Loading

இசை – 3

நதியின் சீற்றத்தால் என்ன நடந்தது என்பதையும் உணர முடியாமல் மயக்கத்தில் விழுந்திருந்தனர் அனைவரும். கண் விழிக்கும் போது வேதாவின் நெஞ்சத்தில் தளிர் மயங்கி கிடக்க, திக்கென்றிருந்தது அவனுக்கு.

“இந்த பொண்ணு… இந்த பொண்ணு தானே பேயா அலைஞ்சுட்டு இருந்துச்சு” என்று தளிரின் மீதான நினைவை அவனின் மூளை மின்னல் வெட்டி ஞாபகப்படுத்தியது.

வேதா கண் விழித்திருந்தாலும் தளிரின் வதன முகத்தை கண் இமைக்காமல் பார்த்தபடி கிடந்தவனுக்கு சிறிது நேரத்திற்கு முன்பு நதி ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையாமல் இருந்தது.

“என் கண்ணுக்கு மட்டும்தான் அப்படி தெரிஞ்சுச்சா? இல்ல எல்லாரும் பார்த்தாங்களா? மொதல்ல அந்த பொண்ணு யாரு? அது ஏன் கழுத்தை வெட்டிட்டு சாகுச்சு” என்று குழப்ப ரேகைகள் சூழ அப்படியே இருந்தான்.

ஹாசினி கண் திறந்ததும் கண்ட காட்சி வேதாவின் மீது தளிர் படுத்திருப்பதை தான்.. அவ்வளவுதான் அவளுக்கு வந்ததே கோவம் புயல் வேகத்தில் எழுந்து தளிரை பிடித்து இழுத்து தள்ள, முதுகில் சுள்ளென்று ஏதோ பட்டதில் தான் மயக்கம் தெளிந்து எழுந்தாள் தளிர்.

மதனும் வருணும் ஒருபுறம் கிடக்க, இங்கிருந்து செல்லும் வரையில் நதியில் காலெடுத்து வைக்க மாட்டேன் என்று மதனிடம் சபதம் எடுத்திருந்த ஆத்ரேயன் நதி நீரில் தான் இன்னும் கிடந்தான் அதுவும் மணித்துளிகள் கடந்தது என்பதே கணக்கில்லாமல்!

ஹாசினியை கண்டதும் வேதா மயங்கியது போல் பாவனை செய்ய, “வேதா அய்யோ வேதா… கண்ணை திறந்து பாருடா… வேதா வேதா” என்று உச்சக்கட்ட அச்சத்தில் ஹாசினி பதற, அந்த சத்தத்தில் தான் பாதிபேர் கண் விழித்தனர்.

நடிந்திருந்த வேதாவுக்கும் ஹாசினியின் கதறல் என்னவோ செய்தது. இருந்தும் கண்விழிக்க தோன்றாமல் அப்படியே இருக்க, பயந்து போன வருணும் “வேதா வேதா” என்று நண்பனை உலுக்கினான்.

இதில் பிறையை வேறு காணாமல் இருப்பது வருணுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. நடித்தது போதுமென்று நினைத்தானோ என்னவோ மயக்கத்தில இருந்து எழுவது போல் கண்ணை சுருக்கி கொண்டு எழுந்தான் வேதா. 

“வேதா வேதா உனக்கு ஒண்ணுமில்ல தானே? கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்டா” என்று ஹாசினி அவனை அணைத்து கொண்டு அழுக, அவர்களை வெறித்திருந்த தளிர் வேகமாக எழுந்து ஹாசினியை விலக்கி தள்ளியவள் வேதாவின் கன்னத்தில் அடியை இறக்கினாள்.

நேரங்காலமறியாமல் மதன் தான் “ஹய்யா தளிரு எப்பவும் போல மாறிட்டா” என்று துள்ளி கத்த, “வாயை மூடறியாடா” என்று அவனிடம் தீயாய் காய்ந்த ஆத்ரேயன் “தளிர் என்ன இது?” என்று தங்கையை அதட்டினான்.

ஹாசினி வேதாவை அணைத்தபோதே அவன் பிறையை காணாமல் பதற்றத்தில் தவித்திருக்க, தளிர் அடித்ததெல்லாம் அவன் உணரவில்லை.. இப்போது கூட வருணிடம் “மச்சி பிறை எங்கடா?” என்று மொத்த குழப்பத்தையும் தாங்கியவாறு கேட்டான்.

“பிறை… பிறை” என்று வேதா கத்திய கத்தல் அவ்விடம் முழுவதும் எதிரொலித்து அடங்கியது. வருணும் ஹாசினியும் கூட பிறையை காணாமல் பயந்த பாவனைகளை வெளிப்படுத்தி இருக்க, “என்ன நடந்துச்சுனே புரில இதுல எதுக்கு இவன் இப்படி கத்தறான்” என்று சலிப்பாக நினைத்தான் ஆத்ரேயன்.

“மச்சி முதல்ல என்ன நடந்துச்சுனு ஞாபகம் இருக்கா? இதுல பிறையை வேற காணோம்” – வருண்

“நம்ம இப்ப எங்க இருக்கோம்டா” – ஹாசினி

“நம்ம செத்துட்டமா?” – வருண் 

“ஒருவேளை சொர்க்கம் இப்படிதான் இருக்குமோ?” – மதன்

இதை கேட்டதும் வருண் “எவன்டா நீ?” என்ற ரீதியில் மதனை நோக்கினாலும் வேதாவின் துடிப்பில் மனது கனகனத்து “மச்சி பிறை இங்க எங்கையாவது தான்டா இருப்பா” என்றான் ஆறுதலாக.

“அவ இல்லாம நான் மட்டும் எப்படிடா இருப்பேன்… எனக்கு என் பிறை வேணும்டா” என்று தலையில் அடித்து கொண்டு வேதா கதறிட, இவர்களுடன் சிக்கி இருந்த பாதிபேர் “ஏன்பா இங்க நாங்களும் தான் இருக்கோம்… அது உன் கண்ணுக்கு தெரியலயா? மொதல்ல நம்ம உயிரை காப்பாத்திக்க பாக்கணும் பொறவு மத்தவங்க உயிரை காப்பாத்தலாம்” என்று குரல் குடுத்தனர்.

வேதாவின் அழுகையில் ஏனோ ஆத்ரேயனுக்கும் இதயம் வலித்தது. தன் கனல் பார்வையை கத்தியவரின் மேல் பாய்ச்சி “உன் வேலையை பாருடா என் வெண்ணை… இப்ப யாராவது உன்னைய பேச சொன்னாங்களா?” என்று உறுமினான்.

தலை தொங்கி போய் கண்ணீர் வடித்த வேதாவை “ப்ச் எந்திரி… உன் பிறை இங்க எங்கையாவது இருக்கலாம்” என்று அதட்டி உருட்டி அவனை அழைத்து கொண்டு நடந்தான்.

தன்னோடு வந்த வருணிடம் “பாஸ் உங்களுக்கு என்ன நடந்துச்சுனு ஏதாவது புரியுதா?” என்று மதன் தனக்கு மட்டும் தான் குழப்பமாக இருக்கிறதா? என்று நினைத்து கேட்டிட, “சத்தியமா தெரில பாஸ்… நாங்க வீட்டுக்கு போக கிளம்புனோம்… அப்ப திடீருனு சுனாமி வந்தது போல இருந்துச்சு… இப்ப கண்ணை முழிச்சு பார்த்தா அதே காட்டுக்குள்ள இருக்கற பிலீங்… பட் அந்த நதியை தான் காணோம்” என்றான் பாவமாக.

“கையை குடுங்க பாஸ்” என்று வருணின் கையை பிடித்து குலுக்கிய மதன் “எனக்கும் இதே பிலீங் தான் பாஸ்” என்றவன் “அப்ப நம்ம செத்துட்டோமா?” என்று அதிமுக்கியமான வினாவை தொடுத்த சமயம் “வாயை மூடிட்டு வாயேன்டா” என்று ஆத்ரேயன் சினந்தான்.

வேதாவின் எண்ணம் அனைத்தும் பிறையின் மேலிருந்ததால் இங்கு நடப்பவைகளை எதையும் அவன் கேட்கவில்லை. இவனின் துடிப்பிற்கு காரணமான பிறையோ ஒரு குகையில் மயக்கமான நிலையில் கிடந்தாள்.

பெண்ணவளுக்கு நினைவு எழுந்தபோது தான் எங்கு இருக்கிறோம் என்பதை விட தன்னை காணாமல் வேதா துடிதுடித்து விடுவான் என்ற கவலையே அவளை ஆட்கொள்ள, “வேதா” என்றவளுக்கு கண்ணீர் சுரந்தது.

இருந்தும் வேதாவின் நினைவோடு வேறொரு நினைவும் அவளை இம்சிப்பதை அவளால் தடுக்க இயலவில்லை. ‘இந்த இடம்… இந்த இடம்… ரொம்ப நெருக்கமான இடம் மாதிரி தெரியுதே’ என்று சிந்தனைகளுக்குள் சென்றதும் மயங்கினாள்.

******

பலவிதமான மலர்கள் பூத்து குலுங்கும் பூஞ்சோலை அது.. வானில் நிலவு மகள் காண்போரின் விழிகளுக்கு தன்னழகை குற்றம் குறைவின்றி விருந்தாக்கி இருக்க, இதோ நிலவு மகளின் அழகுக்கு இணையாக மண்ணிலும் ஒரு மங்கையவள் பூக்களுக்கு இடையில் மின்மினி பூச்சியாக மின்னுகிறாள்.

அவளை பின்னிருந்து இரு கைகள் அணைத்ததும் மொட்டாய் குவிந்திருந்த செந்நிற இதழ்கள் அழகாக புன்னகையால் விரிந்தது. அட அட அட! என்ன ஒரு மயக்கும் புன்னகை! இந்த ஒரு புன்னகை போதுமே காண்போரை தன்பக்கம் இழுக்க!

பெண்ணவள் சிந்திய புன்னகையில் அவன் மட்டுமா கிறங்கினான் அங்கிருந்த மலர்களும் இவளின் புன்னகை கீற்றால் அசைந்தாடி தன்பக்கம் இழுக்க முயன்றது அவளை! 

பொய் கோவத்தில் கருந்தேள் விழிகள் சிவந்து “யாழ்வரே! என்ன விளையாட்டுத்தனம் இது” என்று முகம்தனை சுருக்கிட, பதிலின்றி பெண்ணவளின் வெண்கழுத்தில் முகத்தை புதைத்தான் ஆடவன்.

“யாழ்வரே!” என்று சிணுங்கியபடி அவனிடம் இருந்து விலகி நின்றாள் மங்கையவள். “அடியே கள்ளி! உன் சிணுங்கல் மொழிகள் தாம் என்னை உம்பக்கம் இழுக்கிறது என்பதை அறிந்தும் அந்த சிணுங்கல் மொழியையே உதிக்கிறாயே! பின்பு எவ்வாறு உம்மை விட்டு விலக இயலும்” என்று கேட்டான் குறும்பு மேலோங்க.

இதில் பெண்ணவளின் கன்னக்கதுப்புகள் நாணத்தால் சிவந்ததில் அதையை மறைக்க தலையை குனிந்தவளின் தாடையை ஒற்றை விரலால் நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான் ஆண்மகன்.

ஆடவனின் இமைகளில் தெரிந்த காதல் ரசத்தில் இமைச்சிறகுகளுக்கு ஓய்வளித்து அவனையே இமை சிமிட்டாமல் பார்த்திட்டாள் அவள்! பிறை நெற்றியில் மூன்று கோடுகள் இயல்பாகவே விழுந்திருக்க, நெற்றியை சுருக்கும் போதெல்லாம் அக்கோடுகளும் சுருங்கி விரிந்தது.

