சங்கவி சென்றதும் ஆராதனா தீவிரமாக யோசக்க ஆரம்பித்து விட்டாள். யுவன் காதலிக்கிறானா? யாரை?
யாமினியாக இருக்குமோ? இருக்காது . ஏனென்றால் யாமினி அவனுக்கு வெறும் தோழியே. யாமினியும் அழகானவள் தான். அறிவானவள் தான். ஆனால் இருவருக்கும் இடையில் நட்பை தவிர வேறு எதையும் ஆராதனா பார்த்தது இல்லை. அதனால் அவளாக இருக்க முடியாது.
வேறு யாராக இருப்பினும் யுவன் தாராளமாக வீட்டில் சொல்லி இருக்கலாம். அவன் சொல்லாததற்கு நிச்சயமாக காரணம் இருக்கும். யார் அந்த பெண்?
எப்படி யோசித்தாலும் ஆராதனா விற்கு விடை திருப்தியாக கிடைக்கவில்லை. அப்படியே அவன் காதலித்திருந்தாலும் அவன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டான். தன்னை திருமணம் செய்ய சம்மதித்து இருப்பதால் அந்தப் பெண் தானாகத் தான் இருக்க வேண்டும் இல்லை என்றால் சங்கவி சொன்னது போல் அது பொய்யாக இருக்கலாம்.
பொய்யாக இருந்து விட்டால் நல்லது என்று ஒரு மனம் கூறியது. ஏன் நானாக இருக்க கூடாது என்று இன்னொரு மனம் கூறியது. காதலை பிடிக்காத ஆராதனா இப்படி யோசிப்பது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
வேண்டுமா வேண்டாமா என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருந்தால்….? ஆராதனாவிற்கு இப்போதே அதை அறிந்து கொள்ள மனம் துடித்தது. ஆனால் யுவன் இல்லையே.
அவனை அழைத்து பேசவும் தயக்கமாக இருந்தது. எதாவது வேலையில் இருப்பான். நேரில் வந்ததும் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.
யுவன் வீட்டிற்கு வர இரவு ஆனது. ஆராதனா அவனிடம் பேச வேண்டும் என்று தூக்கத்தை கட்டுப் படுத்தி முழித்து இருந்தாள். யுவனின் கார் சத்தம் கேட்டதும் அவசரமாக வெளியே வந்தாள்.
யுவன் காரை நிறுத்தி விட்டு இறங்கும் போது ஆராவை பார்த்து விட்டான்.
“தூங்கலையா இன்னும்?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தான்.
“தூங்கனும்”
“என்ன நடந்தாலும் டைம்க்கு தூங்கி எந்திரிப்பியே”
“அது அம்மா கொடுத்த ட்ரைனிங். எழுந்திரிக்கலனா கிள்ளி வச்சுடுவாங்க. அதான் சீக்கிரம் தூங்கி பழகிட்டேன்”
“அதுவும் சரி தான். இப்போ ஏன் தூங்கல? தூக்கம் வரலையா?”
“இல்ல உன் கிட்ட பேசணும்”
“இப்போ வா? காலையில பேசலாமே”
“ஓ… சரி குட் நைட்”
“நில்லு. எதுவும் முக்கியமான விசயமா?”
“இல்ல நாளைக்கு கேட்டுக்கிறேன்”
“சுயர்?”
“ம்ம்..”
“ஓகே. குட் நைட்”
ஆராதனா வீட்டிற்குள் சென்று விட்டாள். யுவனுக்கு அவள் என்ன கேட்க நினைத்தாள் என்பதை பற்றி சிறிய யோசனை இருந்தது. ஏனென்றால் இம்ரான் சங்கவி வந்து போனதை கூறி இருந்தான். சங்கவி எதை பேசி இருப்பாள் என்று யுவனால் ஊகிக்க முடியும்.
நாளை ஆராதனா கேட்கும் போது என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றான்.
அடுத்த நாள் காலையில் ஆராதனா யுவனது காதலை பற்றி யோசித்துக் கொண்டே வர எதிரில் யாமினி எதோ ஒரு ஃபைலை புரட்டிக் கொண்டே வந்தாள்.
இருவரும் எதிரில் வந்தவர்களை கவனிக்காமல் இடித்து தடுமாறி நின்றனர். யாமினியின் கையில் இருந்த காகிதங்கள் கீழே விழுந்து விட்டது.
“சாரி.. பார்க்கல” என்று ஆராதனா கூற “என்ன நினைப்புல வர? பார்த்து நடக்க தெரியாதா? ச்சே” என்றாள் யாமினி.
குனிந்து காகிதங்களை அவள் எடுக்க ஆராதனாவும் எடுத்தாள்.
“ஒன்னும் வேணாம். தட்டி விட்டுட்டு…. கொடு… இப்போ இதெல்லாம் திரும்ப அடுக்கனும். எல்லாம் உன்னால” என்று யாமினி பேசிக் கொண்டே போக ஆராதனா எதுவும் பேசவில்லை.
எல்லாவற்றையும் எடுத்து விட்டு நிமிர்ந்தவள் “இப்போ நீ இத சரி பண்ணி தருவியா?” என்று கோபமாக கேட்டாள். ஆராதனா பதில் பேசும் முன்பு அவள் தோளில் ஒரு கை விழுந்தது.
யுவன் தான் ஆராதனாவின் தோளில் கை போட்டுக் கொண்டு நின்றான்.
“அவ பார்க்காம வந்தா னா நீயும் பார்க்காம தான் வந்த. ஆரா சாரி சொல்லிட்டா. நீ சொன்னியா? பேப்பர்ஸ ஒழுங்கா பின் பண்ணாம விட்டது உன் தப்பு. நீ பார்க்காம வந்து இடிச்சுட்டு இவள சரி பண்ணி தர சொல்லுறது என்ன நியாயம்?”
“இல்ல யுவா. அவ தான் இடிச்சா”
“அவ இடிக்குற வர உன் கண்ணு எங்க இருந்துச்சு?”
“நான் இந்த பைல செக் பண்ணேன்”
“அத கேபின்க்குள்ள வச்சு பண்ணனும். நடந்துட்டே பண்ணி அடுத்தவங்க மேல மோத கூடாது”
“என்ன நடந்தாலும் இவளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ. உன் கிட்ட போய் பேசுறேன் பாரு” என்று கூறி விட்டு ஆராதனாவை முறைத்துக் கொண்டே சென்று விட்டாள். யுவன் அவள் தோளில் கை போட்டு நிற்பது வேறு யாமினிக்கு பிடிக்கவில்லை. வேகமாக அவர்களை கடந்து லிஃப்ட்டில் நுழைந்து கொண்டாள்.
ஆராதனாவை பார்த்தவன் “என்ன நிக்கிற வா” என்று இழுத்துக் கொண்டு நடந்தான். ஆரா அவனது கையை எடுத்து விட போக அவளது கையை பிடித்துக் கொண்டான்.
“ஏய்… கைய எடு”
“எதுக்கு?”
“எல்லாரும் பார்த்தா எதாவது நினைக்க போறாங்க”
“என்ன நினைப்பாங்க? நாம லவ்வர்ஸ்னா?”
“ஹான்… முதல்ல எடு”
“முடியாது” என்று அப்படியே அவளை இழுத்துச் சென்றான். எல்லோரும் இருவரையும் பார்த்து வாயை பிளந்தனர். ஆராதனாவிற்கு தான் வெட்கமாக இருந்தது.
“யுவா போதும். விடு நான் போறேன்”
“உன் கிட்ட பேசனும் வா” என்று அவனது கேபினுக்குள் இழுத்துச் சென்று விட்டான்.
“ரொம்ப பண்ணுறடா” என்று ஆராதனா முறைத்தாள்.
அவளை அமர வைத்து விட்டு அவளுக்கு எதிரில் அமர்ந்து கொண்டான்.
“நேத்து எதோ பேசனும் னு சொன்னியே. அத சொல்லு”
“அதுவா…”
“ம்ம்.. என்ன?”
“அது.. நேத்து சங்கவி வந்துட்டு போனா”
“ம்ம்.. இம்ரான் சொன்னான். என்ன சொன்னா?”
“அவ காதலுக்கு நான் தூது போகனுமாம்.”
“நீ என்ன சொன்ன?”
“முடியாது னு சொன்னேன்”
“அவ்வளவு தான.. அப்புறம் என்ன யோசனை?”
“இல்ல.. அவள அவாய்ட் பண்ண நீ வேற யாரையோ லவ் பண்ணுற னு சொன்னியாம்”
“ம்ம்”
“அதான் யாரா இருக்கும் னு யோசிக்கிறேன்”
“அத பத்தி ஏன் நீ யோசிக்கிற?”
“ஹலோ.. எ….” என்று ஆரம்பித்தவள் அவசரமாக வார்த்தைகளை விழுங்கி விட்டாள்.
‘என்ன கல்யாணம் பண்ணிக்க போற. எனக்கு தெரிய வேணாமா?’ என்று வாய் வரை வந்த வார்த்தையை கடைசி நேரத்தில் முழுங்கி தப்பித்தாள்.
‘ஜஸ்ட் மிஸ்ஸு’ என்று அவள் மூச்சு விட “என்ன எ…..?” என்று கேட்டு வைத்தான் யுவன்.
“இல்ல… என் கிட்ட வந்து சொல்லிட்டு போனா யோசிக்காம இருப்பனா னு கேட்டேன்”
“யோசிக்காத. வேற வேலைய பாரு”
“அப்போ சொல்ல மாட்ட?”
“ஆரா அத பத்தி யோசிக்காத னு சொன்னேன்”
“எனக்கு தெரியனும்”
“எதுக்கு? அத வீட்டுல சொல்லி கல்யாணத்த நிறுத்தவா?”
“ஏன் டா என்ன சொல்ல வரேன் னு கேட்கவே மாட்டியா? நீயா ஏன் ஒரு முடிவுக்கு வர்ர?”
“நீ எங்க சுத்துனாலும் அங்க தான வந்து நிக்கிற?”
“உன் கிட்ட பேசுறதே வேஸ்ட்” என்றவள் எழுந்து சென்று விட்டாள்.
“தப்பிச்சேன்” என்று கூறி வாயில் காற்றை வெளியேற்றி அசுவாசப்பட்டுக் கொண்டான் யுவன்.
கோபமாக வந்தவள் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டாள். சில மணி நேரத்தில் கோபம் காணாமல் போய்விட மீண்டும் யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.
யுவன் எதற்காக பதிலை தவிர்க்கிறான் என்று அவளது யோசனை சுழன்றது. அது பொய்யாக இருந்தால் யுவன் பதிலை தவிர்க்க தேவையில்லை. அவளும் கல்லூரியில் அதை தான் செய்தாள். கேட்ட போது உண்மையை சொல்லி விட்டாள்.
யுவன் வேறு யாரையும் விரும்பினால் அதை அவளிடம் சொல்லி இந்த திருமண ஏற்பாட்டை சுலபமாக தவிர்க்கலாம். திருமணத்திற்க்கும் சம்மதம். காதலும் உண்டு என்றால்? யுவன் ஒரு பெண்ணை காதலித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் அளவு கேவலமானவன் அல்ல. அப்படி ஒன்றும் காதலுக்கு வீட்டிலும் எதிர்ப்பு இருக்காது.
இனி ஒரே ஒரு விடை தான் மிச்சம் இருந்தது. அது ஆராதனாவை சற்று அதிர வைத்தாலும் அடி மனதில் சந்தோஷத்தை உருவாக்கியது.
அவன் காதல் சரி? அவளுக்கும் காதல் உண்டா என்ன?
பதில் கிடைக்காமல் புன்னகையுடன் ஒரு படபடப்பு மட்டுமே வந்தது. தண்ணீரை எடுத்து குடித்து படபடப்பை போக்க முயற்சித்தாள். மனமோ மீண்டும் மீண்டும் யுவனிடமே சென்றது. அவனது செயல்களை ஆரம்பத்தில் இருந்து மனம் அசைபோடும் வேலையில் இறங்கியது.
வேலையை மறந்து அவள் அமர்ந்து விட எதோ ஒரு பெண் உள்ளே வந்து அவளது யோசனையை கலைத்தாள். அவள் சென்றதும் ஆராதனா தன்னை தானே திட்டிக் கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அடுத்த இரண்டு நாட்கள் ஆராதனாவின் கண்கள் திருட்டு தனமாக யுவனை ரசிக்க ஆரம்பித்தது. யுவன் வேலையில் நடந்த பிரச்சனையில் எதையும் கவனிக்கவில்லை.
ஆனால் யாமினி கவனித்து விட்டாள். இதற்கு மேல் எந்த நம்பிக்கையும் இல்லாமல் அவளது ஆசையை தூக்கி எறியும் நிலைக்கு தள்ளப்பட்டாள். அது அவளை நோகடித்து பார்க்க அடுத்த நாள் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்க சென்று விட்டாள்.
யாமினி விடுமுறை எடுத்து விட அவளது வேலை ஆராதனாவிடம் வந்து சேர்ந்தது. அதை பார்த்து முடிக்க வேலை நேரம் முடிந்து இரண்டு மணி நேரம் கடந்து விட்டது.
கை கடிகாரத்தில் மணியை பார்த்து விட்டு எழுந்து வந்து யுவனை பார்த்தாள். அவன் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். அலுவலகத்தில் இவர்களை தவிர யாருமே இல்லை.
யுவனுக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவன் “கிளம்பலையா?” என்று கேட்டான்.
“இல்ல…”
“வெயிட் ” என்றவன் பதினைந்து நிமிடங்களில் வேலையை பார்த்து முடித்தான். அதற்கிடையில் காபி கோப்பை காலியானது.
“இங்க ஏன் இருக்க? எதுவும் கேட்கனுமா?” – யுவன்.
“ம்ம்”
“என்ன?’
“அது”
“என்ன ஆரா?”
“உன் கிட்ட ஒன்னு சொல்லனும்”
“ம்ம்.. சொல்லு”
“கல்யாணத்துக்கு எனக்கு ஓகே”
எங்கோ பார்த்துக் கொண்டு ஆரா கூற ஒரு சந்தோசத்துடன் யுவன் எழுந்து அவளருகில் வந்தான். ஆராதனா அவனை தவிர்க்க எழுந்து நின்று எங்கோ பார்த்தாள்.
“அப்போ என்ன கல்யாணம் பண்ணிக்க நீ ரெடி?”
“ம்ம்” என்றவள் அவன் பார்வையை தவிர்த்து திரும்பி நிற்க யுவன் அவளுக்கு நேராக வந்து நின்றான்.
“ஏன் இந்த திடீர் மாற்றம்?”
“சும்மா தான்”
“சும்மா?”
“ஆமா….” என்று சொல்லிக் கொண்டே அவனை திரும்பி பார்த்தவள் அவன் பார்வையில் தடுமாறினாள்.
பார்வையை மாற்றி உடனே சமாளித்துக் கொண்டாள்.
“நம்புற மாதிரி இல்லையே”
“நிஜம்மா தான். எப்படியும் வாழ்க்கையில கல்யாணம் பண்ணி தான் ஆகனும். சோ சரி னு சொல்லிட்டேன்”
“ஓஹோ…” என்றவன் அவளை நெருங்கி வர பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். படபடப்பு அதிகமாக அதை மறைக்க அவளே பேசினாள்.
“நான் எங்க வீட்ட விட்டு தூரமாக போக வேண்டியது இல்ல. சின்ன வயசுல இருந்து பார்த்த அத்தை மாமா. என்ன நல்லா பார்த்துப்பாங்க. கம்பெனிய விட்டு போக வேண்டியது இல்ல. இங்கயே பர்மெணன்ட்டா இருக்கலாம் பாரு. நல்லா யோசிச்சு பார்த்துட்டு தான் இந்த முடிவுக்கு வந்தேன். உன்ன வேணாம் னு சொன்னா வேற யாரையும் காட்டுவாங்க. அவன் வீட்டுல இருக்கவங்க எப்படி னு தெரியாம கஷ்டப்படனும். அதான் இது பெஸ்ட் னு முடிவு பண்ணிட்டேன்”
“சரி தான்” என்றவன் அவளை மேலும் நெருங்கினான். அவள் பின்னால் இருந்த மேசையை பிடித்துக் கொள்ள மேலும் மேலும் அருகில் வந்தான்.
ஆரா தலையை பின்னால் கொண்டு போக ஒரு கையை அவள் கையருகில் வைத்தவன் மறு கையை அவளுக்கு பின்னால் கொண்டு சென்றான்.
ஆரா பதறிப்போய் நிற்க அவளுக்கு பின்னால் இருந்த போனை எடுத்தான். அதை பார்த்ததும் தான் அவளுக்கு நிம்மதியானது. ஆனால் அவளை விட்டு விலகாமலே யாரையோ அழைத்தான்.
“டேய்.. இமீடியெட்டா ஐயாயிரத்த என் அக்கவுண்ட் ல போடு”
“…..”
“எதுக்கா? பெட் ல தோத்துட்ட.”
“…..”
