Loading

வேலையை வேகமாக முடித்து விட்டு வீட்டுக்கு ஓடி வந்தாள் திவ்யா. அர்ஜுன் லாப்டாப்பில் கவனமாக அமர்ந்து இருக்க “என்ன மேன் திரும்ப ஃபீவர் எதுவும் வந்ததா?” என்று விசாரித்தாள்.

 

அர்ஜுன் பதில் சொல்லாமல் வேலையில் கவனமாக இருக்க திவ்யா அவன் முகத்தை பார்த்து விட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.

 

உடை மாற்றி விட்டு அர்ஜுன் சாப்பிட்டதை பற்றி விசாரித்தாள். லெனின் உடன் இருந்ததால் சரியாக சாப்பிட வைத்திருக்கிறான். 

 

சற்று நேரத்திற்கு முன்பு லெலின் வேறு வேலையாக கிளம்பிச் சென்று இருந்தான். இதற்கு மேல் அர்ஜுனை விசாரிக்க திவ்யாவிற்கு மனமில்லை. மஞ்சுளா செந்தில் குமாரிடம் தான் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

 

அவள் பேசி முடித்ததும் “என்ன சொன்னாரு?” என்று விசாரித்தாள்.

 

“வேலை இன்னும் முடியலையாம். அர்ஜுன் நல்லா இருக்கானானு கேட்டாரு”

 

“என்ன அப்பா இவரு… பிள்ளைக்கு ஒன்னுனா துடிச்சுட்டு வர வேணாம்” என்று திவ்யா சலிப்பாக கூற “அதான” என்றாள் மஞ்சுளா.

 

“என்ன அதான? அப்படியே அவர் ஓடி வந்தாலும் இவன் பார்த்து பேசிட்டு தான் மறு வேலை பார்ப்பான். வந்தவர் நோகுற மாதிரி எதையாச்சும் சொல்லி வைப்பான். இதுக்கு அவர் வராமலே இருக்கலாம்”

 

“ஏன்டி.. எதாச்சும் ஒரு பக்கம் பேசேன். இப்படியும் பேசுற அப்படியும் பேசுற.. தண்ணிலயும் தள்ளி விட்டுட்டு நைட் கூடவே இருந்து கவனிச்சுகிட்டவளாச்சே.. உன்னலாம் புரிஞ்சுக்கவே முடியாது”

 

“ஏன் அதெல்லாம் ட்ரை பண்ணுற? அவன பார்க்க தான வந்த? மேல இருக்கான் பார்த்துட்டு கிளம்பு..”

 

“உன்ன அப்புறம் பார்த்துக்கிறேன்” என்று முறைத்து விட்டு அர்ஜுனை பார்க்கச் சென்றாள்.

 

அவன் வேலையில் கவனமாக இருக்க மஞ்சுளா அமைதியாக இரண்டு நிமிடம் நின்றாள். அவனது கவனம் கலைந்து திரும்பி பார்த்தான்.

 

“ஃபீவர் போயிடுச்சா?” என்று மஞ்சுளா கேட்க மேலும் கீழும் தலையசைத்தான்.

 

“இனி உடம்பு சரியில்லனா ஒழுங்கா இருங்க.. இப்படி மயங்கி விழுற அளவு எல்லாம் போகாதீங்க”

 

“நீ எப்போ தான் மன்னிப்ப?”

 

“ஏன் மன்னிக்கனும்?”

 

“மஞ்சு… நான் பாவம் இல்லையா? பாரு உடம்பு எல்லாம் சரியில்லாம போயிடுச்சு”

 

“இல்லையே… நீங்க அன்னைக்கு மோதிரத்த கலட்டிட்டு இனி உன்ன பார்க்க வர மாட்டேன். நீ யாரோ நான் யாரோ. அப்படி இப்படினு பேசிட்டு அந்த ரிங்ஸ தூக்கி எறிஞ்சுட்டு போயிட்டீங்க. விடிய விடிய அந்த ரிங்ஸ தேடி அலைஞ்சு கிடைக்காம அழுது காய்ச்சல்ல விழுந்தா அம்ரு. அப்பவும் காய்ச்சலோட அடுத்த நாளும் தேடி நைட் கண்டு பிடிச்சு எடுத்தா.

