திவ்யா கண்ணீர் மல்க காதலை சொல்லிக் கொண்டிருக்க அர்ஜுனுக்கு ரத்தம் கொதித்தது.
‘எப்படி நடிக்கிறா பாரு.. பிறவி நடிகை மாதிரி’ என்று நினைத்தவன் அவளை வெறித்துப் பார்த்தான்.
“இவங்கள தெரியுமா? மின்மினி திவ்யான்ஷி. செம்மயா நடிப்பாங்க. க்ரேட் ஆக்ட்ரஸ். ஆனா அத காட்டிக்கவே மாட்டாங்க. இயல்பா பேசி சிரிப்பாங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும். இவங்க முதல் படத்துல இருந்தே நான் ஃபேன் ஆகிட்டேன். இப்போ தான் இவங்க படத்துக்கு ப்ரடியூஸ் பண்ணுற சான்ஸ் கிடச்சுருக்கு. நேரா பேச ஆசை தான். அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவார்னு அமைதியா இருக்கேன். சூட்டிங் இங்க நடந்தா வேகமா வந்துடுவேன்.”
அவன் போக்கில் பேசிக் கொண்டே இருக்க அர்ஜுனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. கை விரல்களை இறுக்கமாக மூடி தன்னை கட்டு படுத்தினான்.
கன்னத்தில் முத்தமிட்டு அந்த நாயகன் உதட்டை நெருங்கும் போது அர்ஜுனால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. அங்கிருந்து இறங்கி செல்லலாம் என்று திரும்ப “கட்” என்ற சத்தம் கேட்டது.
“முடிஞ்சுருச்சு. வாங்க கிளம்பலாம்” என்று அவன் அழைக்க அர்ஜுன் ஒரு முறை நாயகனோடு சிரித்து பேசிக்கொண்டிருக்கும் திவ்யாவை பார்த்து விட்டு வேகமாக சென்று விட்டான்.
*.*.*.*.*.*.
மாலை செய்தித்தாளை புரட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தாள் திவ்யான்ஷி.
“நான் வீட்டுக்கு கிளம்புறேன் திவ்யா. அம்மா எதுக்கோ கூப்பிடுறாங்க” என்று கூறி மஞ்சுளா வந்து நின்றாள்.
“ம்ம்.. போயிட்டு வா. நாளைக்கு எதுவும் வேலை இருக்கா?”
“ம்ம்… இல்ல.. சூட்டிங் இல்ல. ஆனா…”
“ஆனா?”
“ஜெயதேவ் சார் ட்ரீட் கேட்டுருக்கார்”
“என்னது! சரினு சொல்லிட்டியா?”
“ஹி ஹி…”
“அடியே.. என்ன கேட்காம ஏன் சரினு சொன்ன?”
“ஏன்னா… எனக்கும் ட்ரீட் வேணும்.. பை.. நாளைக்கு ஒரு மணி. மறக்காம நான் சொல்லுற ஹோட்டலுக்கு பர்ஸ்ஸோட வந்துடு” என்று கூறிக் கொண்டே நிற்காமல் வெளியே ஓடி விட்டாள்.
“ஏய்.. நில்லு” என்று திவ்யா கத்தியது எதையும் அவள் கண்டு கொள்ளவில்லை.
திவ்யா சலிப்போடு அமர போன் இசைத்தது. அதை பார்த்ததும் முகத்தில் பளிச்சென ஒரு புன்னகை வந்தது.
அதே நேரம்..
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் அர்ஜுன். அவனது கோபம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
நம்பவே முடியவில்லை. காலையில் பேசும் போது உடனே வேலையை ஆரம்பிப்பதாக சொன்னவர்கள் இப்போது ஆயிரம் சாக்கு சொல்கின்றனர். காரணமும் தெளிவாக சொல்ல மறுக்கின்றனர்.
வேலையை உடனே முடித்துக் கொண்டு இங்கிருந்து ஓடி விட வேண்டும் என்று அவன் நினைக்கும் போது தான் இப்படி எல்லாம் நடக்குமா? கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்க அறைக்கதவு தட்டப்பட்டது.
கதவில் புன்னகையுடன் லெனின் நின்று இருந்தான்.
“ஹாய் அர்ஜுன்” என்று அவன் கையாட்டி வைக்க “முதல்ல என்ன நடக்குதுனு சொல்லு ” என்று எரிந்து விழுந்தான்.
