Loading

 

 

 

 

 

 

அடுத்த நாள் காலை திவ்யான்ஷி கிளம்பி கீழே வர செந்தில் குமார் எதோ தீவிரமாக அவரது மேனேஜருடன் பேசிக் கொண்டிருந்தார். அவரை யோசனையுடன் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டாள்.

 

“என்னவாம்?” என்று மஞ்சுளாவிடம் கேட்க “எனக்கும் தெரியல. நான் வரும் போது எதோ போன் பேசிட்டு இருந்தாங்க” என்றாள்.

 

“சரி.. நைட் விசாரிக்கலாம். இப்போ கிளம்புவோம்”

 

இருவரும் காரில் ஏறிக் கொள்ள கார் பறந்தது.

 

*.*.*.*.*.*.

 

திடீரென பூச்சாடி கீழே விழுந்து உடைய அவள் வேகமாக திரும்பி பார்த்தாள். அவளது நான்கு வயது குழந்தை பாவமாக பூச்சாடியை பார்த்துக் கொண்டிருந்தது.

 

சேலையை இடுப்பில் எடுத்து சொருகிக் கொண்டு “இத எதுக்கு கையில எடுத்த?” என்று அதட்டினாள் அன்னை.

 

பிள்ளை, பாவமாக அங்கு தொலைகாட்சியில் மூழ்கி இருந்த, தந்தையை பார்த்தது. உடனே அவன் எதோ சொல்ல வர, “வேலை வேலை வேலை. எப்போ பாரு எனக்கு வேலை தான். எல்லாத்தையும் நானே செஞ்சு ஓய்ஞ்சு போறேன். இருக்க வேலை பத்தாதுனு அப்பாவும் பொண்ணும் எதையாவது கொட்டி வைங்க.” என்று ஆரம்பித்து திட்டிக் கொண்டே இருந்தாள்.

 

தந்தையின் மடியில் அமர்ந்து இருந்த குழந்தை, உதட்டை பிதுக்கிக் கொண்டு தந்தையை பார்த்தது. பூச்சாடியின் உடைந்த துண்டுகளை எடுத்து போட்டு விட்டு மீண்டும் வேறு வேலையை பார்க்க சென்று விட்டாள். தனக்குள் முணங்கிக் கொண்டே அவள் வேலை பார்த்துக் கொண்டிருக்க, தந்தையும் பெண்ணும் என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.

 

உடனே பெண்ணுக்கு ஒரு யுக்தி தோன்றி விட, வேகமாக தந்தையின் காதில் கூறினாள். துணிகளை எல்லாம் வாசிங்மெசினில் போட்டு விட்டு நிமிர்ந்தவளின் நாசியில் இதமான நறுமணம் நுழைந்தது. மீண்டும் ஒரு முறை அதை ஆழமாக சுவாசித்து விட்டு குழப்பத்தோடு திரும்பினாள்.

 

“யூ ஆர் பெஸ்ட் மாம்” என்று ஆங்கிலத்தில் எழுதிய பலூனை பிடித்துக் கொண்டு குழந்தை நிற்க, தந்தை, “சாரி” என்ற சொல்லோடு காதை பிடித்துக் கொண்டான்.

 

இடுப்பில் கை வைத்து அவர்களை முறைத்தவள், மீண்டும் நாசியில் நுழைந்த சுகந்தத்தை வாசம் பிடித்தாள். கோபம் கொஞ்சம் குறைந்து போக, இருவரையும் பார்த்து சிரித்தாள்‌.

 

“ஹே…” என்று சந்தோசத்தோடு குழந்தை வந்து அவளை கட்டிக் கொள்ள, “கட்” என்ற சத்தம் கேட்டது.

 

கட்டிக் கொண்டிருந்த குழந்தை வேகமாக அவளை விட்டு விலக, அவளது அன்னை வந்து தூக்கிக் கொண்டாள். திவ்யான்ஷி இடுப்பில் சொருகியிருந்த சேலையை சரி செய்து கொண்டாள்.

