Loading

 

 

யாமினி வேலையில் சேர்ந்து இரண்டாம் நாள் ஆராதனாவின் கேபினுக்கு வந்தாள்.

“வாங்க.. என்ன விசயம்?”

“என்ன யாமினி னு கூப்பிட்டா போதும் னு சொன்னேன் ல?”

“இட்ஸ் ஓகே.. எதுக்கு வந்தீங்க?”

“சும்மா.. இப்போ ஃப்ரீ டைம் தான. அதான் உன் கிட்ட பேசலாம் னு வந்தான்”

“பட் எனக்கு வேலை இருக்கே”

ஆராதனாவிற்கு அவளிடம் பேச விருப்பம் இல்லை. யாமினி ஆராதனாவை விட இரண்டு வயது பெரியவள். யுவன்,ஆரா, யாமினி மூவரும் ஒரே பள்ளியில் தான் படித்தனர். எப்போதும் யுவனிடம் ஆராதனா பேசும் போது இடையில் வந்து பேசி எரிச்சலை கிளப்புவாள்.

யுவன் சென்ற பிறகு இவளின் தொல்லையும் விட்டு விட்டது. அதோடு மறந்து விட்டாள். இப்போது மீண்டும் உறவை புதுப்பிக்க அவளுக்கு விருப்பம் இல்லை.

“ஃப்ரீ டைம்லயும் வொர்க் பண்ணனும் னு என்ன இருக்கு ஆராதனா… ஆமா உனக்கும் யுவாக்கும் ஆகாதே. நீ எப்படி இங்க?”

“நாங்க இன்னும் ஸ்கூல்‌ பசங்க இல்ல.” என்று பட்டென கூறினாள் ஆராதனா.

அவளுடைய நண்பர்களையே இவர்கள் பிரச்சனைக்கு இடையில் வர விட மாட்டாள். இவள் யார் கேள்வி கேட்க? என்று கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“ஓ… இப்போ சமாதானம் ஆகியாச்சா… அப்போ சரி… எங்க இங்கயும் உங்கள சமாதானம் பண்ணுறதே என் வேலையா போயிடுமோ னு நினைச்சேன்”

“எங்க பேரண்ட்ஸே இதுல வர மாட்டாங்க. நீங்க எங்களுக்கு பஞ்சாயத்து பண்ண போறிங்களா?”

“ஸ்கூல்ல அப்படி தான நடக்கும்…”

“அப்படி எதுவும் எனக்கு நியாபகம் இல்லையே”

“என்ன ஆராதனா இப்படி சொல்லிட்ட… நான் வந்து பேசி யுவன கூட்டிட்டு போகலனா உங்க பிரச்சனை முடியவே முடியாது”

“ஓ.. அப்போ நீங்க இல்லாத நேரம் நாங்க சண்டை போட்டப்போ?”

“அது…”

“இப்ப வர வார்த்தைலயாவது மரியாதை இருக்கு. அதையும் கெடுத்துக்காதீங்க. எனக்கும் அவனுக்கும் நடுவுல வந்தா யாரா இருந்தாலும் எதாவது பேசிடுவேன். இப்போ ஃப்ரீ டைம் முடிஞ்சது. வொர்க் இருக்கு”

ஆராதனா கோபத்துடன் கூறி விட்டு வாசல் கதவை பார்த்தாள். யாமினிக்கு இது தான் பிடிக்காது. அதிக தைரியம் படைத்த ஆராதனா அவள் கண்ணுக்கு திமிர்‌ பிடித்தவளாக தான் தெரிவாள். அதை எப்படியாவது அடக்கி விட வேண்டும் என்று நினைப்புடன் தான் பேச வந்து வாங்கி கட்டிக் கொண்டாள்.

“எப்போவும் இந்த திமிர் மட்டும் உன் கிட்ட இருந்து போகாது ஆராதனா” என்று கூறி விட்டு யாமினி அங்கிருந்து சென்று விட்டாள்.

