211 views

உண்மையும் கொஞ்சம் புனைவும்..

எல்லா நாட்களை போன்றுதான் அன்றும் விடிந்தது ஆனந்திக்கு. ஆனால் மனதிற்குள் மட்டும் இன்று கணவன் சென்னதை எப்படியாவது செய்து அவர் மனதை அமைதியாக்க வேண்டும் என்ற வெறி ஏறிக்கொண்டே இருந்தது.

சுக்லாபட்டி கிரமத்தை சேர்ந்த பேச்சியம்மாள்க்கு 4 பெண் குழந்தைகள். அதில் மூத்தவள் தான் இந்த ஆனந்தி. ஆனந்தி காண்பவரை ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் கிரமத்து பைங்கிளி. நிறம், உடலமைப்பை தாண்டி நல்ல வடிவான முகம் அவளுக்கு. ஆப்பிள் போன்ற கன்னங்கள், திரட்சை விழிகள், ஆரஞ்சு சுளை உதடு என்று அனைத்தும் இருக்கும் கலையான முகம்.

அதே நேரம் தனது நெருக்கமனவர்களுக்காக எதையும் செய்ய துணியும் பாசக்காரி. ‘உன்ன கட்டிக்கபோற மகராசன் கொடுத்து வச்சிருக்கனும்!’ என்று ஆனந்தியின் அப்பத்தா எப்போதும் செல்வதுண்டு.

அந்த மகராசனாய் வந்தவர் தான் சந்திரன். ஆனந்தியை பெண் பார்க்க வந்த  சந்திரன் அவளின் மீது முதல் பார்வையிலேயே காதல் கொண்டார். பின் பெற்றோர் நிச்சையிக்க இனிதாய் நடந்தது சந்திரன் – ஆனந்தி திருமணம்.

5 வருடங்களுக்கு பிறகு..

சந்திரன், ‘அது எப்படி ஆனந்தி ஒரு பிள்ள பெத்தும் இன்னும் அழகாவே இருக்க? உன்ன எல்லாம் ஒரு பிள்ளைக்கு அம்மான்னா யாரும் நம்ப மாட்டாங்க. அவ்ளோ அழகா இருக்க!’என்றார் கிறக்கமாக.

ஆனந்தி, ‘அட போங்கங்க! உங்களுக்கு வேற வேலையே இல்ல எப்போ பாரு இதயே சொல்லிகிட்டு.’ என்று செல்லமாக சினுங்கியவர், ‘நாளைக்கு பாப்பாக்கு 4வது பிறந்தநாள். சும்மா எல்லாரையும் கூப்பிட்டு கேக் வெட்டி கொண்டாடலாம். உங்க பிரண்ட்ஸ் அண்ட் கொலீக்ஸ் கூட கூப்பிடுங்களேன். நம்ம வீட்டுல get together மாதிரி கொண்டாடுவோம். சொந்தகாரங்களையும் பார்த்த மாதிரி இருக்கும்.’ என்று தன் ஆசையை பகிர்ந்தார்.

சந்திரனோ சற்று சிந்தித்து, ‘உனக்காக ஒகே! ஆனா ரொம்ப செலவு இழுத்து வச்சிரகூடாது.’ என்று நிபந்தனையுடன் சம்மதித்தார்.

மறுநாள் பார்ட்டி இனிதே நடக்க, சந்திரனின் நண்பர்கள் ஒன்றாக அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

நண்பர்களில் ஒருவர், ‘ஆனாலும் உன் மனைவி செம்ம அழகு தான் போ! அதான் பார்த்ததும் ஒகே சொல்லிட்ட இல்லயா?’ என்று கிண்டல் செய்தார். மற்றவர்களிம் அவருடன் சேர்ந்து சந்திரனை விளையாட்டாய் கிண்டல் செய்ய, அதில் சற்று பொறாமையும் எட்டி பார்த்தாக சந்திரன் நினைத்துக் கொண்டார்.

சில நாட்கள் கழித்து ஒரு குடும்ப விழாவில் சந்திரன் தன் பங்காளிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர், ‘என்ன இருந்தாலும் நம்ம சந்திரன் பொண்டாட்டி அழகு நம்ம பொண்டாட்டிகளுக்கு கிடையாது. என்னதான் ஒன்னு இருந்தா இன்னொன்னு இருக்காதுன்னு சொன்னாலும் சந்திரன் பொண்டாட்டி அழகுக்கு ஏத்தமாதிரி அடக்கமான அமைதியான பொண்ணு தான்!’ என்று பாராட்டி பேசினாலும் இதிலும் பொறாமை இருந்ததாகவே சந்திரனுக்கு தோன்றியது.

மற்றவர்களின் பொறாமை சந்திரனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது.

பின் ஒரு நாள்..

ஆனந்தி, ‘என்னங்க, இந்த ஃபேஸ் கீரிம் எப்படி இருக்கு. பக்கத்து வீட்டு கிரிஜா அக்கா சஜெஸ்ட் பண்ணாங்க. என் ஃபேஸ்க்கு நல்லா இருக்கா?’ என்று ஆவலுடன் கேக்க, ‘உன் ஃபேஸ் ரொம்ப அழகா இருக்கு. பார்க்கிறவன் எல்லாம் என் கிட்ட சொல்றான்’ என்று சோகமாக சென்னார் சந்திரன்.