 

இவ்வளவு நேரம் நடித்துக் கொண்டிருந்த காட்சி முடிவுக்கு வர அடுத்த காட்சி எடுக்க வேண்டும் என்று கூறினர்.

 

அந்த விளம்பரத்தை எடுத்துக் கொண்டிருந்த இயக்குனரிடம், திவ்யா வந்தாள்.

 

“ஓகே வா?” என்று கேட்க, அந்த பெண் கட்டை விரலை உயர்த்தி காட்டினாள்.

 

“காஸ்டியூம் மாத்திட்டு வாங்க.‌நெக்ஸ்ட் சாட் போகனும்” என்று இயக்குனர் மைக்கில் கூற, மூவரும் உடை மாற்ற சென்றனர்.

 

சற்று முன் அணிந்து இருந்த சேலையை மாற்றிக் கொண்டு, சுடிதாரில் திவ்யா வர, தந்தையாக நடித்தவனும் வேறு உடையில் வந்தான். அந்த குழந்தைக்கும் வேறு உடை கொடுத்திருந்தனர்.

 

சற்று முன் இருந்த செட்டை முழுமையாக மாற்றி விட்டு அந்த இடத்தை அடுத்த ‘சாட்டுக்கு’ தயார் படுத்தி இருந்தனர். இயக்குனரின் அசிஸ்டன்ட், அவர்களுக்கு காட்சியை விளக்கிச் சொன்னான்.

 

இப்போதைய காட்சி மூவரும் சோபாவில் அமர்ந்து இருப்பர். அந்த குழந்தை இருவரின் மடியிலும் அமர்ந்து கொண்டு எதோ பேசும். இருவரும் சிரிப்போடு அதை கேட்டுக் கொண்டிருப்பர். அவர்களை படம் பிடித்து விட்டு கேமரா அவர்கள் அருகில் இருந்த “ரூம் ஃப்ரஸ்னரை” படம் பிடித்துக் கொள்ளும்.

 

இந்த “ரூம் ஃப்ரஸ்னரின்” மணம் மனதை அமைதி படுத்தக்கூடியது என்று விளக்கும் படி விளம்பர படத்தை எடுத்து இருந்தனர். இனி இந்த விளம்பரத்தில் அவர்களுக்கு வேலை இல்லை. “க்ராஃபிக்” மற்றும் சில நுண்ணிய காட்சிகளை எடுக்க வேண்டும். அந்த “ரூம் ஃப்ரஸ்னரில்” இருந்து பூக்கள் வருவது போலவும் இதமான நறுமணம் பரவுவது போலவும் காட்சிகளை உருவாக்கி அதை இவர்கள் நடிப்போடு இணைத்து வெளிவிட வேண்டும். பின்னால் இசைக்கப்படும் இசையிலிருந்து பல விதமான வேலைகள் மிச்சம் இருந்தது.

 

இயக்குனர் நடித்தவர்களை பாராட்டி விடை கொடுக்க, மஞ்சுளா திவ்யாவின் அருகில் வந்தாள். இருவரும் இயக்குனரிடம் சென்றனர்.

 

“அவ்வளவு தானா? வேற என்ன இருக்கு?” என்று திவ்யா கேட்க, “டப்பிங் இருக்கு. நாளைக்கு ஃப்ரீயா?” என்று கேட்டாள்.

 

திவ்யா மஞ்சுளாவை பார்க்க, மஞ்சுளா மேலும் கீழும் தலையாட்டினாள்.

 

“ஃப்ரீ தான்.”

 

“அப்போ நாளைக்கு வந்து முடிச்சு கொடுத்துடுறியா?”

 

“ம்ம்.. கண்டிப்பா. இப்போ கிளம்பட்டுமா?”

 

இயக்குனர் சம்மதம் சொல்லி விட, உடை மாற்றிக் கொள்ள சென்றாள். காலை வரும் போது அணிந்திருந்த உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். அந்த குழந்தை அவள் முன்பு வந்து நின்றது.

 

“ஆண்ட்டி எனக்கு ஆட்டோகிராஃப் பண்ணி தரேன் சொன்னீங்கள்ள?” என்று கேட்க “அத மறப்பனா?” என்று கூறி வேகமாக எழுதிக் கொடுத்தாள்.

 

“தாங்க்யூ ஆண்ட்டி… பை” என்று கையாட்டி விட்டு அந்த குழந்தை ஓடி விட்டது. பிறகு மஞ்சுளாவுடன் காரில் கிளம்பி விட்டாள்.

 

“இந்த விளம்பர கான்செப்ட்டே எனக்கு புரியல. என்ன தான் சொல்ல வர்ராங்க?” என்று மஞ்சுளா கேட்க “அத நீ டீவில பார்த்தா தான் புரியும்” என்றாள்.

 

“அப்படினா?”

 

“அது… நம்ம மூட் அவுட்டா இருக்கப்போ அந்த ஃப்ரஸ்னர் ஸ்மெல் மைண்ட் ரிலாக்ஸ் பண்ணும். அவ்வளவு தான் விசயம். அதோட மத்தவங்க அன்பும் மன்னிப்பும் இடத்த சந்தோசமாக்கும். இத தான் அந்த ஆட்ல சொல்லி இருக்காங்க. புரியுதா?”

 

“ஓஹோ.. ஆனா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?”

 

“ஏன் இல்ல? பர்ஃப்யூம் போட்டா பொண்ணுங்க வருவாங்கனு சொல்லும் போது நம்பி வாங்கலையா?” என்று கேட்கும் போதே அவளுக்கு சிரிப்பு வந்து விட மஞ்சுளாவும் சிரித்தாள்.

 

“பட் அதுல சில விசயங்கள் உண்மை தானே. நாம பர்ஃப்யூம் போடும் போது நம்ம மேல ஒரு இதமான ஸ்மெல் வரும். அது நமக்கே ஃப்ரஸ்ஸா ஃபீல் ஆகும். அதே ஸ்மெல் நம்ம பார்ட்னர அட்ராக்ட் பண்ணா…. வேணாம்னா சொல்லிடுவோம்?”

 

“நியாயம் தான். பார்ட்னர மட்டும் போடாமா ஏலியன் பொண்ணெல்லாம் வருதுனு போடும் போது தான் சிரிச்சுடுறோம்”

 

“அதே தான். எக்ஸ்ட்ரா சில விசயங்கள தவிர்த்து பார்த்தா அதுலையும் நல்ல கான்செப்ட் இருக்கும்”

 

“ஒத்துக்க வேண்டிய விசயம் தான்”

 

“ஆனா.. இதுல என்ன ஒரு பிள்ளைக்கு அம்மாவ நடிக்க வச்சதுல தான் சிரிப்பு வந்துடுச்சு”

 

“நீ தான உன் ஃப்ரண்ட்காக அக்சப்ட் பண்ண. அண்ட் லாஸ்ட் மூவில ஒரு பிள்ளைக்கு அம்மாவ நடிச்சியே. அதுனால கூட அவங்க உன்ன கேட்ருக்கலாம்”

 

“அப்படியும் இருக்கலாம். ஆனா அவ ஒன்னும் சும்மா நடிச்சு கொடுனு கேட்கலையே. ப்ராப்பரா அக்ரிமெண்ட் சைன் பண்ணிட்டு தான் வேலைய ஆரம்பிச்சுருக்கா. சோ அதுல எதுவும் பிரச்சனை இல்ல.”

 

“என்னவோ. நானும் ஒரு ரூம் ஃப்ரஸ்னர வாங்கி வைக்கிறேன். வொர்க் அவுட் ஆகுதானு பார்ப்போம்”

 

“கண்டிப்பா ஆகும்.”

 

பேசிக் கொண்டே இருவரும் மாலை மீட்டிங்கை முடித்து விட்டு விட்டு இரவு வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே நுழைந்து செருப்பை கழட்டும் போது திவ்யா புருவம் சுருக்கினாள். வேறு புது செருப்பு ஒன்று இருந்தது. பக்கத்திலேயே ஒரு ‘சூ’ வேறு.

 

“யாராவது வீட்டுக்கு வந்துருக்காங்களா?” என்று மஞ்சுளா கேட்கும் போதே ‘அவனா?’ என்று திவ்யாவின் மனம் கேட்டது.

 

அவசரமாக செந்தில்குமாரின் அறை பக்கம் ஓடினாள். அவர் கையில் வாராந்திர நாளிதழுடன் அமர்ந்து இருந்தார்.

 

“மாமா… “

 

“வாமா.. ஆட் சூட்டிங்னு சொன்னாங்க முடிஞ்சதா?”

 

“மாமா.. யாரு வந்துருக்கா?” என்று கேட்கும் போதே அவளையும் மீறி இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

 

“வேற யாரு அவன் தான்”

 

திவ்யா இதை ஓரளவு எதிர் பார்த்தாலும் அதிர்ச்சியடையத் தான் செய்தாள்.

 

“ரூம்ல இருக்கான். நீ போய் ஃப்ரஸ்ஸாகிட்டு பாரு” – செந்தில் குமார்.

 

‘வந்துட்டானா? நிஜம்மாவே இங்க இருக்கானா?’ என்று நினைத்தவள் வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.

 

ஓரே ஓட்டமாக ஓடி தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

 

மஞ்சுளாவிற்கும் அதிர்ச்சி தான்.

 

“நிஜம்மாவே வந்துட்டாரா சார்?”

 

“ஆமா..”

 

“வர மாட்டாரு சண்டை போடுவாருனு நினைச்சேன். ஆனா..”

 

“ஆனா..?”

 

“இனி திவ்யாவும் அவரும் என்ன செய்ய போறாங்கனு தெரியல”

 

“அதெல்லாம் அவங்க பாடு. நடுவுல போறதுக்கு நமக்கு உரிமை இல்ல. வேடிக்கை மட்டும் பார்ப்போம்”

 

“வேற வழி”

 

“சரி நீ போய் அவன பார்க்குறதுனா பாரு”

 

“வேணாம் வேணாம். நான் கிளம்புறேன். எனக்கும் அவர் மேல கோபம் இருக்கு. சும்மா எல்லாம் விட்ர முடியாது. திவ்யா கிட்ட‌ சண்டை போட்டு முடிக்கட்டும். நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி விட்டு வீட்டுக்கு கிளம்பினாள்.

 

அறைக்குள் அடைந்த திவ்யாவிற்கு மனம் படபடத்தது. அன்று அர்ஜுன் வருவதாக சொன்னதும் வேலை எல்லாம் வேகமாக முடித்துக் கொண்டு ஓடி வந்தாள். அவனை ஒரு முறை பார்த்தாலே போதும் என்று நினைத்தாள்.

 

அதன் பின்பு வரும் விளைவுகளை சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தாள். ஆனால் இன்று அவள் எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. அவன் வர மறுத்து அப்படியே திரும்பி விடுவான் என்று நினைத்தாள். அவனது பிடிவாதம் தான் அவளுக்கு தெரியுமே.

 

ஆனால் அதை விட அதிகமாக பிடிவாதம் பிடித்து செந்தில்குமார் வர வைத்து விட்டார். இப்போது இதே வீட்டில் அவனும் இருக்கிறான். அவளது எண்ணம் சரியாக இருந்தால் பக்கத்து அறையில் தான் இருப்பான்.

 

இதயம் படுவேகமாக துடித்தது. அவனது இருப்பை உணரும் போதே இப்படி துவண்டு போனால் அவனை எப்படி எதிர் கொள்வது?.

 

அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்தவள் தன்னை தானே சமாளிக்க முயன்றாள். அதே நேரம் பழைய விசயங்கள் எல்லாம் நியாபகம் வர ஆரம்பித்தது.

 

படபடப்பு இருந்த இடத்தில் கோபம் வர ஆரம்பித்தது. நடந்த விசயங்களை எல்லாம் கண் மூடி நினைத்து பார்த்தவள் அவனை எதிர்கொள்ள தயாரானாள்.

 

உடை மாற்றிக் கொண்டு பொறுமையாக அவள் வெளியே வர பால்கனியில் போனை பார்த்துக் கொண்டு நின்று இருந்தான். அவனருகில் சமையல் செய்யும் பெண் நின்று இருந்தாள். அவனுக்கு பிடித்ததை கேட்டு செய்ய வந்திருப்பாள் போலும்.

 

அவன் எரிச்சலோடு எதோ சொல்லிக் கொண்டிருந்தான். ஒரு நிமிடம் அவனை நின்று பார்த்தாள். பிறகு முகத்தை மாற்றிக் கொண்டு திரும்பி நடந்தாள். அவள் படியிறங்கும் போது தான் அர்ஜுன் அவளை கவனித்தான்.

 

உடனே அந்த சமையல் செய்யும் பெண்ணை பார்த்து “எல்லாருக்கும் என்னவோ அதையே செய்ங்க” என்று கூறி அனுப்பி விட்டான்.

 

திவ்யா இறங்கிய படிகளில் அந்த பெண்ணும் வேகமாக இறங்கிச் சென்று விட்டாள். படி அருகே வந்து கீழே எட்டி பார்த்தான். திவ்யா செந்தில் குமாரின் அறைக்குள் செல்வது தெரிந்தது.

 

எதோ யோசித்தவன் வேகமாக கீழிறங்கினான்.

 

அறைக்குள் நுழைந்த திவ்யாவை பார்த்த செந்தில் குமார் “என்னமா? ரெஸ்ட் எடுக்கலையா?” என்று கேட்டார்.

 

“இல்ல மாமா. மார்னிங் நான் கிளம்பும் போது ரொம்ப பரபரப்பா வேலை பார்த்துட்டு இருந்தீங்களே. அத என்னனு கேட்கலாம்னு வந்தேன்”

 

“அது ஒன்னும் இல்ல. சங்கத்துல எதோ பிரச்சனை. இந்த சின்ன பசங்கள அடக்கவும் முடியல. பெரியவங்களும் இறங்க மாட்டேன்னு அடம் பிடிக்குறாங்க. பொதுவுல இருக்க ஆளுங்களுக்கு தான் தலைவலி. அத தான் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு பேசி முடிக்கலாம்னு பேசிட்டு இருந்தோம்”

 

“எல்லாரும் சம்மதிச்சுட்டாங்களா?”

 

“உடனே எங்க சம்மதிப்பாங்க? ஆளுக்கு ஒன்ன பேசிட்டு இருக்காங்க. காலையில தான் சிலர் இத பத்தி புலம்புனாங்க.”

 

“ப்ச்ச்.. எல்லா பக்கமும் சுலபமா அரசியல் நடத்துறாங்க பா. எப்படியோ சரியா போனா சரி”

 

“ம்ம்.. பார்க்கலாம்” என்று கூறும் போதே கதவை தட்டி விட்டு அர்ஜுன் வந்தான்.

 

திரும்பி அவனை பார்த்த திவ்யா உடனே பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

அதை கவனித்தவன் அப்போதைக்கு ஒதுக்கி விட்டு தந்தையை பார்த்தான்.

 

“என்ன டா? வா”

 

“எப்போ உங்க பிரச்சனைய நிறுத்தி என்ன என் வேலைய பார்க்க விடுவீங்க?”

 

அவரது வரவேற்பை அவன் கொஞ்சம் கூட மதிக்கவில்லை. ஆனால் அவர் கையிலிருந்த புத்தகத்தை மூடி ஓரம் வைத்து விட்டு எழுந்து நின்றார்.

 

“எத்தனை நாள்ல இந்த வேலை முடியும்?” என்று பின்னால் கை கட்டிக் கொண்டு அவர் கேட்க அர்ஜுன் புருவம் சுருக்கினான்.

