Loading

 

 

 

உணவு மேசையில் பரப்பப்பட்ட உணவைகளை பார்த்து சந்திரா வாயை பிளந்தாள்.

 

“எப்பவுமே கொஞ்சமா சமைக்கவே மாட்டியா திவ்யா?”

 

“அப்படி ஒரு பழக்கமே எனக்கு கிடையாது”

 

திவ்யா படு கூலாக கூறி விட்டு சாப்பிட அமர்ந்தாள். அர்ஜுன் வந்து அவளருகில் அமர்ந்து‌ கொண்டான். எதிரில் அன்பரசி சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்க அருகில் சந்திரா அமர்ந்தாள்.

 

“எல்லாரும் அம்மா கையால சமைச்சு சாப்பிடனும்னு ஆசை படுவாங்க. நான் மட்டும் எப்போடா என் மக வருவா.. அவ கையால சமைச்சு போடுவானு காத்துட்டு இருக்கேன்”

 

“உங்க மக சமையல நீங்க தான் சொல்லிக்கனும்” என்று அர்ஜுன் சலிப்பாக கூறி விட்டு உணவில் கை வைக்க திவ்யா அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

 

“அப்ப நீ ஒன்னும் சாப்பிட வேணாம் கிளம்பு”

 

“நீ சொன்னா நான் கேட்கனுமா? நீ எவ்வளவு கேவலமா சமைச்சு இருக்கனு சாப்பிட்டு பார்த்து சொல்லுறேன்”

 

அர்ஜுன் அவள் கையை தட்டி விட்டு சாப்பிட ஆரம்பிக்க “ம்மா…” என்று திவ்யா அன்னையின் பக்கம் கோபமாக திரும்பினாள்.

 

அன்பரசியோ எதையும் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சந்திராவும் சிரித்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

 

“ம்மா.. இவன் எதுக்கு வந்தான்னு சொல்லுங்க.. என் உயிர எடுக்கனே வந்துருக்கான்”

 

“அத ஏன் அங்க கேட்குற? நான் சொல்லுறேன். நேத்து காலையில அத்த போன் பண்ணி ஃப்ரியா இருந்தா இங்க வந்துட்டு போனு சொன்னாங்க. நானும் அத்த கூப்பிட்டுட்டாங்களேனு உடனே கிளம்பி இங்க வந்துட்டேன். வந்து பார்த்தா நீ நிக்கிற.. ஆமா நீ இங்க என்ன பண்ணுற?”

 

“எங்கம்மாவ பார்க்க வந்தேன். வந்த இடத்துல உன்ன மாதிரி ஒரு குரங்க பார்ப்பேன்னு எதிர் பார்க்கல”

 

“நான் பிசாசையே பார்த்துட்டு சும்மா இருக்கேன்.. குரங்கு தான.. ஒன்னும் பிரச்சனை இல்ல”

 

திவ்யா எரிப்பது போல் பார்க்க கண்சிமிட்டி சிரித்தான். எதுவும் பேச பிடிக்காமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

 

அவள் சாப்பிடும் அளவை பார்த்தவன் “ஹேய்.. உன் டயட்டிங் ப்ளான் எல்லாம் என்ன ஆச்சு?” என்று கேட்டு வைத்தான்.

 

“அதெல்லாம் ஊர் எல்லையிலயே கழட்டி விட்டாச்சு. இங்க நான் அம்ரிதா.. அம்ரு.. திவ்யான்ஷி கிடையாது. ரெண்டு நாள்ல வெயிட் கூடினாலும் எனக்கு குறைக்க தெரியும். இனிமே இங்க அத பத்தி பேச கூடாது”

 

திவ்யா கறார் குரலில் பேசி விட்டு சாப்பாட்டை கவனித்தாள். அர்ஜுன் அவளை ஆச்சரியமாக பார்த்தான். அவனும் காலையில் பார்க்கும் போது இதை தான் நினைத்தான்.

 

அம்ரிதாவாக இந்த வீட்டில் இருப்பது போல் தான் தோன்றியது. நடிகை திவ்யான்ஷி அவனது நினைவுக்கு வரவில்லை. அவளும் அதையே சொல்லவும் சந்தோசமாக உணர்ந்தான்.

 

இவர்களது சண்டையை சந்திரா தான் கவனித்துக் கொண்டே இருந்தாள். அன்பரசி கண்டு கொள்ளவே இல்லை. சந்திரா இவர்களது சண்டையை பற்றி அன்பரசி சொல்ல கேட்டிருக்கிறாள். நேரில் பார்க்கும் போது இன்னும் சுவாரசியமாக இருந்தது.

 

“ம்மா.. இவ்வளவு சண்ட நடக்குது.. சாப்பிட்டுட்டே இருக்கீங்க?” என்று சந்திரா முணுமுணுக்க “இதுங்க நல்லா பேசுனா தான் ஆச்சரியபட்டு வேடிக்கை பார்க்கனும். எப்பவுமே சண்ட போடுற மாதிரி தான் பேசுங்க” என்றார்.

 

அன்பரசி திவ்யாவை பார்த்து “அம்ரு.. நீ ஊருக்கு போறதுக்குள்ள மட்டன் வருவலும் ஆட்டு கால் சூப்பும் எப்படி பண்ணுறதுனு இவளுக்கு சொல்லி கொடுத்துட்டு போ” என்றார்.

 

“ஏன் ? தெரியாதா?”

 

“தெரியாம ஆசை பட்டு கேட்டுட்டேன். அன்னைக்கு பண்ணி.. இவ சூடம் ஏத்தி சத்தியம் பண்ணதுக்கு அப்புறம் தான் அது சூப்புனே நம்பினேன். அப்படி ஒரு சூப் அது”

 

சந்திரா உதட்டை பிதுக்க திவ்யா சிரிக்க ஆரம்பித்து விட்டாள். சிரித்துக் கொண்டே இருந்தவளுக்கு திடீரென இருமல் வந்து விட மூவரும் ஒரே நேரத்தில் “பார்த்து” என்றனர்.

 

அர்ஜுன் மட்டும் அவள் தலையை தட்டி முதுகை தடவி விட்டான். திவ்யா நிதானத்திற்கு வந்ததும் தண்ணீரை எடுத்து கொடுத்தான்.

 

“பொறுமையா குடி” என்க திவ்யா மறு பேச்சு இல்லாமல் குடித்தாள்.

 

“அவ்வளவு மோசமாவா கா செஞ்சீங்க? என்ன பண்ணீங்க?”

 

“அது…”

 

“வேணாம்.. கேட்காத அப்புறம் உனக்கு மறந்து போயிடும்” என்று அன்பரசி கூற சந்திரா முகத்தை சுருக்கினாள்.

 

“சரி விடுங்க.. நாளைக்கு பண்ணி காட்டுறேன். இன்னைக்கு கால் கிடைக்குமானு தெரியல.. சரி லன்ச்க்கு என்ன பண்ணலாம்?”

 

“எனக்கு சிக்கன்…” என்று சந்திரா வேகமாக கூற “அதெல்லாம் வேணாம். மீன் செய்.. ” என்றான் அர்ஜுன்.

 

“ஏன் வேணாம்?” என்று சந்திரா கேட்க “இவ அதெல்லாம் சாப்பிட்டு வெயிட் போட்ருவா.. ” என்றான்.

 

“ஓ.. ஆமால”

 

“என்ன நோமால… நான் வெயிட் போட்டா உனக்கென்னடா? சிக்கன் ஃபிஸ் ரெண்டும் வாங்கிட்டு வாங்க.. நான் பண்ணுறேன்” என்று திவ்யா கூற அர்ஜுன் சலிப்பாக பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான்.

 

சாப்பாட்டு வேளை முடிந்ததும் அன்பரசி அறைக்குச் சென்று விட்டார். அவரால் சில நிமிடங்களுக்கு மேல் அமரவும் முடியாது. அவரை படுக்க வைத்து விட்டு சந்திரா திவ்யா சொன்னதை வாங்க கிளம்ப அர்ஜுனும் உதவிக்குச் சென்றான்.

 

இருவரும் வாங்கி வந்ததை திவ்யா சமைக்க சந்திரா அருகில் நின்று அவள் செய்வதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அர்ஜுன் அன்பரசியின் அறைக்குச் சென்றான்.

 

“உட்காரு அர்ஜுன்.. வந்ததுல இருந்து பேசவே முடியல.. அப்பா நல்லா இருக்காரா?”

 

“ம்ம்.. நல்லா இருக்கார்”

 

“எதுக்கு பா இவ்வளவு வருசமா எங்கள எல்லாம் பார்க்க வரல?”

 

“நான் வந்தா உங்க மகள நடிக்க விடாம கூட்டிட்டு போயிடுவேன்னு எனக்கே பயமா இருந்துச்சு”

 

“ஏன் இப்படி யோசிக்கிற?”

 

“உங்களுக்கே தெரியும்ல.. நான் சினிமா உலகத்த எவ்வளவு வெறுக்கிறேன்னு.. நான் தூரமா இருக்கது தான் அப்போ அம்ருக்கு நல்லதுனு தோணுச்சு.. அதான் அவள விட்டு போனேன். ஆனா உங்கள எல்லாம் மறக்கல.. உங்கள பத்தி லெனின் கிட்ட தினமும் கேட்டு தெரிஞ்சுப்பேன்”

 

“அந்த பையன் தான் உன்ன பத்தி இங்கயும் சொல்லுவான்.”

 

“ம்ம்.. தெரியும்”

 

“அம்ரு பாவம் அர்ஜுன்.. அவ மேல கோபப்படாத.. நடந்தத நான் உனக்கு தெளிவா சொல்லுறேன்”

 

“வேணா அத்த.. இது எங்க ரெண்டு பேருக்கும் இடையில நடந்த பிரச்சனை. நான் பேசனும்னா தெரிஞ்சுக்கனும்னா நேரா அவ கிட்ட பேசி தெரிஞ்சுக்குறேன்.”

 

“அவ சொல்ல மாட்டா அர்ஜுன்.. உன் மேல இருக்க கோபத்துக்கு அவ எதையும் வாய திறந்து சொல்ல மாட்டா”

 

“பரவாயில்ல.. அவளா எப்போ சொல்லனும்னு நினைக்கிறாளோ சொல்லட்டும். அத விட முக்கியமா நான் அவ மேல கோபமா இருக்கேன். என் கோபத்துக்கு அவ பதில் சொல்லி தான் ஆகனும்”

 

“என்னவோ.. வருச கணக்கா நீங்க இப்படி சண்டை போடுவீங்கனு எதிர் பார்க்கவே இல்ல. அப்பப்போ சண்டை போட்டுட்டு அப்பப்போ மறந்துட்டு பேசுவீங்க. இப்போ சுத்தமா மாறிட்டீங்க”

 

“சின்ன பசங்களா இருந்தோம். சண்டையும் சின்னதா இருந்தது. இப்ப பெரிய பசங்களாகிட்டோம்ல.. இப்போ பெருசா தான சண்டை போட்டுக்கனும்?”

 

அர்ஜுன் சிரிப்போடு கூற அன்பரசி சலிப்பாக தலையாட்டினார்.

 

“உங்கள திருத்த முடியாது”

 

“விட்ருங்க… நாங்களே பார்த்துக்குறோம். உங்க ஹெல்த் எப்படி இருக்கு? டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணீங்களா?”

 

“அப்படியே தான் இருக்கு. எந்த முன்னேற்றமும் இல்ல. சந்திரா நல்லா பார்த்துப்பா.. அம்ருவும் தினமும் போன்ல விசாரிப்பா. அப்படியே காலம் ஓடுது”

 

“சரியா போகும்.. இத எல்லாம் நினைச்சு வருத்த படாதீங்க”

 

“சரியா போகும்னு நம்பிக்கை எல்லாம் இல்ல. எனக்கு இருக்க ஒரே வருத்தம் ஒரு கல்யாணத்த பார்க்கனும். அவ்வளவு தான்”

 

“யார் கல்யாணம்?”

 

அர்ஜுன் சந்தேகக் கண்ணோடு பார்க்க அதை புரிந்து கொண்டவர் “அம்ரு இல்லபா.. அவ கிட்ட இத பேசுனா என்ன ஒரு வழி பண்ணிடுவா.. நான் சந்திராவ தான் சொல்லுறேன். என் கூடவே இருக்கனும்னு கல்யாணத்துக்கு பிடி கொடுக்க மாட்டுறா.. கட்டாய படுத்த வேணாம்னு தோனுது.. ஆனா அவளுக்குனு ஒரு உறவு வேணும்ல… வயசு முப்பத தாண்டிருச்சு.. அதான் கவலையாவே இருக்கு” என்றார்.

 

“அவ்வளவு தான? விடுங்க.. இவங்கள மாதிரி உலகத்துல ஆயிரம் பேர் இருப்பாங்க… அதுல ஒரு நல்ல பையனா பார்த்து கொண்டு வந்து நிறுத்துவோம். தன்னை போல ஒருத்தர பார்த்துட்டா மனசு தானா மாறிடும். ரெண்டு பேரையும் உங்க துணைக்கு விட்டுறோம்”

 

“அப்படிலா நடக்குமா என்ன?”

 

“நடத்தி காட்டுவோம்.. நான் விசாரிக்க சொல்லி லெனின் கிட்ட சொல்லுறேன். நீங்க கவலைய விடுங்க.”

 

எதோ இத்தனை நாளாக மனதில் சுமந்த பாரம் இறங்கியது போல் இருந்தது அன்பரசிக்கு. சந்திராவின் வாழ்வு இப்படியே முடிந்து போவதில் அவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. இப்போது பொறுப்பை அர்ஜுன் எடுத்துக் கொள்ளவும் நிம்மதியாக உணர்ந்தார்.

 

அன்பரசியை ஓய்வெடுக்க சொல்லி விட்டு சமையலறை பக்கம் வந்தான். இருவரும் அவனை கவனிக்காமல் வேலையில் மூழ்கி இருந்தனர்.

 

“ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணுறீங்க?”

 

“கொலை பண்ணுறோம்… நீயும் வரியா?”

 

“எதுக்கு? நானும் கொல்லனுமா?”

 

“இல்ல நாங்க ரெண்டு பேரும் உன்ன கொல்ல போறோம்” என்ற திவ்யா இரண்டு கத்திகளை எடுத்து ஒன்றை வைத்து மற்றொன்றை தீட்டினாள். இரண்டயும் தூக்கி பிடித்துக் கொண்டு அர்ஜுனை பார்த்து புருவம் உயர்த்தினாள்.

 

“கொலை காரி” என்று அர்ஜுன் முணுமுணுக்க அதை புரிந்து கொண்டவளுக்கு சிரிப்பு வந்தது.

 

கல்லால் அடி வாங்கிய பின் அர்ஜுன் அவளுக்கு வைத்த பெயர் கொலைகாரி. அதை சொல்லி அடிக்கடி வம்பிழுப்பான். இப்போது மீண்டும் கேட்கும் போது பழைய வாழ்க்கைக்கு சென்று விட்டது போல் உணர்ந்தாள்.

 

“அர்ஜுன்… இடையில நிக்காதீங்க.. டிஸ்டர்ப் ஆகுது” என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த சந்திரா கூற வேகமாக வெளியே வந்து விட்டான்.

 

வாசலில் வந்து அமர தெருவே அமைதியாக இருந்தது. எல்லோரும் காலையிலேயே அவரவர் வேலைக்கு கிளம்பிச் சென்றிருந்தனர்.

 

வெறும் தெருவை வேடிக்கை பார்த்தவனுக்கு சிறுவயது ஞாபகங்கள் வர அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

 

*.*.*.*.

 

 

அபிமன்யு போராடி திவ்யான்ஷி தங்கி இருக்கும் அறை எண்ணை கண்டு‌பிடித்து விட்டான். அதற்கு உதவியது அவனுடைய நண்பர்கள் தான்.

 

அந்த அறைக்குச் சென்று திவ்யாவிடம் அப்போதே பேச தோன்றினாலும் சற்று பொறுமை காத்தான். காரணம் இன்று படப்பிடிப்பு இல்லை. படக்குழுவினர் வெளியே சுற்றி பார்க்கச் செல்கின்றனர்.

 

கடந்த இரண்டு நாட்களாக அவளை சந்தித்து பேச முடியாததற்கு காரணம் அவளுக்கு வேலை அதிகமாக இருந்தது. ஆனால் இன்று வேலை இல்லை. வெளியே அவளை சந்திக்க காத்திருந்தான்.

 

எல்லோரும் எங்கு சுற்றி பார்க்க செல்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அங்கு போய் காத்திருந்தான். ஆனால் திவ்யான்ஷி வரவில்லை. குழுவாக பிரிந்து எல்லோரும் வெவ்வேறு இடத்துக்கு சென்றிருந்தனர்.

 

ஆனால் திவ்யாவின் அஸிஸ்டண்ட் இருக்கும் இடத்தில் தான் தேடி பார்த்தான். மஞ்சுளா மட்டும் மற்றவர்களோடு சுற்றிக் கொண்டிருந்தாள்.

 

ஒரு வேளை திவ்யா அறையிலேயே இருக்கிறாளோ என்று தோன்ற வேகமாக ஹோட்டலுக்குச் சென்றான். அவளை தனியாக சந்தித்து பேசலாம். நிறைய பேசலாம் என்ற கனவோடு போய் சேர்ந்தான்.

 

அழைப்பு மணியை பலமுறை அழுத்தியும் கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. உள்ளே யாரும் இல்லை என்று புரிந்தது. ஆனால் திவ்யா எங்கு போனாள் என்று தெரியவில்லை.

 

அவனால் இதை நம்பவும் முடியவில்லை. நேற்று வரை இங்கு தான் இருந்தாள். இன்று மாயமாக மறைந்து விட்டாள். எங்கு போனாள் என்று யாரையும் விசாரிக்க முடியாது. கேட்டால் அவனை விசித்திரமாக பார்ப்பார்கள்.

 

ஒன்றும் புரியாமல் தன்னுடைய அறைக்கே வந்து விட்டான். திவ்யான்ஷி தங்கி இருந்த அறை மஞ்சுளாவின் பெயரில் தான் பதிவு செய்யப் பட்டு இருந்தது.

 

அவள் கிளம்பாத வரை அறை காலி செய்யப்பட்டதாக கூற முடியாது. அவளோடு தங்கி இருக்கும் திவ்யான்ஷி ஊரை விட்டே போய் விட்டாளா இல்லை வேறு எங்கும் இருக்கிறாளா என்று தெரியவில்லை.

 

அபிமன்யுவிற்கு திவ்யா எங்கே போனாள் என்று தெரிந்தே ஆக வேண்டும். மஞ்சுளாவிடம் சாதாரணமாக பேசி பார்க்கலாம் என்று முடிவு செய்தான்.

 

ஆனால் மஞ்சுளா இரவு வரை அறைக்கு திரும்பவில்லை. முழு மூச்சாக ஊரை சுற்றிக் கொண்டு இருந்தாள். இரவு அறைக்கு வந்ததுமே அபிமன்யு சென்று கதவை தட்டினான்.

 

கதவை திறந்தவள் “என்ன வேணும்?” என்று கேட்டாள்.

 

“திவ்யான்ஷி இருக்காங்களா?”

 

“எதுக்கு?”

 

“கொஞ்சம் பேசனும்”

 

“அவங்க இப்போ இல்ல.. அடுத்து பார்க்கும் போது பேசிக்கோங்க”

 

“ஓ.. இங்க இல்லனா எங்க இருக்காங்க?”

 

“அது எதுக்கு கேட்குறீங்க?”

 

“இல்ல சும்மா தான்”

 

“இங்க இல்ல அவ்வளவு தான்”

 

மஞ்சுளா அவனது பதிலை எதிர் பார்க்காமல் கதவை அடைத்து விட்டாள். அபிமன்யு ஏமாற்றத்தோடு அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

மஞ்சுளாவிற்கு தான் யோசனையாக இருந்தது.

 

‘இவன் எதுக்கு பின்னாடியே சுத்துறான்? ரூம் வேற தெரிஞ்சு வந்து நிக்கிறானே.. சரியில்லையே’ என்று யோசனையோடு அறையை காலி செய்து கிளம்பி விட்டாள்.

 

இரவே எல்லோரும் சென்னைக்கு கிளம்பி விட அவர்களோடு திவ்யான்ஷி செல்லாததை பார்த்து அபிமன்யு தான் குழம்பிப் போனான்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Meenakshi Subburaman

   💞 ஹய்யோ இந்த அஜ்ஜு அம்ரு வைப் பத்தி புரிந்து கொள்வதற்குள் நமக்கு பைத்தியம் பிடிச்சுடும் போலவே

   💞👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌💐💐💐 சூப்பர் டா ஹனி

  2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.