திவ்யா அமைதியாக வர மஞ்சுளா அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தாள். அதை உணர்ந்த போதும் திவ்யா எதுவும் பேசவில்லை. மஞ்சுளாவை அவளது பெற்றோர் அழைக்க திவ்யாவை விட்டு விட்டு வேகமாக கிளம்பி விட்டாள்.
உடை மாற்றி படுத்த திவ்யாவிற்கு அபிமன்யு சொன்னது மட்டுமே மனதில் ஓடியது.
அவனை பார்த்த போது எதுவும் தவறாக தெரியவில்லை. அவளது ரசிகர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி தான் நடந்து கொண்டான். கேமரா விசயம் வந்த பிறகு அவனிடம் எச்சரிக்கை வந்தது.
ஆனாலும் அவன் ஒரு ரசிகன் என்று மட்டுமே மேனேஜர் கூறி விட அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை. கேமரா எதற்காக வைத்தான் என்ன சந்தேகம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
மஞ்சுளா அவனை பற்றி பேசும் போதும் விசயம் இப்படி வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கடைசியாக காதலில் வந்து நின்று விட்டது.
அவளுக்கு இதை எப்படி கையாள்வது என்று புரியவில்லை. ஒரு நடிகையாக பலரின் அன்பை சம்பாதித்து இருக்கிறாள். அர்ஜுனை தவிர யாரும் அவளிடம் இப்படி பேசியது இல்லை.
அப்படியிருக்க புதிதாக ஒருவன் பேசும் போது என்ன சொல்லி தட்டிக்கழிப்பது என்று புரியவில்லை. வாய்க்கு வந்ததை பேசி விட்டு வந்து விட்டாள்.
அதற்கு மேல் என்ன நடந்தாலும் மாமாவிடம் பொறுப்பை கொடுத்து விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். ஆனால் விசயம் அதோடு நிற்கவில்லை.
*.*.*.*.*.*.
அபிமன்யு வீட்டுக்குச் செல்லாமல் ஒரு பாரில் குடித்துக் கொண்டிருந்தான். வியாபார நிமித்தமாகக் கூட ஒரு அளவுக்கு மேல் குடிக்காதவன் இன்று கணக்கில்லாமல் குடித்தான்.
திவ்யான்ஷியின் வார்த்தைகள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. அவளுக்கும் காதல் இருக்கிறது என்ற வார்த்தையை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவளுக்காக அவளை நினைத்து தான் அபிமன்யு தன்னைத்தானே இவ்வளவு வளர்த்துக் கொண்டான். அவள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே அவனது வாழ்நாள் கனவு. ஆனால் அவளது மனதில் வேறு யாரோ இருக்கிறான்.
வேறு யாரோ என்ன? அந்த அர்ஜுன் தான் இருக்கிறான். அவனே சொன்னானே ஒன்பது வருடங்களுக்கு முன்பு காதலைச் சொன்னதாக. அதையும் அவள் உடனே ஏற்றுக் கொண்டாளாமே..
எதற்காக ஏற்றுக் கொண்டாள்? அபிமன்யு வரும் வரை பொறுத்திருக்க கூடாதா? அப்படி அவனை காதலிக்கிறாள் என்றால் உலகத்திற்கு தன்னை தனிமையாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்?
முதலிலேயே காதலன் இருக்கிறான் என்று தெரிந்திருந்தால் அபிமன்யு அவனது மனதை மாற்றிக் கொண்டிருப்பானே.. வலித்தாலும் அப்போது இவ்வளவு அதிகமாக வலிக்காதே..
“கடைசியில நீயும் மத்த சினிமாகாரனுங்க மாதிரி பொய் தான் இல்ல?” என்று தன் போனில் இருந்த அவளது புகைப்படத்தை பார்த்து கேட்டான்.
கையிலிருந்த மதுபானம் கணக்கே இல்லாமல் உள்ளே போய்க் கொண்டிருந்தது. அவளது படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே குடித்துக் கொண்டிருந்தான்.
