Loading

 

 

 

 

 

திருமணத்திற்கு இரண்டு வாரங்களே இருந்தது. வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து இருந்தது. எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கும் வேலை தான் மிச்சமிருந்தது. யுவன் அலுவலக வேலையை பார்க்க பெரியவர்கள் திருமண வேலையை பார்த்தனர்.

 

அன்று யுவன் வீட்டிற்கு வரும் போதே சற்று குழப்பத்துடன் வந்தான். அர்ச்சனா அவனை பார்த்து விட்டு “என்ன டா ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டார்.

 

யுவன்‌ பதில் சொல்லாமல் தலையை தேய்த்தான். சொன்னால் என்ன பிரச்சனை வருமோ தெரியாது என்று முழித்தான்.

 

“கேட்டேன்ல பதில் சொல்லு” என்று அர்ச்சனா கேட்க “நான் சொல்லுறேன். யுவன் பிஸ்னஸ் ட்ரிப் போக வேண்டி இருக்கு” என்றார் சத்தியன்.

 

“எத்தனை நாள்டா?” என்று அர்ச்சனா கேட்க “ஒரு வாரம் ம்மா” என்றான்.

 

“கல்யாணத்த பக்கத்துல வச்சுகிட்டு ஒரு வாரமா?”

 

“வேற வழியில்ல மா. போய் தான் ஆகனும்”

 

“எங்க?”

 

“லண்டன்”

 

“அவ்வளவு தூரமா?”

 

“ம்ம்..”

 

“எனக்கு தெரியாது. ஆரா சரி னு சொன்னா போயிட்டு வா”

 

“அவ சண்டை போடுவாளே”

 

“உன் பாடு அவ பாடு” என்று அர்ச்சனா கழண்டு கொண்டார்.

 

யுவன் ஆராதனாவை பார்க்க சென்றான்.

 

தொலைகாட்சியின் முன்பு அமர்ந்து கொண்டு எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 

 

“ஆரா..”

 

“வா வா.. உட்காரு. இந்த ப்ரோக்ராம் நல்லா இருக்கு பாரு”

 

“அத அப்புறம் பார்க்குறேன். இப்போ ஒன்னு சொல்லனும்”

 

“என்ன?”

 

“ஒரு வாரம் பிஸ்னஸ் ட்ரிப் போறேன்” என்று கூற ஆராதனா அதிர்ந்து திரும்பினாள்.

 

“ஒரு வாரமா?”

 

“ம்ம்..”

 

“இங்க கல்யாண வேலை?”

 

“கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்ன வந்துடுவேன்”

 

“ஓ… எப்போ கிளம்புற?”

 

“நாளைக்கு காலையில”

 

“ம்ம்..”

 

“என்ன கோபமா?”

 

“இல்ல.‌ போயிட்டு வா” என்றவள் எழுந்து சென்று விட்டாள்.

 

“ஆரா… ” என்று அவன் அழைத்ததை காதில் வாங்காமல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

 

இப்போது வேலையையும் விட முடியாமல் ஆராதனாவை சமாதானமும் செய்ய முடியாமல் யுவன் தான் விழித்தான்.

 

ஆராதனா அன்று முழுவதும் யுவனிடம் பேசவில்லை. மறுநாள் காலை யுவன் கிளம்பி விட்டான்.‌ ஆராதனாவிடம் சொல்லி விட்டு போக வந்து சேர்ந்தான்.

 

“எங்க அத்த அவ?” – யுவன்

 

“ரூம்ல இருக்கா” – பத்மினி

 

“நான் போய் பேசிட்டு வரேன்” என்றவன் அவளை தேடி அறைக்குள் வந்தான்.

 

ஆரா தன் உடைகளை மடித்து வைத்துக் கொண்டு இருந்தாள். யுவன் அறைக் கதவை அடைத்து தாழிட திரும்பி பார்த்தாள்.

 

“ஹேய் கிளம்பிட்டியா?” – ஆராதனா.

 

பதில் சொல்லாமல் தலையாட்டி வைத்தான்.

