Loading

 

 

 

 

 

திருமண வேலைகள் வீட்டில் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. பெரியவர்கள் வேலை பார்க்க ஆராவும் யுவனும் கல்யாண பூரிப்பில் மிதந்தனர். பத்திரிக்கை அனுப்ப வேண்டிவர்களின் பெயர் பட்டியலை எல்லோரும் சேர்ந்து எழுதிக் கொண்டிருந்தனர்.

 

ஆராதனா அர்ச்சனா சொல்லச்சொல்ல பெயர் பட்டியலை எழுதிக்கொண்டிருந்தாள். பத்மினி பக்கத்தில் அமர்ந்து பெயரை ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தார். அந்நேரம் யுவன் வந்து ஆராதனா வின் அருகில் அமர்ந்தான்.

 

ஆராதனா அவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“ஆரா என் கூட ஒரு இடத்துக்கு வரியா?” – யுவன்.

 

“எங்க?”

 

“சொன்னா தான் வருவியா?”

 

“ஆமா”

 

“ஃப்ரண்ட பார்க்கனும். போகலாம். இப்போ வரியா?”

 

“உன் ஃப்ரண்ட நான் ஏன் பார்க்கனும்?”

 

“அதெல்லாம் அப்புறமா சொல்லுறேன் நீ வரியா இல்லையா?”

 

“முடியாது” என்று கூறி எழுந்து சென்று விட்டாள்.

 

யுவனுக்கு கோபம் வருவதற்கு பதில் சிரிப்பு வந்தது. ஆராதனா சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளையாக இருப்பதை விட இப்படி எதிராக பேசுவது தான் அவனுக்கு பிடிக்கும்.

 

சில மணி நேரம் கழித்து ரகுநாதன் சத்தியனும் வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்களிடம் அர்ச்சனாவும் பத்மினியும் அழைப்பிதழ் கொடுக்க வேண்டியவர்களின் பெயரை கேட்டனர் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஆராதனா தனியாக அமர்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்தாள். யுவன் வந்து மீண்டும் அவள் அருகில்  அமர்ந்தான்.

 

“வருவியா மாட்டியா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

 

“நான் ஏன் டா வரனும்?”

 

“நீ வராம நான் போறதா இல்ல”

 

“அப்படியா..? சரி தான்”

 

அவள் திமிராக பேச யுவன் அவளுக்கு பின்னால் கையை கொண்டு சென்று இடது கையை பின்னால் இழுத்து பிடித்துக் கொண்டான்.

 

“ஏய் கைய விடுடா”

 

“முடியாது. வரேன் னு சொல்லு”

 

“இப்ப விட போறியா இல்லையா?”

 

யுவன் அசையாமல் இருக்க வேகமாக எழுந்தாள். கை அவன் பிடியில் இருக்க நிற்க முடியாமல் தொப்பென மீண்டும் அமர்ந்தாள்.

 

முன்னால் இருந்தவர்கள் அவர்களை கவனிக்கவில்லை. யுவனை திரும்பி பார்த்தவள் “என் ஷால்ல உட்கார்ந்து இருக்க னு நினைக்கிறேன் யுவா. எந்திரி” என்று சற்று சத்தமாகவே கூறினாள்.

 

அதில் மற்றவர்கள் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது. யுவன் முறைக்க “எந்திரி டா.. ஷால்ல உட்கார்ந்து இருக்க. என்னால எந்திரிக்க முடியல” என்றாள்.

 

இப்போது எல்லோருமே இவர்களை திரும்பி பார்த்து விட வேறு வழியில்லாமல் கையை விடுவித்து விட்டு எழுந்தான்.

 

அவன் எழுந்ததும் தன் துப்பாட்டாவை உதறிக் கொண்டே எழுந்த ஆரா வேகமாக அவனைக் கடந்து சென்றாள்.