தன் நண்பனின் அழைப்பு பல முறை வந்த போதும் அதை ஏற்று பேசாமல் அவளது படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ… நீ கூட.. எல்லார மாதிரியும்… ஆகிட்டியே… உன் பேர் பொய்.. உன் வயசு பொய்… எல்லாமே பொய்.. ஆனா நான் உன் மேல வச்ச… காதல்.. நிஜம்.. அது ஏன் உனக்கு புரியல? என்ன.. என்ன விட அந்த அர்ஜுன் அப்படி என்ன பெரிய இவன்… ஆஃப்ட்ரால் ஒரு கம்பெனில மாசம் மாசம் சம்பளம் வாங்குறவன்.
நான்.. நான் யார் தெரியுமா? அந்த அர்ஜுன் மாதிரி நூறு பேருக்கு வேலை கொடுக்குறவன்… சொல்லு.. எந்த வகையில குறைஞ்சு போயிட்டேன்… சொல்லுடி.. ஏன் சிரிக்கிற? என்ன பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா?
ஆமா.. நான் பைத்தியம் தான்.. பணம் பேர்னு எல்லாம் இருக்க பைத்தியகாரன்… ஓடி ஓடி சம்பாதிச்சேன்… கோடி கணக்குல சொத்து சேர்த்தேன். எல்லாம் யாருக்காக? உ.. உனக்காக… உனக்காக மட்டும்.. தான்.
ஏன் டி வேணாம்… நான் அழகா இல்லையா ? இல்ல அந்த அர்ஜுன் மாதிரி உயரமா இல்லையா… என்ன விட ஒரே ஒரு… ஒரு இன்ச் உயரமா இருக்கான்… அவன் வேணும் நான் வேணாமா?
ஏன் வேணாம்? பதில் சொல்லு.. உனக்காக இவ்வளவு தூரம் என்ன வளர்த்துக்க தெரிஞ்ச எனக்கு உன்ன பார்த்துக்க தெரியாதா? நான் வேணாமா?
என்னவோ அவன கொல்ல ட்ரை பண்ணியாமே… கொன்னுடு.. கொன்னுட்டு என் கிட்ட வா.. உன்ன பத்திரமா பார்த்துக்கிறேன். என்ன கொன்னுடுவியா? பதில் சொல்லு திவ்யா… இல்ல… அம்ரிதா… பதில் சொல்லு அம்ரி… நான் கேட்குறேன்ல..
அவன் உனக்கு வேணாம்.. நான் உன்ன பத்திரமா பார்த்துப்பேன்.. என் கிட்ட வந்துடு.. நான் உன்ன என் கைக்குள்ள வச்சு தாங்குவேன்.. சொல்லு .. நான் தான வேணும்.. பதில் சொல்லு.. சிரிச்சுட்டே இருக்க.. பதில் சொல்லுடி… சொல்ல மாட்ட… சொல்ல மாட்டல… உன்ன….”
அபிமன்யு போனை தூக்கி போட்டு உடைக்கப்போக அதில் மீண்டும் அவனது நண்பனின் அழைப்பு வந்தது. கண்ணை சுருக்கி பெயரை படித்தான்.
“என் நண்பன்… இரு வரேன்” என்று கூறி அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“ஹலோ நண்பா…”
“டேய்.. எங்கடா இருக்க? எவ்வளவு நேரம் போன் பண்ணுறது?”
“நா… நான் சொர்க்கத்துல இருக்கேன் டா..”
“என்னடா சொல்லுற?”
“நண்பா… அவ என்ன வேணாம்னு சொல்லிட்டாடா?”
“என்னது?”
“அவளுக்கு நான் வேணாமாம்”
“டேய்.. அபி குடிச்சிருக்கியா?”
“ஆமா.. ஆனா குடிச்சா சோகம் மறந்துடும்னு சொல்லுறதெல்லாம் பொய்டா… இப்போ தான் அவ ஞாபகம் அதிகமா வருது”
“யூ.. இடியட்.. எங்க இருக்க?”
“அவளுக்கு ஏன் டா நான் வேணாம்?”
“அபி…”
“அவ மனசுல வேற யாரோ இருக்கானாம்”
“ப்ச்ச்”
“வேற யாரோ இல்ல.. அந்த அந்த அர்ஜுன்.. அவன் தான்.. அவனே தான் இருக்கான்”
“அபி லிசன்…”
“நான் என்ன தப்பு பண்ணேன் மச்சான்? என்ன விட அந்த அர்ஜுன ஏன் டா அவளுக்கு பிடிச்சது?”
