Loading

அத்தியாயம் – 10

மணியைத் துரத்திக் கொண்டு ஓடிய ராகவ், அவள் கதவைத் திறந்து வெளியே செல்லும் முன் அவளைப் பிடித்துச் சுவரோரமாகத் தன் கைச்சிறைக்குள் நிற்கவைத்தான்.

“விடுடா.. டேய்.. விடுடா என்ன..” என்று அவனிடமிருந்து விடுபடப் போராடியவளைப் பார்த்தவனின் பார்வை, இப்பொழுது கோபத்திலிருந்து வேறுவிதமாக மாறியது.

அவனது பார்வை மாறிய விதத்தைக் கண்டு பெண்ணவளுக்குள் உள்ளுக்குள் குளிர் பரவியது.

‘என்னதிது? இப்படிப் பார்க்கறான் நம்மள?’ என்று மனதுக்குள் எண்ணியவள்..

“ராகவ்.. இப்போ நீ கைய விடப்போறியா இல்லையா?” என்றாள் பின்னங்கால் பிடரியில் பட ஓடிச் சென்ற தைரியத்தை பிடித்து வைத்துக்கொண்டு!

“விடமாட்டேன்.. என்ன பண்ணுவ நீ?” என்றான் உதட்டைக் கடித்துச் சிரிப்பை அடக்கியபடியே!

“நா.. நான் பாட்டியைக் கூப்பிடப் போறேன்..” என்று அவள் கூற, சற்று சத்தமாகவே சிரித்தவன், “இங்க கூப்பிடு பார்ப்போம்..” என்று மீண்டும் ஒரு மந்தகாசச் சிரிப்பை உதிர்க்க, அவளுக்கோ அவனது குரலும், முகமும் மாறிய விதத்தில், உடலெல்லாம் இனம்புரிய புதிய உணர்வு தோன்றிட, அந்த உணர்வைப் புரிந்துகொள்ள முடியாத தவிப்பில், இவனிடம் காய்ந்தாள்.

“டேய் எரும.. என்ன விடுடா.. ச்சே.. ராட்சஸா.. அப்பறம் நான் பாட்டிய நிஜமாவே கூப்பிட்டுடுவேன்..” என்று கூற, ராகவோ அமர்த்தலாக..

“அது தான் கூப்பிடுன்னு சொல்லிட்டனே..” என்று மீண்டும் கூற, அவனை முறைத்தபடியே.. “பாட்டி..” என்ற மணியின் அழைப்பு, ராகவின் இதழுக்குள் விழுந்தது.!

மென்மையான அவளது இதழ்களை, வலிக்குமோ என்ற ஐயத்துடன் மிருதுவாக அவன் சுவைக்க, அவளது இதழின் தித்திப்பு, வெறும் ஒற்றை நொடியிலேயே அவனுக்குள் பஞ்சுமிட்டாயாய் கரைந்தது!

அவனது இந்தச் செய்கையில் அதிர்ந்து போய்ச் சிலையாய் சமைந்தவள், ஒரு கணம் கழித்தே அவனைத் தன்னிலிருந்து பிரிக்கக் கையைத் தூக்குவதற்குள், அவனே அவளை விட்டு விலகியிருக்க, இப்பொழுது அங்கே என்ன நடந்ததென்றே புரியாதபடிக்கு குழம்பிப் போனாள் அவள்.

அவனது அந்த ஒற்றை இதழ் ஒட்டுதலில் கைகால்களெல்லாம் வெடவெடத்துப் போக.. நெஞ்செல்லாம், ‘படீர்.. படீர்..’ என்று அடித்துக் கொள்ள, மூச்சு வாங்கி நின்றிருந்தவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணடித்துவிட்டு அவன் வெளியே சென்றான்.

திருமணத்திற்கே முன்பே அவன் ஒரு முறை அவளிடம் இப்படி நடந்து கொண்டதுண்டு. ஆனால்.. அப்பொழுது அவனிடம் இருந்த வேகம் இப்பொழுது இல்லை.