 

பெரியவர்கள் தங்கள் பேச்சை தொடர அவர்களுக்கு பின்னால் சென்ற ஆரா யுவனை திரும்பி பார்த்தாள்.

 

கட்டை விரலை தலைகீழாக காட்டி சிரித்து விட்டு சென்றாள். அவளது செய்கையில் யுவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

 

அவனுக்கு இந்த விளையாட்டு பிடித்து இருந்தது. அதுவும் அதில் தோற்க பிடித்து இருந்தது. ஜெயித்து விட்டால் அதோடு முடிந்து விடுமே. தோற்க தோற்க தானே சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. அவளோடு விளையாடவும் முடிகிறது. அதனால் இந்த விளையாட்டை ரசித்தான்.

 

*.*.*.*.*.*.

 

மதிய உணவு நேரம் “அடியே.. மழை வர மாதிரி இருக்கு. போய் துணிய எல்லாம் எடு” என்றார் பத்மினி.

 

கையில் இருந்த போனை தூக்கி போட்டு விட்டு ஆராதனா வீட்டின் பின் பக்கம் வந்தாள். நிறைய துணிகள் காய்ந்து கொண்டிருக்க “ம்மா… இவ்வளவு இருக்கு.. நான் எப்படி இவ்வளவையும் தூக்குறது?” என்று குறையாக கூறினாள்.

 

“ஏன் டி.. துவச்ச எனக்கு கை வலிக்கல. காய போட்ட எனக்கு கை வலிக்கல. காஞ்சத எடுத்துட்டு வர உனக்கு கை வலிக்குதா?”

 

“ஆனா ஊனா இத சொல்லிடுங்க. நீங்களா துவச்சீங்க? வாசிங்மெசின் தான் துவச்சது”

 

கடுப்பாக சொல்லி விட்டு கொடியில் இருந்த துணிகளை பார்த்தாள். நிறைய இருக்க “எந்த பக்கம் இருந்து எடுக்கலாம்?” என்று யோசித்தாள்.

 

“சின்ன துணியெல்லாம் எடுத்துட்டு உள்ள போயிடுவோமா?? வேணாம் வேணாம். பெருசா ரெண்டு மூணு எடுத்தாலே நிறைய தெரியும். குட் ஐடியா”

 

பத்மினியின் சேலைகள் இருக்க ஒன்றை எடுத்துக் கொண்டாள். பக்கத்தில் அவளது உடைகள் இருக்க அதையும் எடுத்துக் கொண்டாள்.

 

அடுத்த சேலையை எடுக்க போக சேலைக்கு பின்னாலிருந்து ஒரு கை அவளை பிடித்து வேகமாக இழுத்தது. ஆரா பதறி கையை உதற “நான் தான்” என்றான் யுவன்.

 

“லூசு. இப்படியா பண்ணுவ? யாரோ னு நினைச்சு அடிச்சுருக்கனும் அப்போ தெரியும்?”

 

“கடைசியா கேட்குறேன். என் கூட வருவியா மாட்டியா?”

 

“அத தான் டா நானும் கேட்குறேன். நான் ஏன் உன் கூட வரனும்?”

 

“நீ வர. வரனும்.”

 

“முடியாது னு சொன்னா?”

 

யுவன் சுற்றியும் பார்த்தான். ஆராவின் துப்பட்டா கொடியில் காய்ந்து கொண்டிருந்தது. அதை வேகமாக உருவி எடுத்தான்.

 

“நீ கூப்பிட்டதும் நான் வந்துடனுமா? அப்படிலாம் உன் பின்னாடி வர முடியாது. அதுக்கு வேற ஆள பாரு….” என்று கூறும் போதே அந்த துப்பட்டாவை ஆராவின் தலையில் போட்டான்.

 

“வேற ஆளு வேணாம் நீ தான் வேணும்” என்றாள்.

 

என்னவென்று ஆரா உணரும் முன் அதைக் கொண்டு அவளது முகத்தை சுற்றி மறைத்தான். கண்கள் மட்டும் தெரிய அவள் யுவனை முறைத்து பார்த்தாள்.

 

“நாளைக்கு ஒன்பது மணிக்கு. நம்ம. வீட்டுக்கு வெளிய நிற்பேன். வர்ர…”

 

அவளால் வாயை திறந்து பேச முடியவில்லை என்றாலும் கண்ணில் தெனாவெட்டு தெரிந்தது.

 

“வரலனா என்ன பண்ணிடுவ?” என்பது போல் பார்த்து வைத்தாள்.

 

“என்ன பண்ணுவனா?” என்று கேட்டவன் துப்பட்டாவிற்கு மேல் அவள் உதட்டில் முத்தம் பதித்தான்.

 

தெனாவெட்டு தெரிந்த கண்களில் இப்போது அதிர்ச்சி தெரிய “புரியும் னு நினைக்குறேன்” என்று கூறி விட்டு வேகமாக விலகிச் சென்றான்.

 

அவன் சென்றதும் அவசரமாக தன் முகத்தை சுற்றியிருந்த துப்பட்டாவை விலக்கினாள். மூச்சு விடுவது சிரமமாக இருக்க “பாவி.. மூச்சு விட கூட முடியலையே” என்றாள்.

 

“இதுக்கே இப்படி சலிச்சுக்குற? நீ எல்லாம் ஆபிஸ்ல எப்படி தான் வேலை பார்க்குற னு தெரியல” – பத்மினி

 

அன்னையின் குரலை கேட்டதும் பதறி திரும்பினாள். கொடியில் இருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார் பத்மினி.  தலையில் இருந்த துப்பட்டாவை வேகமாக எடுத்து சுருட்டி பிடித்துக் கொண்டு அவசரமாக யுவனை தேடினாள். எங்கும் தென்படவில்லை.

 

‘எஸ் ஆகிட்டான். நல்ல வேளை ஆத்தா பார்க்கல. பார்த்து இருந்தா வெளக்கமாத்த எடுத்து பூசை போட்ருக்கும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

“அட நின்னுட்டே இருக்காம எடு. மழை வந்ததும் தான் எடுப்பியா?”

 

“இது இவ்வளவு இருக்கு. போமா”

 

“அத வாங்கும் போதும் போடும் போதும் யோசிக்கனும். சோம்பேறி. ஒரு வேலை உருப்படியா செய்ய தெரியல. உனக்கு ஒரு வேலைய குடுத்து சம்பளம் வேற குடுக்குறாங்க”

 

“ம்மா.. அதுவும் இதுவும் ஒன்னா?”

 

“எல்லா வேலையும் வேலை தான்”

 

“அது எப்படி? அங்க எனக்கு சம்பளம் வருது. இங்க என்ன தரீங்க?”

 

“ஏன் உன்ன வளர்த்து மூணு நேரம் சோறு போடுறோமே பத்தாதா…?”

 

“பெத்த பிள்ளைக்கு சோறு போட கணக்கு பார்க்குறீங்களே.. நீங்க எல்லாம் ஒரு அம்மா வா?”

 

“நான் எங்க உன்ன பெத்தேன்? ஆஸ்பத்திரி குப்ப தொட்டியில கிடந்துல எடுத்துட்டு வந்து வளர்க்குறேன்”

 

“அம்மா…”

 

“வாய் பேசி கிட்டே இருக்காம துணிய எடு”

 

“குப்ப தொட்டியில கிடந்து எடுத்த பிள்ள இவ்வளவு தான் செய்யுமாம். மத்தத நீங்க ஒரு பிள்ளைய பெத்து வளர்த்து செய்ய சொல்லுங்க”

 

ஆரா கோபமாக உள்ளே போய் விட தலையிலடித்துக் கொண்டு பத்மினியே எல்லாவற்றையும் எடுத்தார்.

