தணிக்கையும் ஏனோ? தளும்புதடி நெஞ்சம்!
“இயற்கையோடு இழையத் துடிப்பவளின்
இதயம் மட்டும் உறைந்து போனதன் காரணம் என்னவோ??!
கள்வன் அவனை நினைத்தா??
கடந்து விட்ட காலங்களை நினைத்தா?!”
விடியற்காலை பேருந்தில் கனத்த கைப்பையுடன் வந்திறங்கினாள் அவள்
எங்கே யாரையும் காணோமே இப்படி கனத்தை தூக்க விட்டுட்டாங்களே என்று சலித்தபடி முணகிக் கொண்டே நடப்பாள் என்று உடன் இறங்கிய ஓர் பெண்மணி நினைத்திருக்க…
அவளோ துள்ளிக் குதித்தபடி முகமெல்லாம் மலர ஊருக்கு செல்லும் ஒற்றையடி பாதையில் நடந்து கொண்டிருந்தாள்.
ஏதோ காணாததை கண்டுவிட்டவள் போல இமைகளுக்கு ஓய்வு கொடுத்து ஓர் பாடலை பாடிக்கொண்டே மெல்ல நடந்தவளை
அந்த பெண்மணியின் குரல் தடுத்து நிறுத்தியது.
ஏம்மா நீ இந்த ஊரா?
இல்லை
யாரு வீட்டுக்கும்மா வந்திருக்க..?
இப்படி விடியற்காலையில் ஐந்தரை மணிக்கு தனியா நடந்து போய்கிட்டுருக்க? என்ற கேள்விகளோடு.
அவள் நான் இந்த ஊருதான்மா..
வெளியூரில் படிக்கிறேன். விடுமுறைக்கு வீட்டுக்கு வர்றேன் என்றாள்
“உம் பேர் என்னம்மா?”
“உங்க அப்பா பேர் என்ன?”
என்று அடுத்த கேள்வியை வீசினார் பெண்மணி
அப்பா பெயர் ஏகாம்பரம்.
எங்க வீடு பஜனை கோயில் தெருவில் இருக்கு
என்று சொல்லிக் கொண்டே நடந்து கொண்டிருந்தவளை கைப்பற்றி நிற்க வைத்தார் அப்பெண்மணி
ஏய் நீ சங்கரி தானா…
எப்படி வளர்ந்துட்ட…
ஏதோ நர்ஸுக்கு படிக்கிறதா உங்கம்மா பார்வதி சொல்லிகிட்டு இருந்தா …
எனக்கு தான் நீ யாருன்னு சட்டுன்னு புரிபடல..
கழுத உனக்கு கூட நான் யாருன்னு அடையாளம் தெரியலையா..?
இரண்டு வருடம் பார்க்கலைன்னா தெரியாதா என்றாள் அப்பெண்மணி..
ஏன் தெரியாது… கல்யாணி அத்தையைப் போய் தெரியாதுன்னு சொல்லமுடியுமா என்று சிரித்தாள் சங்கரி.
பின்ன ஏண்டி நான் இவ்வளவு பேசறேன். யாரோ மூணாம் மனுஷங்ககிட்ட பேசறமாதிரி நடந்துக்கிட்ட என்றார் கல்யாணி..
சும்மா அத்தை.. விளையாட்டுக்குத்தான்..
மாமா எப்படி இருக்காங்க… அப்பஅப்புறம் உங்க வீட்டு ஐயனார்?என்றாள் சங்கரி
என் மகனை கேலி செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டாயா நீ என்று அவளின் காதுமடலைப் பிடித்து திருகிட
ஐயோ .. அத்தை ..
சும்மா தான் சொன்னேன் என்று சிணுங்கினாள் அவள்
பிறகு இப்ப சொல்லுங்க மாமா நல்லாயிருக்காரா?
எல்லாரும் நல்லா இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே எதிரே வந்த சங்கரியின் அண்ணனைக் கண்டதும் அவள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள்