Loading

 

 

 

 

இரவு உணவை உண்டு கொண்டிருந்த இடத்தில் எள்ளை போட்டால் கூட சத்தம் வரும் அளவு அவ்வளவு அமைதியாக இருந்தது. வந்ததிலிருந்த திவ்யா ஒரு வார்த்தை கூட பேசாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள்.

 

அர்ஜுனோ நிமிர்ந்தும் பார்க்காமல் தட்டில் கவனமாக இருந்தான். இருவரையும் பார்த்து விட்டு செந்தில்குமார் தான் பாவமாக அமர்ந்து இருந்தார்.

 

இப்போது அவர் வாயை திறந்தாலும் பிரச்சனை. இல்லாவிட்டாலும் பிரச்சனை தான். வேறு வழி தெரியாமல் அவரே ஆரம்பித்தார்.

 

“திவ்யா..”

 

“ம்ம்..”

 

“நாளைக்கு சூட்டிங் இருக்கா?”

 

“இல்ல மாமா. வெறும் டப்பிங் தான். இன்னைக்கு முடிச்ச ஆட் சூட்டிங்க்கு தான்”

 

“ஓ.. சரி சரி”

 

மீண்டும் அமைதி.

 

இப்போது அர்ஜுன் பக்கம் திரும்பினார்.

 

“உனக்கு நாளைக்கு வேலை இருக்கா அர்ஜுன்?”

 

“ம்ம்”

 

“எதுல போவ?”

 

“லெனின் கூட தான்”

 

“உனக்கு ஒரு கார் வாங்கலாம்னு இருக்கேன். இங்க இருக்க வரை யூஸ் பண்ணிக்குவல?”

 

“வேணாம்”

 

“அப்புறம் என்ன செய்வ? நாலு மாசம் லெனின் கூடவே சுத்துவியா? அவனுக்கு அவன் வேலை இருக்காதா?”

 

“தேவை பட்டா கார வாடகைக்கு எடுத்துக்கிறேன்”

 

செந்தில் குமார் சலிப்பாக பார்க்க “விடுங்க மாமா. உங்க பணத்துல வாங்குறது உங்க புள்ளைக்கு பிடிக்கல.” என்று திவ்யா நிமிராமலே கூறினாள்.

 

அர்ஜுன் அவளை முறைத்து விட்டு குனிந்து கொள்ள அதை கூட திவ்யா நிமிர்ந்து பார்க்கவில்லை‌.

 

அதற்கு மேல் செந்தில் குமாருக்கு பேச விருப்பம் இல்லை. முதல் ஆளாக சாப்பிட்டு விட்டு அர்ஜுன் எழுந்து சென்று விட்டான்.

 

“நீங்க எதுவும் சண்டை போட்டீங்களா?” என்று எழுந்த திவ்யாவை நிறுத்தி செந்தில் குமார் கேட்க “இல்ல மாமா” என்றாள்.

 

அவர் அமைதியானதும் தன் அறைக்குச் சென்று விட்டாள்.

 

 

*.*.*.*.

 

 

அடுத்த நாள் காலை திவ்யான்ஷி ‘டப்பிங்’கிற்கு தயாராகிக் கொண்டிருந்தாள். நேற்று பேசியதை எல்லாம் இப்போது தெளிவாக பேச வேண்டும்.

 

வழக்கமாக நடிப்பது ஒருவர் பேசுவது ஒருவராக தான் இருக்கும். பின்னனி குரலுக்கென்று தனியாக பலர் இருப்பர். ஆனால் இம்முறை திவ்யாவையே பேச வைக்க வேண்டும் என்று விரும்பியது இயக்குனர் தான்.

 

அந்த இயக்குனரோடு சேர்ந்து அமர்ந்து விவாதித்து விட்டு பேச தயாரானாள். கண்ணாடியால் அடைக்கப்பட்ட அறைக்குள் நுழைந்ததும் சில நிமிடங்களில் பேச ஆரம்பித்தாள்.

 

முதலில் அவ்வளவு சரியாக வரவில்லை. இயக்குனரும் இசையமைப்பாளர் ஒருவரும் அமர்ந்து இருந்தனர். இருவரும் அவளுக்கு பொறுமையாக விளக்கி முடிக்க இரண்டு முறை முயற்சி செய்து விட்டு மூன்றாம் முறை சரியாக முடித்தாள். ஒரு மொழி மட்டுமல்லாமல் மூன்று மொழிகளில் டப்பிங் செய்து முடித்தாள்.