 

எல்லாரும் அவள பைத்தியம்னு நினைச்சு திட்டும் போது அவ அந்த மோதிரத்த தேடுறத விடல. ஏன் உங்க ஃப்ரண்ட் லெனின் கூட உங்கள திட்டிட்டு மறந்துட சொன்னாங்க. ஃபீவரோட அவ அலையுறத பார்த்து அவங்கம்மா அழுதாங்களே அதெல்லாம் விடவா உங்க நிலமை மோசமா போயிடுச்சு?

 

இன்னும் அந்த ரிங்ஸ் அவ கிட்ட இருக்கு. ரெண்டு பேரோடதும் இருக்கு. எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு பண்ணுறது நீங்க தான் சார். அவ உங்கள தண்ணில தள்ளி விட்டதுக்கு திட்டுனேன். ஆனா நீங்க உங்க நிச்சயத்த பத்தி பேசலனா அவளுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது.

 

ஆரம்பிக்குறது எல்லாம் நீங்க. கடைசியில அவ மேல பழிய போட்டு அப்பாவியாக பார்க்காதீங்க. அன்னைக்கு அவ பத்து நிமிஷம் தான் கேட்டா. நான் எக்ஸ்ப்ளைன் பண்ணுறேன்னு கெஞ்சும் போது கேட்காம மோதிரத்த தூக்கி போட்டுட்டு உறவ முறிச்சுட்டு போயிட்டீங்க.

 

நீங்க எக்ஸ்ப்ளைன் கேட்கலனு உங்கள திட்டல. நீங்க கேட்காம பிடிவாதமா போறதுக்கு உங்களுக்கு ஒரு காரணம் இருந்துருக்கும். அந்த காரணத்தையாச்சும் அவ கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்.

 

எத்தனை மாசம் அந்த மோதிரத்தை பார்த்துட்டு அழுதுட்டே இருந்தானு எனக்கு தான் தெரியும். அதெல்லாம் விட நீங்க பாவம் இல்ல”

 

மஞ்சுளா இடைவெளியே விடாமல் பேசிவிட்டு அங்கிருந்து வெளியே வந்து விட்டாள்.

 

குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் வெளியேறியதும் மடிக்கணினியை மூடி விட்டு தலையை பிடித்துக் கொண்டான்.

 

அவனும் அன்று எதோ ஒரு கோபத்தை அவளிடம் காட்டி விட்டான்.

 

 

அன்று அவள் பேச வந்த போது “எனக்கு எந்த விசயமும் தெரிய வேணாம். நீ சைன் பண்ணியா இல்லையானு மட்டும் சொல்லு” என்று கேட்டான்.

 

அவள் மேலும் கீழும் தலையாட்டியதும் “நான் வேணாம்னு சொல்லிட்டா அத கேன்சல் பண்ணிடுவியா?” என்று கேட்டான்.

 

“இல்ல அர்ஜுன்.. நான் சொல்லுறத கேளு.. இங்க ப…”

 

“எனக்கு நியாயப்படுத்துற விளக்கம் வேணாம். செய்வியா மாட்டியா?”

 

“ஏய்…”

 

“செய்வியா ? மாட்டியா?”

 

“….”

 

“உன் சைலண்ட் ஆன்சர் பண்ணிடுச்சு. பட் உன் வாயால கேட்க ஆசை படுறேன். சொல்லு”

 

“என்னால அது முடியாது”

 

“சோ.. என்ன விட உனக்கு சினிமா அதிகமாக பிடிச்சு போச்சு”

 

“அர்ஜுனா.. ப…”

 

“வேணாம். இப்படி என்ன கூப்பிடாத. என்ன விட இந்த உலகத்துல உனக்கு எது முக்கியம்னு சொல்லி இருந்தாலும் நான் கவல பட்டு இருக்க மாட்டேன். ஆனா சினிமாவ முக்கியமா நினைச்சுட்டல”

 

“இல்லடா… அந்த வட்டிகாரன்…”

 

“எனக்கு தான் எதுவும் கேட்க பிடிக்கலனு சொல்லிட்டேன்ல” என்று அர்ஜுன் கத்த பயந்து போய் பார்த்தாள்.

