Loading

 

 

 

 

 

 

 

தன் கைப்பையை எடுத்த ஆராதனா அவளுடைய டேப்பை யுவனின் அறையில் விட்டு‌ விட்டதை உணர்ந்து திரும்ப எடுக்கச் சென்றாள்.

 

இம்ரான் அறையிலிருந்து வெளியே‌ வந்தான்.

 

“இன்னும் கிளம்பலயா நீ?”

 

“இல்ல.. என் டேப் உள்ள இருக்கு. எடுக்க வந்தேன்”

 

“சரி சரி” என்று இம்ரான் சென்று விட ஆராதனா உள்ளே சென்றாள்.

 

யுவன் எதோ தீவிர யோசனையில் இருக்க அவனை தொந்தரவு செய்யாமல் டேப்பை எடுத்துக் கொண்டாள். அவள் திரும்பி நடக்கும் போது யுவன் அவளை நிறுத்தினான்.

 

“ஆரா..”

 

“ம்ம்..”

 

“இங்க வா”

 

அருகில் அழைத்தவன் “இத கொஞ்சம் பார்த்து என் சைன் போட்டுறியா?” என்று சில கோப்புகளை நீட்டினான்.

 

மற்ற நேரமாக இருந்தால் “உன் வேலைய நான் பார்க்க தனியா சம்பளம் கொடுக்கிறியா?” என்று கேட்டு இருப்பாள். ஆனால் மனம் எங்கோ இருந்ததால் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள்.

 

ஓரமாக போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். அவளை பார்த்த படி யுவன் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தான். ஆராதனா அவனை கவனிக்காமல் வேலையில் மும்முரமாக மூழ்கிப்போயிருந்தாள். பத்து நிமிடங்கள் கடக்க யுவனின் முகத்தில் இருந்த குழப்பங்கள் காணாமல் போய் தெளிவு வந்திருந்தது.

 

ஆராதனாவும் வேலையை முடித்து இருந்தாள். அவள் எழுந்து அருகில் வர யுவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

 

“இதுல பிரச்சனை இல்ல. சைன் பண்ணிடு. இதுல கரெக்ஷன் இருக்கு” என்று பிரித்து வைத்தாள்.

 

“நான் உன்ன தான சைன் பண்ண சொன்னேன்?”

 

“சாரி மிஸ்டர். உன் சைன உன் கை நல்லா இருக்க வர நீயே போடு. உன் கைக்கு பங்கம் வந்தா வேணா நான் போடுறேன்”

 

“இதுக்காக கைய உடச்சுக்கவா முடியும்?”

 

“அது உன் விருப்பம். பை” என்று கூறி விட்டு கிளம்பி விட்டாள். வெளியே வரும் போது அவளது மனம் சற்று திசை மாறியிருந்தது. எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையுடன் வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.

 

யுவனுக்கு ஆராதனாவை பார்த்துக் கொண்டிருந்ததே போதுமானதாக இருந்தது. அதிலேயே மனம் தெளிந்து விட்டான். உடனே அடுத்த முடிவுகளை எடுத்து விட்டு இம்ரானை அழைத்தான்.

 

“அந்த கம்பெனி கூட அப்பாயிண்மெண்ட் அரேன்ஞ் பண்ணு. கண்டிப்பா பார்க்க மாட்டானுங்க. லாயர விட்டு பேச சொல்லு. இப்ப ஒத்துக்கிட்டா பேச்சோட முடியும். இல்லனா கோர்ட் கேஸ் னு அலைய விட்ருவேன் னு சொல்லு” என்று கூறி அனுப்பி வைத்தான்.

 

இம்ரான் வெளியே சென்றதும் சத்தியனின் அழைப்பு வந்தது.

 

“சொல்லுங்க பா”

 

“இப்ப தான் டா நியூஸ் வந்தது. மீட்டிங் முடிச்சுட்டு நானும் ரகுவும் இப்போ தான் வரோம்”

 

“நீங்க உங்க வேலைய பாருங்க. யாரு கேட்டாலும் என் பேர சொல்லிட்டு விட்ருங்க”

 

“இல்ல யுவா… தனியா எப்படி பார்ப்ப?”