அவனை கடந்து உள்ளே வந்த லெனின் “உன் அப்பா தான். அவர் தான் டீல்ல சைன் பண்ண கூடாதுனு ஸ்டாப் பண்ணி வச்சுட்டார்” என்று சாதாரணமாக கூறினான்.
“வாட்?”
“எஸ்”
“அவருக்கும் இந்த கம்பெனிக்கும் என்னடா சம்மந்தம்?”
“அத நீ அவர் கிட்ட தான் கேட்கனும். சரி கிளம்பு”
“எங்க?”
“வீட்டுக்கு”
“நான் வரல”
“எங்க வீட்டுக்கு கூப்பிடல தம்பி. உன் வீட்டுக்கு கூப்பிடுறேன்.”
அர்ஜுன் புருவம் உயர்த்தி பார்த்தான்.
“அப்பா நீ அந்த வீட்டுல வந்து தங்கலனா டீல்ல முடிக்க விட மாட்டாராம். அப்புறம் உன் இஷ்டம்”
லெனின் தோளை குலுக்கி விட்டு அறையை வேடிக்கை பார்த்தான். இப்போது அர்ஜுனின் இரத்த அழுத்ததை பரிசோதித்தால் பரிசோதிக்கும் கருவி உடைந்து போய் விடும். அப்படி ஒரு கோபம் வந்தது அவனுக்கு.
“அவர் எதுக்கு என் வேலையில தலையிடுறாரு? வேற வேலை இல்லையா? ” என்று அர்ஜுன் கத்த லெனின் அசரவில்லை. தந்தையின் பேச்சை எப்போது எடுத்தாலும் அவனது உணர்வுகளின் வெளிப்பாடு இப்படி தான் இருக்கும்.
“அவருக்கு வேலை இருக்கா இல்லையானு எல்லாம் எனக்கு தெரியாது. நான் என்ன பிரச்சனைனு விசாரிச்சப்போ இத சொன்னார். வர்ரதுனா சொல்லு. என் கார்ல போகலாம். இல்லையா.. டீல்ல முடிக்காம வருச கணக்கா ஹோட்டல்லயே தங்கு. அதுவும் பிடிக்கலனா இந்த டீல்ல அம்போனு விட்டுட்டு மறுபடியும் கிளம்பி போயிடு. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்ல”
லெனின் வார்த்தை உறுதியாகவும் திட்டவட்டமாகவும் வர அர்ஜுனுக்கு எரிச்சலாக இருந்தது.
‘இல்ல.. அவர் இஷ்டத்துக்கு ஆட கூடாது. நான் தனியா இந்த பிரச்சனைய முடிச்சு காட்டுறேன்’ என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டான்.
அதன் விளைவாக அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் மேலிடத்திற்கு விசயம் சென்றது. அவர்கள் தரப்பில் பேச ஆரம்பித்தனர். ஆனால் முடிவு அதே தான் கிடைத்தது.
இங்குள்ள நிறுவனம் அந்த தலைமைக்கு ஆயிரம் காரணங்களை சொல்லி வைக்க அதை எல்லாம் கவனிக்கச் சொல்லி அர்ஜுனுக்கே அழைப்பு வந்தது.
அதை கேட்டவனுக்கு தந்தையின் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. வேறு வழியில்லாமல் லெனினை அழைத்தவன் வீட்டிற்கு செல்ல ஒப்புக் கொண்டான்.
*.*.*.*.
உயர்தர உணவகத்தில் விஐபி ஏரியாவில் மெனுவை புரட்டிக் கொண்டிருந்தாள் திவ்யான்ஷி. அருகில் இருந்த மஞ்சுளா போனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க “ஹாய் கேர்ள்ஸ்” என்று உள்ளே நுழைந்தான் ஜெயதேவ்.
அவனது ‘ஹாயை’ ஒரு முறைப்போடு பார்த்து விட்டு திவ்யா திரும்பிக் கொண்டாள். ஜெயதேவ் மஞ்சுளாவை பார்த்து புருவம் உயர்த்த அவள் புன்னகையுடன் தோள் குலுக்கினாள்.
“அப்புறம் மேடம் படம் நல்லா போயிட்டு இருக்கு போல?”
“ம்ம்”
“சரி ட்ரீட் கேட்டா தான் வைப்பியா? நல்ல ஃப்ரண்ட்னா நீயே வச்சுருக்கனும்”
“ம்க்கும்… சரி என்ன வெஜிடேரியன் ஃபுட் ஆர்டர் பண்ணிடலாமா?”
திவ்யா அப்பாவியாக கேட்டதும் ஜெயதேவ் முறைத்தான்.
“நானெல்லாம் புலி மாதிரி…”
“ஏன் பல்லு விளக்காம பச்சையா தான் சாப்பிடுவியா?”
“ஏய்.. நக்கலா? நானெல்லாம் சிங்கம் புலி மாதிரி ப்யூர் நான் வெஜ். பசிச்சா கூட வெஜ் சாப்பிட மாட்டோம்னு சொன்னேன்”
“சிங்கம் புலி எல்லாம் பசிச்சா தான் சாப்பிடும். உன்ன மாதிரி டைம் பாஸ்க்கு ட்ரீட் கேட்டு சாப்பிடாது”
“இவ என்ன ஓவரா வாரி விடுறா” என்று மஞ்சுளாவிடம் அவன் குற்றம் சாட்ட “என்ன சார் பண்ண? அவ பணம் போகுதுனு கவலையில பேசிட்டு இருக்கா” என்றாள் மஞ்சுளா.
“அப்ப கூட ட்ரீட் வேணாம்னு சொல்ல மாட்றியே” என்று திவ்யா சலிப்பாக கூற “நடக்காது.. கொண்டா நானே ஆர்டர் பண்ணிக்குறேன்” என்று மெனுவை பிடுங்கிக் கொண்டான்.
மஞ்சுளாவும் அவனும் மாறி மாறி ஆர்டர் கொடுக்க திவ்யா அதிர்ந்து போனாள்.
“ஹேய்.. இவ்வளவா? மூணு பேருக்கு இவ்வளவு ஓவர்”
“மூணு பேரா? உன்ன யாரு கணக்குல சேர்த்தது?” என்று மஞ்சுளா கேட்க ஜெயதேவ் “அதான.. பணத்த கட்டுறது மட்டும் தான் உன் வேலை.” என்றான்
“இவ்வளவும் சாப்பிடா குண்டாகிடுவீங்கடா… கொஞ்சமாச்சும் டயட் மெயிண்ட்டைன்….”
“ஸ்டாப்.. இந்த டயட் வோர்ட்ட உன்னோட வச்சுக்கோ. என் அகராதிலயே அப்படி ஒரு வார்த்தை கிடையாது.” என்று மஞ்சுளா நடுவில் புகுந்து மறுத்தாள்.
“ஐ அக்ரி வித் யூ” – ஜெயதேவ்.
“நீயுமா?” – திவ்யா.
“ஆமா.. இன்னைக்கு டப்பிங் வொர்க். செம்ம பசி. சோ இனிமே நீ கவல பட்டு ஒன்னும் ஆக போறது இல்ல. மஞ்சுளா.. இவ கார்ட் பர்ஸ்ஸ தூக்கி வச்சுக்கோங்க. அது தான் இப்போ முக்கியம்”
“வந்ததுமே எடுத்துட்டனே” – மஞ்சுளா.
“அவ்வளவு தான்.”
திவ்யா தலையில் அடித்துக் கொண்டு வாசலை கவனித்தாள். உணவுகள் வந்து பரப்பப்பட்டது. அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கும் முன் அந்த அறைக்குள் விவேகா நுழைந்தாள்.
“ஹாய்” என்று திவ்யாவை பார்த்து கையாட்டி விட்டு ஜெயதேவை பார்த்து புன்னகைத்தாள். அவன் அவளை பார்த்து விட்டு திவ்யாவை முறைத்தான்.
“வாங்க.. உட்காருங்க” என்று மஞ்சுளாவிற்கும் தேவிற்கும் இடையில் இருந்த இருக்கையில் அமரச்சொன்னாள். இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டு தனம் தேவிடமிருந்து மறைந்து போனது.
விவேகா அவனை கவலையாக பார்த்து விட்டு திரும்ப “விவேகா மேம்.. நீங்க வர்ரீங்கனு இவங்க சொல்லவே இல்ல. சோ எங்களுக்கு பிடிச்சத ஆர்டர் பண்ணிட்டோம். ஓகே வா?” என்று மஞ்சுளா கேட்டாள்.
“ம்ம்.. நோ ப்ராப்ளம்”
“அப்போ ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டு எல்லோரையும் பார்த்தாள்.
திவ்யா தேவை பார்க்க அவன் முன்னால் இருந்த தட்டை வெறித்துக் கொண்டிருந்தான்.
“வெறும் தட்ட பார்க்கவா வந்த.. இந்தா..” என்று திவ்யா உணவை வைக்க நிமிர்ந்து முறைத்தான்.
