Loading

              தந்தை வீட்டுக்கு சென்ற சந்திரா அதற்கான காரணத்தை தனது கணவரிடம் கூறவே இல்லை. மனைவியின் மீது கோபப்பட முடியாத அவரது கணவர் இராஜசேகரும் கேட்காமல் அவரது விருப்பத்திற்கு விட அதுவே பெரிய தவறாகி போனது. திடீரென வரச் சொல்லி தகவல் வரவும் வேகமாக கிளம்பி வந்தார்.

வீட்டின் வெளியே யாரும் இல்லாமல் இருக்க, உள்ளிருந்து ஒரு பெண் மருத்துவர் வந்தார். “நீங்க?” என அவர் கேட்க, “நான் சந்திராவோட கணவர். யாருக்காவது உடம்பு சரியில்லயா டாக்டர்” எனக் கேட்க, “ஆமா, சரியான நேரத்துக்கு வந்திருக்கிங்க. உங்க மனைவியை போய் பாருங்க” என்றுவிட்டு அவர் சென்று விட்டார்.

வேகமாக உள்ளே சென்று பார்க்க, சந்திரா படுத்து இருக்க, சித்து அழுதபடி அருகில் அமர்ந்திருந்தான். சந்திராவின் அன்னையும் அழுது கொண்டிருக்க, அவள் தந்தையும் கண்கள் கசிய பார்த்திருந்தார். இவரது வருகையை கண்டதும், “உன்னை நம்பி என் பொண்ணை குடுத்ததுக்கு இப்படி பண்ணீட்டியே?” என்றார்.

அந்த நிலையிலும், “அப்பா” என சந்திரா குரலை உயர்த்த, அதன்பின் எதுவும் அவர பேசாமல் சித்துவை தூக்கிக் கொண்டு வெளியில் செல்ல, பின்னாலே அவரது அன்னையும் சென்றார். எதுவும் புரியாமல் அவர் அருகில் சென்றவர், “என்னாச்சு சந்திரா. உடம்புக்கு முடியலயா. காய்ச்சலா என்ன?” என்றபடி தொட்டு பார்க்க, “என்ன உங்க மடியில படுக்க வைக்கறீங்களா?” எனக் கேட்டார் அவர்.

அவர் சொன்னபடியே செய்தவர், “காய்ச்சல்லாம் இல்லையே என்ன பண்ணுது” எனக் கேட்க, சந்திரா, “எனக்கு ஒரு சத்தியம் பண்ணுங்க. நான் கேட்கறதை கண்டிப்பா பண்ணுவேனு” என சம்பந்தமில்லாமல் பேச, “நீ கேட்டு நான் எதைமா தராம இருந்திருக்கேன். கண்டிப்பா பண்றேன். நாம ஊருக்கு போயாடலாமா. எனக்கு நீ இல்லாம அங்க இருக்கவே ஒரு மாதிரி இருக்கு” என்றார் இராஜசேகர்.

அதற்கு பதில் வராமல் சந்திராவின் கண்களில் இருந்து கண்ணீர்தான் வந்தது. “சத்தியம் பண்ணல” என அப்போதும் அதையே கேட்க, “சரி சத்தியம். என்ன வேணும் உனக்கு” என்றார் அவர். சந்திரா, “நானே நினைச்சாலும் இனிமே அங்க வரமுடியாது. நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்” என்றதில் அதிர்ந்து பார்த்தார் அவர்.

“லூசாடி நீ. நீ இருக்கும்போது நான் ஏன் வேற கல்யாணம் பண்ணிக்கனும்” என இராஜசேகர் கோபப்பட, “ஏன்னா நான்தான் இருக்க போறதில்லையே. இது என்னோட கடைசி ஆசை. நீங்க கண்டிப்பா” எனவும் அவளது வாயை பொத்தியவர், “என் மேல அவ்ளோ கோபமா உனக்கு. என் கூட இருக்கவே கூடாதுனு தப்பான முடிவு எடுத்துட்டியா? நான் உன்னை அவ்ளோ கொடுமைப்படுத்திட்டனாமா?” என்றார்.

சந்திரா, “உங்க மேல எந்த கோபமும் இல்ல. உங்களோட சேர்ந்து வாழ எனக்குதான் கொடுத்து வைக்கல. தீராத வியாதியை குடுத்துட்டான் கடவுள். என் வாழ்க்கையில உங்க கூட இருந்த காலம்தான் நான் ரொம்பவே நிறைவா சந்தோஷமா இருந்த நாட்கள். அது போதும் எனக்கு. ஆனா நீங்க சந்தோஷமா இருக்கனும். சித்து என்ன தேடுவான். நீங்கதான் பார்த்துக்கனும்” என்றவர் கணவரை பார்த்துக் கொண்டே நிம்மதியாக கண்களை மூடினார்.

அன்றிலிருந்து இராஜசேகருக்கு தான் நிம்மதி பறிபோனது. விசாரித்ததில் சந்திரா தனக்கு ஒரு நோய் இருப்பது தெரிந்துதான் அவரை விட்டு விலகி வந்திருக்கிறார். ‘தன்னிடம் ஏன் கூறவில்லை’ என அவர் தன்னையே நொந்து கொள்ள சித்துவின் தாத்தாவோ அவரையே குற்றம் சாட்டினார்.

சித்துவை அழைத்துக் கொண்டு மீண்டும் தனது வீட்டுக்கே இராஜசேகர் வந்துவிட, சில மாதங்களிலே இன்னொரு திருமணம் செய்துக் கொள்ளுமாறு சொந்தங்கள் வற்புறுத்தவும், சித்து நாளுக்கு நாள் அன்னையின் நினைவில் வாடியதையும் கண்டு தன் மனைவியின் விருப்பப்படி இரண்டாவது திருமணம் செய்து விட்டார்.

அந்த பெண் அவருக்கு தூரத்து சொந்தம். சற்றே ஏழ்மை நிலையில் இருந்த அவர்களது வீட்டிற்கு இரண்டாவது என்றாலும் நல்ல வசதியான வீட்டில்தானே கொடுக்கிறோம் என ஒப்புக் கொண்டு விட, எதற்கும் அந்த பெண்ணிடமும் சம்மதம் கேட்க வேண்டும் எனக் கேட்டார்.

அந்த பெண்ணோ திருமணத்தில் எனக்கு சம்மதம் ஆனால் எனக்கு முதல் திருமணம் என்பதால் என்னோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கோரிக்கையோடு சம்மதம் கூற எளிமையான முறையில் திருமணமும் நடந்தது. அவரை திருமணம் செய்ததால் பெரிதாக எந்த பிரச்சனையும் வரவில்லை.

ஆனால் சித்துவால் அவர்களோடு ஒட்ட முடியாமல் போய்விட, அடிக்கடி தாத்தா வீட்டுக்கு சென்றுவிடுவான். திருமணம் நடக்கும் முன்பே ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த சித்துவின் பாட்டியும் இறந்து விட்டார். வயது முதிர்வோடு மகள், மனைவி இறந்த சோகத்தோடு இருந்த அவனது தாத்தாவுக்கு சித்துவின் அருகாமை சற்று ஆறுதல் அளித்தது.

ஆனால் சித்துவின் நேரமோ என்னவோ அவனது தாத்தாவுக்கும் உடல்நிலை குன்ற ஆரம்பிக்க, தனது இறுதிகாலத்தை தெரிந்து கொண்ட அவர், சித்துவை தனியாக விடப்போகிறோமே என்ற எண்ணத்தில் இந்த சொத்தாவது அவனை காப்பாற்றட்டும் என அவனது குழந்தைக்கு சேருமாறு உயில் எழுதி விட்டு மறைந்து விட்டார்.

சந்திரா இறந்து இரண்டு வருடத்திற்குள்ளாக இவ்வளவும் நடந்திருக்க இதற்கிடையில் சந்துருவும் பிறந்து விட்டான் அவனது சித்திக்கு. இதில் சித்துவுக்கு தான் தனியாக இருப்பது போல மூச்சு முட்ட தன்னை ஹாஸ்டலில் விடுமாறு தந்தையிடம் கேட்டான்.

அவரும் மறுப்பு சொல்லாமல் அவனுக்கு பிடித்தபடி இருக்கட்டும் என அருகில் இருந்த ஒரு கான்வென்ட் பள்ளியில் சேர்த்துவிட, மேலும் இறுகி போனான் சித்து. ஆனால் தனது சோகத்தை மறக்க அவன் படிக்க ஆரம்பித்தான். எப்போதும் புத்தகமும் கையுமா இருக்கும் அவனுக்கு நண்பர்கள் கூட பெரிதாக இல்லை.

