“அப்பா!” என அழைத்தப்படி மருதன் அருகே சென்று அணைக்க முற்பட்டாள். ஆனால் முடியவில்லை.
தன் நிலையை உணர்ந்து தந்தையே கண்ணீரோடு பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ரக்ஷிதா அவளின் வேதனையை கண்டு கவலை கொண்டாள்.
சிறிது நேரத்தின் பின் சற்று மருதனின் சாயலைக் கொண்ட ஒருவன் அறையினுள் நுழைந்தான்.நுழைந்தவுடன் மருதனை அணைத்துக் கொண்டான்.
மருதனை அணைத்திருந்தவனின் முக பாவனையைக் கண்ட தீரா அதிர்ந்து நின்றாள். அவன் முகத்தில் அத்தனைக் குரோதம் இருந்தது.”அண்ணா! இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என நிமிர்ந்து மருதனிடம் கூறினான்.
“அப்படியா வரதா? என்கிட்ட சொன்னா நானும் சந்தோஷப்படுவேனே”
“அதை நான் இப்ப சொல்லமாட்டேன். நீங்க என்கூட வாங்க”
“சரி வா போலாம்” என கூறிய மருதனை அழைத்துக் கொண்டு இன்னொரு அறையினுள் சென்றனர்.இவர்களை பெண்கள் இருவரும் பின்தொடர்ந்து சென்றனர்.
அறையினுள் சென்றவுடன் மருதனின் கைகள் மந்திரக்கையிற்றால் கட்டப்பட்டது. அந்த அதிர்வுடன் திரும்பிப் பார்க்க வரதன் ஏளனமாய் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.அவனருகே மகிழ்நிலாவும் கட்டப்பட்டிருந்த நிலையில் இரத்தக் கரைகளுடன் மயங்கியபடி இருந்தாள்.
நடப்பதை நம்பவும் முடியாமல் ஸ்தம்பித்து நின்றான்.
அவளைக் காப்பாற்ற தன் சக்தியைப் பயன்படுத்தி கைகளிலுள்ள கட்டினை அவிழ்க்க எடுத்த முயற்சி, தோல்வியில் முடிந்தது.
அந்த மந்திரக்கையிற்றின் பிடியில் மருதனின் சக்தி வேலை செய்யவில்லை.
“உன்னால எதுவும் செய்ய முடியாது அண்ணா. வீணா உன் சக்தியை பயன்படுத்தாமல் இரு”
மருதன் கோபத்தோடு” ஏன் இப்படி பண்ற? உனக்கு என்ன வேணும்?”
“உன்னோட ஆட்சி வேணும். அதை நீ தர மறுத்தா உன் மனைவியோட உயிர் போய்டும்”பல உணர்வுகளின் பிடியில் அவன் வரதனைப் பார்த்தான்.
“என்ன பாக்குற? உன்னோட பரம்பரையே தொடர்ந்து ஆட்சி செய்ய, உங்களுக்கு தொடர்ந்து நான் சேவகம் பண்ணனுமா? அது ஒரு நாளும் நடக்காது.”
“எப்போதும் எல்லா நல்ல விஷயமும் உனக்கே கிடைச்சது. தந்தையோட முழு பாசம், அழகான குடும்பம், உனக்கு மட்டுமே ஆதரவு தருகிற மக்கள் இப்பிடி எல்லாமே கிடைச்சது. ஆனா எனக்கு இது ஒன்னுமே கிடைக்கல. எங்கப் பார்த்தாலும் உன்னோட புகழ் மட்டும் தான் கேட்குது. ஆனா இனி அது எனக்கு கேட்க கூடாது” என ஆவேசமாய் கூறியவனைப் பார்த்து அசையாமல் இருந்தான்.
தன் தம்பி இன்னொரு தாயின் மகனாக இருந்தாலும் அவனை தன் உறவெனவே கருதினான். ஆனால் அவன் கூறிய வார்த்தைகளில் உறைந்து போய் இருந்தான்.
(மருதனின் தாய் இறந்தவுடன், மருதனுக்காக இரண்டாவதாக மணந்து கொண்டார். ஆனால் காலம் செல்ல இரண்டாவது மனைவியின் நடத்தை மாறிக்கொண்டு சென்றது. அதனால் அவளை வெறுத்தார். சில வருடங்களில் அவளும் இறந்துவிடபெற்ற கடமைக்காக வரதனையும், தன் இராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசுக்காக மருதனையும் வளர்த்தார்.ஆட்சியை மருதனுக்கே வழங்கினார்.சிறு வயதில் இருந்தே தனக்கு பெற்றோரின் பாசம் கிடைக்காமல் போக தீய சக்தியும் குணமும் படைத்தோரின் உறவை நாடிச் சென்றான் வரதன்.
அதனால் மருதனின் பாசத்தை உணரத் தவறிவிட்டான். மருதனுக்கு மக்கள் எல்லொரிடமும் கிடைக்கும் அங்கீகாரத்தினைப் பாரத்து, வரதன் அவனை அடியோடு வெறுத்தான்.
மருதனின் சக்திக்கு நிகராக தன் சக்தி இருக்க வேண்டும் என நினைத்து அந்த தீய உறவுகளிடம் கொண்ட நட்பின் மூலம் தன் சக்தியையும் மருதன் மீதான வன்மத்தையும் வளர்த்துக் கொண்டான்.)
“நீ இப்போ தாமதிக்கும் நேரம் அதிகரிக்க உன் மனைவியும் கருவில் இருக்கும் குழந்தையும் உனக்கு உயிரோட கிடைக்க மாட்டாங்க”
அதில் மருதன் அவனுடன் போராட முடியாது என்பதை உணர்ந்து
“வேண்டாம்!!! அவங்கள விட்டுடு. நீ கேட்டத உனக்கு தாரேன்.” என கட்டப்பட்ட தன் கைகளை அவன் கைகள் மீது வைத்தான். மருதனின் கைகளில் இருந்த கட்டு உடைக்கப்பட்டது.
“அவன் வாழ்வில் எதுவும் கிடைக்காமல் போனதற்கு தானும் ஒரு காரணமாகி விட்டதால். ஆளும் உரிமையாவது அவனுக்கு கிடைக்க வேண்டும்” என மனதில் நினைத்துக் கொண்டு கண்களை இறுக மூடித்திறந்தான். மருதனின் வலது கையில் இருந்த காப்பு வரதனின் கைக்கு மாறியது.வரதன் நாட்டை ஆள்வதற்கு தகுதியும் சக்தியும் பெற்றான்.மருதன் நினைத்திருந்தால் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டவுடனே அவனைத்தாக்கி ஆட்சியையும் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அதைச் செய்யாமல் ஆட்சியை வழங்கினால் அந்த தீயோரின் உறவை நாடாமல் மகிழ்ச்சியாக இருப்பான் என எண்ணி ஆட்சியை வழங்கினான்.இதுவே மருதன் இழைத்த பெரும் தவறென்பதை உணராது போனான்.
தனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்த சந்தோஷத்தில் “இது உன் அரசன் இடும் ஆணை. நீயும் உன் குடும்பமும் இனிமேல் இங்கு இருக்கவே முடியாது” என வரதனால் கட்டளையிட்டான்.
மருதனும் இக் கட்டளையை தானும் ஏற்பதாக ஒப்புக்கொண்டான்.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த இருவரின் கண்களும் மீண்டும் ஒரு ஒளியினால் கூச தம் கண்களை தேய்த்துக் கொண்டே திறக்க அவர்கள் அந்த ஓவியத்தில் இருந்து வெளிவந்திருந்தனர்.
ரக்ஷிதா” அப்போ வரதன் தான் உன்னோட அம்மா அப்பாவ கொன்னதா? ஆனால் அவனுக்கு தேவையானது தான் கிடைச்சாச்சு தானே அப்பறம் ஏன் உன்னோட அம்மா அப்பாவ கொல்லனும்?”
“எனக்கும் அது புரியல. அதுமட்டும் இல்ல வரதன் தான் அவங்கள கொன்னான்னு எப்பிடி உறுதி செய்றது?”
ரக்ஷிதா, “இதுக்கான பதிலை மீதி இருக்கும் ஓவியங்கள் மூலமா தான் தெரிஞ்சுக்க முடியும்”என இரண்டாவது ஓவியத்தை எடுத்தாள்.
“தீரா ! இந்த பெயின்டிங்ல இப்ப நீ எப்பிடி இருக்கியோ அதே மாதிரி வரைந்திருக்காரு. பாரேன்.”
அதைப் பார்த்த தீராவிற்கு வார்த்தைகளே வரவில்லை. தன் கைகளை எடுத்து அதன்மீது வைத்தாள். ஆனால் ஓவியத்துக்குள் போகவில்லை.
அவள் குழப்பத்துடன் அதனைப் பார்த்துக் கொண்டு இருக்க”நானும் கைய வைக்காதனால தான் போகல போல.”ரக்ஷிதா அவ்வாறு சொல்லவும் இருவரும் கையை எடுத்து வைத்தனர். ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தனர்.ஆனால் தோல்வியே கிட்டியது.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அதனை கோபத்துடன் கீழே வைத்து விட்டனர்.”விடு தீரா. நாம அடுத்த ஓவியத்தை பார்ப்போம். இதுல நமக்கான பதில் கிடைக்காது போல” என அடுத்த ஓவியத்தை எடுத்தாள்.
அதில் மருதனும் மகிழ்நிலாவும் வீட்டிற்கு முன் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து இருப்பதைப் போன்று வரையப்பட்டிருந்தது.
ஆனால் கறுப்பு வெள்ளை நிறத்தில் இருந்தது.
அதில் கைவைத்த இருவரும் ஓவியத்தினுள் சென்றனர்.
மகிழ்நிலா,”என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க? “
“மனசுக்கு ஏதோ இன்னைக்கு தப்பா நடக்கப்போற மாதிரியே இருக்கு நிலா”
“அப்பிடியெல்லாம் ஒன்னும் இருக்காது. மனசை போட்டு குழப்பிக்காதிங்க.அதை விடுங்க வர வர தீராவோட சேட்டை அதிகமாகிட்டே போகுது. நீங்க கொஞ்சம் கண்டிச்சு வைங்க”
“அவ உனக்கும் மக தானே நீ கண்டிக்க வேண்டியது தானே”
“அவளைப் பார்த்து திட்டக்கூட முடியல. எதாவது சொல்ல வந்தா, ‘நா இனி இப்பிடி பண்ணமாட்டேன்மா ‘ னு சொல்லி பாவமா முகத்தை வச்சுக்கிறா. பத்தாததுக்கு நீங்க முட்டாய் வாங்கி குடுத்ததும் செஞ்ச சாப்பாட்டை சாப்பிடாம முட்டாய சாப்பிட்டுட்டு இருக்கா”
“அதை யார் தான் சாப்பிடுவா”
“என்ன சொன்னீங்க?” என்று அவள் கோபத்துடன் வினவ
“இல்லமா, அவ்ளோ நல்ல சாப்பாட்டை சாப்பிடாம இருக்காளே அதுக்காகவாவது அவளை கண்டிக்கனும் னு சொல்ல வந்தேன்.”என சமாளித்தான்.
.”நீங்க கண்டிச்சது போதும். அது சரி நான் ஒன்னு உங்ககிட்ட கேக்கணும்”
“கேளு”
“நேத்து நீங்க தீராவ கூட்டிட்டு கொஞ்சம் நடந்துட்டு வரேன்னு போனீங்க. போன கொஞ்ச நேரத்துல திரும்ப வந்துட்டீங்க. என்ன நடந்தது அங்க?”