அந்த முத்தத்தில் இருந்த தாபம் இல்லை இப்பொழுது!

அந்தத் தாபம் சரியா, தவறா என்ற புரியாத அவளுக்கு அப்பொழுது சிறு கோபம் வந்ததென்னவோ உண்மை தான்.

ஆனால் இப்பொழுதோ.. அவனது இதழணைப்பில் வேகம் இல்லை.. தாபம் இல்லை..

மாறாக, அதில் இருந்ததோ.. ரசனை!

ஆம்..! அந்த ரசனையில் தான் மூச்சடைத்தது இவளுக்கு!

கையிலிருக்கும் ஐஸ்க்ரீமை, பொறுத்துப் பொறுத்து.. கொஞ்சம் கொஞ்சமாய்.. ரசித்து ரசித்து உண்ணுமே சிறு குழந்தை! அது போன்றதொரு மென்மை!

இவள் கண்களைக் குனிந்து பார்த்துக் கொண்டே, நிதானமாய் அவளது இதழைத் தீண்டியவனது விழிகளில் இருந்த திண்மை! தீர்க்கம்!

“இது தானடி நிதர்சனம்.. நான் உன் கணவனடி..” என்று அவளுக்கு உணர்த்துவதைப் போல இருந்தது!

அவன் வார்த்தையால் பேச முயன்றான். ஆனால் மணியோ அதைக் கேட்கவில்லை! அதனால் தான் அவன் செயலில் இறங்கிவிட்டானோ?

என்னவோ.. இன்னமும் அவளது இதழைத் தீண்டிய அவன் மீசைக் குறுகுறுப்பு, உடலெல்லாம் பரவி அவளைச் சிலிர்க்கச் செய்துகொண்டே இருந்தது!

கால்கள் தோய்ந்து போய் அவள் அப்படியே அமர்ந்துவிட, வெளியே வந்த ராகவை வழியிலேயே மடக்கினான் மனோ.

“டேய்.. கொஞ்சம் நில்லு..” என அவன், ராகவை நிறுத்த, ராகவோ அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாது படியிறங்கினான்.

அதில் கோபம் கொண்ட மானபரனோ, “டேய்.. உன்னைத் தான்டா கூப்பிடறேன்.. காதுல விழுகுதா இல்லையா?” என்று எரிச்சலுடன் ஹை டெசிபலில் கத்தை, கடுப்புடன் காதைத் தேய்த்துக் கொண்டே கீழிறங்கினான் ராகவ்.

‘இப்போ இவனுக்கு என்ன தான் பிரச்சனையாம்?’ என்று மனதுக்குள் நினைத்த மனோவோ தானும் கீழிறங்கிப் போய் ராகவின் சட்டையைப் பற்றியிழுத்து நிறுத்தினான்.

“டேய்.. கூப்பிட்டா என்னமோ காதுல வாங்காத மாதிரி வர?” என்று அவன் கேட்க, அவனை மேலும், கீழும் பார்த்தான் ராகவ்.

“டேயா? யாரு? ஒழுங்கா மாப்பிள்ளைன்னு கூப்பிடணும் தம்பி.. பாட்டி சொல்லல?” என்று அவனிடம் நக்கலாக மொழிந்தவன், உள்ளே திரும்பி..

“பாட்டி..” என்று அழைக்க, மனோவோ சட்டென அவனது வாயைப் பொத்தியபடி..

“போதும்.. போதும்.. பாட்டி நல்லாவே சொன்னாங்க.. நீ கொஞ்சம் உன் திருவாய மூடு!” என்று கூற, அதற்கு ராகவின் கண்கள் மீண்டும் பளிச்சிட்ட விதத்தில்..