 

கதவின் பின்னால் நின்று இருந்த யுவன் இவர்கள் உரையாடலை கேட்டு சிரித்து விட்டு சென்றான்.

 

மற்ற துணிகளை ஹாலில் போட்டு விட்டு தன் உடைகளை எடுத்துக் கொண்டு ஆரா அறைக்குள் ஓடினாள்.

 

“ஏய் சாப்ட வாடி” – பத்மினி

 

“குப்ப தொட்டி பிள்ளைக்கு இவ்வளவு அக்கறை எல்லாம் தேவை இல்ல. எனக்கு தூக்கம் வருது. அப்பா வரவும் அவரோட சாப்டுறேன். டோன்ட் டிஸ்டர்ப் மீ” என்று கூறி விட்டு கதவை அடைத்துக் கொண்டாள்.

 

“கண்ட நேரத்துல தூங்கி பழகி இருக்கா” என்று திட்டி விட்டு சென்று விட்டார் பத்மினி.

 

கண்ணாடி முன்னால் வந்து நின்றவள் அந்த துப்பட்டாவை எடுத்து அவனை போலவே தலையில் போட்டு முகத்தை மறைத்து பார்த்தாள். சரியாக பொருந்தவில்லை.

 

உடனே எடுத்து மீண்டும் முயற்சிக்க இப்போது சரியாக பொருந்தியது. அதை கண்ணாடியில் பார்த்தவளுக்கு அவன் முத்தமிட்டது ஞாபகம் வந்தது.

 

முகத்தை மூடிக்கொண்டு சிரித்தவள் அவன் இதழ் பட்ட இடத்தை கையில் எடுத்து பார்த்தாள். மீண்டும் அந்த முத்தம் ஞாபகம் வர துப்பட்டாவில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

 

பிறகு நிமிர்ந்தவள் அதை மடித்து பத்திரபடுத்தினாள். அதே நேரம் அவளது அறை சன்னலின் வழியாக கல் வந்து விழுந்தது.

 

எட்டி பார்க்க வீட்டு மாடியில் நின்று கொண்டு யுவன் தான் எறிந்திருந்தான். ஆரா அவனை முறைக்க ஒன்பது விரல்களை காட்டி விட்டு டாடா சொல்லிச் சென்று விட்டான்.

 

அவன் சென்றதும் ஆராதனா சிரித்து விட்டு மெத்தையில் விழுந்து விட்டாள்.

 

மறுநாள் காலை சொன்னது போல் ஒன்பது மணிக்கு யுவன் கிளம்பி விட ஆராதனாவும் அவனுடன் கிளம்பினாள்.

 

“எங்கடா போறோம்? இப்பவாச்சும் சொல்லு”

 

“என் காலேஜ் ஃப்ரண்ட்ஸ பார்க்க”

 

“எதுக்கு?”

 

“இன்விடேஷன் கொடுக்குறதுக்கு முன்னாடி டீரீட் வை னு கேட்டாங்க. வேற வழியில்ல. உன்ன பார்த்ததும் இல்லயா. அதான் கூட கூட்டிட்டு போறேன்”

 

“ஓகே.. யாரா இருந்தா எனக்கு என்ன? பார்த்தோமா பேசுனோமா னு கிளம்பிட வேண்டியது தான்”

 

“குட்”

 

ஆனால் எதனால் யுவன் அவ்வளவு வற்புத்தி இதற்காக அழைக்க வேண்டும் என்று ஆராதனாலிற்கு புரியவில்லை. ட்ரீட் பார்ட்டி என்று கூறி இருந்தால் ஆராதனா வருவதற்கு யோசித்து இருப்பாள் தான். ஆனால் சொல்லாமலே அழைத்துச் செல்கிறானே என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.

 

ஒரு ஹோட்டலில் வந்து இறங்கினர். ஆராதனாவும் யுவனும் ஒன்றாக உள்ளே செல்ல பலர் அங்கு அமர்ந்து இருந்தனர்.

