Loading

 

 

 

 

 

 

காரில் பயணிக்கும் போது ஆராதனாவிற்கு திடீரென ஒரு சந்தேகம் தோன்றியது. யுவனுடன் காரில் வரும் போது அவள் முன்னால் தான் அமர்ந்து வருகிறாள். இது வரை மூன்று முறை தான் அவனோடு காரில் பயணித்து இருக்திறாள். அந்த மூன்று முறையும் யுவன்‌ தான் கதவை திறந்து இருக்கிறான்.

 

இவள் மட்டும் பைக்கில் சென்றது போல் காரிலும் இவள் மட்டும் தான் முன்னால் அமர்ந்து வருகிறாளோ என்று சந்தேகம் வந்தது. கேட்டு விடலாம் தான். ஆனால் அவன் வேறு எதுவும் கேட்டு விட்டால்?

 

வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்தாள். இறங்க வேண்டிய இடம் வந்ததும் யுவனே கதவை திறந்து விட்டான். இந்த அலுவலகத்திற்கு பல முறை வந்திருப்பதால் பலருக்கு அவளை அடையாளம் தெரிந்தது.

 

எல்லோரும் அவர்களை வரவேற்க நேராக வேலை செய்யும் இடத்திற்கு சென்றனர். சத்தியனின் கேபினுக்குள் நுழைந்தனர். யுவன் வந்து அமர்ந்ததும் வரிசையாக வேலையை பற்றி பேச ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர்.

 

ஆராதனா அவர்கள் பேசுவதை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டாள். அவள் செய்யும் வேலை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் தோன்றியது.

 

கைப்பைக்கு இறக்குமதி செய்யப்படும் முலப்பொருட்களில் ஆரம்பித்து அதை தரம் பிரித்து தயாரித்து சந்தைக்கு அனுப்பும் வரை ஆயிரம் வேலை இருந்தது. அதெல்லாம் பார்த்து முடிக்க எவ்வளவு உழைப்பு தேவை படுகிறது என்று தெளிவாக புரிந்து கொண்டாள்.

 

இதை எல்லாம் யுவன் சர்வ சாதாரணமாக பார்த்தது தான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த வேலையும் அவனுக்கு தெரியாமல் இல்லை. எதை பற்றி கேட்டாலும் பதில் வைத்திருந்தான். அதை பார்க்க ஆராதனாவிற்கு மலைப்பாக இருந்தது.

 

எல்லோரும் பேசி விட்டு சென்று விட “இதெல்லாம் எப்படா கத்துக்கிட்ட?” என்று கேட்டாள்.

 

“ஒன்னு ஒன்னா தெரிஞ்சுக்கிட்டேன். மொத்தமா யாரலையும் கத்துக்க முடியாது”

 

“அதுவும் சரி தான்”

 

ஆராதனா அவளுக்கு தோன்றிய சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்க அவனும் விளக்கம் கூற ஆரம்பித்தான்.

 

அந்நேரம் கண்ணாடி வழியாக அதை பார்த்த ஒரு பெண்ணிற்கு வயிறு பற்றி எரிந்தது. யுவன் வேறு கையை ஆராதனாவிற்கு பின்னால் கொண்டு சென்று நாற்காலியை பிடித்து இருந்தான்.

 

கடுப்புடன் கதவை தட்டினாள். யுவன் அனுமதி கொடுக்க உள்ளே சென்றாள். அவள் வந்த பிறகும் கூட யுவன் கையை எடுக்கவில்லை. அது வேறு அவளது எரியும் வயிற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி விட்டது.

 

தான் கொண்டு வந்த ஃபைலை கொடுக்க “வச்சுட்டு போங்க” என்று கூறி விட்டு திரும்பிக் கொண்டான்.

 

சில நிமிடங்கள் கழித்து அந்த பெண் கழிவறையில் தன் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“யாரு டி அது?”

 

“எது?”

