Loading

அத்தியாயம் – 9

மணியும், மனோவும் அவர்களது சண்டையில் ராகவின் மானத்தை வாங்குவது அவனுக்குக் கடுப்படித்தது!

ஏதோ ஒரு வகையில் இனியாவது இந்த உறவைச் சீர்செய்யலாம் என்று அவன் நினைத்தால், அதற்கு மணியும், மனோவும் ஒத்துழைத்தால் தானே?

‘நானே கொம்புல இருந்து இறங்கி வந்தாலும், இதுங்க என்ன இறங்க விடமாட்டீங்குதுங்க..

டேய்.. இருங்கடா.. உங்கள விட வயசுல மூத்தவன் நான். என்னோட ஆட்டத்தைக் காண்பிக்கறேன்.. அப்பறம் தெரியும் என்ன பத்தி..’ என அவன் மனதுக்குள் சூளுரைக்க.. இங்கு அது தெரியாத மற்ற இருவருமோ இன்னமும் முறுக்கிக்கொண்டிருந்தனர்.

வீட்டுக்கு வந்து இறங்கியதும், வாசலில் வைத்து ராகவுக்கும், மணிக்கும் பாட்டி ஆரத்தி எடுக்க.. இந்தச் சீராட்டல் புதுமாப்பிள்ளைக்கானது என்று மனோ உணர்ந்தே இருந்தாலும் அவனுக்கு உள்ளுக்குள் காந்தியது.

“ஆமா.. அவன் மூச்சுக்கு முன்னூறு முறை இந்த வீட்டுலையே தான் குடியிருக்கான்.. என்னமோ இப்போ தான் முதன்முதலா இந்த வீட்டுக்கு அவன் வர மாதிரி ஆரத்தி எல்லாம் எடுக்கறீங்க?” என்று நொடித்துக் கொள்ள.. அவனைக் கிண்டலாகப் பார்த்த ராகவோ..

“அதெல்லாம் அப்படித் தான் தம்பி.. மாப்பிளைக்குக் கொடுக்கற மரியாதை. உனக்கு அதெல்லாம் தெரியாது!” என்று அவனது தோளைத் தட்டிவிட்டு அவன் உள்ளே செல்ல.. இப்பொழுது மனோவின் வயிறு எரிவதைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

உள்ளே வந்தவன், நேராக சோபாவில் அமர்ந்து எதிரே இருந்த டீப்பாயின் மீது காலை வைத்துவிட்டு..

“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஒரே டயர்டு பாட்டி..” என்று சோர்ந்தார் போலக் காண்பிக்க, பாட்டியோ..

“அய்யயோ.. என்னடா கண்ணா ரொம்ப டயர்டா இருக்கா..” என்று அவனைக் கொஞ்சிவிட்டு, மணியிடம்..

“ஏய் மணி.. ரமாகிட்ட புதுசா ஜூஸ் போடச் சொன்னேன். அவ போட்டுட்டாளான்னு பார்த்து, வாங்கிட்டு வந்து ராகவுக்குக் கொடு..” என்று பணித்துவிட்டு, அப்படியே மனோவிடம் திரும்பினார்.

“டேய் மனோ.. இங்க பார் ராகவுக்கு வேர்க்குது.. அந்த ஏ.சிய கொஞ்சம் அதிகப்படுத்து..” என்று அவனையும் ஏவ, மனோவுக்கோ அவனது பொறுமை.. கரையைக் கடக்கும் நிலையை எட்டியிருந்தது.

அதை ஓரக்கண்ணால் கவனித்தபடியே.. “ஹ்ம்ம்.. நீங்க என்ன தான் என்ன இப்படி கவனிச்சாலும், எனக்கு இந்த மாமனார் வீட்டுக்கு வந்த மாதிரியே பீல் ஆகல..” என்று ராகவ் சோகமாய் பெருமூச்செறிய, பாட்டியோ சற்று அதிர்ந்தார்.

“ஏண்டா கண்ணா இப்படி சொல்லற? உனக்கு யார் என்ன குறை வச்சாங்க?” என்று அவர் பதறியபடி கேட்க, ராகவோ மீண்டும் சோகமான முகத்துடனே..

“அதில்ல பாட்டி.. நான் இப்படி மணிய கல்யாணம் பண்ணாம, வெளில இருந்து பொண்ணு எடுத்திருந்தா, இந்நேரம் என்ன கல்யாணம் பண்ணின பொண்ணுக்கும் நான் அவளோட புருஷன்ற மரியாதை இருந்துருக்கும்.. பயம் இருந்துருக்கும்.. கொஞ்சம் பாசம் அதிகமாவே இருந்துருக்கும்..

