Loading

 

 

 

 

 

“அர்ஜுன் வர்ரான்” என்று செந்தில்குமார் கூறியதும், திவ்யான்ஷிக்கு தலை சுற்றாதது ஒன்றே குறை. அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் அமர்ந்து விட்டாள்.

 

“என்ன அமைதியாகிட்ட?” என்று செந்தில்குமார் கேட்டதும், தன் அதிர்ச்சியை உதறித் தள்ளினாள்.

 

“எதுக்கு வரானாம்?” என்று கேட்டவள் குரலில், கோபம் லேசாக எட்டிப் பார்க்க தான் செய்தது.

 

“எதோ பிஸ்னஸ் டீலாம். இங்க இருக்க ஒரு மினிஸ்டரோட பையன் கம்பெனி கூட டீல் போல. அவனே வந்து சில வேலைகள் பார்க்கனுமாம். கிளம்பி வரான்”

 

“உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?”

 

“லெனின் சொன்னான்”

 

“அதான பார்த்தேன்.. அவன் வாயால சொல்லிட்டானோனு சந்தேகப் பட்டுட்டேன்.”

 

திவ்யாவின் குரலில் கோபத்தின் அளவு கூட ஆரம்பித்து இருந்தது.

 

“அவன பத்தி தான் தெரியும்ல.”

 

“வர்ரவன அப்படியே வந்துட்டு ஓடிப்போக சொல்லுங்க. தப்பித் தவறி என் கண்ணுல பட்டா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று கூறி விட்டு வெளிப் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

 

அவளிடம் எதோ சொல்ல வந்தவர், சொல்லாமல் விட்டுவிட்டார். அவளும் வெளியே தெரிந்த தொடுவானத்தில், தொலைந்த வாழ்வை தேடிக் கொண்டிருந்தாள்.

 

கார்‌, நிற்காமல் சென்று வீட்டின் முன்பு நின்றது. வேகமாக‌ இறங்கியவள், செந்தில்குமாரிடம் பேசாமல், நேராக அறைக்குள் சென்று முடங்கி விட்டாள்.

 

செந்தில்குமாரும் அவளது நிலையை உணர்ந்து, அமைதியாக இருந்து விட்டார்.

 

*.*.*.*.*.*.

 

காலை‌ பொழுது பளபளவென விடிந்தது. தனது வேலைக்கு தயாராகி திவ்யான்ஷி கீழே வர, மஞ்சுளா அவளுக்கு முன்பே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

மஞ்சுளா, தினமும் அவசரமாக வேலைக்கு கிளம்பி வருவதால், காலை சாப்பாடு இங்கு தான். மதிய சாப்பாடு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில். அவளது வீட்டில் இரவு மட்டும் தான் சாப்பிடுவாள்.

 

அதுவும் எதாவது பார்ட்டிக்கு சென்று விட்டால், அங்கே இரவு உணவும் முடிந்து விடும். அவளது அன்னையும், தந்தையும் மகளிடம் இதற்காக நிறையவே குறைப்பட்டுக் கொள்வார்கள்.

 

ஓடி ஓடி உழைத்து என்ன ப்ரயோஜனம்? வீட்டில் ஒரு நேரம் நிம்மதியாக சாப்பிடுவதில்லை. எப்போதாவது மதிய உணவை டப்பாவில் போட்டு கொடுத்து விடுவார்கள். அதையும் படப்பிடிப்பின் நடுவில் சாப்பிட்டு விட்டு, மதிய சாப்பாட்டை அங்கு தருவதையே சாப்பிடுவாள்.

 

“குட் மார்னிங் மஞ்சு”

 

“குட் மார்னிங்.”

 

“நைட் சீக்கிரம் போயிட்ட. நல்லா தூங்குனியா?”

 

“நான் நல்லா தான் தூங்குனேன். உன் கண்ணு ஏன் இப்படி இருக்கு?”

 

“அத அப்புறமா சொல்லுறேன்” என்றவள் வேலை செய்பவர் பரிமாற, சாப்பிட ஆரம்பித்தாள்.

 

அவர்களோடு செந்தில் குமாரும் வந்து சேர்ந்து கொண்டார். மூவரும் சாப்பிட்டு முடித்ததும், “வரேன் மாமா. சாப்பிட்டு வீட்டுல ரெஸ்ட் எடுங்க. நான் சீக்கிரம் வந்துடுறேன்” என்று கூறி விட்டு கிளம்பினாள்.