 

“என்னடா இவ்வளவு பேரு” என்று ஆராதனா மெல்லிய குரலில் கேட்க “இதுக்கே வா. இன்னும் இருக்கு” என்றான்.

 

“ஹேய்… நியூ கப்புல்” என்று எல்லாரும் உற்சாகமாக வரவேற்றனர்.

 

அதில் பல பெண்களின் கண்கள் ஆராதனாவையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. எல்லோரையும் யுவன் அறிமுகப்படுத்தினான்.

 

“ஹாய்…” என்று ஆராதனா முடித்துக் கொள்ள “ரொம்ப பேச மாட்டாங்களோ?” என்று ஒரு பெண் கேட்டாள்.

 

“ட்ரை பண்ணி பாரேன். பதில் எப்படி வருது ‌னு” என்று யுவன் கூற “ஓகே.. நாங்க தனியா பேசிக்கிறோம்” என்று ஆராதனாவை தனியாக இழுத்துச் சென்று விட்டனர்.

 

“என்ன படிச்சுருக்க ஆராதனா?”

 

“உனக்கும் யுவனுக்கும் எப்போ இருந்து பழக்கம்?”

 

“யுவன் அரேன்ஜ் மேரேஜ் னு சொன்னான். நிஜம்மாவா?”

 

“நீங்க எப்படி பார்த்துக்கிட்டீங்க?”

 

“யுவா ஏன் உங்கள செலக்ட் பண்ணான்?”

 

“எதாச்சும் சொல்லு. அமைதியான பொண்ணா நீ?”

 

அடுத்தடுத்து கேள்விகள் பறக்க ஆராதனாவிற்கு சற்று எரிச்சல் வந்தது. எதற்காக யுவன் வருந்தி அழைத்தான் என்று இப்போது புரிந்தது. இவர்கள் கேள்வியில் என்னை மாட்டி விட்டு விட்டானே என்று நொந்து கொண்டாள்.

 

“பேசு ஆராதனா”

 

“என்ன பேசனும்?” – ஆராதனா.

 

“என்னவா?”

 

“நீங்க பாட்டு கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க. கேள்விக்கு பதில் சொல்லவா வந்தேன்? பேச வந்தேன். பேசுறதும் கேள்வி கேட்குறதும் ஒன்னா?”

 

ஆராவின் கேள்வியில் பலர் வாயடைத்து போய் விட்டனர்.

 

“இப்போ என்ன? என்ன பத்தி தெரியனும் அதான? நானும் யுவனும் சின்ன வயசுல இருந்து ஒன்னா வளர்ந்தவங்க. அவனுக்கு என்ன கட்டி வைக்க அவன் வீட்டுல முடிவு பண்ணாங்க. எங்க வீட்டுலையும் ஓகே சொல்லிட்டாங்க. இப்போ மேரேஜ். அவ்வளவு தான்”

 

திரும்ப கேள்வி கேட்க வாயை திறக்க “கேள்விய தவிர வேற என்ன வேணா பேசுங்க” என்றாள்.

 

சுற்றியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள யுவன் வந்து விட்டான்.

 

“எல்லாரும் சாப்டலயா? ஆரா.. மார்னிங் சாப்டலல. வா” என்று அழைத்துச் சென்று விட்டான்.

 

ஆராதனா யுவனை முறைத்துக் கொண்டே சாப்பிட அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

 

“கோச்சுக்காத டி”

 

“என்னடா ஃப்ரண்ட்ஸ் இதுங்க? கேள்வி மேல கேள்வி கேட்டு சாகடிக்குதுங்க” என்று தலையை பிடித்துக் கொண்டாள்.

 

“இன்னும் பத்து நிமிஷத்துல பில் கட்டிட்டு கிளம்பிடலாம்” என்று கூறி வேகமாக சாப்பிட்டு முடித்தான். சொன்னது போல் வேகமாக கிளம்ப எல்லோரும் அவர்களை பிடித்து வைக்க பார்த்தனர்.