“நானும் தீராவும் அந்த நிலாவோட வெளிச்சத்துல மட்டும் தெரியும் பாதைவழியா நடந்து போனோம். பாதையோட முடிவுல ஒரு கோடு மாதிரி இருந்தது. கோட்டுக்கு அப்பால சூரிய வெளிச்சத்துல அந்த பாதை தொடர்ந்து இருந்துது. ஒரு பக்கம் சூரிய வெளிச்சம் இன்னொரு பக்கம் நிலவோட வெளிச்சம் இருந்தது. அந்த பாதைய தொடர்ந்து போனோம் அங்க ஒரு குகை இருந்துது. அதுக்குள்ள நாங்களும் போனோம். அங்க ஒரு கல்லு தொட்டில தண்ணீர் இருந்தது
ஆனா நீல நிறத்தில மின்னிட்டு இருந்தது. நா அதுல கைய வைச்சு பாக்கும் போது நம்ம தீராவும் ரக்ஷிதாவும் ஒரு இருபத்தஞ்சு வயசுல எப்பிடி இருப்பாங்கலோ அதே மாதிரி இருந்தாங்க ஆனா அவங்க முகத்துல சந்தோஷம் இல்ல. இவுங்க ரெண்டு பேரும் மட்டும் தான் நம்ம வீட்டில இருந்தாங்க. அவுங்க ரெண்டு பேரும் இருந்த இடத்துக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரோட ஃபோட்டோ(photo) இருந்தது”
“என்ன சொல்றீங்க?”
“அந்த தண்ணி நம்ம எதிர்காலத்தை காட்டிச்சுன்னு நினைக்கிறேன்.”
“என்..ன சொல்றீங்க. எனக்கு பயமா இருக்கு. இது தீராக்கு தெரியுமா?”
“இல்ல. அதை நான் மட்டும் தான் பாத்தேன். தீரா அந்த குகைய பாத்து பயந்ததாலல பாதி தூரத்துக்கு அப்பறம் உள்ள வரல. நான் மட்டும் தான் உள்ள போனேன். இன்னைக்கு அதனால தான் எனக்கு மனசுக்கு கஷ்டமா இருந்தது.”
இருவரிடமும் அமைதி நிலவியது.
“நாம தீராவோட இருக்காட்டியும் அவ பாதுகாப்பா இருக்கனும். இப்போ வரதனோட நடவடிக்க எல்லாம் ரொம்ப மோசமா இருக்குனு கேள்விப்பட்டேன். “
“தீராக்கு வரதனைப் பத்தி எதுவும் தெரியாது. அவனால எதும் ஆபத்து வருமா?”
“எனக்கு தெரியல. ஆனா இப்போ அவ சின்ன பொண்ணு. அவகிட்ட இதபத்தி எல்லாம் சொல்லி அவ புரிஞ்சுக்கிற வயசு இல்ல. ஆனா கண்டிப்பா அவளுக்கு எல்லாம் தெரியவரும்.”
“நாம அவளோட இருபத்தஞ்சாவது வயசுல அவகூட இருக்கமாட்டாமா? அவ எப்பிடி நாம இல்லாம இருப்பா? என கவலையோடு கேட்டாள்.
“நாம இருக்க வேண்டிய இடத்தில கண்டிப்பா ரக்ஷிதா அவளுக்கு இருப்பா. இதை நா, ரக்ஷிதாவ முதன்முதலா பாக்கும் போதே தெரிஞ்சது”
மனதில் ஒரு நிம்மதி நிலவினாலும், மனதை அழுத்தும் துக்கமும் நிலாவை வாட்டி எடுத்தது.
அவளது கவலை நிறைந்த முகத்தை பார்த்த மருதன் “நீ , தீரா இருபத்தஞ்சு வயசுல எப்பிடி இருப்பான்னு பாக்கனுமா?” எனஅவள் வேகமாக தலையாட்டினாள்.
அவனும் அதைப் பார்த்து சிரித்து விட்டு ஒரு ஓவியத்தை நீட்டினான்.அதில் அழகும் அமைதியும் நிறைந்த இளம்பெண்ணான தீரா சிரித்துக்கொண்டு இருந்தாள்.அந்த ஓவியத்தை ஆசையுடன் தடவி முத்தமிட்டாள் மகிழ்நிலா.
தொடரும்…..
-கி.பிரஷாதி-