கழுத்தில் தொங்கிய கருப்பு கயிறில் ருத்ராட்ச கொட்டையும், நெஞ்சத்தை ஆக்கிரமித்திருந்த சுருள் முடிகளுக்கு நடுவில் பச்சை குத்தி இருந்த சிவலிங்கம் நிலவு மகளின் ஒளியில் மின்ன, ஆடவனின் வலது புஜத்தை கவ்வி பிடித்திருந்தது சிவனின் பாதத்தில் இருந்து எடுத்த சிவப்பு கயிறொன்று! 

ஆடவனின் ஒற்றை கரம் பெண்ணவளின் மெல்லிடையில் பதிந்து “அடி கள்ளி! உன் கருந்தேள் விழிகளை அங்குமிங்கும் உருட்டாமல் அமைதியாக நில்லுடி.. உந்தன் முகத்தில் எமக்கு பிடிக்காததே இந்த விழிகள் மட்டும்தான்” என்றான்.

இதழை குவித்து “ஏனாம்?? என் விழிகளுக்கு என்ன குறை?” என்று வினவிட, “எல்லாம் குறை தான்… என்னை காதலோடு நோக்க வேண்டிய சமயத்தில் கோபக்கனலை  வீசினால் எப்படி பிடிக்கும்” என்று கண்ணடித்து கேட்டவனுக்கு சிலபல அடிகளை பரிசளித்தது தளிர் கரங்கள்!

பெண்ணவளின் கரங்களை மட்டுமின்றி அவளையும் இழுத்தணைத்து தனக்குள் அடக்கி நிலவு மகளை கை காட்டினான் “அந்த பெண்ணவள் தான் அனைவரையும் விட அழகு என்று நினைத்திருந்தேன்… ஆனால் அதை பொய்யாக்கியதே உம் பேரழகு!” என்றதோடு நிற்காமல் செந்நிற இதழையும் சிறைப்பிடித்தான்.

இதழ் தீண்டலில் திமிறி.. பின்பு உருகி.. உருக்குலைந்து.. வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து விலகி நின்றவளுக்கு மூச்சு வாங்கியது. “என்னடி வெக்கமா? உமக்கும் அதற்கும் தான் காததூரமாயிற்றே!” என்று அவளை சிவக்க வைத்தான்.

முதலில் விழிகளை அங்குமிங்கும் உருட்டி அவனை அதட்டிட நினைத்தவள் ஆண்மகனின் பார்வையில் தெரிந்த சில்மிஷத்தில் நாணக்குடையில் இமைகள் கவிழ்ந்திட, செந்நிற இதழ்கள் செவ்விதழ்களுக்கு இணையாக சிவந்து பின்பு அழகாக விரிந்து நாணச்சிரிப்பை சிந்தியது.

*******

பிறையை கண்டு விட்டான் வேதா! தன்னுடன் வந்தவர்களை மறந்து தமக்கையிடம் ஓடியவன் “பிறை பிறை” என்று கூச்சலிட்டு எழுப்பிட முயன்றிட, பிறையை கண்டதும் தான் வருணுக்கும் ஹாசினிக்கும் போன உயிரே திரும்ப வந்தது போல் இருந்தது.

வேதாவை இன்னும் கலங்க விடாமல் பிறையும் கண் விழித்து விட்டாள்.. தன்னை கட்டிக் கொண்டு அழுகும் தம்பியை உணராமல் ஆத்ரேயனையே கண்டது அவளின் விழிகள் இரண்டும்! 

மனக்கண்ணில் ஓடிய காட்சிகள் அனைத்தும் கனவா? நிஜமா? என்றறியாமல் பலவிதமான சுழல்களுக்கு இடையில் அகப்பட்டிருந்தாள் வெண்பிறையாள். ஏன் தனக்கு இவ்வாறு தோன்ற வேண்டும் என்ற நினைவு எழுந்த போது “பிறை இங்க பாருடி” என்று தம்பியின் உலுக்கலில் சுயத்திற்கு வந்தாள்.