 

“அது எதுக்கு உங்களுக்கு?”

 

செந்தில்குமார் பதில் சொல்லாமல் ‘நீ சொல்லி தான் ஆகனும்’ என்ற பார்வையோடு நின்று இருந்தார்.

 

“ப்ச்ச்..” என்று சலித்துக் கொண்டவன் “நாலு மாசம்” என்றான்.

 

“நீ எத்தனை நாள் இங்க இருப்ப?”

 

“சைன் ஆகிட்டா மும்பை போயிடுவேன். அங்க இருந்து வேலைய முடிக்கனும்”

 

“மும்பை எல்லாம் நீ போக தேவை இல்ல.‌ இங்கயே இருந்து வேலைய முடி”

 

“இங்க வரனும்னு சொன்னீங்க வந்துட்டேன். அப்புறமும் ஏன் இப்படி பண்ணுறீங்க?”

 

அர்ஜுன் கோபமாக கேட்க போனை எடுத்து லெனினை அழைத்தார் செந்தில் குமார்.

 

“தம்பி எனக்கு ஒரு விவரம் வேணும்” என்று கேட்டு அர்ஜுனின் வேலையை பற்றி விசாரித்தார். அவனோ எதுவும் செய்ய முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு நின்று இருந்தான்.

 

முழுதாக விசாரித்து முடித்து விட்டு “நீ இங்க இருந்தும் வேலை பார்க்கலாமாம். அதுனால எந்த ஊருக்கும் போகாம இங்கயே இரு. நாலு மாசத்துல வேலைய முடிச்சிட்டு எங்க வேணா போ” என்றார்.

 

“இதெல்லாம் ரொம்ப அநியாயம். நான் இந்த வேலையே வேணாம்னு போனா என்ன செய்வீங்க?”

 

“அத அப்போ முடிவு பண்ணிக்கிறேன். இப்போ இங்க இரு” என்று சொல்லி விட்டு மீண்டும் நாற்காலியில் அமர்ந்து புத்தகத்தை கையில் எடுத்தார்.

 

அர்ஜுனுக்கு அவர் பேசியதை விட திவ்யான்ஷி எதையும் கவனிக்காமல் அமர்ந்து இருந்தது தான் கோபத்தை வரவழைத்தது. மேலே இருந்து இறங்கும் போதே தன்னை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்.

 

அதனால் அவனை பார்க்கவில்லை என்று முடிவு செய்து விட்டான். ஆனால் இப்போது பார்த்து விட்டு அமைதியாக இருக்கிறாளே. அவனுக்கு கோபம் தான் வந்தது. அவன் எதையோ அவளிடம் எதிர் பார்த்தான். அது கிடைக்காத ஏமாற்றம் மனதெல்லாம் ஒரு வெறியை உண்டு பண்ணியது.

 

அவள் தன்னை பார்த்ததும் எப்படி உணர்வாள் என்று பார்க்க தான் இங்கு வேகமாக வந்து தந்தையிடம் பேசினான். இல்லையென்றால் இதை பிறகு சாவகாசமாக பேசிக் கொள்ள முடியாதா என்ன?

 

அவனது எதிர் பார்ப்புகளை தூசி போல் ஊதித் தள்ளி விட்டு எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்து இருப்பவளை பார்த்தால் பாவம் அவனும் என்ன தான் செய்வான்?

 

தந்தையையும் அவளையும் மாறிமாறி முறைத்து விட்டு வெளியேறி விட்டான். அவன் சென்றதும் செந்தில்குமார் திவ்யாவை கவனித்தார்.

 

“அவன் கிட்ட பேசுனியாமா?” என்று கேட்க எதோ நினைவிலிருந்து வேகமாக வெளியே வந்தவள் கேள்வியை புரிந்து மறுப்பாக தலையாட்டினாள்.

 

“ஏன் மா? பிரச்சனைய வளர்க்கனும்னு நினைக்கிறியா?”