 

“யுவன் சார் கூட ஒட்டிக்கிட்டு ஒருத்தி வந்து இருக்காளே.. அவ தான்”

 

“எனக்கென்ன தெரியும்? நானும் உன் கூட தான் இங்க வேலைக்கு சேர்ந்தேன்”

 

“அவ கூட யுவன் சாரும் ஒட்டிக்கிட்டு இருக்கார் டி. செம்ம கடுப்பாகுது”

 

“சீனியர் மேடம் வராங்க. அவங்க கிட்ட கேட்ப்போம்” என்று கூறி விட்டு அங்கு வந்த மற்றொரு பெண்ணை நிறுத்தினாள்.

 

“சீனியர்… உங்களுக்கு தெரியுமா அந்த பொண்ணு யாரு னு”

 

“எந்த பொண்ணு?”

 

“யுவன் சார் கூட வந்து இருக்கே. அந்த பொண்ணு”

 

“அவங்களா… அவங்க ரகுநாதன் சாரோட பொண்ணு”

 

“என்னது? நிஜம்மாவா?”

 

“ஆமா… ஏன்?”

 

“அப்போ யுவன் சாருக்கு அவங்க மாமா மகள் மாதிரியா?”

 

“மாதிரி எல்லாம் இல்ல.‌ மாமா மகள் தான்”

 

“போச்சு…”

 

“ஏன்?”

 

“இப்படி ஒரு அழகான‌ மாமா மக இருந்தா அவர் எப்படி நம்மல எல்லாம் திரும்பி பார்ப்பார்?”

 

“இல்லனாலும் நீ திரும்பி பார்க்குற மாதிரி தான் இருக்க பாரு” என்று கூற அந்த சீனியர் சிரித்து விட்டாள்.

 

“ச்சீ ப்பே…” என்று கூறி விட்டு அவள் செல்ல மற்றவளும் சென்று விட்டாள்.

 

சில நொடிகளுக்கு பிறகு ஆராதனா கதவை திறந்து வெளியே வந்தாள். முகத்தில் ஒரு சிரிப்பு இருந்தது. அங்கிருந்த கண்ணாடி முன்பு நின்றவள் ‘நம்மலால அவன் திரும்பி பார்க்கல னு சொல்லுறது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

திரும்பி வெளியே நடந்தவள் கழுத்தை மட்டும் திருப்பி கண்ணாடியை பார்த்தாள்.

 

‘நாம அவ்வளவு அழகா?’ என்று நினைத்தவள் கையை விரித்து ‘யாருக்கு தெரியும்?’ என்று தனக்கு தானே பதில் கூறிக் கொண்டு சென்று விட்டாள்.

 

அன்று முழுவதும் வேலையிலேயே கழிய ஆராதனா யுவனுடனே இருந்தாள். அவன் கொடுக்கும் சிறிய வேலைகளையும் தட்டாமல் செய்தாள்.

 

மாலை எல்லோரும் கிளம்பி விட யுவனின் வேலை இன்னும் முடியவில்லை. அவன் எதோ வேலை சொல்ல ஆராதனா அதை எடுக்க சென்றாள்.

 

வரும் போது அந்த பெண்கள் பேசிய பேச்சு மனதில் ஓடியது. அவர்கள் பேசிய வார்த்தைகளை யோசித்துக் கொண்டே அறைக்குள் வந்தவள் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தாள்.

 

திடீரென யுவனின் கை அவளது தோளை பிடித்து வளைத்து திருப்பியது. 

 

“என்ன கவனத்துல வர்ர? விட்டா டேபிள்ள மோதி இருப்ப”

 

“பார்க்கல… இந்தா நீ கேட்டது”

 

“அத வை. இத குடி.. மைண்ட் ஒழுங்கா வேலை செய்யும்” என்று காபி கப்பை அவள் கையில் திணித்து விட்டு விலகிச் சென்றான்.

 

இவ்வளவு நேரம் அவனது கை அவளை அணைத்து இருந்ததை அப்போது தான் உணர்ந்தாள். அதிர்ச்சியில் உறைந்தவளை காபி‌ சூடு‌ நினைவுக்கு இழுத்து வந்தது. சூடு தாங்காமல் அவள் கையை உதற யுவன் வேகமாக அருகில் வந்தான்.