“நீ எங்க இருக்கனு சொல்லு”
“அவளுக்காக தானடா நான் ஓடி ஓடி உழைச்சேன்… அவளுக்காக தான இத்தனை கஷ்டமும் பட்டேன்”
“அய்யோ.. பக்கத்துல யாராவது இருந்தா போன கொடு”
“ம்ஹும்.. நான் பேசுறத கேட்க நீ தான் இருக்க.. எனக்கு பதில் சொல்லு.. அவளுக்காக தான நான் இவ்வளவு பண்ணேன்.. அவளால உருவானவன் தானடா இந்த அபிமன்யு…”
“கடவுளே..”
“அப்படி ஒருத்தர் இல்லவே இல்லடா.. இருந்தா என்ன இப்படி புலம்ப விட்ருப்பாரா… “
“ஆமா ஆமா.. இப்ப நீ அட்ரஸ் சொல்ல போறியா இல்லையா?”
“மாட்டேன்… எனக்கு நீ பதில் சொல்லு.. திவ்யா… அவளுக்காக தான நான் எல்லாம் பண்ணேன். இப்போ அவளே இல்லனா… இந்த அபிமன்யு ஒன்னுமே இல்லையே…”
“அபி… ப்ச்ச்”
“எட்டு வருசமா நான் வாழ்ந்த வாழ்க்கையில அவள நினைக்காம ஒரு நிமிஷம் கூட இருந்தது இல்ல. அவளோட வாழனும்னு கட்டி வச்ச கோட்டை எல்லாத்தையும் உடைச்சு தள்ளிட்டாடா… நான் அழுததே இல்லல.. ஆனா இப்போ அழனும் போல இருக்கு”
சொல்லி முடிக்கும் முன் அவனின் கண்ணில் கண்ணீர் உருண்டு ஓட ஆரம்பித்தது.
“அபி நீ இருக்க இடத்த மட்டும் சொல்லு.. நான் வந்தப்புறம் நீ பேசுறத கேட்குறேன் சரியா”
“நான் எதோ பைத்தியம் மாதிரி உளறுறேன்ல..”
“இல்லடா அட்ரஸ் சொல்லு”
“ஆமா.. நான் பைத்தியமாகிட்டேன்.. திடீர்னு அழனும் போல இருக்கு.. திடீர்னு சிரிக்கனும் போல இருக்கு… உனக்கு ஒன்னு தெரியுமா? திவ்யா சொன்னா.. காதல் பைத்தியமாக்கிடும்னு.. உண்மை தான்.. இப்போ என்ன முழு பைத்தியமாக்கிடுச்சு”
“அபி வந்தேன்னா அடிச்சே கொன்னுடுவேன். எங்க இருக்கனு சொல்லித்தொல”
“கொன்னுடு மச்சான்.. எனக்கு அவ இல்லாம வாழவே பிடிக்கல.. நீயே உன் கையால கொன்னுடு.. எனக்கு அவ வேணும்.. அவ மட்டும் தான் வேணும்.. அவ இல்லாம வாழுறத விட செத்தே போறேன்”
“டேய்.. என்னடா பேசிட்டு இருக்க? ஹலோ.. ஹலோ..”
அபிமன்யு பேசிக் கொண்டே மது போதையில் படுத்து விட்டான். அவனை பார்த்த வெயிட்டர் போனை கவனித்து எடுத்து காதில் வைத்தான்.
“ஹலோ..”
“ஹலோ.. ஹலோ.. யாரு.. இப்ப பேசிட்டு இருந்தவனுக்கு என்ன ஆச்சு?”
“சார்.. அவர் ஓவரா ட்ரிங்க் பண்ணதுல மயங்கிட்டார் சார்…”
“நீங்க இருக்க இடம் எந்த இடம்னு சொல்ல முடியுமா? நான் உடனே வரேன்”
விவரங்களை வாங்கிக் கொண்டு புயல் வேகத்தில் வந்து சேர்ந்தான். அதுவரை அபிமன்யுவை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பணம் கொடுத்து விட்டு அவன் குடித்ததற்கு பில்லையும் கட்டி விட்டு வீட்டுக்கு தூக்கிச் சென்றான்.
வீட்டில் நுழையும் போதே அபிமன்யு படியில் விழுந்து விட அவனது தந்தை அதிர்ச்சியோடு பார்த்தார்.
“குடிச்சுருக்கானா?” என்று அவர் கேட்க “ஆமா பா.. எதா இருந்தாலும் அப்புறமா சொல்லுறேனே.. இவன ரூம்ல விட்டுட்டு வந்துடுறேன்” என்று கூறி அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான்.
அவன் கீழே வரும் போது அபிமன்யுவின் தந்தை கோபமாக அமர்ந்திருந்தார்.
“எப்ப இருந்து இந்த பழக்கம்”
“ப்பா…”
“எதுவும் சமாளிக்காம சொல்லு… இவனுக்கு இப்படி பட்ட பழக்கமெல்லாம் இல்லையே… பார்ட்டிக்கு போனா கூட அதிகமா குடிக்க மாட்டான். இன்னைக்கு என்ன?”
“நீங்க அவன் கிட்டயே கேளுங்க பா”
“ஏன் உனக்கு வாய் இல்லையா?”
“எனக்கு தெரிஞ்சாலும் சொல்ல முடியாதுபா. அவனே சொன்னா தான் நல்லது”
“அப்போ சொல்ல மாட்ட?”
“சாரி பா.. நான் ட்ரஸ்ஸ மாத்தி படுக்க வச்சுட்டேன். காலையில வரேன்”
“சரி பத்திரமா போ..”
“ம்ம்..”
“ஒரு நிமிஷம் நில்லு..”
“என்னபா?”
“இத யாருக்கும் சொல்ல வேணாம்”
“ம்ம்..”
அவன் சென்று விட அபிமன்யு உலகை மறந்து திவ்யாவின் கனவில் மூழ்கிக் கிடந்தான்.
*.*.*.*.*.*.
அடுத்த நாள் மஞ்சுளா திவ்யாவிடம் விசாரிக்க அபிமன்யுவிடம் பேசியதை கூறி விட்டாள். அதை அப்படியே செந்தில் குமாரிடமும் கூறி விட்டாள்.
செந்தில் குமார் இதோடு அவன் மறந்து விலகி விட்டால் சரி. இல்லையெனில் அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டார்.
அதோடு அந்த விசயத்தை மறந்து விட்டு திவ்யா படப்பிடிப்பில் கவனமானாள்.
மேகாவிற்கு தன் தோழி தனக்கு தெரியாமல் தன் காதலனையே காதலிப்பது தெரிந்து போனது. ஒவ்வொரு முறையும் அவளுடைய காதலனுக்கு தனிச்சிறப்பாக அவளது தோழி செய்யும் போது மேகா வெறித்து பார்த்தாள்.
இது தெரியாத அந்த நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக மேகாவின் தோழியின் பக்கம் சாய்ந்தான். அவன் முழுதாக தன்னை விட்டு போவதாக மேகா உணர்ந்தாள்.
இது எல்லாம் ஒரு பாடல் காட்சிகளாக எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு சோகமான பாடலில் இந்த காட்சிகள் அனைத்தும் இடம் பெறும்.
இரண்டு நாட்களாக அந்த ஒவ்வொரு காட்சியும் வெவ்வேறு இடத்தில் படம் பிடிக்கப்பட்டது. பாடலுக்கென்று எடுக்கப்பட வேண்டிய எல்லாமே முடிந்து விட அன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் அன்று உடைத்த கார் புத்தம் புதிதாக நின்றது.
அதை பார்த்ததும் “மஞ்சு.. அர்ஜுனுக்கு போன் பண்ணு” என்றாள்.
“ஏன் உன் கிட்ட போன் இல்லையா?”
“சொன்னத செய்டி”
மஞ்சுளா முறைப்புடன் அர்ஜுனை அழைத்தாள். அழைப்பு எடுக்கப்படும் முன்பே போனை திவ்யாவின் கையில் திணித்து விட்டாள்.
“சொல்லு மஞ்சு..”
“ம்க்கும்.. மஞ்சு இல்ல.. நான்”
“நான்னா?”
“நான்னா நான் தான்”
“என்ன அதிசயமா பேசுறீங்க?”
“ஏன் பேச கூடாதா?”
