Loading

 

 

 

 

 

யுவன் வந்து இறங்கிய அதே விமானத்திலிருந்து சங்கவியும் வந்து இறங்கினாள். அவளது பெற்றோர்கள் இருவரும் வியாபார விசயமாக வேறு நாட்டிற்கு சென்று விட சங்கவி யுவனை தொடர்ந்து அவன் போகும் இடத்திற்கு சென்று விட்டாள்.

 

அங்கு யுவனை சந்திக்க பெரு முயற்சி செய்து கடைசியில் மீண்டும் அவன் பின்னால் இந்தியா வந்து இறங்கினாள்.

 

அவள் நினைத்த காரியம் இப்போது கையில் இருக்க அதை பார்த்து சிரித்துக் கொண்டாள்.

 

“இதுக்கு அப்புறமும் அந்த ஆராதனா எப்படி உன் கிட்ட இருக்கா னு பார்த்துடுறேன்” என்று பல்லை கடித்துக் கொண்டாள்.

 

யுவனின் வீட்டில் திருமண வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. இரண்டு வீட்டிற்கும் ஒரே பந்தல் போட்டு வைத்திருந்தனர். விருந்தினரின் வரவு நிற்கவே இல்லை. அர்ச்சனாவும் பத்மினியும பலருக்கு பதில் சொல்லி ஓய்ந்து போயினர்.

 

சத்தியனும் ரகுநாதனும் வருபவர்களை வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் நேரத்தை செலவழித்தனர். நலங்கு வைப்பதில் ஆரம்பித்து தொடர்ந்து சடங்குகள் நடைபெற்ற வண்ணம் இருந்தது.

 

நாளை திருமணம் என்ற நிலையில் ஆராதனாவுக்கும் யுவனுக்கும் சற்று ஓய்வு கிடைத்தது. ஆராதனா விட்டால் போதுமென நன்றாக படுத்து தூங்கி விட்டாள்.

 

யுவன் உடை மாற்றி ஆனந்த களைப்புடன் மெத்தையில் விழ போன் இசைத்தது. அதை எடுத்து பார்த்தான். தெரியாத எண்ணிலிருந்து சில படங்கள் வந்திருக்க “யாரு இது?” என்ற யோசனையுடன் திறந்தான்.

 

நான்கைந்து படங்கள். அதில் சங்கவியும் யுவனும் அறைகுறை உடையுடன் படுத்திருப்பது போல் இருந்தது. யுவன் பதறி எழுந்தான். அந்த படங்களை அனுப்பி இருக்கும் எண்ணை அழைக்க அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக பதில் வந்தது.

 

யுவனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. பிறகு இதை யார் செய்திருக்க முடியும் என்று யோசித்தான். முதல் சந்தேகம் சங்கவியின் மீது தான் வந்தது. அவளது எண்ணை தேடி அழைத்தான். அழைப்பு சென்று கொண்டிருந்ததே தவிர எடுக்கப் படவில்லை.

 

சங்கவி அந்த பக்கம் போனை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். யுவனது பதட்டம் அவளது கண் முன் ஓட சிரிப்பு வந்தது.

 

“எனக்கு கிடைக்கலனா நீ எவளுக்கும் கிடைக்க கூடாது. இந்த‌ போட்டோஸ் வச்சு உன்ன அடஞ்சு காட்டுறேன்” என்றாள்.

 

யுவன் மூன்று முறை அழைத்தும் சங்கவி பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாளே தவிர அழைப்பை ஏற்கவில்லை. யுவனின் பதட்டம் அவளுக்கு பிடித்து இருந்தது.

 

முழுதாக ஒரு மணி நேரம் கடந்த பின் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

 

“நாளைக்கு நடக்கப்போற கல்யாணத்த நிறுத்திடு. இல்லனா இப்போ போட்டோ வந்த மாதிரி நாளைக்கு வீடியோ வரும்”

 

செய்தியை படித்த யுவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. யார் இப்படி விளையாடுவது என்று கோபம் கோபமாக வந்தது. இதை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்று தோன்ற நேரத்தை பற்றி கவலை படாமல் இம்ரானை அழைத்தான்.

 

தூங்கிக் கொண்டிருந்த இம்ரான் பாதி தூக்கத்தில் அழைப்பை ஏற்றான்.

 

“என்ன யுவா? இன்னேரத்துல?”

 

“மச்சி உனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன். அர்ஜண்ட். பாரு”

 

யுவன் அழைப்பை துண்டித்து விட இம்ரான் அந்த படத்தை பார்த்தான். தூக்கம் பறந்து விட அவசரமாக எழுந்து அமர்ந்தான். கண்ணை நன்றாக தேய்த்து விட்டு மீண்டும் பார்த்தான்.

 

பிறகு அந்த படத்தை நன்றாக ஆராய்ந்தான். யுவனின் அழைப்பு வர வேகமாக எடுத்தான்.

 

“எடிட்டிங் வேலை டா இது. யாரு பண்ணது?” என்று கோபமாக கேட்க “நிஜம்மா எடிட்டிங் தான?” என்று யுவன் கேட்டான்.

 

“ஆமா.. பார்த்தாலே தெரியுதே”

 

இப்போது தான் யுவனுக்கு நிம்மதியாக இருந்தது. பார்ட்டி முடிந்து கிளம்பும் போது எதுவும் அவனுக்கு நியாபகம் இல்லை. எங்கே சங்கவி எதையாவது செய்து விட்டாளோ என்று பயந்து விட்டான்.

 

“வேற யாரு? சங்கவி தான்”

 

“அவளா?”

 

“நாளைக்கு கல்யாணத்த நிறுத்தலனா வீடியோவே அனுப்புவாளாம்”

 

“லூசா அவ? எதுக்கு இப்படி பண்ணுறா?”

 

“எங்க இருக்கா னு தெரிஞ்சா அடிச்சே கொண்ணுருவேன். போன வேற எடுக்க மாட்ரா.”

 

“நீ இத என் கிட்ட விடு. தூங்கு. நாளைக்கு கல்யாணம். இப்படி முழிச்சு இருக்காத”

 

“இப்ப எப்படிடா தூக்கம் வரும்? அவ பாட்டு விடியோ எதாவது எடிட்டிங் பண்ணி அனுப்பி தொலச்சுட்டானா?”

 

“நாளைக்குள்ள அவள கண்டு பிடிக்க முடியுமா னு பார்க்குறேன். நீ கவல படாத”

 

“எனக்கு ஒரு நம்பர்ல இருந்து தான் இதெல்லாம் வந்துச்சு.‌ உனக்கு அனுப்புறேன். கண்டு பிடிக்க முடியுதா னு பாரு”

 

“சரி அனுப்பிட்டு நீ ரெஸ்ட் எடு நான் பார்த்துக்கிறேன்”

 

“ம்ம்”

 

யுவன் அந்த எண்ணை அனுப்பி விட்டு படுத்துக் கொண்டான். தூக்கம் வராமல் சங்கவியின் மீது இருந்த கோபம் தான் அதிகரித்தது. தனக்கு அனுப்பியது போல் ஆராதனாவிற்கும் அனுப்பி இருப்பாளோ என்று சந்தேகம் வந்தது.

 

ஆராதனா தன்னை சந்தேகப்படுவாள் என்று சொல்ல முடியாது. ஆனால் அவனே அந்த படங்களை பார்த்து ஒரு நொடி பதறி விட்டான்.‌ ஆராதனா பார்த்தால் எவ்வளவு வருத்தப்படுவாள்?

 

சங்கவி மட்டும் இப்போது கையில் கிடைத்தால் பெண் என்றும் பாராமல் கையை உடைத்து இருப்பான். தூக்கம் வராமல் போக அறைக்குள் எழுந்து சில நிமிடங்கள் நடந்தான்.

 

இம்ரானின் அழைப்பு வர வேகமாக எடுத்தான்.

 

“இன்னும் தூங்கலயா நீ?”

 

“இல்ல. எதுக்கு கூப்பிட்ட ? அத சொல்லு”

 

“நம்பர் யாரோடது னு ஃப்ரண்டு கண்டு பிடிச்சு சொல்லிட்டான். சங்கவியோடது தான். வீட்டு‌ அட்ரஸ் இருக்கு. போய் அவள பார்த்துட்டு பேசுறேன். அது வர கொஞ்ச நேரமாச்சும் தூங்கு” என்று கூறி விட்டு இம்ரான் அழைப்பை துண்டித்து விட்டான்.

 

“கையில சிக்கு டி. உனக்கு இருக்கு” என்று பல்லை கடித்து கூறியவன் படுத்துக் கொண்டான்.

 

*.*.*.*.*.

 

வீட்டில் இல்லாமல் ஒரு ஹோட்டல் அறையில் அமர்ந்து இருந்தாள் சங்கவி. யுவனின் அழைப்புகள் நின்றதுமே அவன் தன்னை தேடத் தொடங்கி விட்டான் என்று புரிந்தது.

 

கல்யாண கனவில் இருந்தவனை இப்படி அலைய வைப்பது சங்கவிக்கு திருப்தியை தந்தது. அவள் மட்டும் வலியில் இருக்க மற்றவர்கள் நிம்மதியாக இருப்பதா?

 

அதிலும்‌ ஆராதனாவும்‌ யுவனும் நிம்மதியாக இருந்து விடவே கூடாது. யுவனுக்கு‌ படத்தை அனுப்பியவள் ஆராதனாவிற்கு அனுப்பவில்லை. யுவன் அலைவதை கண்டு சந்தோசம் என்றால் ஆராதனா அவமானப்பட வேண்டும்.

 

எப்படியும் இந்த‌ மிரட்டலுக்கு பயந்து யுவன் திருமணத்தை நிறுத்த மாட்டான். நாளை காலை நேராகவே சென்று ஆராதனா விடம் அந்த படங்களை கொடுக்க வேண்டும். அதை பார்த்து விட்டு ஆராதனா அழுது புலம்புவதை பார்த்து ரசிக்க வேண்டும். அது தான் சங்கவியின் மிகப்பெரிய ஆசை.

 

லண்டனிலேயே அவளது திட்டங்கள் பல இடத்தில் சொதப்பி விட்டது. மேலும் சொதப்ப அவள் அனுமதிக்க மாட்டாள். யுவனுக்கு பின்னாலே சென்று அவனை சந்திக்க பெரும் முயற்சி செய்தாள்.‌ ஆனால் யுவன் வேலையை விட்டு எங்கும் அசையவில்லை.

 

அவனை பார்க்க முடியாத கடுப்பில் சங்கவி இருக்க வேலை முடிந்து பார்ட்டிக்கு வந்து சேரந்தான். இதை விட்டால் நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று புரிந்து கொண்டவள் அங்கு வேலை செய்யும் ஒருவனை பிடித்து எதையோ யுவன் சாப்பிடுவதில் கலக்க சொன்னாள்.

 

அதோடு அவனை அனுப்பி வைக்க வேண்டிய முகவரியும் கொடுத்தாள். அவனும் வாங்கிய பணத்திற்கு சரியாக வேலை பார்த்தான். ஆனால் யுவன் அந்த இடத்திலிருந்து சங்கவியின் கண்ணில் மாட்டாமல் மார்க் உதவியுடன் கிளம்பி விட்டான்.

 

அவன் சென்ற சில நிமிடங்கள் கழித்து தான் சங்கவிக்கு விசயம் சென்று சேர்ந்தது. வேகமாக யுவன் தங்கி இருக்கும் ப்ளாட்டை தேடி சென்றாள். அவள் கண் முன்னால் தான் தள்ளாடியபடி யுவன் வீட்டிற்குள் சென்றான்.

 

சங்கவி ஓடி வரும் முன்பு கதவை பூட்டி விட்டான். சங்கவி எவ்வளவு தட்டியும் யுவன் காதுக்கு அது சென்று சேரவில்லை. அறைக்கதவு திறக்கப்படவும் இல்லை. வேறு எந்த பக்கமும் வீட்டிற்குள் செல்ல வழியில்லாமல் போக சங்கவிக்கு பெரிய ஏமாற்றம் தான் கிடைத்தது.

 

அதில் சங்கவிக்கு மேலும் யுவன் மீது இருக்கும் கோபம் அதிகமாகியது. நாளை யுவன் இந்தியா திரும்பி விட்டால் சங்கவியால் அவனை சந்திக்கவே முடியாது.

 

என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தவள் கடைசியாக படங்களில் தங்களது முகத்தை மாற்றி வைக்க முடிவு செய்தாள். இந்தியா வரும் முன்பே அதை எல்லாம் செய்து முடித்து விட்டு வந்து சேர்ந்தாள்.

 

அங்கு சொதப்பியது போல் இங்கு சொதப்பி விடக் கூடாது என்று எல்லாவற்றையும் சரியாக திட்டமிட்டாள். வீட்டிலிருந்து ஒரு ஹோட்டலுக்கு சென்றவள் தன்னுடைய வேறு எண்ணின் மூலம் படங்களை அனுப்பினாள்.

 

சங்கவி தான் என்று யுவன் கண்டு பிடித்தாலும் அவளை தேடி வர முடியாதபடி மறைந்து இருந்தாள். காலை திருமணத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு சங்கவி நிம்மதியாக தூங்கி விட்டாள்.

 

*.*.*.*.*.

 

அதிகாலை வீட்டில் திருமணக் கலை களைகட்ட ஆரம்பித்தது. இரண்டு குடும்பமும் மஹாலை சென்று அடைந்தனர். ஆராதனா தனி அறையில் அலங்காரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

யுவனுக்கு சங்கவியை நினைத்து இருந்த கோபத்தில் அந்த சூழ்நிலையை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இம்ரானால் சங்கவியை கண்டு பிடிக்க முடியவில்லை.

 

அது வேறு யுவனுக்கு மேலும் பதட்டத்தை கிளப்பியது. அவள் எதை காட்டினாலும் யாரும் நம்ப போவது இல்லை. ஆனால் எல்லோரும் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். அதை தான் எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று நினைத்தான்.

 

யுவன் பதறிக் கொண்டு இருக்க சங்கவி சட்டென பார்த்தால் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத உடையோடு திருமண மஹாலுக்குள் நுழைந்து விட்டாள்.

 

முதலில் அவள் நேராக சென்ற இடம் ஆராதனா இருக்கும் இடத்தை தேடி தான். உள்ளே நிறைய பேர் இருக்க எல்லோரும் வெளியே வர காத்திருந்தாள். அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தால் சந்தேகம் வந்து விடும் என்று அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்கு பிறகு உள்ளே இருந்த பெண்கள் வெளியே வந்து விட ஆராதனா மட்டும் தனியாக இருந்தாள்.

 

இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று வேகமாக அந்த அறைக்குள் சென்று விட்டாள்.

 

*.*.*.*.*.

 

யாமினிக்கு இரவிலிருந்தே மனம் சரியில்லை. அவளது கனவுகள் எல்லாம் மொத்தமாக நாளை சிதைந்து விடும். முதலில் இந்த திருமணம் நடக்காது என்று தான் நினைத்து இருந்தாள். ஆனால் ஆராதனாவும் யுவனும் சந்தோசமாக ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வது அவளது மனதை காயப்படுத்ததி இருந்தது.

 

இரவு தூக்கம் வராமல் அவள் நடந்து கொண்டிருக்க “என்னமா தூக்கம் வரலையா?” என்று யாமினியின் அன்னை மீனா வினவினார்.

 

“இல்லமா”

 

“இங்க வா” என்று அழைத்தவர் அவளை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டார்.

 

“நான் பண்ணது தப்பா மா?”

 

“இல்லமா”

 

“அப்புறம் ஏன் மா யுவன் எனக்கு கிடைக்கல?”

 

“சிலர் நம்ம வாழ்க்கையில ஏன் வர்ராங்க ஏன் போறாங்க னு யாருக்கும் தெரியாது யாமினி. முன் ஜென்ம தொடர்போ இல்ல எதோ ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியாவோ இருக்கலாம். இதுவும் அப்படி இருக்கலாம்”

 

“எனக்கு இல்லனா ஏன் மா அவன் மேல எனக்கு ஆசை வரனும்?”

 

“வாழ்க்கையில நடக்குற எல்லாத்துக்கும் காரணம் கண்டு பிடிக்காத. காரணம் தெரிஞ்சுட்டா வாழுற வாழ்க்கை நரகமாகிடும். அதுனால அத அப்படியே விட்டுட்டு வாழ்க்கை போற வழியில வாழ பாரு.”

 

“எதுவுமே பிடிக்கல மா”

 

“இப்பவே உன்ன ஏன் வற்புறுத்துற? எல்லாத்தையும் காலத்து கையில கொடுத்துட்டு இப்போ இருக்க கடமைய மட்டும் பாரு. எல்லாம் தன்னால நடக்கும்”

 

“ம்ம்…”

 

“இப்போ முதல் கடமை தூங்குறது. வா.. ரூம்ல போய் படுத்து தூங்கு”

 

மீனா அவளை அழைத்து சென்று படுக்க வைத்து தட்டிக் கொடுத்தார். யாமினி உறங்கி விட மாதவனை தேடி வந்தார்.

 

அவர் எதோ வேலை பார்த்துக் கொண்டிருக்க “எல்லாம் உங்களால தான்” என்றார்.

 

“என்ன ? ஏன் இப்படி திடீர் னு சொல்லுற?” – மாதவன்.

 

“ஆசைய வளர்க்க வேணாம் னு நானும் அர்ச்சனாவும் எத்தனை தடவ சொல்லி இருப்போம்? இப்போ பாருங்க நம்ம பொண்ணு தூக்கம் வராம நடந்துட்டு இருக்கா”

 

“எல்லாம் வேணும் னே நடந்துச்சா என்ன?”

 

“ஆனா நீங்க பண்ண பிரச்சனையில யாமினிக்கு யுவன இப்போ பார்க்க கூட முடியல. சங்கட படுறா. அவனும் அண்ணனும் நினைச்சு இருந்தா இத ஊருக்கே சொல்லி இருக்கலாம். ஆனா அவங்க அமைதியா இருந்துட்டாங்க.”

 

“இப்போ எதுக்கு அத பேசுற?”

 

“இனிமேலாவது ஆகாத காரியத்த பார்க்குறத விட்டுட்டு நம்ம பிள்ளைக்கு எது நல்லது னு யோசிச்சு பண்ணுங்க” என்று கூறி விட்டு படுத்து கண்ணை மூடிக் கொண்டார்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
17
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்