 

“என்னடி… என்ன ஆச்சு உனக்கு?”

 

“ப்ச்ச்… ஒன்னும் இல்ல”

 

“சுட்டுருச்சா? மருந்து போடலாமா?”

 

“இல்ல லைட்டா தான் இருக்கு.. சரியா போயிடும்”

 

“உட்கார் ” என்று அமர வைத்தவன் கையை பிடித்து பார்த்தான். ஆராதனா கையை உருவ பார்க்க “ஸ்ஸ்… அமைதியா இரு” என்று அதட்டினான்.

 

காயம் பெரிதாக இல்லை என்பதை பார்த்ததும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. யுவன் மீண்டும் வேலையை பார்க்க ஆராதனா அமைதியாக அமர்ந்து இருந்தாள். வேலை முடிந்து அங்கிருந்து கிளம்பினர்.

 

யுவன் முன்னால் கார் கதவை திறக்க “நான் பின்னாடி உட்கார்ந்துக்குறேன்” என்றாள்.

 

“ப்ச்ச். உட்காரு முன்னாடி” என்று கையை பிடித்து அமர வைத்தான். யுவனும் அமர்ந்து காரை எடுத்து விட ஆராதனா எதோ யோசனையுடன் அமர்ந்து இருந்தாள். நேராக அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு வந்தனர்.

 

யுவன் அங்குள்ள வேலைகளை பார்க்க ஆராதனா உடனே வீட்டுக்கு கிளம்பி விட்டாள். அவளுக்கு சில நிமிடங்கள் தனிமை தேவைப்பட்டது. அவள் கிளம்பியதை அறிந்தும் யுவன் எதுவும் சொல்லவில்லை. அவளிடம் எதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.

 

நேராக வீட்டிற்கு வந்த ஆராதனா முகம் கழுவி விட்டு மெத்தையில் விழுந்தாள். அலைச்சலும் அதிக வேலையும் அவளை சோர்வடைய செய்திருந்தது.

 

மெத்தையில் படுத்து விட்டத்தை பார்த்தவள் யுவனை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.‌ இப்போதெல்லாம் யுவனிடம் ஒரு நெருக்கம் ஏற்பட்டது போல் தோன்றியது. முதலில் எல்லாம் அவன் இருக்கும் இடத்திற்கே கும்பிடு போட்டு விட்டு சென்று விடுவாள். ஆனால் இப்போது எல்லா நேரமும் அவனை சுற்றியே இருப்பது போல் தோன்றியது.

 

இது சரியா தவறா என்று அவளுக்கு புரியவில்லை. முடிந்தவரை அவனை விட்டு விலகி இருக்க வேண்டும. அதே நேரம் அவளது விலகல் வெளியே தெரிய கூடாது. அதை எப்படி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

*.*.*.*.*.*.*.

 

அடுத்த ஒரு வாரம் மாற்றம் எதுவும் பெரிதாக இல்லை. யுவனுக்கு இரண்டு அலுவலக வேலையையும் ஒன்றாக பார்க்க வேண்டி இருந்தது. அதனால் ஆராதனா அவனை பார்க்கவே இல்லை. அவளது தந்தையும் அவனது தந்தையும் வரும் வரை யுவன் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தான். ஆராதனா விற்கு அவனை நினைத்து பாவமாக இருந்தது. ஆனாலும் அவனை விட்டு விலகியே இருந்தாள்.

 

ஒரு வாரம் கழித்து இரண்டு நண்பர்களும் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். அதன் பின் தான் யுவனுக்கு வேலை ஓய்ந்தது. பட்டும் படாமல் வேலை ஓடிக் கொண்டிருக்க அன்று இரவு யுவன் நடப்பதற்காக வெளியே வந்தான்.

 

பத்மினி ஆராதனாவை திட்டும் சத்தம் கேட்க பின் வாசல் வழியாக அவளது வீட்டிற்கு வந்தான்.

