Loading

 

 

 

 

அதிகாலை வேளையில், ஜனசமுத்திரத்தில் மூழ்கி தத்தளித்தது அந்த திரையரங்கம். இன்று சித்திரை முதல் நாள். தமிழ் புத்தாண்டு. வருட பிறப்பு என்றால், எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டாட்டம் தான். குழந்தைகளுக்கு, விடுமுறை கொண்டாட்டம். பெரியவர்களுக்கு, திருவிழா கொண்டாட்டம். அதே போல், திரை ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தவென, அன்றைய நாள் வெளி வரும் புதுப்படங்களின் அணிவகுப்பு.

 

படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே காத்திருந்து, நாளுக்கு நாள் ஆர்வத்தை‌ தூண்டி விட்டு, எதாவது ஒரு சிறப்பான நாளில், படத்தை வெளியிடுவது தான், திரைப்பட துறையினரின் வியாபார நுணுக்கம். அந்த வியாபாரம் புரிந்தாலும், தனக்குப் பிடித்த ஒருவரை, திரையில் காணப்போகும் ஆர்வம், மக்களுக்கு எப்போதும் குறைந்தது இல்லை.

 

இன்றைய விடுமுறையை காலையிலேயே திரையரங்குகளில் கொண்டாட, ரசிகர்கள் கிளம்பி வந்து விட்டனர். திரையரங்கு சார்பாக, பல பல உருவ படங்கள் அங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. அது மட்டும் போதுமா? போதாது என்றனர் ரசிகர்மன்ற மக்கள். அந்த ஊரின் ரசிகர்மன்றம் சார்பாக, பல பேனர்கள் காட்சியளிக்க ஆரம்பித்தது.

 

மூன்று நபர் உயரத்திற்கு, இன்று வெளி வரப்போகும் திரைபடத்தின் கதாநாயகியின் படம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பொன்சிலை மேனி ஜொலிக்க, நாயகி படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

திரையரங்கில் நுழைந்த எல்லோருமே, அதை நிமிர்ந்து பார்த்து பிரம்மித்து விட்டு, உள்ளே சென்றனர். ஒரு மணி நேரத்தில் அந்த அரங்கத்தின் வெளிப்பகுதி முழுமையாக அமைதியானது. எல்லோரும் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு, அவர்களது இருக்கையில் அமர்ந்து விட்டனர்.

 

அப்போதும் சிலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். சலசலவென கேட்கும் பேச்சுக்கு நடுவே, பாடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. திடீரென விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட‌, ஒரு பெரும் சந்தோச கூச்சல் கிளம்பியது.

 

மெல்ல திரையில் வெளிச்சம் வர ஆரம்பித்தது. தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் ஆரம்பித்து, நடிகர்களின் பெயர்கள் வந்தது. நாயகனின் பெயர் வந்ததும், கூச்சல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அடுத்ததாக நாயகியின் பெயர் வர, கூச்சல் உட்சத்தை தொட்டது.

 

அந்நேரம், சத்தமில்லாமல் கருப்பு கண்ணாடியும், முகத்தை மறைக்கும்படி ஸ்கார்பும் அணிந்து கொண்டு, ஒரு பெண் உள்ளே வந்தாள். கடைசி வரிசையில், மூன்று இருக்கைகள் காலியாக இருந்தது. கதவுக்கு அருகில் இருக்கும் இருக்கையில், அமர்ந்து கொண்டாள்.

 

திரையில் பெயர் முடிந்ததும் கூச்சல் குறைய ஆரம்பித்தது. பட காட்சிகள் ஓட ஆரம்பித்தது. நாயகனின் அறிமுகப்பாடல் முடிந்தது. பாடலோடு ஆடி களைத்து எல்லோரும் இருக்கையில் அமர்ந்த சில வினாடிகளில், நாயகி திரையில் தோன்றினாள்.

 

களைப்பை மறந்து நாயகிக்காக கூச்சல் போட்டனர். பல வாழ்த்து மொழிகள் பறந்தது. விசில் சத்தம் காதை கிழித்தது. சில நிமிடம் வரை நீடித்த கூச்சல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.

 

கதை மெதுவாக நகர ஆரம்பித்தது. அப்போது, மேலும் ஒருத்தி உள்ளே நுழைந்தாள். முன்னால் வந்தவளின் அருகில் இருந்த இருக்கையில், அமர்ந்து கொண்டாள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் படத்தை பார்த்தனர். இடைவேளை வருவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன், அவ்விருவரும் வேகமாக வெளியேறினர்.

 

ஒரு ஏசி அறையில் நுழைந்தனர். முதலில் வந்தவள், இரண்டாவதாக வந்தவளை முறைத்து பார்த்தாள்.

 

“உன்ன வர வேணாம்னு சொன்னேன்ல?” என்று அவள் முறைக்க, “அப்புறம் நான் சார்க்கு பதில் சொல்ல முடியாது.” என்றாள் இரண்டாமவள்.

 

“ப்ச்ச்.. எனக்கு இதுல மட்டும் கண்ட்ரோல் பண்ணா பிடிக்கவே மாட்டிது” என்று கூறி விட்டு, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். சில நொடிகளில், கையில் பழச்சாறுடன் ஒருவன் கதவை தட்டினான். இரண்டாமவள், கதவை லேசாகத் திறந்து வாங்கிக் கொண்டாள்.

 

பிறகு அந்த திரையரங்கின் முதலாளி வந்தார்.

 

“மேடம் ஜூஸ் அனுப்புனேன் வந்துச்சுங்களா?” என்று அவர் கேட்க, “ம்ம்” என்றாள்.

 

“இன்டர்வெல் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு. முடிஞ்சதும் நானே வந்து சொல்லுறேன். எதுவும் வேணும்னா அந்த போன்ல இருந்து என்ன கூப்பிடுங்க” என்று கூறி விட்டு சென்று விட்டார்.

 

“ஜூஸ்?”

 

“வேணாம்”

 

ஒரு ஓரமாக வைத்து விட, போன் மௌனமாக அதிர்ந்தது.

 

“சார் தான்” என்றபடி எடுத்து காதில் வைத்தாள்.

 

“சார்..”

 

“…”

 

“ஆமாங்க சார்”

 

“…”

 

“ம்ம்”

 

“…”

 

“சரிங்க சார்”

 

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

“என்னவாம்?”

 

“விசாரிச்சாங்க எப்பவும் போல”

 

“ம்க்கும். உட்காரு.. மூஞ்சிய பார்த்துட்டே நிக்காத.. இதுக்கு தான் ஃப்ரண்ட்ட வேலைக்கு வைக்க கூடாது. எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்கா”

 

“அப்ப நான் வேணா வேலைய விட்டுறவா?”

 

“எம்புட்டு ஆசை… நடக்காதுடி‌. நடக்கவே நடக்காது.. உன் வாழ்வு சாவு எல்லாம் என் கூட தான்”

 

“இத யாராவது கேட்டா அசிங்கமா நினைப்பாங்க”

 

“நினைச்சுட்டு போறாங்க. எனக்கு என் மஞ்சுவ விட யாரும் முக்கியம் இல்ல” என்று சொல்லி மஞ்சு என்கிற மஞ்சுளாவின் தோளில் கை போட்டுக் கொண்டாள்.

 

“இதுக்கு ஒன்னும் குறச்சல் இல்ல.”

 

“வேற என்ன குறை? சம்பளம் குறையா இருக்கா?”

 

“அத யாரு சொன்னா? எனக்கு விடுதலை வேணும்”

 

“அது என்ன பேபி? கருப்பா இருக்குமா? இல்ல வெள்ளையா இருக்குமா?”

 

“ம்ம்.. மஞ்சளா இருக்கும்”

 

மஞ்சுளா கடுப்போடு சொல்ல மற்றவள் சிரித்தாள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த முதலாளி மீண்டும் வந்தார்.

 

“மேடம் இப்போ நீங்க உள்ள போகலாம்” என்று கூற, இருவரும் மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்தனர். படம் முடிந்ததும் முதல் ஆளாக வெளியேறி, பின்னால் நின்றிருந்த காரில் ஏறி, பறந்து விட்டனர்.

 

“என்ன படம் திருப்தியா இருக்கா?” என்று மஞ்சுளா கேட்க, மேலும் கீழும் தலையாட்டி வைத்தாள். தலைமுடியை அவள் சரி செய்து கொண்டிருக்க, இப்போது அவளது போன் அதிர்ந்தது.

 

எடுத்து ஸ்பீக்கரில் போட்டு விட்டு, “ஹலோ” என்றாள்.

 

“கன்க்ராட்ஜ் மினி டியர்” என்று குரல் கேட்க, “தாங்க்யூ மேன்” என்றாள்.

 

“படம் பார்த்துட்டு வந்துட்டியா?”

 

“ம்ம்.. நீ எங்க இருக்க?”

 

“இப்போ தான் ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்”

 

“நேத்தே வந்து இருந்தா என்னவாம்?”

 

“என் தப்பு இல்லமா.. இவங்க கடைசி நேரத்துல டிக்கெட் புக் பண்ணி சொதப்பிட்டாங்க”

 

“சரி சரி விடு”

 

“வீட்டுக்கு போயிட்டு படத்த பார்த்துட்டு கால் பண்ணுறேன்”

 

“ஓகே பா. ” என்று கூறி, அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

“எனக்கு உன் ஃப்ரண்ட்ஸ்லயே இவர மட்டும் தான் ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று மஞ்சுளா கூற, மினி என்று நண்பர்களாலும் மின்மினி என்று ரசிகர்களாலும் அழைக்கப்படும் திவ்யான்ஷி, திரும்பிப் பார்த்தாள்.

 

“பிடிச்சு இருக்கா? என்ன சைட்டா?”

 

“அய்ய.. நான் அவரோட கேரக்டர பிடிச்சு இருக்குனு சொன்னேன். ஒரு குட் ஃப்ரண்ட். அத விட முக்கியமா நான் கல்யாணம் பண்ணா சினி ஃபீல்ட்ல பண்ண கூடாதுனு கொள்கையோட இருக்கேன்”

 

“ஏன்? இந்த ஃபீல்ட்ல என்ன குறை?”

 

“உன் கிட்ட மாட்டிட்டு படுறனே இந்த பாடு பத்தாதது?”

 

“எப்படா சான்ஸ் கிடைக்கும் தப்பிக்கலாம்னு இருக்க?”

 

“ஆமா.. ஆனா நீ விட மாட்டீங்கிறியே”

 

மஞ்சுளா புலம்ப, “அதெல்லாம் மறந்துடு.. நடக்காத விசயம். பார்ட்டி விசயத்துக்கு வா. அங்கிள்க்கு போன் பண்ணி எப்போ கிளம்புறார்னு கேளு. அவர் வரலனா பார்ட்டி கேன்சல் தான்” என்று‌ வேறு பேச்சை எடுத்தாள்.

 

“நைட் குள்ள வந்துடுவார்னு தான் நினைக்குறேன். பார்க்கலாம்”

 

இருவரும் பேசிக் கொண்டே இருக்க, கார் நிற்காமல் சென்று கொண்டிருந்தது.

 

*.*.*.*.*.*.

 

தொலைகாட்சிகள் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்க, வீட்டுக்குள் உடற்பயிற்சி செய்த படி, அதை பார்த்துக் கொண்டிருந்தாள் விவேகா. தொலைகாட்சியில் புதுப் படங்களின் விளம்பரங்கள் வர, அதில் மின்மினி திவ்யான்ஷியின் படமும் வந்தது.

 

அதை பார்த்து விட்டு நடக்கும் வேகத்தை குறைத்தவள், போனை எடுத்துக் கொண்டாள். வெள்ளை நிற துண்டால் தன் வேர்வைகளை ஒற்றி எடுத்துக் கொண்டே, போனில் பார்வையை பதித்தாள்.

 

திவ்யான்ஷியின் படத்தைப் பற்றிய, மக்களின் கருத்துக்களை படித்துக் கொண்டிருந்தவளின் முகத்தில், புன்னகை வந்தது.

 

“மேடம் பாஸிடிவ் ரிவ்யூ தான் வாங்குறா. நெகடிவ் ஒன்னும் சிக்க மாட்டிதே” என்று தனக்கு தானே பேசிக் கொண்டு, திவ்யான்ஷியின் எண்ணை தேய்த்து அழைப்பு விடுத்தாள். அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டது.

 

“வாழ்த்துக்கள் மிஸ் திவ்யான்ஷி.. புது படம் நல்லா இருக்குனு கமெண்ட் வருது போல”

 

“நன்றிங்க விவேகா. நீங்களே பாராட்டினா எனக்கு பெருமை தான். படம் பார்த்தாச்சா?”

 

“நேத்து ப்ரடியூஸர் கூட மிட்டிங். சோ மிஸ் பண்ணிட்டேன். இனி தியேட்டர்ல பார்க்கனும்”

 

“அப்படி எதுவும் போயிடாதீங்க. என் ஃபேன்ஸ் உங்கள எதாவது பண்ணிட்டா வம்பு பாருங்க”

 

“உன் ஃபேன்ஸ் உன்ன மாதிரியே வைலன்ட் டைப் மா”

 

“ஆமா.. இதிலென்ன சந்தேகம்?” என்று திவ்யான்ஷி கூற, விவேகா சிரித்தாள்.

 

“அது இருக்கட்டும் எங்க இருக்கீங்க?”

 

“வீட்டுல.. இன்னைக்கு லீவ். நோ சூட்டிங். சோ பேமிலி கூட இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

 

“ஓ… இன்னைக்கு தேவா வர்ரான்”

 

ஒரு நிமிடம் விவேகா அமைதி காத்தாள். பிறகு, “சூட்டிங் எல்லாம் முடிஞ்சதாமா?” என்று வினவினாள்.

 

“ம்ம்.. முடிஞ்சதாம். டப்பிங் வொர்க் முடிச்சுட்டா போதும்னு சொல்லிட்டு இருந்தான்”

 

“ஓ.. ஓகே மா. நான் அப்புறம் பேசுறேன். படம் ஹிட் ஆனதுக்கு ட்ரீட் மறந்துடாத”

 

“கண்டிப்பா உங்களுக்கு இல்லாமலா” என்று கூறி விட்டு, அழைப்பை துண்டித்தாள்.

 

விவேகா போனை வைத்து விட்டு திவ்யான்ஷி சொன்னதை நினைத்து பார்த்தாள். பிறகு ஒரு பெரு மூச்சோடு வேலையை கவனித்தாள்.

 

“யாரு போன்ல?” என்று கேட்டுக் கொண்டே மஞ்சுளா வர, “விவேகா அக்கா” என்றாள்.

 

“விஷ் பண்ணாங்களா?”

 

“ம்ம்..”

 

“சரி நான் கிளம்புறேன். அம்மா நூறு தடவ கால் பண்ணிட்டாங்க. இனியும் போகலனா அடி வாங்கனும்” என்று மஞ்சுளா கூற, “சரி பார்த்து போயிட்டு வா” என்று அனுப்பி வைத்தாள்.

 

மஞ்சுளா திவ்யான்ஷியின் ஆருயிர் தோழி. இவர்கள் தோழிகள் என்ற உண்மை மூவரை தவிர யாருக்கும் தெரியாது. வெளியில் தெரிய கூடாது என்பது மஞ்சுளாவின் பிடிவாதம். பார்க்கும் வேலைக்கு வாங்கும் சம்பளத்தை தவிர வேறு எதையும் தோழியிடமிருந்து எதிர் பார்க்க மாட்டாள். கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டாள்.

 

திவ்யான்ஷியின் மற்றொரு தோழன் ஜெயதேவ். ஒரு சிறந்த நடிகன். அவனுக்கும் இவளுக்கும் கிசுகிசு எழுதிக் கொண்டிருக்கின்றனர் பத்தரிக்கையாளர்கள். ஆனால் இவர்கள் தங்களது நட்பில் தெளிவாக இருக்கின்றனர்.

 

யாருக்கும் தெரியாத ரகசிய தோழி விவேகா. விவேகாவிற்கும் திவ்யான்ஷிக்கும் போட்டி என்று திரை உலகமே நம்பிக் கொண்டிருக்க, இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மறந்ததே இல்லை. வயதில் பெரியவள் என்பதால் திவ்யான்ஷி, விவேகாவை அக்கா என்று அழைப்பதுண்டு.

 

இவர்களைத் தவிர திவ்யான்ஷியின் வாழ்வில், மேலும் இருவர் உண்டு. அவளது மதிப்பிற்குரிய மாமா. செந்தில் குமார். திரை உலகில் சிறப்பான இடத்தை தக்க வைத்துக் கொண்ட மனிதர். பல விருதுகளை பெற்ற சிறந்த இயக்குனர். சமீபகாலமாக உடல் நிலை ஒத்துழைக்காததால், திரைத்துறையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்.

 

அவரைத் தவிர, திவ்யான்ஷிக்கு மிக முக்கியமான உறவு ஒன்று உண்டு. அவளை பெற்ற அன்னை. அன்பரசி. ஆயிரம் ரசிகர்கள் சுற்றியிருந்த போதும், அன்னையை பற்றி மட்டுமே அவளது நினைவு ஓடும். மனதில் நினைக்கும் போதெல்லாம், அவரிடம் பேசி விட முடியாது. அவளது வேலை அப்படி. ஆனால் தினமும் காலை, அவர் எழுப்ப வேண்டும் என்ற ஏக்கம் அவள் மனதில் உண்டு.

 

தினமும் ஒரு முறையாவது அவரிடம் பேசாமல் நாள் ஓடாது அவளுக்கு. அன்பரசிக்கும் திவ்யாவை விட்டால் வேறு சொந்தம் இல்லை. ஆனால் இவ்விருவரையும் மக்கள் தங்கள் உள்ளத்தில் சுமந்தனர்.

 

*.*.*.*.*.*.

 

மாலை, திவ்யான்ஷி தனது டிசைனர் வடிவமைத்து கொடுத்த உடையை அணிந்து, கிளம்பிக் கொண்டிருந்தாள். வேகமாக மஞ்சுளா அவளிடம் வந்து நின்றாள்.

 

“லேட் ஆகிடுச்சா?”‌என்று மஞ்சுளா அவசரமாக கேட்க, “இல்ல. இங்க தான உட்கார்ந்து இருக்கேன்” என்று திவ்யா பொறுமையாக கூறினாள்.

 

மஞ்சுளா வேகமாக திவ்யாவிற்கு மேக்அப் போட ஆரம்பித்தாள். திரை உலகில் எழுதப்படாத சட்டம் இந்த மேக்அப். அதை எக்காரணத்தை கொண்டும் தவிர்த்து விட முடியாது. பியூட்டிஷியன் படித்த மஞ்சுளாவை தனக்கு மேக்அப் போட வைத்தாள் திவ்யான்ஷி.

 

மேக்அப் முடிந்ததும், அவளையும் அலங்கரித்துக் கொள்ள சொன்னாள் திவ்யா.

 

“நோ.. நான்‌ பார்ட்டில இருக்க முடியாது. ஒரு மணி நேரத்துல வீட்டுல இருக்கனும். இல்லனா அம்மா கிட்ட வாங்கி கட்ட வேண்டி இருக்கும்” என்று மஞ்சுளா மறுத்து விட்டாள்.

 

இருவரும் கிளம்பி, பார்ட்டி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.‌ இன்று வெளியான படக்குழுவினர் தான் அங்கு இருந்தனர். படம் எதிர் பார்த்ததை விட அதிக அளவு மக்களால் வரவேற்கபட்டது. அதை கொண்டாட வேண்டும் என்று நேற்றே முடிவு செய்திருந்தனர்.

