324 views

சித்து, கவின், சிந்து மூவரும் சிரித்து பேசிக் கொண்டே சாப்பிட, ஆனாலும் சித்துவின் முகம் யோசனையாக இருப்பதை கண்ட கவின், “என்னாச்சு மச்சி, ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டான். “பிரச்சனையான்னு தெரியல. ஆனா பிரச்சனைதான். விடு பாத்துக்கலாம்” என்றான் சித்து.

“என்னனு சொல்லுனா. மறுபடி அம்மா ஏதாவது பண்ணாங்களா?” எனக் கேட்டாள் சிந்து. “அதெல்லாம் இல்ல. இந்த சந்துரு பண்ண வேலையை யோசிச்சேன்” என்றவன் ஆகாஷ் தன்னிடம் கூறியதை பகிர்ந்து கொண்டான்.

அதைக் கேட்டு சிந்து, “ஓ அப்படி ஆகிடுச்சா? சரி விடுங்கண்ணா. எப்படியும் விசயம் தெரிஞ்சுதானே ஆகனும். அண்ணி என்ன சொன்னாங்களாம்?” என ஆர்வமாக கேட்க, “ம்ம். உங்க அண்ணாவை வெட்டலாமா இல்ல குத்தலாமான்னு யோசனை பண்ணீட்டு இருக்காங்களாம்” என்றான் கவின் நக்கலாக.

“கிண்டலா சொன்னாலும் அதான் உண்மைடா. நிச்சயமா இதை அவ எதிர்பார்த்திருக்க மாட்டா” என்றான் சித்து. “எதுக்கும் நீ மகிழ்க்கு கால் பண்ணி கேளு. என்ன நடக்குதுன்னு” என கவின் கூறவும், சித்துவும் ஃபோனை எடுக்க, சரியாக அப்போது உள்ளே வந்தாள் ஸ்ரேயா.

அவளைக் கண்டதும் கவின், “ஹாய் ஸ்ரேயா. வா. ஏன் லேட்டு” எனக் கேட்டபோதே அவள் வருவது ஏற்கனவே தெரியும் அவனுக்கு என புரிந்தது சிந்துவிற்கு. “அது மம்மி ஒப்புடு செஞ்சாங்களா, அதை எடுத்துட்டு வரவும் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றபடியே அவனிடம் ஒரு டப்பாவை கொடுத்தாள்.

“ஓ. சூப்பர்” என்றபடியே அதை வாங்கியவன், “அப்பறம் நீ மட்டும் தனியாவா வந்த” என பின்னால் யாரையோ தேட, “வேற யாராவது வராங்களாடா?” எனக் கேட்டான் சித்து. “வருவாங்களோன்னு யோசிச்சேன்” எனவும், “ஹேய் கவின். அடங்கு” என அவனை அடிக்க சென்றவள், சிந்துவை கண்டதும் கையை விட்டாள்.

உடனே சிந்து எழ, “அச்சோ, கோவிச்சுக்காதீங்க. ஒரு முக்கியமான விசயம் சொல்லனும். இருங்க” என்றாள் ஸ்ரேயா. “அட நீங்க வேற. நான் உங்களுக்கு ஏதாவது எடுத்துட்டு வரலாம்னு எழுந்தேன். சரி சொல்லுங்க” என அமர்ந்தாள்.

“கரெக்டா நியாபகப்படுத்திட்ட சிட்டு” என அவளின் கன்னம் கிள்ளிவிட்டு, வேகமாக எழுந்து உள்ளே சென்ற கவின், ஒரு பவுலில் கேசரியோடு வந்தான். “இந்தா உனக்கு பிடிக்குமேன்னு செஞ்சேன். ஸ்வீட் சாப்பிட்டு அப்பறம் ஸ்வீட்டான விசயம் சொல்லு” என்க, “இப்ப தெரியுதாம்மா, இவன் நமக்கு ஸ்வீட் செய்யல” என ரகசியமாக கூறினான் சித்து சிந்துவிடம்.