 

அந்த விளம்பரத்தில் பேசும் குழந்தைக்கும் தந்தைக்கும் குரல் கொடுக்க வேறு சிலர் வந்து இருந்தனர். அவர்கள் பேசும் வரை திவ்யா அங்கேயே இருந்தாள். அது முடிந்த பின்பு ‘ரூம் ஃப்ரஸ்னரின்’ விளம்பரத்தை பேச ஒருவர் வந்தார். அவர் பேசுவதை கேட்டு விட்டு திவ்யா எழுந்தாள்.

 

இயக்குனரிடமும் மற்றவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு திரும்ப, அறைக்குள் விளம்பரம் செய்யப்படும் பொருளின் உரிமையாளர் வந்து நின்றார்.

 

வேலை எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ள அவர் வந்திருக்க அவரோடு அவருடைய மகனும் வந்திருந்தான்.

 

திவ்யான்ஷியை பார்ப்பதற்காகவே தந்தையை நச்சரித்து இழுத்து வந்து விட்டான்.

 

பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு “எங்களுக்கு இந்த விளம்பரம் பண்ணி கொடுத்ததுல ரொம்ப சந்தோசம் மேடம்” என்றார் அந்த முதலாளி.

 

“இல்ல இல்ல.‌ பரவாயில்ல. நான் இவளுக்காக தான் வந்தேன். இவ தான் பேசினா”

 

“அப்போ எங்க ப்ராடெக்ட் மேல நம்பிக்கை இல்லையா மேடம்? உங்க ஃப்ரண்டுக்காக பண்ணுறதா சொல்லுறீங்களே?” என்று அந்த முதலாளியின் மகன் குறையாக கேட்டான்.

 

“அப்படி சொல்ல முடியாது. எனக்கு பிடிச்சது… பண்ணேன்”

 

திவ்யா மாறா புன்னகையுடன் பதில் சொல்ல அவன் முகத்தில் சந்தோசம் மிளிர்ந்தது. வேகமாக தன்னிடம் இருந்த பையை நீட்டினான்.

 

“இந்தாங்க மேடம். எங்க சைட்ல இருந்து சின்ன கிஃப்ட்”

 

“இதெல்லாம் வேண்டாம். நான் பேமண்ட் வாங்கிட்டேன். அது போதும்.”

 

திவ்யான்ஷி இணக்கம் காட்டாமல் மறுத்தாள்.

 

“இது வேற எதுவும் இல்ல மேடம் நீங்க நடிச்ச ஃப்ரஸ்னர் தான். வேற எதுவும் கொடுத்தா நீங்க வாங்க மாட்டீங்கனு தான் கம்பெனி சார்பா இத கொடுக்குறோம். வாங்கிக்கோங்க.”

 

திவ்யா இனி மறுக்க முடியாது என்று நன்றி கூறி வாங்கிக் கொண்டாள். மஞ்சுளா கண்ணை காட்ட வேகமாக விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டாள்.

 

காரில் ஏறி அமர்ந்ததும் “இந்தா.. நீ வச்சுக்கோ.. என் கிட்ட ஆல்ரெடி ஒன்னு இருக்கு” என்று மஞ்சுளாவிடம் பையை கொடுத்தாள்.

 

மஞ்சுளா யோசனையோடு அதை வாங்கி பிரித்து பார்த்தாள். உள்ளே இரண்டு இருந்தது.

 

“ரெண்டு இருக்கு” என்று மஞ்சுளா குழப்பமாக கூற அதை வாங்கி பார்த்தாள். பிறகு எதோ யோசித்து விட்டு “இத உள்ள வை” என்று கொடுத்து விட்டாள்.

 

வீட்டுக்கு சென்றதும் நேராக செந்தில்குமாரிடம் சென்றாள்.

 

“மாமா.. இது அந்த ஃப்ரஸ்னர் கம்பெனி ஆட் முடிச்சதுக்காக கொடுத்தது” என்று கொடுத்து விட்டாள்.

 

எதாவது வித்தியாசமாக பரிசு கிடைத்தால் அதை செந்தில்குமாரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது அவர் இட்ட கட்டளை. அதன் படியே இப்போதும் கொடுத்து விட அந்த பொருளை முழு சோதனைக்கு உட்படுத்த கூறி தன் மேனேஜரிடம் கொடுத்து விட்டார் அவர்.

