Loading

ஆட்சியர் கனவு 37 💞

அனைவரும் இருந்தும் அமைதியாகவே அன்றைய பொழுது செல்ல, கார்மேகன் அவன் ஏழ்பரியோனை துயில் கொள்ள அனுப்பி விட்டு, தன் எழிலை கொண்டு நிலவவள் எழிலை காண செய்தான்.

பறந்து விரிந்த நீரூபத்தில் தன் எண்ண அலைகளை, தான் கடந்து வந்த வாழ்க்கை பாதை வழியே எண்ணிலடங்கா நட்சத்திரங்களோடு கலக்க விட்டாள் திவி.

தன்னவனுக்கு தான் என்றும் உடன் இருப்பேன் என்று உணர வைத்தவளுக்கு நாட்கள் அதன் போக்கில் சக்கரம் கட்டி கொண்டு சென்றது. ஒரு புறம் கல்லூரி, மறுபக்கம் அலுவலகம் என்று திவிக்கு நேரம் செல்ல, தன்னவளின் அருகாமை கிடைக்காமல் தவித்தான் ஆதி.

திருமணம் ஆகி இதோ ஆறு மாதம் ஆகி விட்டது. திவி எப்போதும் போல் கல்லூரி முடித்து அலுவலகம் செல்ல,

சந்தனா மதியிடம் சண்டையிட்டு கொண்டு இருந்தாள். “இங்க பாரு மதி. பல முறை சொல்லிட்டேன், அவ உனக்கு வேண்டாம். நீ வேண்டாம்னு சொல்லிட்டு போனவளை ஏன் இவ்ளோ சிரமப்பட்டு தேடுற.?” என்று தன் உடன் பணிபுரிபவனிடம் பேசி கொண்டு இருக்க,

மதி “இங்க பாரு சந்தனா, நீ என்ன வேணா சொல்லு. எனக்கு அவ தான் முக்கியம். அவ எங்க இருக்கான்னு மட்டும் சொல்லு சந்தனா. ப்ளீஸ்” என்று இவன் அவளிடம் கெஞ்சி கொண்டு இருந்தான்.

சந்தனா “ஒரு தடவ சொன்னா உனக்கு புரியாதா.? அவ இங்க இல்ல. அது மட்டும் தான் தெரியும். நீ நினைக்குற மாதிரி அவ இல்ல டா மதி. புரிஞ்சிக்கோ” என்று இவள் ஒரு படி இறங்கி வர,

மதி “அவ இல்லாம என்னால வாழ முடியாது. இதை உன் மனசுல ஆழமா பதிஞ்சு வச்சுக்கோ” என்று அவளிடம் உரைத்து விட்டு சென்று விட்டான்.

சரியாக திவி உள்ளே நுழைய, மதி அவனின் கேபினில் அழுது கொண்டு இருப்பதை தான் கண்டாள்.

அவசரமாக உள்ளே நுழைந்தவள் “இசை என்ன ஆச்சு.? ஏன் அழுகுறீங்க.?” என்று வினவ,

மதி அவளின் முகம் கண்டு “என்ன விட்டு அவ போய்ட்டா திவி. எங்கேயோ போய்ட்டா” என்றான் விசும்பலுடன்.

மதியின் கண்ணீர் அவளை ஏதோ செய்ய “என்ன ஆச்சு இசை.?” என்று கேட்டாள் வருத்தத்துடன்.

மதி “நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல திவி.. என்னோட காதலை பத்தி” என்று கேட்க,

திவியும் தலையாட்டினாள்.