 

“என் நினைப்பு எங்க மாமா முக்கியமா இருந்தது? உங்க பையனோட எண்ணம் தான் எப்பவும் முக்கியம். ஆனா சண்டை இழுத்தா நானும் சும்மா இருக்க மாட்டேன். அப்போ நீங்க இடையில அவன காப்பாத்த வர கூடாது”

 

“பார்த்து மா.. எனக்கிருக்கிறது ஒரே புள்ள” என்று சோகத்தை மறைத்துக் கொண்டு அவர் லேசாக சிரிக்க “அந்த நினைப்பு அவன் மனசுலயும் இருந்தா பார்க்கலாம் மாமா” என்று கூறி விட்டு எழுந்து விட்டாள்.

 

“நான் போய் டின்னர் ரெடியானு பார்க்குறேன். நீங்க உங்க வேலைய பாருங்க” என்று கூறி விட்டு சமையலறை பக்கம் சென்றாள். உள்ளே இருவர் மிக மும்முரமாக உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர்.

 

செந்தில்குமாருக்கு அசைவம் பிடிக்கும். ஆனால் வெளியே சென்றால் சாப்பிட மாட்டார். மாதத்தில் மிக குறைந்த நாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பதால் அவர் இருக்கும் நேரம் எதாவது அசைவ உணவு இருக்க வேண்டும் என்று திவ்யா கட்டளை போட்டு இருந்தாள். அதனால் அவருக்காக கருவாடு உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

 

திவ்யாவிற்கு உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டிய நிலை. அதனால் மிகவும் இலகுவான உணவை மட்டுமே சாப்பிடுவாள். அதுவும் இரவு உணவு அவித்த உணவாக இருக்க வேண்டும். இட்லி இடியாப்பம் போன்ற உணவுகளே அவளுக்கு அதிகம் தான். இன்று இட்லியும் சாம்பாரும் கேட்டு இருந்தாள்.

 

அதனால் சாம்பார் கொதித்துக் கொண்டிருக்க அருகில் சென்று வாசம் பிடித்தாள். மற்றதை பார்த்தவளுக்கு யோசனையாக இருந்தது. அர்ஜுனிடம் இந்த பெண் பேசிக் கொண்டிருந்தாளே? அவனுக்காக எதையும் சமைக்கவில்லையே?

 

“அர்ஜுன் சார் கிட்ட என்ன செய்யனும்னு கேட்டீங்களா?”

 

“கேட்டேன் மேடம். எல்லாருக்கும் என்னவோ அதையே செய்ங்கனு சொல்லிட்டாரு”

 

“ஓஓ.. அப்போ அவருக்கு இட்லியும் அந்த கருவாடும் போதும். நாளைக்கு மெனுல இறாலும் புட்டும் சேர்த்துக்கோங்க” என்று கூறி விட்டு வெளியே வந்து விட்டாள்.

 

சாப்பிடும் நேரம் கீழே வந்தால் போதும் என்று மீண்டும் அறை பக்கம் சென்றாள். கதவை நெருங்கும் போது அர்ஜுன் முன்னால் வந்து நின்றான்.

 

கையை கட்டிக் கொண்டு அவளை இமைக்காமல் பார்த்தான். அவளும் அவனை கேள்வியாக பார்த்தாள். அவன் எதுவும் பேசுவதாக இல்லை என்று தெரிய கதவில் கை வைத்தாள்.

 

“நில்லு”

 

அர்ஜுன் அதட்ட அவனை முறைத்து வைத்தாள்.

 

“நீ தான அப்பாவுக்கு இப்படி ஒரு ஐடியாவ கொடுத்தது?”

 

வேண்டுமென்றே தான் கேட்டான். அவனது தந்தையை பற்றி அவனுக்கு தெளிவாக தெரியும். ஆனால் இவள் தன்னை பார்க்க முயற்சி செய்திருக்க மாட்டாளா என்ற ஆசை. அந்த ஆசையில் தான் இப்படி ஒரு கேள்வி கேட்டான். இதெல்லாம் விட முக்கிய காரணம் அவளிடம் பேச வேண்டும். எதை வைத்து பேசுவது என்று தெரியாமல் இப்படி ஒரு காரணத்தை கண்டு பிடித்திருக்கிறான்.