 

அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் அதற்குள் இருந்த கேமரா கண்டு பிடிக்கப்பட்டது. இரண்டிலும் கேமரா இருக்க அந்த செய்தி செந்தில் குமாருக்கும் தெரிய படுத்தப்பட்டது.

 

திவ்யாவை அழைத்தவர் யார் கொடுத்தது என்று விசாரித்தார்.

 

“அந்த கம்பெனி பாஸோட‌ பையன் தான் கொடுத்தான்.”

 

“இனி அவன் எது கொடுத்தாலும் வாங்காத.”

 

“என்னாச்சு?”

 

“அதுக்குள்ள கேமரா இருக்கு. அதுவும் ரொம்ப சினனதா. ரொம்ப நேரமா எதுவும் இருக்க மாதிரியே காட்டல. கேர்ஃபுல்”

 

“ஓகே. நோ ப்ராப்ளம்”

 

சாதாரணமாக அந்த விசயத்தை உள்வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள். அவள் நடிக்க ஆரம்பித்து எட்டரை வருடம் ஆகிறது. அதில் முன்னனி நடிகர்களுடன் அவள் நடிக்க ஆரம்பித்தப்பின் இது போல் பல விசயங்கள் நடந்து விட்டது.

 

வேலை செய்பவர்கள் போல் நடித்து உள்ளே வருவது. இதை போல் பொருட்களை அனுப்பி வைப்பது போன்ற பல விசயங்களை கடந்து விட்டாள். அதில் இதுவும் ஒன்று. ஆனால் இதை மஞ்சுளாவிடம் கொடுத்திருந்தால்?

 

அதை நினைத்து தான் இப்போது சற்று வருத்தமாக இருந்தது. அவளது அஜாக்கிரதையால் மஞ்சுளாவிற்கு பிரச்சனை வந்திருக்கும். எதோ வித்தியாசமான உணர்வு வந்ததால் இப்போதைக்கு தப்பித்து விட்டனர். இனி கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

 

முதலில் இது போல் எல்லாம் நடக்கும் போது அவளுக்கு வருத்தமாக இருந்தது. இப்படி வேவு பார்க்க அவள் குற்றவாளியா என்ன? நாட்டில் நடக்கும் ஆயிரம் குற்றங்களை இது போல் உளவு பார்த்து கவனித்தால் நாடாவது பாதுகாப்பாக இருக்கும்.

 

என் வாழ்க்கையும் என் அந்தரங்கமும் எதற்காக இவர்களுக்கு? அவளோ வெறும் நடிகை. படத்தில் நடித்து பணத்தை வாங்கிக் கொண்டு நிம்மதியாக கிளம்பி விடுகிறாள். இதில் அவளது சொந்த வாழ்வு எங்கிருந்து வந்தது?

 

இதையெல்லாம் செந்தில் குமாரிடம் புலம்பி தீர்த்து விட்டாள். அப்போது அவர் சொன்ன சில வார்த்தைகள் இதையெல்லாம் கடக்க வைத்தது.

 

“நமக்கு ஒருத்தர ரொம்ப பிடிச்சுட்டா அவங்கள பத்தி எல்லாமே நமக்கு தெரிஞ்சு இருக்கனும்னு ஆசை படுவோம். அதே போல பிடிக்காதவங்க என்ன பண்ணுறாங்கனும் நோட் பண்ணுவோம். இது மனித இயல்பு. ஆனா இங்க கொஞ்சம் அதிகமா எதிர் பார்ப்பாங்க.

 

அந்த எதிர் பார்ப்ப காசாக்க ஒரு கும்பல். உனக்கு பிடிச்சவங்கள பத்தி தினமும் ஒரு விசயத்த உனக்கு சொன்னா அவங்கள நீ ரொம்ப மதிப்ப தான?. அதே போல உனக்கு பிடிக்காத ஆள பத்தி அவங்க செய்யுறத பத்தி சொன்னா அலர்ட்டா இருப்ப தான?

 

இன்னொன்னு இருக்கு.. சொன்னா கேவலமா இருக்கும். ஆனாலும் தெரிஞ்சுக்க.. அடுத்தவங்க அறைய எட்டி பார்க்குற கேவலமான புத்தி சிலருக்கு இருக்கு. அந்த புத்தி தான் இப்படி பல விசயத்துக்கு காரணம்.

 

இவங்களால உண்மையான ஃபேன்ஸ்க்கும் கெட்ட பேரு தான். அவங்களையும் ஒதுக்க வேண்டி இருக்கு.”

 

செந்தில் குமாரின் நீண்ட விளக்கம் ஒரு வகையில் திவ்யாவிற்கு நிலைமையை புரிய வைத்து விட்டது. அதனாலே இப்போதெல்லாம் கடந்து போக பழகி விட்டாள்.

 

*.*.*.*.*.*.*.*.

 

கேமராவை வைத்து தன் கையாலே கொடுத்தவன் இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு சென்று பார்க்க ஏமாற்றம் தான் கிடைத்தது.

 

கேமரா எப்போதோ கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது. கேமராவில் பதிவான காட்சிகள் எதுவும் அவனது மடிக்கணினியில் இல்லை. அவனாக கேமராவை ‘ஆக்டிவேட்’ செய்யாத வரை அது இருப்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது.

 

இப்போது கேமரா அவனது மடிக்கணினியோடு ‘கணெக்ட்’ ஆக மறுத்தது.

 

“ச்சே.. கண்டு பிடிச்சுருப்பாளோ… இருக்காதே. அத சரியா தான செட் பண்ணி இருக்கதா சொன்னாங்க… அப்புறம் எப்படி மிஸ் ஆச்சு?”

 

கேமராவை வைத்த அபிமன்யு தலை முடியை கோதிக் கொண்டு கண்ணை மூடினான்.

 

திவ்யான்ஷி கிளம்பும் போது “யூஸ் பண்ணிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க மேடம்” என்று திரும்ப திரும்ப சொல்லி வைத்தான்.

 

அவள் அதை நிச்சயமாக அவளது அறையில் தான் வைப்பாள் என்று நம்பினான். ஆனால் இது எப்படி நடந்தது என்று அவனுக்கு புரியவில்லை.

 

திவ்யான்ஷியை அபிமன்யுவிற்கு அவ்வளவு பிடிக்கும். காதல் வெறியென்று கூறும் அளவு பிடிக்கும். அவளது முதல் படத்தில் அவளுக்கான உடைகள் அவனுடைய தந்தையின் நிறுவனத்திலிருந்து தான் சென்றது.

 

அப்போது அவளை பார்த்து காதலில் விழுந்தவன் தான். இன்று வரை திவ்யான்ஷி மீது பைத்தியமாக இருக்கிறான். அவளை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அன்றே முடிவு செய்து விட்டான்.

 

ஆனால் அவனது நிலை கிட்டத்தட்ட அவளுடையது போல தொடக்க நிலையில் தான் இருந்தது. எப்படியும் ஒரு நாள் அவளை சந்தித்து காதலை சொல்ல வேண்டும் என்று காத்திருந்தான்.

 

இரண்டு வருடம்.. கண்மூடி திறக்கும் முன் பல முன்னணி நடிகைகளோடு திவ்யான்ஷியும் பேசப்பட்டாள். அடுத்தடுத்து அவளது வளர்ச்சி அசுர வேகத்தில் செல்ல அதற்கு ஏற்றார் போல் தன்னையும் வளர்த்துக் கொண்டான் அபிமன்யு.

 

இடையில் அவளது பெயர் சிலரோடு அடி படும் போது பேசுபவர்கள் வாயை உடைக்கும் அளவு கோபம் வரும். அவளை பற்றி தவறான செய்திகளை பார்த்தால் அவனுக்கு பைத்தியமே பிடித்து விடும்.

 

திவ்யான்ஷியோ எதற்கும் வளைந்து கொடுக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று சிறப்பாக செய்து கொண்டிருந்தாள். அதனால் தனது கோபத்தை அவனும் காட்டாமல் இருக்க வேண்டியிருந்தது.

 

இப்போது தந்தையின் புது நிறுவனத்திற்கு விளம்பரம் பற்றி பேச்சு வர திவ்யான்ஷியை பரிந்துரை செய்தது அவன் தான். அதை நேரடியாக செய்யாமல் தந்தை மூலம் காரியத்தை சாதித்தான்.

 

திவ்யா விளம்பரம் எடுக்கும் நாள் அவனுக்கு முக்கியமான வேலை இருந்தது. அதனால் அப்போது அவளை சந்திக்க முடியவில்லை.

 

அடுத்த நாள் காலை ‘டப்பிங்’ பற்றி கேள்வி பட்டவன் இருக்கும் அத்தனை வேலைகளையும் போட்டு விட்டு ஓடி வந்து விட்டான். அவன் வருவதற்குள் அவள் சென்றுவிட கூடாது என்று காரை படுவேகமாக ஓட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான்.