 

“கடைசியா ஒரு வாய்ப்பு தரேன். நான் வேணுமா? இல்ல அந்த சினிமாவா?”

 

திவ்யா பதில் சொல்ல முடியாமல் கெஞ்சலோடு பார்த்தாள்.

 

“ஒரு பத்து நிமிசம் நான் சொல்லுறத கேளு”

 

“எனக்கு பதில் தான் வேணும்”

 

“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்குற?”

 

“நீயும் தான் அந்த சாக்கடை வேணும்னு பிடிவாதம் பிடிக்கிற”

 

“நான் அது வேணும்னு எங்க சொன்னேன்?”

 

“அப்போ வேணாம்னா நான் இல்லாதப்போ எனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சும் ஏன் சைன் பண்ண?”

 

“நான் தான் அதுக்கு ரீசன் சொல்லுறேன்னு சொல்லுறேன்ல”

 

“நீ ரீசன் சொன்னப்புறமும் நான் விட்ருனு சொல்லிட்டா விட்ருவியா?”

 

இதற்கு பதில் தெரியாமல் அம்ரிதா விழிக்க “ம்ம்… அப்போவும் உன் முடிவு மாறாதுனா அது அப்படியே இருக்கட்டும். எனக்கு காரணம் வேணாம்” என்றான்.

 

அம்ரிதாவின் கண்ணில் கண்ணீர் துளிர்க்க அந்நேரம் மஞ்சுளா வந்து சேர்ந்தாள்.

 

“ஹேய்.. ஐயோ.. கப்பில்ஸ் ரொமான்ஸ்ஸ டிஸ்டர்ப் பண்ணிட்டனா?” என்று கிண்டலும் கேலியுமாக கேட்டுக் கொண்டு மஞ்சுளா வந்தாள்.

 

“பட் உங்க ரொமான்ஸ்ஸ அப்புறம் வச்சுக்கோங்க. வெளிய ரொம்ப நேரமா நிக்கிறீங்கனு அம்மா கூட்டுட்டு வர சொன்னாங்க.‌ காத்து வேற ஓவரா அடிக்குது” என்று பேசிக் கொண்டே இருந்தவள் பதில் சொல்லாமல் நிற்கும் இருவரையும் அப்போது தான் கூர்ந்து பார்த்தாள்.

 

அம்ரிதாவின் கண் கலங்கி இருக்க “என்னடா சண்டை போட்டீங்களா?” என்று கேட்டாள்.

 

“இனி சண்டை போட எதுவும் இல்ல. “

 

“அப்படினா?”

 

அர்ஜுன் அம்ரிதாவை ஒரு நொடி பார்த்தான். பிறகு அவளது கையை தூக்கி விரலில் இருந்த மோதிரத்தை கலட்டி விட்டான்.

 

மஞ்சுளாவும் அம்ரிதாவும் பதற தன்னுடைய விரலில் இருந்ததையும் கலட்டினான்.

 

“இந்த நிமிசத்துல இருந்து நீ யாரோ நான் யாரோ” என்றவன் வேகமாக தூக்கி எறிந்து விட்டான்.

 

“ஏய்.. ” என்று மஞ்சுளா கத்த அம்ரிதா அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டாள்.

 

“இனி உன்ன பார்க்க எனக்கு விருப்பம் இல்ல. இங்க வரவும் மாட்டேன். நம்ம கல்யாணமும் நடக்காது. குட் பை” என்றவன் வேகமாக திரும்பி வீட்டுக்குள் சென்று விட்டான்.

