அடுத்த நாள் காலை மஞ்சுளாவும் திவ்யாவும் ஹோட்டலுக்கு அருகில் இருந்த பார்க்கில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
சுற்றி இருந்த மலையாள மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டே நடந்தனர். திடீரென யாரோ முன்னால் வந்து நிற்க திவ்யா யோசனையோடு முகத்தை பார்த்தாள்
‘இவன் அந்த ஃப்ரஸ்னர் கம்பெனி ஓனர் பையனாச்சே’ என்று உடனே கண்டு பிடித்தாலும் தெரியாதவனை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்.
“ஹாய்..” என்று அபிமன்யு கூற “நீங்க?” என்று தெரியாதது போல் இழுத்து வைத்தாள்.
அதில் அபிமன்யுவின் மனம் அடி பட்டு விட்டது. அவள் தன்னை மறந்து விட்டாள் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆனாலும் மனதை தேற்றிக் கொண்டான். தினமும் ஆயிரம் பேரை பார்ப்பவள் தன்னை மறந்ததில் ஆச்சரியம் இல்லை என்று மூளை எடுத்துரைத்தது.
அவன் நினைத்தது போல் திவ்யா மறந்திருப்பாள் தான். ஆனால் கேமராவை வைத்ததால் அவன் முகத்தை திவ்யா மறக்கவில்லை.
“என்ன தெரியலையா? எங்க கம்பெனிக்கு நீங்க ஆட் நடிச்சீங்களே.. ஃப்ரஸ்னர் கம்பெனி” என்று முழுவிவரத்தையும் கூற “ஓ.. ஆமா..” என்று கூறி வைத்தாள்.
“ஃப்ரஸ்னர் யூஸ் பண்ணி பார்த்தீங்களா மேம்?”
“இல்ல.. பார்க்கல”
“ஏன் மேம் பிடிக்கலையா?”
“அப்படி இல்ல. என் கிட்ட வேற ஒன்னு இருந்தது. சோ”
“ஜஸ்ட் ட்ரை பண்ணி இருக்கலாமே”
“அத அங்கிள் கிட்ட கொடுத்துட்டேன். அவர் எதுவும் சொன்னா நான் உங்களுக்கு சொல்ல சொல்லுறேன். இப்போ வேலை இருக்கு பை” என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்து விட்டாள்.
அபிமன்யு அவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று இருந்தான். இருக்கும் வேலைகளை விட்டு விட்டு திவ்யாவை பார்த்து பேச வேண்டும் என்று அவள் தங்கி இருக்கும் ஹோட்டலை கண்டு பிடித்து வந்து சேர்ந்தான்.
ஆனால் என்ன முயன்றும் அவள் தங்கி இருக்கும் அறையை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவள் கேரளாவை விட்டு போவதற்குள் திரும்பவும் பேசி தன்னை நன்றாக நினைவு படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அவனை விட்டு தூரமாக வந்த பிறகு “இவன் தான கேமரா வச்சவன்?” என்று மஞ்சுளா கேட்டாள்.
“ம்ம்..”
“ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்குறான். இவன் தான் வச்சானா வேற யாரும் வச்சாங்களா?”
“இருக்கலாம். ஆனா ஒரு வேளை.. நாம கண்டு பிடிச்சோமா இல்லையானு தெரிஞ்சுக்க கேட்ருக்கலாம்ல?”
“இருக்கும் இருக்கும்”
பேசிக் கொண்டே இருவரும் ஹோட்டலுக்குள் சென்று விட்டனர்.
*.*.*.*.*.*.
நினைத்ததை விட படு சுறுசுறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து முடிந்தது. எல்லோரும் ஒரு நாள் விடுமுறையை பெறுவதற்காகவே சுறுசுறுப்பாக வேலையை முடித்தனர்.
பாடலின் அத்தனை காட்சிகளும் முடிந்து நாளை எல்லோரும் ஊர் சுற்றி பார்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அன்று இரவு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க இயக்குனருக்கு எதோ முக்கியமான வேலை வந்து விட்டது.
திவ்யான்ஷியை சந்தித்தவர் “என்னோட பர்ஸ்னல் வொர்க்காக நான் இப்பவே கிளம்புறேன். மத்த எல்லாரும் சுத்தி பார்த்துட்டு நாளைக்கு கிளம்புறாங்க. பட் இங்க இருந்து சென்னை போனதும் திரும்ப சூட்டிங் ஆரம்பிக்க முடியாது. மூனு நாள் டிலே ஆகும். பரவாயில்லையா?” என்று கேட்டார்.
“இட்ஸ் ஓகே.. நீங்க உங்க வொர்க்க பாருங்க. எனக்கு இப்போ வேற எந்த மூவியும் இல்ல. சோ மூனு நாள் தானே.. பார்த்துக்கலாம்”
“தாங்க்ஸ் மேடம்” என்று கிளம்பி சென்று விட்டார்.
இதை கேட்ட மஞ்சுளா “அப்போ மூனு நாள் இங்க ஊர் சுத்தி பார்த்துட்டு போகலாமா?” என்று கேட்டாள்.
“ம்ஹும்.. நான் வேற ப்ளான் போட்டுட்டேன்”
“என்னது?”
“அம்மாவ பார்க்க போக போறேன். ரெண்டு நாள் அம்மா கூட இருந்துட்டு அப்புறம் சென்னை போயிக்கலாம்”
“சூப்பர்.. நானும் வரேன்”
“வேணாம் வேணாம். நீ இங்க ஊர் சுத்தி பார்த்துட்டு இவங்களோட ஊருக்கு போ. ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ.”
“கண்டிப்பா நான் வர வேணாமா?”
“வேண்டாம்… நீ என்ஜாய் பண்ணு லீவ. நானும் கேப்ல அம்மாவ பார்த்துட்டு ஓடி வரேன்”
“சரி.. உனக்கு டிக்கெட் புக் பண்ண சொல்லுறேன்”
“ஓகே.. நான் இப்போ பேக் பண்ண போறேன் ” என்று வேகமாக ஓடினாள்.
அன்று இரவே இரயில் ஏறி சொந்த ஊருக்கு வந்து விட்டாள். அது ஒரு கிராமம். மிகவும் பழமை வாய்ந்தது அல்ல. நன்றாகவே முன்னேறி இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை தான் திவ்யாவினால் இங்கு வந்து செல்ல முடியும்.
இப்போது இடையில் விடுமுறை கிடைக்கவும் ஓடி வந்து விட்டாள். அதிகாலை நேரம் வாசலில் கதவை தட்டி விட்டு நிற்க பக்கத்து வீட்டுப் பெண் அவளை பார்த்து விட்டாள்.
“இது.. திவ்யா தான?” என்று அந்த இருட்டிலும் கண்டு பிடித்து கேட்க “நான் தான் கா” என்றாள்.
“நீ வர்ரனு உன் அம்மா சொல்லவே இல்ல… நல்லா இருக்கியா?”
“நல்லா இருக்கேன் கா.. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பையன் நல்லா இருக்கானா?”
“நல்லா இருக்கான்”
“அம்மாக்கு நான் வர்ரது தெரியாது.. சும்மா சர்ப்ரைஸ் பண்ணலாம்னு சொல்லல”
“சரி சரி” என்று கூறும் போதே கதவு திறக்கப்பட்டது.
“இந்நேரத்துல யாரு?” என்று கேட்டுக் கொண்டே சந்திரா கதவை திறந்தாள்.
“ஹாய்.. குட் மார்னிங்”
“ஹே.. திவ்யா.. வர்ரேன்னு சொல்லவே இல்ல.. வா வா” என்று சந்திரா பாசமாக வரவேற்க தன் உடமைகளோடு உள்ளே சென்று விட்டாள்.