 

காரில் ஏறியதும், “ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று மஞ்சுளா வினவ, திவ்யான்ஷி பதில் சொல்லவில்லை.

 

“எதுவும் பிரச்சனையா?”

 

“ம்ம்..”

 

“என்னாச்சு?”

 

“சீக்கிரம் தெரிஞ்சுப்ப” என்று கூறி விட்டு, அமைதியாகி விட்டாள்.

 

மஞ்சுளா அவளை யோசனையாக பார்த்த போதும், எதுவும் கேட்கவில்லை. சூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவுட்டோர் சூட்டிங்காக இருந்தால் வேன் இருக்கும். இன்று ஸ்டூடியோவில் சூட்டிங் என்பதால் மேக்அப் போடும் இடத்திற்கு சென்று சேர்ந்தனர்.

 

எல்லோரும் அவளை மரியாதையாக பார்த்து வழிவிட, திவ்யான்ஷி அதை கவனிக்கவில்லை. தன் யோசனையுடனே சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். உடனே மஞ்சுளா அவளது மேக்அப் விவரத்தை கேட்டு விட்டு, வேலையை ஆரம்பித்தாள்.

 

அது பாடலுக்கு முன் வரும் காதல் காட்சி. அதில் நாயகன் நாயகியிடம் காதலைச் சொல்வான். நாயகி சந்தோசம் தாங்காமல் கண்ணீர் விடுவாள். அதை கண்ட நாயகன் அவளது இரண்டு கன்னங்களிலும் முத்தம் வைப்பான். கடைசியாக அவன் உதட்டை நெருங்கும் போது பாடல் ஆரம்பித்து விடும்.

 

அந்த காட்சியை இன்று படம் பிடிக்க வேண்டும். அதன் பிறகு பாடலுக்கு கேரளா செல்ல முடிவு செய்திருந்தனர். வெளிநாடு செல்லும் அளவு தயாரிப்பாளரிடம் பணம் இல்லை. சிறிய பட்ஜெட் படம் என்பதால் கேரளாவை தேர்ந்தெடுத்து இருந்தனர்.

 

இன்றைய காட்சி முடிந்த பிறகு, அடுத்த ஒருவாரம் கழித்து தான் பயணம். அதனால் இன்று ஒரே டேக்கில் காட்சியை முடித்து விட வேண்டும் என்று, திவ்யான்ஷி முடிவு செய்து கொண்டாள்.

 

மேக் அப் முடிந்ததும் வசனங்கள் கொடுக்கப்பட்டது. அதை ஒரு முறை நாயகனோடு சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டாள்.

 

பிறகு காட்சி படமாக்கப்பட்டது. ‘ஆக்ஷன்’ என்ற வார்த்தையை கேட்டதும் நாயகன் மெதுவாக நடந்து வந்து திவ்யான்ஷியின் முகத்தை கையில் ஏந்துவான். ஆனால் அவன் காதலுடன் வராமல் கடனே என்று நடந்து வர, “கட்” என்ற சத்தம் கேட்டது.

 

இயக்குனரின் சில பல அறிவுரைக்குப்பிறகு, இரண்டு முறை செய்து பழகிய பிறகு, ஒரு வழியாக காதல் வந்தது. அவனது நடையில்! அதோடு நடந்து வந்தவன், அவள் முகத்தை தாங்கி வசனம் பேசினான்.

 

அதை கட் செய்து விட்டு, நாயகிக்கு ‘க்ளோஸ்’ வைத்து அடுத்த காட்சியை ஆரம்பித்தார்கள். திவ்யாவின் கண்ணில் ஊற்றிய கிளிசரின் கண்ணீரை வர வைத்தது. ஆனால் பார்பதற்கு, நிஜமாகவே திவ்யான்ஷி அழுவது போல் இருந்தது.

 

அவளது வசனங்களை ஒரே மூச்சில் பேசி முடிக்க, அவன் அவளது கன்னத்தில் முத்தமிடும் காட்சியை தனியாக எடுத்தனர். கடைசியாக இதழை நெருங்குவது போல் வரச் சொல்லி விட்டு, “கட்” என்றனர்.

 

இவ்வளவு நேரம் நடித்துக் கொண்டிருந்த இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து அசுவாச பெருமூச்சு விட்டனர்.