அப்போதுதான் அவனுக்கு நிரஞ்சனி அறிமுகம் ஆனாள். அது பிரபலமான தங்கி படிக்கும் பள்ளி என்பதால் அவளை அங்கு சேர்த்திருந்தனர் அவளின் பெற்றோர். பத்தாம் வகுப்பு வரை அங்கு படித்த இருவரும் நல்ல நண்பர்களாக, அதற்கு பின் வேறோரு பள்ளியில் சேர்ந்த நிரஞ்சனி சித்துவையும் அங்கு அழைத்தாள்.

ஒரே தோழியும் தன்னை விட்டு செல்வதால் அவளோடு அந்த பள்ளியில் சேர்ந்தபோதுதான் இருவரது வீடும் ஒரே பகுதியில் இருப்பது தெரிந்தது. மீண்டும் தனது வீட்டுக்கே வந்த சித்துவின் மீது அனைவரும் பாசமாகவே நடந்து கொண்டனர். அதுவும் சந்துருவும், சிந்துவும் மீண்டும் அண்ணன் வீட்டுக்கு வந்ததில் அகமகிழ்ந்து போயினர்.

அவன் சித்தி ஐயம்மாளும் அவனுக்கு பிடித்ததை எல்லாம் செய்து வைக்க, சகோதர பாசம் போல சித்தி பாசம் வேலை செய்யவில்லை. அவரிடம் எதுவும் பேசவும் இல்லை. அவரும் ஒரு அளவிற்கு மேல் அவனை வற்புறுத்தவும் இல்லை. நிரஞ்சனியின் குடும்பமும், சித்துவின் குடும்பமும் மேலும் நெருக்கமாகினர்.

கல்லூரி சேரும் போது நிரஞ்சனி வெளிநாட்டை தேர்ந்தெடுக்க சித்துவோ, இங்கேயே படிப்பதாக கூறிவிட்டான். கல்லூரியில் அவனுக்கு கிடைத்த தோழமைதான் கவின். தானும் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் அப்போதுதான். அதனால் கல்லூரி படிப்பு முடிந்து மேற்படிப்புக்காக நிரஞ்சனி படித்த அதே கல்லூரிக்கு சென்றான்.

அங்கு படிப்பு முடியும் தருவாயில்தான் நிரஞ்சனி அவனை காதலிப்பதாக கூறினாள். அதை உண்மையாக நினைக்காமல் ஏதோ விளையாடுவதாக கூறிவிட அவளோ திகைத்து போனாள். இருந்தும் மனதை தளர விடாமல் தனது காதலை அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மீண்டும் இந்தியா வந்தாள்.

அவளுக்கு ஹேக்கிங் துறையில் நல்ல அறிவும், ஆர்வமும் இருக்க அது சம்பந்தமான ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர, சித்துவோ தொழில் தொடங்க ஆகவேண்டிய காரியங்களை பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற விசயங்களை எல்லாம் ஏற்பாடு செய்துவிட தொழிலுக்கு தேவையான கடன்தான் கிடைக்கவில்லை.

அப்போது தனது தந்தையிடம் வந்து கேரண்டி தருமாறு உதவி கேட்க, அவரோ, “நம்ப பிஸினஸ் ரொம்ப நல்லாவே இருக்குப்பா. நீ அதை வந்து பார்த்துப்பன்னு நினைச்சேன். எனக்கும் வயசாகுதுல்ல” என்க, “நான் அது சம்பந்தமா படிக்கல. உங்களால முடிஞ்சவரை பாருங்க. அப்பறம் வேற என்ன பண்றதுனு யோசிக்கலாம்” எனவும் அவரும் சரியென்றார்.

பிறகு அவரே, “எதுக்காக கடன் வாங்கனும். நானே பணம் தரேன்” என்ற வார்த்தையை மட்டும் அந்த பக்கம் வந்த ஐயம்மாள் கேட்டுவிட்டு ஏதோ யோசனையோடு சென்று விட்டார். ஆனால் சித்துவோ அதை மறுக்க, “கடன் வாங்கினா நீ வட்டிக்கே நிறைய கஷ்டப்படனும். என்கிட்ட கடனா வாங்கினதா நினைச்சுக்க. திருப்பி குடுத்துடுப்பா” என்றார் அவர்.

