மாலை தாமதமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் திவ்யாவும் மஞ்சுளாவும். மூன்று நாள் படப்பிடிப்பு தடை பட்ட காரணத்தால் இன்று நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது. திவ்யா ஓய்ந்து போய் இருக்கையில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்.
மஞ்சுளா வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென எதோ ஞாபகம் வந்தது போல் திரும்பினாள்.
“ஹேய். கேட்க மறந்துட்டேன்.. காலையில என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”
“எத கேட்குற?”
“நீயும் அர்ஜுனும்… நான் உள்ள வரும் போது தண்ணிக்குள்ள விழுற சத்தம் தான் கேட்டது.. ஓடி வந்து பார்த்தா நீ தண்ணிய விட்டு வெளிய வர்ர பின்னாடியே அர்ஜுனும் வர்ரான்”
“ப்ச்ச்... ஒரு சண்டை”
“ஓ… வீட்டுக்கு போனதும் விளக்கமா சொல்லனும்” என்று மிரட்டலாக கூறி விட்டு அமைதியானாள்.
வீடு வந்து விட திவ்யா இறங்கி நடந்தாள். அவளோடு மஞ்சுளாவும் சேர்ந்து கொண்டாள்.
“இப்ப சொல்லு .. ” என்று மஞ்சுளா கேட்க “அதான் சொன்னனே சண்டனு..” என்றாள்.
“ஸ்விம்மிங் பூல் குள்ள சண்டை போட்டீங்களா?”
“இல்ல சண்ட வந்து ஸ்விம்மிங் பூல் குள்ள நான் தான் பிடிச்சு தள்ளி விட்டேன்”
“அடிப்பாவி.. அப்புறம் எப்படி நீ நனைஞ்ச?”
“வெளிய வந்து என்னயும் சேர்த்து தண்ணிக்குள்ள இழுத்துட்டு போயிட்டான்”
“ஓ… இதுக்கு பேர் தான் ஜலக்கிரீடையா” என்று மஞ்சுளா சிரிக்க திவ்யா முறைத்துப்பார்த்தாள்.
“என்ன சண்ட? ஏன் தள்ளி விட்ட?”
“ப்ச்ச்.. நான் பாட்டுக்கு காபி குடிச்சுட்டு நின்னுட்டு இருந்தேன். வந்து பேசுனான். சரினு நானும் பாலன பார்த்த விசயத்த சொல்லி வெறுப்பேத்துனேன். என்ன மட்டும் வெறுப்பேத்திட்டு போனவன் நான் வெறுப்பேத்தவும் ஓவரா பொங்குறான். செத்தாலும் என்ன மன்னிக்க மாட்டானாம். அதான் செத்துப்போனு மாடியில இருந்து தண்ணில தள்ளி விட்டேன்”
“அடியே… அறிவிருக்கா? கோபம் வந்தா மாடியில இருந்து தள்ளி விட்ருவியா? லூசா நீ?”
“ப்ச்ச்… அதெல்லாம் அவன் பல தடவ கிணத்துல குதிச்சு குளிச்சு இருக்கான்”
“ஜஸ்ட் மிஸ்ஸாகி இருந்தாலும் என்ன ஆகி இருக்கும். பைத்தியமா நீ ? கோபம் வந்தா எதையும் யோசிக்க மாட்டியா? மன்னிக்க மாட்டேன்னு சொன்னா நீ மன்னிக்க வேணாம் போடானு சொல்லிட்டு போக வேண்டியது தான.. கிறுக்கு மாதிரி தள்ளி விட்ருக்க”
“மஞ்சு அவன் என்ன சும்மா கோபப்படுத்தி இருந்தா பதிலுக்கு திட்டிட்டு அத அப்படியே மறந்துருப்பேன். ஆனா அவன் எந்த விசயத்த எடுத்தான் தெரியுமா? அப்போ என் மனசுல என்னன்ன தோனுச்சு தெரியுமா?”