அதைவிட, என் பொண்டாட்டியோட அண்ணனுக்கு.. ‘நம்ம மச்சாங்காரன், நம்ம தங்கச்சிய நல்லபடியா பார்த்துக்கணுமே..’ அப்படிங்கற அக்கறைலயாவது எனக்கு மரியாதை கொடுத்திருப்பான்.

ஆனா இங்க பாருங்க.. வெறும் ஆரத்தி எடுத்ததுக்கே.. இந்த மனோ இப்படி முகத்தைத் தூக்கி வச்சுகிட்டு நிக்கறான்..

“ஹ்ம்ம்.. இங்க நான் மாப்பிள்ளை மரியாதை எதிர்பார்க்கறதும் தப்பு.. மாமனார் வீட்டுல நிம்மதியா வந்து ரெண்டு நாள் தங்கியிருக்கலாம்னு நினைச்சதும் தப்பு..” என்று அவன் குரலில் சோகம் கொப்பளிக்கக் கூற, பாட்டிக்கோ மனம் பாகாய் உருகிவிட்டது.

அதிலும் திருமணம் முடிந்து இரண்டே தினங்களில் வீட்டு மாப்பிள்ளை இப்படி சலித்துக்கொண்டது, அவருக்கு மன வருத்தத்தைக் கொடுத்தது.

அதற்குக் காரணமான மானபரனைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார் அவர்.

“டேய்.. இத்தனை நாள் அவன் உனக்கு வெறும் மாமா பையன் தான். இப்போ உன் தங்கச்சியோட புருஷன்! இந்த வீட்டு மாப்பிள்ளை!

அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைய நாம் கொடுத்தா தான் நம்ம பொண்ணு அந்த வீட்டுல சந்தோஷமா இருப்பா.. பார்த்து நடந்துக்கோ..” என்று அவர் கூற, மானபரனின் வாய் இன்னமும் அடங்குவதாக இல்லை!

“பாட்டி.. என்னமோ அந்த ராகவ், உங்க அழகுமணிய கொடுமைப்படுத்தினா நீங்களும், உங்க மகன் – மருமகளும் அத கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கப்போற மாதிரியில்ல பேசிட்டு இருக்கீங்க?

அவன் இந்த வீட்டு மருமகனானதுக்கு ஒன்னும் கவலைப்படல.. உங்க பேத்தியைக் கல்யாணம் செய்துகிட்டான் இல்ல? அதுக்குத் தான் அவனுக்கு இத்தனை ஜோகம்..” என்று கிண்டலாகக் கூற, பாட்டிக்குச் சுறுசுறுவெனக் கோபம் பொங்கியது.

“இங்க பாரு மனோ.. நான் இப்போ சொல்லறது தான் கடைசி.. நீ ராகவுக்கு இந்த வீட்டு மாப்பிள்ளைன்ற மரியாதை கொடுக்கணும். அப்படி மட்டும் இல்லாம, அவன் இந்த மாதிரி இனியொரு முறை புலம்புறத நான் கேட்டேன்.. அப்பறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்..” என்று கூறிவிட்டுச் செல்ல, மனோவுக்கோ வெளிக்காட்ட முடியாத ஆத்திரம் வந்தது.

இதேபோலவே மறுபுறம் அழகுமணிக்கும் அர்ச்சனை விழுந்தது!

“ஒரே நாள்லயே அவன் உலகத்தையே வெறுத்த மாதிரி பேசறான். அப்படி என்னடி பண்ணின நீ அவனை?” என்று இவர் அவள் கன்னத்தை இடித்தபடி கேட்க, அதில்.. “ஆ..” என்று கத்திக்கொண்டே கன்னத்தைத் தடவிட்டவள்..

“உங்க பேரன நான் ஒன்னும் கடிச்சு முழுங்கல.. அவன் எதுக்கோ இப்படி சிம்பதி கிரியேட் பண்ணிட்டு இருக்கான்..

வேற எதுக்கு? இப்படி உங்ககிட்ட எனக்குத் திட்டு வாங்க வைக்கறதுக்குத் தான்.” என்று அவள் முகத்தைத் திருப்ப.. அவளது அந்தச் சிறுபிள்ளை கோபத்தில், பாட்டியின் கண்கள் கனிந்தன!

வாஞ்சையாக அவளது முகவாயைப் பற்றித் திரும்பியவர்..

“இங்க பாருடா தங்கம்.. பாட்டி உன் நல்லதுக்குத் தான சொல்லுவேன்.. புரிஞ்சுக்கோடா.. இதுவரைக்கும் நீங்க வெறும் கசின்ஸ்.. இப்போ அப்படியில்ல..

நீங்க ரெண்டு பேருமே படிச்சவங்க.. உலகம் புரிஞ்சவங்க.. இன்னும் இப்படி சின்னபுள்ளைங்களாவே இருந்தா எப்படிம்மா?” என்று கொஞ்ச, இன்னமும் முகத்தை நீட்டியபடியே இருந்தாள் மணி!

அவளது அந்தக் கோபத்தையும் ரசித்தபடியே..

“சரி நீ ரொம்ப டயர்டா இருப்ப.. போ.. போய் உன் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடு..” என்று கூறினார் அவர்.

ஆனால் மணியோ.. “எனக்கு இப்படிப் பட்டப்பகல்ல ரூம்ல படுத்து ரெஸ்ட் எடுக்கற அளவுக்கு எல்லாம் டயர்டா இல்ல..” என்று சமையலறைத் திட்டிலேயே அமர்ந்துவிட்டாள்.

அதைக் கண்டும் சிரித்தபடியே, சமையலாட்களுக்கு அன்றைய மெனுவைக் கூறிவிட்டு, வெளியே ராகவுக்குக் குளிபார்ணம் எடுத்துச் சென்றார்.

சாதாரணமாக அவனிடம் பேச்சு கொடுத்தபடியே..

“ராகவ்.. மணி சின்னப்பொண்ணு.. அவளுக்குக் கொஞ்சம் டைம் கொடுத்தா சரியாகிடுவா. நீ தான் பெரியவன். கொஞ்சம் புரிஞ்சுக்கோடா..” என்று அவர் கவலையுடன் கூற, வாய்விட்டு நகைத்தான் ராகவ்!

“பாட்டி.. என்ன நீங்க பயந்துட்டீங்களா? ச்சே.. நான் சும்மா உங்க பேரனையும், பேத்தியையும் கலாய்க்கறதுக்காக அப்படி சொன்னேன்.

நான் என்ன அப்படி மாப்பிள்ளை மரியாதை எதிர்பார்க்கறவனா?

இதையெல்லாம் நான் கல்யாணத்துக்கு முன்னாடியே யோசிக்காம தான் நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேனா என்ன?

அதுவும் இல்லாம இந்த வீட்டுல எனக்கு என்ன மாப்பிள்ளை மரியாதை? இது என் வீடும் தான?

நாங்க எப்பவும் போலச் சின்ன சின்ன சண்டை போட்டுக்கறத பத்தியெல்லாம் நீங்கப் பெருசா யோசிக்காதீங்க..

எல்லாத்தையும் ப்ரீயா விடுங்க.. கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடும்.” என்று அவன் ஆறுதலாகக் கூற, பாட்டியின் முகம் தெளிந்தது.

“எப்படியோ.. நீ புரிஞ்சுக்கிட்டல்ல.. அதுவே போதும்!” என்று அவர் நிம்மதியுடன் கூற, “ஹ்ம்ம்.. சரி பாட்டி.. எனக்கு கொஞ்சம் டயர்டா தான் இருக்கு. நான் உள்ள போய்க் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்..” என்று கூறியபடி ராகவ், மணியின் அறைக்குச் செல்ல, அதைப் பார்த்த பாட்டியின் மனம் மேலும் தெளிந்தது.

இவன் இவ்வளவு இயல்பாக மணியின் அறைக்குச் செல்கிறான் என்றால், அவனது மனம் சரியான திசையில் தான பயணிக்கிறது. எனவே அவர்களது திருமண வாழ்வும் சரியான பாதையிலே செல்லும் நிம்மதியுற்றார் அவர்.

மீண்டும் சமையலறைக்கு வந்தவர், “மணி, இந்தா.. இந்தப் பலகாரமெல்லாம் கொண்டு போய் ராகவுக்குக் கொடு.” என்றவர், தனது அறையில் இருந்த மானபரனை அழைத்து..

“மனோ.. இங்க கெஸ்ட் ரூம்ல இருக்கற தலைகாணியும், போர்வையும் கொண்டு போய் மணி ரூம்ல வை..” என்று அவனுக்கும் ஆணையிட.. அண்ணன், தங்கை இருவருக்குமே மண்டை காய்ந்தது.

“அவன் பெரிய மகாராஜாவாக்கும்?! இவனுக்கு வேலை செய்ய ஏழு பேர் வேணுமா?” என்று மணி முணுமுணுக்க, மானபரணும் அவளுக்குக் குறையாத கடுப்புடன் தான் மாடியேறிக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரும் அறை வாயிலை அடையும்போது, ராகவ் அவன் அன்னையுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“பேர் வச்சுருக்கீங்க பாரு.. பேரு.. அழகுமணியாம்.. அவளுக்கு அண்ணன்.. அந்த மானஸ்தனாம்! ச்சே.. மானபரனாம்..

ஏதோ ஒரு காமெடில வர செந்திலும், அவன் தங்கச்சியும் மாதிரி..

அந்தக் குடும்பத்துல போய் நான் வாக்கப்பட்டேன் பாருங்க..”

…..

