Loading

          சித்து மகிழை அறைந்த சத்தம் உள்ளே இருந்தவர்களுக்கும் கேட்டது. சற்று முன்புதான் கவின், சந்தேஷ் மகிழிடம் ஏதோ வம்பு செய்வதாக மட்டும் கூறியிருந்தான். உடனே இசை, “செமல்ல.. மாம்ஸ் அக்காகிட்ட வம்பு செஞ்சவனை வச்சு செய்யறார் போல.” என குதூகலித்தாள்.

“அவனுக்கு நல்லா வேணும் இவனால தான் மகிழ் நல்ல வேலையை விட வேண்டியதாச்சு” என்றாள் கூடவே. “ஆமா என் பொண்ணு இங்க என்ன வேலை பார்க்குது. என்ன படிச்சிருக்கு” என தயங்கியபடி கேட்டார் குணசேகரன்.

“இதுல என்ன தயக்கம்ப்பா. மகிழ் ஒரு டாக்டர். ஆனா இந்த ஆபிஸ்ல என்ன வேலைனு எனக்கு தெரியல” என்றான் ஆகாஷ். “இங்கையும் டாக்டர்தான். மெடிக்கல் ரெப்ரஸெண்டா இருங்காங்க” என்ற கவின், “ஆமா உங்களுக்கு எப்படி சித்து, மகிழ் ரெண்டு பேரையும் முன்னாடியே தெரியும்” எனக் கேட்டான்.

“இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க எல்லாரும் ஒரு டூர் போயிருந்தோம்” என தொடங்கிய ஆகாஷ் அது பற்றிய விவரங்களை மற்றவர்களுக்கு கூற ஆரம்பித்தான்.

வெளியே சித்துவோ கோபமாக இருக்க, அவனை கண்ட சந்தேஷ் புன்னகைக்க, மகிழோ அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். சந்தேஷ் சிரிப்பதை கண்ட சித்து, அடுத்த அடியை அவனுக்கு கொடுத்துவிட்டு, மகிழுக்கு கைக்கொடுத்தான்.

அவளோ அதைப்பற்றாமல் அவனையே பார்க்க, கீழே அமர்ந்தவன், “என்ன அப்படி பார்க்கிற, அன்னைக்கு என்ன நடந்ததுனு சொல்லுனு எத்தனை முறை கேட்டேன். அன்னைக்கே முழுசா சொல்லியிருந்தா இப்படி கண்ட கண்ட நாய்லாம் உன்னைப் பத்தி பேசற நிலைமை வந்துருக்குமா?” என்றான் அதே கோபத்தோடு.

“ஏய். என்னடா. இவளுக்காக என்னையே நாய்ன்னு சொல்றியா. ஊருக்கு ஒருத்தன செட் பண்ணிட்டு திரியற இவளும், இவளை பத்தி சொல்லியும் அவ பின்னாடி போற நீயும்தான்டா நாய்ங்க.” என சந்தேஷ் கத்தவும் சித்து அவனை வெறித்தனமாக அடிக்க ஆரம்பித்தான்.

மகிழ் வந்து தடுத்தும் நிறுத்தாமல் இருக்க, வேகமாக சென்று அறைக்கதவை திறந்தாள் அவள். வேகமாக வெளியே வந்து என்னவென்று கேட்பார்கள் என மகிழ் நினைக்க, “அப்பறம் பழமுதிர்ச்சோலை போய் முருகனை தரிசிச்சு” என ஆகாஷ் ஆர்வமாக கூறிக் கொண்டிருக்க, எல்லோரும் கன்னத்தில் கைவைத்து கதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவள், “கவின் சீக்கிரம் வெளில வாங்க” என மகிழ் கத்தினாள். அவளது குரல் கேட்டதும், ஆகாஷ் எழப்போக, “கவின் அண்ணா, உங்களைதானே அக்கா கூப்பிடறாங்க. நீங்க போங்க. நீ கதையை கன்டினியூ பண்ணு ஆகாஷ்” என்றாள் இசை.

கவின் மட்டும் வெளியே வந்தவன், சித்து அடிப்பதை கண்டு, “என்ன மகிழ். எதுக்கு கூப்பிட்டிங்க?” என்றான் சாதாரணமாக. “அவரை நிறுத்த சொல்லுங்க. அடிக்கற அடியில செத்துட போறான்” என்றாள். “அப்ப இன்னும் சாகலயா?” எனக் கேட்க, சரியாக வாசல் கதவு தட்டப்பட்டது.

கவின் சென்று திறக்க, வெளியில் இருவர் நின்றிருந்தனர். சத்தம் கேட்டதும் அடிப்பதை நிறுத்திய சித்து, அவர்களை கண்டதும், “ஏண்டா இவ்வளவு நேரம். கை வலிக்குது.”என உதற, மகிழ் புரியாமல் பார்த்தாள். “டிராபிக்டா.” என்றவாறே அருகில் வந்தவனிடம், “இவன்தான் பார்த்துக்கோ” என்றவன் சந்தேஷின் ஃபோனையும் கொடுத்தான் சித்து.

“ஏண்டா. நீ ஏதாவது கதை சொன்னா அதைக் கேட்டு இவளை நான் சந்தேகப்படுவேனு நினைச்சியா. இன்னும் குறைஞ்சது ஒரு வருஷத்துக்கு நீ வெளிலயே வர முடியாது” என்றான் சித்து.

“டேய். என்ன யாருன்னு நினைச்ச. இன்னும் ஒரு மணி நேரத்துல நான் வெளில வந்து காட்றேன். நான் உள்ள இருக்கறது மட்டும் எங்கப்பாவுக்கு தெரிஞ்சது அவ்ளோதான் நீ” என்றான் சந்தேஷ்.

“தெரிஞ்சாதானே. நீதான் இன்னும் ஒரு மணி நேரத்துல பாரீன் போகப்போறீயே. இதைப்பார்த்தியா” என அவனது அலைபேசியை காட்ட, அதில் தான் அவசர வேலையாக வெளிநாடு செல்வதாகவும் மூன்று மாதங்களுக்கு என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் எனவும் அவனது தந்தைக்கு செய்தி அனுப்பபட்டு இருந்தது.

அவனது தந்தை பிசியாக இருக்கும் நேரங்களில் இதுபோன்ற செய்தி அனுப்பிவிட்டு ஊர் சுற்றுவது அவனது பழக்கமாக இருக்க, அதையே தனக்கு ஆதரவாக பயன்படுத்தி விட்டான் சித்து. “மூனு மாசத்துக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இவனுக்கு சப்போர்ட் பண்ண ஒரு வக்கீல் கூட வரமாட்டாங்க. அதுக்குள்ள இவ மேல கேஸை ஸ்ட்ராங் பண்ணி உள்ள தள்ளீடுங்க” என்றான் சித்து.

“ஓகேடா பார்த்துக்கலாம்” என்ற அவர்களில் ஒருவன் “இவங்க” என மகிழை காட்டி கேட்க, சித்து, “ஷி இஸ் மகிழ்வதனி. கூடிய சீக்கிரம் என்னோட வொய்ப் ஆகப்போறா” என்றவன், மகிழிடம், “இவங்க என்னோட ஃப்ரண்ட்ஸ். இவன் அருண், அவன் அஜய். ரெண்டு பேரும் சைபர்கிரைம்ல போலீஸா இருக்காங்க” என அறிமுகப்படுத்தினான்.

அப்போதுதான் மற்றவர்கள் அறையில் இருந்து வெளியே வந்திருக்க, மீனாட்சி, “எதுக்கு தம்பி போலிஸ் எல்லாம்” என பயந்தார். “சரி நீங்க கிளம்புங்க. நான் அப்பறமா உங்களை காண்டாக்ட் பண்றேன்” என அவர்களை அனுப்பிய சித்து மீனாட்சியிடம்,

“நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்ல ஆன்ட்டி. அஃபிசியல் கம்ப்ளைண்ட் எதுவும் குடுக்கல. சோ விசயம் வெளில தெரியாது. இது மாதிரி ஆளுங்களை எல்லாம் வெளில விட்டு வைக்கக் கூடாது. அதான்” என்றவன் மகிழிடம் செல்ல அவளோ விலகினாள்.

அதற்குள் அவளது கன்னத்தில் அடி விழுந்த தடத்தை இசை கவனித்து விட, அதைக் கண்டு வேகமாக அறைக்குள் சென்றுவிட்டாள் மகிழ். “ஒரு டென் மினிட்ஸ் உங்க பொண்ணுகிட்ட பேச பர்மிஷன் வேணும் ஆன்ட்டி” என மீனாட்சியிடம் கேட்க, அவரும் தலையாட்டினார்.

வேகமாக உள்ளே சென்றவன் அறையை தாழிட, “என்னடா இவன் ஒன்னு நம்பள உள்ள விட்டு கதவை சாத்தறான். இல்லனா வெளில தள்ளி கதவை சாத்தறான்.” என சலித்துக் கொண்ட கவின், “ஏங்க அகல்யா, கொஞ்சம் காபி போட்டு தரீங்களா. ரொம்ப பசிக்குது” எனக் கேட்டான்.

அப்போதுதான் அவர்கள் யாருமே சாப்பிடவில்லையே என உணர்ந்த சந்துரு வேகமாக உணவு ஆர்டர் செய்தான். அகல் சமையலறைக்குள் செல்ல, இசையும் அவளோடே சென்றாள். “நல்லவேளை நீ வந்த. சீக்கிரம் காபி போடு” என்றாள் அகல்யா அவளிடம்.

“எது நானா. நீங்க எப்படி போடறீங்கன்னு பார்க்கலாம்னு தான் வந்தேன். எனக்கு அதெல்லாம் தெரியாது. ஆமா உங்களுக்கும் சமைக்கத் தெரியாதா?” என ஆச்சர்யமாக கேட்டாள் இசை.

“எனக்கு அவ்வளவா தெரியாது. ஏதோ நூடுல்ஸ், பிரெட் டோஸ்ட், ஆம்ப்லேட் மாதிரி பண்ணுவேன். நான் ஒன்லி பிளாக் டீ குடிக்கற ஆளு. சோ மத்ததெல்லாம் கத்துக்கவே இல்ல.” என்றாள் அகல்யா. “அப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க” என்றாள் இசை சமையலறை மேடையில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு.

“மேக்ஸிமம் நான் ஆபிஸ்லயே இரண்டு வேளை சாப்பிட்டுடுவேன். ஒரு நேரத்துக்கு இது மாதிரி ஏதாவது பண்ணுவேன். இல்லனா கடையில ஆர்டர் பண்ணிக்க வேண்டியதுதான். ஆனா உங்க அக்கா வந்ததுக்கு அப்பறம் நான் வெளில சாப்பிடறதே இல்ல. அப்படி ஒரு டேஸ்டா சமைப்பா. நானும் நல்லா சாப்பிட்டுட்டு இருந்தேன். இனிமேல் அதுவும் போச்சு” என்றாள் அகல்.

அப்போது அங்கு வந்த மீனாட்சி, “ஏண்டி அந்த தம்பி காபி கேட்டு எவ்ளோ நேரம் ஆச்சு. இங்க என்ன கதை அடிச்சிட்டு இருக்க” என்றபடி அடுப்பை பார்க்க, அதைத்தான் இன்னும் பற்ற வைக்கவே இல்லையே. “இல்லம்மா. பால் வீட்ல இல்லையாம். அதான் என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருந்தோம்” என ஒரு கதையை இசை அவிழ்த்து விட்டாள்.

“ஓ அப்ப நீ என்ன பண்ணு. நேரா மாட்டுத்தாவணி சந்தைக்கு போய் நல்ல காராப்பசுவா ஒன்னை பிடிச்சிட்டு வா. அதுல பால் கறந்து அப்பறமா காபி போடலாம்” என சாதாரணமாக கூறவும், “ஏதோ சீரியஸாகதான் கூறுகிறார் என நினைத்த பெண்கள் இருவரும் அவர் சொல்லி முடித்ததும், ‘அம்மா செம பார்ம்ல இருக்காங்க போலவே எஸ்கேப்’ என நினைத்து, “இதோ உடனே வாங்கிட்டு வந்திடுவோம்” என்றவாறே வெளியே ஓடினர்.

அகலைக் கண்டதும், “ஒரு காபிக்கு” என கவின் ஆரம்பிக்க, அதற்குள் சந்துரு ஆர்டர் செய்த உணவே வந்துவிட்டது. “அப்ப இன்னும் காபியே போடலயா. அப்ப என்ன பண்ணீட்டு இருந்தீங்க இவ்வளவு நேரம்?” எனக் கேட்டான் ஆகாஷ். அதற்குள்ளேயே சாப்பாட்டு கவரை பிரித்த இசை, “ஐ பிரியாணி. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா காலைலயே வெஜ் சாப்பிடறோமேனு பீல் பண்ணேன். சூப்பர்” என்றாள்.