“அதையும் சொல்லு கேட்குறேன்”
“அவன நிச்சயம் பண்ணிட்டு நாலு பாய் ஃப்ரண்ட் கூட நான் சுத்துறனாம்.”
“என்னது…! என்ன.. என்ன சொன்னான்?”
“உனக்கும் சாக்கா இருக்குல… அப்படி தான்டா சுத்துவேன். அத கேட்க உனக்கு உரிமையில்லனு சொல்லனும்னு தோனுச்சு. என்ன பார்க்க வெறுப்பா இருக்காம். ஆமா எனக்கும் உன் மூஞ்சிய பார்க்க பிடிக்கலனு காபிய தூக்கி மூஞ்சில ஊத்திருப்பேன். ஆனா அந்த மூஞ்சிய தான எனக்கு ரொம்ப பிடிச்சு தொலச்சுருக்கு.”
“எவ்வளவு தைரியம் இருந்தா நிச்சயத்த பத்தி பேசிருப்பான். இரு இன்னைக்கு அவன நான் கேட்குறேன்” என்று பல்லைக் கடித்த மஞ்சுளா வேகமாக அர்ஜுன் அறைப்பக்கம் சென்று கதவை தட்டினாள்.
மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டே இருக்க முழுதாக ஒரு நிமிடம் கடந்த பின்பே கதவை திறந்தான்.
“என்ன மஞ்சு?”
“என்ன என்ன மஞ்சு? உங்க மனசுல என்ன சார் நினைச்சுட்டு இருக்கீங்க? கேட்க ஆளு இல்லனா?”
“என்னாச்சு?”
“எவ்வளவு தைரியம் இருந்தா திவ்யா கிட்ட நிச்சயத்த பத்தி பேசி இருப்பீங்க?”
அர்ஜுன் அமைதியாகி விட்டான்.
“சொல்லுங்க சார்.. எந்த தைரியத்துல அவ கிட்ட நிச்சயத்த பத்தி பேசுனீங்க? உங்களுக்கும் அவளுக்கும் நிச்சயம் ஆனதுக்கு ஆதாரம் எதுவும் இருக்கா? இருந்தா கொஞ்சம் காட்டுங்களேன்”
அர்ஜுனுக்கு பேச முடியவில்லை. பார்வையை தளர்த்திக் கொண்டு கதவில் சாய்ந்து நின்றான்.
“என்ன பேச்ச காணோம்? நான் சொல்லட்டா? உனக்கு எனக்கும் சம்பந்தம் இல்ல. இனி இந்த கல்யாணம் நடக்காது. இனி உன்ன பார்க்க கூட விருப்பம் இல்லனு சொல்லி ரெண்டு பேரு கையில இருந்த மோதிரத்தயும் கலட்டி வீசிட்டு போனது நீ… சாரி நீங்க. ஞாபகம் இருக்கா?”
அர்ஜுனால் அதை மறக்க முடியுமா என்ன? வலி தாங்க முடியாமல் இமையை அழுத்தமாக மூடிக் கொண்டான்.
“அப்படி தூக்கி எறிஞ்சுட்டு போயிட்டு இத்தனை வருசம் கழிச்சு வந்து அந்த நிச்சயம் பத்தி பேச யார் உரிமை கொடுத்தது? கேட்க ஆளு இல்லனா எத வேணா பேசலாம். என்ன வேணா செய்யலாம்னு நினைப்பா?”
“இல்ல மஞ்சு… அவ அந்த டைரக்டர் பத்தி பேசுவும்… அப்படியே எல்லா கோபமும் மொத்தமா வந்துடுச்சு.. அதுல தான் அப்படி பேசிட்டேன்”
“முதல்ல நீ தான பாலன் சார் பேச்ச ஆரமபிச்ச. அப்புறம் அவ பேசுனா கோபம் வருதோ… இப்பவும் உனக்கு உன் கோபம் உன் ஹர்ட் தான் பெருசு. அவ படுற கஷ்டம் உன் கண்ணுக்கு தெரியல.. நானும் உங்க சண்டைக்குள்ள வர கூடாதுனு பார்க்குறேன்.. ஓவரா போறீங்க”
“இல்ல மஞ்சு…” என்றவன் பாதியில் பேச்சை நிறுத்தி விட்டு தலையை பிடிக்க மஞ்சுளாவின் மொத்த கோபமும் பறந்து போனது.