 

“டேய் லூசு” என்று கத்திக் கொண்டே அவன் பின்னால் போகப்போன மஞ்சுளாவை அம்ரிதா பிடித்துக் கொண்டாள்.

 

வீட்டுக்குள் நுழைந்தவனை “சாப்பிட வாங்கனு கூப்பிடுறேன். வெளியவே நின்னுட்டு இருக்கீங்க. உட்காரு.. சாப்பாட எடுத்து வைக்கிறேன்” என்று அன்பரசி நிறுத்தினார்.

 

“இல்ல அத்த.. நான் ஊருக்கு கிளம்புறேன். மாமா கிட்ட சொல்லிடுங்க. சாரி அத்த” என்று கூறி விட்டு வேகமாக சென்று விட்டான்.

 

தன் உடமைகளை வேகமாக எடுத்துக் கொண்டவன் அப்போதே ஊரை விட்டுச் சென்று விட்டான்.

 

ஆனாலும் அம்ரிதா வருவாள். தன்னை போக விடாமல் தடுப்பாள். அந்த சினிமா வேண்டாம் நீ தான் வேண்டும் என்று சொல்லுவாள் என்று நம்பினான். ஊர் எல்லைக்கு போகும் வரை கூட அவளை எதிர் பார்த்துக் கொண்டே இருந்தான்.

 

அவள் வராமல் அவனை ஏமாற்றி விட கோபத்துடனே கிளம்பிச் சென்று விட்டான்.

 

ஆனால் அவன் அந்த பக்கம் சென்றதுமே “எனக்கு அந்த மோதிரம் வேணும் மஞ்சு.. தேடு” என்று மஞ்சுளாவிடம் கூறிய அம்ரிதா தேட ஆரம்பித்து விட்டாள்.

 

மஞ்சுளாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இப்போது கோபமாக சென்ற அர்ஜுனை பிடித்து பேசுவதா இல்லை அம்ரிதாவுடன் மோதிரங்களை தேடுவதா?

 

அவள் குழம்பிப் போய் நிற்க அவளை பற்றி கவலையே இல்லாமல் கண்ணை துடைத்துக் கொண்டு அம்ரிதா மோதிரங்களை தேடிக் கொண்டிருந்தாள்.

 

“அம்ரு.. அம்ரு.. சொல்லுறத கேளு.. இருட்டுல தேடுனா கிடைக்காது.. காலையில தேடிக்கலாம்”

 

மஞ்சுளா எவ்வளவோ சொல்லியும் அம்ரிதா கேட்பதாக இல்லை. அதற்குள் உள்ளே இருந்து அன்பரசி வந்தார்.

 

“என்ன ஆச்சு? ரெண்டு பேருக்கும் பிரச்சனையா? அர்ஜுன் ஊருக்கு கிளம்பி போறானே”

 

“என்னது!” என்று மஞ்சுளா அதிர அதை கேட்டு ஒரு நொடி நின்ற அம்ரிதா மீண்டும் தேட ஆரம்பித்து விட்டாள்.

 

“இவ என்னத்த தேடிட்டு இருக்கா?”

 

“இவள விடுங்க. நாம அவன பிடிச்சு நிறுத்தலாம் வாங்க”

 

“போயிட்டான் மா.. நான் கூப்பிட்டே இருக்கேன் திரும்பி கூட பார்க்காம போயிட்டான்”

 

மஞ்சுளா கவலையோடு அம்ரிதாவை பார்க்க கன்னத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே ஒவ்வொரு செடியாக விலக்கி தேடிக் கொண்டிருந்தாள்.

 

“முதல்ல என்ன தான் நடந்துச்சு? அத சொல்லு” என்று அன்பரசி கேட்க மஞ்சுளா தனக்கு தெரிந்ததை மட்டுமே கூறினாள்.

 

அன்பரசி அதிர்ந்து போய் வாசலில் அமர்ந்து விட்டார். பைத்தியம் பிடித்தது போல் மோதிரங்களை தேடிக் கொண்டிருக்கும் மகளை பார்க்க பார்க்க கண்ணீர் வந்தது.