 

“இல்ல பா.. நானே பார்த்துக்குறேன்”

 

“என்ன செய்ய போற?”

 

“இத உங்களுக்கு சர்ப்ரைஸா சொல்லலாம் னு இருந்தேன். இப்பவே சொல்ல வேண்டியதாகிடுச்சு”

 

“எது?”

 

“அந்த டிசைனிங்ல ஆரா பண்ண டிசைன் அஞ்சு இருந்துச்சு”

 

“என்னது? ஆரா டிசைன் பண்ணாளா?” – ரகுநாதன்.

 

“ஆமா மாமா… அவ பண்ண டிசைனை லான்ச் பண்ணிட்டு உங்களுக்கு சொல்லனும் னு வச்சுருந்தேன்”

 

“ஆரா இப்போ எப்படி இருக்கா?”

 

“ரொம்ப சேட் ஆகிட்டா.. வீட்டுக்கு அனுப்பிட்டேன்”

 

“இப்ப என்ன பண்ண போற?”

 

“மத்த டிசைனுக்கும் ஆரா டிசைனுக்கும் சில வித்தியாசம் இருக்கு மாமா…அவ எல்லா ஸ்டேஜ்க்கும் காபி வச்சு இருக்கா. அது போதும் டிசைன்ஸ் நம்மலோடது னு சொல்லுறதுக்கு”

 

“சரி… இத யாரு பண்ணா னு தெரிஞ்சதா?” – சத்தியன்.

 

“இல்ல பா … ஆனா…”

 

“ஆனா…”

 

“நேத்து நைட் ஆராவோட சிஸ்டம்ல இருந்து தான் இந்த மெயில் போயிருக்கு.”

 

“என்னது?”

 

“சிசிடிவி ல பார்த்துட்டேன். ஆரா இல்ல. ஆனா ஆரா சிஸ்டம்ல இருந்து போயிருக்கு னு செக் பண்ணி சொல்லி இருக்காங்க”

 

“யாரு இது? இவ்வளவு தைரியமா உள்ள வந்தது?”

 

“டீம் கிட்ட முழு டிடைல் கேட்டு இருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும். வந்ததும் சொல்லுறேன்”

 

“ஆராக்கு தெரியுமா?”

 

“சொல்லல”

 

“ரிப்போர்ட் வந்ததும் சொல்லு. ஆபிஸ் போயிட்டு கால் பண்ணுறேன்”

 

சத்தியன் அழைப்பை துண்டித்து விட யுவன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். ஆராதனாவின் கணினி ஐபி அட்ரஸை அவனும் எதிர் பார்க்கவில்லை. நேற்று இரவு ஆராதனாவுடன் பத்மினி கொடுத்த இரவு உணவை சண்டை போட்டு சாப்பிட்டது நியாபகம் வந்தது.

 

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரம் இங்கு யாரோ மெயிலை அனுப்பி விட்டு கேமராவின் பதிவையும் அழித்து விட்டனர். யுவன் கையில் இப்போது அவர்கள் கிடைத்தால் கொலையே செய்து விடுவான்.

 

ஆராதனாவிடம் அந்த டிசைன்கள் சம்பந்தமான அனைத்தையும் வாங்கிக் கொண்டான். மற்ற டிசைன்களுக்கு முடிந்தவரை ஆதாரங்களை திரட்டி விட்டான். அந்த நிறுவனத்திடம் என்ன பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க இம்ரானிடமிருந்து அழைப்பை வந்தது.

 

“அந்த இ மெயில் அனுப்புறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி அங்க யாரோ போன் பேசி இருக்காங்க” என்று கூறி ஒரு ஒலிப்பதிவை காட்டினர்.

 

“அதான் முடிச்சுட்டு கூப்பிடுறேன் னு சொல்லுறேன்ல. திரும்ப திரும்ப போன் பண்ணாத” என்று மெல்லிய குரலில் ஒரு பெண் பேசும் பதிவு அது.

 

“இந்த வாய்ஸ் யாரோடது னு கண்டு பிடிக்க முடியுமா?”

 

“முடியும் சார். பட் அக்யூரட்டா தெரியனும் னா ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்”

 

“பரவாயில்ல கண்டுபிடிங்க” என்று கூறி விட்டு வெளியே வந்தான்.