 

“இந்த ரொம்ன்ஸ் சீன் மட்டும் எப்பவுமே வர மாட்டிது” என்று நாயகன் புலம்ப, “விடுங்க.. எல்லாமே பொய்னு பழகிட்டா சரியா போயிடும். இது மூணாவது படம் தானே. ” என்று இதமாக பேசினாள்.

 

இருவரையும் இயக்குனர் பாராட்டி விட்டு, அவரது வேலையை பார்த்தார்.

 

அவரிடம் வந்த திவ்யான்ஷி, “டைரக்டர் சார்.. இன்னும் எதாவது வேலை இருக்கா?” என்று கேட்டாள்.

 

“ஏன் ?” என்று அவள் கேள்வியாக பார்க்க, “பர்ஸ்னல் இஸ்யூ. வேலை இருக்குனா.. நோ ப்ராப்ளம். செட்லயே இருக்கேன்” என்றாள்.

 

“இல்ல.. இனி வேலை இல்ல. நீங்க கிளம்புங்க”

 

இயக்குனர் சொன்ன உடனே, திவ்யான்ஷி வேகமாக உடை மாற்றும் இடத்திற்கு வந்தாள். தன் அலங்காரத்தை கலைத்து, உடையை ஒப்படைத்து விட்டு, உடனே கிளம்பி விட்டாள். அவளது வேகத்தை பார்த்த மஞ்சுளா, “இவ்வளவு அவசரமா எதுக்கு வீட்டுக்கு போகனும்?” என்று கேட்டாள்.

 

“ம்ம்.. புயல் வருதாம்”

 

“இந்த நக்கல் எல்லாம் வேணாம். மரியாதையா பதில் சொல்லு”

 

“ப்ச்ச்.. வீட்டுக்கு போனதும் தெரிஞ்சுக்க” என்று கூறி விட்டு, கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

 

‘என்னடா இது.. ஒன்னுமே சொல்ல மாட்டுறா’ என்ற குழப்பத்தோடு மஞ்சுளா பயணித்தாள்.

 

இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

“என்ன மாமா… உங்க புள்ள வந்தாச்சா?” என்று கேட்டுக் கொண்டே திவ்யான்ஷி வர, “வந்துட்டான்” என்றார் செந்தில் குமார்.

 

திவ்யான்ஷியின் நடை தடை பட்டது. அதிர்ச்சியோடு நின்று விட்டவள், “இங்கயா?” என்று கேட்டாள்.

 

செந்தில் குமார் மறுப்பாக தலையசைக்க, “அதான பார்த்தேன்” என்று முணுமுணுத்து விட்டு, அதிர்ச்சி விலகி அறை பக்கம் சென்றாள்.

 

அவள் சென்றதும், மஞ்சுளாவின் அதிர்ச்சி விலகியது. வேகமாக செந்தில் குமார் அருகே ஓடி வந்தாள்.

 

“அ.. அர்ஜூன் சார்.. வந்துருக்காரா?” என்று கேட்டவள் குரலில் அளவு கடந்த ஆச்சரியம்.

 

“ம்ம்”

 

“ஏன் ? எதுக்கு?”

 

“எதோ பிஸ்னஸ்ஸாம்”

 

“இங்கயா? இங்க என்ன பிஸ்னஸ்? அவர் வேலை பார்க்குற இடத்துல இருந்து அனுப்பி இருக்காங்களா?”

 

“அப்படி தான் கேள்வி பட்டேன்”

 

“ஓ… ஆனா நம்பவே முடியல”

 

“எத?”

 

“அவர் வந்தத… எட்டரை வருசம் ஆச்சு முழுசா. ஒரு கால் கூட பண்ணி பேசுனது இல்ல. திடீர்னு வந்து நிக்கிறாரே.. எனக்கென்ன தோனுதுனா…” என்று ஆரம்பித்தவள், திவ்யாவின் அறையை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.

 

கதவு அடைத்து இருப்பதை உறுதி செய்து விட்டு, “லாஸ்ட் டைம் பார்த்தத விட இப்போ பெரிய வார் இருக்குனு தோனுது” என்று ரகசிய குரலில் கூறினாள்.

 

செந்தில் குமார் அவளது பேச்சில் சிரித்தார். ஆனால் உடனே அந்த சிரிப்பு மறைந்து முகத்தில் கவலை குடி கொண்டது.