மதி “அவ தான் திவி என் உலகமே. எவ்ளோ ஆசையா அவ கிட்ட காதலை சொல்ல போனேன் தெரியுமா.? அவளும் என் காதலை ஏத்துகிட்ட அந்த நிமிஷம் என்ன விட இந்த உலகத்துல சந்தோசமானவங்க யாருமே இல்லன்னு கத்தனும் போல இருந்துச்சு. ஆனால், எல்லாம் வெறும் ரெண்டு நாள் தான் திவி நீடிச்சது” என்றவனை புரியாமல் திவி பார்க்க,

மதி “என் காதல் தெரிஞ்சு அப்பாவும் சந்தனாவும் அவள எங்கேயோ அனுப்பிட்டாங்க. அவ எங்க இருக்கான்னு கூட தெரியல. முதல அவ இருக்காளான்னே எனக்கு தெரியல” என்று அவன் கதற, தேற்ற வழி அறியாது ஸ்தம்பித்து போனாள் திவி.

அப்போது அவன் கேபினிற்குள் ஆதி நுழைய, மதி அவசரமாக கண்ணை துடைத்து கொண்டு எழுந்தான்.

ஆதி எதுவும் கூறாது “திவி உடனே என் கேபினுக்கு வா” என்று மட்டும் சொல்லி விட்டு சென்று விட்டான்.

திவிக்கு தான் வயிற்றில் புளியை கரைத்தது. இன்று என்ன சொல்லப்போகிறானோ.? அன்று மிகவும் கடுமையாக திட்டிய வார்த்தைகள் அவள் நினைவிற்கு வர, மதியிடம் கூறி விட்டு உடனே தன்னவனை நோக்கி சென்றாள்.

திவி “மே ஐ கம் இன் சார்.?”

ஆதி “யெஸ்.. ” என்று கூறி விட்டு கோப்புகளை ஆராய்ந்து கொண்டு இருந்தான்.

திவி “சொல்லுங்க சார்”

ஆதி அவளை ஆராய்ந்து விட்டு “உடனே கிளம்பு சைட் போய் பாக்கணும்” என்று கூறினான்.

திவி “பட் ஸ்செடுவல்படி இப்போ மீட்டிங் தானே.?” என்று கேட்க,

ஆதி அவளை பார்த்த பார்வையில் சொன்னதை செய் என்ற கட்டளை மேலோங்க, திவி எதுவும் பேசாது தேவையான கோப்புகளை எடுத்து கொண்டு ஆதியை தொடர்ந்தாள்.

திவி ‘நான் இப்போ என்ன கேட்டேன்னு இப்டி மூஞ்ச வச்சிக்கிட்டு வரான் எரும.? டேய் நீ வீட்டுக்கு வா டா உன்னை பாத்துக்குறேன்’ என்று மனதில் திட்ட,

ஆதி “நீ வீட்டுக்கு போன உடனே தூங்கிடுவ.. என்ன டி பண்ணுவ.?” என்ற பதிலில்,

திவி ‘இவ்ளோ பிராங்காவா நம்ம மைண்ட் வாய்ஸ் கேக்குது’ என்று தலையில் அடித்து கொண்டு “என்னமோ பண்ணுவேன், இப்போ கொஞ்சம் வண்டிய எடுங்க எம்.டி சார்” என்றாள்.

ஆதி “வாய்.. வாய்..” என்று தன் மகிழுந்தை இயக்க,

திவி மதி சொன்னதையே யோசித்து கொண்டு வந்தாள். ‘சந்தனா யாரு.? மதியோட அப்பா யாரு.? ஏன் ரெண்டு பேரும் இப்டி பண்ணனும்.? அந்த பொண்ணு எங்க போய் இருக்கும்.? ஒரு வேளை இவங்க அவள ஏதாவது.’ என்று நினைத்தவளுக்கே உள்ளுக்குள் பதற,

ஆதி அவளை உலுக்கவும் தான் சுயநினைவிற்கு வந்தவள் “ஹான்.. சொல்லு ஆதி ” என்றாள்.

ஆதி அவளையே பார்த்து கொண்டு இருக்க, “கூப்டுட்டு என்ன லுக் விட்ற.? சொல்லு டா டேய்” என்று கத்த,

ஆதி “என்ன ஆச்சு என் குட்டச்சிக்கு.?” என்று அவளின் உள்ளங்கையினை தன் கைக்குள் கொண்டு வந்து கேட்க,

திவி “நாம நமக்குன்னு டைம் ஸ்பெண்ட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சுல?” என்று தன்னவன் கைகளில் தன் கைகளை கோர்த்து கேட்டாள்.

ஆதி “ஏய், அப்டிலாம் பேசி மாமனோட மூட டெம்ப்டேட் பண்ணாத டி. பர்ஸ்ட் நீ என்ன யோசனைல இருக்க அத சொல்லு ” என்று அவள் பேச்சை மாற்றுவதை கணித்து கேட்டான்.

திவி “ஏதோ நம்மள சுத்தி நடக்குது டா. என்னன்னு தெரியல, ஆனா ஏதோ நடக்குதுன்னு எனக்கு தோணுது” என்று கூற,

ஆதி “நான் உன்கூட இருக்க வரை யாருக்கும் எதுவும் நடக்க விட மாட்டேன்டி” என்றான் அவளை தன் மடியில் கிடத்தி.

திவி “ஏய் என்ன பண்ற கார்குள்ள.? சைட்டுக்கு தான போனும்னு கூட்டிவந்த.?” என்று கன்னச்சிவப்பை மறைத்து கேட்டு வைக்க,

ஆதி “சைட்டுக்கு போனுமா.? நாம வேணா ஹனிமூன் போலாமா?” என்று கிறக்கமாக கூறியதில் திவிக்கு தான் அயோ என்று இருந்தது.

திவி “யாரோ சொன்னாங்க, எல்லாம்  என் லட்சியத்தை அடைஞ்சதுக்கு அப்ரோம் தான்னு.?” அவனை சீண்ட,

அவளை தள்ளிவிட்டவன் “இறங்கு, போ போய் சைட்ட பாரு” என்று நகர,

திவி “அப்போ நீ.?”

ஆதி “நான் உன்னை சைட் அடிக்க போறேன் டி பொண்டாட்டி” என்றான் கண்ணடித்து.

திவி “ஏய்.. இதுலாம் அப்ரோம் தான். வா நீயும் ” என்று அவனை கையோடு இழுத்து கொண்டு சென்றாள்.

அங்கு வேலைகள் அனைத்தும் சரியாக நடக்க, மேற்பார்வை இட்டவன், ஒரு இடத்தில் கடுமையான முகத்தோடு நின்று விட்டான். கோப்பை பார்த்து கொண்டு வந்தவள் அவன் நின்று விட்டதை கவனியாமல் அவன் முதுகு மேல் முட்டி மோதி நிற்க, “டேய் மலமாடு” என்று திட்ட வாயெடுக்க போனவள் சுற்றம் அறிந்து “என்ன ஆச்சு.?”என்று கேட்டுக்கொண்டே அவன் முன் வந்தாள்.

ஆதியின் பார்வை சென்ற இடத்தை நோக்கி பாவையவள் பார்வையும் செல்ல, அங்கு ஆதி செய்த டிசைன் இல்லாமல் வேறு மாதிரி கட்டிட வேலை நடந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து திவிக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது.

இது சந்தனாவின் பிராஜக்ட். அவளே இதற்கு முழு பொறுப்பு. இப்போது நடக்கும் தவறுக்கும் அவள் தானே பொறுப்பு. ஆனால் அவள் இங்கு இல்லையே.? இந்த பிராஜக்ட்டில் ஏதாவது குளறுபடி நடந்தால் அது கம்பெனிக்கு கருப்பு புள்ளியாக அல்லவா மாறிவிடும்.

ஆதி “திவி இங்க உடனே சந்தனா இருக்கணும்” என்று கர்ஜித்த அவளவனை பார்க்கையில் திவி உள்ளுக்குள் ஆடித்தான் போனாள்.

உடனே திவி சந்தனாவிற்கு அழைப்பு விடுத்தவள் அவளை வரும்படி கூறினாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் சந்தனா அங்கு இருந்தாள் உடன் மதியும்.