“கடவுளே..” என்று வானத்தைப் பார்த்துக் கூறியவன்.. ராகவிடம் திரும்பி, “உங்க திருவாய மூடுங்க மாப்பிள்ளை..” என்று அவன் அந்த மாப்பிள்ளை என்ற வார்த்தையைக் கடித்துத் துப்ப.. ராகவ் சத்தமாகச் சிரித்து..

“அந்தப் பயம் இருக்கட்டும் தம்பி..” என்றுவிட்டு அகன்றான்.

பாட்டியிடம், நண்பர்களைப் பார்த்து வருவதாகக் கூறிவிட்டு சற்று வெளியே சென்றவன், யாரையும் சந்திக்காமல், தன் போக்கில் வழியில் இருந்த பூங்காவில் நுழைந்தான்.

அங்கே மரநிழலில் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தவன், ஒரு பெருமூச்சுடன் அன்றைய நிகழ்வை யோசித்துப் பார்த்தான்.

‘ஹ்ம்ம்.. என்னமோ மஞ்சக்கயிறு மாஜிக் அப்படி இப்படின்னு பொண்ணுங்களுக்குத் தான் முதல்ல வேலை செய்யும்னு நினச்சா, இங்க எனக்கு இப்படி தாறுமாறு மாஜிக் பண்ணுதே அந்த மஞ்சக்கயிறும், இந்த மஞ்சக்கிழங்கும்..’ என்று மணியைப் பற்றி நினைத்துக் கொண்டு பொதுவெளி என்றும் உணராது வெட்கச் சிரிப்பு சிரித்துக் கொண்டான்.

மறுபுறம் மனோவுக்கோ, உள்ளுக்குள் ஆத்திரம் வந்தது!

‘ஒருத்தனுக்கு கல்யாணமாகிட்டா இத்தனை மரியாதை கிடைக்குமா? அடேய்.. அப்போ இருங்கடா நானும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகறேன்..’ என்று எண்ணியவன், ஒரு வேதனையான பெருமூச்சுடன்..

‘எங்க? என் ஆளு தான் என்ன திரும்பிக் கூடப் பார்க்க மாட்டீங்குதே?’ என்று சலித்துக்கொண்டான்!

தனது மொபைலை எடுத்து, அதில் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் அவனவளது எண்ணைத் தட்டியவன், மறுமுனையில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அழைப்புமணியில் மனம் சோர்ந்தான்.

‘ஹம்ம்ஹும்.. எனக்கு என்னமோ வரவர நம்பிக்கை போயிட்டே இருக்கு..’ என்று அவனது ஒரு மனம் நம்பிக்கையின்றிப் பேச, அவனது மறுமனமோ, ‘அடேய்.. நீயே ஏண்டா வாய வைக்கற? கான்பிடென்ட்.. கான்பிடென்ட்டா இரு..

அப்போ தான் சீக்கிரம் இந்த ராகவ் மாதிரி கல்யாணம் பண்ணி கெத்து காண்பிக்க முடியும்..’ என்று தனக்குத் தானே தைரியப்படுத்திக் கொள்ள முயன்றது.

ஆனால் அந்தத் தைரியமும் உடனடியாகவே தவிடுபொடியாகியது!

‘ஆமா.. இப்படி காதல் சொன்னதுக்கே இவ்வளவு அலைய விடறவள கல்யாணம் பண்ணி.. கெத்து காண்பிச்சுட்டாலும்?!

நடக்கற காரியமா பேசுடா டேய்..’ என்று அவனது மற்றொரு மனம் வஞ்சனையின்றிக் காரித் துப்பியது!

பாட்டியும், பேத்தியும் தனியே பேசிக்கொள்வதற்காகத் தான் ராகவ் தனியே வெளியே சென்றது.

என்னதான் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்றாலும், திருமணத்திற்குப் பிறகு மனைவிக்குப் பெர்சனல் ஸ்பேஸ் கொடுக்க வேண்டும் என்று கருதினான் அவன்.

சாதாரணமான தம்பதியராக இருந்திருந்தால், இவனுக்குத் தன் மனைவியிடம் எப்படிப் பேச வேண்டும், அவளது மனதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியிருக்கும்.