அடுத்து யாமினி என்ன பேசினாலும் ஆராதனா நின்று பதில் கூற மாட்டாள். உன் போக்கில் பேசிக் கொண்டே இரு என்று சென்று விடுவாள்.

எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்வு சென்று கொண்டிருக்க அன்று விடுமுறை நாள். ஞாயிறு அன்று ஆராதனா தன் பள்ளி தோழிகளை எல்லாம் சந்திக்க கிளம்பினாள்.

“ஃப்ரண்ட்ஸ பார்த்துட்டு நைட் தான் வருவேன். அது வர பொறுமையா இருங்க.‌ சும்மா டென்சன் ஆகாதீங்க” என்று கூறி விட்டு ஆராதனா வெளியே வர “கார எடுத்துட்டு போ” என்றார் பத்மினி.

“வேணாம். நான் சோடா புட்டி சோப்பு கூட ஸ்கூட்டில போறேன். நானும் அவளும் சேர்ந்தே வந்துடுறோம். பை”

ஆராதனா வேகமாக நடந்து அடுத்த தெருவில் இருந்த தோழியின் வீட்டிற்கு சென்றாள். ஆராதனா அந்த பக்கம் சென்றதுமே யுவன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டான்.

“இன்னைக்கு கூட என்ன வேலை உனக்கு?” என்று பத்மினி கேட்க “அத ஏன் கேட்குறீங்க… ஒரு சில அரை வேக்காடுங்க பண்ணி வச்ச வேலை. இப்போ தான் பார்த்து சரி பண்ணிட்டு வரேன்” என்றான்.

“சரி சரி”

“நீங்க ஏன் வாசல்ல நிக்குறீங்க?”

“இப்ப தான் ஆரா ஃப்ரண்ட பார்க்க கிளம்பி போனா.. அதான் பார்த்துட்டு இருந்தேன்”

“‘கார் இங்க நிக்குது?”

“ஃப்ரண்டோட போறாளாம்”

யுவன் வீட்டுக்குள் சென்று குளித்து வேறு உடைக்கு மாறி விட்டான். அர்ச்சனாவும் அவனும் ஒன்றாக தொலைகாட்சியை பார்த்துக் கொண்டே காய்கறியை நறுக்கிக் கொண்டிருந்தனர்.

அர்ச்சனா சமைக்க செல்ல அவரின் போன் இசைத்தது. யுவன் பத்மினியின் பெயரை பார்த்து விட்டு எடுத்து காதில் வைத்தான்.

“என்ன அத்த?”

“யுவா.. அர்ச்சனா எங்க?”

“கிட்சன்ல”

“உடனே இங்க வர சொல்லு”

“என்னாச்சு?”

“நீயும் வா”

பத்மினி அழைப்பை துண்டித்து விட அர்ச்சனாவிடம் விசயத்தை கூறினான்.‌ சமையலை அப்படியே விட்டு விட்டு இருவரும் வந்து பார்க்க வீட்டில் வேறு ஒரு கார் புதிதாக நின்று இருந்தது. யோசனையுடன் இருவரும் உள்ளே நுழைந்தனர்.

வீட்டில் பத்மினியை தவிர மேலும் நான்கு பேர் அமர்ந்து இருந்தனர். யுவனுக்கு யாரென்று தெரியவில்லை என்றாலும் அர்ச்சனா கண்டு பிடித்து விட்டார். ரகுநாதனுக்கு சித்தப்பாவின் மகளும் அவரது குடும்பமும்.

பொதுவாக பேசி விட்டு அர்ச்சனாவும் பத்மினியும் எல்லோருக்கும் காபி போட போக “நானும் வரேன் அண்ணி.. நம்ம வீடு… நான் விருந்தாளி மாதிரி உட்காரலாமா?” என்று கூறி ரகுநாதனின் தங்கை நாயகியும் எழுந்து வந்தார்.

அர்ச்சனா எதுவும் பேசவில்லை. அமைதியாக வேலை பார்த்தார். எல்லோருக்கும் காபியை கொடுத்ததும் “ஆராதனா எங்க அண்ணி?” என்று விசாரித்தனர்.

ஆராதனாவை கேட்டதும் யுவனின் பார்வை கூர்மையானது.

“அவ ஃப்ரண்ட பார்க்க போயிருக்கா”

“அண்ணனையும் காணலையே”

“அவர் பிஸ்னஸ் விசயமா வெளிய போயிருக்கார்”

“ஞாயித்துக்கிழம கூட ஓயாம உழைக்கிறார்.” – நாயகி

“எல்லாம் அவரோட பொண்ணுக்கு தான” என்று நாயகியின் கணவர் கூற யுவனின் பார்வை எல்லோரையும் ஆராய ஆரம்பித்து விட்டது.

“இது வர என்ன விசயம் னு சொல்லவே இல்லையே” என்று பத்மினி கேட்க “நம்ம வீட்டுக்கு வர காரணமா வேணும்? ஆனா இந்த தடவ காரணத்தோட தான் வந்து இருக்கோம். அது நம்ம ஆரா வ என் மகன் பவித்ரனுக்கு கட்டி வைக்கனும் னு ரொம்ப நாள் ஆசை. அத தான் உங்க கிட்டயும் அண்ணன் கிட்டையும் கேட்ரலாம் னு வந்தேன்” என்று விசயத்தை கூறி விட்டார்.

யுவனுக்கு சட்டென கோபம் வந்து விட்டது. யாரை யாருக்கு பெண் கேட்பது? அங்கிருப்பவர்களை உடனே துரத்தி விட மனம் துடித்தது.

“இதுல நாம பேச என்ன இருக்கு… ஆராவுக்கும் அவ அப்பாவுக்கும் தான் பிடிக்கனும்” என்று பத்மினி நழுவ “ஆராவ கூப்பிடுங்க.. என் பிள்ளைய வேணாம் னு சொல்லிடுவாளா என்ன? கூப்பிடுங்க கேட்போம்” என்றார் நாயகி.

“அவள போய் கூட்டிட்டு வா யுவா” என்று அர்ச்சனா கூறி விட்டார். யுவன் போவது நாயகிக்கு பிடிக்கவில்லை. உடனே “என் ரெண்டாவது மகன கூட்டிட்டு போ தம்பி. அவனும் ஆராவ பார்த்து ரொம்ப நாளாச்சு னு சொல்லிட்டு இருக்கான்” என்று கூறினார்.

எழுந்து நின்று சட்டையை சரி செய்த யுவன் “பைக்ல ரெண்டு பேரு தான் உட்கார முடியும். இவர கூட்டிட்டு போனா ஆராவ எப்படி கூட்டிட்டு வரது?” என்று கேட்டான்.

நாயகி பதில் சொல்லும் முன் “வரேன் மா” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான். பைக்கில் அவன் கிளம்பி விட பத்மினிக்கு நிம்மதியாக இருந்தது. பிறகு கடனே என்று வந்தவர்களிடம் பேச ஆரம்பித்தார்.

யுவன் கிளம்பும் போதே ஆராதனா எங்கிருக்கிறாள் என்று கேட்டுக் கொண்டான். ஆராதனாவும் அவளது தோழிகளும் ஒரு ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட வந்திருந்தனர். எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின் யுவனின் குறுஞ்செய்தி வந்தது. ஆராதனா அதை படிக்க “என்ன அது?” என்று கேட்டனர்.

“யுவன். என்ன பிக் அப் பண்ண வந்துருக்கான். அவசரமா அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்களாம்” என்று கூற எல்லோரும் எழுந்து விட்டனர்.

“என்னது சீனியர் வந்து இருக்காரா?”

“எங்க எங்க?”

“இடத்த சொல்லு. உடனே பார்க்கனும்”

“அலையாதிங்கடி… சீனியர எல்லாரும் ஒன்னா போய் பார்ப்போம். நீ எங்க இருக்காரு னு கேட்டு சொல்லு ஆரா”

ஆளாளுக்கு பேச ஆராதனா எல்லோரையும் பார்த்து விட்டு “முதல்ல பில் கட்ட காச எடுத்து வைங்க” என்றாள்.

எல்லோரும் அவர்கள் பர்ஸை போட்டு விட்டனர்.

“இதுல இருக்கு. எடுத்து கட்டிடு. எங்க இருக்கார் னு மட்டும் சொல்லு”

“பார்க்கிங்” என்று கூறி முடித்ததும் மொத்தமாக பறந்து விட்டனர்.

ஆராதனா எல்லோருடைய பணத்தையும் எடுத்து சரி சமமாக பில்லை செலுத்தி விட்டு பொறுமையாக வெளியே வந்தாள். அவளது தோழிகள் எல்லோரும் யுவனை சுற்றி நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

“ஆரா எங்க?” என்று அவன் கேட்க “பில்ல கட்டிட்டு இதோ வந்துட்டா” என்று கூறினர்.

“நீயா பில் கட்டுன?” என்று யுவன் கேட்க “ரொம்ப அக்கறை படாதீங்க சீனியர். எங்க சேர்ஸ் எல்லாம் கொடுத்துட்டு தான் வந்தோம்” என்றாள் ஒருத்தி.

“அப்போ சரி”

“இந்தாங்கடி.. உங்க எல்லாரு பர்ஸும் இதுல இருக்கு எடுத்துக்கோங்க” என்று ஆராதனா ஒரு பையை கொடுத்தாள்.

“ஓகே சகோதரிஸ். முக்கியமான வேலை இருக்கு. இன்னொரு நாள் பார்க்கலாம்” என்று கூறி விட்டு பைக்கில் ஏறி அமர்ந்தான்.

சுற்றியிருந்த அத்தனை பேரும் வாயை பிளந்தனர். ஆராதனாவும் அதிர்ச்சியாக பார்த்தாள். ஏனென்றால் யுவன் பைக்கின் பின்னால் யாரையும் அமர விட மாட்டான். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. யாரையும் விட மாட்டான்.

இன்று ஆராதனாவை அமரச்சொல்லவும் அதிர்ச்சியடைந்து விட்டனர். ஆராதனா அவனை பார்த்து முழித்துக் கொண்டு நிற்க “என்ன? ஏறு” என்றான். இரண்டு பக்கமும் காலை போட்டு அமர்ந்து கொள்ள எல்லாருக்கும் கையாட்டி விட்டு கிளம்பி விட்டனர்.

எல்லாரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க ஆராதனா குழப்பத்துடன் அமர்ந்து இருந்தாள்.

“எதுக்கு அவசரமா கூட்டிட்டு போற?”

“அவசரமா? நான் வீட்ட விட்டு உன்ன கூப்பிட கிளம்பி ஒரு மணி நேரம் ஆகுது”

“அவ்வளவு நேரம் என்ன பண்ண?”

“நீ சாப்ட போறேன் னு சொன்னியா… அதான் சாப்ட்டு முடி னு வெயிட் பண்ணேன்”

“நீ சாப்டியா?”

“இல்ல”

“வந்துருக்கலாம்ல. சேர்ந்து சாப்டுருக்கலாம்”

“பசிக்கல”

“சரி.. நைட் தான் வருவேன் னு சொல்லிட்டு தான வந்தேன். எதுக்கு இப்போ நடுவுல வந்து கூட்டிட்டு போற?”

“நீயே வந்து பாரு…”

“நீ சொல்ல மாட்டியா?”

“நான் சொன்னா அது வேற எஃபக்ட். அங்க வந்து பாரு. புரியும்”

யுவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ஆராதனாவும் யோசித்துக் கொண்டே வந்தாள். வீட்டு வாசலில் நின்று இருந்த காரை பார்த்ததும் யாரோ வந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டாள்.

உள்ளே சென்று நாயகியை பார்த்ததும் ‘இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்தான்?’ என்று யோசித்துக் கொண்டே “வாங்க அத்த. வாங்க மாமா” என்று வரவேற்றாள்.

அவர்களும் நலம் விசாரித்து விட்டு “வந்து உட்கார் ஆரா” என்று நாயகி அழைத்தார். எதேச்சையாக யுவனை பார்த்தவள் அவன் கண்ணில் இருந்த எச்சரிக்கை உணர்வை கண்டு கொண்டாள்.

“இருக்கட்டும் அத்த. இப்ப தான் வெளிய இருந்து வந்தேன். உடம்பெல்லாம் கசகச னு இருக்கு. நான் ஃப்ரஸ்ஸாகிட்டு வரேன். நீங்க பேசிட்டு இருங்க” என்று கூறி விட்டு மாடிப்படி பக்கம் சென்றாள்.

படியேறும் போது யுவனுக்கு போனை காட்டி விட்டு மேலே சென்று விட்டாள். அர்ச்சனா அங்கு இல்லை. இருந்தால் அவரை பிடித்து விசயத்தை கேட்டு விடலாம். அம்மா வேறு எதோ பிடிக்காததை செய்வது போல் அமர்ந்து இருந்தார். இருக்கும் ஒரே வழி யுவன் தான். அவனிடமே கேட்டு விடுவோம் என்று முடிவுக்கு வந்தாள்.

மேலே சென்று ஆராதனா அழைக்க யுவன் போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

“சொல்லு”

“என்னடா நடக்குது இங்க?”

“இன்னும் தெரியலையா? உன்ன பொண்ணு கேட்டு வந்து இருக்காங்க”

“என்னது? யார கேட்டு கிளம்பி வந்தாங்க?”

“யாரையும் கேட்கல. மாமா வர இன்னும் அரை மணி நேரம் ஆகும். அத்த வேற வந்தவங்கள திட்ட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க”

“நான் பேசிக்குறேன்”

“வா வா.. வந்து பேசு”

“அத்த எங்க?”

“அம்மா ரெண்டு வீட்டு சமையல் வேலையும் ஒன்னா முடிச்சுட்டு கிட்சன்க்கு உள்ளையே நிக்கிறாங்க”

“என் அத்த இவங்களுக்கு சமைச்சு போடனுமா? இரு இன்னைக்கு இருக்கு” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு முகத்தை கழுவினாள்.

பத்து நிமிடம் கழித்து கீழே இறங்கி வந்தாள். நேராக வந்தவள் அர்ச்சனாவுக்கும் யுவனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள்.

“அப்புறம் அத்த? என்ன திடீர் னு குடும்பமா வந்து இருக்கீங்க? பத்திரிக்கை எதுவும் வைக்க வந்துருக்கீங்களா?” என்று கேட்டாள்.

யுவனுக்கு கோபம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் புன்னகை வந்தது.

“பத்திரிக்கை தான.. நீ மனசு வச்சா அடிச்சரலாம்” என்று நாயகி கூற “எங்க கம்பெனி ஹேண்ட் பேக் பர்ஸ் தயாரிக்கிற கம்பெனி அத்த. இன்விடேஷன்க்கு ப்ரஸ்க்கு தான் போகனும். நான் எப்படி மனசு வைக்க?” என்று கேட்டு வைத்தாள்.

“நீ வச்சா நடக்கும் ஆரா… நீ ம்ம் னு ஒரு வார்த்தை சொல்லு..‌ என் மகனுக்கும் உனக்கும் உடனே கல்யாணத்த பேசிடுவோம்”

“அய்யோ அத்த.. இவன் என்ன விட மூணு வயசு சின்ன பையன்.. இவன எப்படி கல்யாணம் பண்ணுறது?”

“நான் பவித்ரன சொன்னேன்”

“என்னது? இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?”

ஆராதனா கேட்ட கேள்வியில் யுவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது. அதை அடக்க அவன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். பத்மினிக்கு சிரிப்பு வந்த போதும் “ஆரா” என்று பொய்யாக அதட்டி வைத்தார்.

“இல்லமா.. இவருக்கு ரெண்டு பிள்ள இருக்கு னு சொன்ன மாதிரி இருந்துச்சே”

“யாரு டி சொன்னா? அதெல்லாம் இல்ல”

“ஓஹோ… சரி கூடிய சீக்கிரம் நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க”

“ஏன் நீ பண்ணிக்குறது” – நாயகி

“காமெடி பண்ணாதீங்க அத்த”

“ஏன் என் மகனுக்கு என்ன குறச்சல்?”

“உங்க மகன நான் ஏன் குறை சொல்ல போறேன்.”

“அப்புறம் என்ன?”

“எனக்கு என் பிள்ளைங்கள நினைச்சு தான் கவல”

“என்னது?” என்று நாயகி அதிர யுவனால் சிரிப்பை கட்டுப் படுத்த முடியவில்லை.

“ஆமா அத்த.. இப்படி சொந்தத்துல கல்யாணம் பண்ணா பிறக்குற பிள்ள நல்லா பிறக்காது. தெரியாதா?”

“அதெல்லாம் சும்மா ஆரா”

“சும்மாவா? நான் காட்டட்டுமா அந்த மாதிரி கல்யாணம் பண்ணி பிறந்த பிள்ளங்கள?”

“அடுத்தவங்களுக்கு நடக்குது னா நமக்கும் நடக்கனுமா ஆரா?” என்று நாயகியின் கணவர் கேட்க “அவங்களுக்கு தக்காளி சட்னியும் நமக்கு ரத்தமும் ஓடல மாமா. எல்லாருக்குமே ரத்தம் தான் ஓடுது. அதுனால இந்த பேச்ச எல்லாம் விட்டுருங்க” என்று திட்டவட்டமாக கூறினாள்.

அந்த பவித்ரனின் முகம் சுருங்கிப்போக எல்லோரும் என்ன பேசுவது என்று தெரியாமல் யோசித்தனர். அந்நேரம் ரகுநாதனும் வந்து விட்டார்.

நாயகி உடனே விசயத்தை அண்ணன் காதில் மெதுவாக போட்டார். அவரை பார்த்து புன்னகைத்த ரகுநாதன் “நீ என்ன மா நினைக்கிற?” என்று ஆராதனாவிடம் கேட்டார். ஆராதனா முதலில் சொன்ன பதிலையே இப்போதும் கூறினாள்.

“அவ்வளவு தான் பதில் நாயகி”

“என்னண்ணா அவ தான் சின்ன பிள்ள. அப்படி பேசுறா. நீங்களும் அத கேட்டுட்டு இருக்கீங்க?”

“அவ சின்ன பிள்ளைனா அவளுக்கு எதுக்கு கல்யாணம்?‌ கல்யாண வயசு வந்துடுச்சு னு தான இப்போ பேச வந்துருக்க? “

“இல்ல ண்ணா….”

“நான் சொல்லுறத கேளு மா. நீ என் கூட பிறந்த தங்கச்சி இல்லனாலும் எனக்கு தங்கச்சி தான். ரத்த சொந்தம் தான். அத மனசுல வச்சு பார்க்கும் போது ஆரா சொல்லுறது தான் சரி. நம்ம பண்ணுற தப்புக்கு வரப் போற சந்ததி பாதிக்க கூடாது பாரு”

அடுத்து நாயகி எவ்வளவு பேசியும் எடுபடவில்லை. வந்ததற்கு நன்றாக சாப்பிட வைத்து அனுப்பி வைத்தனர்.

“ஸ்ஸப்பா… இவங்களால என் அவுட்டிங் ப்ளான் வீணா போச்சு” என்று ஆராதனா சலித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்