ஆகாஷ், “அது உனக்கு இல்ல. காலைல சாப்பிடாதவங்களுக்கு. நீ போய் வராத காபியை போட கண்டினியூ பண்ணு” என்க, “ஏய் ஆகாஷ். உனக்கு இப்ப என்ன பிரச்சனை. எவனாவது முட்டை போண்டால உருளைக்கிழங்கை தேடுவானா? கையில் பிரியாணி வைச்சிகிட்டு காபி, காபினு. போ பேசாம” என்றவள் சாப்பிடவே ஆரம்பித்து விட்டாள்.

“டேய். இது என்னடா பழமொழி. இதுவரை கேட்டதே இல்லயே!” என சந்துரு ஆகாஷின் காதைக் கடிக்க, “இது மகியின் புதுமொழி. அப்பக் கூட சாப்பாட்டை வைச்சுதான் சொல்றதை பாருங்க. ஆமா சேர்த்து ஆர்டர் பண்ணீங்களா?” எனக் கேட்டான் ஆகாஷ். “அதெல்லாம் பண்ணியிருக்கேன். நீ போய் அண்ணாவை கூப்பிடு.” என்றான் சந்துரு.

“அதெல்லாம் அவங்களுக்கு இப்ப பசிக்காது. நீ எனக்கு ஒரு பார்சலை எடு.” என்ற கவின் சாப்பிடத் தொடங்கி, “ஏங்க அகல் கொஞ்சம் தண்ணியாவது எடுத்துட்டு வரலாம்ல” என்றபடியே அவளை பார்க்க, அவளோ ஆர்வத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததில் அவன் பேசியதை காதிலேயே வாங்கவில்லை. மீனாட்சிதான் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்தார்.

உள்ளே, சித்து கதவை தாளிட்டதும் அவனை கண்ட மகிழ் ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள். உடனே அவனும் சற்று இயல்பாகி, அவளை நிமிர்த்தியவன், “சாரிமா. ரொம்ப வலிக்குதா.?” என்றான் அவளது கன்னங்களை தாங்கியபடி. “இல்ல பரவால்ல. அடிக்கும்போது வலிச்சது. ஆனா நீங்க எனக்கு ஆதரவா பேசினதும் வலி போய்டுச்சு” என்றாள் மகிழ்.

“அது அவன் உன்னைப்பத்தி தப்பா சொன்னதும் கோபம் வந்திடுச்சு. அதான். நிஜமாலும் என்ன நடந்தது. அவன் அது மாதிரி ஃபோட்டோ கிரியேட் பண்ணி உன்ன டிஸ்டர்ப் பண்ணியிருக்கானு புரிஞ்சது. ஆனா அது அவனுக்கு உன் பேர்ல இருந்து வந்த மாதிரில்ல அவன் காண்பிச்சான் அதான் குழப்பமா இருக்கு” என்றான் சித்து.

“சொல்றேன். கண்டிப்பா. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விசயம் தெரியனும். யார் நீங்க?” என்றாள் மகிழ். “யாருன்னா. உனக்கு இப்ப காதலன். சில மாதங்களில் கணவனாகலாம். அப்பறம்” என சித்து இழுக்க, “விளையாடாதீங்க. உங்களுக்கு எப்படி போலிஸ் எல்லாம் ஃப்ரண்ட்ஸ்” என்றாள் மகிழ்.

சித்து, “எனக்கு ஃபோலிஸ் ஃப்ரண்ட் இல்லமா. என் ஃப்ரண்ட்ஸ்தான் போலீஸ் ஆகியிருக்காங்க.”  எனவும் மகிழ், “ஓ இன்ஜினியரிங் முடிச்சிட்டு அப்பறம் போலீஸ் ஆகிட்டாங்களா. சரி அப்படியே வைச்சுப்போம். எப்படி அது மார்பிங் ஃபோட்டோனு கண்டுபிடிச்சிங்க.

அவன் ஃபோனை கையில் வாங்கி கொஞ்ச நேரத்துல அவனை அடிக்க ஆரம்பிச்சுட்டீங்க. அதுக்குள்ள அவங்க அப்பாவுக்கு எப்படி மெஸேஜ் பண்ணீங்க. எப்ப அவங்களுக்கு தகவல் சொன்னீங்க. இது எல்லாம் பொறுமையா யோசிச்சு கூட பண்ணல. அப்ப நீங்க யாரு?” என தெளிவாக யோசித்து கேட்க, சித்துவோ ஒரு திடுக்கிடலோடு அவளைப் பார்த்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்