ஆனந்தி, ‘என்னங்க ஆச்சு ஏன் சோகமா இருக்கீங்க. எதுனாலும் சொல்லுங்க நாம சமாளிச்சிக்கலாம்.’ என்று ஆறுதலாக கூற, ‘நீ உன் ஃபேஸ்ஸ கோரமாக்கிக்கிறியா எல்லாரும் உன் ஃபேஸ்ஸ பார்த்து அழகா இருக்கன்னு சொல்லிட்டே இருக்காங்க! நான் உனக்கு மேட்ச் இல்லயோன்னு இப்போ எல்லாம் எனக்கு தோண ஆரம்பிச்சிருச்சு. நீ உன் முகத்தை கோரமாக்கிக்கிட்டா உன்ன யாரும் பார்க்க மாட்டாங்கள்ள அதான்.’ என்றார் ஒரு வேகத்தில். அதை கேட்ட ஆனந்தி அதிர்ந்தாலும் சமாளித்து கொண்டு ‘இந்த உலகத்துல யார் என்னை அழகா இருக்கேன்னு சொன்னாலும் எனக்கு கவலை இல்ல. எனக்கு நீங்க தான் முக்கியம். எனக்கு பெஸ்ட் மேட்ச் நீங்க மட்டும் தான்’ என்று சந்திரனை அமைதியாக்கினார்.

அதன் பின் சந்திரனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஆனந்தியை பார்க்கும் போது எல்லாம் தன்னை விட மனைவி அழகு என்பது அவருக்கு மன அழுத்தத்தை கொடுக்க, அவருடன் பேசுவதை கூட குறைத்துக்கொண்டார். இதனால் சோகமான ஆனந்தி கணவனை சமாதானம் செய்ய முடியாமல் திணறினார்.

ஒரு கட்டத்தில் ஆனந்தி, ‘அவர் ஒன்னும் என்ன சாகவோ இல்ல என்ன விட்டு பிரிந்து போகவோ செல்லவில்லையே. என் அழகுதான அவரை தொந்தரவு செய்யுது. மத்தபடி அவரும் என்ன ரொம்பவே காதலிக்கதான செய்றாரு. ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் பண்ணி முகத்தை கோரமாக்கிட்டா எப்பவும் போல என்கூட பழகுவாரு தான. என் மேலயும் குழந்தை மேலயும் உயிரையே வச்சிருக்க என் கணவருக்கு இத கூட செய்ய மாட்டேனா?’ என்று யோசித்து, அந்த விபரீத முடிவை எடுத்தார்.

இன்று..

ஆனந்தி, ‘ஹப்பா அவர் ஆபிஸ் போட்டாரு. பாப்பாவும் ஸ்கூல் போய்ட்டா. இப்போ எப்படி முகத்தை கோரமாக்குறது?’ என்று  சிந்தித்த ஆனந்தியின் கண்ணில் பட்டது அந்த மண்ணெண்ணெய் கேண். ‘ஆஹா இத லைட்டா முகத்துல ஊற்றி தீ வைத்தால் சேதாரமும் ரொம்ப ஆகாது. முகமும் அசிங்கமாய்டும்.’ என்று முகத்தில் மண்ணெண்ணெய்யை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார்.

கிரிஜா, ‘என்ன ஒரு மாதிரி வித்தியாசமா ஸ்மெல் வருதே!’ என்று யோசித்து கொண்டே பக்கத்து வீட்டிற்கு சென்று பார்க்க அங்கு, ஆனந்தி தீக்கு இரையாகிக் கொண்டிருந்தார். ‘ஐயோ யாராவது வாங்களேன்! ஆனந்தி தனக்கு தானே நெருப்பு வச்சிகிட்டா’ என்று அருகில் இருந்தவரை கத்தி அழைக்க, மற்றது எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து.

ஆனந்தியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த ஆனந்தியை கண்ட அவர் தாய் பேச்சியம்மாள், ‘ஏண்டி இப்படி பண்ண? அப்படி என்ன பிரச்சனை உனக்கு?’ என்று கதற, ‘அவருக்கு நான் அழகா இருக்கது பிடிக்கலம்மா. அன்னைக்கு உன் முகத்த கோரமாக்கிட்ட உன்ன யாரும் பார்க்க மாட்டங்கள்லன்னு சொன்னவரு, அடுத்த நாள்ல இருந்து என் முகத்த பாக்குறத கூட நிறுத்திட்டாரு. அவருக்காக தான் நான் இது பண்ணேன். இப்படி ஆகும்ன்னு நினைக்கலம்மா.’ என்றார் கவலையாக.

என்னதான் மருத்துவர்கள் போராடினாலும் அவர்களால் ஆனந்தியை காப்பாற்ற முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.

இப்பொழுது தன் மகள் இறப்பிற்கு காரணமான சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தனது ஊர்க்கு சொந்தமான காவல் நிலையத்தை நோக்கி தனது பேத்தியுடன் சென்று கொண்டிருக்கிறார் பேச்சியம்மாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *