ஆராதனா ஒவ்வொன்றாக கூற யுவனும் எல்லாவற்றையும் செய்து முடித்தான். அவர்கள் வேலையை முடித்ததும் அர்ச்சனா கேசரியை கொண்டு வந்தார். அதே நேரம் பத்மினியும் பாயாசம் செய்து முடித்து விட்டதாக அழைத்தார். அதையும் இங்கே எடுத்து வர சொல்லி நான்கு பேரும் ஒன்றாக சாப்பிட்டனர்.
“அத்த.. ம்மா.. இது மட்டும் போதாது நாளைக்கு விருந்து வைக்குறோம் அசத்துரோம்” என்று ஆராதனா கூற “பண்ணுவோம்… முதல்ல உனக்கு வேலை தர யுவன் ரெடியா னு கேளு?” என்று பத்மினி கூறினார்.
ஆராதனா யுவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். பாயசத்தை முழுமையாக குடித்து முடித்தவன் “என் பேச்சுல எந்த மாற்றமும் இல்ல. பட் ஒரு ரெண்டு நாள் வெயிட் பண்ண முடியுமா? கொஞ்சம் பிரிப்பேர் பண்ணனும்” என்று கேட்டான்.
“என்னது?”
“நீ அங்க வந்ததும் சொல்லுறேன்.”
“ஓகே.. நோ ப்ராப்ளம்.. நானும் ஆபிஸ் போறதுக்கு ஏத்த போல ட்ரஸ் எல்லாம் வாங்கனும்.”
“சரி.. இப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. முடிச்சுட்டு நேரா ஆபிஸ் போயிடுவேன். நைட் டின்னருக்கு வரேன்” என்று கூறியவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.
“ஆமா… நாளைக்கு என் கூட நீங்க ரெண்டு பேரும் வரனும். ரெடியா இருங்க” என்று ஆராதனா கூற “நாங்களா?” என்று அர்ச்சனா இழுத்தார்.
“ஏன்? வர மாட்டீங்களா?”
“நாளைக்கு ஒரு வளைகாப்பு இருக்கு ஆரா… நீ உன் ஃப்ரண்ட்ஸ கூட்டிட்டு போயேன்” என்று பத்மினி கூற “சரி.. எதுங்க ஃப்ரியா இருக்குங்க னு பார்த்துட்டு கூட்டிட்டு போறேன்” என்று உடனே ஒத்துக் கொண்டாள்.
அன்றைய நாள் சந்தோசத்தில் கடந்து விட அடுத்த நாள் மதிய உணவு விருந்து போல் சமைத்து விட்டனர் அர்ச்சனாவும் பத்மினியும். இரண்டு குடும்பமும் யுவனின் வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“இந்த வேலைக்கு நீ இவ்வளவு பண்ண தேவையில்ல மா.. உன் கம்பெனி நீ எப்ப வேணா வரலாம்..” என்று சத்தியன் கூற “நோ மாமா… சவால் ல ஜெயிச்சு வந்தா தான் அந்த வேலையோட மதிப்பு தெரியும். இல்லனா வேலைய நானும் கத்துக்க முடியாது.” என்று ஆராதனா திட்டவட்டமாக கூறினாள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த யுவனின் முகத்தில் புன்னகை வந்தது.
“அது மட்டும் இல்லபா… இவ வந்தா அங்க யாரும் எதுவும் சொல்ல கூடாது… பேரண்ட்ஸ் னால தகுதியே இல்லாம வந்துட்டா னு சொல்லிட கூடாது. இவ தகுதிய ப்ருஃப் பண்ணனும். நம்ம கம்பெனில வேலை பார்க்குற ஒவ்வொருத்தரும் எவ்வளவு பெஸ்ட்டு னு பார்க்க தான செய்யுறோம். இவளுக்கு மட்டும் சும்மா கொடுத்துட்டோம் னு பேச்சு வரவே கூடாது. அதுக்கு நான் அளோவ் பண்ணவே மாட்டேன்”
யுவன் கூறவும் ஆராதனா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
“வாழ்க்கையில ஃபர்ஸ்ட் டைம் நான் அக்சப்ட் பண்ணுற போல ஒன்னு சொல்லி இருக்க டா… உன்ன பாராட்டி… இந்த லெக் பீஸ நானே சாப்டுறேன் சரியா?” என்று ஆராதனா எடுத்து சாப்பிட யுவன் தலையிலடித்துக் கொண்டான்.