ஸ்ரேயா ஒருவாய் சாப்பிட்டுவிட்டு, “அது என்ன விசயம்னா” என்றபடி ஹேண்ட் பேக்கில் எதையோ எடுக்க, “எனக்கும், இவளுக்கும் இன்னும் ஒன் மன்த்ல மேரேஜ். இன்விட்டேஷன் குடுக்க வந்தோம்.” என்றபடியே அவள் மீதி வைத்த கேசரியை எடுத்து சாப்பிட்டு விட்டு அவளை பார்த்து கண்ணடித்தான் அவளது வருங்கால கணவன் சுனில்.

“நீங்க எப்படி இங்க?” என்றபடியே அவள் திகைத்து பார்க்க, “சும்மா உன்னை பார்க்கனும்னு தோணுச்சு. அதான் வந்தேன்” என்றான் வழக்கம் போல. பதினைந்து நாட்கள் முன்பு தான் அவளை பெண்பார்க்க வந்தான் சுனில்.

முதல் பார்வையிலே அவளை பிடித்துவிட, உடனே சம்மதம் கூறி பெண்ணிடம் தனியே பேச வேண்டும் என்றான். ஸ்ரேயாதான் தயக்கத்துடன் திருமண பயத்தை பற்றி கூற, அவனைப்பற்றி கூறியவன், “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அப்பா அம்மாவை விட்டுட்டு எப்படி இருக்கறதுனு யோசிக்காத.

நீ எப்ப வேணும்னாலும் வந்து பார்க்கலாம். பத்தே கிலோமீட்டர்ல தான் நம்ப வீடு. கன்சிடர் பண்ணும்மா. ப்ளீஸ். ஓகே சொல்லிடு” என கெஞ்சும் தொனியில் கேட்க இவளுக்கு சிரிப்பு வந்தது. அதே சிரிப்போடு சம்மதம் கூறிவிட, அதிலிருந்து பத்து முறையாவது பார்க்க வந்திருப்பான்.

எப்போது கேட்டாலும், இதே பதில்தான் வரும். இருவரும் அலைபேசியிலும் பேச ஆரம்பித்திருக்க, சுனில் காட்டிய காதலில் திளைத்து அவளுக்கும் கூட நேசம் பிறந்திருந்தது. பிறகு அழைப்பிதழை தந்துவிட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இருவரும் கிளம்ப, இருவரும் கவினை முறைத்தனர் ஏன் கூறவில்லை என.

“ஹேய். எனக்கே ரெண்டு நாள் முன்னாடிதான் தெரியும். அவளே சொல்றேனு சொன்னா. அதான்” எனவும், “சரி அப்ப நான் கிளம்பறேன்” என்றாள் சிந்து. “ஓகேடா, நான் டிராப் பண்ணீட்டு வரேன்” எனக் கூறி கவினும் அவளோடு சென்று விட, வேலை விசயமாக வந்த அழைப்பு ஒன்றை பேச ஆரம்பித்தவன், மகிழுக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்பதையே மறந்து போனான்.

ஆனால் அன்று ஏனோ மகிழுக்கு சித்துவின் நினைவு அதிகமாக வந்தது. வேலையாக இருப்பதால் அவனே அழைக்கட்டும் என விட்டுவிட அவனோ அழைக்கவே இல்லை. அதே நேரம் இசை எதையோ சிந்தித்துக் கொண்டே இருந்தாள். “ஹேய். என்னாச்சு உனக்கு. இப்ப என்ன ஆகிடுச்சுனு நடந்து நடந்து வீட்டை தேச்சுக்கிட்டு இருக்க?” என அதட்டினாள் மகிழ் அவளை.

“ம்ம் ஒன்னுமில்லக்கா. நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்” என்றாள் இசை இயல்பாக. உடனே மகிழ், “அப்பா இங்க வாங்களேன். இவளுக்கு ஏதோ ஆகிடுச்சு” என அழைத்துவிட, பெற்றவர்கள் இருவரும் பதறிக் கொண்டு வந்து, “என்னம்மா” என ஒரு சேரக் கேட்டனர்.

மகிழ், “இவ வேலையை விடப் போறாளாம்.” என்க, “ஏண்டி, இப்ப அங்க வேலை பார்க்கறதுல என்ன பிரச்சனை” என்றார் மீனாட்சி. “அம்மா, அது சந்துருவோட ஆபிஸ். அங்க எப்படி வேலை பார்க்க முடியும். அவரு என்ன சொன்னாருன்னு கேட்டல்ல” என்றாள் இசை.