 

நினைத்ததைப் போல் இன்று மக்கள் பக்கமிருந்து நேர்மறை கருத்துக்களே வந்து குவிந்து கொண்டிருந்தது. நாயகிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கும் கதை. அதில் மின்மினியை பாராட்டி தள்ளிக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

 

திவ்யான்ஷி வந்து நின்றதும், எல்லோரின் பார்வையும் அவள் பக்கம் திரும்பியது. அவளுக்கு வாழ்த்து கூறி உள்ளே அழைத்துச் சென்றனர். பார்ட்டி ஆரம்பித்தது. சோசியல் ட்ரிங்கிக் என்று, திவ்யான்ஷியின் கையில் ரெட் வொயின் திணிக்கப்பட்டது.

 

அவள் அழகிய புன்னகையுடன் அதை வாங்கிக் கொள்ள, சில நொடிகளில் அவள் கையிலிருந்த கண்ணாடி குவளை யாருக்கும் தெரியாமல் மாற்றப்பட்டது.

 

மற்றவர்கள் அதை கவனிக்கா வண்ணம், மஞ்சுளா தான் அதைச் செய்தாள். பல பார்ட்டிகளில் இப்படி மாற்றி விடுவார்கள். இன்று வரை இதை யாரும் கவனித்ததே இல்லை. திவ்யா சிரித்த முகத்தோடு எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்க, செந்தில் குமார் வந்து சேர்ந்தார்.

 

அவரைப் பார்த்ததும் அமர்ந்து இருந்த எல்லோரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர். எல்லோரிடமும் நலம் விசாரித்து விட்டு, திவ்யான்ஷியிடம் வந்தார்.

 

“ஏன் அங்கிள் லேட்? “

 

“அப்புறமா சொல்லுறேன்” என்று மெல்லிய குரலில் கூறி விட்டு, மற்றவர்களை கவனித்தார். ஆட்டம் பாட்டம் விளையாட்டு என இடம் களைகட்டியது, எல்லாம் முடிந்து எல்லோரும் கிளம்ப இரண்டு மணி நேரமாகியிருந்தது. செந்தில் குமார் வந்த சில நிமிடங்களில், மஞ்சுளா கிளம்பி விட்டாள்.

 

பார்ட்டி முடிந்து கிளம்பும் முன், திவ்யாவின் கையில் இருந்த பழரசத்தை, ‘வொயின்’ என நினைத்து, அவளை வற்புறுத்தி குடிக்க வைத்து விட்டு தான் கிளம்பினர் சிலர். இந்த வற்புறுத்தல் அன்பு தொல்லை அல்ல. அன்பு தொல்லை போல் காட்டப்படும் ஒரு வக்கிர புத்தி. சினிமாவிற்கு வந்து விட்டால் இதெல்லாம் பழகியே ஆக வேண்டும் என்று அவர்களாக விதித்துக் கொண்ட‌ சட்டம். அதை செய்யவில்லை என்றால் அவளை ஒதுக்கி ஓரம் கட்டி விடுவர். அதை செய்து விட்டால் அதை வைத்து பல அரசியல் வேலைகளைச் செய்வர். இவர்களே பழகிக் கொடுத்து விட்டு, இவர்களே வெளியில் செய்தியாக கசியவும் விடக்கூடியவர்கள்.

 

அதனால் தான் முதல் வேலையாக செந்தில் குமார் இந்த பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று கட்டளை விதித்து இருந்தார். திவ்யாவிற்கும் மது போதையின் மீது நாட்டம் வந்தது இல்லை. அதனால் மஞ்சுளாவும் அவளும் கண்டு பிடித்த மாற்று வழி இது. சிலர் பார்டியிலிருந்து கிளம்பும் போதே, செந்திலுடன் திவ்யாவும் கிளம்பினாள்.

 

காரில் சென்று கொண்டிருக்க, “என்னாச்சு மாமா.. எதையோ யோசிச்சுட்டே வரீங்க?” என்று கேட்டாள்.

 

“நாளைக்கு எதாவது வேலை இருக்கா உனக்கு?”

 

“இருக்கு. சூட்டிங் இருக்கு.”

 

“எங்க?”

 

“ஸ்டுடியோல தான்.”

 

“அப்போ சரி. முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்துடு”

 

“என்ன விசயம்?”

 

“அர்ஜுன் வர்ரான்”

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
9
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்