 

“எனக்கு திவ்யாவ நினைச்சா தான் கவலையா இருக்கு”

 

“ம்ம்.. இன்னைக்கு முழுக்க அவ அவளாவே இல்ல. எல்லா வேலையையும் அவசரமா முடிக்க சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டா.”

 

“இவங்க மீட் பண்ணும் போது தான் இருக்கு”

 

“அதுக்குள்ள நான் எங்கயாவது ஓடி ஒளிஞ்சுக்கனும்” என்று மஞ்சுளா கூற, இப்போதும் செந்தில் குமார் சிரித்தார்.

 

“சரி போய் சாப்பிடு. திவ்யாவயும் கூட்டிட்டு போ. நான் ஒரு போன் பேசனும். பேசிட்டு வரேன்” என்று எழுந்து சென்றார்.

 

மஞ்சுளா ஒரு பெருமூச்சோடு திவ்யாவின் அறை பக்கம் சென்றாள். படிகளை கடந்து, சுற்றி வட்டமாக இருந்த வராண்டாவில் நடந்து, அவளது அறைக்கதவை தட்டினாள்.

 

சில நிமிடங்களுக்கு‌ பிறகே கதவு திறக்கப்பட்டது. வேறு உடைக்கு மாறியிருந்தாள் திவ்யா.

 

“சாப்டலாம் வா. பசிக்குது”

 

“டூ மினிட்ஸ். நீ போ வரேன்”

 

“என்ன பண்ண போற?”

 

“கால் வந்தது. பேசிட்டு வரேன்”

 

“சரி வந்து சேரு”

 

மஞ்சுளா திரும்பி நடக்க‌ திவ்யா மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.

 

சில நிமிடங்களில் அவள் இறங்கி வர, செந்தில் குமாரும் வந்தார். திவ்யா அமைதியாக சாப்பிட, மஞ்சுளா அவளையும் செந்தில் குமாரையும் மாறி‌மாறி‌ பார்த்தாள். பிறகு தொண்டையை செருமிக் கொண்டு,

 

“அர்ஜுன் சார் இங்க தங்கலையா சார்?”

 

“ம்ஹூம். வெளிய எதோ ஹோட்டல் தங்கி இருக்கான்”

 

“ஏன்?”

 

“நான் இருக்க வீட்டுக்கு வர மாட்டானாம்”

 

“ரொம்ப தான் போறாங்க. நீங்க வர சொல்ல வேண்டியது தான?”

 

“சொன்னேன்”

 

“என்னான்னு?”

 

“இங்க வரலனா டீல் ஒரு மாசத்துல முடியாது. வருச கணக்காகும்னு”

 

மஞ்சுளா‌ வாயை பிளக்க‌ திவ்யாவின் முகத்தில் சிரிப்பு வந்தது.

 

“மிரட்டல்!”

 

“ஆமா.. சோதிச்சு பார்க்கட்டும். கண்டிப்பா டீல முடிக்க விட மாட்டேன்”

 

திவ்யா இவரையும் பார்த்து விட்டு மீண்டும் சாப்பாட்டில் கவனமானாள்.

 

“அர்ஜூன்.. சார் கண்டிப்பா உங்க பேச்ச கேட்க மாட்டார்”

 

“தெரியும்”

 

“அப்புறம் என்ன பண்ணுறதா இரூக்கீங்க?”

 

“அவன் கூட டீல் பேசுற அந்த மினிஸ்டர் பையன் யாருனு தெரியும். இப்போ அதான்‌ பேசிட்டு வரேன். நான்‌ சரினு சொல்லாம சைன் பண்ண கூடாதுனு”

 

மஞ்சுளாவிற்கு ஆச்சரியமாக தான் இருந்தது. செந்தில் குமாருக்கு பல அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்தது. அவர் கை காட்டும் தயாரிப்பு நிறுவனத்திற்க்கு பணத்தை நம்பி கொடுத்து விடுவார்கள். கொடுத்த பணம் அசல் மற்றும் வட்டியில் ஒரு சதவீதம் கூட குறையாமல் கிடைத்து விடும்.