 

ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு ஆராதனா லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருக்க “இப்போ உள்ள வரப்போறியா? இல்லை?” என்று பத்மினி கேட்டார்‌

 

“பத்து நிமிஷம் ஆத்தா… மலையேறாத… முடிச்சுட்டு வரேன்”

 

“குளுருது டி.. உள்ள போய் வேலைய பாரேன்”

 

“கொஞ்சம் பொறுங்களேன்”

 

“என்ன ஆச்சு அத்த?” – யுவன்.

 

“பனி கொட்டுது… எப்படி உட்கார்ந்துட்டு வர மாட்டேன் னு அடம் பிடிக்கிறா பாரு யுவா”

 

“எங்க அந்த பனிய கொஞ்சம் பிடிச்சு காட்டுங்க?” – ஆராதனா.

 

“கொழுப்ப பார்த்தியா?”

 

“விடுங்க அத்த.. நான் பார்க்குறேன்.‌ நீங்க உள்ள போங்க” என்று பத்மினியை அனுப்பியவன் ஆராதனாவிற்கு அருகில் வந்து அமர்ந்தான்.

 

ஊஞ்சலை ஆட்டிக் கொண்டே அவள் செய்வதை பார்த்தான். வரைந்து கொண்டிருந்தாள். ஒரு புது டிசைன் கைப்பையை வரைந்து முடித்துக் கொண்டிருந்தாள்.

 

யுவன் அவளை ஆச்சரியமாக பார்க்க அதை கண்டு கொள்ளாமல் பத்து நிமிடத்தில் முழுமையாக வரைந்து முடித்து விட்டாள்.

 

“எப்படி இருக்கு?” என்று ஆராதனா புருவம் உயர்த்தி கேட்க “சான்ஸே இல்ல… எப்ப வரைய ஆரம்பிச்ச?” என்று கேட்டான்.

 

“நேத்து”

 

“சூப்பரா இருக்கு… உன்ன வேணா டிசைனிங் டீம்லயும் போட்டு விடவா?”

 

“ஏன் டா? இருக்க வேலை போதாதா? இப்படி நீ எதாச்சும் பண்ணுவ னு தெரிஞ்சு தான் ஆபிஸ் சிஸ்டம்ல வரையாம என் லாப்டாப்ல வரையுறேன்”

 

“பட் நல்லா இருக்கே டிசைன்.”

 

“‌ஹேண்ட் பேக் யூஸ் பண்ணும் போது இது இருக்கலாம் இது தேவை இல்ல னு நிறைய தோனும். அதை எல்லாம் மொத்தமா ஒரே பேக் ல போட முடியாது. பட் எனக்கு பிடிச்ச மாதிரி டிசைன் பண்ணனும் னு பண்ணிட்டேன்”

 

“இது ஒன்னு தான என்ன?”

 

“இன்னும் இருக்கே” என்றவள் பத்துக்கும் மேற்பட்ட படங்களை காட்டினாள்.

 

“இது எல்லாம் கலர் சூஸ் பண்ணிட்டேன். இதுக்கு இன்னும் பண்ணல”

 

யுவன் அதை வாங்கி முழுவதும் பார்த்தான். அதில் ஐந்தை தேர்வு செய்தான்.

 

“அடுத்த மாசம் வர்ர டிசைன்ஸ்ல இதையும் போட்டுடலாம்”

 

“நிஜம்மாவா சொல்லுற?”

 

“பின்ன? சூப்பரா இருக்கு இது எல்லாம்.”

 

“அப்போ மத்த எல்லாம்?”

 

“அதுல சின்ன சின்ன கரெக்ஷன்  இருக்கு. அது என்ன னு சொல்லுறேன். இப்போதைக்கு இது ஃபைனல்”

 

“ஓஓ… சரி”

 

“இப்போ கடைசியா முடிச்சியே… அத தனியா வச்சுக்கோ.. அத உன் பேருல பேட்டன்ட் போட்டு வாங்கிடலாம்”

 

“என்னது??? டேய் அது அவ்வளவு வொர்த் இல்லடா… கம்பெனி பேருல வாங்கு போதும்.”