 

“மஞ்சு அவள கூப்பிடு.. காலையில தேடிக்கலாம்”

 

“சொல்லிட்டேன்மா. கேட்கவே மாட்டுறா..”

 

அன்பரசி வேகமாக எழுந்து வந்து அமர்ந்து இருந்தவளை பிடித்து எழுப்பினார்.

 

“போதும் காலையில தேடிக்கலாம். உள்ள வா”

 

“நான் வரல.. நீங்க போங்க”

 

“அம்ரு சொன்னா கேளு..”

 

“நீஙக போங்க.. நான் வரல” என்றவள் கையை உதறி விட்டு மீண்டும் தேட ஆரம்பித்தாள்.

 

“இப்போ உள்ள வரப்போறியா இல்லையா?”

 

“…”

 

“உன்ன தான்.. வரியா இல்லையா?”

 

“உங்களுக்கு ஏன் புரிய மாட்டிது.. எனக்கு அந்த மோதிரம் வேணும்” என்று கத்தினாள்.

 

அன்பரசி அதிர்ந்து போய் பார்க்க “ம்மா.. ப்ளீஸ் மா.. எனக்கு அது வேணும். இங்க தான்மா போட்டான். இங்க தான் இருக்கும். நான் எடுக்காம வர மாட்டேன்” என்று கெஞ்சியவள் அதற்கு மேல் பேசவில்லை.

 

காற்று வேறு ஈரப்பதத்தோடு வீசிக் கொண்டிருக்க அவளது உடல் குளிரில் நடுங்கியது. அதையும் பொருட்படுத்தாமல் தேடிக் கொண்டே இருந்தாள்.

 

மஞ்சுளா டார்ச்சை எடுத்து வந்து கொடுத்தாள். அதை வைத்து தேடிக் கொண்டிருக்க மஞ்சுளாவும் அன்பரசியும் கூட தேடினர். எதோ கல்லை மிதித்து அன்பரசி தடுமாறி விட மஞ்சுளா அவரை அழைத்து வந்து ஓரமாக அமர வைத்தாள்.

 

இரவு நகர நகர குளிர் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அம்ரிதாவின் தந்தை உள்ளே இருந்து அழைக்க அன்பரசி சென்று விட்டார். மஞ்சுளா தேடி ஓய்ந்து முடியாமல் ஒரு இடத்தில் அமர்ந்து விட்டாள்.

 

இடையில் யார் என்ன சொன்ன போதும் அம்ரிதா ஒப்புக் கொள்ளவில்லை. கண்டுபிடித்தே தீருவேன் என்ற உறுதியில் இருந்தாள்.

 

ஆனால் விடியும் நேரம் வந்தும் கிடைக்கவில்லை. அதற்கு மேல் தேட பலமில்லாமல் அமர்ந்து விட்டவளுக்கு அழுகை தான் அதிகமாக வந்தது.

 

அழுது கொண்டிருந்தவளை உள்ளே அழைத்துச் சென்றனர். அறைக்குள் அடைந்து அழுது கொண்டிருந்தவள் அவளாகவே தூங்கி விட்டாள்.

 

தூங்கி எழும் போது காய்ச்சல் வந்திருந்தது. அப்போதும் தேடுவேன் என்று அடம்பிடிக்க எல்லோரும் திட்டவும் முடியாமல் வருத்தப்படவும் முடியாமல் நொந்து போயினர்.

 

அந்நேரம் வந்து லெனின் அர்ஜுன் கிளம்பிச் சென்று விட்டதாக கூற அதை கூட அம்ரிதா கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு அந்த மோதிரங்கள் தான் பெரிதாக இருந்தது.

 

அதை தேடப்போவதாக கூற லெனின் நன்றாக திட்டி விட்டான். அர்ஜுனை மொத்தமாகவே மறந்துவிடு என்று கூட கூறி விட்டான்.