 

“என்ன டா யோசிக்கிற?” என்று இம்ரான் கேட்க “அந்த கம்பெனி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியாச்சா?” என்று கேட்டான்.

 

“இன்னும் இல்ல”

 

“அப்போ ரெண்டு மணி நேரம் கழிச்சு வாங்கு… அதுக்குள்ள இங்க கண்டு பிடிச்சுடுவாங்க”

 

“ஓகே டா” என்று இம்ரான் கிளம்பி விட இனி என்ன செய்வது என்று யுவன் தொகுக்க‌ ஆரம்பித்தான்.

 

அவர்களது போட்டி நிறுவனம்‌ யுவன்‌ சொன்னது போல் முதலில் சந்திக்க ஒப்புக்கொள்ளவில்லை. வக்கீலை வைத்து பேச வேறு வழியில்லாமல் இறங்கி வந்தனர்.

 

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சந்திக்க அவர்கள் ஒப்புக் கொள்ள யுவனுக்கு நிம்மதியாக இருந்தது. அந்த குரல் யாருடையது என்று யுவனுக்கு சிறிய ஐயம் இருந்தது. அதை உறுதி படுத்திக் கொண்டு தான் அவர்களிடம் பேச வேண்டும்‌ என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

 

அடுத்த இரண்டு‌ மணி நேரத்தில் யுவன் அந்த ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வேண்டுமென்றே அரை மணி நேரம் காக்க வைத்து விட்டே அவர்கள்‌ வந்து சேர்ந்தனர். யுவனுக்கோ பரம நிம்மதி. நன்றாக சாப்பிட்டு முடித்து விட்டு டிஸ்யூ வால் கையை துடைக்க போனில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதை பார்த்து விட்டு சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 

அதன் பின்பே அந்த நிறுவனத்தின் முதலாளி வந்து சேர்ந்தார்.

 

“என்ன யுவன் ரொம்ப நேரமா வெயிட்டிங்கா?”

 

“இல்லயே… நல்லா சாப்ட நேரம் இல்லாம எப்பவும் ஓடிட்டே சாப்டுவேன். இன்னைக்கு நேரம் கிடச்சது சாப்டேன். நீங்களும் சாப்டுங்களேன். நான் வேணா பில் கட்டுறேன்”

 

“அடுத்தவங்க பணத்துல சாப்ட‌ மாட்டேன் யுவன்”

 

“ஓகே.. உங்களுக்கு அடுத்தவங்க பொருள திருடுனா தான பிடிக்கும். நாங்களே கொடுத்தா பிடிக்காதே”

 

இதை கேட்டு அவர் கோபப்பட வில்லை. நன்றாக சிரித்து வைத்தார்.

 

“இப்படி சொல்லி தான் என்ன இங்க வர வச்சுருக்க… ஏன் யுவன்? நீங்க மட்டும் தான் நல்ல டிசைன்ஸ் கொடுப்பீங்களா? நாங்க கொடுத்தா உங்களோடது னு சண்டை போட வரீங்களே… சீப்பா இல்ல?”

 

“என்ன பண்ணுறது? உழைப்ப போட்டவங்களுக்கு பதில் சொல்லி ஆகனுமே”

 

“உங்க கம்பெனி விவகாரம் எனக்கு எதுக்குப்பா?” என்று அவர் கையை விரிக்க யுவன் சிரித்து வைத்தான். அவன் ஆர்டர் கொடுத்திருந்த பழச்சாறு வர அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

 

“சுத்தி வளைக்காம நேரா விசயத்துக்கு வருவோமா? அந்த டிசைன்ஸ் எல்லாம் எங்களோடது னு அனொன்ஸ் பண்ணிடுங்க. நான் கேஸ் போடாம மன்னிச்சு விட்ரேன்”

 

“உன்னோடது னு ப்ரூஃப் இருக்கா யுவன்? சும்மா வாய் வார்த்தையா பேசிட்டு இருக்க?”