 

“நான் சொன்னா சொன்னது தான். இதெல்லாம் எனக்கு அனுப்பிடு. எதுக்கும் ஒரு காபி நீயும் வச்சுக்க”

 

“ம்ம்..”

 

“நாளைக்கு மத்ததுல கரெக்ஷன் சொல்லுறேன். இப்போ போய் தூங்கு”

 

“இப்போவே சொல்லேன்”

 

“நோ… ஒழுங்கா தூங்குனா தான் ஒழுங்கா வேலை பார்க்க முடியும். போய் தூங்கு போ” என்று கூறி விட்டுக்குள் அனுப்பி விட்டு சென்று விட்டான்.

 

ஆராதனா தூங்காமல் யுவனுக்கு வரைபடங்களை அனுப்பி விட “இவ சின்ஸியருக்கு அளவு இல்லாம போகுதே” என்று யுவன்‌ தலையிலடித்துக் கொண்டான்.

 

அடுத்த நாள் காலை ஆராதனாவின் வரைபடங்கள் இம்ரானுக்கு‌ அனுப்பப்பட்டது. அதை அடுத்த மாதம் வெளியிடுவதற்காக வைத்திருந்த டிசைன்களில் இம்ரான் இணைத்து விட்டான்.

 

மூன்று நாட்கள் கடந்து இருக்க ஆராதனா அவசரமாக யுவனை தேடி வந்தாள். யாருடனோ யுவன்‌ பேசிக் கொண்டிருக்க ஆராதனா கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்து விட்டாள்.

 

அவள் முகத்தில் இருந்த பதட்டம் யுவனை யோசிக்க வைத்தது. பேசிக் கொண்டிருந்தவர்களை அனுப்பி விட்டு அவளிடம் வந்தான்.

 

“என்ன ஆச்சு? ” என்று கேட்க ஒன்றும் பேசாமல் தன் கையிலிருந்த டேப்பை காட்டினாள். அவர்களது போட்டி நிறுவனம் வெளியிட்ட டிசைன்கள் முழுவதும் அடுத்த மாதம் இவர்கள் வெளியிட வைத்திருந்த டிசைன்கள்.

 

யுவன் அதிர்ந்து போய் பார்க்க ஆராதனாவோ முகம் கசங்க நின்று இருந்தாள். அவள் அவ்வளவு கஷ்ட்டப்பட்டு உருவாக்கிய டிசைன்கள் இன்று யார் பெயரிலோ வெளி வந்து இருக்கிறது.

 

யுவன் தன் அதிர்ச்சியை ஒதுக்கி விட்டு “ரிலாக்ஸ் ஆரா.. நம்ம கிட்ட ப்ரூஃப் இருக்கு. அத வச்சு ப்ரூவ் பண்ணிடலாம்” என்று கூற ஆராவின் முகத்தில் தெளிவு இல்லை.

 

அவள் அருகில் வந்தவன் தோளோடு அணைத்துக் கொண்டான். தண்ணீரை எடுத்து கொடுக்க வேண்டாம் என்றாள்.

 

“எனக்கே சாக்கா தான் இருக்கு. எப்படி லீக் ஆச்சு னு. ஆனா இத இப்படியே விட்ர மாட்டேன். வருத்தப்படாத.. நீ வேலை பார்க்க வேணாம். வீட்டுக்கு போ.‌ நான்‌ சரி பண்ணிட்டு உன்ன கூப்பிடுறேன்”

 

“இல்ல… இங்கயே…”

 

“வேணாம். இங்க இருந்தா ரொம்ப எமோஷனல் ஆவ. நீ வீட்டுக்கு போ. அதான் இப்போ நல்லது. கிளம்பு”

 

யுவன் ஆராதனாவை வீட்டுக்கு அனுப்பி விட்டு இம்ரானை அழைத்தான். அவன் வரும் போதே அடுத்த குண்டை கொண்டு வந்தான்.

 

“என்னடா சொல்லுற?” என்று யுவனே அதிர்ந்து போனான்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
9
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்