 

அவனை மேலும் கீழும் நக்கலாக ஒரு பார்வை பார்த்தாள் திவ்யான்ஷி.

 

“எந்த ஐடியா?”

 

“நடிக்காத…”

 

“உன் முன்னாடி நடிச்சு ஆஸ்கார் அவார்ட் வாங்க முடியாது. சோ தெளிவா பேசுறியா?”

 

அவனுக்கு கொஞ்சமும் குறையாத நக்கலில் பேசினாள். பல்லை கடித்தாலும் அர்ஜுன் கோபத்தை வெளிப்படையாக காட்டவில்லை.

 

“என் வேலைய ஸ்டாப் பண்ணி இங்க வந்து தங்க வைக்கிற ப்ளான கேட்டேன்”

 

“ஓ.. அதுவா.. யூ நோ.. மாமா சொல்லலனா நீ இந்த வீட்டுக்கு வர்ர விசயமே எனக்கு தெரியாது. நான் உன்ன.. அதுவும் இங்க? நல்ல கதை தான்”

 

“சோ.. நான் வந்தத பத்தி உனக்கு எந்த அபிப்பிராயமும் இல்ல?”

 

“நான் ஏன் அபிப்பிராயம் சொல்லனும்?. நீ ஒரு கெஸ்ட் . இன்னைக்கு வந்துட்டு நாளைக்கு போயிடுவ. இத பத்தி நான் கவலை பட என்ன இருக்கு?”

 

கண் இடுங்க பார்த்தவன் “திமிரு.. அதே திமிரு. எதிர்ல நிக்கிறவங்கள வார்த்தையால சாகடிக்குற பழக்கம் இன்னும் போகலல ச்சே” என்றான்.

 

திவ்யான்ஷிக்கு கோபம் வந்தது.

 

“அதிகமா பேசாத. எனக்கு திமிருனா நீ ஒன்னும் சோறு போட்டு வளர்க்கல”

 

“அதான… அந்த கூத்தடிக்குற சினிமால வளர்த்து விட்ருக்கு. அப்ப பேச தான் செய்வ”

 

“வேணாம் மிஸ்டர். வார்த்தைய யோசிச்சு பேசு”

 

“உண்மைய சொன்னா வலிக்குதோ? உனக்கு தான் உணர்ச்சியே இல்லையே. நடிச்சு நடிச்சு ஒரிஜினல் ஃபீலிங்க்ஸ் உணர்வு எல்லாம் இல்லாம போயிருக்கனுமே. அப்புறம் எப்படி வலிக்குது?”

 

திவ்யான்ஷிக்கு சட்டென கோபம் தலைக்கு ஏறியது. தொண்டையில் வந்து துடித்த வார்த்தைகளை விழுங்கி கண் மூடி திறந்தாள்.

 

அர்ஜுனை வெறுமையாக பார்த்தவள் “உனக்கு உன் வாய்ல தான் பிரச்சனை. முடிஞ்ச வரை என் கிட்ட பேசாத. இல்லனா இங்க இருந்து போகும் போது சேதாரம் பலமா இருக்கும்” என்று எச்சரிக்கை குரலில் கூறி விட்டு விருட்டென அறைக்குள் சென்று கதவை அடைத்தாள்.

 

அர்ஜுன் மூடி இருந்த கதவை வெற்றுப் பார்வை பார்த்தான்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. 💞அட பைத்தியங்களா என்னங்கடா பண்றீங்க இரண்டு பேரும்

      💞உங்களை வைச்சுக்கிட்டு ரொம்ப குஷ்டம் போலவே 😜😜😜😜

      💞👌👌👌👌👌💐💐💐💐 சூப்பர் டா ஹனி

      1. Author

        பாருங்க என் நிலைமைய 😥😥😥இதுங்கள வச்சு என்னத்த எழுத போறனோ 😥

    2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.