ஆதி “வாட் த ஹெல் இஸ் ஹேப்பனிங் ஹியர்..? நீ இந்த டிசைன் தான் சொன்னியா.?” என்று அவளை பார்வையால் துளைக்க,

சந்தனாவோ என்ன சொல்லி சமாளிப்பது என்று அறியாமல் திணறி கொண்டு இருந்தாள். ஆதி “வாயை திறந்து பேசு.. ” என்று கத்த,

சந்தனா “நா.. நான் அன்னைக்கே திவிக்கிட்ட பிராஜக்ட் குடுத்து எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன். இதுக்கு அவ தான் இன்சார்ஜ், அவ உன்கிட்ட சொல்லல?”என்று திவியின் மேல் பழியை போட்டாள்.

இவளின் கூற்றில் திவியும் மதியும் தான் அதிர்ந்து விட்டனர். ஆதியோ திவியின் மேல் கடுங்கோபத்தில் இருந்தான். ஆதி “உன்கிட்ட இந்த பிராஜக்ட் எப்போ வந்துச்சு?”

திவி “அது.. அது.. ஒன்.. ஒன் மந்த் ஆகுது” என்று கூறிய மறுநொடி அவளின் கன்னத்தை ஆதியின் கை பதம் பார்த்து இருந்தது.

ஆதி “இன்னும் ஒன் ஹவர்குள்ள எல்லாம் சரியா நடக்கணும்” என்று கூறி விட்டு மகிழுந்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

அவன் பின்னே சந்தனாவும் தன் எண்ணம் ஈடேறிய மகிழ்ச்சியில் சென்று விட, மதி தான் திவிக்கு துணையாக நின்று இருந்தான்.

திவி தன் கன்னத்தில் கை வைத்து கொண்டே ஆதி சென்ற திசையை பார்க்க, சற்று முன் நம்மிடம் பேசியவனா இவன்? என்று அவள் யோசிக்கவும் தவறவில்லை.

மதி “திவி டைம் இல்ல.. இப்போவே மணி அஞ்சு.. சீக்கிரம் ஏதாவது பன்னு.. இல்லன்னா நீ வீட்டுக்கு போக முடியாது” என்று அவளை சுயத்திற்கு கொண்டு வர,

ஆறு மாத காலத்தில்  ஐம்பது சதவிகிதம் தான் தொழிலை பற்றி அறிந்து இருந்தாள். முழுவதுமாக ஒரு பிளானை செய்யும் அளவிற்கோ அல்லது அதில் மாற்றம் கொண்டு வரும் அளவிற்கோ அவள் இன்னும் தயாராகவில்லை. செமஸ்டர் தேர்வும் இருந்ததினால் இந்த பிராஜக்ட் தன்னிடம் வந்த விஷயத்தை அவள் மறந்தே போய்விட்டாள்.

மதி “உன்னை தான் திவி.. ஏதாவது பண்ணு” என்றிட,

திவி “எனக்கு இன்னும் முழுசா எதுவும் தெரியாதே இசை” என்றாள் சிறுபிள்ளை தனமாக.

பாவம் மதியும் தான் என்ன செய்வான். அவனுக்கு தன் நண்பனிடம் இருந்து அழைப்பு வர “சாரி திவி, உடனே நான் கிளம்பனும். உனக்கு தெரிஞ்சத வச்சு சீக்கிரம் பண்ணு. இன்னும் 3 மந்த்ஸ்ல இதை முடிக்கனும். எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு.. பை” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

திவிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அங்கேயே ஒரு கல்லில் அமர்ந்து விட்டாள்.

அலுவலகத்திற்கு சென்ற ஆதிக்கோ மனமே சரி இல்லை. ‘அவள் ஒரு முழு பிராஜக்ட் செய்யும் அளவிற்கு தயாராகவில்லையே. எப்படி சந்தனா அவளிடம் கொடுத்து இருப்பாள்.?’ என்று யோசித்தவன், மகிழுந்தில் அவள் கூறியது தான் நினைவிற்கு வந்தது “நம்மள சுத்தி ஏதோ நடக்குது ஆதி.. என்னன்னு தெரியல” என்ற வாசகமே அவனின் மூளையை குடைய, உடனே தன் மகிழுந்தை எடுத்து கொண்டு சைட்டிற்கு விரைந்தான்.