 

“ஆராவோட ஃப்ரண்ட்ஸ மீட்‌ பண்ணனும். நீங்க சாப்ட்டு கிளம்புங்க. அப்புறம் பேசலாம்” என்று‌ கூறி‌ விட்டு யுவன் ஆராதனவுடன் கிளம்பி விட்டான்.

 

ஆரா முகத்தை தூக்கிக் கொண்டு வர “சரி வா வெளிய எங்கயாவது போகலாம்” என்றான்.

 

“ஒன்னும் வேணாம்”

 

“கோவமா?”

 

“ஆமா”

 

“சாரி…”

 

“…..”

 

“அவங்க எல்லாம் ஒரு நாள் எனக்கு லவ் லெட்டர்ஸ் எழுதுனவங்க ஆரா. அதான் அப்படி ஓவரா‌ ரியாக்ட் பண்ணிட்டாங்க”

 

“அப்போ ஏன் டா கூட்டிட்டு வந்த?”

 

“இங்க பார்க்கலனா கல்யாண மேடையிலயே வந்து கேள்வி கேட்குங்க. எப்படியும் அவங்கள நீ சமாளிச்சுடுவ னு தான் கூட்டிட்டு வந்தேன்”

 

“போ.. நான் வீட்டுக்கு போறேன்”

 

ஆராதனாவின் கன்னத்தை பிடித்து கிள்ளியவன் “சும்மா வாடி.. எல்லாத்துக்கும் கோச்சுக்கிட்டு” என்று கூறி அழைத்துச் சென்றான்.

 

நன்றாக ஊரை சுற்றி விட்டு மாலை தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அர்ச்சனா காபி போட்டு கொடுக்க பத்மினி தலையை பிடித்துக் கொண்டு குடித்தார். அதை பார்த்து விட்டு ஆராதனா முழித்தாள்.

 

“என்ன மா ஏன் தலை வலி?”

 

“உங்க அத்த கிட்ட பேசி தான். அய்யோ உயிர வாங்கிடுச்சு. கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வரோம். வீட்டுல இருப்பீங்களா னு கேட்டது குத்தமா.. அந்த பேச்சு பேசுது”

 

“ஹா ஹா.. பாவம் மா நீங்க. அப்பாவ பேச விடுங்க. மாட்டிட்டு முழிக்கட்டும்”

 

“அதான் காலையிலயே சொல்லிட்டாரே… சொந்தபந்தத்த நீ தான் பார்த்துக்கனும். நான் பிஸ்னஸ் ஆளுங்கள தான் பார்ப்பேன் னு. தப்பிச்சுட்டாரு… இருக்கு.. ரெண்டு நாள் உப்பு இல்லாத சாப்பாடு போடுறேன்”

 

“பாவம் அப்பா… மாமா நிலம எப்படி?”

 

“அவருக்கும் இது தான் னு நினைக்குறேன்” – அர்ச்சனா.

 

“இப்போவே உங்க கிட்ட இருந்து நல்லா ட்ரைனிங் எடுத்து யுவன டார்ச்சர் பண்ண போறேன். சொல்லுங்க. என்னலாம் பண்ணலாம்?”

 

“உன்ன அவனுக்கு கட்டி வைக்குறதே டார்ச்சர்‌ தான்” – பத்மினி.

 

“அம்மா….”

 

“அவன் எதுவும் பண்ணா நான்‌ ஏன்‌ இருக்கேன்? நான் பார்த்துக்கிறேன்” என்று அர்ச்சனா கூற ஆராதனா வேகமாக தலையாட்டினாள்.

 

“நல்ல மாமியார் நல்ல மருமக…  போய் வேற பொழப்பு இருந்தா பாருங்க போங்க” என்று துரத்தி விட்டார் பத்மினி.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்