நிச்சயதார்த்த நாளும் வந்து சேர்ந்தது. அதற்கென ஒரு மஹாலை பிடித்து அதில் தான் நிச்சயதார்த்தம் வைத்தனர். அந்த மஹாலே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர் நண்பர்கள் மட்டுமே நிறைய இருந்தனர்.
யுவனின் பள்ளி கல்லூரி தோழர்கள் வந்து இருந்தனர். ஆராவின் பள்ளி தோழிகளும் பூஜாவும் கீர்த்தனாவும் வந்து இருந்தனர். வியாபார வட்டத்தில் முக்கியமானவர்களை சத்தியனும் ரகுநாதனும் அழைத்து இருந்தனர்.
யாமினியின் குடும்பம் வந்து ஒரு ஓரமாக அமர்ந்து விட்டது. வராமலே இருக்க நினைத்தால் மாப்பிள்ளைக்கு தாய்மாமன் என்று வர வேண்டியதாகி விட்டது.
யாமினி யாரிடமும் பேசாமல் அமைதியாக அமர்ந்து கொண்டு போனை பார்க்க ஆரம்பித்து விட்டாள். சங்கவி வேண்டுமென்றே அலங்கரித்துக் கொண்டு வந்து இருந்தாள்.
ஆராதனாவை விட அவள் அழகாக தெரிய வேண்டும் என்று நிறைய மெனக்கெட்டு இருந்தாள். ஆனால் ஒருவர் கூட அவளை திரும்பி பார்க்கவில்லை.
விழாவின் நாயகர்களை விட்டு விட்டு வில்லியை யாராவது பார்ப்பார்களா? யுவனும் ஆராதனாவும் தொண்டை வரை நிறைந்த சந்தோசத்துடன் அமர்ந்து இருந்தனர்.
நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டு தட்டு மாற்றப்பட்டது. அன்றே திருமண தேதியும் குறிக்கப்பட்டது. சொந்தபந்தங்கள் நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி விடை பெற்று விட இரண்டு குடும்பமும் வீடு வந்து சேர்ந்தனர்.
“உங்க அண்ணனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா அர்ச்சனா?” – பத்மினி.
“ம்ம்.. யாமினிய தான் கட்டி வைக்கனும் னு சொல்லிட்டே இருப்பார். நான் தான் பிடி கொடுக்காம போயிட்டே இருந்தேன். இப்போ அவள விட்டுட்டு ஆராவ பேசவும் கோச்சுக்கிட்டார்”
“சண்ட போட்டாரா?”
“இல்ல.. ஆனா அண்ணி எதுவுமே பேசாம முகத்த திருப்பிக்கிட்டாங்க. அண்ணன் கேட்கும் போது சொந்தத்துல கல்யாணம் பண்ண கூடாது மாமா னு யுவன் சொல்லிட்டான். அதுனால அமைதியாகிட்டார்”
“அந்த பொண்ணு முகம் சரியில்ல. ரொம்ப வாடி போயிருந்துச்சுல?”
“சீக்கிரம் சரியாகிடுவா. நான் முதல்லையே சொன்னேன். இந்த மாதிரி ஆசைய வளர்த்து விடாதீங்க னு. அண்ணன் தான் கேட்கல. போக போக சரியா போயிடும். பெத்தவங்க பிள்ளைய அப்படியே விட்ர மாட்டாங்க”
“அதுவும் சரி தான்”
அர்ச்சனாவும் பத்மினியும் இரவு ஊஞ்சலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆராதனா வாசலில் அமர்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்தாள். இவர்கள் பேசியது காதில் நன்றாகவே விழுந்தது. யாமினி அவளிடம் வம்புக்கு வந்தது இல்லை. யுவனுக்காக பேசுவாள் அவ்வளவு தான். அதையும் பேச விடாமல் ஆராதனா தடுத்து விடுவாள்.
இப்போது யாமினியின் மனநிலையை நினைத்து வருத்தம் வந்தது. அவளும் பாவம் தானே. வருடக்கணக்காக ஆசையை வளர்த்து விட்டு இப்போது இல்லை என்று கூறி விட்டார்கள். ஆசையை வளர்த்தது அவளது பெற்றோர்கள்னின் தவறாக இருந்தாலும் அவளது தவறு யுவனின் மனதை அறிந்து கொள்ளாமல் ஆசையை வளர்த்துக் கொண்டது.