“இப்ப எதுக்கு முறைக்கிற?”
“இவங்க எதுக்கு இங்க வந்துருக்காங்க?”
தேவின் கேள்வி நேரடியாக வர விவேகாவின் முகம் சுருங்கியது.
“தெரியலயா? ட்ரீட் தரேன்னு நான் தான் கூப்பிட்டேன்”
“நான் கேட்ட ட்ரீட்க்கு இவங்க வர வேண்டிய அவசியம் இல்லயே”
“வெயிட்.. ட்ரீட் நீ மட்டும் கேட்கல. மஞ்சு விவேகா அக்கா ரெண்டு பேரும் தான் கேட்டாங்க. அதோட எல்லாரும் உள்ளூர்ல இருந்தோம். யாருக்கும் அவுட் டோர் சூட்டிங் இல்ல. இதுல சேர்ந்து சாப்பிடுறதுல என்ன தப்பு?”
“டோன்ட் ஆக்ட் இன்ஃப்ரண்ட் ஆஃப் மீ”
“பட் ஐம் ஆன் ஆக்ட்ரஸ் தம்பி.”
திவ்யா புன்னகையோடு நக்கலாக கூறி வைக்க தேவிற்கு முறைப்பதை தவிர வேறு வழியில்லை.
“ஏன் இப்போ ரெண்டு பேரும் சண்ட போடுறீங்க? என் கிட்டயும் நீ இவங்க வருவாங்கனு சொல்லலையே” – விவேகா.
விவேகா இடையில் பேச வர “அப்படி சொல்லி இருந்தா? வந்துருக்க மாட்டியா?” என்று தேவ் அவளை பார்க்காமலே கேட்டு வைத்தான்.
அது சந்தேகம் தான். விவேகாவிற்கு விசயம் தெரியப்படுத்தி இருந்தாலும் ஜெயதேவை ஒரு முறை பார்க்க நினைத்து கிளம்பி வந்திருப்பாள். அதனால் பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாற தேவின் முகத்தில் ஏளனம் வந்தது.
விவேகாவிற்கு சங்கடமாக இருந்தது. இப்போது எழுந்து சென்றால் அது அழைத்த திவ்யாவிற்கு அவமரியாதை. இங்கே இருந்தால் தேவின் கோபம் அவளை பொசுக்கி விடும். என்ன செய்வது என்று புரியாமல் பாவமாக திவ்யாவை பார்த்தாள்.
“இப்ப என்ன உங்க மூணு பேருக்கும் பிரச்சனை? சும்மா எப்போ மீட் பண்ணாலும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க? இங்க ஒரு நல்ல விசயத்தை செலிப்ரேட் பண்ண வந்தோம். சாப்பிட்டோமா ஜாலியா பேசி சிரிச்சோமானு இல்லாம மூஞ்சிய தூக்கிட்டு இருக்கீங்க? இப்ப மூணு பேரும் உங்க முகத்த மாத்தல.. எடுத்த செல்ஃபிய சோசியல் மீடியால போட்டு விட்ருவேன்”
மஞ்சுளா மிரட்டியதுமே “ஹேய்..” என்று தேவ் பதறினான்.
“ஏய் லூசு” என்று திவ்யா அதட்ட, விவேகா, “நோ.. அதெல்லாம் போட்ராதீங்க.. பெரிய டாபிக் ஆகிடும்” என்றாள்.
“தெரியுதுல.. அப்ப சொல்லுறத செய்யுங்க” என்று மூவரையும் மிரட்டி விட்டு தன் உணவை எடுத்துக் கொண்டாள்.
தேவ் அமைதியாகவே சாப்பிட விவேகாவிற்கு வருத்தமாக இருந்தது. திவ்யா அதை கண்டு கொள்ளாமல் விவேகாவுடனும் தேவுடனும் பேசிக் கொண்டே இருந்தாள். தேவ் அதிகம் பேசாமல் உம் கொட்டிக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.
எல்லோரும் சாப்பிட்டு விட்டு தனித்தனியாக கிளம்பினர். விவேகாவிற்கு தேவிடம் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அவனோ அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் காரில் ஏறி பறந்து விட்டான்.
விவேகாவும் வீடு சென்று சேர திவ்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“தேவ் வர்ரத சொல்லலனு கோபம் ஒன்னும் இல்லையே?”
“ச்சே ச்சே.. தாங்க்ஸ்.. ஆக்ட்சுவலி நானே பார்க்கனும்னு தான் நினைச்சேன். ஆனா… அது ரொம்ப கஷ்டம்னு தான் அமைதியா இருந்தேன்”
“இன்னும் எத்தனை மாசத்துக்கு இப்படியே இருக்க போறீங்க?”