 

“காட்டிட்டா போச்சு… அதுல இருக்க டிசைன்ல பாதிக்கு எப்பவோ பேடன்ட் வாங்கியாச்சு… இதோ” என்று தன் போனை அவர் பக்கம் தள்ளி விட்டான். அதை எடுத்து பார்த்தவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

 

“எப்பவுமே டிசைன் ரிலிஸ் பண்ணிட்டு தான் பேடன்ட் வாங்குவோம். இந்த தடவ கொஞ்சம் வித்தியாசமா பண்ணி வச்சுட்டோம். பாவம் இது தெரியாம மாட்டிக்கிட்டீங்க”

 

“இத நான் ஏன் நம்பனும்?”

 

“அட அதுல இருக்கது ஒரிஜினல்ங்க… அத வரஞ்சது என் குடும்பத்து ஆளு. அவ பேருல வாங்கி சர்ப்ரைஸ் பண்ணனும் னு வாங்கி வச்சேன். என் நல்ல நேரம் இப்போ யூஸ் ஆகுது”

 

அவரால் எதுவும் பேச முடியாமல் போய் விட “இன்னொன்னு கூட இருக்கு… உங்களுக்கு இத அனுப்புன ஆளு கிட்ட பேசுறீங்களா?” என்று கேட்டு போனை கையில் எடுத்துக் கொண்டான்.

 

இம்ரானை அழைத்தவன் “என்னடா சொல்லுறாங்க அந்த மேடம்?” என்று கேட்டான்.

 

“ப்ளாக் பண்ணிடுவோம். எங்கயும் வேலை கிடைக்காது ‌னு சொன்னதும் உண்மைய ஒத்துக்கிட்டாங்க”

 

“முடிஞ்சதா?” என்று கேட்ட யுவன் போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மிதமிருந்த பழச்சாறை ஒரே மூச்சில் குடித்து விட்டு எழுந்தான்.

 

“உங்களுக்கு ஆறு மணி வர டைம். என்ன வேணா செய்ங்க. அது‌ எங்க டிசைன் தான் னு நீங்களே அனொன்ஸ் பண்ணனும். இல்லனா நாளைக்கு காலையில இது எல்லாமே கோர்ட்ல இருக்கும்” என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

 

*.*.*.*.*.*.

 

யுவன் வீட்டுக்கு வர ஆராதனா அர்ச்சனா கோலம் போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். யுவன் வந்து காரை நிறுத்தி விட்டு எட்டி பார்த்தான்.

 

ஆராதனா ஆர்வமாக எதையோ சாப்பிட்டுக் கொண்டே கோலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். யுவனுக்கு அவளை நினைத்து சிரிப்பும் ஆச்சரியமும் ஒன்றாக வந்தது. கவலைகளை உடனே‌ மறந்து விட்டு அடுத்த வேலையை பார்க்கும் குணம் அவனுக்கு பிடித்திருந்தது.

 

“என்ன டா இப்ப எத எடுக்க வந்த?”‌ என்று ஆராதனா கேட்க “எதுவும் இல்ல. டயர்ட்.. வேலைய ஓரமா போட்டுட்டு வந்துட்டேன்” என்றான்.

 

“ஓ…” என்றவள் கோலத்திலேயே கவனமாக இருந்தாள். யுவன் வீட்டிற்குள் சென்று முகம் கழுவி உடை மாற்றி விட்டு அமர இருவரும் கோலத்தை முடித்து விட்டு உள்ளே வந்தனர்.

 

“என்னடா அச்சு அந்த டிஷைன் பிரச்சனை?” என்று அர்ச்சனா கேட்க “ஆமா.. என்ன ஆச்சு யாரு அனுப்புனா அத?” என்று கேட்டாள் ஆராதனா.

 

“சொல்லுறேன். நீ திண்ணுறதுல கொஞ்சம் கொடு” என்று யுவன் கேட்க “முடியாது போ” என்றாள்.

 

“அப்ப நானும் சொல்ல மாட்டேன்”

 

“நான் இம்ரான்‌ கிட்ட கேட்டுக்குறேன்” என்று ஆராதனா போனை எடுக்க அவசரமாக பறித்துக் கொண்டான்.

 

“கொடு டா”

 

“நீ முதல்ல கொடு”

 

பல்லை கடித்துக் கொண்டு அவனது வாயில் திணித்து விட்டாள்.

 

“சொல்லித் தொலை”

 

வாயில் முழுமையாக இருந்த உணவில் பேச முடியாமல் ஆராதனாவின் பக்கம் கை காட்டினான்.

