்கினாள்.

தாமதமாகவே காலையில் அவள் எழ அறையில் யாருமில்லை. குளித்து வெளியில் வந்து சமையலறைக்கு செல்ல அப்போதுதான் அறைக்குள் நுழைந்தான் ஆதித்யா.

அதற்குள் பக்கத்தில் இருந்த சில உறவுப் பெண்கள், “என்ன சிஸ்டர். நைட்டெல்லாம் தூங்கவே இல்லையா. கண்ணு சிவந்திருக்கு” என வம்பிழுக்க, அகல்யாவோ, “ஆமாம்” எனக் கூறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் அவர்கள் கேலி செய்வார்களே என. அங்கிருந்தவர்களை சமாளிக்க மாமியார் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு தங்களது அறைக்குள் புகுந்து விட்டாள்.

அதே நேரம் அவன் குளியலறையில் இருந்து வெளியே வர, அதற்கு பிறகே அங்கு தப்பி இங்கு மாட்டிவிட்டதாக தோன்ற, வெளியில் வந்தவள் அவன் உடை மாற்றும் வரை நின்றுவிட்டு ஒரு முடிவோடு உள்ளே சென்றாள்.

“என்ன” என ஆதி கேட்க, “அத்தை காபி கொடுத்துவிட்டாங்க.” என்க, “அதான் நேத்தே சொன்னேன்ல. இதெல்லாம் இனிமே பண்ணாத” என காபியை வாங்கி கொண்டான்.

“இல்ல உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். அதான்” எனும்போதே அவன் கூறவர, “நான் பேசிடறேன். இந்த லவ் விசயம்லாம் அத்தைக்கு தெரியுமா? ஏன்னா அதுக்கு ஏத்த மாதிரி சமாளிக்கனும்” எனும்போதே “தெரியும்” என்றதில் அதிர்ந்தாள் அவள்.

“ஆனா எங்க வீட்டுக்கு தெரியாது. கல்யாணம் ஆன மறுநாளே அங்க போய் நிக்க முடியாது. சோ உங்களுக்கு பிடிச்சாலும் இல்லனாலும் இங்கதான் இருந்தாகனும். அப்பறம் இதையெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கனும்.

இன்னும் கொஞ்ச நேரத்துல எங்கப்பாம்மா வருவாங்க. இப்ப அவங்களுக்காகவாது நாம நடிச்சுதான் ஆகனும். அப்பறம் நான் பாய்லயே படுத்துப்பேன்.” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் வெளியேறியிருந்தாள்.

ஆனால் அவர்கள் வந்தபோது என்ன கூறினாளோ அவர்கள் மறுவீட்டுக்கு கூட அழைக்காமல் திரும்பி சென்றனர். அதற்கு பிறகு வாழ்க்கை ஓட்டமெடுக்க, யாரும் ஆதித்யாவை கேள்வி கேட்காமல் பார்த்துக் கொண்டதோடு, அவனிடமும் விலகியே இருந்தாள்.

நடுவில் ஒருமுறை அவளது அத்தை விவரம் புரிந்து, “நீதான் அவனுக்கு புரிய வைக்கனும்” என்றதில், “பெத்த அம்மா உங்களாலயே புரிய வைக்க முடியாத விசயத்தை இப்ப வந்த என்னால எப்படி புரிய வைக்க முடியும். சண்டை போடாம இருக்கேனேன்னு சந்தோஷப்படுங்க” என்றாள் சூடாக.

ஆனால் அவனது தேவைகள் அனைத்தையும் அவளே பார்த்து பார்த்து செய்வாள். சமையல் மட்டும் கடைசிவரை கற்றுக் கொள்ளவே இல்லை. உணவு பரிமாறுவது அவளது அத்தைதான். ஆன்லைன் புராஜக்ட் எடுத்து, அதில் வரும் வருமானத்தை அவளது செலவுக்கு வைத்துக் கொள்பவள், அவன் அவளுக்காக தரும் பணத்தை தனியாக ஒரு அக்கவுண்டில் போட்டு வைத்தாள்.

இப்படியே ஆறு மாதம் போனது. எல்லா முதலுக்கும் ஒரு முடிவொன்று வருமல்லவா. அன்றும் அப்படித்தான் ஆனது. அவளது அத்தை ஏதோ உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருக்க, இவள் மட்டும் வீட்டில் இருந்தாள். அன்று பார்த்து சரியான கோபத்தோடு வந்த ஆதித்யா, உணவினை இவள் எடுத்து வைப்பதை பார்த்து, “அம்மா எங்க” என்றான்.