மதி கிளம்பிய உடன் அங்கு வந்த சந்தனாவை கேள்வியாக பார்த்தாள் திவி “நீங்க தான சொல்ல வேண்டாம்னு சொன்னீங்க.? இப்போ ஏன்.?” என்று இயலாமையுடன் திவி கேட்க,

சந்தனா “நான் என்ன சொன்னாலும் செய்வியா யது.?” என்ற கூற்றில் திவி அதிர்ந்து விட்டாள்.

திவி அவளை கேள்வியாய் புருவம் உயர்த்தி பார்க்க, சந்தனா “என்ன டா இவளுக்கு எப்டி எல்லாம் தெரியும்னு பாக்குறியா.? நான் ராஜரத்தினம் பொண்ணுடி.. எப்டி எப்டி என்கிட்டேயே ஆதிய கல்யாணம் பண்ண பொண்ணு யாருன்னு தெரியாதுன்னு என்னா நடிப்பு.? ” என்று ஆத்திரம் பொங்க கேட்டாள்.

திவி யோசனையில் முகத்தை சுருக்கினாள். ‘யாருக்கும் தெரியாது என்று அமைதியாக இருந்தது எவ்வளவு பெரிய தவறு’ என்று அறிந்து தன்னையே நொந்து கொண்டாள். மேலும் ‘இவள் ராஜரத்தினத்தின் மகளா.?’ என்று ஆராயவும் தவறவில்லை.

அமைதியாகவே திவி இருக்க, சந்தனா “என்ன பேச்சு பேசுன.? என்ன நடிப்பு. அதுவும் என்கிட்டேயே. ஹான்.. என் ஆதியை என்கிட்ட இருந்து பிரிச்சல.. உனக்கு என்னோட தண்டனையே வேற மாதிரி இருக்கும். ஆதியே உன்னை வீட்டை விட்டு போக சொல்லுவான்.. நீயும் போவ.. ரெடியா இரு திவி இல்ல இல்ல யது.. நீ ஆதியை மட்டும் இல்ல உன் குடும்பத்தையே பிரிய போற நாள் ரொம்ப தூரம் இல்ல” என்று சவால் விட்டவளை பார்த்து நக்கலாக சிரித்தாள் திவி.

திவி “என்ன சொன்ன.? நீ என்னை என் குடும்பத்துல இருந்து பிரிக்க போறியா.? நான் எப்டின்னு போய் கேளு உன் அப்பன்கிட்டயும் தங்கச்சிகிட்டயும். சொல்லுவாங்க கதை கதையா.. நானே போனாலும் ஆதி என்ன விட்டு போக மாட்டான். நோட் இட்.. எங்க குழந்தைங்களோட ஆதி கூட சந்தோஷமா வாழ தான் போறேன்.. அத பாத்து நீ வயிறு எரிஞ்சு சாகதான் போற.. அண்ட் ஆதி என்னோடவன்.. எனக்கானவன்” என்று கர்வமாக கூறினாள்.

திவி கூறிய கடைசி இரு வார்த்தைகள் ஆதியின் காதில் விழ, இது வரை இருந்த இறுக்கம் மாறி முகத்தில் புன்னகை தான் தவழ்ந்தது.

ஆதி திவியை நோக்கி வர, திவி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஆதி “சந்தனா நீ கிளம்பு.” என்று கூற, மறுவார்த்தை பேசாமல் அவளும் கிளம்பி விட்டாள், வஞ்சத்துடன்.

ஆதி “யது..”

திவி அமைதியாக நிற்க, ஆதி “சாரிடி.. வா போலாம்” என்று அவளை அழைக்க,

திவி “நான் இன்னும் கத்துக்கணும்.”