“ஹேய் என்னாச்சு..” என்று பதட்டத்தோடு அவனருகே சென்றாள்.
அதை கேட்டதுமே திவ்யா வெளியே ஓடி வந்தாள். இவ்வளவு நேரம் தன் அறையின் வாசலில் தான் நின்று இருந்தாள்.
“அர்ஜுன் .. அர்ஜுன்” என்று இருவரும் கூப்பிடும் குரல் கேட்டும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. சில வினாடிகளில் அவன் மயங்கிச்சரிய இரு பெண்களும் அவனை தாங்கிப்பிடித்தனர்.
உதவிக்கு ஆளை அழைத்து அவனை மெத்தையில் படுக்க வைத்தனர். தண்ணீரை தெளித்து எழுப்பப் பார்த்தனர். எந்த அசைவும் இல்லாமல் இருந்தான். திவ்யா அவனது தலையை தொட்டு பார்த்து விட்டு “ஃபீவர் மஞ்சு… என்ன இப்படி கொதிக்குது” என்று அதிர்ந்தாள்.
“ஆமா.. டாக்டருக்கு போன் பண்ணுறேன் இரு” என்று மஞ்சுளா அங்கிருந்து சென்று விட்டாள்.
சமையல் செய்யும் பெண்ணை அழைத்த திவ்யா “அர்ஜுன் எதுவும் சாப்பிட்டாரா?” என்று கேட்டாள்.
“இல்லமா… காலையில காபி வேணும்னு கேட்டார். அப்புறம் கீழ இறங்கி வரவேயில்ல. கதவ தட்டுனப்போ சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டார்”
“காய்ச்சல் ரொம்ப இருக்கு.. கஞ்சி எதாவது பண்ணு.. டாக்டர் வந்துப்புறம் கேட்டுட்டு கொடுக்கலாம்”
அந்த பெண் வேகமாக இறங்கிச் சென்று விட மஞ்சுளா வந்தாள்.
“டாக்டர் பக்கத்துல தான் இருக்காராம். பத்து நிமிசத்துல வந்துடுறேன்னு சொன்னார்”
“ம்ம்” என்று கேட்டுக் கொண்டவள் அர்ஜுனின் மீது இரண்டு போர்வையை போர்த்தி விட்டாள். சன்னல் பால்கனி கதவு எல்லாவற்றையும் அடைத்து விட்டு அருகில் வந்து அமர்ந்தாள்.
“திடீர்னு ஏன் காய்ச்சல் வந்து கிடக்குறான்? சாப்பிடவே இல்லையாம். அந்த பொண்ணு சொல்லிட்டு போகுது” என்று திவ்யா கவலையாக பேசினாள்.
“உன்ன தான் அதுக்கு திட்டனும்”
“என்னையா?
“ஆமா பின்ன? நீ தான தண்ணிக்குள்ள பிடிச்சு தள்ளி விட்ட?”
“ஹேய்… இவனுக்கு நீச்சல் நல்லா தெரியும். ஊர்ல கிணத்துல நிறைய தடவ குதிச்சு குளிச்சுருக்கான்”
“அதுவும் நீ தள்ளி விட்டதும் ஒன்னா? நாமலா குளிக்கனும்னு குதிக்குறது வேற.. இப்படி தள்ளி விட்டு தண்ணில விழுந்த சாக் வேற.. அந்த சாக்லயே காய்ச்சல் வந்துருக்கும்”
“இவனும் தான் என்ன தள்ளி விட்டான்”
மஞ்சுளா உடனே முறைத்து பார்க்க “ஓகே.. ஓகே.. என் மேல தான் தப்பு.. எந்திரிச்சதும் சாரி கேட்குறேன் போதுமா? இப்போ டாக்டர் வந்தா ட்ரீட்மெண்ட் என்னனு கேட்ப்போம். இல்லனா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம் சரியா?” என்று இறங்கி வந்தாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அர்ஜுனுக்கு மயக்கம் தெளிந்தது. ஆனால் காய்ச்சல் வேகத்தில் எதையோ தனக்குள் புலம்பினான். அதை கேட்க முயற்சி செய்தும் இருவருக்கும் எதுவும் புரியவில்லை. திவ்யா அவனை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்க மருத்துவர் வந்து சேர்ந்தார்.