 

அப்போதும் அடம்பிடித்து மீண்டும் தேட வேண்டும் என்றாள். காய்ச்சல் சரியாகி விட்டால் தேடிக் கொள் என்று கூறி விட்டனர். மாலை காய்ச்சல் ஓரளவு சரியாக மீண்டும் தேடினாள். இரவுக்கு முன் இரண்டு மோதிரங்களுமே கிடைத்து விட்டது.

 

தண்ணீருக்குள் மூழ்கி இருந்த மோதிரங்கள் காலை வெயிலில் தண்ணீர் காய்ந்து விடவும் கிடைத்து விட்டது.

 

அது கிடைத்ததும் அவள் அழுத அழுகையை யாராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

 

அதன் பின்பே என்ன நடந்தது என்று கூறினாள்.

 

“நான் வேணாம்னு போயிட்டான். நான் அவன விட சினிமாவ பெருசா நினைக்கிறேனாம். இனி பார்க்க வர மாட்டானாம். இந்த கல்யாணமே நடக்காதுனு சொல்லிட்டு போயிட்டான். நான் எங்க அவன விட சினிமாவ பெருசா நினைச்சேன்? ஒரு பத்து நிமிசம் நான் விளக்கிச் சொல்லுறேன்னு கேட்டேன். கடைசி வர பேசவே விடல. நான் ஆசை பட்டா நடிக்க சம்மதிச்சேன்? ஆனா முடிஞ்சது.. எல்லாமே முடிஞ்சது”

 

அம்ரிதா அதற்கு பிறகு பல நாட்கள் அழுதுக் கொண்டிருந்தாள். படப்பிடிப்பு ஆரம்பித்து அவளது பெயர் திவ்யான்ஷியாக மாறிய பின் இன்று வரை கண்ணீர் விட்டதில்லை.

 

இதை பற்றி அறியாமல் அவள் தன்னை தேடி வரவில்லை என்று மொத்தமாக கிளம்பிச் சென்று விட்டான் அர்ஜுன். அவனுடன் தொடர்பில் இருந்தது லெனின் மட்டுமே. வேறு யாரிடமும் அவன் பேசவில்லை.

 

அன்று சென்றவன் அம்ரிதாவின் தந்தை இறந்த போது மீண்டும் வந்தான். அப்போது திவ்யாவிடம் பேசி விட்டு சென்று விட்டான்.

 

அதன் பின்பு இப்போது தான் வந்து நிற்கிறான். வந்ததும் நிச்சயத்தை பற்றிய பேச்சை எடுத்தால்? திவ்யாவிற்கு கோபம் வந்ததை விட மஞ்சுளா விற்கு தான் கோபம் அதிகமாக வந்தது.

 

அதற்கு தான் மொத்தமாக பேசி விட்டு சென்றாள்.

 

வேகமாக மஞ்சுளா இறங்கி வர திவ்யா அர்ஜுனுக்கு என்ன உணவை சமைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

மஞ்சுளாவை பார்த்ததும் “என்ன நலந்தானானு கேட்டுட்டு வந்தாச்சா?” என்று சிரித்தாள்.

 

“கேட்டாச்சு கேட்டாச்சு. சரி நான் கிளம்புறேன்”

 

“பார்த்து போயிட்டு வா டாடா” என்று கையாட்டினாள். மஞ்சுளா கிளம்பியதும் திவ்யா தன் வேலையை பார்க்கச் சென்று விட்டாள்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
4
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. 💞 சரியான திமிரு புடிச்சவன் .எதையுமே சரியா பேசாம லூசு மாதிரி போய்டு இப்போ வந்து எக்ஸ் ஒய்யுன்னு பேசுது பக்கி

      💞 அப்போ இதுல அம்ரு தான் பாவமா

      💞இவனை எல்லாம் மாடி மேல் இருந்து இல்லை மலையுச்சியில் இருந்து தள்ளி விடனும் 😜😜😜

      💞👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌💐💐💐💐 சூப்பர் டா ஹனி

      1. Author

        அதையும் செஞ்சுடுவோம் 🤣🤣

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.