 

அவர் மறுத்து விட்டால் யார் வந்து சிபாரிசு செய்தாலும் கையை விரித்து விடுவார்கள். அவரின் இந்த தொடர்பு சினிமா உலகம் மட்டுமே அறிந்த ரகசியம். அதனால் பெரிய பட்ஜட் படங்களுக்கு முதலில் இவரை தேடி வரும் பழக்கம் இருக்கிறது.

 

அதே தொடர்பு இப்போது அர்ஜுன் மீது பாய்கிறது. என்ன நடக்கும் என்று பார்க்க அவளும் ஆர்வமாகவே இருந்தாள்.

 

*.*.*.*.

 

அதே சித்திரைத் திருநாள்…

 

மும்பையில் ஒரு உயர்தர ஹோட்டலில், தொலைகாட்சியின் முன்பு அமர்ந்து இருந்தான் ஒருவன். தொலைகாட்சியில் தமிழ் வருட பிறப்புக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஓடிக் கொண்டிருந்தது. இன்று வெளியாகும் திவ்யான்ஷியின் திரைப்படத்திற்காக அவளை பேட்டி எடுத்திருந்தனர். அது இப்போது ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது.

 

கையில் இருந்த சான்ட்விச்சை ருசித்துக் கொண்டே திவ்யாவின் மேல் கண்ணை பதித்து இருந்தான்.

 

“உங்க புது படம் பத்தி மக்களுக்கு கொஞ்சம் சொல்லுங்க”

 

“நான் சொல்லுறத விட நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்களேன். ஒன்னே ஒன்னு சொல்லுவேன். குடும்பத்தோட போய் பார்க்கலாம். கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க”

 

“இப்படி சொல்லிட்டீங்களே.. சரி நம்ம நேயர்கள் கண்டிப்பா படம் பார்ப்பாங்க. நாம உங்கள பத்தி பேசலாம்”

 

“ம்ம்.. கேளுங்க”

 

“உங்களுக்கு கோபமே வராதாமே.. எப்பவும் ரொம்ப அமைதியா பொறுமையா தான் செட்ல இருப்பீங்கனு கேள்வி பட்டோம். நிஜம்மாவா?”

 

லேசாக புன்னகைத்த திவ்யா, “கோபப்பட்டா எல்லாம் சொதப்ப தான் செய்யும்..” என்று தொடர்ந்து கூற அவன் உதடு ஏளனமாக வளைந்தது.

 

“இவளுக்கு கோபம் வராதாம்? வந்தா என்ன செய்வானு எனக்கு தான் தெரியும்” என்றவன் மீசைக்குள் மறைந்து கிடந்த தழும்பை தடவிக் கொண்டான்.

 

கல்லால் அடித்ததில் ஏற்பட்ட தழும்பு அது. தொலைகாட்சியில் அவளிடம் மேலும் பல கேள்விகள் கேட்கப்பட்டது. நிறையவே விவாதித்தனர். எல்லாவற்றையும் பொறுமையாக பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

 

கடைசியாக வணக்கம் சொல்லி அந்த நிகழ்ச்சி முடிய தொலைகாட்சியை அணைத்தான். சாப்பிட்டு முடித்து காகிதங்களை குப்பையில் போட்டு விட்டு கை கழுவினான்.

 

கையை துடைத்துக் கொண்டு திரும்ப போன் இசைத்தது. அதை எடுத்து காதில் வைக்க “மிஸ்டர். கீர்த்வாசன்” என்று பெயரை கடித்து துப்புவது போல் ஒரு பெண் பேசினாள்.

 

“கீர்த்திவாசன்… அர்ஜுன் கீர்த்திவாசன்” என்று அழுத்தமாக கூறினான்.

 

“ஓகே ஓகே. யூ ஹேவ் டூ கோ டமில் நாடு”

 

“வாட்? பட் வொய்?”

 

அந்த பெண் நிலையை ஆங்கிலத்தில் விளக்கி முடிக்க “ஓகே” என்றான் ஒரு பெரு மூச்சோடு.

 

இந்தியா வந்து விட்டு தமிழ்நாடு செல்ல அவனுக்கு பிடிக்கவில்லை. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. திவ்யான்ஷியை நேருக்கு நேர் பார்க்க அவனுக்கு விருப்பம் இல்லை.

 

தமிழ்நாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு மெத்தையில் விழுந்தான். திவ்யான்ஷியின் பேச்சு நினைவில் ஓடியது.