சித்து அப்போதும் யோசனையிலே இருக்க, “ஒரு நல்ல அப்பாவா நான் உனக்கு இல்லனு தெரியும் சித்து. மேற்படிப்பை கூட நீ ஸ்காலர்ஷிப்ல தான் படிச்ச. நான் கல்யாணம் பண்ணிகிட்டேனு உனக்கு கோபம். ஆனா நான் இதை சந்திராவுக்காக தான் பண்ணேன்” என அவரின் கடைசி ஆசையை கூறியவர், “எனக்காக இதை வாங்கிக்கப்பா” என்றார்.

“உங்க மேல எதுவும் தப்பு இல்லப்பா. பரவால்ல விடுங்க. நான் வாங்கிக்கறேன்” என்ற சித்து அதை பெற்றுக் கொள்ளவும் செய்தான். இராஜசேகர் பணம் கொடுக்கும்போது அதை ஐயம்மாள் கவனிக்கவும் செய்தார். ஆனால் அதைப்பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. சித்துவும் நல்லபடியாக தொழிலை ஆரம்பித்தான்.

இதற்கு முன்பே கவினின் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் அவனையும் தனது கம்பெனிக்கே அழைத்து வந்தான் சித்து. கவின் பெரிய பொறுப்புகள் எதுவும் வேண்டாம் என்றபோதிலும் அவனை மேனேஜராக போட்டவன் நிம்மதியாக உணர்ந்தான்.

கடுமையாக தொழிலில் தன்னை புகுத்திக் கொண்டவன் ஒரு வருடத்தில் தந்தையிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்து விட்டான். ஆனால் அவன் திரும்ப கொடுத்தது ஐயம்மாளுக்கு தெரியாது. தொழிலிலும் ஓரளவு நல்ல பெயர் எடுத்திருக்க, வேலை விசயமாக வெளிநாடு செல்ல வேண்டி இருந்தது.

அந்த நேரம் திடீரென இராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, வேறு வழியின்றி கவினை அனுப்பி வைத்தான். உடல்நிலை சற்று குணமாகி வீட்டுக்கு வர, வேறு பிரச்சனை ஆரம்பமானது. ஐயம்மாள் சித்துவின் திருமண பேச்சை எடுத்தார்.

சித்து, “இப்ப என்ன அவசரம்.” எனக் கேட்க, “உன் வயசு பிள்ளைங்கலாம் கல்யாணம் பண்ணிக்கலயா என்ன? உங்கம்மா இருந்திருந்தாலும் இதைத்தான் பண்ணியிருப்பாங்க. நானும் உன்னையை என் பிள்ளையாதான் நினைக்கிறேன்” என்றார் ஐயம்மாள்.

அதோடு விடாமல் “நான் பொண்ணு கூட பார்த்துட்டேன்” என்றவர் பெண்ணாக நிரஞ்சனியை வந்து நிறுத்த, அவனோ அதிர்ந்து விட்டான். “நீங்க தெரிஞ்சுதான் பேசறீங்களா? அவ என் ஃப்ரண்ட்” என சித்து சத்தமிட, “ஆனா அவளுக்கு உன்னையதான் பிடிச்சிருக்கு. உனக்கும் வேற யாரையும் பழக்கமில்ல. புதுசா பார்க்கிறதை விட ஏற்கனவே தெரிஞ்ச பொண்ணு வசதிதானே” என்றார் அவர்.

நிரஞ்சனியும் ஒப்புக் கொள்ள, “நிரு. உன்னை நான் அப்படியெல்லாம் யோசிச்சதே இல்ல. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” என புரிய வைக்க முயல, அவளோ, “நீ என்ன புரிஞ்சுக்கோ சித்து. இனிமேல் யோசி. உன் மனசு மாற நான் டைம் குடுக்கறேன். ஒரு வாரம் யோசி” என்றாள் அவள். அடுத்து வந்த ஒரு வாரம் சித்துவுக்கு கடுப்பாக போக, அவள் சொன்ன நேரம் முடிந்து வரும்போது சித்து ஊரிலே இல்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்