“அவரு சொன்னதுக்கு யாரும் ரியாக்ட் பண்ணல. அவரு மனசுல இருக்கிறதை சொன்னாரு. அதான் உனக்கு எந்த எண்ணமும் இல்லனு சொல்லீட்டல்ல. அப்பறம் என்ன. ஒழுங்கா போற” என்றாள் மகிழ்.

“இருந்தாலும் உன் கொழுந்தனாருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாதக்கா. அவரு எப்படி என்னை அப்படி நினைக்கலாம்.” என இசை மல்லுக்கு நிற்க, “அப்ப உங்க அக்கா சித்துவை கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா?” எனக் கேட்டார் குணசேகரன். அதில் திகைத்தவள், “இதுக்கும், அதுக்கும் என்ன சம்பந்தம்ப்பா?” எனக் கேட்டாள்.

“ஆமாம்மா, அந்த வீட்ல கல்யாணம் பண்ணா அடிக்கடி அந்த பையனை பார்க்கிற மாதிரி வரும். அதனால அதையும் யோசிக்கனும்ல” என குணசேகரன் கேட்க, “அதெல்லாம் வேண்டாம்ப்பா, யார் என்ன நினைச்சா எனக்கு என்ன? நான் வேலைக்கு போவேன்” என்றபடி இசை சென்றுவிட, அவளை நினைத்து சிரித்தபடி மகிழும் அறைக்கு சென்றாள்.

மறுநாள் காலையில் இசை அலுவலகம் கிளம்பும்போது ஆகாஷ் அங்குவர, “என்ன ஆகாஷ்” எனக் கேட்டாள் இசை. “ஹேய் மறந்துட்டீயா? உன் வண்டிதான் சர்வீஸ் விட்டுருக்கியே? பிக்கப் பண்ணிக்க சொன்ன” எனவும்தான் அவளுக்கு நினைவு வந்தது. “டூ மினிட்ஸ்” என்றபடி அவள் உள்ளே சென்று கிளம்பி வர, இருவரும் அலுவலகம் சென்றனர்.

“ஏன் மகி. வீட்ல யாரும் இங்க வேலைக்கு வர்றதை பத்தி எதுவும் சொல்லலயா?” எனக் கேட்க, “நல்லா கேட்ட போ. நீ சொல்ற மாதிரி அவங்கதானே என்னை போகாதன்னு சொல்லனும். அதை விட்டுட்டு அது வேற, இது வேறன்னு ஏதேதோ பேசி ஆபிஸ் அனுப்பி வைச்சிட்டாங்க” என்றாள் சோகமாக.

“இதென்ன பிரமாதம். அதைவிட பெரிசா ஒன்னு சொல்லவா? இங்க பாரு சந்துரு சார்க்கு லன்ச் குடுத்தூட்டாங்க அம்மா. நான் போய் வைச்சிட்டு வரேன்” என சந்துரு அறைக்குள் செல்ல, இவளோ, “அம்மா” என்றபடி மீனாட்சியை திட்டினாள்.

உள்ளே இன்னும் சந்துரு வந்திருக்க மாட்டான் என நினைத்து ஆகாஷ் சென்றால் அவனோ இவனுக்கு முன்பே வந்திருந்தான். “சார். அதுக்குள்ள வந்துட்டீங்களா?” என ஆகாஷ் ஆச்சர்யமாக கேட்க, “அதை விடு. மகி வந்தாச்சா?” என்றான் சந்துரு.

“அவ வந்தா நான் ஏன் சாப்பாடு கொண்டு வர போறேன். வரல” என அவனிடம் விளையாடி பார்த்தான் ஆகாஷ். உடனே தளர்ந்து சேரில் அமர்ந்தவன், “நினைச்சேன்டா. நான் ரொம்ப அவசரப்பட்டுட்டேன். வேலையை விட்டுடுவாளா?” என்றான் சந்துரு.

“அதெல்லாம் இல்ல. நான் சும்மா சொன்னேன். மகி ஆபிஸ் வந்திருக்கு. பார்த்துக்கலாம் விடுங்க.” என்றுவிட்டு வெளியே வர அடுத்த பத்தாவது நிமிடத்தில் இசைக்கு, சந்துருவிடம் இருந்து அழைப்பு வந்தது. இசை உள்ளே சென்றதும், சந்துரு, “வா மகி. உட்காரு” என்க, அவளோ, “என்ன விசயம்னு சொல்லுங்க சார்” என்றாள்.

சந்துரு, “சாரி மகி. நேத்து வந்து. நான் உன்னை” என விளக்கம் கொடுக்க வர, இசையோ, “சார். ஆபிஸ் விசயம் பேசறதுனா மட்டும் சொல்லுங்க. இல்லனா எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்றாள் பட்டென. அதற்கு பிறகு வேறு எதுவும் பேசாமல் வேலைகளை மட்டும் சொல்லிவிட்டு அவளை அனுப்பி வைத்தான்.

அப்போது சித்துவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வர, அதை ஏற்று, “சொல்லுங்கண்ணா” என்றான் சந்துரு. அவன், “என்னடா நடக்குது அங்க?” எனக் கேட்கவும், “இல்லண்ணா. அது ஏதோ வேகத்துல சொல்லிட்டேன். தப்புதான். இப்ப என்ன பண்றது?” எனக் கேட்டான்.

“சரி விடு. நடந்ததை நினைச்சு பீல் பண்ணாத. கொஞ்ச நாள் அமைதியா இரு. பார்த்துக்கலாம்” என்ற சித்து மேலும் சில விசயங்களை கூறி வைத்தான். அதற்குபிறகு அன்று முழுவதும் அவன் மகியை அவன் அழைக்கவே இல்லை.

அதோடு இல்லாமல் மதியத்திற்கு மேல் அவன் அலுவலகத்திலேயே இல்லை. சந்துருவிற்கு அழைத்தபிறகு மகிழுக்கு அழைக்க, அவளோ ஃபோனை எடுத்துவிட்டு, பொதுவாக நலம் விசாரித்தாள். “வதனி, என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?” என சித்து கேட்க, “அதெல்லாம் ஒன்னுமில்லையே. ஏன்?” என்றாள் அவள்.

“இல்ல நீ என்ன தேடவே இல்லையா? எனக்கு உன் ஞாபகமாவே இருக்கு” என்றான் சித்து குழைவாக. “அதெல்லாம் ஒன்னுமில்ல. ஒன் வீக்தானே ஆகுது பார்த்து. ஆபிஸ் போகலயா நீங்க?” என மகிழ் கேட்க, “உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. ஆபிஸ்ல தாண்டி இருக்கேன். இப்ப என்ன ஃபோனை வைச்சுட்டு வேலை பார்க்கனுமா. வை” என்றான் கடுப்பாக.

“அதெல்லாம் இல்ல. சாரி” என அவள் குரல் உள்ளே செல்லவும், “ஹேய். நான் விளையாடினேன். ஆமாண்டானு சொல்லுவன்னு பார்த்தா. நீ என்ன இப்படி பேசற” என்றான் சித்து. “ம்ம்” என்றவள் அமைதியாக இருக்க, இப்போதும் அவளது அமைதியின் காரணம்தான் அவனுக்கு புரியவில்லை.

அதன்பிறகு அழைப்பை துண்டித்தவன் யோசனையில் ஆழ்ந்தான். இசை போல பட்டென்று பேசா விட்டாலும், தனக்குள்ளே ஒடுங்குபவளும் இல்லை. தான் காதலை சொல்லும் வரையில் கூட நன்றாகத்தான் பேசினாள். இப்போது ஏன் இப்படி இருக்கிறாள்.

ஒருவேளை நம்மை பிடிக்கவில்லையோ, ஆனால் அப்படியும் தெரியவில்லையே என ஏதேதோ நினைத்தவனுக்கு சட்டென்று பொறி தட்டியது. அவன் யோசித்ததை செயல்படுத்த தொடங்கினான்.

சரியாக ஒரு வாரம் கழித்து அவன் மட்டும் கிளம்பி சென்னை வந்தவன் மகிழையும் கிளப்பி உடன் அழைத்து சென்றான். அவன் அழைத்து சென்ற இடத்தை பார்த்தவள் அதிர்ந்து நிற்க, சித்துவோ உறுதியாக அவளது கைகளை பற்றி உள்ளே அழைத்து சென்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்