அவளிடம் பேசிக் கொண்டிருந்த பெண் வாசலை பெருக்க ஆரம்பித்து விட்டாள்.
“என்ன திடீர்னு?”
“பக்கத்துல தான இருந்தேன். மூனு நாள் லீவ் கிடச்சது. அதான் வேகமா ஓடி வந்துட்டேன்”
“அம்மா எந்திரிக்க ஏழு மணி ஆகும்.. கொஞ்ச நேரம் தூங்குறியா?”
“ம்ஹும்.. தூக்கம் வரல”
“அப்போ குளிச்சுட்டு வா.. காபி போட்டு தரேன்”
திவ்யா அவளுடைய அறைக்குள் நுழைந்தாள். அந்த வீட்டில் மூன்று அறை இருந்தது. ஒன்று அன்பரசிக்கு மற்றொன்று சந்திராவிற்கு. கடைசி அறை திவ்யாவிற்கு. அவள் இங்கு வந்து தங்குவதே இல்லை என்றாலும் அவளது அறை அவளுக்காக காத்துக் கொண்டே இருக்கும்.
முதலிலேயே சொல்லாததால் அறையில் தூசி படிந்திருந்தது. முடிந்த வரை அதை சுத்தம் செய்து விட்டு குளித்து விட்டு வந்தாள்.
மணக்க மணக்க காபி தயாராகி வர வாங்கி குடித்தாள்.
“உங்க சமையல்லையே காபி தான் கா பெஸ்ட்”
“மத்த எதுவும் நல்லா சமைக்கலனு சொல்லுற?”
“அத என் வாயால வேற சொல்லனுமா?”
சந்திரா முறைக்க திவ்யா சிரித்து வைத்தாள்.
சந்திரா ஒரு செவிலியர். ஒரு மருத்துவமனையில் வேலை செர்து கொண்டிருந்தாள். அவளது சொந்தம் எல்லாம் தாத்தா பாட்டி மட்டும் தான். அவர்கள் இறந்த பிறகு சந்திரா தனிமையானாள்.
அன்னைக்காக வீட்டில் தங்கி வேலை செய்ய ஒரு செவிலியரை தேடும் போது திவ்யான்ஷிக்கு தெரிந்த மருத்துவர் சந்திராவை கை காட்டினார். அவளுக்கு யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டவள் தன் அன்னைக்கு துணையாக இருக்கும் படி கேட்டாள்.
முதலில் திவ்யாவின் திரை உலக பெயருக்காக ஒப்புக் கொண்டவள் போகப்போக குடும்பமாக பழகி விட்டாள். அவளால் இந்த வீட்டை விட்டு போக முடியாது என்பதற்காகவே திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டாள்.
முதலில் பேசி பார்த்த அன்பரசி பிறகு அவள் போக்கில் விட்டு விட்டார். ஆனால் அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்.
திவ்யாவிற்கும் அன்னையை பொறுப்பானவரிடம் ஒப்படைத்த திருப்தி. சந்திராவை உடன் பிறவா அக்காவாக எண்ணத் தொடங்கினாள்.
இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சரியாக ஏழு மணிக்கு அன்பரசி எழுந்து விட்டார். சந்திராவை அழைத்ததும் வேகமாக எழுந்து சென்றாள். பின்னாடியே திவ்யாவும் சென்று நின்றாள்.
திவ்யாவை பார்த்ததும் சந்தோசப்படாமல் அன்பரசி அதிர்ச்சி அடைய “ம்மா.. இது என்ன ரியாக்ஸன்?” என்று திவ்யா உதட்டை பிதுக்கினாள்.
சந்திரா மௌனமாக சிரிப்பை முழுங்கிக் கொண்டிருந்தாள்.
“இல்லமா.. திடீர்னு பார்த்ததுல சாக் ஆகிட்டேன்.. வா மா வா..”
“ஒன்னும் தேவை இல்ல”
“அட கோச்சுக்காத மா.. அம்மா எதோ சும்மா அப்படி பார்த்துட்டேன்”
“போதும் போதும்.. உங்க அம்மா மக பாச மழை.. நான் குளிக்க வச்சு கூட்டிட்டு வரேன்.. அப்புறம் வச்சுக்கோங்க உங்க பாசத்த” என்று கூறிய சந்திரா அன்பரசியை சக்கர நாற்காலியில் அமர வைத்தாள்.
“நானும் ஹெல்ப் பண்ணுறேன்” என்று திவ்யா வர “வேணாம்.. நீயே ட்ராவல்ல டயர்டாகி இருப்ப. போய் சாப்பாடு செய்.. நாளையில இருந்து இதெல்லாம் பார்த்துக்கலாம்” என்று கூறி விட்டாள்.
அன்பரசியின் இரண்டு கால்களும் செயலிழந்து போய் விட்டது. எதோ பரம்பரை வியாதியாம். அதை சரி செய்ய முடியாது என்று கூறி விட்டனர். அதனால் நடக்க முடியாமல் அமர்ந்த நிலையிலேயே அவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
அவர்கள் குளிக்கச் சென்றதும் திவ்யா சமைக்கச் சென்றாள். காலை உணவை தடபுடலாக பிடித்ததை எல்லாம் சமைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்க அடுப்பை அணைத்து விட்டு வந்து கதவை திறந்தாள். வாசலில் நின்று இருந்தது அர்ஜுன்.
இருவரும் ஒருவரை ஒருவர் எதிர் பார்க்கவில்லை. திவ்யா அதிர்ச்சியில் விழி விரிக்க அவனும் இமை சிமிட்டி பார்த்தான். காண்பது கனவா என்ற சந்தேகம் அவனுக்கு.
முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்த திவ்யா “யார் வேணும்?” என்று கேட்டாள்.
அவளது கேள்வியில் கனவில்லை என்று உறுதி செய்து கொண்டவன் “யார் நீ?” என்று கேட்டான்.
“என் வீட்டுக்கு வந்து என்னவே யார்னு கேட்குற.. சுடு தண்ணி ஊத்துறதுக்குள்ள ஓடி போயிடு”
திவ்யா பேசும் போதே சந்திராவும் அன்பரசியும் வந்து விட்டனர்.
“அட வா அர்ஜுன்.. ஏன் வாசல்ல நிக்கிற ?” என்று அன்பரசி வரவேற்க “இதோ.. நந்தி மாதிரி உங்க மக நிக்கிறா பாருங்க.. அவ தள்ளுனா தான உள்ள வர முடியும்” என்று கூறினான்.
“யாருடா நந்தி.. நானா?”
“பின்ன வேற யாரு நிக்கிறது?”
அவனது நந்திக்கு அர்த்தம் மாடு என்பதாகும். கோயிலில் இருக்கும் நந்தியை சொல்லவில்லை. இதற்காக ஒரு முறை அவனிடம் அசிங்கப்பட்டிருக்கிறாள். அதற்காக பொங்கிக் கொண்டு பேசப் போக “ரெண்டு பேரும் வாசல்ல நின்னு தான் சண்ட போடனுமா? உள்ள வர போறீங்களா இல்லையா?” என்று அன்பரசி அதட்ட திவ்யா வழியை விட்டு நின்றாள்.
சந்திரா சிரிப்பை அடக்கிக் கொண்டு “வாங்க அர்ஜுன்” என்று வரவேற்றாள். அவளை முறைத்து பார்த்த திவ்யா ‘நீயுமா?’ என்று ஒரு பார்வை பார்த்தாள்.
“எப்படி இருக்கீங்க அத்த?” என்று அர்ஜுன் அன்பரசியை விசாரித்தான்.
“அப்படியே தான் இருக்கேன்”
“நீங்க எப்படி இருக்கீங்க சந்திரா?”
“நல்லா இருக்கேன்.. உட்காருங்க காபி போட்டுட்டு வரேன்”
“வேணாம்.. பசிக்குது .. குளிச்சுட்டு நேரா சாப்பிடலாம்”
“அதுவும் சரி தான்.. நீ குளிச்சுட்டு வா..” என்று அன்பரசி அனுப்பி விட்டார்.
அவன் திவ்யாவை திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விட திவ்யா இடுப்பில் கை வைத்து இருவரையும் முறைத்து பார்த்தாள்.
“இவன் இங்க என்ன பண்ணுறான்?”
“நீ இங்க என்ன பண்ணுறியோ அது தான்” என்று அன்பரசி கூற சந்திராவை முறைத்தாள்.
“என்ன கோபிக்காத மா.. நீ வந்ததும் சொன்னா அப்படியே திரும்பி ஓடிப்போயிடுவனு தான் நான் சொல்லல” என்று கையை விரித்தாள்.
“உங்கள…” என்று சுட்டு விரலால் பத்திரம் காட்டியவள் “வேலைய முடிச்சுட்டு வந்து பேசிக்கிறேன்” என்று கூறி சென்று விட்டாள்.
“பாவம்” என்று சந்திரா வருத்தப்பட “இது என்ன வேணும்னா பண்ணோம்.. அதுவா நடந்துடுச்சு.. நம்ம தப்பு இல்ல. விடு” என்றார் அன்பரசி.
திவ்யா இருக்கும் கோபத்தை எல்லாம் பாத்திரத்தில் காட்டி சமைத்துக் கொண்டிருக்க அர்ஜுன் “ம்க்கும்” என்ற கணைப்போடு வந்து நின்றான்.
அவனை திரும்பி முறைத்தவள் ஒன்றும் பேசாமல் திரும்பிக் கொண்டாள்.
“பார்த்து.. பாத்திரம் எல்லாம் உடஞ்சு போயிட போகுது”
“பரவாயில்ல… எங்கம்மா கொண்டு வந்த சீர் தான்.”
“உனக்கு கொடுக்கலல.. உங்கம்மாக்கு தான கொடுத்தாங்க.. நீ ஏன் உடைக்க பார்க்குற?”
“உன் மண்டைய உடைக்க முடியல.. அந்த கடுப்பு தான் இதுல காட்டுறேன். போதுமா?”
“ஒன்னு என் பல்ல உடைக்க வர்ரது.. இல்ல தலைக்கு குறி வைக்கிறது… உனக்கு உடைச்சு விளையாய ஒன்னுமே கிடைக்கலையா?”
“இல்ல.. உன் மூஞ்சிய பார்த்தா தான் உடைக்கனும் போல ஆசை ஆசையா வருது..”
“வரும் வரும்.. ஓவரா கொழுப்பு இருந்தா எல்லாம் வரும்… இவ்வளவு கொழுப்போட உனக்கு குழிப்பணியாரம் சாப்பிட வேற தோனுது”
அவள் அதை தான் செய்து கொண்டிருந்தாள். ஏற்கனவே இருந்த மாவில் வெல்லத்தை போட்டு பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தாள்.
“என் உடம்பு என் கொழுப்பு.. என் கை என் வயிறு.. எத வேணா செஞ்சு சாப்பிடுவேன். உன் வேலைய பாரு”
அர்ஜுன் அவள் பேசுவதை கண்டு கொள்ளாமல் ஒன்றை எடுத்து சாப்பிட்டு பார்த்தான்.
‘அட ஸ்வீட் பணியாரம்.. சூப்பரா இருக்கே’ என்று நினைத்தவன் இன்னொன்றை எடுத்து சாப்பிட்டு பார்த்தான்.
‘இவ்வளவு நல்லா சமைக்கிற.. அப்புறம் ஏன் அம்மு ஊருக்குள்ள பொய் பொய்யா சொல்லிட்டு திரியுற?’ என்று நினைத்துக் கொண்டான்.
கரண்டியை கீழே போட்ட திவ்யா வேகமாக அவன் பக்கம் திரும்பினாள்.
“என்ன சொன்ன?” என்று ஆச்சரியமாக கேட்க அப்போது தான் அர்ஜுனுக்கு புரிந்தது மனதில் சொல்ல வேண்டியதை வாய் விட்டு பேசி விட்டான் என்று..
அவசரமாக தண்ணீரை எடுத்து குடித்தான்.
“உன் கிட்ட தான் கேட்குறேன்” என்று திவ்யா பேசப்பேச வேகமாக திரும்பி நடந்தான்.
“டேய் நில்லு.. அடுத்த அடி எடுத்து வச்ச…” என்று திவ்யா மிரட்டியதும் நின்று விட்டான்.
ஆனாலும் ‘அய்யோ மாட்டிக்கிட்டனே’ என்று மனதில் புலம்ப தான் செய்தான்.
“திரும்பு.. திரும்பி என்ன பாரு”
‘கெத்த விடாத.. சமாளி சமாளி..’
அர்ஜுன் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு அவளை பார்க்க “என்ன சொல்லி என்ன கூப்பிட்ட?” என்று கேட்டாள்.
“அ.. அம்ரு னு”
“ஓ…” என்றவள் முகத்தில் நம்பாத பாவனை தான் இருந்தது.
“என்ன ஓ?”
“ஒன்னும் இல்லையே” என்றவள் உதடு சிரிப்பில் துடித்தது.
“அப்ப நான் போறேன்.”
“நில்லுடா.. நான் என்ன பொய் சொல்லி நீ பார்த்த?”
“ஊரு முழுக்க பொய் தான சொல்லிட்டு இருக்க.. உன் பேருல ஆரம்பிச்சு எல்லாமே பொய் தான். லிஸ்ட் வேணா எடுக்கட்டுமா?”
“வேணாம் வேணாம்”
அவளை முறைத்து விட்டு அர்ஜுன் திரும்ப “பொறுடா” என்று நிறுத்தினாள்.
“இன்னும் என்ன?”
“அட என்ன கேட்டனு சொல்லு நான் சரியா கவனிக்கல”
திவ்யா சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க “நீ தான் நல்லா சமைக்கிறியே.. அப்புறம் ஏன் சமையல் தெரியலனு பொய் சொல்லுறனு கேட்டேன்” என்று வார்த்தைகளை அழுத்திக் கூறினான்.
“நானா? எப்போ?” என்று யோசித்தவளுக்கு திடீரென ஞாபகம் வர “ஹேய்.. அந்த இன்டர்வியூ பார்த்தியா நீ?” என்று கேட்டாள்.
‘மறுபடியும் மாட்டுனனா.. உனக்கு நேரம் சரியில்லடா’ என்று தன்னத்தானே திட்டிக் கொண்டான்.
“சொல்லு.. பார்த்தியா? எப்போ? நியூ இயர் அப்போவா?”
‘இதுக்கு மேல என்னத்த மறைக்க ஒத்துக்குவோம்’ என்று மனசாட்சி கூற “ம்ம்” என்றான்.
“பாருடா.. நீ எதுக்கு அதெல்லாம் பார்க்குற? அது சும்மா வாய்ல வந்தத அடிச்சு விடுறது.. மஞ்சுவும் இதான் சொன்னா.. எல்லாம் பொய்யா சொல்லி வச்சுருக்கனு..”
“அதான் கேட்குறேன். ஏன் பொய் சொன்ன?”
“ஏன்னா அதெல்லாம் பர்ஸ்னல்.. என்ன பொறுத்தவரை வயசு மட்டும் இல்ல எல்லாமே பர்ஸ்னல் தான். அத பத்தி உண்மைய சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. சோ சொல்லல”
“வாய திறந்தாலே பொய்.. சுத்தம்” என்றவன் “வேலைய பாரு” என்று அங்கிருந்து சென்று விட்டான்.
தொடரும்.