யாமினியை பற்றி யோசித்தவள் யுவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். உடனே அவன் அழைக்க இவர்கள் பேசியதை எல்லாம் சொல்லி விட்டாள்.
“யாமினி பாவம் தான். ஆனா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நான் முதல்லையே தெளிவா எல்லாரு முன்னாடியும் சொல்லிட்டேன். யாமினி எனக்கு ஃப்ரண்ட் அவ்வளவு தான்னு. அதையும் மீறி இத்தனை வருசம் அவளுக்கு ஆசைய கிளப்பி விட்டது என் கணக்குல வராது” என்று யுவன் கூற “அதான் டா நானும் நினைச்சேன்..” என்றாள் ஆராதனா.
“நாம எப்ப ஒன்னா யோசிக்க ஆரம்பிச்சோம்?”
“ஆமால.. இப்போலாம் மாத்தி யோசிச்சு சண்ட போடுறதே இல்லையே.. ஏன்?”
“நான் சொல்லட்டா?”
“சொல்லு சொல்லு”
“சொல்ல மாட்டேன். நீயே கண்டு பிடி. இப்போ போய் தூங்கு. குட் நைட்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான்.
குறுஞ்செய்தியில் அவனை திட்டி விட்டு ஆரா படுத்து உறங்கி விட்டாள்.
*.*.*.*.*.*.
இரண்டு நாள் கழித்து ஆராதனா பதறி யுவனிடம் ஓடி வந்தாள். அவள் வந்த அதே நேரம் இம்ரானும் பதட்டமாக ஓடி வந்தான். காலையிலிருந்து மீட்டிங்கில் இருந்த யுவன் அவர்களை பார்த்து விட்டு புருவம் சுருக்கினான்.
பேசிக் கொண்டிருந்தவர்களை அவசரமாக அனுப்பி விட்டு என்னவென்று விசாரிக்க “கஸ்டமர் சைட்ல இருந்து ரிப்போர்ட் வந்து இருக்கு. க்வாலிட்டி சரி இல்லனு. அதுவும் ரீசன்ட்டா ரிலீஸ் ஆன எல்லா ப்ராடெக்ட்டும் அப்படி தான் இருக்கு” என்று இம்ரான் கூறினான்.
“க்ளைண்ட் போன் பண்ணி ஸ்டாக்க இப்போவே திருப்ப எடுத்துக்க சொல்லுறாங்க” – ஆராதனா.
“சரி எடுத்துக்க ஆள அனுப்பு. நீ பேக்ட்ரிக்கு கால் பண்ணி எல்லா வேலையும் ஸ்டாப் பண்ண சொல்லு. கம்ப்ளைண்ட் வந்த ப்ராடெக்ட்ட கொண்டு வர சொல்லு” என்று யுவன் அடுத்தடுத்து வேலை கூறினான். ஆராதனாவும் இம்ரானும் அவன் சொன்ன வேலையை உடனே செய்தனர்.
“அவங்க பணத்த முழுசா திருப்பி கொடுங்க. காண்ட்ராக்கட்ட முடிச்சுக்கலாம் னு சொல்லுறாங்க யுவா” என்று ஆரா கூற “மூணு நாளுக்கு அப்புறம் நேரா வாங்க பேசிக்கலாம் னு சொல்லு” என்று கூறினான்.
எல்லோரின் காதுக்கும் பிரச்சனை சென்று சேர பரபரப்பாகினர். யாமினி தன் கவலையை சற்று தள்ளி வைத்துவிட்டு பிரச்சனையை பார்த்தாள்.
பிரச்சனை வந்த அத்தனை பொருட்களும் மீண்டும் தொழிற்சாலைக்கு வந்து சேர நடந்து கொண்டிருந்த வேலை எல்லாம் அப்படியே நின்று விட்டது.
இருக்கும் பிரச்சனையில் சிலர் ஆதாயம் தேட பார்க்க அதை சமாளிக்க ஆராதனாவிற்கு போதும் போதுமென ஆகி விட்டது. இம்ரானுக்கும் வேலை தலைக்கு மேல் இருந்தது.