“தப்பு என் மேல திவ்யா”
“சோ? அப்படியே பிரிஞ்சே இருக்கனுமா? ஒன்னு மொத்தமா ப்ரேக் அப்னு சொல்லிட்டு வேலைய பார்க்கனும். இல்ல சண்டை போட்டு சமாதானம் ஆகிக்கனும். ரெண்டுமே இல்லாம இப்படி ஏன் சுத்துறீங்க?”
“….”
“உங்கள திருத்த முடியாது. இதுக்கு மேல உங்க இஷ்டம். வேற கால் வருது. வைக்கிறேன்”
“ம்ம் பை”
விவேகாவின் அழைப்பை துண்டித்து விட்டு தேவின் அழைப்பை ஏற்றாள்.
“எதுக்கு அவள அங்க வர வச்ச?”
தேவ் நேரடியாக விசயத்திற்கு வர திவ்யா சலித்துக் கொண்டாள்.
“அதான் சொன்னனே?”
“ப்ச்.. திவ்யா..”
“ஹேய்.. இப்போ என்ன பிரச்சனை? உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க ஒன்னும் அங்க வர வைக்கல. எனக்கு அத விட முக்கியமா ஆயிரம் வேலை இருக்கு. அவங்களும் ட்ரீட்னு கேட்டாங்க. உடனே சரினு சொல்லிட்டேன். அதான் வந்தாங்க. நீங்க சேருங்க பிரிஞ்சு போங்க. எனக்கென்ன வந்தது. என்ன கேள்வி கேட்டு குடையாத”
திவ்யா மூச்சு விடாமல் பேசி விட்டு தண்ணீரை எடுத்து குடித்தாள்.
“இல்ல மினி. அவ பண்ணத மறக்கவே முடியல”
“அப்போ ப்ரேக் அப் பண்ணு”
“….”
“தோ.. இதுக்கும் சரி வர மாட்ட அதுக்கும் சரி வர மாட்டனா ? லூசா நீ? ஒன்னு எல்லாத்தையும் மறந்துடு. மறந்து அவங்க கூட சேர பாரு. இல்லையா மொத்தமா டாட்டா காட்டிரு. அவங்களாவது வேற யாரையாவது பார்த்துட்டு போயிட்டே இருப்பாங்க”
“போயிட்டாலும்…” என்று சலிப்பாக கூறிய தேவ்வின் குரலில் போக மாட்டாள் என்ற உறுதியும் இருந்தது.
“இதுக்கு ஒன்னும் குறச்சல் இல்ல. எக்கேடோ கெட்டுப்போங்க. ஆனா என் முன்னாடி ஸ்கூல் பசங்க மாதிரி சண்டை போட்டா நடக்குறதே வேற”
தேவின் பதிலை கேட்காமல் வேகமாக அழைப்பை துண்டித்து விட்டாள்.
“அடச்சே.. எல்.கே.ஜி படிக்குற பிள்ளைங்க கூட இப்படி சண்டை போடாதுங்க போல. லூசுங்க” என்று கூற மஞ்சுளா அவளை பார்த்து சிரித்து விட்டு “சரி நான் கிளம்புறேன். நாளைக்கு மார்னிங் ஆட் சூட் இருக்கு. ஈவ்னிங் இப்ப போயிட்டு இருக்க மூவியோட டைரக்டர மீட் பண்ணனும். ரெடியா இரு” என்றாள்.
“எந்த ஆட்?”
“உன்னோட ஃப்ரண்டோட ஆட்”
“ஓ.. அது நாளைக்கு தானா?”
“ஆமா. நான் கிளம்புறேன். பை”
மஞ்சுளா சென்றதும் மெத்தையில் விழுந்தவள் தலையனையை கட்டிக் கொண்டு தூங்கிப்போனாள்.
தொடரும்.
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
💞 இரண்டும் எலியும் பூனையுமாக இருக்கேன்னு பார்த்தால் இதுங்க முன்னால் காதலர்களா
💞அர்ஜீன் நீ பொங்குற பொங்குல மினி உன் முன்னால் இருந்தால் பஸ்பம் ஆகிடுவா போலயே
💞💐💐💐💐👌👌👌👌👌டா ஹனி
அவளும் பதிலுக்கு பொங்கினா சரியா போயிடும் 😂 thank you so much 😍😍😍😍😍😍