அவனை பரிசோதித்து விட்டு மருந்துகளை எழுதி கொடுத்தார்.
“நைட்க்குள்ள ஃபீவர் குறைஞ்சதுனா சரி.. இல்லனா ஹாஸ்பிடல்ல சேர்த்துக்கலாம்” என்று கூறி விட்டார்.
மாத்திரை கொடுத்து விட்டு ஊசியும் போட்டு விட்டார். மேலும் சில மருந்துகளை வாங்கச் சொல்லி எழுதிக் கொடுத்தார்.
“எதுவும் சாப்பிடல.. அதான் மயங்கிட்டாரு.. எதாவது கஞ்சியோ பாலோ கொடுத்துட்டு அப்புறம் மாத்திரை கொடுங்க.. பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல” என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.
சமையலறையிலிருந்து கஞ்சி வந்து விட “ஊட்டி விடு.. ” என்று மஞ்சுளா அதட்டினாள்.
“தெரியும். நீ முதல்ல கிளம்பு.. ரொம்ப நேரம் ஆகிடுச்சு. சாப்பிட்டு போ”
“வேணாம். நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன். நீ சாப்பிட மறந்துடாத..”
“பசிக்கல”
“அப்போ பால் கொண்டு வந்து கொடுக்க சொல்லுறேன். குடி.. நைட் இவன் கூடவே இரு.. காலையில ஃபீவர் போகல.. உன்ன கொன்னுடுவேன்” என்று மிரட்டி விட்டு மஞ்சுளா சென்று விட்டாள்.
“இவன் ஃபீவர் போகலனா என்ன கொல்லுவாளாம். டாக்டராலயே அது முடியாது. இவன் உடம்பு தான ரியாக்ட் பண்ணனும். டேய்.. அர்ஜுனா.. எந்திரிடா.. டேய்..” என்று உலக்கியவள் அவன் கண்ணை திறந்ததும் தூக்கி அமர வைக்க பார்த்தாள். அவன் சரியாக அமர முடியாமல் சாய அருகில் அமர்ந்து தன் மேல் சாய்த்துக் கொண்டாள்.
“இத குடிச்சுட்டு டேப்ளட் போடு.. அப்போ தான் காய்ச்சல் போகும்” என்றவள் தானே ஊட்டி விட்டாள். அவனும் அரை மயக்கத்திலேயே சாப்பிட்டான்.
“அம்மு… அம்மு..”
“அம்மு தான்.. இங்க தான் இருக்கேன்.. பேசாம சாப்பிட்டு தூங்கு.. இல்லனா ஹாஸ்பிடல் போகனும்”
“சாரிடி”
திவ்யா இதை கேட்டதும் அதிர்ந்து போய் பார்த்தாள். உடனே “ம்க்கும்.. ஃபீவர் உளற வைக்குது.. நல்ல நிலைமையில இருந்தா இதெல்லாம் எங்க சொல்ல போற.. வாய திற” என்றாள்.
பாதி கஞ்சியை குடித்ததும் அவன் கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பிக்க “டேய்.. இருடா.. டேப்ளட் போடனும்” என்று உலுக்கி தண்ணீரை வாயில் ஊற்றி மாத்திரையை திணித்தாள்.
அவனும் அதை முழுங்கிக் கொண்டான். நன்றாக படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டாள். சமையல் பெண்ணை பாத்திரங்களை எடுத்துப்போகச் சொல்ல அவள் மஞ்சுளா சொன்னது போல் பாலோடு வந்து நின்றாள்.
வேறு வழியில்லாமல் அதை குடித்து விட்டு அர்ஜுன் அருகே நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தாள்.
“ம்ம்.. உன் மேல இருக்க காண்டுக்கு எப்படியோ போடானு சொல்லிட்டு போகனும். ஆனா போகத்தான் முடியல. இப்போ சொன்ன சாரிய வந்ததும் சொல்லி இருந்தா எவ்வளவோ நல்லா இருந்துருக்கும். எதுவுமே வேணாம்னு நீயே முடிவு பண்ணிட்டு போயிட்டு இப்போ… சரி விடு.. இப்ப என்ன சொன்னாலும் உனக்கு புரிய போறது இல்ல.”
தனக்குத்தானே பேசி விட்டு கன்னத்தில் கை வைத்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதிக வேலை அவளை தூக்கத்தின் பக்கம் இழுத்துச் செல்ல அமர்ந்த நிலையில் மெத்தையில் படுத்து உறங்கி விட்டாள்.
இரவு திடீரென முழிப்பு வர எழுந்து அவசரமாக அர்ஜுனை பார்த்தாள். அவள் படுக்க வைத்தது போலவே படுத்து இருந்தான். தலையை தொட்டு பார்க்க காய்ச்சல் குறைந்து இருந்தது.
ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டவள் எழுந்து சென்று அந்த அறையில் இருந்த சிறிய சோபாவில் படுத்து தூங்கி விட்டாள்.
காலை ஆறு மணிக்கு எழுந்தவள் அர்ஜுனை திரும்பி பார்த்தாள். நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். காலை மடக்கி படுத்திருந்ததால் உடனே எழ முடியவில்லை. பொறுமையாக எழுந்து வந்து நெற்றியை தொட்டுப்பார்த்தாள். காய்ச்சல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது.
“தாங்க் காட்” என்றவள் மருத்துவரை அழைத்து விசயத்தை கூறினாள். அவரிடம் பேசி விட்டு வர அர்ஜுன் தூக்கத்திலிருந்து விழித்தான்.
“சார்… என்ன சார்.. தூக்கம் போயிடுச்சா சார்?”
திவ்யா நக்கலாக கேட்டு விட்டு கை கட்டிக் கொண்டு நிற்க அர்ஜுன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
“என்ன முழிக்கிற ? எங்கயும் வலிக்குதா?”
அவள் கேட்டப்பின்பே உடலில் இருந்த வலியை உணர்ந்தான்.
“ம்ம்…”
“அப்போ திரும்ப தூங்கு.. சாப்பாடு கொண்டு வர சொல்லுறேன். சாப்பிட்டு வீட்டுலயே இரு”
“என்ன ஆச்சு?” என்று கேட்டவனுக்கு கடைசியாக மஞ்சுளா திட்டியது தான் ஞாபகம் இருந்தது.
“என்ன ஆச்சா? ஏன் எல்லாம் மறந்துடுச்சா?”
“இல்ல.. லாஸ்ட்டா மஞ்சு திட்டுனா அப்புறம் தலை சுத்துச்சு..”
“அப்படியே மயங்கி விழுந்துட்ட… ஏன்டா ஏழு கழுத வயசாகுது.. காய்ச்சல் வந்தா ஹாஸ்பிடல் போகனும் டேப்ளட்ஸ் எடுத்துக்கனும்னு கூடவா தெரியாது? எட்டு வருசமா எப்படி தான் தனியா இருந்தியோ”
“மயங்கிட்டனா? ஏன்?”
“காலையில இருந்து எதுவுமே சாப்பிடலல.. அதான்”
அர்ஜுனுக்கு இப்போது புரிந்து விட்டது. காய்ச்சலோடு சாப்பிடாமலே இருந்தது அவனை மயக்கத்திற்கு தள்ளி விட்டது. காலையிலேயே காய்ச்சலை உணர்ந்து விட்டான். ஆனால் காபியை குடித்து விட்டு தூங்கினால் சரியாகிப்போகும் என்று இருந்து விட்டான்.
இப்போது எழுந்து அமர “லெனின் இன்னும் ஒரு மணி நேரத்துல வருவாங்க. உன் வேலைய வீட்டுல இருந்தே பாரு.. டாக்டர் வெளிய போக கூடாதுனு சொல்லிட்டாரு. ரெஸ்ட்ல இருந்தா காய்ச்சல் போயிடும். இல்லனா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும். அப்புறம் உன் இஷ்டம். நான் போய் கிளம்புறேன்.” என்றவள் வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
அர்ஜுன் எழுந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு அமர சூடாக பால் வந்தது. அதை குடித்த அரைமணி நேரத்தில் மாத்திரையோடு திவ்யா வந்து நின்றாள்.
“இத போட்டுக்கோ.. ” என்று நீட்ட அர்ஜுன் மறு பேச்சு இல்லாமல் வாங்கி சாப்பிட்டான்.
“நான் கிளம்புறேன். டேப்ளட்க்கு நல்லா தூக்கம் வரும். தூங்கு. லெனின் வந்தா பார்த்துக்க.. பை.. அப்புறம் சாப்பிட கொண்டு வந்தா சாப்பிடு.. வேணாம்னு சொன்ன அடுத்த நிமிஷம் ஹாஸ்பிடல்க்கு தூக்கிட்டு போக சொல்லிடுவேன்”
பேசுவதை எல்லாம் பேசி விட்டு அவள் செல்ல “நில்லு” என்றான்.
“என்ன?”
“மஞ்சு எங்க?”
“அவ இன்னும் வரல.. எதோ வேலை போல.. நேரா சூட்டிங் நடக்குற இடத்துக்கு வர சொல்லிட்டேன்”
“வந்தா என்ன பார்க்க சொல்லு”
“ஏன் திரும்ப திட்டு வாங்க ஆசையா இருக்கா?”
“ப்ச்ச்.. அத நான் பார்த்துக்கிறேன். நீ சொன்னத செய்”
திவ்யா தோளை குலுக்கி விட்டு வெளியே வந்து விட்டாள்.
அவளுக்கு வேலை குறைவாக இருந்தால் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்திருப்பாள். ஆனால் மூன்று நாள் தாமதத்தால் அதிக வேலை மிச்சம் இருக்க அவளால் இருக்க முடியாது. அதனால் லெனினை உதவிக்கு அழைக்க அவனும் உடனே வருவதாக கூறி விட்டான்.
சில நிமிடங்கள் கழித்து அர்ஜுனின் அறையை எட்டிப்பார்த்தாள். திரும்பவும் தூங்கிக் கொண்டு இருந்தான். பிறகு அறைக்கு வெளியே நின்று இருந்தாள்.
லெனின் வந்ததும் அவனிடம் மருந்துகளை சொல்லி விட்டு அதன் பிறகே கிளம்பிச் சென்றாள். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் மஞ்சுளா அவளுக்காக காத்திருந்தாள். அவள் தாமதமாக வருவதால் முதலில் சென்று அங்கிருப்பவர்களை சமாளிக்கச் சொல்லி கூறி இருந்தாள்.
தாமதமாக வந்தால் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடும். அது அவளுக்கு பிடிக்காது.
“என்ன அர்ஜுன் ஓகே வா?”
“ம்ம்.. ஃபீவர் தான் போயிடுச்சே… லெனின் இனி பார்த்துப்பார். நாம வேலைய சீக்கிரமா முடிச்சுட்டு வீட்டுக்கு ஓடுவோம்”
அதை ஆமோதித்த மஞ்சுளா உடனே வேலையை ஆரம்பித்து விட்டாள்.
தொடரும்.
💞போங்க டா டேய் பைத்தியங்களா 😜😜😜😜😜😜
😂😂😂😂
மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.