அவர்கள் பிரச்சனையை பார்த்துக் கொண்டு இருக்கும் நேரம் யுவனின் கைக்கு பொருள் வந்து சேர்ந்தது. பார்ப்பதற்கு எப்போதும் போல் தான் இருந்தது. ஆராதனா அதை வாங்கி சுரண்டி பார்க்க தோல் கையோடு வந்து விட்டது. எந்த முயற்சியும் இல்லாமல் இரண்டாக கிழித்து விடுவது போல் இருந்தது.
“இப்படி க்வாலிட்டில யாரு லெதர் அனுப்புனது? அந்த கம்பெனிய பிடிக்கனும். நான் அத பார்த்துக்கிறேன். நீங்க மத்தவங்கள சமாளிங்க” என்று கூறி விட்டு யுவன் சென்று விட்டான்.
சில மணி நேரத்தில் அந்த பொருட்கள் செய்ய பயன்படுத்திய மூலப் பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று கண்டு பிடித்து விட்டான்.
அந்த நிறுவனத்தினரை வரவழைக்க அவர்களும் வந்து சேர்ந்தனர். ஆராதனாவிற்கு அதிக வேலையில் தலை வலிக்க காபி போட்டு குடிக்க வெளியே வந்தாள். அப்போது வருணியை பார்த்து விட்டாள்.
‘இது இங்க என்ன பண்ணுது?’ என்று யோசித்துக் கொண்டே “சீனியர்” என்று அழைத்தாள். வருணி திரும்பி பார்க்க அருகில் சென்றாள்.
“ஆராதனா?”
“இங்க என்ன பண்ணுறீங்க?”
“ஒரு மீட்டிங். அண்ணனோட வந்தேன். நீ என்ன பண்ணுற?”
“மறந்தாச்சா? எங்க கம்பெனி இது.”
“ஓ.. ஆமா ஆமா”
“மீட்டிங் யாரு கூட ?”
“யுவன்”
மணியை பார்த்தவள் “ஆரம்பிக்கலயா?” என்று கேட்டாள்.
“இல்ல. நான் உள்ள போகல. அண்ணன் பேசிப்பான்”
“ஓகே . வாங்களேன் ஆபிஸ சுத்தி காட்ட சொல்லுறேன்” என்று அழைத்து சென்றவள் ஒரு பெண்ணை அழைத்து அலுவலகத்தை சுற்றிக் காட்ட கூறினாள்.
வருணி அலுவலகத்தை சுற்றி முடிக்க வாசன் மீட்டிங் முடிந்து வெளியே வந்தான்.
“என்ன வாசு? என்னாச்சு?”
“ஒன்னும் இல்ல. கிளம்பலாம் வா”
“ஏய் உன் கூட வந்ததே யுவன பார்க்க தான். பார்க்காமலே போகவா?”
“அதோ நிக்கிறார் பாரு. பார்த்துக்க. முக்கியமா அவருக்கு நிச்சயமான பொண்ணும் நிக்குது பார்த்துக்க”
“அத ஏன்டா நியாபக படுத்துற?”
“பின்ன? நானே கான்ட்ராக்ட்ட கேன்சல் பண்ணாம விட்டாரே னு உயிர் பிழச்சு வந்துருக்கேன். நீ என்னடா னா சைட் அடிக்க கிளம்புற”
“எதுவும் பிரச்சனையா?”
“போகும் போது சொல்லுறேன் வா” என்று அழைத்துச் சென்று விட்டான்.
மீட்டிங் முடிந்து வெளியே வந்த யுவனை ஆராதனா பிடித்துக் கொண்டான்.
“இப்போ என்ன மீட்டிங்?”
“அத அப்புறமா சொல்லுறேன். டைம் ஆகிடுச்சு வீட்டுக்கு கிளம்பு” என்று கூறி அனுப்பி வைத்தான். பிறகு அவன் கிளம்பி தந்தையும் மாமாவையும் பார்க்க சென்றான். அங்கும் இந்த பிரச்சனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க சத்தியனும் ரகுநாதனும் களைத்து விட்டனர்.
அவர்களிடம் வந்த யுவன் தன் விசாரிப்பின் முடிவை கூறினான். யாரும் இப்படி ஒன்றை எதிர் பார்க்காததால் என்ன பேசுவதென்று புரியவில்லை.
“ஃபேக்டரில க்வாலிட்டி செக் பண்ணி பொய்யா ரிப்போர்ட் அனுப்பி இருக்காங்க. அவங்கள நாளைக்கு விசாரிச்சுட்டு ஒரு முடிவுக்கு வரலாம்” என்று கூறினான்.
இரவு ஆராதனா பிரச்சனையை பற்றி விசாரிக்க யுவன் எதுவும் சொல்லவில்லை. ஆராதனாவும் அவனை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டாள்.
அடுத்த நாள் காலை அலுவலகத்தில் யுவன் அமர்ந்து இருக்க யாமினி வந்தாள். எதோ ஒரு ஃபைலை கொடுக்க வாங்கி வைத்துக் கொண்டான். அங்கிருந்து உடனே செல்லாமல் தயங்கி தயங்கி யாமினி எதோ சொல்ல வந்தாள்.
அவள் சொல்ல வந்தது யுவனுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் புரியாதது போல் “என்ன யாமினி போய் வேலைய பாரு… இங்கயே நின்னுட்டு இருக்கப் போறியா?” என்று கேட்டான்.
அதில் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு யாமினி சென்று விட யுவனுக்கு கஷ்டமாக இருந்தது. இதில் அவன் எதுவும் செய்து விட முடியாது. அதனால் தான் தெரியாதது போல் அவளை அங்கிருந்து அனுப்பி விட்டான்.
சில நிமிடங்கள் கழித்து ஆரா உள்ளே நுழைந்தாள்.
“சார்… இந்தாங்க… இத நான் தான் தூக்கிட்டு வரனுமா? ஏன் ப்யூன் தூக்கிட்டு வந்தா ஆகாதா?”
ஆரா கடுப்புடன் அந்த கோப்புகளை மேசையில் வைத்தாள்.
“இருக்க வேலையில இது வேற தனியா செய்ய சொல்லிறியே. உனக்கு மனசாட்சி இல்ல?” – ஆராதனா.
“இது எல்லாம் என்ன தெரியுமா?”
“என்ன?”
“க்வாலிட்டி ரிப்போர்ட்ஸ். நெக்ஸ்ட் மன்த் ப்ராடெக்ட்க்கு யூஸ் பண்ண மெட்டிரீயல் ரிப்போர்ட்”
“என்னது??”
“ஆமா…. இத நீ தான் செக் பண்ணனும். பண்ணி கொடு”
“நானா?”
“வேற யாரு?”
“என்ன நம்பி…. நான் பண்ணுவேன்னு நினைக்கிறியா?”
ஆரதனா சந்தேகமாக கேட்டாள். யுவன் பதில் சொல்லாமல் அவளை கூர்ந்து பார்த்தான். அவனது பார்வையை உணர்ந்தவள் “ஓகே.. நான் போய் வேலைய பார்க்குறேன்” என்றாள்.
ஆரா அந்த கோப்புகளை தூக்கப்போக “எங்க போற?” என்று கேட்டான்.
“என் கேபின்க்கு…”
“வேணாம்.. இங்கயே உட்கார்ந்து பண்ணு”
ஆரா அவனை உற்று பார்த்தாள். அவள் பார்வையை கவனித்தவன் புருவத்தை உயர்த்த அவள் பதில் எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
சில நிமிடங்கள் அவள் பார்வையை தாங்கியவன் முகத்தில் சிரிப்பு வந்தது.
“என்னடி சைட் அடிக்குற?”
“என்னடா பிரச்சனை?”
“ஏன் அப்படி கேட்குற?”
“லாஸ்ட் டைம் என்ன இங்க உட்கார வச்சு வேலை வாங்குனது ஒரு பிரச்சனை வந்தப்போ தான்.. அதுல எதோ சிக்கல் வந்தப்போ தான். இப்பவும் என் கூட இருக்க ட்ரை பண்ணுறியே… எதுவும் புது சிக்கலா?””
அவள் கேட்டதும் வேகமாக எழுந்தவன் கண்ணாடியில் இருந்த திரைகளை எல்லாம் மூடி விட்டான். ஆரா அவனது செயலை புரியாமல் பார்க்க ஒரு வேகத்துடன் வந்து அவளை அணைத்துக் கொண்டான்.
இறுக்கமாக அணைத்து அவள் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டான். முதலில் அவன் செயலில் அதிர்ந்தவள் பிறகு யோசனையுடன் அணைத்துக் கொண்டாள்.
மெதுவாக தலையை தடவிக் கொடுத்தவள் “இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே” என்றாள்.
அளவிற்கு அதிகமாக இறுக்கத்தை யுவன் அதிகரித்த போதும் ஆரா யோசனையுடனே நின்று இருந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து தோளை விட்டு எழுந்தவன் ஆராவின் முகத்தை பார்த்தான். மனதில் குழப்பம் இருந்த போதும் ஆரா அவனை பார்த்து இதமாக புன்னகைத்தாள். அந்த புன்னகை அவனுக்கு இதத்தை தர அவனும் புன்னகைத்தான்.
காலை சற்று உந்தி அவன் நெற்றியில் புரண்ட முடிகளை ஒதுக்கி விட்டவள் இதழ் பதித்தாள். அதில் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த கலக்கமும் அவனை விட்டு ஓடி போயின.
“எல்லாத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கும் யுவா.. நல்ல பக்கத்த மட்டும் பாரு. நல்லதா முடியும்”
யுவன் அவளது வார்த்தையில் ஆச்சரியப்பட்டான். பிறகு சிரிப்போடு அவளது நெற்றியில் முட்டியவன் “எங்க இருந்துடி இப்படி பேச கத்துக்கிட்ட?” என்று கேட்டான்.
“வேற யாரு எல்லாம் அத்தை கிட்ட இருந்து தான். அவங்க மகன் தான் மக்கு… மருமகளாவது புத்திசாலியா இருக்க வேணாம்?”
“நான் மக்கா?”
“பின்ன… ஆபிஸ்ல இருந்துட்டு இப்படி கட்டி பிடிச்சுட்டு நிக்குற.. யாராவது வந்துட்டா மானம் போகும் னு நினைப்பு வேணாம்?”
“என் ஆள நான் கட்டி பிடிக்கிறேன்… பார்க்குறவங்க கண்ண மூடிட்டு போகட்டும்”
“ஆளா? இது எப்போ இருந்து?”
“எப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியோ அப்போ இருந்து”
“இன்னும் அபிஸியலா கல்யாணம் பண்ணல சார்.. அதுனால கைய எடுங்க”
“அபிஸியலாகிட்டா ஓகே வா?”
யுவன் கண் சிமிட்டி கேட்டான். ஆரா ஆச்சரியமாக பார்க்க அவள் நெற்றியில் முட்டி விட்டு விலகினான் . பிறகு பூட்டி இருந்த திரைகளை விலக்கி விட்டு “உட்கார்ந்து வேலைய பாரு” என்றான்.
ஆராதனா அங்கே அமர்ந்து எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து முடித்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து விட தனக்கு தோன்றிய சந்தேகங்களை யுவனிடம் கேட்டுக் கொண்டாள்.
அவள் வேலையை முடிக்க யுவனுக்கு அழைப்பு வந்தது. ஆராவிடம் சொல்லி விட்டு உடனே கிளம்பிச் சென்று விட்டான்.
ஆரா அறையை விட்டு வெளியே வர யாமினி அவசரமாக அவளிடம் வந்தாள்.
“எங்க போறான்?”
“தெரியல. மீட்டிங் னு மட்டும் தான் சொன்னான்”
“ஓ….”
யாமினி முகத்தை தொங்க போட்டுக் கொண்டு செல்ல ‘எதோ சரியில்லையே’ என்று தோன்றியது ஆராவிற்கு.
தன் அறைக்குள் செல்ல அவளது போன் இசைத்தது. எடுத்து காதில் வைக்க வருணி பேசினாள்.
“ஆராதனா… நான் வருணி”
“ம்ம்.. சொல்லுங்க”
“அந்த க்வாலிட்டி பிரச்சனையில எங்க காண்ட்ராக்ட் கேன்சல் ஆகாதுல?”
ஆராதனாவிற்கு அவள் கேட்பது புரியவில்லை என்றாலும் “அத பத்தி யுவன் கிட்ட தான் பேசனும்” என்று சொல்லி வைத்தாள்.
“இல்ல.. லோ ப்ரைஸ்ல வாங்குனது மாதவன் சார் தான். அவர் கேட்கவும் தான் கொடுத்தோம். எதுக்கு வாங்குறார் னு சொல்லாமலே வாங்கிட்டு போயிட்டார். இப்போ பிரச்சனை எங்க தலையில விழ கூடாது பாரு”
ஆராதனாவிற்கு எல்லாமே சட்டென விளங்கி விட்டது. யுவனின் வருத்தம் யாமினியின் வருத்தம் எல்லாமே விளங்கி விட நெற்றியை தேய்த்துக் கொண்டாள்.
“யுவனும் அப்பா மாமாவும் கண்டிப்பா நல்ல முடிவு தான் எடுப்பாங்க. பொறுமையா இருங்க” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
சில நிமிடங்கள் யோசனையில் முழ்கியவள் பிறகு அதை விட்டு விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள். வீட்டிற்கு ஆராதனா வரும் போது அர்ச்சனாவும் பத்மினியும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தனர்.
“எங்க கிளம்பிட்டீங்க?”
“வா வா… கல்யாண சேலை எல்லாம் எடுக்கனும். இன்னைக்கு நல்ல நாள் னு சொல்லி இருந்தேன் ல?” – பத்மினி
“அட ஆமா… இருக்க பிரச்சனையில இத மறந்துட்டேன். நாம மட்டுமா போறது? அப்பா மாமா யுவா எல்லாம் வரட்டும்”
“வருவாங்க. எப்படியும் போனதுமே எடுத்துட மாட்டோம். அதுனால நாம முதல்ல போவோம் அவங்க வருவாங்க.” – அர்ச்சனா.
“சரி நான் ட்ரஸ் மாத்திட்டு வரேன்” என்று உள்ளே சென்று விட்டாள். தான் தெரிந்து கொண்ட விசயத்தை இவர்களிடம் கூறலாமா வேண்டாமா என்று அவளுக்கு யோசனையாக இருந்தது.
யுவன் அவளிடமே சொல்லாத போது அவளும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல் இருப்பதே நலம் என்று தோன்ற கிளம்பி வெளியே வந்தாள்.
மூவரும் ஆராவின் காரில் கிளம்பி விட்டனர். ஆயிரம் புடவைகளை பார்த்து கடைசியாக ஆறு புடவைகள் ஆராதனாவிற்கு வாங்கி முடித்தனர். மற்றவர்களுக்கு வாங்கிக் கொண்டிருக்க சத்தியன் ரகுநாதன் யுவன் மூவரும் வந்து சேர்ந்தனர்.
வீட்டுக்கு சென்று உடை மாற்றி விட்டு வந்திருப்பது பார்த்த உடனே தெரிந்தது. யுவன் வந்ததும் நேராக ஆராதனாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
“நான் இல்லாமலே சேலைய எடுத்திட்டியா?” என்று யுவன் போலி கோபத்துடன் கேட்க “இன்னும் மூகூர்த்த சேலைய செலக்ட் பண்ணல. அது அங்க இருக்கு. மூணுல எது ஓகே னு பார்த்து சொல்லு” என்று காட்டினாள்.
கையில் எடுத்துக் கொண்டவன் ஒவ்வொன்றாக அவளது முகத்தருகே வைத்து பார்த்தான். அவன் முகத்தில் சலிப்பை பார்த்து விட்டு “என்னடா எதுவும் நல்லா இல்லையா? வேற எடுக்கலாமா?” என்று கேட்டாள்.
“எல்லாமே உனக்கு நல்லா இருக்குடி. அதான் எத எடுக்க னு குழப்பமா இருக்கு… பேசாம மூணயும் வச்சுக்கோ”
“லூசு.. முகூர்த்த புடவ மூணு வச்சு நான் என்ன பண்ண?”
“ஒன்னு மேரேஜ்க்கு. ஒன்னு ரிசப்ஷனுக்கு. இன்னொன்னு எதுகாச்சும்”
“ரிஷப்ஷனுக்கு எடுத்தாச்சு. இதுல ஒன்னு மட்டும் செலக்ட் பண்ணு. இல்ல கொண்ணுடுவேன்”
“இல்ல ஆரா…”
“ஏய்…” என்று ஆராதனா அதட்ட யுவன் மீண்டும் சேலையை பார்த்தான்.