வேதாவின் கண்களில் தெரிந்த மிரட்சியில் “நான் நல்லாதான்டா இருக்கேன்” என்று அவனை சமாதானப்படுத்திய பிறையின் பார்வை மீண்டும் சென்றது ஆத்ரேயனிடமே!

வேதாவை விலக்கி விட்டு எழுந்தவள் நேராக ஆத்ரேயனின் முன்பு சென்று நின்றிட, அவளை சந்தேகமாக ஏறிட்டது ஆடவனின் விழிகள்! அவன் முகத்தை சுருக்கிய சமயம்  நெற்றியில் விழுந்தது கனவில் கண்ட அதே மூன்று கோடுகள்!

இதில் அதிர்ச்சியில் பிறையின் விழிகள் அகலமாக விரிந்திட, அவனின் நெஞ்சமதியில் எதனையோ காணும் ஆர்வத்தில்  சட்டையை விலக்க முயன்ற நொடியில் பிறையின் கன்னத்தில் இடியென இறங்கியது ஆத்ரேயன் விட்ட அடியொன்று!

“தேவியே! தங்களின் தேவரை கண்டு விட்டீர்! கண்டு விட்டீர்! எம் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க முடியாத நிலையில் உள்ளேன்.. இதற்காக தான் 

இவ்வளவு வருடங்கள் காத்திருந்தோம்” என்று மீண்டும் ஒலித்தது அக்குரல்.

நதியின் விவரிக்க இயலாத சந்தோச உணர்வுடன் காற்றும் மழையும் கை கோர்த்து கொண்டதில் முதலில் சாரலாக தொடங்கிய மழை பின்பு வேகம் எடுத்தது.. மழையுடன் காற்றும் இணைந்து கொண்டதில் தடுமாறி நின்றிருந்தனர் அனைவரும்!

“தேவன் தேவியே! இருவரும் கரம் கோர்த்து எம் நதியினில் பாதத்தை வைத்தால் தான் இந்த மழையும் காற்றும் அடங்கும்” என்று வந்த நதியின் குரலில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட இருவரின் விழிகளும் கக்கிட்டது நெருப்புக்கனலை தான்!!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  6 Comments

  1. Archana

   இந்த ஹாசினி புள்ளயே பார்த்தாலும் பாவமா இருக்கே 😅😅😅 ஆஸ்கர் கொடுக்குற அளவு இந்த வேதா நடிக்குறானே🤣🤣🤣🤣

  2. Janu Croos

   இந்தாமா ஹாசினி… ஏதோ தளிர் வேணும்னே வேதா மேல மயங்கி இருந்த மாதிரி அவள தள்ளி விடுற…நீ அவன காதலிக்குற இல்லனு சொல்லல…ஆனா அதுக்கு அவனும் உன்ன காதலிக்கனும்ல…எதேர்ச்சையா நடந்த விஷயத்துக்கு நீ இவ்வளவு ஓவர் ரியாக்ட் பண்றது எல்லாம் நல்லா இல்ல…
   ஆமா தளிர் ஏன் வேதா செவிலு மேலயே அறைஞ்சாள்…. ஆனா அத கண்டுக்காம அவன் பிறையவே தேடுறானீ….அம்புடீடு பாசம் அக்கா மேல….
   அப்போ பிறையோட கனவுல வந்தது தான் அது எல்லாமா….
   அம்மாடி பிறை…என்ன தான் கனவுல பாத்திருந்தாலும்…இப்படியா திடீர்னு போய் ஒரு கன்னிப்பையன் சட்டைய கழட்ட பாக்குறது….அதான் பொலிச்சுனு அறைஞ்சுட்டான்….
   அக்காவும் வம்பியும்…அண்ணன் தங்கச்சி கிட்ட ஈடி வாங்குறதயே பொழப்பா வச்சிருபீங்க போல…..

   1. Multishot vedi
    Author

    அட ஆமால தளிர் எதுக்கு வேதாவை அமைச்சா்🙄🙄😂😂😂😂 அக்கா தம்பிக்கு இனி அடி வாங்கறதே வேலையா இருக்கும்😂😂