“அவங்கதான் ஊருக்கு போயிட்டாங்கள்ள. நீங்க சாப்பிடுங்க” எனவும் தட்டிலே கையை கழுவியவன், அவளை முறைத்து விட்டு மேலே சென்று விட்டான். அன்றிரவு வெளியில் மழை கொட்டிக் கொண்டிருக்க, ஏற்கனவே சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்த  அகல்யாவிற்கு கீழே படுத்ததில் நடுக்கமே வந்துவிட்டது.

ஆனாலும் பொறுத்துக் கொண்டு, இரண்டு பெட்ஷீட் போர்த்தி படுத்தவள் அப்படியே உறங்கியும் போனாள். நள்ளிரவில் எழுந்த ஆதித்யா, அவள் குளிரில் நடுங்குவதை பார்த்து அவளை எழுப்ப அவளோ எழும்பவே இல்லை. உடல் வேறு பயங்கரமாக கொதிக்க, சுய நினைவில் கூட இல்லை அவள். பயந்து போனவன் அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான்.

அதன்பிறகு நடுக்கம் சற்று குறைய, ஒரு மாத்திரையை கொடுத்தவன் அருகிலேயே படுத்தும் கொண்டான். அவளும் உறக்கத்திலே அவனைக் கட்டிக் கொண்டாள். காலையில் தூக்கத்திலிருந்து விழித்த ஆதித்யா, தன்னை கட்டிக் கொண்டு படுத்திருக்கும் அகல்யாவை கண்டதும் இரவு நடந்தது நியாபகம் இல்லாமல் வெடுக்கென அவளை தள்ளி விட்டான்.

அப்போதே உறக்கம் கலைந்து எழுந்தவள் பெட்டில் படுத்திருப்பதை கண்டு, வாரி சுருட்டி எழுந்திருக்க, அதற்குள் அவன் வார்த்தைகளை விட்டுவிட்டான். “ஓகோ, டெய்லியும் நீ இந்த வேலைதான் பண்றீயா. பகல்ல எதுவும் பேசாம அப்படியே பாவமா இருந்துட்டு, ராத்திரியான வந்து கூட படுத்துக்கற.

இப்படியெல்லாம் பண்ணி மயக்கிட்டா உன் கூட சேர்ந்திருவேனு நினைப்பு. வெட்கமா இல்ல. ஏன் நீங்கள்ளாம் இப்படி இருக்கீங்க. எங்க பீலிங்ஸ்ஸோட விளையாடறதுதான் உன்னை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் வேலையா?” எனக் கத்த அவளோ காய்ச்சலில் சோர்ந்து நின்றிருந்தாலும், அதைவிட அதிகமாக அவனது வார்த்தைகள் பாதிக்க துவண்டு போனாள் மனதளவில்.

அவளுக்கு பதில் கூறும் திராணி கூட இல்லை அவளிடம். இதற்கு முன்பும் அவளை அடிக்கடி திட்டுவான்தான். ஆனால் கீழ்த்தரமாக நடத்தியதில்லை. இன்று ஏனோ அவன் முன் நிற்பதே அவமானமாக இருக்க, எதுவுமே பேசாமல் வெளியே சென்றவள், அவன் வேலைக்கு கிளம்பும் வரை வெளியிலே வரவில்லை.

அவன் சாயங்காலம் வீட்டிற்கு வந்தபோது, அவளது கையெழுத்தில் எழுதிய இரு கடிதங்களே அவனது கண்ணில் பட்டது. ஒன்றில் பொது என்றிருக்க அதில், “உங்களோடு வாழ விருப்பமில்லை. எனக்கு பிடித்த வாழ்வை தேடி போகிறேன். வேண்டுமானால் இதை விடுதலை பத்திரமாக பயன்படுத்தி இன்னொரு வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” என்றிருந்தது.

இன்னொன்று பர்சனல் பார் ஆதித்யா, என எழுதப்பட்டிருந்தது. அன்புள்ள என எழுதி அடித்து, ஆதித்யாவிற்கு என தொடங்கப்பட்டு, “எனக்காக நீங்கள் உங்கள் பழைய காதலியை மறக்கவும் வேண்டாம். என்னோடு சேர்ந்து வாழ வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்ற பயமும் வேண்டாம்.

திருமணத்திற்கு முன்பே இதை என்னிடம் கூறியிருந்தால் அப்போதே திருமணத்தை நிறுத்தியிருப்பேன். உங்களை மயக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை. நான் போகிறேன். என்னை தேட வேண்டாம்” என்று முடித்திருந்தாள்.

அப்போது கூட, அவனை யாரும் தவறாக எண்ணக் கூடாது என தனியாக கடிதம் எழுதியிருப்பதை கண்டவன் அவளது அன்பை எண்ணி வியந்தான். அந்த கடிதத்தை கீழே வைத்துவிட்டு அவளை பற்றிய யோசனையில் ஆழ அது பறந்து கட்டிலுக்கு கீழே சென்று விட்டது.

மற்றொரு கடிதம் மட்டும் இந்த பக்கமாக விழ, அப்போது வந்த அவனது அன்னையின் கண்ணில் பட்டது அது. அதை எடுத்து பார்த்தவர், அகலின் வீட்டிற்கு அழைத்து கூற, அனைவருமே அகலை தான் தவறாக நினைத்தனர்.

ஆதியின் அன்னைக்கு எல்லாமே தெரிந்தாலும் மகனை விட்டுக் கொடுக்காமல் அகலையே திட்ட, “எல்லாரும் கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா? நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல. அவ எங்க போயிருப்பானு எனக்கு தெரியும்.

நான் பார்த்துக்கறேன். போய் அவங்கவங்க வேலையை பாருங்க.” என அவர்களே அனுப்பியவன், “அது எப்படிம்மா, அவளை பத்தி நல்லா தெரிஞ்சும் இப்படி பேசறீங்க.” என அவரிடமும் கூறியவன், ஒரே வாரத்தில் சென்னையில் ஒரு வேலையை பார்த்துக் கொண்டு வந்து விட்டான்.

அகல்யா படித்தது, வேலை பார்த்தது எல்லாமே சென்னையில்தான் என்பதால் அவள் இங்குதான் இருப்பாள் என நம்பினான். இருவருமே இன்ஜீனியரிங் படித்திருப்பதால், தங்களது நிறுவனம் மூலமே அவளை கண்டுபிடித்துவிடலாம் என நினைத்தான்.

இதற்காகவே ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அலுவலகத்தை மாற்றிவிடுவான். போன வாரம்தான் இந்த அலுவலகத்திலேயே சேர்ந்திருந்தான். சேர்ந்த வேகத்திலேயே அவளை கண்டும் பிடித்துவிட்டான்.

அந்த நேரம் அவள் டிரான்ஸ்பரில் வருவது தெரிய தனது டீமிலே போட ஏற்பாடும் செய்து விட்டான். ஆனால் அகல்யா ஆதி வீட்டிலிருந்து வந்ததும் நேராக சென்னைதான் வந்தாள். இவளது தோழி மூலம் பெங்களூரில் வேலை இருப்பது தெரிய, எங்காவது சென்றால் போதும் என அந்த வேலையில் சேர்ந்துவிட்டாள்.

அங்கே திருமணம் ஆனதையே மறைத்து விட்டவள், தனியாக அறை எடுத்து தங்கி கொண்டாள். மகிழ் வந்தபோது அவளிடம் சொல்லலாமா எனக் கூட நினைத்தாலும், அவளே நிறைய பிரச்சனையில் இருக்க, தன்னை பற்றி கூறி அவளை சிரமப்படுத்த வேண்டாம் என விட்டுவிட்டாள்.

நடந்ததை இருவரும் கூறி முடிக்க, அனைவருக்கும் கோபம் வந்தது ஆதித்யாவின் மீதுதான். பிடிக்காமல் திருமணம் செய்ததும் இல்லாமல் அகல்யாவை வேறு படுத்தியிருக்கிறானே என. அனைவரும் முறைத்ததை கண்ட ஆதி, அனைவரின் முன்பும் காலிலே விழுந்து  விட்டான்.

“தயவு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க. நான் பண்ணது எல்லாமே தப்புதான். ஆனா இப்ப இவளை மட்டும்தான் லவ் பண்றேன். எப்படியாவது சேர்த்து வைங்கப்பா.” என்றவன், “உன் புருஷன்தானே கொஞ்சம் கன்சிடர் பண்ணக் கூடாதா?” என அகலிடமே கேட்க, அவன் செய்கையில் சிரிப்பு வர, எதுவும் பேசாமல் நின்றிருந்தனர் அனைவரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்