“ஆமாமா.. அது தாத்தா, பாட்டி பேர் தான். நான் அதைக் குறை சொல்லல.. இதுங்கள தான் சொல்லறேன்.. வயசாச்சே தவிர ரெண்டு எருமைங்களும் வளரவே இல்ல..” என்று அவன் தன் பேசிக்கொண்டிருந்தது தெளிவாகவே வெளியில் நின்ற இருவருக்கும் கேட்க, அழகுமணியும், மானபரனும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி அவன் அறைக்கு வெளியே நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்!.

“எல்லாம் உனக்கு வச்ச பேரால தான் எனக்கும் அசிங்கம்..” என்று மானபரன் இவளிடம் சீற, அந்த மணியோ..

“டேய்.. உனக்குப் பேர் வச்சதுக்கு அப்பறம் தான் எனக்குப் பேர் வச்சாங்க.. நான் உனக்குப் போய் தங்கச்சியா பொறந்தனே.. ச்சை என்ன சொல்லணும்..” என்று அவள் தலையில் அடித்துக் கொள்ள.. மானபரனோ..

“அதைத்தாண்டி நானும் கேட்கறேன்.. உனக்குப் போய் நான் அண்ணனா பொறந்தனே.. கல்யாணத்துக்கு அப்பறமாவது உன்ன முழுசா தலைமுழுகிடலாம்னு பார்த்தா.. அதுக்கும் அந்தக் கிழவி முட்டுக்கட்டை போட்டுடுச்சு..” என்று மானபரன் தலையில் அடித்துக் கொள்ள, அவனை முறைத்தபடியே..

“இப்போ உன்கிட்ட வெட்டி வாய் அடிக்க எனக்கு நேரமில்ல.. முதல்ல எனக்குத் தாலிகட்டின தடிமாடு இருக்கே.. அத போய்ப் பேசிக்கறேன்..” என்று தன் அண்ணனிடம் கூறியவள், பின் தனக்குள்ளாக..

‘இவன் பேர் ராகவ்.. அதையே ராம்போ ராக்கி.. ஜட்டில ஜாக்கின்னு சுருக்கி வச்சுட்டு சுத்திட்டு இருக்கான்.. இவன் என் பேர கிண்டல் பண்றானா?’ என்று கறுவியவளுக்கு, அங்குப் பலியாடாக.. இல்லையில்லை.. பலி நாயாக வந்து நின்றது அவர்கள் வீட்டு ரோஸி!

உடனே அவளது மண்டையில் ஒரு குண்டு பல்ப் எரிந்திட.. முகத்தில் சிரிப்புடன் அதை எடுத்துக் கொண்டு அவர்களது அறைக்குள் நுழைந்தவள்.. தன் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே..

“ஏய் ரோஸிக்குட்டி.. உனக்கு யாரு இவ்வளவு சாஃப்டான பேர் வச்சது.. உனக்கு நான் இப்போ ரொம்ப அழகான பேர் ஒன்னு வைக்கப் போறேன்..

என்ன தெரியுமா?.

கெஸ் பண்ணு பார்ப்போம்..

கண்டுபிடிக்க முடியலையா.. நானே சொல்றேன்..

இன்னைல இருந்து உன் பேர் ராக்கி!

இங்க.. நான் ராக்கின்னு கூப்பிடறேன் நீ திரும்பிப் பாரு பார்ப்போம்..” என்று ஓரக்கண்ணால் ராகவைப் பார்த்தபடியே அவள் அந்தக் குட்டி ரோஸியை கொஞ்சிக் கொண்டிருக்க, ராகவுக்கோ காதில் புகை வந்தது.

ஏனென்றால், ‘ராக்கி’ என்பது, அவனை அவன் நண்பர்கள் செல்லமாக அழைக்கும் பெயர்!

அந்தப் பெயரை வைத்து, இவள் அவளது நாயை அழைக்க.. அதைக்கேட்டு இடுப்பில் கையை வைத்து.. பல்லை நறநறவெனக் கடித்தவாறே அவளை முறைத்தபடி அவன், அவளைப் பார்த்துக் கொண்டிருக்க.. மணியோ நமட்டுச் சிரிப்புடன் தொடர்ந்தாள்..

“சரி ராக்கி.. உனக்கு நான் காஸ்டலியா.. உனக்குப் பிடிச்ச ஜாக்கி ஜட்டி வாங்கி போட்டு விடறேன்.. சரியா? இப்போ பாரு.. உனக்குப் பேரும் மேட்ச் ஆகிடுச்சு.. உனக்குப் பிடிச்ச ஜட்டியும் மேட்ச் ஆகிடுச்சு..” என்று கூற.. ராகவோ, “ஏய்..” என்றபடி எழுந்தான்! அதற்குள் மணி வெளியே ஓட முயல, ராகவோ அவளை ஒரே தாவலில் பிடித்துவிட்டான்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்