ஆனால் இங்கே மணியின் விஷயத்தில் அனைத்துமே முற்றிலும் மாறுபாடாக இருந்தது.

வீட்டிற்கே செல்லப்பெண் அவள்! மற்ற புது மணப்பெண்களைப் போல, புதிய வீட்டிற்கு வாக்கப்பட்டு, கணவன் ஒருவன் மட்டுமே நெருக்கமானவன் என்று கருதி அவனுடன் ஒன்றுவதற்கு!

இங்கே மணிக்கு, அவளது கணவனைத் தவிர மற்ற அனைவரும் நெருக்கம். சொல்லப்போனால் சிறுவயதில் இருந்தே ராகவ் அவளைப் படுத்திய பாட்டிற்கு அவன்மீது எப்போதுமே அவளுக்குச் சுணக்கம் தான்!

ஆனால்.. அவன் மனதிற்கு நம்பிக்கை கொடுத்தது, அவள் திருமணத்திற்கு சம்மதித்தது!

எனவே அவளுக்குத் தனது சொந்த வாழ்க்கைப் பற்றி, பாட்டியுடன் ஏதேனும் பேச வேண்டும் என்று தோன்றினால், அதற்குத் தான் இடையூறாய் இருக்கக் கூடாது என்று கருதித்தான் அவன் வெளியே வந்தான்.

ஆனால்.. இங்கு நடந்ததோ முற்றிலும் மாறுபாடானதாய் இருந்தது!

ராகவின் இந்தக் கணவன் அவதாரத்தில் ஏதோ இனம்புரியா சூறாவளியில் சிக்கிக் சுழன்றது போல உணர்ந்தாள் மணி.

அவளுக்கு இந்த உணர்வு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது அவளுக்கே தெரியவில்லை. தெரியவில்லை என்பதைவிட, அவள் தெரிந்துகொள்ள முயலவில்லை.

கூடவே, அவள் தனது மனதிற்குள் இன்னமும் ராகவை, சிறுவயதில் தன்னைச் சீண்டி விளையாடும் ஓர் உறவினனாகத் தான் பிடிவாதமாக எண்ணியிருந்தாள்.

ஆனால்.. இந்தத் திருமணத்திற்குப் பிறகு.. கணவனாக அவன் இதழ் முத்தத்தின் பிறகு.. அவன் தீண்டிய இடம் மட்டுமளளது.. தேகம் முழுவதுமே இப்படித் தித்திப்பதற்கான காரணத்தைத் தான் அவள் அறிய முயற்சிக்கவில்லை.

கூடவே மணிக்கு, எல்லோரிடமும் செல்லம் என்றாலும், அவள் மனம்விட்டுப் பேசும் தோழி என்பது, ராகவின் தாய் தேவகி தான்.

இப்பொழுது அவரை விட்டு வந்தது அவளுக்கு மனதுக்குள் கலக்கமாகத் தான் இருந்தது.

இதில் இரவு உணவின்போது பாட்டி வேறு, “மணி, நீ ராகவ் பக்கத்துல உட்கார்.

ராகவ், மணிக்கு நீ அதை எடுத்துக்கொடு!

மணி, ராகவுக்கு நீ இதை எடுத்துக்கொடு!” என்று இருவரையும் அன்யோன்யப்படுத்த எடுத்த முயற்சிகள் இவளுக்கு மனதிற்குள் திகலைக் கிளப்பியது.

அவள் பயந்ததைப் போலவே, தன்னைப் தொடர்ந்து தனது அறைக்கு வந்த ராகவைப் பார்த்து மணியின் கண்கள் பயத்தில் விரிந்தன.

“ந்.. நீ.., நீ.. எதுக்கு என் ரூமுக்கு வர?” என்று அவள் கேட்க, ராகவோ.. நேற்று அவள் கூறிய வசனத்தைத் திருப்பிப் படித்தான்!

“ஹ்ம்ம்.. இது என் பாட்டி வீடு.. கூடவே என் மாமனார் வீடும் கூட.. அதையும் விட, நான் இந்த ரூமுக்கு வரதுக்கு எனக்கு இன்னொரு உரிமையும் தாராளமாவே இருக்கு..” என்று கண்களில் மயக்கம் மின்ன அவளது தாலியைப் பார்த்து அவன் கூற, மணிக்கு உடலின் படபடப்பு அதிகரித்தது!

“எனக்கே இந்த பெட் பத்தாது.. போ நீ மனோ ரூம்ல படுத்துக்கோ..” என்று அவள் கூற, ராகவோ எதையோ கூற வாயெடுத்துவிட்டு, கண்களில் சிரிப்புடன்,

“இல்ல.. எனக்கு அவன் ரூம் பிடிக்கல. உன் ரூம் தான் பிடிச்சிருக்கு. நீ வேணும்னா பாட்டி ரூம்ல போய்ப் படுத்துக்கோ..” என்று மீண்டும் கேலியாய் கூறினான்.

“அடேய்.. இப்ப மட்டும் நான் பாட்டி ரூமுக்குப் போனா.. பாட்டி என்ன அம்மில வச்சு ஆஞ்சுபுடும் ஆஞ்சு..” என்று அவள் சினுங்க, அவளது சிணுங்கலை ரசித்தபடியே..

“தெரியுதுல்ல? அப்பறம் எதுக்கு இவ்வளவு அடம்? நான் ஒன்னும் உன்ன கடிச்சு சாப்பிட்டுட மாட்டேன்..” என்றான்.

‘நீ கடிச்சு சாப்பிட மாட்டியா? அடேய்.. உன் பார்வையே பிச்சுத் திங்கற மாதிரி இருக்குடா..’ என்று மணி எண்ணினாலும், அவளுக்கும் இப்பொழுது வேறு வழி தெரியவில்லை.

மெல்லக் கட்டிலுக்குப் போனவள், அவன்மீது தனது உடை கூட உரசாதபடிக்கு ஒதுங்கிப் படுத்துக்கொண்டாள்.

அவள் உறங்கும் வரை அசையாது படுத்திருந்த ராகவ், அவள் உறங்கிவிட்டாள் என்று உணர்ந்ததும் மெல்ல அவளைத் தன்புறம் திருப்பி, தனது கை வளைவிற்குள் படுக்கவைத்துக் கொண்டு தானும் சந்தோஷ முறுவலுடனே உறங்கிப் போனான்!

காலையில் விழித்தெழுந்த மணி பார்த்ததென்னவோ தனது அருகே அழகாய் அப்பொழுதும் மலர்ந்திருக்கும் ராகவின் இதழ்களைத் தான்!

அதைப் பார்த்ததுமே முந்தைய நாளின் நிகழ்வு, வான் மின்னலாய் மனதில் வெட்ட, உள்ளுக்குள் நிஜமாகவே மின்னல் தொட்ட மின்சாரம் பூத்தது!

அந்த அதிர்வில் அவனிடமிருந்து பதறி விலகியவள், அதில் ராகவின் உறக்கம் கலையத் துவங்க ஒரே ஓட்டம் தான், குளியலறைக்கு!

குளியலறையின் கதவைத் தாளிட்டவள், அதிலேயே சாய்ந்து அடுத்து நடக்கவேண்டியதைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்தாள்.

அதன்படி குளியலறையிலிருந்து வெளியே வந்தவள், ராகவ் விழித்தெழுந்து தனது மொபைலில் அந்த நேரத்திலேயே யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு வேகமாக வெளியே வந்துவிட்டாள்.

வந்ததும் பாட்டியைத் தேடிப் போனவள், அவரிடம்.. “பாட்டி.. நான் உடனே எங்க வீட்டுக்குப் போகணும்.” என்றாள்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
14
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்