“வேணும் னா நேரா கேளுடி… இப்படி சுத்தி வளைக்காத”
“நேரா கேட்டா என்ன பெத்த ஜீவன் அடிக்கும். நீ வாங்குவியா?” என்று வாயில் திணித்த உணவோடு கூற பத்மினி முறைத்து பார்த்தார்.
பேச்சும் சிரிப்புமாக சாப்பிட்டு முடித்தனர். பெரியவர்கள் முதலிலேயே சாப்பிட்டு விட்ட கிளம்பி விட்டனர். வெளியே யாரோ கூப்பிட பத்மினியும் அர்ச்சனாவும் அதை பார்க்க சென்று விட்டனர்.
“ஆமா… நீ அவ்வளவு நல்லவன் இல்லையே… ஆபிஸ்ல எனக்கு என்ன ஆப்பு ரெடி பண்ணி இருக்க?” என்று விரலில் இருந்த உணவை சப்பிக் கொண்டே கேட்டாள் ஆராதனா.
“ஹா ஹா… பரவாயில்லயே.. உனக்கு ஒரு ஆப்பு இருக்கும் னு தெரிஞ்சுகிட்டியே… வந்து நீயே பாரு” என்றவன் தட்டை எடுத்துக் கொண்டு எழுந்து விட்டான்.
“எதாச்சும் பெருசா இருந்துச்சு மகனே… உன் மரியாதை அதே இடத்துல போயிடும் நியாபகம் வச்சுக்க” என்று கூறிக் கொண்டே ஆராதனா அவன் பின்னால் வந்தாள்.
சாப்பிட்ட தட்டை கழுவிக் கொண்டே “இப்ப மட்டும் டன் கணக்குல மரியாதை கொடுக்குற பாரு.. போடி காமெடி பண்ணிக்கிட்டு” என்று கூறினான்.
“பரவாயில்ல… நீ சாப்ட தட்ட நீயே கழுவுற நல்ல பழக்கம் எல்லாம் இருக்கா உனக்கு?” என்று ஆராதனா கிண்டலாக கேட்க “உன்ன வளர்த்த அதே ரெண்டு பேரு தான் என்னையும் வளர்த்தாங்க.” என்று கூறியவன் தண்ணீரை பிடித்து அவள் மீது தெளித்து விட்டு வெளியே ஓடி விட்டான்.
“டேய்… பிசாசு” என்று திட்டயவள் அவசரமாக தட்டை கழுவி விட்டு வெளியே வந்தாள்.
பத்மினியும் அர்ச்சனாவும் இருக்க அவளால் கையில் வைத்திருந்த தண்ணீரை அவன் மேல் ஊற்ற முடியவில்லை. அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.
“யுவா வேலை எதுவும் இருக்கா?” என்று அர்ச்சனா கேட்க “இல்லையே.. ஆறு மணிக்கு தான் ஒரு மீட்டிங் இருக்கு.. இப்போ முக்கியமா எதுவும் இல்ல. ஏன்?” என்று கேட்டான்.
“ஆரா சாப்பிங் போகனுமாம்… கூட்டிட்டு போ”
“என்னது ? இவன் கூடயா?” – ஆராதனா
“ம்மா.. எனக்கு என்ன தெரியும் பொண்ணுங்க ட்ரஸ் பத்தி? அவ டிஸ்கஸ் பண்ண நான் செட் ஆக மாட்டேன். நீங்க போங்க” – யுவன்.
“டேய்.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரு வளைகாப்பு பங்சன்க்கு போகனும் டா. நீ கூட்டிட்டு போனா தான் என்ன? ஆரா நீ உனக்கு தேவையானத எடு.. இவன் பில் கட்டுவான். ஓகே வா?”
“ம்மா….” என்று யுவன் அலற “ஐ… அப்படினா ஓகே… நான் பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்று ஆராதனா வெளியே ஓடினாள்.
“கம்பெனிக்கு போக சொல்லிட்டு காசயும் கொடு னு சொல்லுறீங்க… இதெல்லாம் டூ மச்சு” என்று யுவன் முறைக்க “நான் தான் அவளுக்கு வேலைக்கு போகும் போது எல்லாம் வாங்கி தரேன் னு சொல்லி இருந்தேன். வேணும் னா பில்ல கொண்டு வந்து கொடு. காச தரேன்” என்று அர்ச்சனா பதில் கூறினார்.
“அது என்னமோ தனியா வந்த காசு மாதரி பேசுறீங்க…? எல்லாம் ஒரு இடத்துல இருந்து தான் வருது…” என்று கூறி விட்டு யுவன் அறைக்குள் சென்றான்.
சில நிமிடங்களில் வெளியே செல்ல கிளம்பி வர ஆராதனாவும் வந்து சேர்ந்தாள். உடனே அங்கிருந்து கிளம்பினர்.
“ஆமா.. என்ன மாதிரி ட்ரஸ் எல்லாம் எடுக்க போற?”
“ஆபிஸ்க்கு ரெகுலரா போடுற போல தான் எடுக்கனும். முதல்ல இத மட்டும் எடுத்துட்டு வந்துடலாம் னு தான் நினைச்சேன். இப்போ பில் நீ கட்ட போறல.. சோ கொஞ்சம் பெருசா எதாச்சும் வாங்கிக்கனும்”
“கொழுப்பு தான் டி… “
“ஆமா.. பில் கட்ட காச எடுத்துட்டு வந்துட்டல?”
“இல்ல”
“நோ ப்ராப்ளம்.. காசுக்கு பதில உன்ன கொடுத்துட்டு நான் ட்ரஸ்ஸ வாங்கிட்டு வந்துடுறேன்”
யுவன் அவளை திரும்பி முறைத்து விட்டு மீண்டும் சாலையை பார்த்தான்.
“நெக்ஸ்ட் மன்த் என் ஃப்ரண்ட் க்கு மேரேஜ். சோ அதுக்கு போடுற போல ட்ரஸ் எடுக்கனும்.. அதுக்கடுத்து இன்னொருத்தியோட பர்த்டே வருது.. அதுக்கு போட்டுட்டு போக எடுக்கனும்… அடுத்து…”
“நிறுத்து தாயே… ஒரே நாள்ல என் பேங்க் பேலன்ஸ காலி பண்ணிடுவ போல?”
“அத பத்தி எனக்கு என்ன கவலை?” என்று தோளை குலுக்கினாள்.
“எல்லாத்தையும் இப்போவே எடுத்தா நெக்ஸ்ட் மன்த் பேஷன் மாறி இருக்கும் ஆரா”
“ஆமால… பரவாயில்ல டா… புத்திசாலி தனமா பேசி உன் காச காப்பாத்திக்குற பாரேன்… பொழச்சுக்குவ.. சரி கல்யாணத்துக்கு மட்டும் நாலு எடுத்துப்போம்”
யுவனின் இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.
“அடிப்பாவி… ஒரு ப்ளானோட தான் வர நீ? வா பார்த்துக்குறேன்” என்று கூறி விட்டு சாலையை பார்த்தான்.
இருவரும் முதலில் உடைகளை வாங்குவதற்கு சென்றனர். உள்ளே நுழைந்ததும் சேலைப்பகுதி தான் முதலில் வந்தது.
“சேலை வாங்க போறியா?”
“வாங்கலாமே.. கட்ட மாட்டேன். ஆனா காசு நீ தர்ரதால எத வேணா வாங்கலாம்”
சுற்றியும் பார்க்க ஒரு பொம்மை கட்டியிருந்த சேலை அவன் கண்ணில் பட்டது.
“இத எடு.. நல்லா இருக்கு”
“எனக்கு எல்லோ கலர் பிடிக்காது னு உனக்கு தெரியாதா?”
“இது எல்லோ இல்லடி. மாம்பழ கலர். வேணாம் னா விடு.. ஆமா உனக்கு என்ன கலர் பிடிக்கும்? பிங்க்கா?”
“அய்ய.. அதெல்லாம் பிடிக்காது “
“அப்போ ப்ளாக்கு?”
“அதுவும் இல்ல. வொயிட்.. ப்யூர் வொயிட்ல இருந்து எல்லா வொயிட்டயும் பிடிக்கும்”
“வித்தியாச பிறவி.. வா அதையே எடுப்போம்”
சேலைகளை விட்டு விட்டு சுடிதார் எடுக்கும் இடத்திற்கு சென்று விட்டனர். தேடி அலைந்து பல சுடிதார்களை எடுத்தாள். அவளுக்கு பிடித்த வெள்ளை நிறத்திலேயே உடைகள் எடுத்துக் கொண்டனர். இடையிடயே ஆராதனா யுவனிடம் எதாவது கேட்டாலும் அவளே எல்லாவற்றையும் தேர்வு செய்து முடித்தாள்.
கடைசியில் உள்ளாடைகள் எடுக்க அவள் சென்று விட யுவன் இது வரை வாங்கியதற்கு பில் வாங்க சென்று விட்டான். உள்ளாடைகளை வாங்கி வந்தவள் கேட்ட பணத்தை எந்த கேள்வியும் கேட்காமல் கொடுத்து விட்டான்.
ஆனால் மொத்தமாக பில்லை பார்த்தவன் “அடிப்பாவி… இவ்வளவு பணத்த ட்ரஸ்க்கு மட்டும் செலவு பண்ணி இருக்க?” என்று அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்து விட்டான்.
“இது கம்மி தான்… வா இத கார்ல வச்சுட்டு அடுத்த வேலைய பார்க்க போவோம்” என்று கூறி முன்னால் நடந்தாள்.
அடுத்து அவளுக்கு தேவையான ஒவ்வொன்றயும் பார்த்து பார்த்து வாங்கினாள். யுவனும் அவள் பின்னால் சுற்றிக் கொண்டே இருந்தான்.
எல்லாவற்றையும் வாங்கி முடிக்க மூன்று மணி நேரம் கடந்து விட்டது. அங்கிருந்த கேண்டினில் சிற்றுண்டி வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பினர்.
இருவரும் அருகிலேயே இருந்து சண்டை போடாத நேரம் என்றால் இது மட்டும் தான். ஆராதனா அவனை எதிரியாக பார்க்காமல் உடனிருக்கும் எதோ ஒரு நண்பனாக பார்த்தாள்.
அதனால் அதிகமாக சண்டை வரவில்லை. அலைந்து திரிந்ததில் சோர்வாக இருக்க காரில் ஏறி அமர்ந்ததும் இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டாள்.
“உனக்கு மீட்டிங் இருக்குல?”
“ஆமா”
“என்ன வீட்டுல விடுற வரை டைம் இருக்குமா?”
“வீட்டுல ஒரு ஃபைல் கூட எடுக்கனும்”
“ஓகே… அப்போ நான் தூங்குறேன். வீடு வந்ததும் எழுப்பி விட்ரு” என்று கூறி விட்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்.
வீட்டில் வந்து பார்த்தால் அர்ச்சனாவும் இல்லை. பத்மினியும் இல்லை. ஆராதனா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். இப்படியே இவளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு போக யுவனுக்கு மனம் இல்லை.
வீட்டை திறந்து விட்டு ஆராதனாவை எழுப்பி பார்த்தான். அவள் எழும் நிலையில் இல்லை. நன்றாக தூங்குபவளை எழுப்பி விடவும் மனம் வரவில்லை. கதவை திறந்தவன் அவளை தூக்கிக் கொண்டான்.
“ப்பாபா… பார்க்க ஒல்லியா இருந்துட்டு இவ்வளவு வெயிட்டா இருக்கா” என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே தூக்கிச் சென்றான்.
சோபாவில் படுக்க வைத்து விட்டு தன் லாப்டாப்பை எடுத்துக் கொண்டு வந்து முன்னால் அமர்ந்தான். அலுவலகம் சென்று செய்ய வேண்டிய வேலைகளை அதிலேயே பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அடுத்து ஒரு மணி நேரம் கடக்க பத்மினியும் அர்ச்சனாவும் வந்து விட்டனர். வாசலில் யுவனின் கார் நிற்பதை பார்த்து விட்டு சந்தேகத்துடன் உள்ளே வந்தனர்.
“என்ன யுவா ஆபிஸ்….” என்று கேட்டுக் கொண்டே வந்த பத்மினியை பார்த்து அவசரமாக உதட்டில் கை வைத்து “ஸ்ஸ்…” என்றான்.
இருவரும் கேள்வியாக பார்க்க “ஆரா தூங்குறா… எனக்கும் வேலை போயிட்டு இருக்கு” என்று கூறி விட்டு விட்ட வேலையை தொடர்ந்தான்.
சில நிமிடங்களில் அவனது வேலை முடிந்து விட்டது.
“என்ன இவ இப்படி தூங்குறா… ஆரா எந்திரி” என்று பத்மினி எழுப்ப “நான் எழுப்பி பார்த்தேன் அத்த. அசையவே இல்ல. சரி தனியா இப்படி தூங்குறவள விட்டுட்டு எப்படி போறது னு வீட்டுலயே இருந்துட்டேன்” என்றான்.
பத்மினி எழுப்பியும் ஆரா எழவில்லை. யுவன் சிரிப்போடு எழுப்ப ஆரம்பித்தான்
“ஆரா… வீடு வந்துடுச்சு எந்திரி” என்று யுவன் கூற “ப்ச்ச்…” என்றாளே தவிர எழவில்லை.
“ஆரா.. ஊரு வந்துடுச்சு எந்திரி”
“ம்ம்… தூக்கம் வருது யுவா….”
யுவனின் பெயரை முதல்முறையாக சொல்லி அவள் அழைத்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.
“அவ கூட என்ன விளையாடிட்டு இருக்க? ஆரா எந்திரி” என்று பத்மினி அதட்ட கண்ணை திறந்து பார்த்தாள். பிறகு எழுந்து அமர்ந்தவள் “ஹே…வீடு வந்ததும் எழுப்ப சொன்னோன் ல” என்று திட்டினாள்.
“வீடு வந்ததும் எழுப்ப வா? நீ வீட்டுல தான இருக்க?”
“ப்ச்ச்… சாப்பிங் முடிஞ்சு வரும் போது சொன்னனே அத சொல்லுறேன்”
“சாப்பிங்கா? நீ எப்போ போன?”
“உனக்கு அம்னிசியா எதுவும் வந்துடுச்சா?”
“நீ கனவு எதுவும் கண்டு உளறுரியா?”
“கனவா?”
“ஆமா… சாப்ட்டு நல்லா படுத்து தூங்கிட்டு இப்போ தான் எந்திரிக்கிற… இதுல என்ன எழுப்பி விட எப்போ சொன்ன நீ?”
ஒரு நிமிடம் ஆராதனா குழம்பி விட்டாள்.
‘எல்லாம் கனவா?’ என்று நினைத்தவளின் கண்ணில் அவள் அணிந்திருந்த உடை பட்டது. காலையில் அவள் இதை அணியவில்லை. வெளியே செல்வதற்காக உடையை மாற்றியிருந்தாள்.
“எரும மாடே… பொய்யா சொல்லுற…” என்றவள் சோபாவில் இருந்த குஷனை தூக்கி எரிந்தாள். அது மேலே விழும் முன் யுவன் குதித்து ஓடி தப்பித்தான். ஆராதனா ஒவ்வொன்றாக தூக்கி எறிய எல்லாவற்றிலிருந்தும் தப்பினான்.
“உனக்கு ஒரு நாள் இருக்கு… எங்க வாங்குன ட்ரஸ் எல்லாம்?”
“நீ தூங்குனதும் யூ டர்ன் பண்ணி எல்லாத்தையும் ரிட்டர்ன் பண்ணி காச வாங்கிட்டேன்”
“மறுபடியும் பொய் சொல்லி அடி வாங்க போற பாரு”
ஆராதனா முறைக்கவும் கார் சாவியை அவளிடம் தூக்கி எறிந்தான். அதை ஆராதனா பிடித்து விட “கார்ல தான் இருக்கு. அப்படியே எடுத்துட்டு போயிடு… இங்க கொண்டு வந்து மறுபடியும் தூக்கிட்டு போக வேணாம் னு அதுலையே விட்டேன்” என்றான்
ஆராதனா அதை எடுக்க செல்ல பத்மினியும் சென்றார். யுவன் உதவிக்கு வர “நோ தாங்க்ஸ்… காசு கொடுத்ததோட உன் வேலை முடிஞ்சது… பை” என்று கூறி விட்டு ஆராதனா சென்று விட்டாள்.
“என்னடா வாங்குனீங்க?” என்று அர்ச்சனா வினவ “என் பர்ஸ காலி பண்ணிட்டா.. அவ்வளவு தான்” என்றான்.
“பில்ல கொடு.. நான் வேணா தரேன்”
“போங்க மா.. காமெடி பண்ணிகிட்டு… இப்போ பசிக்குது.. சாப்டலாம் வாங்க ” என்று கூறி உள்ளே சென்று விட்டான்.
தொடரும்.