“உன் போன்ல இருந்து கால் பண்ணிட்டு அப்புறம் இப்படி அதிகாரமா பேசு.. இப்ப என்ன விசயம்னு சொல்லு”
“கார் வாசல்ல நிக்கிது”
“வந்துடுச்சா.. அதுக்கு எவ்வளவு செலவு பண்ணிருக்கேன் தெரியுமா?”
“உன்ன யாரு மாமாவ ஹர்ட் பண்ண சொன்னது?”
“அதுக்கு என் பர்ஸ்ஸ காலி பண்ணிட்ட”
“என் தப்பு இல்லபா”
“உன்ன வந்து பார்த்துக்கிறேன்”
“ரெண்டு நாள்ல வரேன்னு சொன்ன?”
“ஓ.. ஓ… ஓஹோ…”
“என்ன ஓஹோ?”
“மிஸ் பண்ணுறியா?”
“இல்லையே”
“அப்ப பதில் சொல்ல மாட்டேன்”
“பதில் வரல கொலை தான்”
“மிஸ் பண்ணுறேன்னு சொல்லு.. நானே வரேன்”
“அப்ப நீ வரவே வேணாம் ப்பே”
“தெரியும் நீ இப்படி தான் சொல்லுவனு..”
“அப்போ பதிலச் சொல்லு”
“இங்க மாத்தி மாத்தி வேலை வந்துட்டே இருக்கு. முடிய இன்னும் ரெண்டு நாள் ஆகும் போல.. முடிச்சதும் வரேன்”
“ஓ… ஓகே பை”
“அவ்வளவு தானா?”
“அவ்வளவே தான்..”
“கல் நெஞ்சக்காரி.. மஞ்சு கிட்ட போன கொடு”
மஞ்சுளாவிடம் நீட்ட “என்னடா வேலையெல்லாம் முடிஞ்சதா?” என்று கேட்டாள்.
“இங்க கொஞ்சம் இழுத்துட்டே இருக்கு.. அங்க எதுவும் பிரச்சனை இல்லையே”
“இல்ல.. எல்லாம் ஸ்மூத்தா தான் போயிட்டு இருக்கு”
“சரி நான் வர எப்படியும் அடுத்த வாரம் ஆகிடும்னு நினைக்கிறேன். வந்தப்புறம் பேசிக்கலாம்”
“ம்ம்”
அழைப்பை துண்டித்தவள் “அடுத்த தடவ நீயே உன் போன்ல போன் பண்ணி பேசு.. உன் ஈகோக்கு நான் ஊறுகாயா?” என்று அதட்டினாள்.
திவ்யா பல்லை காட்டி வைக்க “ச்சீ ப்பே” என்று கூறி விட்டு மேனேஜரை தேடிச் சென்றாள்.
“எங்க போற?”
“மேனேஜர பார்க்க.. லாஸ்ட் மூவி பேமண்ட் வந்துடுச்சானு கேட்கனும். அண்ட் இன்னும் என்னோட சம்பளம் வரல.. ஆயிரம் செலவு இருக்கு”
“உனக்கெதுக்கு சம்பளம்? ஃப்ரண்டுக்கு சேவையா செய்ய மாட்டியா என்ன?”
“சேவை தான? வேலைய விடுற சேவை வேணா செய்யுறேன்”
“சரி சரி.. போய் பேசு… சும்மா சும்மா வேலைய விட்டு போறத பத்தியே பேசிக்கிட்டு”
மஞ்சுளா அங்கிருந்து சென்று விட திவ்யா அர்ஜுன் பேசியதை நினைத்துக் கொண்டே அறைக்குள் சென்று விட்டாள்.
தொடரும்.
💞 இந்த குடிகாரன் என்ன பண்ணும் போறானோ தெரியலையே
💞ஹா ஹா காதல் காதல் அவ்ளோ காதல்
💞👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌💐💐💐💐💐 சூப்பர் டா ஹனி
குடிச்சுட்டு விழுந்து கிடப்பான் 🙊
லொள்ளு அதிகமாகியுள்ளது டா உனக்கு 😜😜😜😜
😁😁😁😁😁😁
விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதைக்கரு. மனதிலிருக்கும் பாரம் இறங்குவது போன்றதொரு உணர்வை தரும் எழுத்தாளரின் எழுத்து நடையும், நகைச்சுவைத் திறனும் மிகவும் அசத்தல்.