 

“நீங்க ஆக்ட்ரஸ் ஆகலனா என்னவாகி இருப்பீங்க?”

 

“ம்ம்.. மே பி ஒரு டிசைனர்”

 

“ரியலி.. “

 

“யா.. ஒரு டிசைனர் ஆகனும்னு ஆசை. ஆனா இத என்னோட டிசைனர் கிட்ட சொன்னப்போ.. ஒரு மாதிரி பார்த்துவச்சாங்க. என் பொழப்புல ஏன் மா மண்ணள்ளி போடுறனு ஒரு லுக் விட்டாங்க.”

 

இதை சொன்னதும் திவ்யாவோடு பேசிக் கொண்டிருந்த பெண் சிரித்து விட்டாள்.

 

“அதான் அவங்க பொழச்சு போகட்டும்னு விட்டுட்டேன்”

 

அவள் முடித்ததும் இரண்டு பெண்களும் சிரித்தனர்.

 

அதை நினைத்தவன் “பொய் பொய்.. எல்லாம் நடிப்பு” என்று வெறுப்பாக முணுமுணுத்தான்.

 

“அவ சுயரூபம் ஊருக்கு தெரியல. இது தெரியாம இவளுக்கு நாலு பாய் ஃப்ரண்ட் வேற. வரேன்டி.. நீ யாருனு ஊருக்கே காட்டுரேன்” என்று சபதம் எடுத்துக் கொண்டான்.

 

அடுத்த நாள் காலையே சென்னை வந்து இறங்கி விட்டான் அர்ஜுன். ஆனால் தந்தையைப் பார்க்க பிடிக்கவில்லை. வந்த வேலையை முடித்தப் பிறகு அந்த திவ்யாவிற்கு ஒரு முடிவு கட்டி விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தான்.

 

அதன் விளைவாக ஒப்பந்தம் செய்யும் நிறுவனத்திற்கு செல்ல, அங்கு உரிமையாளன் இல்லை. ஒரு சினிமா ஸ்டூடியோவின் முகவரியை கொடுத்து அங்கு போய் பார்க்கச் சொன்னார்கள்.

 

அர்ஜுனும் கிளம்பி ஸ்டூடியோவிற்கு சென்று சேர்ந்தான். அங்கு சந்திக்க வேண்டியவனை சந்தித்து விட்டு வெளியே வர “நம்ம ப்ரடியூஸ் பண்ணுற ஒரு படம் இங்க போயிட்டு இருக்கு. பார்க்க வரீங்களா?” என்று அழைத்தான் புதியவன்.

 

அர்ஜுனுக்கு சினிமாவை பிடிக்காது என்றாலும் “ம்ம் பார்க்கலாமே” என்றான்.

 

உடனே புதியவனின் முகம் பளிச்சென மாறியது. வேகமாக அவனை அழைத்துக் கொண்டு மேலே சென்றான்.

 

மாடியில் நின்று கொண்டு கீழே நடக்கும் காட்சிகளை பார்த்தனர். கீழே நடித்துக் கொண்டிருந்தது திவ்யான்ஷி. யாரை பார்க்க கூடாது என்று நினைத்தானோ அவளைத் தான் விதி‌ முதல் நாளே சந்திக்க வைத்தது. அதுவும் அவள் நடித்துக் கொண்டிருந்த காட்சி அவனது இரத்த அழுத்தத்தை அதிகரித்தது.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
8
+1
0
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. 💞ஆஹா ஆயிரம் தடவை ஹீரோ சொதப்பிய முத்தக் காட்சியைப் பார்த்துட்டானோ போய் புள்ளை

      💞ஏன்டா அவளை உனக்கு பிடிக்காது ஆனால் அவ பேட்டி போடுற நேரம் மட்டும் டீவி பார்ப்ப இது எப்படி டா

      💞ஆக மொத்தம் நீயும் அவளும் விரும்புறீங்க ஆனால் ஏதோ பெரிய காரணம் இருக்கிறது இப்போ இப்படி இருக்க

      💞. சூப்பர் டா ஹனி

      1. Author

        அத பார்த்துட்டு தான் பொங்குறான் 🤣🤣🤣 டிவில பார்ப்பான் பேப்ர்ல பார்ப்பான். நேர்ல மட்டும் பார்க்க மாட்டானாம். 🤣🤣
        Thank you so much 😍😍😍😍😍😍😍😍

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.