 

“பார்த்து பத்திரமா போயிட்டு வா”

 

அதுக்கும் தலையாட்டினான்.

 

“போயிட்டு கால் பண்ணு”.

 

அதற்கும் பதில் பேசாமல் தலையாட்ட ஆராவும் அமைதியாகி திரும்பிக் கொண்டாள்.

 

“ஆரா…” என்று அழைக்க திரும்பி பார்த்தாள். யுவன் இரண்டு கையையும் விரிக்க அவன் முகத்தை ஒரு நொடி பார்த்தாள்.

 

அவன் “வா” என்பது போல் தலையாட்ட வேகமாக சென்று அவன் கையில் சுருண்டாள். யுவனின் அணைப்பை விட அவளது அணைப்பு அதிக அழுத்தமாக இருந்தது.

 

“ஏன் இவ்வளவு சோகம்? சீக்கிரமா வேலைய முடிச்சிட்டு வந்துடுவேன்”

 

“நீ தான் போகனுமா?”

 

“ஆமா ஆரா.. வேற வழி இல்ல”

 

“நீ இல்லாம எனக்கு எதுவுமே ஓடாது டா. போகாத”

 

“நான் போகலனா அங்கயும் எதுவும் ஓடாது டி”

 

“கல்யாணம் முக்கியமா? பிஸ்னஸ் முக்கியமா?”

 

“கல்யாணம் தான் முக்கியம்”

 

“அப்போ போகாத”

 

“அப்போ வேலை என்னவானாலும் பரவாயில்லையா?”

 

“ம்ஹும்” என்று ஆரா சினுங்க அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான்.

 

“என்ன?” என்று கேட்க “ப்ச்ச்.. போ எனக்கு எதுவுமே பிடிக்கல” என்றாள்.

 

“நீ தான் போங்குற.. அப்புறம் என்ன குறை சொல்ல கூடாது”

 

“நான் அந்த போ சொல்லல”

 

அவளது முகத்தை கையில் ஏந்தியவன் “சீக்கிரமா ஓடி வந்துடுவேன் ஆரா. கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி இங்க இருப்பேன். ஓகே வா?” என்று கேட்க மனமில்லாமல் தலையாட்டினாள்.

 

“இங்க எல்லா வேலையையும் பார்க்குறேன் னு டயர்டாகாத. நான் வரப்போ ஃப்ரஸ்ஸா கல்யாண பொண்ணு ரெடியாகி இருக்கனும் ஓகே வா?”

 

இதற்கும் தலையாட்டி வைத்தாள்.

 

உடனே அவளது முகத்தை ஆடாமல் பிடித்தவன் குனிந்து கன்னத்தில் முத்தமிட்டான். ஆராவின் உடல் அதிர்ச்சியில் சிலிர்த்தது. மறு கன்னத்திலும் அதே அழுத்தத்துடன் முத்தமிட்டவன் நிமிர்ந்து பார்த்தான்.

 

இரண்டு கன்னங்களும் சிவந்து போக வெட்கத்தில் கண்ணை மூடிக் கொண்டாள். அவளது நெற்றியில் முத்தமிட்டவன் “இப்படியே என்ன நினைச்சு வெட்கப்பட்டுட்டே என்ன வழியனுப்பு வா” என்று அழைத்தான்.

 

அவசரமாக கண்ணை திறந்தவள் “அய்யய்யோ அதெல்லாம் முடியாது. நீ கிளம்புறத பார்த்துட்டு நிக்குற சக்தி எல்லாம் எனக்கு இல்ல. நான் இங்கயே உனக்கு டாடா சொல்லுறேன் பத்திரமா போயிட்டு வா” என்றாள்.

 

“இப்படி சொன்னா எப்படி?”

 

“அப்படி தான்..‌ சரி ஃப்ளைட்ட மிஸ் பண்ணிடாத ஓகே”

 

“அது இருக்கட்டும். நான் உனக்கு ஞாபகமா ஒன்னு கொடுத்த மாதிரி எனக்கும் ஒன்னு கொடு. அப்ப தான் உன்ன விடுவேன்”

 

ஆராவிற்கு திடீரென வெட்கம் வந்து விட்டது. உதட்டை கடித்தவள் “கண்ண மூடு” என்றாள். யுவன் கண்ணை மூடிக்கொண்டு கன்னத்தை காட்ட காலை உந்தி மேலே எழும்பியவள் அவன் கன்னத்தில் முதல் அச்சாரத்தை பதித்தாள்.

 

கண்ணை திறக்காமலே மறு கன்னத்தை காட்ட அதிலும் முத்தம் பதித்தாள். கண்ணை திறந்து அவளை பார்த்து யுவன் சிரிக்க “அய்யோ.. எனக்கு ஷையா இருக்கு… கிளம்பு.. கிளம்பு” என்றாள்.

 

அவளை பார்த்து நன்றாக சிரித்தவன் கையாட்டி விட்டு அறைக்கதவை திறந்து வெளியே சென்றான். அவன் சென்றதும் தன் வாயை மூடிக் கொண்டவள் வெட்கத்தில் சிரித்துக் கொண்டாள்.

 

அதே நேரம் எப்போது திரும்பி வருவான்‌ என்று அப்போதே ஏங்க ஆரம்பித்து விட்டாள்.

 

யுவனுக்கும் போய்த்தான் ஆக வேண்டுமா என்று தோன்றியது.‌ ஆனால் வேலையை சீக்கிரம் முடித்து விட்டு ஓடி வர வேண்டும் என்று கிளம்பினான்.

 

அங்கு சென்று சேர்ந்ததுமே வேலையை ஆரம்பித்து விட்டான். ஆராதனா இங்கு உயிர்ப்பே இல்லாமல் சுற்ற ஆரம்பித்தாள். வேலையிலும் கவனம் போகவில்லை. திருமண ஏற்பாட்டிலும் கவனம் போகவில்லை. முழு நேரமும் யுவனின் நினைவு தான் அவளை துரத்தியது.

 

“எப்படி தான் தூரமா இருக்கவங்கள லவ் பண்ணுறாங்களோ? ஒரு வாரம் போனதுக்கே இந்த கதி” என்று இம்ரானிடம் சலிப்பாக கூறி வைத்தாள்.

 

தினமும் யுவன் பேசிய போதும் ஆராதனாவிடம் மாற்றம் இல்லை. கடமையே  என்று வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வாரமும் கடந்து போக யுவனின் வேலை முடியவில்லை. அன்று ஆராதனா வீட்டில் இருக்க யுவனின் அழைப்பு வந்தது.

 

“ஹலோ…” – ஆராதனா

 

“ஹாய்…” – யுவன்.

 

“எதுக்கு‌ போன் பண்ண?” 

 

“கோபமா?”

 

“இல்ல”

 

“சரி போ . என் வொயிட்டி என்னடி பண்ணுது?”

 

அர்ச்சனாவுக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் மரத்திற்கும் வொயிட்டி என்று தான் பெயர் வைத்திருந்தான்.

 

“உன் வொயிட்டி உன்ன ரொம்ப மிஸ் பண்ணுதாம்”

 

“அப்படியா?? அப்ப என் செல்லத்துக்கு என் சார்பா ஒரு உம்மா கொடேன்”

 

“நான் ஏன் குடுக்கனும்..? முடியாது போடா”

 

“அது தான டி என்ன மிஸ் பண்ணுது.. அப்போ அதுக்கு தான கொடுக்க சொல்ல முடியும். நீயா மிஸ் பண்ணுற? உனக்கு கொடுக்க?”

 

“அப்போ உன் வொயிட்டிக்கு போன் பண்ணி அவங்க கிட்ட நேராவே கொடு உன் உம்மாவ. நான் வைக்குறேன்”

 

கோபமாக சொன்னவள் அழைப்பை துண்டிக்கவில்லை. காதிலேயே வைத்திருந்தாள்.

 

“ஓய் ரவுடி”

 

“ம்ம்..”

 

“ஐ மிஸ் யூ”

 

அந்த வார்த்தையில் பிரிவின் துயரம் ஆராவை பலமாக தாக்க ஒரு நொடி கண்ணை மூடிக் கொண்டாள். பிறகு “ஆமா இப்படி சொல்லுறவன் கிளம்பி வர வேண்டியது தான?” என்று கேட்டாள்.

 

“வேலை முடிய மாட்டிங்குது டி”

 

“கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி வரேன் னு சொன்ன. இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு. ஆனா அங்கயே இருக்க”

 

“இந்த வேலை இப்படி இழுக்கும் னு நினைக்கவே இல்ல ஆரா”

 

“ம்ம்.. சரி பத்திரமா இரு.”

 

“இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பி வரேன்”

 

“ம்ம்.. “

 

“வச்சுடவா?”

 

“ம்ம்”

 

இருவருமே அழைப்பை துண்டிக்கவில்லை. அரை நிமிடம் அமைதியாக கடந்துவிட “யுவா” என்று அழைத்தாள்.

 

“என்னடி?”

 

“மிஸ் யூ” என்று சொல்லும் போதே குரல் கம்ம அவசரமாக அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

அவனும் போனில் நெற்றியை வைத்து “மிஸ் யூ டூ டி” என்றான். இப்போதே பறந்து சென்று அவளை பார்த்து விட துடித்த மனதை அவனால் கட்டு படுத்த முடியவில்லை. கண்ணை மூடி அவன் அமர்ந்து இருக்க “என்ன மேன்… உன் உட்பி ய மிஸ் பண்ணுறியா?” என்று கேட்டுக் கொண்டே யுவனுடன் வேலை செய்யும் மார்க் வந்து நின்றான்.

 

“ரொம்ப.. இந்த வேலைய முடிக்காமலே அவ கிட்ட ஓடிரலாமானு இருக்கு”

 

“உன் உட் பி மேல அவ்வளவு லவ்வா?”

 

“அதிகமா… எல்லாத்தையும் விட அதிகமா” என்று கூறி சிரித்தவன் வேலையை பார்க்க அமர்ந்து விட்டான். மார்க்கும் அவனுக்கு உதவ ஆரம்பித்தான். ஒரு வழியாக வேலை முடிந்து விட திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கிளம்பி வர தீர்மானித்தான்.

 

வேலை முடிந்ததால் அங்கு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் யுவனும் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை. முதலிலேயே மதுவை தவிர்த்து விட்டு குளிர்பானங்களை மட்டுமே குடித்தான்.

 

சில நிமிடங்களில் எதோ சரியில்லை என்று பட்டது. உடனே மார்க்கை தேடிச் சென்றான்.

 

“ஹேய் மேன்… எனக்கு எதோ சரியில்ல னு படுது. என்ன வீட்டுக்கு அனுப்பிடுறியா?” என்று கேட்க அவனும் நண்பனது கோரிக்கையை உடனே நிறைவேற்றினான்.

 

மார்க் அவனை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி விட யுவனும் சரியாக சென்று சேர்ந்து விட்டான். தலை சுற்றி மயக்கம் வர அப்படியே மெத்தையில் விழுந்து விட்டான். காலையில் மார்க் வந்து கதவை தட்டும் போது தான் விழித்து எழுந்தான்.

 

“என்ன மேன் இன்னும் தூங்குற? இன்னும் டூ ஹார்ஸ் ல ஃப்ளைட் இருக்கு. உன்ன செண்ட் ஆஃப் பண்ண வந்தேன்” என்றான் மார்க்.

 

அப்போது தான் யுவன் மணியை பார்த்தான். அதிக நேரம் கடந்து விட்டது தெரிய அவசர அவசரமாக கிளம்ப ஆரம்பித்தான். மார்க் உதவி கிடக்க அரை மணி நேரத்தில் விமானநிலையம் நோக்கி கிளம்பி விட்டனர்.