“டேய் நான் கூட இவ்வளவு நேரம் எடுக்கலடா.. எதாவது ஒன்ன எடுத்து தொல. உனக்கு வேற எடுக்கனும்” என்று கூறி தலையிலடித்துக் கொண்டாள். கடைசியாக ஒரு சேலையை யுவன் தேர்வு செய்தான்.
“ஆனா அதுவும் நல்லா இருக்கு டி”
“பிச்சுபுடுவேன். அக்கா இத எடுத்து வச்சுடுங்க. இவன் கண்ணுல காட்டாதீங்க” என்று கூறி விட யுவன் அவளை முறைத்து வைத்தான்.
இருவரும் இங்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க மற்றவர்கள் தேவையானவற்றை எடுத்துக் கொண்டனர். அடித்து பிடித்து எல்லாம் வாங்கி விட்டு அவர்கள் கிளம்பும் போது அந்த கடையையே அடைத்து விட்டனர்.
வீட்டிற்கு வந்ததும் எல்லோரும் சாப்பிட்டு விட்டு படுக்க யுவன் ஆராதனாவை வீட்டுக்கு வெளியே அழைத்தான். அவளும் வர ஊஞ்சலில் அமரச் சொல்லி அவள் மடியில் படுத்துக் கொண்டான்.
“டேய்.. கூசுது” என்று ஆராதனா நெளிய “ஸ்ஸ்… அமைதியா இருடி” என்றான். சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
“அந்த க்வாலிட்டி பிரச்சனை முடிஞ்சது” – யுவன்.
“ம்ம்…” – ஆராதனா.
“மாதவன் மாமா தான் இப்படி பண்ணி வச்சுருக்கார்”
“ம்ம்…”
“முதல்ல என்னால நம்பவே முடியல. அப்புறம் அந்த கம்பெனி ஆதாரம் கொடுக்குறாங்க. மாமா கிட்ட ஏன் னு கேட்டேன். அவரு மகளுக்காக பண்ணி இருக்கார். யாமினி கஷ்டத்த பார்க்க முடியாம இப்படி பண்ணிட்டார். எனக்கும் அப்பா மாமாவுக்கும் என்ன செய்யுறது னு தெரியல. நேத்து எல்லாம் யோசிச்சுட்டு மாமா பேர காப்பாத்துறது எப்படி னு தெரியாம இருந்தேன்.
காலையில உன் கிட்ட பேசவும் தான் தோனுச்சு. ஒரு தடவ சொன்னல… ஒருத்தர எல்லாரு முன்னாடியும் அவமான படுத்தாம இருக்க பொய் சொல்லுறது தப்பு இல்ல னு. இப்போ இத சொன்னா இத்தனை வருசமா அவர மதிச்சவங்க முன்னாடி அவரோட மதிப்பு காணாம போயிடும். அத காப்பாத்த பொய் சொன்னோம்.
எதோ ஒரு இடத்துல நடந்த தப்பால ப்ராடெக்ட் மாறிடுச்சு. இனிமே இந்த மாதிரி நடக்காது னு சொல்லி ரிப்போர்ட் கொடுத்துட்டேன். காசுக்காக தப்பு பண்ணவங்கள தூக்கிட்டேன். காலையில சொன்னியே.. எல்லாத்துக்கும் நல்ல பக்கம் இருக்கும் னு. அதான் ஹெல்ப் பண்ணுச்சு. பிரச்சனைய முடிச்சுட்டு வர இவ்வளோ நேரமாகிடுச்சு”
“எவ்வளவு லாஸ்?”
“அது இன்னேரம் உனக்கே தெரிஞ்சுருக்குமே. மொத்தமா எல்லாத்தையும் கணக்கு பண்ணா… நிறையவே லாஸ் தான்”
“சரி பண்ணிக்கலாம். கவல படாத”
“ம்ம்…”
சில நிமிடங்கள் அப்படியே இருந்தனர். பிறகு யுவன் எழுந்து சென்று விட ஆராதனாவும் வந்து படுத்துக் கொண்டாள்.
தொடரும்.