 

அதை பார்த்த அவனது தந்தைக்கு தான் எதாவது நடந்து விடுமோ என்று பயமாக இருந்தது. திவ்யாவிடம் பேசி ‘ஃப்ரஸ்னரை’ ஒப்படைத்த பின்பு தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

 

விளம்பரத்திற்கு அவள் நடிக்க போகிறாள் என்று தெரிந்ததுமே முடிவு செய்து விட்டான். அவளுக்கு பரிசாக கேமரா வைத்த ‘ஃப்ரஸ்னரை’ கொடுக்க வேண்டும் என்று.

 

அதன் படி தன் நண்பனிடம் கேட்டு யாருக்குமே சந்தேகம் வராதபடி கேமராவை பொருத்தி விட்டான். ஒன்றை மட்டும் கொடுத்து அதை அவள் வேறு எங்காவது வைத்து விட்டால் காரியம் கெட்டுப்போகுமே?

 

அதனால் இரண்டை தயாரித்து வைத்தான். ஒன்றுக்கு இரண்டாக இருக்கும் போது நிச்சயமாக ஒன்று அவளது அறைக்கு போகும் என்று நம்பினான். ஆனால் அதுவே வித்தியாசமாக தெரிந்து திவ்யா விசயத்தை கண்டு கொள்வாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை.

 

கேமராவை அணுக முடியாததில் கோபத்தில் அமர்ந்து இருந்தவன் உதட்டில் புன்னகை வந்தது.

 

‘ஸ்மார்ட் செல்லம்.. இந்த ஸ்மார்ட்னஸ் தான் உன் பக்கம் என்ன கட்டி இழுக்குது.. லவ் யூ பேபி.. எப்போ இந்த வீட்டுக்கு என் பொண்டாட்டியா நீ வருவ?’ என்று தனக்குள்ளே திவ்யாவிடம் பேசிக் கொண்டான்.

 

தன்னிடம் இருக்கும் போனை எடுத்து பார்த்தான். அதில் அவனது புகைப்படத்தை தவிர தில்யாவின் புகைப்படங்கள் மட்டுமே நிறைந்து இருந்தது. அதில் திவ்யான்ஷியின் எண்ணும் இருந்தது.

 

இது வரை ஒரு முறை கூட அழைக்க துணிவு வரவில்லை அவனுக்கு. இப்போதும் கேமரா வைத்தது அவளது பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளத்தான். தவறான எண்ணங்கள் அவனிடம் இல்லை. அவளை நுணுக்கமாக ஆராய்ந்து அவளது மனதிற்குள் புகும் வழியை கண்டு பிடிக்க வேண்டும்.

 

ஏனென்றால் இப்போது அவளுக்கு சமமாக அவனும் வளர்ந்து விட்டான். கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறான். ஒவ்வொரு அம்சத்திலும் அவன் அவளுக்கு மிகவும் பொருத்தமாவன் என்று சொல்லும் அளவு தன்னை வளர்த்துக் கொண்டான்.

 

இனி தாமதிக்க முடியாது. அவனது காதலை சொல்லி இப்போதே கரம் பிடிக்க வேண்டும் என்று மனம் துடித்தது. அதற்காக எடுத்து வைத்த முதல் அடி சருக்கி விட்டது.

 

அதனால் என்ன? ஆயிரம் வழிகள் அவனுக்கு உண்டு. அவளை அடைந்தே தீருவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டு அவளது படத்தை பார்த்தான். ஒரு கண்ணை மூடிக் கொண்டு சிரிப்போடு நின்று இருந்தாள். ஒரு பெருமூச்சோடு அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

 

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
5
+1
0
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Meenakshi Subburaman

   💞ஏய் எருமை நீ பண்ண வேலை மட்டும் அர்ஜீனுக்கு தெரிஞ்சது நீ செத்த டா அபி

   💞ஏதே காதலை சொல்லப் போறீயா

   💞 உனக்கு சாவு அஜீ கையில காற்று இருந்தா யாரால் மாத்த முடியும்

   💞 இப்படி எல்லாம் கூட வா பண்ணுவாங்க சாமி 🙄🙄🙄

   💞👌👌👌👌💐💐💐💐 சூப்பர் டா ஹனி

   1. hani hani
    Author

    பைத்தியத்துல இது ஒரு வகை 🤣🤣 நன்றி 😍😍😍😍

  2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.