 

யுவனுக்கு இரவு நடந்ததில் பெரிதாக எதுவும் ஞாபகம் இல்லை. மார்க்கிடம் உதவி கேட்டது வரை தான் நினைவில் இருந்தது. அதன் பின் எப்படி வீட்டுக்கு சென்றான் எப்படி தூங்கினான்‌ எதுவும் நினைவில் இல்லை. தலை வேறு பயங்கரமாக வலிக்க எதுவும் யோசிக்க முடியவில்லை.

 

விமானம் ஏறும் வரை மார்க் உடன் இருந்தான். அவனிடம் கேட்க வீட்டுக்கு அனுப்பி வைத்தது வரை தான் அவனுக்கும் தெரிந்து இருந்தது. உடல் வலியை வைத்து நன்றாக உறங்கி இருப்போம் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

 

விமானம் ஏறி அமரும் முன் ஆராதனாவிற்கு செய்தி அனுப்பி விட்டான். பயணம் முழுவதும் ஆராதனாவின் நினைவுகள் மட்டுமே நிறைந்து இருந்தது. அந்நினைவுகளில் பயணம் சுகமாக கடந்து விட ஆராதனாவின் முன்னால் வந்து நின்றான்.

 

யுவனை பார்த்ததும் ஆராதனாவிற்கு முதலில் பேச்சே வரவில்லை. அவளது அறையில் அமர்ந்து இருந்த எல்லோரையும் யுவன் வெளியே துரத்தி விட்டான். ஆராதனா அவனையே பார்த்துக் கொண்டிருக்க கதவை அடைத்து விட்டு வந்து அவளை வேகமாக அணைத்துக் கொண்டான்.

 

“இப்போ மட்டும் எதுக்குடா வந்த? நேரா தாலி கட்டுற நேரத்துக்கு வர வேண்டயது தான?” என்று கேட்டு யுவனை பிடித்து தள்ளினாள். யுவன் அசையாமல் அவளை அணைத்துக் கொண்டு நின்றான்.

 

சில நிமிடங்களில் கோபம் பறந்து விட ஆராதனாவும் அணைத்துக் கொண்டாள்.

 

“இந்த சேலை அழகா இருக்கு ஆரா” என்று கூற “நலங்கு ஃபங்சன் அதான்” என்றாள்.

 

“அதுனாலயா? இல்ல நான் வர்ரதால கட்டுனியா?” 

 

“நீ வந்தா எதுக்கு கட்டணும்?”

 

“நான் செலக்ட் பண்ணதாச்சே”

 

“இல்லயே”

 

“ஏய்.. யாரு கிட்ட கதை விடுற? எனக்கு தெரியாதா என்ன சேலைனு”

 

“இல்ல இல்ல. உனக்கு தான் கண்ணுல பிரச்சனை.”

 

“எனக்கு?”

 

“ஆமா.. நான் உன் மேல இன்னும் கோபமா தான் இருக்கேன்”

 

“அப்படியா?” என்று கேட்டவன் அவளது கன்னத்தை கிள்ளி அதில் முத்தம் பதித்தான்.

 

அதில் ஆராதனா சிரித்து விட “இது தான் அழகு” என்றான்.

 

“எனக்கு என்ன வாங்கிட்டு வந்த?”

 

“அங்க இருக்கு எடுத்துட்டு வரட்டா?”

 

“வேணாம். ரெண்டு நாள்ல அங்க வந்துடுவேன். அப்போ பார்த்துக்கிறேன்”

 

“ஆமால.. வா வா. உனக்காக அங்க ஸ்பெஷல் பரிசு காத்துட்டு இருக்கு”

 

“என்னது?” 

 

ஆராதனாவின் காதருகில் சென்றவன் “ஆறடி உயரத்துல அழகான ஒருத்தன் உனக்காக காத்துட்டு இருக்கான்.” என்று ரகசிய குரலில் கூற ஆராதனா வெட்கத்துடன் யுவனை அணைத்துக் கொண்டாள்.

 

தொடரும். 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்