“அதே பெட் தான். ஒழுங்கா அனுப்பிடு”
யுவன் பேசி விட்டு அழைப்பை துண்டிக்க ஆராதனா குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
போனை சட்டை பாக்கெட்டில் வைத்தவன் அவளை பார்த்து புருவம் உயர்த்தினான்.
“என்ன பெட்?”
ஆரா கேட்டதும் அவளது மறுபக்கமும் மேசையில் கை வைத்து அவளை நோக்கி குனிந்தவன் “இப்ப நீ சொன்னியே அத வச்சு தான் பெட் கட்டுனோம்” என்றான்.
“யாரு?”
“இம்ரான்”
“நான் மேரேஜ்க்கு ஒத்துக்க மாட்டேன் னு இம்ரான் சொன்னானா?”
யுவன் மறுப்பாக தலையசைக்க “பின்ன?” என்று கேட்டாள்.
“நீ ஒத்துப்ப னு தான் அவன் சொன்னான். ஆனா என்ன பிடிச்சுப் போய் ஒத்துக்குவ னு சொன்னான். “
“சோ?”
“நான் என்ன சொன்னேன் தெரியுமா?”
“…..”
“அப்படி அவ மேரேஜ்க்கு ஓகே சொன்னாலும் சத்தியமா என்ன பிடிச்சுருக்கு னு மட்டும் சொல்லவே மாட்டானு சொன்னேன். கரெட்க்டு தான?”
அவன் சொன்னதும் கோபம் வருவதற்கு பதில் ஆராதனாவிற்கு சிரிப்பு வந்தது. முகத்தை வேறு பக்கம் திருப்பி ஆரா சிரிப்பை அடக்க “சொல்லு.. நான் ஜெயிச்சுட்டேன் ல?” என்று ரகசிய குரலில் அவள் காதருகில் வந்து கேட்டான்.
‘ஈஸ்வரா.. இப்படி பேசுறானே’ என்று நினைத்தவள் வேகமாக அவனை தள்ள முயற்சித்து கையை தூக்க அவள் கையிலிருந்த கையிறு யுவன் கைகடிகாரத்தில் சிக்கிக் கொண்டது.
அவள் அதை விடுவிக்க போக யுவன் அவள் கையை பிடித்து தடுத்தான். ஒரு கை மேசை மீது இருக்க மறு கையை அவளுக்கு பின்னால் கொண்டு சென்று தன் கைகடிகாரத்தில் மாட்டி இருந்த நூலை விடுவித்தான்.
கிட்டத்தட்ட அவளை அணைத்த நிலை. நெருங்கி நிற்கவும் அதிர்ந்து போய் மூச்சை இழுத்து பிடிக்க அவனது பர்ஃப்யூம் மணம் நாசியில் நுழைந்து மூளையை ஒரு கை பார்த்து விட்டது.
அந்த மணம் பிடித்துப் போக சத்தமில்லாமல் மீண்டும் ஒருமுறை சுவாசித்து உச்சி முதல் உள்ளங்கால் வரை நிரப்பிக் கொண்டாள்.
நூலை விடுவித்தவன் அவளை திரும்பி பார்க்க பார்வையை மாற்றி திரும்பிக் கொண்டு அவனை விட்டு நகர்ந்தாள். அவசரமாக அங்கிருந்து ஓடப்பார்க்க “எங்க போற?” என்று கேட்டான்.
“வேற எங்க? வீட்டுக்கு தான். ஆபிஸ் டைம் முடிஞ்சு ரெண்டு மணி நேரம் ஆகுது”
“வா சேர்ந்து போகலாம்” என்றவன் அறையில் இருந்த எல்லாவற்றையும் அணைத்து போட்டு விட்டு அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டு வெளியே இழுத்து வந்தான்.
இருவரும் கீழே வர ஆராதனா தனது காரை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பி விட்டாள். யுவன் வீட்டுக்கு அழைத்தான்.
“ம்மா.. உங்க மருமக ஆபிஸ்ல இருந்து கிளம்பிட்டா”
“சரிடா”
“மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டு வர்ரா மா”
“என்னது?”
“என் கிட்ட சொல்லிட்டா. வந்தா விடாதீங்க. பிடிச்சு வைங்க. நானும் வரேன்”
யுவன் அழைப்பை துண்டித்து விட விசயம் பத்மினியின் காதுக்கு சென்று தந்தை இருவருக்கும் சென்று சேர்ந்தது.
தொடரும்.