 

“நான்…. என்னது நானா?” என்று அவள் முழிக்க “உன் சிஸ்டம் ஐபி அட்ரஸ் தான் கிடச்சது” என்றான் வாயிலிருந்ததை முழுங்கி விட்டு…

 

“அப்புறம்?”

 

“உன் சிஸ்டத்த உன்ன தவிர நானும் இம்ரானும் தான் அக்ஸஸ் பண்ண முடியும். வேற யாரு பண்ணுவா னு யோசிச்சோம். அப்ப தான் ஒரு வாய்ஸ் கிடச்சது. யாரு தெரியுமா? யார தூக்கிட்டு உன்ன உட்கார வச்சனோ அந்த லேடி தான்”

 

“அவங்களா?”

 

“ம்ம்.. நீ அதுல எதையும் மாத்தாம வச்சுருக்க.‌ ஈசியா உன் கிட்ட இருந்த ட்ராஃப்ட்ட மெயில் பண்ணிட்டாங்க”

 

“ஓ… ஆமா… என்ன வாய்ஸ்? எப்படி கிடச்சது?”

 

“நம்ம கம்பெனில கேபின் தவிர எல்லா இடத்துலையும் என்ன பேசுனாலும் ரெக்கார்ட் ஆக டிவைஸ் செட் பண்ணி இருக்கேன். ஆபிஸ்ல பர்ஷனல் விசயம் யாரும் பேச கூடாதுங்குறது தான் முதல் ரூல்ஸ். தெரியும் தான?”

 

“ம்ம்.. முதல் நாள் வரும் போதே என்னடா யாருமே எதுவுமே பேசிக்க மாட்ராங்க னு நினைச்சேன். இது தான் காரணமா?”

 

“எல்லாம் ரெக்கார்ட் ஆகும் னு தான் யாரும் பேசுறது இல்ல.”

 

“அது எப்படி புரணி பேசாத மனுசங்க இருப்பாங்க?”

 

“ஆபிஸ்ல பேச மாட்டாங்க னு தான் சொன்னேன். புரணியே பேச மாட்டாங்கனா சொன்னேன்? அதுக்கு தான் இருக்கே ஆயிரம் வழி. எல்லாம் மெஸஜ்ல பேசிப்பாங்க”

 

“ஓஹோ…”

 

“இங்க இருந்த ரூல்ஸ மறந்துட்டு ரெக்கார்ட் ஆகுற போல பேசிட்டாங்க. அத வச்சு கண்டு பிடிச்சுட்டேன்.”

 

“அப்புறம்?”

 

“இந்நேரம் டிசைன் நம்மலோடது தான் னு சொல்லி இருப்பாங்க”

 

“இப்பவே பார்க்குறேன்” என்றவள் அவனது லாப்டாப்பை எடுத்து திறந்தாள். கடவுச்சொல்லை அவன் சொல்ல அதை போட்டு விவரங்களை பார்த்தாள். 

 

காலையில் வெளியிட்ட டிசைன்கள் ஏ.யூ நிறுவனத்தின் டிசைன்கள் என்றும் இரண்டு நிறுவனத்திற்கும் ஆகாத யாரோ செய்த குளறுபடி என்றும் இதற்காக ஏ.யூ நிறுவனத்திடம் மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தனர்.

 

“என்ன ஒரு பல்டி?” என்று ஆராதனா வாயை பிளக்க “இத விட்டா வேற வழியும் இல்லையே” என்றான் யுவன்.

 

“எப்படியோ பிரச்சனை முடிஞ்சதா?” என்று கேட்டுக் கொண்டே அர்ச்சனா வர “எங்க வி.பி சார் அதெல்லாம் சூப்பரா முடிச்சுட்டார்… அதான வி.பி சார்?” என்று கேட்டாள்.

 

“ஓவரா வாய் பேசுற டி… வா உனக்கு ஆயிரம் வேலை கொடுத்து வாய குறைக்கிறேன்”

 

“போடா டேய்… இதுக்கெல்லாம் பயந்தா அவ ஆராதனாவே இல்ல” என்று கூறி விட்டு எழுந்து சென்றாள்.

 

தொடரும். 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்