ஆதி அவளை புரியாமல் பார்க்க, திவி “இந்த பிராஜக்ட்ட நானே முடிக்குறேன்.. ஆனா எனக்கு சரியா எதுவும் தெரியல.. சோ நான் இன்னும் கத்துக்கணும்.” என்றால் அவன் முகம் பாராது.

ஆதி மூரலுடன் “பர்ஸ்ட் வீட்டுக்கு வா.. நான் எல்லாம் சொல்லி தரேன்” என்று அவளை அழைத்து சென்றான்.

வீட்டிற்கு சென்றதும் இருவரும் சுத்தப்படுத்தி கொண்டு வர, எப்போவும் போல் இன்றும் இரவு உணவை தன்னவனுக்கு ஊட்டி விட்டாள். இது கடந்த மாதங்களாக நிகழ்வது தான்.

காலையில் இவள் கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் சாப்பிடாமல் செல்வதால் ஆதியே காலையில் ஊட்டிவிட, வேலை பழுவினால் இரவு உணவை ஆதி தவிர்ப்பதை தடுக்க, திவி இரவு அவனிற்கு ஊட்டி விடுவாள்.

ஆதி அவளின் கன்னம் வருடிட, வலியில் அவள் முகத்தை சுருக்கினாள். ஆதி “வலிக்குதா டி.?”

திவி எதுவும் பேசாமல் அவனுக்கு ஊட்டுவதிலேயே கவனமாக இருக்க,

ஆதி “ஏய் குட்டச்சி.. உன்னை தான் கேட்குறேன்.. “என்று அவளின் இடையை கிள்ளினான்.

திவி அதில் சற்று குதித்து நிற்க, ஆதியோ அவளை குறும்பாக பார்த்தான். அவனின் பார்வை வீச்சினை தாங்க இயலாது பெண்ணவள் பார்வையை சுழல விட்டாள்.

இது தான் சாக்கு என்று அவளின் இடை வளைத்து தன் கரம் பட்டு காயமான இடத்தினை இப்போது இதழ் கொண்டு மென்மையான மருந்திட்டான் அவளின் கன்னத்தில்.

ஆதியின் திடீர் செயலில் திவி பேந்த பேந்த முழிக்க, அவளின் காதருகில் “சீக்கிரம் சாப்பிட்டு வா.. உனக்கு நெறய சொல்லி தரேன்” என்று கூறி விட்டு அறைக்கு ஓடியே விட்டான்.

இவள் தான் திகைத்து பின் தேவ்வின் கூற்றில் சுயநினைவு வந்தாள்.

தேவ் “என்ன அண்ணி.. அடிக்கடி இப்டி பிரீஸ் மோட்க்கு போறீங்கன்னு கேள்விபட்டேன்” என்று அவளை வார,

திவி “இப்போ உங்களுக்கு என்ன வேணும் கொழுந்தனாரே.?” என்று கேட்டாள் நக்கலாக.

தேவ் “ரெண்டு தோசை வேணும் அண்ணியாரே” என்று அவனும் ஒரே தொனியில் சொல்ல,

திவி “இரு டா வரேன்.” என்று அவனுக்கும் சேர்த்து தோசை வார்த்து கொண்டு வந்தாள்.

இருவரும் அரட்டை அடித்து கொண்டே சாப்பிட, ஆதியோ தன்னவள் இன்னும் வராததால் அறையில் இருந்து குரல் கொடுத்தான்.

தெய்வானை “நீ சீக்கிரம் போ திவி.. அப்ரோம் அவன் கீழ வந்து தையா தக்கான்னு குதிப்பான்.  டேய் சீக்கிரம் சாப்பிட்டு தூங்கு நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குல்ல.” என்று அன்னையாகவும் அத்தையாகவும் தன் கடமையை சிறப்பாக செய்தார்.

திவி விரைந்து அறைக்கு செல்ல, அங்கு ஆதி செய்து வைத்திருந்த செயலில் உறைந்தே போய்விட்டாள்.

கனவு தொடரும்… 🌺🌺🌺..

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்